ஆன்ம பலம்




கதிரேசனுக்கு சென்னையின் பிரபல ஐடி கம்பெனியில் நல்ல வேலை.
கை நிறையச் சம்பளம். மிகச் சுதந்திரமான வாழ்க்கை. எல்லாம் சேர்ந்து கதிரேசனை ஆனந்தக் கடலில் மூழ்கடித்தன.
கதிரேசன் பொதிமாடு மாதிரி வாட்டசாட்டமாக இருப்பான். இன்னமும் கல்யாணம் ஆகவில்லை.
பணக்கார வீட்டுப் பையன் என்பதால், மதுரையில் வசிக்கும் பெற்றோர்களுக்கு பணம் எதுவும் அனுப்ப வேண்டாம். அதனால் மிகவும் ஜாலியாகச் செலவழித்தான்.
சென்னையில் வாய்க்கு ருசியான உணவுகள் கிடைக்கும் ஹோட்டல்கள், மெஸ்கள், அக்கா கடைகள் என்னென்ன எந்தப் பகுதிகளில் இருக்கின்றன என்பதெல்லாம் கதிரேசனுக்கு எப்படி அத்துப்படியோ; அதே மாதிரி எந்தப் பகுதிகளில் உடல் வனப்பு அதிகமான விலைமகள்களின் வீடுகள் இருக்கின்றன என்பதும் அவனுக்கு அத்துப்படி…
சம்பளம் வாங்கியதும் மாதத்தின் முதல் செலவே அவனுக்கு விலைமகள் வீட்டுக்குப் போய் வருவதுதான். அது அவனுக்கு ஒரு இன்பமயமான சாகசச் செயலாகவே இருந்தது.
நிறைய விலைமகள்கள் வீட்டில் கதிரேசன்தான் பிரதான வாடிக்கையாளன். அதனால் பல சலுகைகள் அவர்களின் வீடுகளில் கதிரேசனுக்கு உண்டு. அதில் முக்கியமான சலுகை மற்ற வாடிக்கையாளர்களைவிட அவன் கூடுதலாக அரை மணிநேரம் வரை இருந்துவிட்டுப் போகலாம். யாரும் அவனை அவசரப் படுத்த மாட்டார்கள். தவிர, அவனுக்கு சிக்கன், மட்டன், முட்டை, பிரியாணி கொடுத்தும் உபசரிப்பார்கள். இவனும் பணத்தை விசிறியடிப்பான்.
நாளடைவில் சென்னையின் பெரும்பாலான ‘மாமா’க்களின் மொபைல் நம்பர்கள் கதிரேசனின் மொபைலில் நிரந்தரமாகக் குடியேறின.
யார் மீதும் அவனுடைய மனதில் இதுவரை ஒரு மென்மையான காதலோ அல்லது புரிதலோ ஏற்பட்டது இல்லை. பணம் கொடுத்தால் படுத்துவிடும் பெண்களை மட்டும்தான் அவனுக்கு இதுகாறும் அறிமுகம்.
நாளடைவில் அவனுக்கு பாலியல் தொழிலை வீட்டிலேயே நடத்தும் பங்கஜம்மா வீட்டுடன் நெருக்கம் அதிகமானது. மாதா மாதம் சம்பளம் க்ரிடிட் ஆனதும் பங்கஜம்மா வீட்டிற்கு சென்று அங்கு பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஆரம்பித்தான். அப்போது அங்கு அவனுக்குப் புதிதாகப் பழக்கமானவள்தான் சங்கவி.
கழுவிச் சீவிய பப்பாளி மாதிரி அம்சமாக இருப்பாள் சங்கவி. புத்திசாலித்தனமாக பேசுவாள். IQ லெவல் அதிகம். மேலும் கதிரேசனை பிரத்தியேக உபசரிப்புடன் ஸ்பெஷலாகக் கவனித்துக் கொள்வாள் என்பதால் அவனுக்கு அவளிடம் ஒரு இனந்தெரியாத ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. எனவே கடந்த ஒரு வருடமாக அவளைத் தவிர வேறு யாரிடமும் அவன் போவதில்லை என்று உறுதி கொண்டிருந்தான்.
அவளின் வசீகரமும், கற்பனையுடன் கூடிய விதவிதமான சரீர ஒத்தாசைகளும், பண்பான பேச்சும், எல்லாம் முடிந்தவுடன் கிளம்பும்போது வாஞ்சையுடன் அவன் தலைமயிரை புன்னகையுடன் விரல்களால் கோதிவிட்டு, சட்டைப் பொத்தான்களை வரிசையாக மாட்டிவிட்டு காலரை சரிசெய்து அக்கறையுடன் அவனை அனுப்பும் பாசமும் — கதிரேசன் அவளிடம் சொக்கிக் கிடந்தான்.
வயது இருபத்தியெட்டு ஆகிவிட்டதால் அப்பா மதுரையிலிருந்து அடிக்கடி மொபைலில் தொடர்புகொண்டு கதிரேசனை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார்.
யோசித்துப் பார்த்ததில் அவனாலும் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டு குப்பைகொட்ட முடியுமா என்பது கதிரேசனுக்கே புரியாத புதிராக இருந்தது. நிஜமாகவே அவன் மனதில் கல்யாண ஆசைகளோ, கனவுகளோ எப்போதும் ஏற்பட்டது கிடையாது.
சென்னையின் ஐந்து வருட வாழ்க்கையில் கதிரேசன் எந்தப் பெண்ணையும் கல்யாண ஆர்வத்தோடோ அல்லது காதல் வேகத்தோடோ பார்த்ததோ, அணுகியதோ கிடையவே கிடையாது.
பெண்களைப் பார்த்தால் பாலுணர்வு மோகம்தான் அவனிடம் அதீதமாக ஏற்படும். பெண்களின் உடம்பின்மேல் அவனுக்கு அப்படியொரு தீராத தாகம்.
மனிதனுக்கு பாலுணர்வுதான் இருக்கலாமே தவிர, காதல் தேவையே கிடையாது என்பது அவனுடைய எண்ணம். கல்யாண வாழ்க்கை என்பது ஆண்-பெண் சுகத்திற்கான வடிகால்தான் என்பது அவன் முடிவு.
இருப்பவனுக்கு ஒரேயொரு வீடு. இல்லாதவனுக்கு எத்தனையோ வீடுகள் என்கிற மாதிரி கதிரேசனுக்குத்தான் பங்கஜம் வீட்டில் சங்கவி காத்திருக்கிறாளே!
ஆனால் சமீப காலங்களாக கதிரேசனுக்கு, இனி எல்லாமே ஒரே கூரையின் கீழ் கிடைக்க வேண்டும் என்கிற ஞானோதயம் ஏற்பட்டு விட்டது. பாலுறவு, வயிற்று உணவு, இரவுத்தூக்கம் இந்த மூன்றும் ஒரே வீட்டின் சுவர்களுக்குள் கிடைத்தாக வேண்டும். இதற்கு ஒரேவழி உடனடியாக ஒரு கல்யாணம் என்று நினைத்தான்.
ஒரே கூரையின் கீழ் எல்லாவற்றையும் தரப்போகிற மனைவியின் வருகைக்காக காத்துக்கொண்டும்; அதேநேரம் அடிக்கடி சங்கவியின் அணைப்பிலும் கட்டுண்டு கிடந்தான்.
கதிரேசனின் அப்பா ஒருநாள், “டேய் நம்ம ஜாதிப் பொண்ணு ராஜலக்ஷ்மின்னு ஒருத்தி மைலாப்பூர்ல இருக்கா… போட்டோல லட்சணமா இருக்கா, அவளுக்கு அம்மா அப்பா கிடையாது, ஆனா ரெண்டு சித்திகள் உண்டு. இந்த சண்டே நீ அவளைப்போய் பெண் பார்த்துட்டு வந்திரு… உனக்கு பெண்ணைப் பிடிச்சிருந்தா, மற்ற விஷயங்களைப்பற்றிப் பேச நானும் அம்மாவும் சென்னைக்கு கிளம்பி வருகிறோம்…” என்றார்.
கதிரேசன் அவனுடைய கல்யாணத்திற்காக பார்க்கப்போகிற முதல் பெண் ராஜலக்ஷ்மி. போய்தான் பார்த்துவிட்டு வருவோமே என்கிற எண்ணம் மேலோங்கியது.
ஞாயிற்றுக்கிழமை மழமழவென ஷேவ் செய்துகொண்டு, பிரத்தியேகமாக உடையணிந்துகொண்டு, டாக்ஸி பிடித்து ராஜலக்ஷ்மியின் வீட்டைக் கண்டுபிடித்து போய் இறங்கினான்.
வீட்டு வாசலில் சித்தியின் கணவர் அவனை வரவேற்று அமரச் செய்தார். சித்திகள் பரபரப்புடன் காரட் அல்வாவும், உருளைக்கிழங்கு போண்டாவும் சுடச்சுட கொண்டு வந்து அவனைச் சாப்பிடுமாறு உபசரித்தனர்.
அவன் சாப்பிட்டு முடித்ததும், “ராஜீ…” என்று சித்தி அழைத்தாள்.
ராஜலக்ஷ்மி உள்ளேயிருந்து அழகான அயல்நாட்டு நைலக்ஸ் புடவையில் தலையைக் குனிந்தவாறு மெதுவாக நடந்துவந்து கதிரேசனுக்கு எதிரே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து தலையை நிமிர்த்தி அவனை நோக்கினாள்.
ராஜலக்ஷ்மியைப் பார்த்த அடுத்த கணம் கதிரேசன் அதிர்ந்தான். எனினும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பண்பாக, “நான் தங்களிடம் சற்றுநேரம் தனியாகப் பேச வேண்டும்…” என்றான்.
சித்தப்பா “மொட்டை மாடிக்குப் போய் தாராளமாகப் பேசுங்கள்…” என்றார்.
இருவரும் மொட்டை மாடிக்குச் சென்றனர்.
“இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை கதிர்… என்னுடைய உண்மையான பெயர் ராஜலக்ஷ்மி. சங்கவி என் தொழிலுக்காக வைத்துக் கொண்ட பெயர் என்னை மன்னித்துவிடுங்கள்…”
“…………………..”
“இனியும் என்னைத் தாங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று நம்பும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல…ஆனால் என்னிடம் வருவதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்…”
கதிரேசன் விறுவிறுவென கீழே இறங்கிவந்து கிளம்பத் தயாரானான்.
“என்ன தம்பி ஒண்ணும் சொல்லாம கிளம்பிட்டீங்க?” சித்தி கேட்டாள்.
“வர்ற புதன்கிழமை என் முடிவைச் சொல்கிறேன்…”
அன்று இரவு தூக்கம் வரவில்லை. நிறைய யோசித்தான்.
மறுநாள் திங்கட்கிழமை மாலை பங்கஜம் வீட்டிற்குச் சென்றான்.
பங்கஜம் “சங்கவி சனி ஞாயிறுகளில் மட்டும்தான் வருவாள் கதிர் தம்பி… வேற யாராச்சும் வேணும்னா சொல்லுங்க…” என்றாள்.
இவன் உடனே திரும்பி வ்ந்துவிடான். மறுபடியும் சனிக்கிழமை சென்றான். அவள் இருந்தாள்.
“நம்ம ஜாதில பொறந்துட்டு ஏன் இப்படி?”
“நான் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன் கதிர். மாதச்சம்பளம் இருபதினாயிரம். இரண்டு சித்திகளும், சித்தப்பாக்களும் தண்டச்சோறுங்க… வீட்டு வாடகையே பத்தாயிரம். எனவே பணத்துக்காக சனி ஞாயிறுகளில் மட்டும்தான் இப்படி….”
அன்று கதிரேசன் அவளைத் தொடவில்லை. வற்புறுத்தி அவளிடம் பத்தாயிரம் பணம் மட்டும் கொடுத்துவிட்டுச் சென்றான்.
இரவு நிறைய யோசித்தான்…
தான் மட்டும் யோக்கியமா என்ன? நிறைய பணம் இருக்கிறது என்பதால்தானே ஆடுகிறோம்? ஆனால் அதே பணம் அவளுக்கு எவ்வளவு வாழ்வாதார முக்கியம்? விலை மாதர்களிலேயே பலர் புத்திசாலியாகவும், உதவி செய்யும் குணமும், அன்பாகவும், நேர்மையான பண்புகளோடும் இருக்கிறார்களே? எனவே பாலியல் ஆசைக்கான விருப்பம் மற்றும் கற்பை வைத்து மட்டும் ஒரு பெண்ணை கண்டிப்பாக வரையறுக்கக் கூடாது…
கிரிக்கெட் பிரபலங்கள் அனில் கும்ளே, வெங்கடேஷ் பிரசாத் இன்றும் நன்றாகத்தானே வாழ்கிறார்கள்? பிரசாத் ஒரு விதவையையும், கும்ளே திருமணமாகி குழந்தையுடன் டைவர்ஸான ஒருவளையும் மணம் செய்து கொள்ளவில்லையா?
தவிர பிரபல நடிகைகளான லக்ஷ்மி, ராதிகா போன்றோர் பல்வேறு காரணங்களுக்காக பல கல்யாணங்கள் செய்து இருப்பினும், அவர்களின் போர்க்குணம், தனித்துவம், புத்திசாலித்தனம், உடனடியாக முடிவெடுத்து செயல்படும் வேகம் போன்ற நற்குணங்கள் அவர்களிடம் ஏராளமாக இல்லையா?
ஒரு பெண்ணை மதிப்பிடும்போது அவளது கன்னித்தன்மையை பிரதானமாக வைப்பதற்கு பதிலாக, அவளது அறிவுத்திறன், சுதந்திரமான செயல்பாடு, தனித்துவம் போன்ற நல்ல குணங்களுக்கு முக்கியத்துவம் தரப்படின், ராஜலக்ஷ்மி சிறந்த பெண்மணிதான்…
ஒரு முடிவுடன் தூங்கிப்போனான்.
அடுத்த மாதமே ராஜலக்ஷ்மியுடன் அவனுக்குத் தடபுடலாகத் திருமணம் நடந்தது. பங்கஜம் வந்திருந்தாள்.
முதலிரவுக்கு முன்பாக அப்பா, “டேய் கம்மங் காட்டுல காஞ்ச மாடு மாதிரி அவமேல பாயாத…” என்றார்.
கதிரேசன் தனக்குள் சிரித்துக்கொண்டான்…