ஆழந்தெரியாமல்…




(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கோதுமை மாவை நிறுத்து எழிலனிடம் கொடுக்கிறான் துரை. அவன் அதை இயங்கிக் கொண்டிருக்கும் இயங்கியில் கொட்டுகிறான்.

தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்த முதலாளி ‘கட்டையாமா’ புதிதாக வேலைக்குச் சேர்ந்த எழிலனையும், பழைய ஆளான துரையையும் பார்த்துப் புன்னகைத்தபடி, “வணக்கம்” என்றார். தமிழில்தான். அவருக்கு வணக்கம், நன்றி எனும் சொற்கள் தெரியும். துரையும் எழிலனும் சிரித்துக்கொண்டே வணக்கம் என்றனர். அவர் சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் அவருடைய நற்பண்புகளையும், மொழிப்பற்றையும்,செயல் திறனையும் அறிவாற்றலையும் துரை எழிலனிடம் வானளாவப் புகழ்கின்றான். வெற் றுப்புகழ்ச்சி இல்லை. உள்ளத்திலிருந்து கனிந்து வெளி வரும் புகழ்ச்சி அது. புகழ்ந்துவிட்டு, நம் இனம் எப்போதுதான் சப்பானியர்களைப்போல் முன்னேறப் போகிறதோ என்று அங்கு இயங்கிக் கொண்டிருந்த இயங்கியைப்போல் ‘புசு’ என்று நெடுமூச்சொரிகின்றான். அவர்கள் பேசிக் கொண்டிருந்தாலும் வேலை நடந்துகொண்டு தான் இருக்கிறது. இயங்கியின் மற்றொரு பக்கம் மாவு மீயாக வெளி வருகிறது.
சாப்பாட்டு நேரம் வந்து விடுகிறது. துரையும் புதிதாக வேலைக்கு வந்த எழிலனும் சாப்பிடக் கடையை நோக்கி நடக்கின்றனர். வழியில் அழுக்குப் படிந்த சட் டையும், அரைக் கால்சட்டையும் துரையின் கண்களில் பட்டுவிடுகின்றன. காடு மண்டிக்கிடந்த தாடி, குழி விழுந்த கண்கள், ஒட்டிய கன்னம் இத்தனையும் துரையைத் தொட்டாற் சிணுங்கியாக மாற்றிவிடுகின்றன. இரக்கத்தோடு அந்தக் காட்சியைப் பார்த்து மனம் நெக்குறுகிறான். அருகில் வந்ததும் துரையை அந்த உருவம் கிரக்கத்தோடு பார்க்கிறது. “ஐம்பது காசு இருந்தாக் கொடுடா” என்றும் சொல்கிறது. துரை ஐம்பது காசை எடுத்துக் கொடுக்கிறான். அந்த உருவம், “சரிடா வறேன்” என்று தெம்பற்ற குரலில் சொல்லி முடிப்பதற்குள் திரும்பி நடக்கிறது. துரையின் கண்கள் நீர்த்திவலையைச் சொரிகின்றன.
“யார் இவர்…உங்களிடம் பேசுவதைப் பார்த்தா…” என்று எழிலன்தான் வினவுகின்றான்.
துரை தன் மனத்தை விடுவித்துக் கொள்கிறான். “ம்… அவர்பெயர் முத்து. முத்து என்ற பெயரில் நெகிழி (பிளாஸ்டிக்) முத்துக்களும் உண்டு. அந்த முத்து இல்லை இந்த முத்து. இந்த முத்து உண்மைமுத்து. நம் தொழிற்சாலையில் கணக்கராக வேலை செய்த முத்து. கணக்கில் புலியான முத்து தன் கணக்கில் கோட்டை விட்டு விட்டது” என்று ஆற்றாமை தொனிக்கச் சொல்கிறான். கதையைச் சொல்கிறான்:–
“ஒரே அறையில் குடியிருந்த துரையும் முத்துவும் குளித்துவிட்டு வாடிக்கையாகச் சாப்பிடும் சாப்பாட்டு கடைக்குப்போய் தேநீரும் அருந்திவிட்டுப் பக்கத்தில் இருந்த நூலகத்திற்குச் சென்று செய்தித்தாளைப் புரட்டிக்கொண்டிருந்தனர். அப்போது முத்துவின் தந்தை அங்கு வந்தார்.
“நான் வீட்டில் போய்ப் பார்த்தேன் நீ அங்கே இல்லை. இங்கே இருப்பேனு வந்தேன். நீ உடனே ஊருக்குப் புறப்பட்டுப்போக வேண்டும். இனியும் பெண்ணை வீட்டில் வைத்திருப்பது சரியில்லை என்றும் உடனே உன்னைப் புறப்பட்டு வரும்படியும் உன் மாமனார் எழுதியிருக்கிறார்” என்று முத்துவை நோக்கிச் சொன்னார்.
முத்துவுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவன் கட் டிய மனக்கோட்டையில் அடியில் உள்ள செங்கல்லை அசைத்து உருவினாற்போல் இருந்தது. காரணம் இது தான்:- இங்கே இருக்கும் தன் தாய் மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான்.
தந்தைக்கோ தன் அக்காள் மகளைத் திருமணம் செய்தால் கிளைவிட்டுப் போகாது என்ற நினைப்பு. தன் மகனை நோக்கி, “டேய் நீ நான் சொல்லுறபடி கேட்காமல் உன் தாய் மாமன் மகளை மனத்தில் நினச்சுக்கிட்டு இருந்தே ஊருல உள்ள சொத்துல உனக்கு ஒரு சல்லிக் காசுகூடக் கொடுக்கமாட்டேன்” என்று ஒரு போடு போட்டார். முத்துதான் கணக்கில் புலியாச்சே. சற்று நேரத்திற்குள் சொத்துக் கணக்குகளை மனத்திற்குள்ளேயே போட்டு வேண்டாம் என்னும் முடிவுக்கு வந்துவிட்டான்.
முத்துவின் தந்தை மீண்டும் சினத்தோடு சொன்னார்; “நான் சொல்லுறபடி நீ ஊருக்குப்போகலே, நீ என் முகத்துலேயே முழிக்கக்கூடாது. பிறகு நீ எனக்கு மகனும் இல்லை, உனக்கு நான் தகப்பனும் இல்லை” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார். இது முத்து போட்ட கணக்கில்ஒரு சிவப்புக்கோட்டை அழுத்தமாகக் கிழித்தது; மனம் குழம்பியது. “இந்தாப்பாரு முத்து தந்தை சொல் மிக்கதொரு மந்திரம் இல்லை என்பாங்க, அதோடு, உறவுப் பெண்ணுங்கூட. பட்டிக்காட்டுப் பெண்ணா இருந்தாலும் சிக்கனமா செலவு செய்யும், கட்டிப்போடு எல்லாம் காலப்போக்கில் சரியாய்ப் போய் விடும்” என்றான் துரை. முத்துவின் மனம் இளகியது.
அதன்பின் இரண்டு மாதங்கழித்து தமிழகம் சென்றான். நல்ல நேரம் பார்த்து அத்தை மகள் கழுத்தில் மூன்று முடிச்சு அவிழ்க்க முடியாதபடி போட்டும் விட்டான்.
இப்போது இங்கு வந்து மூன்றுஆண்டு ஓடிவிட்டது.
ஒருநாள், முத்து வேலைவிட்டு களைத்துப்போய் வீட்டிற்கு வந்தான். பிள்ளை ‘வீள் வீள்’ என்று கத்தியது. மூக்குச்சளியைப் புறங்கையால் தேய்த்து வீங்கிவிட்டிருந்த கன்னங்களில் இழுக்கிக்கொண்டிருந்தது. இந்தக் காட்சியைப் பார்த்ததும் மனம் நெக்குறுகினான். அழு குரல் எரிச்சலை மூட்டியது அவன் மனைவியோ அதை யெல்லாம் பொருட்படுத்தவில்லை. அது அவளுக்கு இசையாக இருந்தது போலும். தலையை அவிழ்த்துப் போட்டுக் கொண்டு ஈர்வாரியால் தலைமுடியை வாரி ஈரை முறித்துக்கொண்டும் அதில் வந்த பேனையும், ஈரையும் ‘சடக் சடக்’ என்று குத்திக்கொண்டும் இருந்தாள். இதைப் பார்த்ததும் முத்துக்கு வேதனையாக இருந்தது. அவளிடம் வாய் கொடுக்காமல் இருப்பதே நல்லது என்று தன் வாய்க்குப் பூட்டுப்போட்டுக் கொண்டிருந்தவன் அன்று திறந்தான்.-
“பிள்ளை அழுறது தெரியலையா?” என்றான்.
“தெரியுது தெரியுது. அழுதா என்னவாம் உப்பா தண்ணியில கரைஞ்சுபோகுதுங்க” என்று தலைமுடி மறைத்திருந்த முகத்தை வெளியே காட்டாமல் சொல்லி விட்டு நகத்தில் பேனைவைத்துக் குத்தினாள். அவன் மறு மொழி கூறவில்லை பிள்ளையைத் தூக்கி அழுகையை நிறுத்தி தான் வாங்கி வந்த மாச்சில்லைத் (பிஸ்கட்) கொடுத்தான். அடை மழை ஓய்ந்தது. நேரமும் ஓடியது.
மற்றொரு நாள் குளித்துவிட்டு வந்தமுத்து சாப்பிட அமர்ந்தான். ஈர்வாரியும் கையுமாக இருந்த அவன் மனைவி தலை முடியைக் கையால் உதறிவிட்டு அள்ளிச் செறுகிக்கொண்டு வந்தாள். சோற்றுப்பானையை எடுத்து ‘தக்’ என்று மேசைமீது வைத்துவிட்டு சோற்றைக் கையால் அள்ளி தட்டில் வைத்தாள். கல் ‘சளேர்’ என்று தட்டில் விழுந்ததும் அவன் வயிறு கபீர் என்றிருந்தது.
“நல்லாத்தான் பார்த்துப் பொறுக்கிப்போட்டேன். எலவு எடுத்தபய கல்லு எப்படியோ கண்ணுக்குத் தெரியாமல் கிடந்திருக்கு. சுளவு வாங்கிக்கிட்டு வரச்சொன்னா வந்தாத்தானே. இத்தப்பெரிய ஊருலே சுளவு இல்லேங்கிறீக! எப்படி அரிசியைப் பொடச்சு நாவிப்போடுறது? தப்பித்தவறிக் கிடக்கத்தான் செய்யும்” என்றவாறு கறிச் சட்டியை எதிரில் வைத்துக்கொண்டு மேசைக் கரண்டியால் குழம்பைச்சிணுக் சிணுக் என்று பத்துப்பதினைந்து தடவை ஊற்றினாள். முத்து இதையெல்லாம் பார்த்துப் பார்த்து அகக்கண்களால் கண்ணீர்விட்டான். அந்த நேரத்தில் அவனுக்கு வள்ளுவர் மனைவி வாசுகியின் நினைவும் வந்துவிட்டது.
“சனியன் பிடிச்ச பய பிள்ளை என்ன செய்றதுனே தெரியலே. சுள்ளிச் சும்புகளை ஒடிக்கிறதப்போல கறிக் கரண்டி ஒடிச்சிப்புடுச்சு” என்று தன் மகனைநொந்து கொண்டாள். பிறகு தன் தட்டில் சோற்றை வைத்துக் கொண்டு பச்சை மிளகாயை ‘நறுக் நறுக்’ என்று கடித்து கொண்டு ‘சவக் சவக்’ என்று மென்றாள். இடையில் முத்துவைப் பார்த்த அவள் “சாப்பிடுங்க! ஒங்களைப் போல ஆம்பளைங்களெல்லாம் வல்லுவதக்குணு சாப்பிடுராங்களே நீங்க இப்படிச் சாப்பிட்டா எப்படி? சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு ஒரு பிடி பிடித்தாள்.
இன்னொரு நாள். மிகைவேலை முடிந்து – நேரங் கழித்து வீட்டிற்கு வந்தான் முத்து. அவன் எப்போது வருவான் என்று காத்துக்கொண்டிருந்தாள் அவன் மனைவி. வந்ததும் களைப்புத்தீர ஏதாகிலும் குளிர் நீர் கொடுத்து குளிர்ந்த பேச்சு பேசுவதற்காக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை.
“இன்னிக்கு இம்புட்டு நேரங்கழிச்சு வருறீகளே எங்கே போனீக. ஆமா தெரியாமத்தான் கேக்கிறேன். வேலைக்குப்போனோம் காலாகாலத்துல வீட்டுக்கு வந்தோம்னு இல்லாமே எங்கே போனிங்க? இந்த ஊரு பொல்லாப் பய ஊருன்னு தேவரம்பூர் தெம்மாளி அம்மான் சொல்லியிருக்காக. ஆளுக்கொஞ்சம் ஒருமாதிரியா இருந்தாக்க மயக்கிப்புடுவாள்களாம்” என்றாள். பிள்ளை வேறு ‘அம்மா பாவு, அம்மா பாவு’ என்று கத்திக் கொண்டு அழுதது. அதுவேறு அவன் உள்ளத்தை உறுத்தியது. மனத்தைக் கட்டிப்போட்டுப்பார்த்தான் முடியவில்லை. ‘வாயை மூடு’ என்றான்.
“என்னயவா வாய மூடச் சொல்லுறீக. அதான் இந்தச் சுப்பையா மகளுக்கிட்டே நடக்காது” என்றாள்.
முத்து அடிக்கக் கையை ஓங்கினான். அவள் சண்டைப் பயிற்சி பெற்றவளைப் போல் வாகத் தட்டிவிட்டு கொதித்துக்கொண்டிருந்த சோற்றுப்பானை மூடியை எடுத்து அதே வேகத்தில் அவன் முதுகில் அடித்தாள். சட்டை போடாமல் நின்ற அவன் முதுகில் அது நன்றாகச் சுட்டுவிட்டது. வலிபொறுக்க முடியாமல் தவித்தான் சினத்தால் அவளுக்கு இரண்டு கொடுத்தான். அவள் ஒப்பாரி வைத்தாள்.
மாதங்கள் பல உருண்டன, புண் ஆறிவிட்டது. மனப்புண் ஆறவில்லை.
ஒருநாள் அவள் ஊரைச் சேர்ந்தவன் வந்திருந்தான் அவனை இருக்கச் சொல்லிவிட்டு முத்து குளிக்கச் சென்றான்.
குளித்துக்கொண்டிருந்த முத்து காதில் ஒப்பாரிக் குரல் இப்படி விழுந்தது:-
‘அடியே சிரிக்கி என் வயித்தில தீய அள்ளிப் போட்டிட்டியேடி…இத்தப் பெரிய ஊரிலே உனக்கு இவன் தான் கிடைச்சானாடி… என் அருமை அத்தமகன்தான் கிடைச்சானாடி. என் கண்ணான. கட்டழகு ராசுதான் கிடைச்சானாடி…. அடியே சிரிக்கி உன்னை என்ன செய்யுறேன் பாருடி. ஊரைக்கூட்டி உறைமுறைக்கூட்டி உன்னை ஊர் சிரிக்க வக்கிறேண்டி…” குளித்துவிட்டு வெளியே வந்த முத்தைப் பார்த்ததும் அவளுக்கு அகங்காரம் கூடிவிட்டது. முடியை அவிழ்த்துப்போட்டுக் கொண்டு.
“நீயும் ஒரு மனிதனா? அத்தை மகள் வீட்டுல மலையாட்டம் இருக்கினே. என்னைத் தவிக்கவிட்டுட்டியே. அந்தச் சிரிக்கி கூட சிங்கப்பூர்ச் சீமையில் சுத்தி திரியுறீயாம்ல. ப்பூ… நீயும் ஙொப்பன்மாதிரி பத்துப்பேரு சிரிக்கிறாப்புல நடந்திட்டியே. என்னை அத்தை மகள்னும் பார்க்காம பாதகம் நினைச்சிட்டியே. எனக்கு பாதகம் நினெச்ச உன்னை அந்த முனியாண்டிக் கருப்புத்தான் கேக்கும். எங்கப்பன் என்னை கண்ணப்போல வளத்து ஆளாக்கி நாலு வருசம் வீட்டில சிறை வச்சிருந்து மச்சி னன் மகன்னு உனக்குக் கட்டினாரே.முட்டையை அவிச்சு சோத்துல மறச்சு வைச்சுக் கொடுத்த என் அத்தைவழி வந்த பேரனுக்குக் கட்டிக்கொடுக்கனும்னு உனக்குக் கட்டி வச்சாரே. நீ என்னைக் கண்கானாச் சீமையிலே கொண்டுவந்து கண்கலங்க வச்சிட்டியே…” என்று அழுதாள். இதைக்கேட்டுக் கொண்டு தலை நீவிக்கொண்டிருந்த முத்துக்குப் புரிந்துவிட்டது. ஒருநாள் தொழிற்சாலையில் வேலைசெய்யும் பெண்கூடச் சேர்ந்து சாலையில் பேசிக்கொண்டு போனதைப் பார்த்து விட்டு வந்து இப்படி பூதாகாரமாக ஆக்கிவிட்டிருக்கிறாள் என்று எண்ணியபடி தன் மனைவியின் ஊர்க்காரனைப் பார்த்தான்.
நாட்கள் உருண்டன. முத்துவுக்குத் தலையிடி கூடிக் கொண்டே இருந்தது. நேரங்கழித்து வீட்டுக்கு வந்தால் ஒரு வியட்நாம் போரே வீட்டுக்குள் மூண்டுவிடும்.
அழுகிற பிள்ளையைத் தூக்கி, “ஏண்டா அழறே. அழாதேடா” என்று சொல்லி முத்து பிள்ளையின் அழுகையை நிறுத்தினாலும் அதற்குக்கூட அவள் சாடைபேசுவாள்; “அழவச்ச பிறகு அழாமே எண்ணத்தைப் பன்றது?” என்று சொல்லிவிட்டு பூமி அதிர நடந்து வந்து பிள்ளையை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு போய்விடுவாள்.
சோறுபோட்டு பிள்ளைக்கு ஊட்டும்போது, “ஏய் சனியனே முழுங்கு. என்ன இது ஒரு உரைப்பா? உசு உசுங்கிறீயே முழுங்கு” என்று பிள்ளையின் தாடை யில் இடித்துவிட்டு “இந்தாத் தண்ணீ, குடிச்சுத்தொலை” என்று வாயைப் பிளந்து நீர் ஊற்றுவாள். பொறை ஏறி னால் தலையில் அடித்து’செத்துத் தொலையுதுமில்லை இந்த நாத்தப்பயல் பிள்ளைங்க தொலைஞ்சா தலையை முழுகி விட்டு அக்கடாணு ஊருப்பக்கம் தாயோடபிள்ளையா போய்ச் சேந்திடலாம்” என்று இடித்தும் பேசுவாள். முத்து பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். முடிய வில்லை இறுதியில் மணவிலக்குச் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். ஆனால் அதிலும் ஒருசிக்கல் இருந்தது. அதுவும் அவிழ்க்க முடியாத வியட்நாம் பிரச்சினை தான். காரணம் சிங்கப்பூரில் பிறந்த தன் தங்கையைத் தானே ஊருக்கு அழைத்துக்கொண்டு போய் மனைவியின் தம்பிக்குக் கட்டிக் கொடுத்திருக்கிறது. இவளை மண விலக்குச் செய்து அப்பன் வீட்டுக்கு அனுப்பிவிட்டால் தன் தங்கையை அவன் அனுப்பிடுவானே. அவள் வாழ்க்கையும் போய்விடுமே என்று எண்ணித் துன்புற்றான். அத்துன்பம் போதாதென்று முத்திடம் ஒருவர் சொன்னார்:-
“நீங்களும் நம்ம நாகப்பன் இருக்கானே அவன் மனைவியும் தொடர்பா இருக்கிறீங்களாம்! இவன் நாகப்பன் குடும்பத்தையே கெடுக்கப் பாக்கிறாங்க. வேலையிடத் தில் கும்மாளம் போடுறது போதாதுனு வீட்டில வேற கும்மாளம் போடுறாங்கங்க. அங்கே ஏன் போறேணு கேட்டா என்னை வேற அடிக்கிறான். நீங்க நாகப்பனுக் கிட்டச் சொல்லி கண்டிச்சு வைக்கச் சொல்லுங்கங்க எங்கவீட்டுக்காரனுக்கும் ரெண்டு போடச் சொல்லுங்கங்க என்று என்னை நாகப்பனிடம் சொல்லச்சொல்லி இருக்கிறாங்க உங்க மனைவி. உங்க மனைவியே இப்படிச் சொல்லச் செய்யச் சொல்லும்போது நீங்க எதுக்கும் கொஞ்சம் கவனத்தோடு ஒதுங்கி நடந்துக்கிறது நல்லதுங்க… அது மட்டுமில்லை எங்கவீட்டுக்காரியிடம் மந்திரகாரனைப் பற்றி கேட்டுத் தெரிஞ்சு வச்சிருக்கிறாங்க நீங்க எதுக்கும் பாத்து நடங்க” என்று சொன்னார் அவர்.
முத்து மருக்கொண்டவனைப் போல ஆகிவிட்டான்.
‘அப்படியா சொன்னாள். இவளும் பெண்ணா? வீட்டில் தான் மட்டுமரியாதையில்லாமல் வாடாபோடா என்று பேசினாள். பொறுத்துக்கொண்டேன். இப்போது ஊர் சிரிக்க வச்சிட்டாளே. இப்படிப்பட்டவளை என்ன செய்யுறது?” என்று எண்ணி வருந்தினான். வீட்டிற்குப்போகவும் மனமில்லை. பிள்ளையைப்பார்க்க வேண்டும் என்று எண்ணும்போது கால்கள் தானாக வீட்டை நோக்கி நடந்தன.
வீட்டை அடைந்தான். இவனைக்கண்டதும் அவன் மனைவி என்றுமில்லாமல் ‘காப்பி’ கலக்கிக்கொண்டு வந்துவைத்தாள். அந்தக் காப்பியில் என்றும் போல் எறும்பு மிதக்கவில்லை. முத்துவுக்கு என்றும் இல்லாத நடப்பு வியப்பைத் தந்தது. பாலை நிலம் பசுஞ்சோலையாக மாறியதைப்போல் மனம் குளிர்ந்தான். காப்பியை எடுத்துக் குடித்தான் குடித்தவன் கொஞ்சநேரம் ‘குர்’ என்று இருந்துவிட்டு எழுந்தான். வீட்டைவிட்டு வெளியே வந்தான் நடந்தான்; நடந்துகொண்டே இருந்தான்.
அவன் மனைவி துடித்தாள் நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்து விட்டதே என்று வருந்தினாள். மந்திரவாதியிடம் போய் தன் கணவன் தன்மேல் அன்பாக இருக்கவேண்டும் என்று திருநீறு மந்திரித்துக் கொண்டுவந்து காப்பியில் கலக்கிக்கொடுத்தது இப்போது அவளுக்கே வினையாக முடிந்துவிட்டதை நினைத்து ஒப்பாரி வைத்தாள். ஒப்பாரியுடன் பிள்ளையின் அழுகுரலும் சேர்ந்துகொண்டது.
இப்போது இப்படியாகி விட்டான். ஒருநல்ல கம்பியூட்டார் மூளையை இழக்கக்கூடாது என்று இரக்கத்தோடு நம் முதலாளி கட்டையாமா முத்துவை எப்படியும் பழைய நிலைக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்தார். பலன் கிட்டவில்லை. என்று வருத்ததுடன் சொல்கிறான் துரை.
“உண்மை கற்பனையைவிட அதிசயமானது என்பது சரியாகத்தான் இருக்கிறது” என்ற எழிலன் மேலும் தொடர்ந்தான்! “ஊரிலிருந்து எத்தனையோ பெண்கள் இங்கு வந்திருக்கிறாங்க. எங்க அண்ணிகூட ஊரில் பிறந்து வளர்ந்தவங்கதான். அவங்க இப்படி இல்லையே. நடை உடை, பாவனைகள், சிக்கனம், குடும்பம் நடத்தும் திறமை இதையெல்லாம் பார்த்து எல்லாரும் பெருமைப் படுறாங்க. இப்படிப்பட்ட நல்ல பழக்கவழக்கங்களைப் பார்த்து நான்கூட வியந்திருக்கிறேன்” என்றான்.
“அவங்க படிச்சவங்க” என்கிறான் துரை.
“ஆமா அவங்க படிச்சவங்கதான். அதனால்தான் அவங்க நீக்குப்போக்குப் பார்த்து நடந்துக்கிறாங்க. இதையெல்லாம் வச்சுப் பார்க்கும்போது உறவுமுறை பார்த்து பெண் எடுப்பது கொடுப்பதைவிட அமரர் மு.வ. சொன்னதுபோல் உடற்கூறும், உளக்கூறும் பார்த்துச் செய்வதுதான் நல்லது. இல்லாவிட்டால் வேலிக்கும் நீருக்கும் இழுக்கும் தவளை எலி கதையாகத்தான் முடியும்” என்கிறான் எழிலன்.
நேரம் ஆகிவிட்டது. சாப்பிட்டுவந்த இருவரும் பேசிக்கொண்டே தொழிற்சாலையை அடைந்துவிடுகின்றனர். பெண்கள் பொட்டலம் கட்டும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுள் பொன்னகை அணியாத ஒருத்தி எழிலனைப் பார்த்துப் புன்னகைக்கிறாள்; அவளை நாணம் தலைகுனியச்செய்கிறது. இதைப் பார்த்தும் பார்க்காததைப்போல் வந்த துரை, “ஆழம் தெரியாமல் காலை விட்டுவிடாதே” என்கிறான்.
– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.