ஆசையா.. கோபமா…?






(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம் – 1

கொட்டுகிற அருவியில் முகம் நீட்டியதைப் போல சிலு சிலுப்பாக உணர்ந்தாள் பூர்ணிமா.. அவள் முகத்தில் நீர்திவலைகள் படிந்து.. வழிந்து அந்த அனுபவம் பொய்யில்லை.. உண்மையென்று உணர்த்த… மீண்டும் அருவிக்குள் முகம் நீட்ட விழைந்தாள்.. அவளது ஆசையை அறிந்ததைப் போல் அருவிநீர் மீண்டும் அவள் முகம்மீது கொட்டியது.. நீர்த்துளிகளின் மெல்லிய தாக்குதலில் அவள் முகம் சிலிர்த்து அந்த ஜில்லென்ற நதிநீரில் நனையும் அனுபவத்தை ரசித்தாள்…
“ஏண்டி… இன்னும் எத்தனை பக்கெட் தண்ணியை உன்மேல கொட்டினா.. நீ எழுந்து தொலைப்பேன்னு… சொல்லித் தொலைடி…”
நீரில் அமிழ்ந்து கொண்டிருந்தவளின் காதோரமாக கோபக்குரல் ஒலிக்க.. ‘இது சரளாவின் குரலைப் போல இருக்கே…’ பூர்ணிமா நினைத்துக் கொண்டாள்…
நினைவோடு நிறுத்திக் கொள்ளாமல்.. கண் பார்த்துக்கிட்டு கிடக்க வேண்டியது.. விடிஞ்சப்புறம் கும்பகர்ணியாய் மாறித் தூக்கம் போட வேண்டியது.. உனக்குத்தான் இதே பிழைப்பாய் போச்சே.. உன்னை எழுப்பி.. பேங்குக்கு கூப்பிட்டுக்கிட்டு போகிறதுக்குள்ள.. உன்பாடு.. என் பாடுன்னு ஆகித் தொலைக்குது.. இப்ப மணி என்னன்னு தெரியுமா..?”
“என்ன.. ஒரு ஆறு மணியிருக்குமா..?”
“பேராசைதாண்டி உனக்கு.. இப்ப மணி எட்டு…”
பூர்ணிமா அலறியடித்துக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்து குளியலறைக்குள் ஓடினாள்…!
“இப்பப் புரியுதா.. ஏன் நான் உன் முகத்தில் பக்கெட்.. பக்கெட்டா தண்ணியை ஊத்தியேன்னு..?”
விளம்பர பாணியில் சராள சொல்ல.. பூர்ணிமா அவளை முறைத்தாள்…
“சான்ஸ் கிடைச்சிருன்னு ஓட்டிப் பார்க்கிறயா..?”
“எனக்கெதுக்குடி வம்பு.. எட்டரைக்கு ஓபன் ஆகிற டைனிங் ஹாலை மூடிவிடுவாங்க.. அந்த நேரத்துக்குள் போனால்தான் முக்கால் மணி நேரத்தில் காலையில் வயிற்றில் போட ஏதாவது கிடைக்கும்.. மதியத்துக்கும் லன்ச் பாக்ஸ் நிரம்பும்…”
“இது அநியாயம்டி…”
“எதைச் சொல்கிற…?”
“இந்த ஹாஸ்டலில் போட்டிருக்கிற சட்டத்தைச் சொல்கிறேன்…”
“இங்கே இதுதான் சட்டம்.. உன்னை மாதிரி ஆளுக இப்படிச் சட்டம் போட்டால் கூடத் திருந்த மாட்டேங்கறிங்களேடி.. ஓடு.. எட்டரைக்குள்ளே பல்லையாவது தேய்த்து விட்டு வந்து சேரு..”
பூர்ணிமா குளித்து முடித்தே வந்து விட்டாள்…
“டிரஸ் சேன்ஜ் பண்ணிக்க நேரமில்லைடி…” என்றபடி.. நைட்டியோடு சாப்பிடக்கிளம்பினாள்…
“முதலில் பந்திக்கு முந்துவோம்.. பத்துமணிக்குத்தானே பேங்குக்கு போகனும்..”
”இங்கேயிருந்து பேங்க் போக அரைமணி நேரம் ஆகுமேடி…”
“இவ்வளவு யோசிக்கிறவ.. இழுத்துப் போர்த்திக்கிட்டு எட்டு மணிவரைக்கும் தூங்கக் கூடாது..”
அவர்கள் சன்னக்குரலில் வழக்கடித்தபடி சாப்பிட்டு விட்டு வந்தார்கள்…
“பத்தே நிமிசம்தான் இருக்கு…”
கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி பூர்ணிமா பரபரத்தாள்…
“அது உன் கவலை.. ஆல்ரெடி நான் கிளம்பி ரெடியாய் இருக்கேன்…”
சாவாதானமாக ஒரு நாவலை எடுத்துப் புரட்டியபடி சரளா கூறினாள்.. அவளை எரிப்பதைப் போல பார்த்தபடி.. அந்த பத்து நிமிடத்தில் பூர்ணிமா தயாராகி விட்டாள்…
“வெரிகுட்..”
தோழியின் வேகத்தை மெச்சிய சரளாவை பார்வையிட்டாள் பூர்ணிமா…
உயரமாக.. ஒல்லியாக.. கொடி போல் இருந்தாள் சரளா.. வட்ட முகத்தில் பெரிய கண்கள் லேசாக மையிடப்பட்டு பார்ப்பவர்களை வசீகரித்தன.. அடர்ந்த கருமையான கூந்தலை விரிய விட்டு.. ஹேர் பேன்டில் அடக்கியிருந்தாள்..
‘எப்படித்தான் இவ்வளவு அழகாய் இருந்து தொலைக்கிறாளோ…’ அவள் மனதுக்குள் எண்ணம் எழுந்தது…
“என்னடி அப்படிப் பார்க்கிற…?”
“பார்ப்பதைப் போல இருந்து தொலைக்கிற.. பார்க்கிறேன்…”
“தோடா.. நீ பார்க்கிறதைப் போல இல்லையா..?”
பூர்ணிமா அதற்குப் பதில் சொல்லாமல் பேச்சை மாற்றினாள்…
“இருக்கிறது திருநெல்வேலியில்.. பேச்செல்லாம் சென்னைப் பேச்சா..?”
“பிறந்து.. வளர்ந்தது சென்னைதானேடி… இந்த ஒரு வருசமாத்தானே திருநெல்வேலியில் இருக்கிறேன்..? என்னைச் சொல்கிறயே.. நீ மட்டும் யாராம்..? பெரிய குளத்துக்காரப் பொண்ணுதானே நீ.. ?”
“இப்ப வேலைக்குப் போகாமல் ஊரைப் பத்தி என்ன ஆராய்ச்சி வேண்டிக்கிடக்கு.. ? வா.. வா.. போகலாம்..”
கிளம்பிய பூர்ணிமாவை நிறுத்தி.. அவள் கண்களுக்குள் உற்றுப் பார்த்தாள் சரளா…
இப்போது..”என்னடி.. அப்படிப் பார்க்கிற..?” என்று கேட்பது பூர்ணிமாவின் முறையாகி விட்டது…
“நீயேண்டி.. என்னையே உயர்த்தியாய் பேசற.. ? நீ எவ்வளவு அழகுன்னு உனக்குத் தெரியுமா..?”
“எனக்கும் தெரியாது.. மத்தவங்களுக்கும் தெரியாது…”
இப்படிச் சொன்ன பூர்ணிமா சரளாவைப் போல உயரமாக இல்லாமல்.. உயரம் கம்மியாக இருந்தாள்.. பூசினாற் போன்ற சதைப்பிடிப்பான உடல்வாகு.. மாநிறம்.. நீள்வாக்கிலான சிறிய கண்கள். நீண்ட கூந்தல்…
பூர்ணிமாவைப் போல பார்த்தவுடனே.. ‘வாவ்..’ என்று சொல்ல வைக்கும் அழகியாக அவளில்லாவிட்டாலும்.. அவளிடம் ஒர்விதமான தனித்த வசீகரத்தன்மை இருக்கத்தான் செய்தது…
அவள் சிரிக்கும்போது கூடச் சேர்ந்து சிரிக்கும் கண்கள்.. அவளது அந்த வசீகரத்தை அதிகப்படுத்துவதை அவள் அறியாமல் இருந்தாள்…
“மத்தவங்களுக்குத் தெரியாதுன்னு நீயாய் எப்படிச் சொல்கிற..? உன் குணசீலனுக்குத் தெரியாதா..?”
இதைக் கேட்டவுடன் பூர்ணிமாவின் மனதில் சாரல் அடித்தது.. அவளது மனதின் மையல் கண்களில் தெரிய.. அவள் முகம் ஒளிர்ந்தது.. இதழ் வளைத்துச் சிரித்தாள் அவள்…
“அட.. அட.. அம்மணி முகத்தில் பல்ப் எரியுது…” சரளா கண்களைச் சிமிட்டிச் சிரித்தாள்…
“ம்த்ச்.. அதெல்லாம் ஒன்றுமில்லை.. நீயாக.. எதையாவது சொல்லாதே.. அவனை எதற்கு இப்போ நினைவுபடுத்தற…?*
“இந்தக் கதையெல்லாம் வேற யாருகிட்டயாவது சொல்லு.. உன் மனதில் அவன் இல்லையாக்கும்..?”
“இல்லை…”
“இதை என்னை நம்பச் சொல்கிறயாக்கும்.. ?”
“ஆமாம்…”
“இந்த வருசத்தோட மிகச்சிறந்த ஜோக் இதுதாண்டி…”
“இதையெல்லாம் சொல்லத்தெரியுது.. இந்த வருசத்திலே நாம் லேட்டாய் போனது எத்தனை தடவைன்னு மட்டும் நினைவில் இல்லையா..?”;
“அதை மறந்து போனேன் பாரு.. வாடி.. ஓடியே போகலாம்…”
“நாம ஓடமுடியாது.. வண்டியில் ஏறி உட்காரு.. வண்டி ஓடும்…”
சரளாவின் கைனடிக் ஹோண்டாவில் பூர்ணிமா ஏறிக்கொள்ள வண்டி கிளம்பி.. படுவேகமாக சாலைப் போக்குவரத்தில் கலந்தது…
மூச்சிரைக்க… பேங்குக்குள் நுழைந்தவர்களைப் பார்த்த குணசீலன் புருவங்களை உயர்த்தினான்…
“ஏண்டா அரவிந்தா… இவங்க வேலைக்கு வந்திருக்காங்களா..? இல்லை.. ஓட்டப் பந்தயத்தில் கலந்துக்க வந்திருக்காங்களா..?”
அந்த அரவிந்தனாகப் பட்டவன் சரளாவை அள்ளிப் பருகுவதைப் போல ஒரு பார்வை பார்த்துவிட்டு…
“எனக்கு அப்படியெல்லாம் தோணலைடா.. எங்க தாத்தா சொன்ன கதையில வருகிற பூலோக ரம்பை மாதிரி தோனுதுடா..” என்று ஜொள்ளினான்..
“காலையிலேயே வழிசலை ஆரம்பிச்சுட்டாண்டி.. பூர்ணிமாவின் காதோரமாக முணுமுணுத்தாள் சரளா…
பூர்ணிமாவோ.. அவளது முணுமுணுப்பைக் கவனிக்காமல் குணசிலனின் புருவ உயர்த்தலைக் கவனித்தபடி.. முகச்சுளிப்புடன் அவனுக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்தாள்…
“அப்படியே இஞ்சி தின்ற குரங்கைப் போலவே இருக்குடா…” குணசீலன் பூர்ணிமாவைப் பார்த்தபடி அரவிந்தனிடம் சொல்லி வைக்க.. பூர்ணிமாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது…
‘என்னைத்தானே சொல்லுகிறாய்.. ?’ என்று அவன் சட்டையைப் பிடிக்க முடியாமல் கண் முன் காத்திருந்த மக்கள் வரிசை தடுக்க.. அவள் பரபரவென்று கம்யூட்டரை உயிர்பித்தாள்…
“எனக்கொன்னும் அப்படித் தோணலை…” சரளாவின் முகத்தில் விழி பதித்திருந்த அரவிந்தன் சொன்னான்…
“நீ பார்க்கிற முகம் அப்படி…”
குணசீலன் ஜாடையாக பூர்ணிமாவைப் பார்த்தபடி கூறினான்.. அவன் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை… பூர்ணிமா.. எரிமலையாய் அவன் பக்கம் திரும்பி.. அனல் பார்வையொன்றைக் கக்கினாள்…
குணசீலன் அதற்கும் அயர்ந்து போகவில்லை…
“ஹப்பா.. ஒரே அனல் காத்துடா மச்சான்…” என்று மீண்டும் அவளை வம்புக்கு இழுத்தான்…
பொறுக்க முடியாத பூர்ணிமா அரவிந்தனின் பக்கம் திரும்பினாள்…
“இது சரியில்லை அரவிந்தன்…”
சரளாவின் பார்வையை தன் பக்கமாக திருப்ப தீவிரமாக முயன்று கொண்டிருந்த அரவிந்தன் பேந்தப் பேந்த விழித்தான்…
‘இவ எதை சரியில்லைன்னு சொல்கிறா..? ஒருவேளை இவ பிரண்டை நான் சைட் அடிக்கிறதைத்தான் சரியில்லைன்னு சொல்கிறாளோ…’
“எனக்கு இதுதாங்க சரி…”
“இது கொஞ்சம் கூட நல்லாயில்லை…”
சரளாவின் தோற்றத்தை ரசித்துக் கொண்டிருந்தவன் அரவிந்தன்…
“ஏங்க.. எவ்வளவு நல்லாயிருக்கு தெரியுமா..?” என்று சொல்லி வைத்தான்…
“எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூடப் பிடிக்காது…”
‘இவ பிரண்டைப் பார்த்தா இவளுக்கென்ன..? இவளுக்கு பிடிச்சிருந்தா.. எனக்கென்ன.. பிடிக்கலைன்னாத்தான் எனக்கென்ன.. அவளுக்குப் பிடித்திருந்தால் போதுமே…’
“எனக்குப் பிடிச்சிருக்கே…”
“எப்பவும் நான் வாயை மூடிக்கிட்டே இருந்திருவேன்னு நினைக்காதீங்க…”
‘நீ எப்படியிருந்தா எனக்கென்ன..?’
“நினைக்கலைங்க…”
“ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காதுங்க…”
‘எது இருக்காது…?’
“இருக்காட்டிப் போகட்டும்..”
“ஆபிஸீக்கு வந்தால் வேலையைப் பார்க்கனும்.. அதை விட்டுவிட்டு பக்கத்திலிருக்கிறவங்களைப் பார்க்கக் கூடாது…”
பூர்ணிமாவின் ஜாடைப் பேச்சை ரசித்தபடி.. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த குணசீலனை முறைத்தபடி பூர்ணிமா பேசிவைக்க.. அரவிந்தனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது…
அது எப்படி இவள் அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லிவைக்கலாம்..? அவன் ஆபிஸீக்கு வருவதே சரளாவைப் பார்ப்பதற்காகத்தான்.. அவளைப் பார்க்க… இவள் தடா சொல்லுவதா..?
அத்தியாயம் – 2
“ஹலோ.. நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க…”
“நான் என் வேலையைத்தான் பார்க்கிறேன்..மத்தங்கதான் அப்படியில்லை…”
“நீங்க ஏங்க மத்தவங்களைப் பார்க்கறிங்க…?”
‘நான் சரளாவைப் பார்ப்பதை நீ ஏன் பார்க்கிறாய்..?’ என்ற கோபத்தில்தான் அரவிந்தன் இந்தக் கேள்வியைக் கேட்டான்…
“அஃது…” என்றபடி சிரித்த குணசீலனின் பார்வையில் கேலி இருந்தது…
பூர்ணிமா.. அவனைப் பார்ப்பதை உணர்த்தும் கேலிச் சிரிப்பாக அது இருக்க.. அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…
வார்த்தைகள் வராமல் தவித்துப் போனவள்.. பேச்சை நிறுத்திவிட்டு வேலையில் கவனமாகி விட அங்கே தற்காலிகமான அமைதி நிலவியது…
கடுப்புடன்.. மடமடவென்று வரிசையில் நின்றவர்களிடம் பாங்புக்கை வாங்கி.. வேலையை முடித்துக் கொண்டிருந்தவளை.. அவள் பார்க்காத போது… பார்க்காததைப் போலப் பார்த்து வைத்தான் குணசீலன்…
லேசான புருவச்சுளிப்புடன் இருந்தவளின் புருவங்களை நீவிவிட வேண்டடும் போல அவனுக்கு இருந்தது..
‘பிடிவாதக்காரி…’
அவன் பார்வையில் சுவராஸ்யம் வந்தது…
அவனுக்கு அவளின் அந்த பிடிவாதத்தைப் பிடிக்கும்.. கோபத்தைப் பிடிக்கும்.. அவளிடம் வாய் வளர்த்து வம்பிழுக்க பிடிக்கும்.. இவ்வளவு ஏன்…? அவளையே அவனுக்கு மிகவும் பிடிக்கும்…
ஆனால்.. அதை அவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தியதே இல்லை…
அவன் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மாறுதல் வாங்கி வந்தவன்.. வந்த முதல்நாளே.. பூர்ணிமாவுக்கும்.. அவனுக்கும் மோதல் ஏற்பட்டுவிட்டது..
ஆறு மாதங்களுக்கு முன்தான் வேலையில் சேர்ந்து.. அந்த வேலைக்காக ஊர்விட்டு ஊரும் வந்திருந்த பூர்ணிமாவுக்கு அலுவலக நிகழ்வுகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாமல் இருந்தது…
சென்னையிலிருந்து மாறுதலாகித்தான் அவன் வந்திருக்கிறான் என்ற நினைவின்றி.. என்னவோ.. அவன் அன்றுதான் வேலைக்குச்சேர வந்திருக்கிறதைப் போல அவள் வேலைசொல்லி கொடுத்த விதத்தில்.. அவன் ஒரு கேலிப் பார்வையை பார்த்து வைத்தான்…
‘எவ்வளவு இளப்பமாக பார்க்கிறான்..’ அவள் வெகுண்டாள்…
அவனது பார்வை அவளை உசுப்பிவிட…
“ஹலோ.. வேலை கத்துக்கனும்கிற அக்கறையே இல்லையா..?” என்று முறைத்தாள்…
“அது இருக்கு நிறைய… ஆமாம்.. மேடத்துக்கு எத்தனை வருசம் சர்வீஸ் ஆகுது..?” அவன் போலிப் பணிவுடன் வினவினான்…
“ஆ…று… மாசமாகுது…” அவள் கெத்தாக பதிலளித்தாள்…
அவன் புருவங்களை உயர்த்தி… பெரிதாக பிரமித்தான்…
“ஹப்பா.. ரொம்ப அதிகமான சர்வீஸ்தான்.. அதில் பாருங்க மேடம்.. உங்க அளவுக்கு எனக்கு சர்வீஸ் இல்லிங்க.. ஏதோ ஐந்தே வருச சர்வீஸ்தாங்க ஆகுது…”
அவன் கண்களில் தெரிந்த அப்பட்டமான கேலியைக் கண்ட பூர்ணிமாவுக்கு வெட்கமாகி விட்டது…
‘இதைச் சொல்லாமல் இவன் என்னிடம் வேலை சொல்லிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டு வேடிக்கை பார்த்திருக்கான்…’
அவளுக்குள் சினம் துளிர்க்க.. பட்டென்று எழுந்து போய்விட்டாள்…
“என்னடா.. வந்த அன்னைக்கே.. அந்தப் பெண்ணைக் கலாய்க்க ஆரம்பித்துட்டே…” அரவிந்தனின் கண்களில் விசமம் இருந்தது..
“நானெங்கேடா அதைச் செய்தேன்.. ? யதார்த்தமாக அந்தப் பிரான்சில் என்ன வேலைன்னு கேட்டுவைச்சேன்.. நீங்க பேங்குக்கு புதுசான்னு அந்தப் பொண்ணு கேட்டுச்சு.. இன்னைக்குத்தான் ஜாயின் பண்ணினேன்னு சொன்னேன்.. உடனே பாடம் எடுக்க ஆரம்பிச்சுருச்சு…” குணசீலன் சிரித்தான்.
“உன் கிட்ட இது ஒன்னு இருக்குடா குணா.. சிரிக்காம கலாய்ச்சு வைப்ப.. நல்ல வேளை.. என் ஆளை விட்டு வைச்சே…” நிம்மதியாகக் கூறினான் அரவிந்தன்….
“உன் ஆளா…? யாருடா அது..?”
“நீ கலாய்த்த பெண்கூட பேசிக்கிட்டிருக்காளே.. அவதான்…” அரவிந்தன் சுட்டிக்காட்டிய திசையில் சரளாவுடன் பூர்ணிமா பேசிக் கொண்டு நின்றிருந்தாள்…
சரளாவுடன் பேசியபடி.. அவனிருக்கும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிமா.. அவன் பார்ப்பதைக் கண்டதும்.. அவசரமாக பார்வையைத் திருப்பிக் கொண்டாள்…
‘என்னைத்தான் இவ்வளவு நேரமாக பார்த்துக்கிட்டு இருந்தாளா…?’ குணசீலனின் பார்வையில் சுவராஸ்யம் வந்தது…
அவனது பார்வையைக் கண்ட அரவிந்தன் அரண்டு போனான்…
“டேய்.. டேய்.. என்னடா இப்படிப் பார்த்து வைக்கிற… அவ என்னோட ஆள்டா…”
“அடச்சீ.. நான் அவளைப் பார்க்கலை.. பக்கத்திலிருக்கிறவளைப் பார்க்கிறேன்…”
அரவிந்தனுக்கு போன உயிர் திரும்பி வந்தது….
“உஸ்ஸ்… அப்பாடி.. இப்பவே கண்ணைக் கட்டுதே…” என்று இழுத்துப் பெருமூச்சு விட்டவன்…
“ஏண்டா.. சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிப் போனவன் அங்கேயே இருந்திருக்க வேண்டியது தானேடா.. எதுக்குடா திரும்பவும் திருநெல்வேலிக்கு வந்து என் பிபியை எகிற வைக்கிற..” என்று அலுத்துக் கொண்டான்…
“சென்னை யுளிவர்சிட்டியில் ஈவினிங் கிளாஸில் சேர்ந்து படிக்க வேண்டியிருந்தது.. படிக்கிறதுக்காக டிரான்ஸ்பர் வாங்கிக்கிட்டுப் போனேன்.. படிப்பு முடிஞ்சதும்.. திரும்பவும் என் சொந்த ஊருக்கே.. டிரான்ஸ்பர் வாங்கிக்கிட்டு வந்திட்டேன்.. இதில உனக்கு என்னடா வருத்தம்…?”
“என்ன வருத்தமா..? நானே இருந்திருந்து.. இப்பத்தான் ரதியைப் போல ஒருத்தியை கண்ணில பார்த்திருக்கேன்.. அவளைக் கணக்குப் பண்ண ஆரம்பிக்கிறதுக்குள்ள நீ வந்து சேர்ந்துட்டியே…”
குணசீலனின் பார்வை சரளாவின் மேல் விழுந்தது… அவள் ரதியைப் போலத்தான் இருந்தாள்.. ஆனாலும்.. அவன் பார்வை அவள் மீது படிந்து நிற்காமல் பூர்ணிமாவின் மீதே மையம் கொண்டது…
நொடிக் கொரு தரம் அவனைப் பார்ப்பதும்.. அவன் பார்வையை உணர்ந்ததும்.. இமைகள் படபடக்க விழிகளைத் திருப்பிக் கொள்வதுமாக இருந்தவளின் செய்கை அவளைப் பார்க்கத் தூண்டியது.
அவளிடம் தெரிந்த இனம் விளங்காத வசீகரம்.. அவன் மனதைச் சுண்டியிழுத்த…
“அவளைப் போய் ஏண்டா.. அப்படிப் பார்த்து வைக்கிற…?” அரவிந்தன் விளங்காமல் கேட்டு வைத்தான்…
குணசீலனுக்கு சுர்சென்று கோபம் வந்துவிட்டது… “வேணும்ன்னா.. அவ பக்கத்திலிருக்கிறவளைப் பார்த்து வைக்கவா..?” என்று கேட்டான்…
“இப்பத்தானே அவைள என் ஆளுன்னு சொன்னேன்.. ?”
“எதை வைச்சு.. அவளை உன் ஆளுன்னு முடிவு கட்டின..?”
“என்னடா கேள்வி இது…?”
“அதான் கேட்டுட்டேனில்ல… பதிலைச் சொல்லு..”.
‘அவளை எனக்குப் பிடிச்சிருக்குடா..”
“அவளுக்கு உன்னைப் பிடிக்க வேணாமா..?”
“பிடிக்க வைக்கத்தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்…”
“அப்ப.. அதில் மட்டும் நில்லு.. அதைவிட்டுட்டு தேவையில்லாம பேசிவைக்காதே.. மீறிப் பேசினேன்னு வைய்யி”
“என்னடா செய்வ…?”
“உன் முயற்சியை சட்டை பண்ணாம.. நானும் முயற்சியில் இறங்கிடுவேன்…”
“என்னடா இப்படிப் போட்டுத் தாக்கற.. ஆயிரம்தான் இருந்தாலும் நீ என் நண்பேன்டா…”
“அஃது.. அதில மட்டும் நில்லு…”
“கோடு போட்டுட்டல்ல.. இனி அதை தாண்டினா.. ஏன்னு கேளு…”
“அப்படியே மெயின்டெயின் பண்ணு…”
குணசீலன் மீண்டும் பூர்ணிமாவைப் பார்த்து வைக்க.. அப்படி அவளிடம் என்னதான் வசீகரம் இருக்கிறது என்று புரியாமல் குழம்பிப் போனான் அரவிந்தன்….
அதை அவனிடம் கேட்டு வைக்கலாமென்றால்.. அப்படியா சொல்கிறாய்.. அதுவும் சரிதான்.. என்று அவன் பார்வை சரளாவின் பக்கம் திருப்பி விட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்து சேர…
“எனக்கென்ன வந்தது.. இவன் அந்த பூர்ணிமாவைப் பார்த்தால் எனக்கென்ன.. இல்லை சுகுணாவைப் பார்த்தால்தான் எனக்கென்ன… என் சரளாவைப் பார்க்காமல் இருந்தால் சரி…’ என்ற முடிவிற்கு வந்து சேர்ந்தான் அரவிந்தன்..
அன்று மதிய உணவு வேளையில் பூர்ணிமா நடந்ததை விவரிக்க சரளா பொங்கிச் சிரித்தாள்…
“இப்படியாடி பண்ணி வைப்ப.. அவன் ஏற்கெனவே இந்த பிரான்சில் வேலை பார்த்தவன்தானாம்.. எம்.காம் படிச்சிருக்கானாம்.. ஆபிஸர் போஸ்டுக்கு எக்ஸாம் எழுதியிருக்கானாம்.. எம்.பி.ஏ ஈவினிங் காலேஜில் படிக்க அண்ணா யுனிவர்சிட்டியில் அப்ளை பண்ணியிருந்தானாம்.. கிடைச்சிருச்சாம்.. அதுக்கு சென்னையில் இருக்கிறதுதான் வசதின்னு சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிட்டானாம்…”
“இப்ப எதுக்கு திரும்ப வந்து தொலைத்தானாம்…?”
“இதென்னடி வம்பாப் போச்சு.. இதுதான் அவனோட சொந்தஊர்… அப்ாப.. அம்மா.. தம்பின்னு.. அவனோட குடும்பம் இங்கேதான் இருக்கு.. இங்கே திரும்பி வராம எங்கே போவான்..? ஆமாம்.. தெரியாமல்தான் கேட்கிறேன்.. அவன் வந்ததில் உனக்கென்னடி இவ்வளவு கஷ்டம்.. ?”
“வந்த அன்னைக்கே என்கூட வம்புக்கு வருகிறானே…”
“அவனாடி வம்புக்கு வந்தான்.. ? ஐந்து வருசம் சர்வீஸ் போட்டுவிட்டு.. ஆபிசர் எக்ஸாம் எழுதியிருக் கிறவனுக்கு.. நேற்று இந்நேரம் வந்து ஜாயின் பண்ணினவ பாடம் எடுத்தா.. அவன் கேட்டுக்கிட்டு சும்மாவா இருப்பான்..?”
“நானாடி.. வலியப் போய் அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்.. வான்னு கூப்பிட்டேன்.. ? அவனாத்தாண்டி என் சீட்டுக்கு வந்து.. என் பிரான்சில் என்ன வேலைன்னு கேட்டான்… ?”
“யதார்த்தமா கேட்டிருப்பாண்டி..”
“எனக்கென்னவோ அப்படித் தோனலை…”
“வேற எப்படித் தோணுது.. ?”
“அவன் வேணும்ன்னே என்கிட்ட வம்புக்கு வருகிறான்னு தோணுது…”
“சேச்சே… அப்படி இருக்காது… அதுக்கு அரவிந்தனை சொல்லு.. என்னைக் கண்ட நாள்முதல்.. இந்த நாள் வரைக்கும்.. வழியறான்.. வழியறான்.. அப்படியொரு வழிசலை வழிகிறான்.. தினசரி அவன் விடுகிற ஜொள்ளிலேதான் இந்த ஆபிஸையே செங்கம்மா கழுவி விடறாளாம்…”
“ஆமாம்டி.. அவ உங்கிட்ட வந்து சொன்னா…” “சொன்னான்னுதான் வைச்சுக்கயேன்…’
“அப்படியெல்லாம் பொத்தாம் பொதுவாய் எதையும் வைத்துக்கமுடியாது… தீர விசாரிக்காம எதையும் என்னால் ஏத்துக்க முடியாது…”
“இப்ப மட்டும்.. இதை உணக்கையாய் சொல்லு.. என்னடா.. ஒருத்தன் தடிமாட்டுத் தாண்டவராயன் போல வாட்ட சாட்டமாய் வந்து நின்று வேலையைப் பத்திக் கேட்கிறானே.. அவன் யாரு.. எவருன்னு.. தீர விசாரிச்சுட்டு அதுக்கப்புறம் பாடம் எடுப்போம்ன்னு மட்டும் யோசிக்சுராதே…”
‘ம்ஹிம்.. இனிமே.. என்வாயை அடக்கனும்னா.. இவ இதைச் சொல்லித்தான்… அடக்கப்போகிறா…”
பூர்ணிமா பயந்ததைப் போல்தான் நடந்த…
அடுத்த வந்த நாள்களில் அவள் எதைச் சொன்னாலும்.. சரளா அன்று நடந்த நிகழ்வையே சொல்லிக் காண்பித்தாள்…
குணசீலன் வேறு.. பூர்ணிமாவைப் பார்த்தாலே ஒரு மாதிரியாக புன்னகைத்து வைத்தான்…
இவன் ஏன்.. ஒரு மார்க்கமா சிரிச்சு வைக்கிறான்..? இவனுக்கு என்னைக் கண்டாலே… அந்த நாளின் நினைப்புத்தான் வந்து தொலைக்குமா… ?
பூர்ணிமா எரிச்சலுக்கு ஆளானாள்… இதெல்லாம் போதாதென்று.. அவன்.. அவளுக்கு ‘டீச்சர்…’ என்ற பட்டப்பெயரை வைத்திருப்பதாக சரளாவின் மூலம் கேள்விப்பட்டவளுக்கு.. கோபம் கொந்தளித்தது…
ஆனால்.. என்ன செய்து.. ?
அவனிடம் போய்.. ‘நீ எனக்கு டீச்சர்ன்னு பட்டப் பெயரை வைத்திருக்கிறாயா..?’ என்று எப்படி அனால் கேட்கு முடியும்…
வெகுநாள்வரை அவள் தலையைக் கண்டவுடன்… அவன்
“பூப்பூவாய் பூத்திருக்கும்…
பூமியிலே ஆயிரம் பூ…
பூவிலே சிறந்த பூ… என்ன.. பூ..?”
என்று அரவிந்தனிடம் பாடிக் கேட்பான்…
அவனுக்கு ஒன்றும் புரியாது.. பூமியிலே தினமும் புதுப் பாடல்கள் ஆயிரமாயிரம் பூத்துக் கொண்டிருக்க.. குணசீலன் எதற்காக பாட்டிகாலத்துப் பாட்டைப் பாடி வைக்கிறான் என்று புரியாமல் அவன் தலைமுடியை பிய்த்துக் கொள்வான்…
அத்தியாயம் – 3
அவனுக்கென்ன தெரியும்.. ? அந்தப் பாடலைப் பாடும் கதாநாயகி.. அந்தத் திரைப்படத்தின் கதைபிரகாரம் ஒரு டீச்சராய் இருப்பாள் என்று..
சரளாவுக்கு கூட அது புரியத்தான் இல்லை…
“எதுக்குடி… இவன் உன்னைக் கண்டதும்.. பூப்பூன்னு இந்தப் பாட்டைப் பாடுறான்.. ?” என்று அவளும் பூர்ணிமாவிடம் விசாரிக்கத்தான் செய்தாள்…
‘ஞான சூன்யங்கள்…’ பூர்ணிமாவுக்கு பற்றிக் கொண்டுவந்தது…
ஆயிரம்தான் குணசீலன் அவளைக் கிண்டலடிக்க என்று அந்தப் பாட்டைப் பாடி வைத்தாலும்.. அதைத் தேர்ந்தெடுத்த அவனின் புத்திசாலித்தனத்தை அவளால் மனதிற்குள் ரசிக்காமல் இருக்க முடியவில்லை..
‘கள்ளன்.. எவ்வளவு பொருத்தமாய் பாடலை செலக்ட் பண்ணியிருக்கான்…’
அவன் பாடலில் அவளைக் கிண்டல் பண்ணும்போது அவன் கண்களில் வழியும் கேலியை ரசித்தபடி.. வெளிப்பார்வைக்கு முகத்தில் எள்ளையும்.. கொள்ளையும் வெடிக்க விடுவாள்…
“பாருங்க அரவிந்தன்… எனக்கு இதெல்லாம் பிடிக்காது…”
அவளும்.. குணசீலன் அந்த பேங்கிற்கு மாறுதலாகி வந்த நாள்முதல்.. இந்த நாள்வரை.. இதே வார்த்தைகளைத்தான் சொல்லி வந்தாள்…
அதை அரவிந்தனும் உணர்ந்த பாடாக இல்லை.. குணசீலனும் கேட்டுக் கொள்வது போல இல்லை.. அன்றைக்கும்.. அதுதான் நடந்தது… என்னதான் ஜாடை பேசினாலும்.. குணசீலனின் காதுகளில் அது ஏறாது என்றான பின்னே.. மூச்சு வாங்க பேச்சை நிறுத்தினான் பூர்ணிமா…
அதுவரை.. அவள் பேசுவதையும்.. அரவிந்தன் ஏடா கூடமாய் பதில் சொல்லிக் கொண்டிருப்பதையும்.. கண்களில் சுவாரஸ்யத்தோடும்.. உதடுகளில் கேலிப் புன்னகையோடும் பார்த்துக் கொண்டிருந்த குணசீலன் அவள் பேச்சை நிறுத்தியவுடன்..
“என்னடா பேச்சையே காணோம்…” என்று நண்பனிடம் விசாரித்தான்…
“ஏன்டா.. இடி இடிச்சு மழை ஓய்ந்ததைப்போல இருக்குன்னு… இப்பத்தான் நிம்மதியா இருக்கேன்.. உனக்கு அது பொறுக்கலையா…?”
பூர்ணிமாவை முறைத்துக் கொண்டே.. குணசீலனுக்கு பதில் சொன்னான் அரவிந்தன்…
“இவ இவ்வளவு பேசறா.. அந்த சரளா ஒரு நாளாவது என்னைத் திரும்பி பார்த்து பேசி வைக்கிறாளா..?”
அவனுக்கு அவன் கடுப்பு…!
அதைக் கண்டு கொள்ளாமல் குணசீலன்… கருமமே கண்ணாக பூர்ணிமாவை பார்வையிட்டபடி..
“அதுக்கேண்டா இப்படி உர்ருன்னு முகத்தை வைச்சுக்கிட்டு இருக்க..?” என்று கேட்டான்…
பூர்ணிமாவின் வெட்டும் பார்வை.. அவன் மீது படிந்து விலகியது… குணசீலனின் கண்கள் மின்னின…
இந்த பார்வை பரிமாற்றத்தைக் கண்டு கொள்ளாதவனாக….
“என் முகம்.. நான் எப்படி வேண்டும்னாலும் முகத்தை வைச்சுக்கிட்டு இருப்பேன்.. உனக்கென்னடா வந்தது..?” என்று அரவிந்தன் கேட்டான்…
“அதெப்படி.. நீ அவ்வளவு ஈஸியா சொல்லலாம்.. ? முகம் உன் முகம்ன்னாலும்.. அதைப் பார்க்கிறது நான்தானேடா…”
குணசீலன் பூர்ணிமாவைப் பார்த்தபடி வார்த்தைகளை வீசியெறிய… அவள் சட்டென்று அவன் முகம் பார்த்துவிட்டு.. குனிந்தாள்…
அவள் மனதில் மழைச்சாரல் அடித்தது.. அவனது பார்வை அவளுக்கு இதமான ஒரு இம்சையை உண்டு பண்ணியது…
‘என்ன மாதிரியான பார்வை இது..?’ அவள் தவித்துப் போனாள்…
‘இப்படிப் பார்க்கிறானே…’ நகம் கடித்தாள்…
‘நிஜமாகவே.. இவனுக்கு என் முகம் பார்க்கப் பிடிக்கிறதா…’
இரவுகளில் அவளால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை…
ராத்திரி நேரத்தின் ரகசியக் கனவுகளின் கதாநாயகனாக அவன் முகமே மனதில் உலா வந்தது….
‘ஓராயிரம் பார்வையிலே…
உன் பார்வையை
நானறிவேன்…!’
அவள் மனம் பாடியது.. அவளுக்கான அவனது பார்வையை நாடியது.. அவன் எங்கேயென்று தேடியது…
எல்லாமே மனதிற்குள்தான்.. வெளியே அதை ஒரு நாளும் அவள் காட்டிக் கொண்டதேயில்லை…
சரளாவைப் போன்ற அழகி இருக்கும் அந்த வங்கிக் கிளையில்.. அவள் முகத்தைப் பார்க்க குணசீலன் விரும்புகிறானா…?
அவனது கண்களின் கேலிப் பார்வை அவள் நினைவில் மிதக்கும்.. அவள் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வாள்…
‘ஊஹீம்.. அவரசப்படாதே.. அவன் விளையாட்டாய் சீண்டிப் பார்க்க நினைக்கலாம்.. ஏமாந்து விடாதே…’
தன் மனதிற்கு கடிவாளமிட அவள் முயன்றாள்…. பெரிய.. பெரிய ஞானிகளாலேயே முடியாத ஒன்றை அவளால் செய்து விட முடியுமா..?
மனக்குதிரைக்கு கடிவாளமிட யாரால் முடியும்..?
அவள் மனக்குதிரை தறிகெட்டு.. அவன் பக்கமே பாய்ந்தது…
தூக்கமில்லாத இரவுகளை அவன் அவளுக்கு சொந்தமாக்கினான்… இரவுகளின் நகரும் மணித்துளிகளில் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்து விட்டு.. விடியலின் போது… ஏதும் அறியாதவளைப் போல இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு வேலைக்கு வந்து விடுவாள் பூர்ணிமா…
“என்னடா.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. ராத்திரியில் சரியாத் தூங்கலையா.. ?”
அக்கறையோடு அரவிந்தனை விசாரிப்பான் குணசீலன்.. அந்த விசாரிப்பு தனக்கானது என்று புரிந்து கொண்டவளின் அலைபாயும் பார்வை அவன்மீது பாயும்…
அதை எதிர்பார்த்து.. எதிர் நோக்கியிருப்பனின் கண்கள் மின்னும்…
“ஆமாம்டா குணா.. நைட்டெல்லாம் ஒரே கொசுக்கடிடா.. தூங்க முடியலை…”
அவனைத்தான் நண்பன் அக்கறையாய் விசாரிக்கிறான் என்ற நன்றியுடன் பதில் சொல்வான் அரவிந்தன்….
“கொசுக்கடியா.. இல்லை.. யாரையாவது நினைச்சுக்கிட்டு தூங்காம பொழுதை ஓட்டினயா..?”
குணசீலனின் கேள்வியில்.. அவள் முறைப்பாள்.. அவன் கண்களில் சிரிப்புடன் புருவங்களை உயர்த்துவான்…
“ம்ஹீம்.. உனக்கு இது புரியுது.. அவளுக்குப் புரிய மாட்டேங்குதே…”
அரவிந்தன் ஏக்கத்துடன் சரளாவைப் பார்ப்பான்…
“அதெல்லாம் புரியும்டா.. இந்த லேடிஸின் புத்தி.. நம்மளவிட செம ஷார்ப்பா இருக்கும் மச்சி.. ஆனா.. அதை வெளியே காட்டிக்க மாட்டாங்க… எதுவும் புரியாததைப் போல.. அப்பாவியாய் முகத்தை வைச்சுக்கிட்டு நம்மள போட்டுப் பார்பாங்கடா…”
பூர்ணிமாவின் பார்வை.. மீண்டும் உயர.. குணசீலன் லேசாக இமை சிமிட்டினான்…
அவளுக்கு குப்பென்று வியர்த்து.. தொண்டை உலர்ந்து விட்டது… வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்க.. ஒர்வித இன்ப அவஸ்தைக்கு அவள் ஆளானாள்…
‘இவன் ஏன் இப்படி பண்ணி வைக்கிறான்..?’
அந்தக் கிளையில்.. பூர்ணிமாவையும்.. சரளாவையும் தவிர… இன்னும் இரண்டு பெண்கள் வேலை பார்த்து வந்தார்கள்…
அவர்களும் அழகானவர்கள்தான்.. சரளாவின் அளவுக்கு அழகியில்லையென்றாலும்.. பூர்ணிமாவை விட அவர்கள் அழகானவர்கள்…
அவர்களைப் பார்வையிடாமல்.. குணசீலன் எதற்காக அவளை மட்டுட்ம பார்வையிடுகிறான் என்று அவள் மனம் அடித்துக் கொண்டது…
‘நிஜமாகவே.. இவனுக்கு என்னைப் பிடிக்குமா…?’
நிச்சயமாய் அதைத் தெரிந்து கொள்ளாமல்.. வாய் விடுவதற்கு பூர்ணிமா தயாராக இல்லை…
உணவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.. பூர்ணிமாவின் முன்னால் இருந்த வரிசை இப்போது காணாமல் போய் விட்டிருந்தது…
‘வேலையிலெல்லாம் வேகமானவ தான்…’
குணசீலன்.. கம்யூட்டரின் கீ போர்டைத் தட்டிக் நினைத்துக் கொண்டே பூர்ணிமாவைப் பற்றி கொண்டான்…
பக்கவாட்டில் திரும்பி… அவளைப் பார்த்தான்…
வேலையில் மும்முரமாக கம்யூட்டரின் திரையை ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தவளின் நீண்ட பின்னல். தரையைத் தொட்டுக் கொண்டிருக்க.. குணசீலனின் மனம்.. அந்தப் பின்னலை பிடித்து அவளைத் தன் பக்கம் இழுக்கும் ஆசையைக் கொண்டது…
அவளின் அமைதியான முகத்தின் நீள் வடிவ கண்களின் மேல் கவிந்திருந்த இமைகளின் குடை போன்ற வடிவமைப்பு அவனை ஈர்த்தது… காட்டன் சேலையை.. பாந்தமாக… இடுப்பை மறைக்கும் விதத்தில் கண்ணியமாக உடுத்தி.. அவள் பின் பண்ணியிருந்த விதம் அவன் மனதிற்குள் ஓர்வித மரியாதையை உண்டு பண்ணியது…
சேலையின் மடிப்புக் கலையாமல் நேர்த்தியாக இருந்த விதம் அவளது அழகுணர்ச்சியை அவனுக்கு உணர்த்தியது…
“பூர்ணிமாம்மா… உங்களை மேனேஜர் கூப்பிடறாரு…”
பியூன் வந்து சொன்னதும்.. அவசரமாக எழுந்து போனாள் பூர்ணிமா.. அந்த இடமே வெறுமையாகி விட்டதைப் போல உணர்ந்தான் குணசீலன்.. சீக்கிரத்திலேயே அவள் திரும்பிவந்தாள்… அவனைக் கடந்து செல்லும் போது.. அவளின் சேலை முந்தானை.. அவனது முகத்தின் மீது யதேச்சையாய் படிந்து விலக.. அவள் பதறிப் போய்.. சேலையைப் பிடித்துக் கொண்டாள்…
‘தென்றல் வந்து என்னைத் தொடும்…
ஆஹா.. சத்தமின்றி…
முத்தமிடும்…’
அவன் சன்னக்குரலில்… அவளுக்கு மட்டுமே கேட்கும்படி பாடினான்… அவள் முகம் சிவந்து விட்டது…
மதிய உணவுக்கு போய் விட்டு சீட்டுக்கு திரும்பிய போது.. அவளின் கம்யூட்டர் மவுசின் அடியில் ஒரு காகிதத் தாள் படபடத்தது… எடுத்துப் பிரித்தாள்….
‘உன் சேலை முந்தானையின்..
உராய்வை விடவா…
தென்றலின் உராய்வு….
குளுமையைத் தந்துவிடும்..?’
அந்தக் காகிதத்தில் இருந்த வாசகங்களைப் படித்தவளின் மனதில் தென்றலடித்தது…
இதை எழுதியது அவன்தான்.. அவள் மனம் இதை அறியும்… ஆனால்.. அவனது கையெழுத்தில் அந்தக் கவிதை இருக்கவில்லை… கம்யூட்டரில் கவனமாக டைப் செய்து.. பிரிண்ட் எடுக்கப் பட்டிருந்தது…
‘இதை அவன்தான் எழுதினான் என்று எந்த ஆதாரத்தில் நான் சொல்லுவது..?’ அவள் மனம் கூம்பிப் போனது…
குணசீலனின் சீட்டின் பக்கம் அவளது பார்வை போனது.. அவனோ.. அரவிந்தனோ.. அவர்களின் இருப்பிடத்தில் இல்லை… ஏன்.. பூர்ணிமாவுடன் அரட்டையடித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்த சரளாகூட அவளது சீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவில்லை…
‘சாப்பிட்ட கையை கழுவ வேணாமாடி..? உன்னைப் போல மிஸ் சின்சியரா வொர்க் பண்ண என்னால் முடியாது.. நீ போய் மெடலை வாங்கிக் குத்திக்க.. நான் லேட்டாத்தான் வருவேன்…” என்று கறாராய் கூறிவிட்டாள்…
பூர்ணிமாவுக்குத் தெரியும்.. அவள் காலி டிபன் பாக்ஸை கையில் வைத்துக்கொண்டு கொஞ்சநேரம் பேசுவாள்.. அப்புறமாய் கை கழுவப் போகிறேன் பேர்வழியென்று வாஷ்பேசின் பக்கத்தில் நின்று கொஞ்ச நேரம் பேசுவாள்… திரும்பவும்.. டைனிங் டேபிளுக்கு வந்து அங்கே கொஞ்ச நேரம் விச்ராந்தியாய் அமர்ந்து பேசுவாள்..
பேச்சு.. பேச்சு.. பேச்சு… எப்படித்தான் அவளால் அவ்வளவு பேச்சுக்களை பேசித்தள்ள முடிகிறதோ என்று பூர்ணிமா மனதுக்குள் குமைந்து போனாள்….
‘ஊஹிம்.. இது வேலைக்கு ஆகாது…’
“சரள்… நான் சீட்டுக்குப் போகிறேன்…”
“இருடி.. நானும் வருகிறேன்.. சேர்ந்தே போகலாம்…”
‘எப்போது.. பேங்க் மூடும் நேரத்துக்கா… ?’
“நீ மெதுவாய் வாடி.. எனக்கு அர்ஜன்ட் வொர்க் இருக்கு…”
“எப்போத்தான் உனக்கு வொர்க் இல்லாம இருந்தது…? சாப்பிட வந்தாலும் அதே நினைப்புத்தானா… ? ஆற.. அமர… சாப்பிட்டு விட்டுப் போகலாம்ன்னு ஒரு நாளாவது நினைக்கிறயா..?”
‘இது தான்.. ஆற… அமர சாப்பிடும் லட்சணமா.. ? ஊர் கதைகளைப் பேசுகிற நேரமாய்.. சாப்பாட்டு நேரத்தை ஆக்கிவிட்டு.. உன்னோடு.. என்னையும்.. கூட்டுச் சேர்க்கப் பார்க்கிறயா..?’
“எனக்குப் பதிலாய் நினைக்க.. நீயிருக்கிறயில்ல.. அது போதும்… ஆளை விடு…”
பூர்ணிமா சீட்டுக்குத் திரும்பிய போது.. யாருமே சீட்டுக்களில் இல்லை…
எல்லோரும் சரளாவைப் போலத்தான் என்ற நினைவோடு சீட்டில் உட்கார்ந்தவளின் கண்களில்தான் அந்தக் கவிதை பட்டது…
ஓராயிரம் முறைகள் அதைப் படித்திருப்பாள்.. இருந்தும் அவள் மனம் நிறையவில்லை…
‘இதை கையில் எழுதாமல் கம்யூட்டரில் ஏன் டைப்.. அடித்தான்…?’
– தொடரும்…
– ஆசையா.. கோபமா… (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 2012, லட்சுமி பாலாஜி பதிப்பகம், திண்டுக்கல்.