இடமாறு தோற்றப் பிழை




சுனாமியே வந்து கதவைத் தட்டினாலும் தலையைப் பத்து முறை வாரிக் கொண்டு இரண்டாம் தடவையாக ஃபேர் அண்ட் லவ்லியை அப்பிக் கொண்டு சாவகாசமாகத்தான் வருவான் ப்ரதீப்.
காரை ஸ்டார்ட் பண்ணி உட்கார்ந்து ஐந்து நிமிஷங்கள் ஆகி விட்டன. பொறுமை இழந்து செல்போனைத் தடவினேன். கையில் சில பூங்கொத்துக்களோடு ஒரு வழியாய் வந்தே விட்டான்.
” இதை விட்டுட்டோம். ” சொல்லிக் கொண்டே அவசர அவசரமாய்க் காரின் உடம்பில் பூக்களை ஒட்டினான். ஏற்கெனவே கார் பூக்களாலும் பலூன்களாலும் நிரம்பி ஜிகுஜிகுவென இருந்தது.
எங்களோடு பர்கரும் பிட்ஸாவும் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே படுக்கையில் உருண்ட மாணிக் இன்றைக்கு புத்தம்புது மனைவியோடு இந்தியாவிலிருந்து வருகிறான். அவனை வரவேற்கத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம். போன வாரமே அபார்ட்மென்ட் பார்த்து கட்டில் மெத்தை, கவுச், டிவி, நான்-ஸ்டிக் பாத்திரங்கள் என்று சகலமும் வாங்கிப் போட்டாயிற்று. மாணிக் வந்து குடித்தனம் நடத்துவதுதான் பாக்கி.
முன்னிருக்கையில் அவன் உட்கார்ந்த பின் பெல்ட் போட்டானா என்று பார்த்துக் கொண்டு காரை நகர்த்தினேன். ” ஏர் இந்தியா அரைவல் டைம் செக் பண்ணிட்டியா ப்ரதீப்? ”
” கரெக்ட் டயத்துக்கு வருது. அஞ்சு நாப்பது. ”
ல·பாயட் ரோட் தாண்டுவதற்குள் எதிரே வந்த இரண்டொருவர் பூக்களால் அலங்கரித்திருந்த எங்கள் காரைப் பார்த்து விட்டு உற்சாகமாய்க் கையசைத்தார்கள்.
” ப்ரதிப், இந்த வெள்ளைக்காரங்க சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ஓவரா ரியாக்ட் பண்ணறாங்க. மாணிக் ஒரு சுத்து பெருத்திருப்பானா? ”
” நிச்சயம் ஆனவுடனேயே ஆள் வெயிட் போட்டுட்டான். அஞ்சு வருஷமா ஒர்க் அவுட் பண்ணின உடம்பில் அஞ்சே வாரத்தில் தொந்தி விழுந்தாச்சு. ”
நெடுஞ்சாலை 65-ஐ எட்டியபோது – எதிரே வருபவர்களில் சிலர் கார் ஜன்னலை இறக்கி விசிலடித்து கையசைத்து விட்டுப் போனார்கள். எனக்கு முதல் முறையாக ஏதோ நெருடியது.
அடுத்த சிக்னலில் ஒரு மூத்த குடிமகள், ” இந்த முறை புஷ் உங்களுக்கெல்லாம் வெக்கப் போறார் ஆப்பு. ” என்று ஆங்கிலத்தில் கத்தினார். அவர் காரிலிருந்த இளம்பெண்கள் களுக் மளுக்கென்று சிரித்தார்கள்.
” ப்ரதிப், ஸம்திங் ராங். ”
காரை அடுத்த ரெஸ்ட் ஏரியாவில் ஓரங்கட்டி நிறுத்தினேன். இறங்கிப் பார்க்கிற போதே, ப்ரதீப் ஞாநோதயம் வந்தவனாய் அலறினான்.
” மாணிக்குக்காக காரைச் சுத்தியும் ஜஸ்ட் மேரீட் ஸ்டிக்கர் ஒட்டி வெச்சேண்டா. ”
– மே 11, 2006