கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினக்குரல்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 16, 2025
பார்வையிட்டோர்: 773 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்தச் சனியன் பிடிச்ச கொசுவால் நிம்மதியே போச்சு. என்ன கருமமோ! என்னையே சுத்தி சுத்தி கடிக்குது. அடிச்சிடலான்னு பார்த்தா… அகப்பட மட்டேன்னுதே. இருந்த கொஞ்சத் தூக்கமும் இப்போ காணாமல் போயிடுச்சி. 

ஒவ்வொரு இரவுமே இப்படித்தான். எல்லோரும் தூங்கியபின்தான் என் பேய்மனம் விழித்துக் கொள்கிறது. இதே ஒரு இரண்டு வருடத்திற்கு முன் என் கணவனுடன் கூடிக்குலாவி அத்தனை இன்பங்களையும் அனுபவித்த இதே அறையில் இன்று நான் மட்டும் ஒற்றையாய். அவர் இறந்து, ஒரு பத்து நாட்களுக்கு, அம்மாவுடன் தான் படுத்துக் கொண்டேன். ஆனால் அப்போதெல்லாம் அழுவதற்குகூட சுதந்திரம் இருக்கவில்லை. பயந்து பயந்து அழுது, போர்வைக்குள் மூக்கை உறிஞ்சும் போது.., அம்மா கெட்டிக்காரி எப்படியோ கண்டு பிடித்து விடுவாள். அவள் விழித்துத்தான் இருக்கிறாள் என அறிவிக்க ‘க்கூம்’ என லேசாய் கனைத்துக் காட்டுவாள். 

அதனால்தான் எங்கள் அந்தரங்க அறையையே எனதாக்கிக் கொண்டேன். சிலவேளை பகற்பொழுதுகளில் கூட நான் வெளியே வருவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் எல்லோரிடமும் விலகி தனியான கனவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருப்பேன். அந்த அறையின் ஒவ்வொரு அணுவிலும் அவரது வாசம் இருப்பதாய் எனக்குத் தோன்றும். அவரின் தலையணை, அவரின் கதிரை, போர்வை, சீப்பு எல்லாமே இப்போது எனதாகிவிட்டது. தொட்டதிலெல்லாம் அவர் நினைவு. நிம்மதியாய் தூங்கிய நாளே ஞாபகத்தில் இல்லை. 

யன்னலில் தெரியும் நிலாவையும் நட்சத்திரங்களையும் அணுவணுவாய் அவதானித்துக் கொண்டு… புரண்டு புரண்டுபடுத்து… தலை மாற்றிப்படுத்து… குப்புறப்படுத்து… ம்ஹும் எதுவுமே பயனற்றதாய் போய்விடும். அவர் ஞாபகங்களே திரும்ப திரும்ப வந்து சித்திரவதை செய்யும். ஒருவாறு சமாளித்து உறக்கத்துடன் சமரசம் செய்துக் கொண்டபின் கனவிலும் அவர்தான். அந்த கனவுகளை எனக்குப் பிடிக்கும். விழிக்கும்வரை அது கனவென்று புரியாததால், அவருடன் வாழ்வது போலவே உணர்ந்து கொள்ளுவேன். சில நேரம் என் அருகில் வந்து தலையைத் தடவிக் கொடுப்பார். ஏதாவது சொல்ல மாட்டாராவென ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன். இரகசியமாகவாவது ஏதேனும் பேசி விடலாமெனும் ஏக்கம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. 

அவரது கரங்கள் நெருங்கி அப்படியே என்னை அணைத்து, இத்தனை நாள் பிரிவு வெப்பத்தையும் பொசுக்கி ஒத்தடம் தராதாவென… கனவிலாவது அவருடன் உயிரொன்றி கலந்துவிட மாட்டோமாவென… எல்லா துன்பமும் மறந்து அவர் மார்புக்குள் சுருண்டு படுத்துவிட வேண்டுமென… எப்படியெப்படியெல்லாமோ ஏங்கி துடித்துக் கொண்டிருக்கும் போது, எல்லா விருப்பங்களையும் சிதற வைத்துவிட்டு மறைந்து விடுவார். மீண்டும் விழித்துக் கொள்ளுவேன். அப்புறமென்ன விடிய விடிய அழுகைப்படலம்தான். 

என் இத்தனை இழப்புக்களின் பின்னும் கூட ஒரு சந்தோசம். அவர் தந்த குங்குமப்பொட்டையும், தாலியையும் நான் இழக்கவில்லை. எத்தனையோ பேர்வற்புறுத்தியும் கூட, அந்த உரிமையை என்னால் விட்டுக்கொடுக்க முடியவில்லை. 

ஒருமுறை குளித்துவிட்டு வெறும் நெற்றியுடன் உலவிக் கொண்டிந்தேன். 

“என்னம்மா மொட்டையா இருக்கு….?” 

அன்பு கூடிய சில சமயங்களில் அவர் என்னை அம்மாவென விளிப்பதுண்டு. 

நான் ஏதும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் போதே, குங்குமச் சிமிழை எடுத்து வந்து அழகாய் பொட்டு வைத்து விட்டார். 

எப்பவும் பொட்டுடன் இருந்தால்தான் அவருக்கு பிடிக்கும். அந்த பொட்டை அழிக்க எத்தனைப்பேர் துடித்தார்கள் தெரியுமா…? 

பாக்கியம் கிழவி இதுமாதிரி விடயத்தில் ரொம்பவும் கடுப்பானவள். 

அவரை அடக்கம் பண்ணிய அடுத்த நொடியே தாலிகழட்டும் சடங்கிற்காய் ஆயத்தப்படுத்தி விட்டாள். என்னை பொண்ணு மாதிரி உடுத்தி, பொட்டுபூவெல்லாம் வைத்து கண்ணாடி வளையல் நிறைய போட்டுக் கொண்டு வர சொன்னாள். 

சத்தியமாய் சொல்கிறேன் அவர் இறந்ததைக்கூட என்னால் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் அத்தனை பேர் முன்னாலும் என் வளையல் உடைத்து, பொட்டை அழித்து, தாலியறுத்து… வேண்டாம் அந்த எதுவுமே வேண்டாம். என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 

மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதையாய் இது என்ன கொடுமையான சடங்குகள். எத்தனை பேர் வற்புறுத்தியும் என்னால் உடன்பட முடியவில்லை. பிடிவாதமாய் மறுத்துவிட்டேன். 

“இது என் தனிப்பட்ட விஷயம். யாரும் இதில் தலையிட வேண்டாம்…” 

என் கடுமையான உறுதியில் அம்மா கொஞ்சம் தடுமாறிப் போயிருக்க வேண்டும். குழைந்து கொண்டே சொன்னாள். 

“பிள்ள… நாளைக்கு சமுதாயம் நம்மள தப்பா கதச்சிடக்கூடாதம்மா. உன் வேதனை எனக்கு புரியுது. ஆனாலும் நமக்குன்னு ஒரு சம்பிரதாயம் இருக்கு. அத மீறினா நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க.” 

“பேசட்டுமே…. பேசட்டும். அந்த நாலு பேரும என்னோட தொடர்ந்தும் வருவாங்களா…? இல்லையே ! எதுவேண்டுமானாலும் பேசட்டும். என் புருசன் ஞாபகமா இருக்குற ஒரே ஒரு அத்தாட்சி இந்த தாலிதான். இதை என்னால கழட்ட முடியாது. முடியவே முடியாது. 

என்று கூறியபடி தலையில் அடித்துக் கொண்டே நான் கதறிய கதறல் அம்மாவை ஊமையாக்கி விட்டது. அதன்பின் அவள் அதுபற்றி எதுவுமே பேசவில்லை. 

ஆனால் பாக்கியம் கிழவியுடன் ஒரு ஐந்தாறு பேர் சேர்ந்து என்னை கீழ்த்தரமாய் ஏசியதாய் பின்னாளில் கேள்விப்பட்டேன். 

என் காதுகேட்கவே பாக்கியம் கிழவி ஒருமுறை சொன்னாள். 

“ஊரெல்லாம் சுத்தி எம்பேரு முத்தி கூட்டுமாருல குத்தி இன்னும் வரல புத்தி…”

இந்த பழமொழியின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லைத்தான். ஆனால் என்னைத்தான் ஏதோ இடித்துரைக்கிறாள் என்று மட்டும் புரிந்தது. ஏன்தான் இந்த மனிதர்கள் இப்படியோ தெரியவில்லை. அடுத்தவர்களை வேதனைப்படுத்துவதில் அப்படி என்னதான் சுகம் கிடைத்துவிடப் போகிறது? இந்த பரிகாசப் பார்வைகள், பரிதாப வார்த்தைகள் எதுவுமே எனக்குப் பிடிப்பதில்லை. 

என் தனிமையை… என் துயரங்களை நானே மறந்துவிட்டாலும், இந்த சூழல் சதா அதை கிண்டி கிண்டி ஞாபகப்படுத்துகிறது. இவைகளிலெல்லாம் விலகி ஒதுங்கிப் போய் விட்டதால், யாருடனும் சிரிக்கவோ பேசவோ கஷ்டமாய் இருக்கிறது. நான் வாய்விட்டு சிரித்த நாளே ஞாபகத்தில் இல்லை. தனியாக யோசித்து யோசித்து, எனக்கு நானே பேசி, அறைக்குள்ளேயே அடைபட்டு இன்னும் கொஞ்சநாளில் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும். 

சமுதாயத்தின் பார்வைக்கு நான் ஒரு குற்றவாளியாகவே தெரிகிறேன். என் பொட்டும் கலர் புடவையும்தான் அவர்களின் நாளாந்த பொழுது போக்குப் பேச்சு. இதிலெல்லாம் அம்மாவுக்கும் வருத்தம்தான். ஆனால் என் பிடிவாதம் தெரிந்து பேசாதிருக்கிறாள். 

என் நிலையை யாருக்கும் விளங்கப்படுத்தத் தெரியவில்லை. என்னை புரிந்துக்கொள்ள ஒரு ஜீவனும் இல்லை என்ற ஆதங்கத்தில் இருந்தபோதுதான். 

எங்கிருந்தோ வந்தான். அழுதான், துடித்துப்போனான். எனக்காய் வாதாடினான். என் முகத்தில் லேசாய் புன்னகை வரச்செய்தான். எல்லா விடயங்கள் பற்றியும் சுவையாக கதைத்துக் கொண்டிருப்பான். 

ஆனந்த ராஜா…. 

பெயரைப்போலவே அவனும் ஆனந்தமானவன்தான். என்னுடன் ஒன்றாய் படித்தவன். அப்போதிலிருந்தே என்மீது அவனுக்கு நல்ல விருப்பம். ஒருதலையாய் காதலித்தானாம். எனக்கு கலியாணம் என்றதும் வெளியூர் போனவன்தானாம். 

பைத்தியக்காரன். இப்போது சொல்கிறான். 

ஒருமுறை நேரடியாகவே ராஜா கேட்டான். 

“நீ ஏன் இன்னொரு கலியாணம் செய்யக்கூடாது…?” 

தைத்துக் கொண்டிருந்த ஊசி என் பெருவிரல் நகத்திற்குள் குத்திவிட்டது. கையை உதறியபடியே அவனைப் பார்த்து அதிர்ச்சியாய் கேட்டேன். 

“என்ன சொன்ன..?” 

“இன்னொரு கலியாணம் செய்தா என்னன்னு கேட்டேன்…” 

அவனது குரலில் ஒரு அழுத்தம் இருந்தது. 

“என்னடா பேசுற…? இந்த பொட்டு வைக்குறத்துக்கே ஆயிரத்தெட்டு கத கேட்க வேண்டியிருக்கு. இந்த லட்சணத்துல கலியாணம் எனக்கொரு கேடு.” 

நீ தப்பா நினைக்காட்டி ஒன்னு சொல்லவா…? 

ஏதும் சொல்லாமலேயே அவனைப் பார்த்தேன். என் மௌனத்தை சாதகமாக்கிக் கொண்டு அவனே தொடர்ந்தான். 

“நானே உன்ன கலியாணம் செய்துக்கிறேன். கடைசிவரைக்கும் சந்தோசமா வச்சி காப்பாத்துறேன். நல்லா யோசிச்சிபாரு. எத்தனை நாளைக்குத்தான் இப்படி தனியா இருக்க முடியும்….?” 

எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. சடாரென எழும்பி உள்ளே போய்விட்டேன். என்னை கண்டதும் அம்மாவும் அடுக்களைக்குள் புகுந்துக் கொண்டாள். ஆக அம்மாவிற்கும் இது விளங்கியிருக்க வேண்டும். 

எனக்கு குழப்பாக இருந்தது. எத்தனையோ முறை யோசித்தும் கூட ராஜா கேட்டதில் தப்பில்லையென்றே எனக்குத் தோன்றியது. அம்மா என்ன யோசிப்பாளென்று அறிந்துக்கொள்ள ஆவல்தான். அவளென்றால், ஒருவார்த்தையும் இதுபற்றி என்னிடம் பேசவில்லை. நிச்சயமாய் அம்மா இதை அனுமதிக்க மாட்டாள். அப்பா போனபின் உப்பு சாப்பிடுவதையே நிறுத்திய விரதக்காரி அவள். தன்னைப்போலவே மகளும் இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கின்றாளோ..! 

இந்த தனிமையிலிருந்து… சமுதாயத்தின் நயவஞ்சக பார்வையிலிருந்து… சில காமுகர்களின் இரட்டை அர்த்த வார்த்தைகளிலிருந்து… என் கடுமையிலிருந்து… எல்லாவற்றிலிருந்தும் விடுதலை பெற இந்த கலியாணம் ஒரு ஆயுதமாய் இருக்கக்கூடும். ஆனால் இது எனக்கு… ! இனியும் ஒரு தொடக்கமா? ஏன் இந்த வீண் வேலை. ஏற்கனவே ஏகப்பட்ட சாடைப்பேச்சுகள். இந்த கதை மட்டும் பாக்கியம் கிழவிக்கு தெரியவேண்டும். 

“நினைச்சேன்… நினைச்சேன். பொட்டும் புடவையுமா மினுக்கும் போதே நினச்சேன். ச்சே இவளெல்லாம் ஒரு பொம்பளையாட்டம். புருஷன் போய் ரெண்டு வருசம் முடியல்ல. அதுக்குள்ள இன்னொருத்தன் தேடிட்டாளே..! என்ன கருமமடா இது. வெட்கம் கெட்ட சிறுக்கி…” 

இப்படியெல்லாம் ஏசக்கூடும். ஏன்! இதைவிட அதிகமாயும் விமர்சிக்கக்கூடும். அதற்குப்பின் ஊரெல்லாம் என்கதையாய்த்தான் இருக்கும். 

ஊர் கதைப்பதுபற்றி எனக்கு வருத்தமில்லைதான். என்னுடன் அம்மாவுமல்லவா அவஸ்த்தைப்படுகிறாள். அதுதான் கஷ்டமாய் இருக்கிறது. ஏற்கனவே அவள் நொந்து போயிருக்கிறாள். 

என் உணர்வுகள் பெற்றவளுக்கு புரியாமலா இருக்கும்? இருந்தாலும் அவள் சமூகத்திற்காய் ஒரு போலி முகமூடியுடன் நடமாடுகிறாள். ராஜாவையும் அவளுக்கு பிடிக்காதென்றில்லை. ‘ராஜா’ என்று வாய்நிறைய கூப்பிடுவாள். குடிக்க டீயெல்லாம் போட்டுக் கொடுப்பாள். ராஜாவும், ஆன்டி… ஆன்டி என்று அழகாய்தான் கதைப்பான். 

நேற்று ராஜா வந்திருந்த போதெல்லாம் அம்மா வெளியே வரவில்லை. அவன் கடைசியாய் சொன்னான். 

“எனக்கு வெளிநாடு போக அழைப்பு வந்திருக்கு. நான் போறதும் போகாததும் உன் முடிவிலதான் இருக்கு. அப்படியே போனாலும் நிச்சயமா திரும்பி வர மாட்டேன். நாளைக்கு வாரேன் பதில் சொல்லு.” 

இதையும் அம்மா கேட்டுக் கொண்டுதான் இருந்திருப்பாள். ஆனால் ஏன் என்னுடன் எதுவும் பேசாமலேயே…..? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விடிந்ததும் முதலில் அம்மாவுடன் பேச தீர்மானித்துக் கொண்டேன். 

ஏதேதோ யோசனையில் விடிந்ததுகூட தெரியாமல் தூங்கிப் போயிருக்கிறேன். அம்மா வந்து எழுப்பிவிட்டு ராஜா வந்திருப்பதாய் கூறினாள். அதற்குள்ளேயா…? அம்மாவிடம் இன்னும் பேசவே இல்லையே ! 

முகம் அலம்பி விட்டு உடைமாற்றிக் கொண்டிருக்கையில், அம்மா தேனீருடன் வந்து நிற்கின்றாள். 

“அம்மா நான்…” 

காது கொடுக்காமல் படாரென தேனீரை வைத்துவிட்டு போகிறாள். 

அப்படியென்றால் ராஜா வந்ததில் அம்மாவுக்கு விருப்பமில்லை. இந்த கலியாண பேச்சே அவளுக்கு பிடிக்கவில்லை. அவளை பொறுத்தவரை நான் விதவை. வெள்ளை புடவையுடன் தான் என் காலம் கழிய வேண்டும். கனவுகளுக்கும் எனக்கும் தூரம் அதிகமென்று நினைக்கிறாள் போல. 

உப்பற்ற சாப்பாடு, வெள்ளைப்புடவை, வெறும் நெற்றி இதுதானேம்மா உன் விருப்பம். ஊரெல்லாம் ஆயிரம் பேசட்டும். நீயுமா என்னை புரிந்து கொள்ளவில்லை. ஒரு வார்த்தையேனும் இதுபற்றி பேசுகிறாயில்லையே. உன்னை எப்படியெல்லாமோ நினைத்தேன். நீயும் ஒரு போலி கூட்டுக்குள் தானா…? ஒருவேளை என் முடிவை தெரிந்து கொள்ள விருப்பப்படுகிறாயோ? நிச்சயமாய் சம்மதித்திருக்க மாட்டேன். ஆனால் நீ என்னை வற்புறுத்துவாயென நினைத்தேன். ஏனோதானோவென்ற உன் போக்கு சங்கடமாய் இருக்கிறதே. 

“தேனீரை உறிஞ்சியபடியே முன்னால் போகிறேன். ராஜா தடுமாற்றத்துடன் ஆனால் நம்பிக்கையுடன் அமர்ந்திருக்கிறான். என்னைப் புரிந்துக் கொண்ட ஒரோயொரு ஜீவனையும் இதோ இப்போது பிரியப்போகிறேன். எனக்கு நா கொஞ்சம் தடுமாறுகிறது. இருந்தாலும் உறுதியாய், தெளிவாய் சொல்கிறேன். 

”ராஜா நீ வெளிநாடு போறதுக்கான ஏற்பாடுகளை செய்” 

ராஜா எதுவுமே பேசாமல் வெளியேற முற்படுகிறான். 

இதோ போய் கொண்டிருக்கும் இவனை இனி எப்போதுமே பார்க்க முடியாது. எனக்கு இதயம் வேகமாய் துடிக்கிறது. இந்த ஊரார் மீது, அம்மா மீது… பொய்யான சம்பிரதாயங்கள் மீது, எல்லோர் மீதும் கோபம் கோபமாய் வருகிறது. அழுகையை அடக்கி கொள்கிறேன். எல்லோரும் என்னில் இருந்து பிரிவதாய் ஒரு உணர்வு. அதற்குமேலும் அங்கே நிற்க முடியாமல், உள்ளே போக எத்தனிக்கிறேன். 

ஏதோ ஒரு தெளிவுடன் அம்மா அழுத்தமாய் சொல்லிக்கொண்டே வருகிறாள். 

“கொஞ்சம் நில்லுங்க மாப்பிள்ள….” 

– விபவி 2006 சிறுகதைப் போட்டியில் 3ம் பரிசு பெற்றது; தினக்குரலில் பிரசுரமானது. 

– பீலிக்கரை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2007, ஞானம் பதிப்பகம்,கொழும்பு.

பிரமிளா பிரதீபன் பிரமிளா பிரதீபன் (எ) பிரமிளா செல்வராஜா (26 மார்ச் 1984) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தென்னிலங்கையில் ஆங்கில ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி (பட்டயம்) கற்கைநெறியின் நிலைய இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். பிரமிளா பிரதீபன் (எ) பிரேமிளா செல்வராஜா (1984.03.26) பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராஜா; தாய் சிவகாமி. ஆரம்ப கல்வியை ஊவாகட்டவளைத் தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *