இயற்கையின் வெற்றி




(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இந்தப் பசங்களே இப்படித்தான். யாராவது ஒரு காசு, அரைக்காசு அதிகமாகக் கொடுத்தால், அவன் விஷயத்தை உடனே கவனிப்பார்கள். நான் சொல்லி ஒரு வாரமாச்சு. இன்னும் அந்தக் குமாஸ்தா வக்காலத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு போக வரவில்லை. இனிமேல் வர மாட்டான். நாழிகையாகி விட்டது. ஒருவேளை தாள் ஆபீஸூக்குப் போன பிறகு அவன் வத்தால், ஸரோஜா, கையெழுத்துப் போட்டு அனுப்பிவிடு, என்ன?’ என்று மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே கண்ணாடியைப் பார்த்த வண்ணம் ‘நெக்டை’யைக் கட்டிக்கொண்டிருந் தான், ஸரோஜாவின் தமையன், சபேசன்.
ஸரோஜா அவன் சொன்னது ஒன்றையும் கேட்காமலேயே சாய்வான நாற்காலியில் சாய்ந்தபடியே ஏதோ யோசித்துக்கொண்டிருந்தாள். சபேசனின் மனைவி மேஜைமேலிருந்த வெற்றிலைப்பெட்டியிலிருந்து நல்ல வெற்றிலையாகப் பொறுக்கிச் சுண்ணாம்பு தடவி மடித்து வைத்துக்கொண்டிருந்தாள்.
‘எதற்காக உபயோகமில்லாமல் அந்தக் காரியத்தைச் செய்கிறாய்? நான் ஆபீஸுக்குப் போகும்போது வெற்றிவை போட்டுக்கொள்ள மாட்டேன் என்று எத்தனை தடவை சொல்லுகிறது?’ என்று சபேசன் வெறுப்புடன் மனைவியைப் பார்த்துக்கொண்டே அவள் ‘பாலீஷ்’ போட்டு வைத்திருந்த பூட்ஸுகளைக் கால்களில் போட்டுக்கொள்ள ஆரம்பித்தான்.
ஆனால், அன்று சபேசன் ஆபீஸுக்குப் போவதில் அவ்வளவு அவசரப்படவில்லை. காலையிலிருந்தே சகோதரி ஸரோஜா ஏதோ ஏக்கம் பிடித்தவள்போல் உட்கார்த்து போயிருந்தது அவனுக்குக் கவலையாக இருந்தது. அவளைக் கேட்கவும் முடியாமல் அறியவும் முடியாமல் தத்தனித்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் தன் மனைவி வழக்கம்போல் மலர்ந்த முகத்துடன் தனக்கு எல்லாவற்றையும்
செய்வதைக் கண்டு அவனுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. அடியோடு சமயசந்தர்ப்பம் அறியாத அசடு என்றோ அல்லது சுய நலம் படைத்த கொடூர சித்தம் கொண்டவள் என்றோ, தன் சகோதரி அவளைப்பற்றி எண்ணக்கூடும் என்று வெட்கமடைந்தான்.
ஸரோஜா தன் கணவனுடன் மனஸ்தாபப்பட்டுக்கொண்டு அவனை விட்டுப் பிரிந்து, ‘இனி கணவன் வீட்டுக்குப் போவதில்லை’ என்று தீர்மானித்துச் சகோதரன் வீட்டுக்கு வந்து ஒரு வாரமாகியிருந்தது. தன் சகோதரியான ஸரோஜாவைச் சபேசன், தகப்பனார் இறந்த பிறகு, தாய் தடுத்ததையும் லட்சியம் செய்யாமல், மேல் படிப்புப்படித்து. பி.ஏ. தேறும்படி செய்திருந்தான். பிறகு தன் உயிர்த் தோழனான ரகுபதிக்குக் கல்யாணம் செய்து கொடுத்தான்; காதல்மணந்தான், தவீனமுறைப்படி.
ரகுபதி மதுரையில் வெகு சீக்கிரத்தில் பிரசித்தியடைந்துவிட்ட டாக்டர். சபேசன் திருச்சியில் கலெக்டர் ஆபீஸில் ‘ஆங்கில ஹெட் கிளார்க். அவன் மனைவி ஆனந்தவல்லி கட்டுப்பெட்டியான ஒரு பென்ஷன் பெற்ற டிபுடி கலெக்டரின் பெண். கல்யாணமானபின் அவர் முயற்சியின் பேரில்தான் சபேசனுக்குப் புரோபேஷனரி ரெவினியூ இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது.
ஆனந்தவல்லி அழகுப் பரீக்ஷையில் தேறினவள்; அவ்வளவுதான். நன்றாக வீணை வாசிப்பாள். சுமாராகத் தமிழ்ப் படிப்பாள். நவீனப் பழக்கங்களை அறியாதவன். சபேசன் எவ்வளவோ முயற்சிசெய்தும் அவளுடைய பழைய பிறந்தகத்துப் பழக்கத்தை நீக்க முடியவில்லை. பதினெட்டுமுழப் புடைவையைக் கொசுவம் வைத்துக் கட்டிக் கொண்டாள். சபேசன் வாங்கிவத்த பன்னிரண்டு முழப் புடைவைகள் அப்படியே இருந்தன. பழைய பட்டுரவிக்கைகள், நடுவகிடு, அசல் குங்குமப்பொட்டு, வைரப் புலாக்கு, வைரக் கம்மல், வைர மாட்டல் – இவையெல்லாம் சபேசனுக்குப் பிடிக்கவேயில்லை. மனைவி சுத்தக் கர்நாடகம் என்று வைத்துவிட்டான்!
ஆனால் அவளுடைய அமைதியையும், அடக்கத்தையும், தன்மேல் அவள் கொண்டிருந்த அன்பை இடைவிடாமல் ஒவ்வொரு செயலிலும் ஆபாஸத்தோற்றமின்றி மௌனமாக அவள் வெளியிட்ட வகையை யும் அநுபவித்து, அவளிடத்தில் முற்றும் ஈடுபட்டு, அவளை அவள் போக்கிலேயே விட்டுவிட்டான். தவநாகரிக முறைகளை அநுஷ்டிக்கா விட்டாலும் அவளுடைய நடத்தையில் ஒரு பிசகும் தோன்றவில்லை. இயற்கையாக, அசட்டு வெட்கம் முதலியன இல்லாமல் இங்கிதமாகவும் அனுசரணையாகவும் பழகினாள். மொத்தத்தில் சபேசனால் அவளிடம் ஒரு குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால், தன் சகோதரி ஸரோஜா கல்விச் செருக்கால் அவனைச் சில சமயங்களில் ஏளனம் செய்தபடி நடந்துகொண்டது சபேசனுக்குக் கொஞ்சம் வருத்த மாகத்தான் இருந்தது. தன் வருத்தத்தை இங்கிதத்தில் அறிந்து தன் சகோதரி தன் தன்மையை மாற்றிக்கொள்ளாமல் இருந்ததைக் கண்டு அவன் கோபிக்க முடியவில்லை. சகோதரியிடம் அவனுக்கு அவ்வளவு வாஞ்சை! ஆனந்தவல்லி கணவன் வீட்டுக்கு வந்த ஆறு மாசத்திற்கெல்லாம் ஸரோஜா கல்யாணமாகிக் கணவனுடன் போய்விட்டாள். ரகுபதி இங்கிலாந்து சென்று திரும்பினவன். பெண்களைச் சரிசமானமாகவும் மரியாதையுடனும் நடத்தவேண்டும் என்பது அவன் கொள்கை. எனவே வீட்டில் சமையற்காரன், வேலைக்காரன்-இவர்களே எல்லா வேளை களையும் செய்வார்கள். ஸரோஜாவுக்குத் தனி அறை. அதில் அவள் ஆடைகள், புத்தகங்கள் எல்லாம் இருக்கும். மனைவியின் அநுமதி யின்றி ரகுபதிகூட அதற்குள் நுழைய மாட்டான். ‘டிஸ்பென்ஸரி’யில் தனக்கு நாழிகையாகி விட்டாலும், ஸரோஜா தக்க காவத்தில் சாப்பிட்டு விட வேண்டியது என்று ஏற்பாடு செய்திருந்தான். மாலையிலும் மூன்று மணியிலிருந்து ஆறு வரையில் ‘டிஸ்பென்ஸரி’யில் மூச்சுவிடக்கூட நேரமிராத அலுவல்கள். ஸரோஜா ஐந்து மணிக்குக் ‘கார்’ எடுத்துக் கொண்டு நாலைந்து மைல் போய்விட்டு வரும்பொழுது ‘டிஸ்பென்ஸரி’ யில் தனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் கணவனைக் காரில் ஏற்றிக் கொண்டு வீடு திரும்புவாள் – அதாவது பங்களாவிற்கு. எனவே கணவன் மனைவியரிடையே சின்ன வார்த்தை பெரிய வார்த்தை கிளம்ப இடம் இல்லை.
ஆனால் இருவருக்கும் ஒரே ஒரு விஷயத்தில் அபிப்பிராய பேதம். அதன் காரணமாக அவன் கணவன் வீடு வந்ததுமுதல் இருவரிடை யேயும் வெளியிட்டுச் சொல்லமுடியாத ஒரு மனஸ்தாபம்.
இங்கிலாந்து சென்று திரும்பினவனானாலும், உயர்தரப் பட்டங்கள் பெற்ற டாக்டராயிருந்தும், ரகுபதிக்குக் கர்ப்பத்தடை விஷயத்தில் மட்டும் சொல்ல முடியாத அருவருப்பு. அதை யாராவது ஆதரித்துப் பேசினால் சீறி விழுவான். மரியாதை எல்லையைக் கடந்தும், நாகரிக பாஷையின் எல்லையைக் கூடக் கடந்தும் அதைக் கண்டித்து வருவான். தன் மனைவியே அந்த விஷயத்தில் தனக்கு எதிர்க்கட்சி என்பதைக் கண்டதும் அவன் உள்ளம் உடைந்து போய்விட்டான். ஆனால் தன் ஏமாற்றத்தை வெளிக் காட்டாமல் பொறுமையுடன் அவள் மனம் மாறும் காலத்தை எதிர்பார்த்து, பேச்சுவந்த போதெல்லாம் உயிர், உடல் சாஸ்திரம், மனோதத்துவ சாஸ்திரம், இவற்றின் முடிவுகளின்படி கர்ப்பத் தடை, இயற்கைக்கு எவ்வளவு விரோதமானது, ஆபாஸமானது. மிருகப் பிராயமானது என்பதை நுட்பமாக எடுத்துச் சொல்லுவான். ஆனால் ஸரோஜா கணவனுடைய அபிப்பிராயத்தை ஏற்றுக்கொள்ள வில்லை.
அவன் எடுத்துக் கூறிய காரணங்கள் கூட முற்றும் உண்மை என்று அவளுக்குச் சில சமயங்களில் தோன்றிற்று. ஆனால் தன் அபிப் பிராயத்தை இழக்க அவள் மறுத்தாள். கடைசியாக மனஸ்தாபம் முற்றினது இரண்டே வார்த்தைகளால்தாம்.
ஒரு நாள் இருவரும் மாலை ஏழு மணிக்கு மாடி அறையில் (பொது அறை) பேசிக்கொண்டிருந்தார்கள். அன்று வாதத்தில் ஸரோஜா ஓரளவு ரகுபதியின் அபிப்பிராயத்தை ஒப்புக்கொண்டு விட்டவள்போலவே தோன்றினாள். அன்று விபரீதமாக அவளுடைய பேச்சில் கலகலப்பும் சந்தோஷமும் ஆவலுங்கூட இருந்தன. என்றுமில்லாத முறையில் கணவன் அருகில் ஸோபாவில் உட்கார்ந்து அவன் மேல் சாய்ந்து கொண்டாள். கடைசியில் தன் மனைவியின் மனத்தை மாற்றிவிட்ட தாகக் கூட எண்ணி ரகுபதி ஆனந்தமடைந்து உள்ளப்பெருக்கில், ‘இயற்கை வெற்றி பெற்றுவிட்டதல்லவா?” என்று அவள் கன்னத்தில் லேசாகத் தட்டியவண்ணம் விஷ வார்த்தைகளைக் கொட்டிவிட்டான். சட்டென்று குத்தினதுபோல ஓர் உணர்ச்சி கொண்டு ஸரோஜா விலகி உட்கார்ந்தாள். ரகுபதிக்கு உடனே கோபம் வந்தது.
‘எது இயற்கை, எது வெற்றி? எப்பொழுது பெற்றது?’
‘சற்று முன் தோன்றின மாறுதல்; அதுதான்!’
‘யாரிடம் மாறுதல்? என்னிடம் இல்லை.’
‘பின் நான் சொன்னதை -‘
‘உயிர் நூல் மனோதத்துவம் என்று ஏதோ சொன்னீர்கள். சமூகப் பொருளாதார…..என்று ஸரோஜா முடிக்குமுன் ரகுபதி வெகு கோபத் துடன் எழுந்து நின்று, ‘சை! வாயை மூடு! சமூகப் பொருளாதார மெல்லாம் நிரம்பக் கண்டு விட்டாய்!” என்றான்.
ஸரோஜா பேசவில்லை. கணவனை அவட்சியமும் வெறுப்பும் கலந்த பார்வையுடன் சிறிது நேரம் பார்த்தாள். பிறகு சாவதானமாக எழுந்து நின்று, ‘தயவு செய்து காரை வரவழையுங்கள். நான் பத்து மணி வண்டியில் திருச்சி போகவேண்டும்!’ என்றாள்.
‘பேஷாக!’ என்று சொல்லிவிட்டு ரகுபதி மோட்டார் ஓட்டியை வரவழைக்கக் கீழே சென்றான்.
ஸரோஜம், என்ன யோசனை? அந்த அயோக்கியன் கிடக்கிறான். இந்த மாதிரி உன்னை அவன் நடத்திய பிறகு, அவனை நான் லேசிலா விட்டு விடுவேன்? உன் படிப்பிற்கும் அந்தஸ்திற்கும் ஏற்றபடி ஜீவனாம்சம் வாங்கிவிடுவோம். கவலைப் படாதே!”
ஸரோஜா மெதுவாக நாற்காலியில் எழுந்து உட்கார்ந்து, ‘அண்ணா, நான் ஜீவனாம்சத்தைப் பற்றியா இப்பொழுது கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்? சரி, அது கிடக்கிறது; வெற்றிலை மடித்து வைத்திருக்கிறாள் மதனி. அதைப் போட்டுக்கொண்டு ஆபீஸுக்குப் போ !” என்று சொல்லிவிட்டு மளமளவென்று கண்ணீர் பெருக ஆனந்த வல்லியைப் போய்த் தழுவிக்கொண்டாள்.
வந்த நாள் முதலே அவளுக்கு ஏக்கம் பிடித்து விட்டது. தான் ஏனனம் செய்த ஆனந்தவல்லி கணவனுடன் அவ்வளவு ஒற்றுமையாகவும் மனக்கசப்பே இல்லாமலும் இருந்ததைக் கண்டு அவள் மனத்திலேயே ஒரு குழப்பம் ஏற்பட்டது. படிப்பே இல்லாத ஆனந்தம் முரடனான தன் சகோதரனுடன் இவ்வளவு சுலபமாகவும் ஸௌஜன்யமாகவும் பழகுவது அவளுக்கு ஆச்சரியமாகக்கூட இருந்தது.
காரணங்களை யோசித்து யோசித்துப் பார்த்தாள். ஆனந்தத்தினிடம் இல்லாத குறை அவளிடம் என்ன இருந்தது ? அல்லது அவளிடம் இல்லாத நிறைவு ஆனந்தத்தினிடம் என்ன இருந்தது ? அந்த ஒரு வாரத்திற்குள் அவன் தன் தமையனையும் அவன் மனைவியையும் கவனித்ததிலிருந்து அவர்களிடையே ஒரு விதமான சிறிய அபிப்பிராய பேதங்கூடத் தென்படாததைக் கண்டாள். அப்படி ஆனந்தம் தன் உரிமை முழுவதையும் பறிகொடுத்து அடிமைபோல வாழ்ந்தாள் என்பதையும் காணவில்லை.
ஆனந்தம், உனக்குத்தான் ஒரு வாரமாக நிரம்பத் தள்ளவில்லையே: சமையற்காரனை வைத்துவிடுவோமே?’ என்றான் சபேசன் ஒருநாள். ‘வேண்டாம். இங்கே என்ன வேலை இருக்கிறது ? ஒன்றும் செய்யாமல் எப்படி உட்கார்ந்துகொண்டிருக்க முடியும்?’ என்று ஆனந்தவல்லி சொல்லிவிட்டாள்.
ஸரோஜாவுக்குக் கொஞ்சம் சொஞ்சமாக மண வாழ்க்கையின் உண்மை விளங்கலாயிற்று. தன் வாழ்க்கையை எண்ணிப் பார்த்தாள். அப்பொழுது தன் குறைகள் அவளுக்கு ஒவ்வொன்றாகப் புலனாயின. திடீரென்று ரகுபதியிடம் பரிதாபம் கொண்டாள்.
‘ஆனத்தம், தான் என்ன செய்வேனடி!’ என்று அழுதாள் ஸரோஜா. சபேசன் ஒன்றுமே புரியாமல் திகைத்துப் போய் விட்டான். ஆனந்தவல்லிக்குப் புரிந்துவிட்டதோ?
‘அக்கா, ஒன்றும் பாதகம் இல்லை. ‘இரவு மெயிலில் புறப்பட்டு வருகிறாள்’ என்று உங்கள் தங்கை புருஷனுக்குத் தந்தியடியுங்கள். ஆபீஸுக்கு நேரமாகவில்லையா?’ என்று ஆனந்தம் ஸரோஜாவை அணைத்தவண்ணம் சொன்னாள் புன்னகையுடன்.
சபேசன் தங்கை முகத்தைப் பார்த்தான். அதில் அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
‘ஸரோஜா, கோபித்துக் கொள்ளாதே. அவள் சமயம் தெரியாமல் ஏதோ கேலி செய்கிறாள். என்றாவது செய்திருந்தால்தானே? நான் ஆபீஸ் போகும் வழியில் வக்கீல் குமாஸ்தாவைப் பார்த்து இங்கு அனுப்புகிறேன். வக்காலத்தில் கையெழுத்துப் போட்டு அனுப்புற என்று சொல்லி விட்டுச் சபேசன் எழுந்திருந்தான்.
‘இல்லை, அண்ணா; நீ சிரமப்பட வேண்டாம். ஆனந்தம் சொன்ள படியே செய்!’ என்று ஸரோஜா சொன்னாள்.
சபேசன் ஒன்றும் பதில்சொல்லாமல் வெளியே போனான். ஸரோஜா ஆனந்தவல்லியிடம் ரகசியமாக ‘எத்தனை மாசம் மன்னி, உனக்கு?’ என்று கொஞ்சலாகக் கேட்டான்.
ஆனந்தவல்லி வெட்கத்தால் முகம் சிவத்து பதில் சொல்லாமல் ஸரோஜாவைக் கட்டிக்கொண்டாள்.
– காவேரி ஏப்ரல்-மே 1942