இரட்டைத்  தீபாவளி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2025
பார்வையிட்டோர்: 1,940 
 
 

சென்னை –தியாகராய  நகரிலிருக்கும்  பிரியதர்ஷினி  சில்க்  எம்போரியும் தீபாவளிக்குக் களைகட்டியிருந்தது. 

மாலைநேரம் என்பதால்  ஜேஜே  என்று  கூட்டம் . வெளியே  மழை சொட்டுப் போடத் தொடங்கிற்று. 

தீபாவளி  சீசன்  மழை  என்று  பேசிக்கொண்டார்கள். கௌரி வாசல் திண்டுமேல் சற்று  ஏக்கத்துடன் உட்கார்ந்திருந்தாள். சற்றுதள்ளி நின்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ  காரை நறுவிசாகத் துடைத்துக் கொண்டிருந்தாள், டிரைவர்  பாலு. 

“என்ன கௌரி…வீட்டுக்குப் போகலையா..மெனக்கெட்டு உட்கார்ந்திட்டிருக்கே..” என்றான் பாலு. 

“உம்…மேடத்தைப்  பார்க்கணும்.” என்றாள் கௌரி ஓர்  எதிர்பார்ப்புடன். 

“அப்படியா…வித்யா மேடம் வர்ற நேரம்தான்” என்றான் பாலு விண்ட்ஸகிரீனைத்  துடைத்தவாறு. 

“எப்படியும் பார்த்துட்டுத்தான் போகணும்” என்று கௌரி காத்திருக்க…

“கௌரி! பேக் கேட்ல செக்யூரிட்டி  கூப்பிடறாரு…என்னன்னு போய்ப் பாரு..”

கௌரி பின்பக்கம் பார்த்தவாறு நகர்ந்தாள். 

இடைப்பட்ட நேரத்தில் கண்ணிமைப்பதற்குள் வித்யா மேடம் அவசரமாகக் காரில்  ஏறிப்பறந்து விட்டாள்.

வெற்றிடம் ஆகிப்போன முற்றத்தையே வெறித்துப் பார்த்தபடி, ஏமாற்றத்துடன் கௌரி வீட்டுக்குத் திரும்பினாள். 

அவ்வளவு பெரிய ஷாப்பிங் சென்டரில் கௌரி ஒரு தூசியைப் போல்  நாலாபக்கமும் பறந்து கொண்டிருப்பாள். எடுபிடி  வேலைதான். எல்லா  வேலையும் செய்யக் கூடிய பரிதாப ஜீவன். 

அவள் கணவன் சிங்காரம் இளம் வயதிலேயே இவள் பொட்டை அழித்துவிட்டு, குடிபோதையில் ஒரு கார் கிராஷில் மடிந்து போனான். மாமா, அத்தை, ஓரகத்தி  ஊர்மிளா என்று இவர்கள் குடும்பம் ஒரு சிறிய வாடகை வீட்டுக்குள் உறைந்து கிடந்தது. 

ஊர்மிளாவின் கணவன் சண்முகன், ஒரு ஏஜென்ட் மூலமாக துபாய்க்குப் போனான்.. என்னாயிற்று என்று தெரியவில்லை. திரும்பவே இல்லை. 

என்ன சாபக்கேடோ… தனக்குத்தான் இப்படியென்றால் வூட்டுக்காரன் தம்பியாவது தன் பொண்டாட்டியை வைத்துக்கொண்டு உருப்படியாய் வாழவேண்டாமா? 

கண்ணீரும் கவலையுமாக பல தீபாவளிகளைக் கடந்து வந்தாயிற்று. இந்த ஆண்டாவது ஒரு விடியல் பிறக்காதா என்பதுதான் கௌரியின் கனவு. 

பக்கத்துத்  தெரு பாலுவுக்கு அவள் குடும்ப நிலைமை நன்கு தெரியும்.

அவனுடைய சிபாரிசின் பேரில்தான் கௌரிக்கு இந்த வேலையும் கிடைத்தது. 

அடுத்த நாள் மாலையும் கும்பல் கும்பலாய் மக்கள் திரள். வண்ணவிளக்குகளில் மூன்று மாடிகளும் ஜொலித்துக்கொண்டிருந்தன.
 
“கௌரி! இங்கேயே இரு … இப்ப மேடம் வந்துட்டிருக்காங்க..”

 டிரைவர் பாலு சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வித்யா மேடம் வாசலில் அடியெடுத்துவைத்தாள். ஐவரி நிறத்தில், சில்க் காட்டன் புடவையில் கண்ணியமாகத்  தெரிந்தாள். 

“மேடம்! கௌரி உங்களைப் பார்க்கணும்னு ரொம்ப நேரமாக் காத்திட்டிருக்கு” 

“ஓ … வரச் சொல்லு” 

கௌரி பவ்வியமாக ஒதுங்கியவாறு மெல்லக் கேவினாள் . 

“என்ன கௌரி … போனஸ் வாங்கிட்டியா?” 

“வாங்கிட்டேனுங்க… எம் புருஷன் கொஞ்சம் கடனை வச்சிட்டுப் போய்ட்டான்.. கடன்காரப் பாவீக விடுவாங்களா… ஆம்பளையில்லாத வீட்லே வந்து கலாட்டா பண்றாங்க மேடம்..” 

அவள் கண்களில் நீர் திரண்டது. 

“உன் குடும்பத்தோட நிலைமைதான் நல்லாத் தெரியுமே… சிங்காரத்தோட தம்பி பொண்டாட்டி இருக்குமே ..” 

“ஆமாம் மேடம் …எங்களோடதான் இருக்கா… துபாய் போனவன் என்னைக்காவது திரும்பவருவான்னு காத்திட்டுருக்கா, மேடம்.” 

 சிறிது நேர யோசனைக்குப் பிறகு —-

“பாலு …மேனேஜர் சாம்பசிவத்தைக் கூப்பிடு” சாம்பசிவம் வந்தார்.
 
“இந்த கௌரிக்கு மொத்தமா முப்பதாயிரம் கொடுத்தனுப்புங்க” அவள் கையெடுத்துக் கும்பிட்டாள். 

“போனஸோட இதையும் சேர்த்து வச்சுக்க …தீபாவளியை நல்லாக் கொண்டாடு… பலகாரம், பட்சணமெல்லாம் செய்து வை.. வர்றேன்!” என்று முறுவலித்து கொண்டே குரோம்பேட்டை பிராஞ்சுக்கு காரில் ஏறிப் போனாள்.

தீபாவளி அன்று —

வழக்கம் போல கௌரி வைகறையில் விழித்து, எண்ணெய் தேய்த்து,அரப்பு பொடியில்  தலை கழுவி, நீராடிய பின் பிரம்மமுகூர்த்தத்தில் தீபம் ஏற்றி,சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டாள். 

ஊர்மிளாவிடம், மாமா அத்தையை கவனிக்கச் சொல்லிவிட்டு, காலை டிஃபன் தயாரிக்க சமையல் அறைக்குள்  நுழைந்தாள். 

சிறிது நேரத்தில் —

மாமா வெள்ளை வேட்டி சட்டை அங்கவஸ்திரம் அணிந்து, அத்தையும் கோ-ஆப் டெக்ஸ் பட்டில் முக மலர்ச்சியுடன்  ஹாலுக்கு வந்தார்கள். 

கௌரியும், ஊர்மிளாவும் எம்ப்ராய்டரி போட்ட பிராஸோ புடவையில் பான்ஸியாய் வலம் வந்தார்கள். 

மணி எட்டுக்கு மேலிருக்கும். அப்போது —

வாசலில் பளபளவென்று பாலாடைக்கட்டி போல் ஒரு கார் வந்து நிற்க —

அக்கம்பக்கம் ஆவலுடன் எட்டிப் பார்த்தார்கள். 

ஆங்காங்கே தெருவெங்கும் பொடுசுகளின் பட்டாசு முழக்கம்.

…பண்டிகை ஆரவாரம். 

திறந்திருந்த கதவருகே —

பிரியதர்ஷினி சில்க் எம்போரியத்தின் எம்.டி .வித்யா மேடம்! \

கௌரி தன்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டாள் . 

“என்ன கௌரி ஸ்வீட் எல்லாம் ரெடியா… என்ன டிபன்?” 

எல்லோரும் வணக்கம் செலுத்தி, அவளுக்கு இருக்கையை ஒதுக்கினார்கள். 

“வாங்க மேடம்… உட்காருங்க மேடம்.. ஸ்வீட், டிபன்  ரெடி மேடம்!” 

கௌரிக்குப் பதட்டம் . ஒரே திக்… திக்! 

“எம்.டி . மேடம் எங்க வீட்டுக்கா…” 

வியப்பில் வியர்த்துக்கொட்டியது, கௌரிக்கு. 

அதற்குள், ஊர்மிளா டீபாய்மீது வரிசையாக ஸ்வீட், காரம், பட்சணம் என்று கடை விரித்தாள். மைசூர் பாகு, சுருள் போலி, காராச்சேவு, ரிப்பன் பக்கோடா, பாதாம்அல்வா….

“அடடே…. என்ன கௌரி… ஒரே அமர்க்களம் போலிருக்கு!” 

“எஸ் மேடம்… ஊர்மிளா ஒரு ரெசிப்பி ஸ்பெஷலிஸ்ட்! சமையல் கலைலே தேர்ச்சியான பொண்ணு..” 

“அப்படியா…வெரிகுட்.. என்னோட கசின் லேடீஸ்க்கு ன்னு ஒரு மேகஸீன் நடத்தறா… அதுலே ரெசிப்பி பக்கத்துக்கு ஊர்மிளாவை சிபாரிசு பண்றேன்..என்ன படிச்சிருக்க ம்மா?” 

“எம்.ஏ., ஜர்னலிசம் மேடம்..” 

“வெரிகுட்… அப்படியே ஜர்னலிஸ்ட் ஆயிரலாம்” 

“தேங்க்யூ மேடம்!” 

ஊர்மிளா மகிழ்ச்சியில் புஸ்வாணமாய்ப் பொங்கினாள். 

பாதாம் அல்வாவைச் சுவைத்தவாறே, வித்யா, கௌரியிடம் மென்மையாய்ச் சொன்னாள்…

“இப்ப உனக்கு ஒரு தீபாவளிப் பரிசு தரப் போறேன்!” 

கதவருகே சென்று பாலுவை அழைத்தாள். 

வழக்கத்துக்கு மாறாக அன்று அவன் யூத்ஃபுல்லாக இருந்தான். “இவனை ஏத்துக்க கௌரி! .. இனி வாழ்க்கையலே சந்தோஷமா இரு..” 

கௌரிக்கு மட்டுமில்லை. ஊர்மிளா, மாமா, அத்தை அனைவருக்குமே அன்று –

இரட்டைத் தீபாவளி ! 

சந்திரா மனோகரன் சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *