இடம் பெயர்தல்




(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வீடு திரும்ப வேண்டும் என்றே தோன்றவில்லை.

பனியடித்தது லேசாக. ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சுகளில் பனி இறங்கிப் போயிருந்தது. ஸ்டேஷனை விட்டு வெளியே கிடக்கும் பெஞ்சுகளில் அலாதியான தனிமை நிறைந்து கிடந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் விளக்கு எரிந்து கொண்டி ருந்தது. இந்த நேரத்துக்கு மேல் ரயில் கிடையாது.
அவன் சிகரெட்டைக் கடைசி வரை இழுத்துவிட்டுத் தூர எறிந்தான். பூட்ஸ் சத்தம் ஒலிக்க ரயில்வே போலீஸார் கடந்து போனார்கள். கண்டுகொள்ளவே இல்லை. முன்பு முதல் தடவையாக வந்த அன்று அவனை விசாரித்தனர்.
“எந்த ஊரு… வீட்டுக்குப் போகலயா?”
“போகணும் சார்!” அவன் கிட்டத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தார்கள். உயரமாக இருந்த ஒருவருக்குத் தூக்கம் முகமெங்கும் அப்பிப் போயிருந்தது. இன்றும் அதே நபர் தனியாகக் கடந்துபோனார்.
ரயில்வே ஸ்டேஷனும், தனியான பிளாட்பாரவெளிகளும் அவனோடு பிரிக்க முடியாதபடி ஆகிவிட்டன. அசப்பில் எல்லா ரயில்வே ஸ்டேஷன்களும் ஒரே குணமாகவே இருக்கின்றன. சிவப்பு ஓடு வேய்ந்த ஸ்டேஷன்கள், தூங்குமூஞ்சி மரங்கள் நிறைந்து போயிருக்கும். ரயில் கடக்கும்போது எங்கும் சருகுகள் பறந்து செல்லும். ஸ்கூல் விட்டு ஓடி வரும் பிள்ளைகள் ரயிலில் போவோருக்கு ‘டாட்டா’ காட்டுவார்கள். பாலத்தில் ரயில் மெல்லக் கடகடத்தபடியே நகர்ந்து போகும். விருதுநகருக்குள் வரும்போது எதிர்ப்படும் வீடுகளில் அவனுடைய வீடு அடையாளம் தெரிய ஜன்னலுக்கு வெளியே முகத்தைக் காட்டுவான்.
அப்போதெல்லாம் அவர்கள் ஆறு மணி வாக்கில் வீட்டிலிருந்து கிளம்புவார்கள். கணேசன் வருவான் அவன் வீட்டுக்கு. வெளியே தெரியும் தெருவைப் பார்த்தபடி இருக்கும் அவனுக்கு கணேசன் தூரத்தில் வரும்போதே படர்ந்த தலை தெரியும்.
சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே வருவான். கலைந்து கிடக்கும் புத்தகங்களுக்கும் பேப்பர்களுக்கும் நடுவில் தூசி தட்டிச் சுவரில் சாய்ந்துகொள்வான். நீண்ட மவுனத்துக்குப் பிறகு அவன் கிளம்பும்போது ஏதாவது புத்தகத்தை எடுத்துக்கொள்வான்.
அவனும் கணேசனும் மெல்லக் கடந்து ஊரைவிட்டு வெளியே வருவார்கள். ஊருக்கு வெளியே நிதானமிருந்தது எங்கும். கடையில் நிறுத்தி சிகரெட் பிடிப்பார்கள். லேசான இருட்டுக்குப் பின்பு, ரயில்வே காலனியின் இடிந்த சுவருக்கு அவர்கள் வரும்போது மற்ற சிலரும் அங்கே உட்கார்ந்திருப்பார்கள்.
பேசிக்கொள்வார்கள். கடந்து போகும் பெண்ணைப் பற்றி… ஸ்டேஷனைப் பற்றி… திடீரென்று அமைதியாகி விடுவார்கள். ஸ்டேஷனை விட்டு வெளியே வரும் ரோட்டில் இருக்கும் தியேட்டரில் செகண்ட் ஷோ போவார்கள். அநேகமாக எல்லா இரவுகளிலும் அவர்கள் பிரியும்போது ரோடுகள் ஆள் அரவமற்று எங்கும் நிசப்தமாயிருக்கும். சிரித்தபடியே அல்லது கத்தியபடியே நடந்துபோவார்கள்.
முனிசிபல் டாங்க்கை ஒட்டி வந்ததும் மற்றவர்கள் பிரிந்து போவார்கள். கணேசனும் அவனும் மட்டும் வருவார்கள் கடைசி வரை. சைக்கிளை நிறுத்திவிட்டு அவன் உள்ளே போன கொஞ்ச நேரத்துக்குப் பிறகு கணேசன், பக்கத்துத் தெருவில் கதவைத் தட்டிக்கொண்டிருப்பது கேட்கும்.
கணேசனுக்காகக் கதவைத் திறந்துவிட அவனது பெரியக்கா ஹாலிலே படுத்துக் கிடப்பார்கள். அந்த இரவில் அவன் அக்காவைக் கூப்பிடுவது ஒற்றையான அலாதியான- குரலாயிருக்கும்.
அவன் இருட்டும் முன்பே மாமாவின் கடையை விட்டுக் கிளம்பி விட்டான். அன்றைக்குக் காலையிலேயே கணேசனின் கடிதம் கடைக்கு வந்திருந்தது.
மறுநாள் அவன் வருவதற்கு முன்பு மாமா அதைப் பிரித்துப் படித்து விட்டிருந்தார். மாமா அவனிடம் கடிதம் வந்தவுடனேயே காட்டவில்லை. கல்லாப் பெட்டியின் ரசீதுகளுக்குள் மடித்துக் கடிதத்தைப் போட்டிருந்தார். அவன் எதற்கோ திறக்கும்போது தான் பார்த்தான்.
“இது எப்போ வந்தது?”
“நேத்து காலைல…”
“எங்கிட்ட சொல்லவேயில்லை…”
“பெரிசா என்னடா எழுதியிருக்கான்…? கண்டபடி திரியறானாம். இப்படித் திரிஞ்சா உருப்படியாகாம போக வேண்டியதுதான்… அதான் நீ இருக்கேல்ல…”
அவன் பதில் சொல்லவில்லை. கணேசனின் கடிதத்தை எடுத்துக்கொண்டு கடைக்கு உள்புறமாகப் போனான். கடைப் பையன்கள் ஸ்டூலில் உட்கார்ந்திருந்தார்கள். கணேசன் ரொம்பவும் சின்னதாக எழுதியிருந்தான்.
‘எந்தச் சுபாவமும் இன்றித் திரியும் மற்றவர்களோடு கழிய வேண்டியிருக்கிறது. யார் எவ்வளவு பிரியமாக இருந்தாலும், ஒரே இடத்தில் இருக்க முடியாமல்தான் போகிறது. இடம் பெயர்ந்து போவது விதிக்கப்பட்டிருக்கிறது எல்லோருக்கும். ஏதேனும் ஒரு விதத்தில் ஒருவர் பொருட்டு ஒருவர் துக்கப்பட்டு அழிய வேண்டியதாக உள்ளது.’
கணேசன் கண் காணாமல் எங்காவது வேறு ஊருக்குப் போகக் கூடும். இனிமேல் அவனுக்கு வரும் கடிதங்களும் நின்றுவிடும் என்றுகூடத் தோன்றியது.
வீட்டுக்குச் சாப்பிடப் போகும்போது அக்காவிடம் சொன்னான்: “நான் ஊருக்குப் போகலாம்னு இருக்கேன்.”
“எதுக்கு?”
“இங்கே இருக்கப் பிடிக்கலே…”
“மாமா ஏதாவது சொன்னாரா..?”
பேசாமல் இருந்தான். அவளே சொன்னாள்:
“கணேசன் லெட்டர் போட்டிருக்கான்லே…”
“எப்படித் தெரியும்?”
“அவர்தான் சொன்னாரு… நிறைய சிகரெட் குடிக்கிறயா மில்லே…ஏண்டா?” எழுந்து வெளியே வரும்போது மாமாவின் குரல் உள்ளே கேட்டது.
“ஊருக்கெல்லாம் போக வேண்டாம். கடைக்கு ஆள் இல்லை… போனா அப்படியே இருந்துக்க வேண்டியதுதான். நினைச்சா வர, நினைச்சா போக இந்த வேலைக்கு முடியாது. போக வர சும்மாவா இருக்கு ரூவா…”
அவனுக்கு அப்பாவின் மேல் கோபமாய் வந்தது. அவரின் இயலாமையின் மேல், அவர்கள் எல்லோர் மேலும். அவர்தான் அவனை இங்கே அனுப்பினார். அக்கா ஊருக்கு வந்திருந்தபோது அப்பா அவளிடம் சொல்லியிருக்கவே, போனதும் அவள் லெட்டர் போட்டாள்.
அன்றைக்கு அவனை ரயில்வே ஸ்டேஷனில் ஏற்றிவிட அப்பா வந்தார்.
”கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக்க… இங்கே ஒரு இடத்துல சொல்லியிருக்கேன். அதுவரைக்கும் எப்படியாவது அக்கா வீட்ல தங்கி சமாளிச்சுக்க…”
வந்த இரண்டு நாட்களிலே தெரிந்துபோனது அவனுக்கு. வீடும் அதன் மனிதர்களும் அவனை வித்தியாசமாகவே நடத்தினார்கள். பத்து மணிக்கு மேல் வீட்டுக்கு வந்ததற்குத் தெருவில் நிற்க வைத்து மாமா கேட்டார்:
“ஏழு மணிக்கு வந்து சாப்பிட்டுட்டு… ஒன்பது மணிக்குத் தூங்கிடணும். எல்லாருக்கும் வேலை வெட்டி இருக்கு.. உனக்காக யாரும் கதவைத் திறந்து வெச்சுக்கிட்டு உட்கார்ந் திருக்க முடியாது.”
அக்காவும் இதையே வேறு மாதிரியாகச் சற்று மென்மையாகச் சொன்னாள். பலசரக்குக் கடையும் அதன் பழமையேறிய நாற்காலியும் அவனோடு சேர்ந்து படர்ந்து கொண்டன. அவனால் இருக்க முடியாமல் போனது.
அவன் எழுந்து நடக்க ஆரம்பித்தான். விடிய ஆரம்பித்திருந்தது. வெளியே காற்று குறைந்திருந்தது. கோயில் கதவைத் திறந்து விட்டிருக்கிறார்கள். தெருக் குழாயில் யாரோ குளிப்பது தெரிந் தது. கடந்து தெருவுக்கு வந்தான். அக்கா வீடு மூடிக் கிடந்தது. உள்கட்டில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனான். அவன் புத்தகமெல்லாம் அறைக்குள் சிதறியபடிக் கிடந்தன. பெட்டி மூலையில் கிடந்தது. ஜன்னலில் இரண்டு பத்துக் காசுகள் கிடந்தன.
காசை எடுத்துப் பார்த்தான். திரும்பவும் அதே இடத்தில் வைத்து விட்டுச் சுவரோரமாகச் சாய்ந்து கொண்டான். கொஞ்ச நேரத்தில் அக்கா வந்து கேட்டாள்:
“இப்பதான் வர்றியா…”
தலையாட்டினான்.
”அப்பா வந்திருக்காரு. மாடியில படுத்திருக்கார். எங்கே போன ராத்திரி..?”
“ரயில்வே ஸ்டேஷன்ல இருந்தேன்.”
”அப்பாட்ட சொல்லிட்டேன். அவர் போகும்போது நீயும் போயிரு… என்னால உங்க ரெண்டு பேரையும் சமாளிக்க முடியலே…”
அவள் போன ரொம்ப நேரத்துக்கு சாய்ந்து உட்கார்ந்தே இருந்தான். படிக்காமலே போன புத்தகங்கள் கிடந்தன. கண்ணெல்லாம் எரிந்தது. அப்பா மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார்.
அவனுக்கு எப்போதோ வீட்டில் ஸ்கூல் லீவில் எல்லோரும் சேர்ந்து விளையாடிய ரயில் விளையாட்டு ஞாபகம் வந்தது. அவரவர் ஸ்டேஷனில் அவரவரை இறக்கிவிட்டுப் போய்க் கொண்டே இருந்தது ரயில் – விளையாட்டிலும்!
– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.