ஆசைச் சாப்பாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2025
பார்வையிட்டோர்: 259 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தோனி இப்ப தான் வேலை முடிஞ்சு வாறியா… தேவாலய வாசலில் நின்ற சுவாமி என்னிடம் கேட்கிறார். 

“ஓம் சுவாமி..” 

“போய் குளிச்சிட்டு கெதியாய் வா… கோயிலிலை வேலை கிடக்கு…” 

“கோயிலிலை என்ன விஷேசம் சுவாமி…” 

“நாளைக்கு இறந்த ஆத்துமாக்களின் பூசை எண்டதை மறந்திட்டியா…” 

“…ஓம் சுவாமி… நான் வீட்டை போட்டு வாறன்…’ சுவாமியாரிடம் விடை பெற்றுக் கொண்டு எனது வீட்டை நோக்கி நடக்கிறேன். இது வரையில் ஏதோ சிந்தனையில் ஈடுபட்டிருந்த எனக்கு இப்போது எனது தகப்பனாரின் பரிதாபமான முகம், அவரது மரண கால நிகழ்ச்சிகள். ஒரு பிரேதப் பெட்டி வாங்கப் பணமின்றி நான் அலைந்த அலைச்சல்… எனது மனத்திரையில் தெரிகின்றன… 

எனது மனம் அழுகின்றது. 

காலை ஏழு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால் வேலை முடிந்து வீடு திரும்ப எப்படியும் மாலை ஆறு மணிக்க மேலாகி விடும். 

வேலை என்றால்…? கூலி வேலை… இன்று ஒரு மேசனோடு சீமெந்து கலக்கும் கூலியாகப் போயிருந்தேன். 

“இறந்த ஆத்துமாக்கள் பூசை…” சுவாமி என்னிடம் சொன்ன அந்த வாக்கியத்தில் எனது மனம் திரும்பவும நங்கூரமிடுகின்றது. 

மனித உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா ஆண்டவன் சந்நிதானத்தில் நித்திய ஆனந்தத்துடன் சீவியம் நடத்த வேண்டுமென ஆண்டவனை வேண்டுவதற்காகவே இந்தப் பூசை நடாத்தப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் இதே தினத்தில் இந்தப் பூசை நடைபெறும். 

உயிர் இழப்பு நடந்த ஒவ்வொரு வீட்டாரும் இந்தப் பூசையில் கலந்து கொள்பவர்கள். 

அன்றைய தினம் இறந்தவர்களின் “நாமங்கள்’ கண்ணீரால் குளிப்பாட்டப்படும்… 

அதுமட்டுமல்ல 

இறந்தவர்கள் உயிரோடு இருக்கும் போது எவற்றையெல்லாம் அதிகமாக விரும்புவார்களோ அவற்றையெல்லாம் கொண்டு வந்து கோயிலுக்கு வந்தவர்களுக்கு பரிமாறுவார்கள். 

இப்படிப் பரிமாறப்படும் உணவு வகைகள் “ஆசைச் சாப்பாடு’ என்று சொல்லுவார்கள். 

பல வகையான உணவுகளைச் சாப்பிடுவதற்கென்ற நாளைக்கு ஒரு கூட்டம் கோயிலடியில் கூடி நிற்கும். 

இதுவரை காலமும் இப்பூசையில் ஒரு பார்வையாளராகவே நான் கலந்து கொண்டிருக்கிறேன்.. நாளைக்காலை… நானும் ஒரு பங்காளன்!… 

என்னைப் பெற்றவன் தன் மரணத்தின் மூலம் எனக்கிட்ட கட்டளை!… 

பிறப்பிலும், இறப்பிலும் தான் எங்களைப் போன்றவர்கள் மனிதனுக்குரிய நிகழ்வுகளில் சமநிலைப்படுகின்றோம்!…? 

நாளைக்காலை… 

…இறந்து போன எனது தகப்பனாரைச் சந்திக்கப் போவது போன்றதொரு உணர்வு 

…எனது இதயத்தின் அடித்தளத்தில் ஊற்றெடுப்பதை நான் உணர்கிறேன். 

…அர்த்தமற்ற நினைப்பு… அதையும் நான் உணராமலில்லை… 

இரவு பத்து மணிக்கு மேலாகி விட்டது. 

கோயிலில் சுவாமியை சந்தித்து விட்டு வந்த நான். காலைக்கூடக் கழுவிக் கொள்ளாமல் படுத்திருக்கிறேன். என்னைப் பெற்றவள் – எனது தாய் 

…அவளும் படுத்திருக்கிறாள். 

நாளைய நிகழ்ச்சி அம்மாவுக்கு எனக்கு முன்பே தெரிந்திருந்தது. 

திண்ணைக் குந்தில் எரிந்து கொண்டிருந்த போத்தல் விளக்கின் எண்ணை முடிந்து திரிமட்டும் எரிந்து மணக்கின்றது. 

‘”அம்மா”…? 

”மண்ணெண்ணை இருக்கா” 

“இல்லை..” 

“ஏன் இல்லை…” வாங்கவில்லை ஏன்று நான் கேட்டிருக்கலாம் ஆனால் நான் அப்படிக் கேட்கவில்லை. ஏனென்றால் காசிருந்தால் நிச்சயம் அம்மா வாங்கியிருப்பா என்பது எனக்குத் தெரியும். 

“அம்மா…” 

“மத்தியானம் சாப்பிட்டியா” 

“ஓம்…” 

“என்ன, சாப்பிட்டனி…” 

“பாண் வாங்கின்னான்…” 

“இப்ப எனக்கு என்ன சாப்பாடு கிடக்கு…” 

“பாணும், சம்பலும் கிடக்கு…” 

வெறுந்திரியில் எரிந்த, விளக்கும் அணைகின்றது 

சில நிமிடங்கள் மௌனம்… 

“அம்மா…” 

“என்ன…” 

“நாளைக்குப் பூசைக்குப் பேறியா…” 

…அம்மா பதில் சொல்லாமல் அழுகின்றா…! 

“…அம்மா நாளைக்கு நீ பூசைக்கு போகாட்டி ஊரிலை என்ன சொல்லுவினம்…” 

“டேய்… ஊருலகத்தை விட்டா…. ஊருலகம் வாய்க்கு வந்த படி பேசும்.. எடேய்.. மனிசன் செத்தாப்பிறகு… கோயிலுக்குப் போயென்ன… பூசைக்குப் போயென்ன… ஆத்துமாக்கள் வாழுறதுக்கொண்டு ஒரு உலகம் இருந்தால்… அந்த உலகத்தில் அந்த மனிசன் நிம்மதியாய் தான் இருக்கும்… அப்படி ஒரு உலகம் இருக்கெண்டு ஆர் கண்டது…” 

அம்மாவா இப்படிப் பேசுகின்றா…? 

அம்மா தான்…! 

‘பட்டினிதான் ஞானத்தைக் கற்பிக்கும் ஆசான்’ என்று கூறுவார்களே… அப்படிக் கற்றுக் கொண்ட ஞானப் பேச்சா?…. 

எதுவுமே முடியாத போது மனித மனம் ஆண்டவனைத் தூசிக்கின்றது! 

விரக்தியின் எல்லையை மீறிய விரக்தி… 

அதன் எல்லை…? 

அதன் பெயர் ஞானம்…. 

ஞானத்தின் மறுபக்கம்…? 

வெறுப்பு…சாதாரண வெறுப்பல்ல… தனது உயிரில் கூட வெறுப்பு… 

அம்மா அழுகின்றா… அழுது முடியும் வரை நான் மெளனமாக படுத்திருக்கிறேன். 

சில நிமிடங்கள்… “அம்மா…” 

“என்ன…” 

“…நீ சொல்றதெல்லாம் சரி ஆனால் ஏனோ என்ரை மனம் நாளைக்கு கோயிலுக்குப் போக வேணுமெண்டு ஆவலாதிப்படுது… நான் போகத்தான் போறன்…” 

“நான் வரயில்ல… நீ போறதெண்டால் போட்டு வா…” 

…பூசைக்குப் போறதெண்டால் நானும் மற்றவையளைப் போல ஏதாலும் ஆசைச் சாப்பாடு கொண்டு போகத் தானே வேணும்…” 

“…” அம்மா எதுவுமே பேசவில்லை. 

“என்னம்மா நான் கேட்கிறன் நீ பேசாமல் படுத்துக் கிடக்கிறாய்” 

”உன்ரை கேள்விக்கு நான் என்னத்தை சொல்லுறது…” 

“ஏன்…” 

“உன்ரை ஐயா ஏன் செத்தவரெண்டு உனக்குத் தெரியுமே..” 

எனது தகப்பனாரின் மரணத்தில் ஏதோ துயரம் இருப்பதை எனது தாயாரின் கேள்வி உணர்த்துகின்றது. 

“எப்படியம்மா செத்தவர்” 

“கிராம சபை கட்டிடத்துக்குள்ள செத்துக் கிடந்தது தான் எனக்குத் தெரியும்… அவரைச் சோதிக்க வந்த டாக்குத்தர்மார் என்ன சொன்னவை தெரியுமா…” 

“என்னம்மா சொன்னவை… 

“பசியில் குடலொட்டி… வலிப்பு வந்துதானாம் செத்தவர்…” 

சில நிமிடங்கள் என்னால் பேச முடியவில்லை 

“…அம்மா இது உண்மையாய் இருக்குமா… 

“…கிடக்கிறதை… உனக்கும் எனக்கும் தந்திட்டு அந்த மனிசன் பட்டினியாய் தானடா கிடக்கிறது…” 

“சாகிறதுக்கு முதல் நாள் அந்த மனிசன் இந்தத் திண்ணைக் குந்தில் இருந்து என்ன சொல்லிச்சுது தெரியுமா…” 

“…ஒரு நாளக் கொண்டாலும் வயிறு நிறையச் சாப்பிட்டிட்டு… நிம்மதியாய் நித்திரை கொள்ள ஆசையாய் கிடக்கு… இதைத் தாண்டா அந்த மனிசன் ஆசைப்பட்டிது… பெற்றவளின் வார்த்தைகள் வேதனையில் புதைந்து பிரசவிக்கின்றன. 

‘எடேய் எங்களைப் போல ஆக்களுக்கெல்லாம் விதம் விதமாய் சாப்பிட வேணுமெண்ட ஆசை இருக்காது… எதையாவது சாப்பிட வேணும் எண்ட ஆவலாதி தான் நெடுகலும்… பசி தீர்ந்தால் தான் நாக்கு ருசியைத் தேடும்…..’ என்னால் பேசமுடியவில்லை. பட்டினிக் கூர்களால் துளைக்கப்பட்ட இதயத்திலிருந்து ஒளுகிய வார்த்தைகள்…. உருகிய இரும்புத் துளிகளாய்… என் இதயத்தில் விழுந்து… என் உடலெல்லாம் அவிகின்றது. 

இருவராலும் பேசமுடியவில்லை 

விடிந்தால் 

இறந்த ஆத்துமாக்கள் பூசை 

..ஆசைச் சாப்பாடு?….!…. 

என்னால் தூங்க முடியவில்லை. 

விடிகிறது நிலாவெளி அந்தோனியார் தேவாலயம் காலை ஏழரை மணி 

இறந்த ஆத்துமாக்கள் பூசையைக் காண ஏராளமானவர்கள் கூடியிருக்கின்றனர். தேவாலய விறாந்தையில் நீளத்துக்கு ஆசைக் சாப்பாட்டுப் பெட்டிகள்… கடகங்கள்… வாழைக்குலைகள்… 

நான்…? 

எனது கையில் சிறியதொரு கடதாசிப் பார்சல்… என்னைப் பெற்றவனுக்காக நான் கொண்டு வந்த ஆசைச் சாப்பாடு!…? 

அம்மாவின் கண்ணீர் உப்பிட்ட சாப்பாடு… ஏனென்றால் அம்மா அழுதழுது தான் இதை செய்தாள்!… 

பூசை ஆரம்பமாகுகின்றது… 

எல்லோரும் உள்ளே செல்கின்றனர் 

நான் ஆலய முன்றலிலேயே முழந்தாளிட்டு இருக்கிறேன்… எனக்கு முன்னால் நான் கொண்டு வந்த கடதாசிப் பார்சல். 

ஆலய முன்றலில் ஒரு யேசுவின் சிலை… முள் முடி தரித்து கை, கால்கள் ஆணியால் அறையப்பட்டு… உடமெல்லாம் இரத்தம் சிந்துகின்ற நிலையிலுள்ள… ஒரு சிலை… மனிதனாகப் பிறந்து மனித குலத்தின் தர்ம வாழ்வுக்காகப் போதனை செய்து… மனிதர்களாலேயே தண்டிக்கப்பட்டவன்… யேசு…! 

‘உன்னைப் போல் பிறரையும் நேசி!…’ 

அவன் எதிர்பார்த்த தர்மத்தின் சுவடுகள் இப்பூமியில் படிந்திருந்தால்… எங்களைப் போன்ற பட்டினிக் கூட்டங்களின் சுவடுகள்… என்றோ மறைந்திருக்கும். 

தர்மம் தோற்று விட்டது! 

…பரலோகத்தில் இருக்கின்ற பிதாவே… 

உம்முடைய இராச்சியம் பூமிக்கு வந்திடாதா? 

…இரட்சித்தருளும் 

…எனது கண்கள் யேசுவின் சிலுவையில் படிந்து… எனது மனதில் யேசுவின் உருவம் பதிந்து… நான் என்னை மறந்து.. 

‘யேசுவே.. என்னைப் பெற்றவனின் ஆத்மாவுக்கு நிரந்தர இன்பத்தை அளித்தருளும்…’ 

வேதனையின் எல்லை… எனது உணர்வுகள் அந்தச் சிலையோடு சங்கமமாகி… 

…அந்த யேசுவின் சிலையில்… 

என்னைப் பெற்றவனின் சாயல்!…? 

”மகனே… நான் தான் என்னைப் பார்” 

என்னைப் பெற்றவனின் குரல்… 

“ஐயா…” எனது நாக்கு புரள மறுக்கின்றது. 

திடீரென்று ஏதோவொரு… உணர்வு… ஐயாவின் வயிற்றைப் பார்க்கிறேன். 

குடல் ஒட்டி… வலிப்பெடுத்துச் செத்தார் என்று அம்மா சொன்னாளே… அந்த வயிறு… இன்னமும் அப்படியே தான் கிடக்கின்றது… முள்ளந்தண்டோடு ஒட்டிய வயிற்றுத் தோல்… 

“ஐயா… நீ இன்னமும் பட்டினி தனா….?” 

‘மகனே பரலோகத்தில் யாருக்கும் பசிப்பதில்லை. அதனால் எவரும் புசிப்பதில்லை…” 

அப்படியென்றால் உனது வயிறு ஏன் ஒட்டிப் போயிருக்கின்றது. 

‘ஐயா…’ 

“என்ன மகனே…” 

“பரலோக ராச்சியம் பூமிக்கு வருமா” ஆவலோடு நான் கேட்கிறேன். 

“ஐயா பேசவில்லை…!…? 

“…ஐயா…” தகப்பனின் மௌனத்தை புரிந்து தொடர்கிறேன். 

“…என்ன மகனே…” 

“…நான் உனக்கு ‘ஆசைச் சாப்பாடு” கொண்டு வந்திருக்கிறேன்” 

“அப்படியா… என்ன சாப்பாடு கொண்டு வந்திருக்கிறாய்…” 

என்னால் கூற முடியவில்லை… எனது கண்கள் கலங்குகின்றன. 

‘…என்ன மகனே.. கலங்குகின்றாய்…’

‘…மற்றவர்களைப் போல் விஷேசமாக என்னால் எதையும் கொண்டு வர முடியவில்லை. ஒரு சோத்துப் பார்சல் மட்டும் கொண்டு வந்திருக்கிறேன். 

‘அப்படியா ஒருநாளாவது வயிறு நிறைய சோறு சாப்பிட வேணும்..எண்டது தானே எனது ஆசை… தா மகனே… பூலோகத்தில் இருக்கும் போது ஏற்பட்ட ஆசை… பரலோகத்திலாவது தீரட்டும்… ஆனால் ஒன்று…! 

‘பரலோகத்தில் யாரும் புசிப்பதில்லை…’ 

“அப்படியென்றால் உனது… ஆசை…” 

மகனே… நீ என்னைப் பற்றிக் கவலைப்படாதே பரலோகத்தில் இருப்பவர்களில் தொண்ணூறு வீதமானவர்களின் வயிறுகள் என்னைப் போல் ஒட்டிப் போய்தான் இருக்கின்றன…” 

“அப்படியென்றால்… இந்த சோற்றுப் பார்சல்…? 

…மகனே உன்னைப் பெற்றாளே… உனது… தாய் என்னுடைய ஆசை தான் அவளுக்கும்… ஒரு நாளாவது வயிறு நிறையச் சோறு சாப்பிடவேணும்… இந்தப் பார்சலை கொண்டு போய் அவளிடம் கொடு…” 

ஐயாவின் கண்கள் கலங்குகின்றன. 

நானும் கலங்குகின்றேன்… 

“அந்தோனி…” பாதிரியாரின் அழைப்பு… 

பூலோக உணர்வுகள் விளிக்கின்றன. 

நான் என்னை உணர்கின்றேன்… எனது தந்தையின் ருவத்துள் மறைந்த யேசுவின் சிலை… இப்போது யேசுவின் சிலைக்குள் எனது தந்தையாரின உருவம் மறைகின்றது… அது யேசுவின் சிலை… 

எனது தோளில் பிடித்தபடியே சுவாமியார் எனதருகே நிற்கின்றார்!…யேசுவின் சிலையைப் பார்த்து ஏன் அழுகின்றாய்..” 

நீ மனம் பேதலித்து விட்டாய்…’ 

சுவாமி… நான் ஆசைச் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்… கூறியபடி பார்சல் அவிழ்க்கிறான்… சோறு… முருங்கைக்காய் குழப்பு, சம்பல்…. 

சுவாமி தனது வலது கரத்தை உயர்த்திச் சிலுவையிட்டு ஆசிர்வதிக்கின்றார். 

எனது வீட்டில் 

என்னைப் பெற்றவள் அவளது ஆசை… 

சுருங்கிய வயிறு… 

நான் புறப்படுகின்றேன். எனது கைக்குள் ஆசைச் சாப்பாடு கிடக்கின்றது. 

– சிந்தாமணி, மாசி 1982.

– பாடுகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சக வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *