அவளின் வாழ்க்கை இவ்வாறாக முடிந்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 153 
 
 

காதல் சிறகை காற்றினில் விரித்து..…

அபிராமி கருப்பனின் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாள். அவளின் நினைவுப் பாதையில் கருப்பன் கம்பீரநடை பயின்று கொண்டு இருந்தான். அவர்களுக்கு இது காதற்காலம். கருப்பனின் ஆண்மைப் பொலியும் தோற்றம்தான் என்னே அழகு, அவன் நின்றால் அழகு, நடந்தால் அழகு, படுத்தால் அழகு, ஓடினால் அழகு, நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு ஜொள்விட்டால் அழகு, அழகு, அழகு நெஞ்சைக்கொள்ளை கொள்ளும் அத்துணை அழகு. அபிராமிக்கு இப்போதே அவனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவன் இந்நேரம் எங்கே, எந்தத் தெருவில் பொறுக்கிக்கொண்டு இருக்கிறானோ. கருப்பா… எங்கேடா இருக்கிறாய்…. என் காதல் கண்ணாளா… கருப்ப்பா.., விரகத் தீயினில் வெந்து கொண்டிருந்த அபிராமியின் புலன்கள் சட்டென விழிப்படைந்தன.

அவளின் நினைவுப் பாதையில் திடீரென ஒருதடை காதல் மயக்கத்தில் சுருண்டு படுத்துக்கொண்டு கனவுலகில் காதல் சிறகை காற்றினில் விரித்துப் பறந்து கொண்டு இருந்தவன் தொப்பென மண்ணில் விழுந்து, தன் முன்னால் நாற்பத்திரண்டு பற்களையும் இளித்துக்காட்டி ஜொள்விட்டபடி நின்று கொண்டிருந்த அறிவுடைநம்பியைக் கண்டு அதிர்ந்தெழுந்து நின்றாள். இத்தனைக்கும் அவள் காற்றின் எதிர்த்திசையில் தன் முகம் வைத்துப் படுத்துக் கிடந்தாள். காதல் மயக்கத்தால் அறிவுடை நம்பியின் வாடையை நுகர்ந்ததும் அதை அவள் அறியவில்லை. நிலம் நோக்கித் தலையைக் குனிந்து கொண்டு நளினமான நடையுடன் மெல்ல அந்த இடத்தை விட்டு அகன்றாள். அறிவுடைநம்பியோ அபிராமியின் பின்புறத்தை மூக்கை விடைத்துக் கொண்டு முகர்ந்தவாறு விடாமல் அவளைப் பின்தொடர்ந்தான்.

“அறிவுடைநம்பியாம் அறிவுடைநம்பி பெயரையும் அவன் முகரையும் பாரு, ச்சீ அசிங்கம் பிடித்த பயல், கக்கா போன பின்பு குந்தி உட்கார்ந்துகொண்டு பின்புறத்தை தரையில் தேய்த்தவாறே சாலையின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிக்கு போவான். சரியான அறிவுகெட்ட நம்பி”. அவளின் கோபம் குரைப்பாய் வள்ளெனத் தெறித்தது. “ச்சீ.. மனுஷா மரியாதையா போயிடு என் கருப்பனுக்கு தெரிஞ்சா உங்கதி அதோ கதிதான்”, அவளின் கோவ வசவும் பயமுறுத்தலும் அறிவுடைநம்பிக்கு உரைக்கவேயில்லை. மலையே வந்து வீழினும் நிலையில் இருந்து கலங்கப் பெறா திண் மனத்தினனாய் அவன் அபிராமியைப் பின்தொடர்ந்தான்.

அவள் முன்னே ஓடிச்சென்று அவளைத் தடுத்து ஜொள்வழியும் நாக்கால் தனது கோரை மீசையை நக்கித் துடைத்துக்கொண்டு, செவிகளை விடைத்து நிமிர்ந்து நின்று, சிறு துள்ளலாய் துள்ளித் துள்ளி, வாலை படபடவென ஆட்ட, “யாருகிட்ட வாலாட்டுறே வாலை ஒட்ட நறுக்கிடுவேன்”, என்ற அபிராமியின் பேச்சு இடையில் நின்றது. காரணம் அப்போதுதான் அவள் அவர்களையும் பார்த்தாள். மொட்டைவாலன் அப்துல்காதரும், ஜான்சனும், பிரதிவாதி பயந்தாங்கோலி பரந்தாமனும், அறிவுடைநம்பியுடன் சேர்ந்துகொண்டு அபிராமியைச் சுற்றி வட்டமிட அபலை அபிராமி படபடக்கும் நெஞ்சுடன் அங்கிருந்து பயந்தோட ஆரம்பித்தாள்.

ஆனால் அறிவுடைநம்பி வகையறாகளும் அசராமல் அபிராமியை துரத்தத் தொடங்கினார்கள், அவளை அடைவதற்கு அவர்களிடையேயும் கடும் சண்டை. வசைசொல் உதிர்த்தும், நான்தான் முதலில் என உரிமைக் குரல் எழுப்பியும், கடும்சமர் புரிந்துகொண்டும் அவர்கள் அபிராமியைத் தடுத்தும் மடக்கியும் கிடைத்த சந்தர்ப்பத்தில் அவள் உடல்மணம் முகர்ந்தும் மூர்க்கம் கொண்டு அவளைத் தம் பிடியில் கொணர முயல, அபிராமி தப்பித்து தப்பித்து ஓடினாள். மூச்சிரைக்க மூச்சிரைக்க ஓடினாள். அவள் மனம் மானசீகமாக கருப்பனைக் கூவி அழைத்தது. கருப்பா.. வா… கருப்பா.. ஆபத்து… என்னைக் காப்பாற்று…

சமர்க்களம்

அபிராமியின் மனக்குரல் நிச்சயம் கருப்பனின் செவிகளை அடைந்திருக்கும். இல்லாவிட்டால் எப்படி திரைப்படக் கதாநாயகன் போல் சரியான சமயத்தில் அவனால் அங்கு வந்து இருக்கமுடியும்? கருப்பனின் கர்ஜனையைக் கேட்டு, பேரானந்தம் அடைந்த அபிராமி, “ஐ, கருப்பன் வந்தாச்சு, டேய் பொட்டப் பசங்களா உங்க வீரத்தை அவருகிட்ட காட்டுங்கடா” எனக் கூறிவிட்டு நிம்மதியுடன் ஓரமாக ஒதுங்கி நின்றாள். அடுத்து நிகழ இருக்கும் சண்டைக் காட்சியை பார்த்து ரசிப்பதற்காக.

கருப்பனின் வரவை அறிந்த பிரதிவாதி பயந்தாங்கோலி பரந்தாமன் தன் பின்னங்காலிடையே வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடியே விட்டான். ஜான்சனும் மொட்டைவாலன் அப்துல் காதரும் ஓடிவிடலாமா, அல்லது சண்டையிடலாமா என அரைமனத்துடன் நின்றனர். ஆனால் அறிவுடைநம்பி அசரவில்லை. கருப்பனும், அறிவுடைநம்பியும் உடலை சிலிர்த்துக் கொண்டு முதுகைத் தூக்கியபடி வாலை விரைப்பாக நீட்டிக்கொண்டு ஒருவர் கண்களை ஒருவர் வெறித்து நோக்கியபடி, கால்களால் மண்ணை பரக், பரக் எனத் தேய்த்துக் கீறி புழுதி எழுப்பியபடி சுற்றிச் சுற்றி வந்தனர். கருப்பன் ஒரு கண்ணை அறிவுடைநம்பி மீதும் மறு கண்ணை மொட்டைவாலன் அப்துல் காதர், ஜான்சன் மீதும் வைத்துக்கொண்டு போர் முழக்கம் எழுப்பியபடி அறிவுடைநம்பி மீது பாய்ந்தான்.

வேறொரு சந்தர்ப்பமாய் இருந்தால் அறிவுடைநம்பி பந்தா காட்டிவிட்டு நழுவி ஓடிவிட்டு இருப்பான். ஆனால் பெண்ணாசை யாரைவிட்டது. அவனும் பதிலுக்கு கருப்பனைத் தாக்கினான். அறிவுடைநம்பியின் தோழர்களும் அவனுக்கு ஆதரவாய் களத்தில் குதித்தனர். கருப்பன் ஒருவன் அவர்களோ மூன்றுபேர், கட்டிப்பிடித்து, விழுந்து புரண்டு, பல்டியடித்து, கடித்து, ஓலமிட்டு அலறி, நடந்த சமர் முடிவில் வென்றது மாவீரன் கருப்பன்தான். எதிரிகள் வாலைச் சுருட்டிக்கொண்டு புறமுதுகிட்டு ஓடினார்கள். குருதிவழிய வெற்றி முழக்கம் எழுப்பி, ஏரியா தெருவிளக்குக் கம்பத்தில், ஒய்யாரமாய் முக்காலில் நின்று ஒரு கால் உயர்த்தி சிறுநீர் பெய்து இது என்றும் எனது ஆளுமைக்கு உட்பட்ட பகுதி என அடையாளமிட்டுத் திரும்பினான் கருப்பன்.

கனவில் கண்ட திருமுகம்

அபிராமிக்கு மனதில் பெருமிதம். அவளின் உள்ளத்து உவகை முகத்தில் பொங்க, பூரிப்புடன் கருப்பனை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். கருப்பன் சண்டையிட்ட களைப்பில் அபிராமியின் அருகே வந்து அவளை நோக்கி புன்னகை பூத்து பின் ஆங்கே தரையை முகர்ந்து பார்த்து முன்னம்கால்களால் வரட், வரட் என லேசாகப் பள்ளம் பறித்து அதில் நின்ற இடத்தில் நின்றபடி உடலை வளைத்து சுற்றிச் சுற்றி வந்து படுத்துக்கொண்டு அபிராமியை காதல் பார்வை பார்த்துகொண்டே தன் உடலில் ஏற்பட்ட காயங்களைத் நாவினால் நக்கிச் சுத்தம் செய்யத் தொடங்கினான். அபிராமியும்.

அவன் காயங்களை தனது நாவால் நக்கி சுத்தம் செய்து பின் கருப்பனின் அருகே ஓரிடத்தை முகர்ந்து பார்த்து தேர்ந்தெடுத்து கருப்பன் செய்த மாதிரியே செயல்பட்டு அங்கு பெயரளவிற்கு சிறு பள்ளம் பறித்து அங்கு படுத்துக்கொண்டு, கருப்பன் இப்போது ஓய்வெடுக்கட்டும் என எண்ணிக்கொண்டு உறங்கத் துவங்கினாள். அவள் அப்போது தன் உற்சாகத்தினூடாக ஒரு கனவு கண்டாள். கனவில் அவள் வெற்றித் திருமகனாம் கருப்பனின் திருமுகத்தை அண்மை, சேய்மை காட்சிகளாகவும் பலவித கோணங்களிலும் கண்டு மகிழ்ந்தாள்.மேலும் அடுத்துவரும் நாள்களில் தானும் கருப்பனும் சேர்ந்து பயிலப் போகும் உறவுநிலைகளையும், அதன் பின்னர் அவள் பெற்றெடுக்கப் போகும் மழலைச் செல்வங்கள் பற்றியும் அவள் கனவு விரிந்தது. கனவின் நிலைகளுக்கு ஏற்ப அவளின் இமைமூடிய விழிகளில் தென்பட்ட அசைவுகளையும், அவளின் இன்பமுனகலையும் அங்க அசைவுகளையும், பார்த்தும் கேட்டும் ரசித்துக் கொண்டே கருப்பனும் துயிலத் தொடங்கினான்.

ஜூலி கொண்ட மோகம்

ஜூலி அந்தத் தெருவில் பச்சை நிறமணிந்த பங்களாவாசி. திமிர் பிடித்தவள். அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு அழகி பட்டம் வாங்கியவள் என்ற திமிர் அவளின் ஒவ்வொரு உடல் அசைவிலும் வெளிப்படும். இதில் வெள்ளைரோமம் வேறு. அந்த பங்களாவில் அவளுக்கு என்று தனியாக ஒரு சிறுவீடு. அதில் சொகுசு மெத்தை, விளையாட்டுப் பொருள்கள், நேரம் தவறாமல் சத்துள்ள ருசி நிரம்பிய உணவுவகைகள், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, குளியல், அழகுநிலையம் செல்லுதல், மருத்துவரை சந்தித்து தடுப்பு ஊசிகள் போட்டுக் கொள்ளல், தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்களைக் கண்டுகளித்தல், ஓய்வெடுத்தல் என சொகுசுவாழ்க்கை வாழ்ந்து வருபவள்.

இந்தச் சாலையோர ரோமியோக்கள் அறிவுடைநம்பி வகையறாக்கள், அவளிடமும் தங்கள் வித்தைகளைக் காட்டினார்கள். ஆனால் ஜூலி அதற்கு எல்லாம் மசியவில்லை. தெருவாசிகளைக் கண்டாலே அவளுக்கு அலட்சியம். இவர்களை அவள் நாய்களாகவே மதிக்க மாட்டாள். அபிராமியும் கருப்பனும் அந்தத் தெருவில் அவள் வீட்டுப் பக்கம் போனால் கூட போதும் அவளுக்குப் பிடிக்காது. வயலின் என்னும் இசைக் கருவியின் உச்சஸ்தாயி போன்ற குரலில் வள்வள் என சப்தமிடுவாள்.

ஆனால் அவளிடம் இப்போது சில நாட்களாக ஒரு மாற்றம். அவள் நடவடிக்கைகள் ஒரு தினுசாக மாறிவிட்டது. அதிலும் கருப்பனைக்

கண்டவுடன்தான் அவளிடம் என்ன நெளிவு, என்ன குழைவு, அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகை குணங்களுக்கு அவளை விட்டால் வேறு யாரையும் உதாரணமாய் கூற முடியாது. ஜூலிக்கு அபிராமியிடமும் பாசம் பற்றிக் கொண்டது. அபிராமிக்கு அவளின் இந்த மாற்றத்திற்கு காரணம் புரியாமல் இல்லை .

அபிராமி அது விஷயமாக கருப்பனிடம் சண்டையிட்டாள். அவனோ “அவதாண்டி எங்கிட்ட வழியறா, அதுக்கு நான் என்னடி செய்யறது” என நழுவி விட்டான். ஆனால் இந்த ஆண்களைப்பற்றி பெண்களுக்குத் தெரியாதா என்ன, ‘உன்னையல்லாமல் ஒரு பெண்ணை என் எண்ணத்தினாலும் தொடமாட்டேன்’ என சத்தியம் செய்த பிறகும் தெருப்பொறுக்கும் ஜென்மங்கள் அல்லவா? அபிராமி சந்தேகப்பட்டது சரிதான்.

ஒருநாள் ஜூலி தனது அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலிய குணங்களை எல்லாம் ஆடிமாதக் காற்றில் பறக்கவிட்டு விட்டு எப்படித்தான் அவளின் வீட்டாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு வந்தாளோ, கருப்பனோடு தெருவினில் துள்ளித்துள்ளி குதித்தோடி, தழுவி, புரண்டு விளையாடிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் உள்ள கடைத்தெருவுக்குச் சென்று இருந்த அபிராமி கருப்பனைத் தேடி வந்தபோது அந்தக் காட்சியை கண்டு அதிர்ந்து தனைமறந்து கூவினாள். “அடி சக்காளத்தி என்ன காரியம் செய்யிறே, ஐயோ மோசம் போனேனே”, அபிராமியின் குரலைக் கேட்டோ என்னவோ, அந்த நேரத்தில் ஜூலியைத் தேடிக்கொண்டு வந்த ஜூலியின் வீட்டார் அவளின் கழுத்துப் பட்டையைப் பற்றி தரதரவென இழுத்துக்கொண்டு சென்றனர். “தெரு நாயோடு என்ன கொஞ்சல் வேண்டி கிடக்கு” என வசவு வேறு. ஜூலியின் கண்களில் உலக மகா சோகம். கண்ணீர் வழியும் விழிகளால் கருப்பனையும் அபிராமியையும் மாறிமாறி பார்த்தபடி இழுபட்டுச் சென்றாள். அபிராமிக்கு மனசு என்னவோ போல் ஆகிவிட்டது. அவளும் ஒரு பெண்தானே. ஒரு பெண்ணின் மனசை இன்னொரு பெண்ணால்தானே புரிந்துகொள்ள முடியும். அபிராமியின் முகத்தைப் பார்த்தே அவள் மனத்தைப் படித்துவிட்ட கருப்பன் தனக்கும் ஜூலிக்கும் ஏற்பட்ட காதலுக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தான்.

ஊடலும் கூடலும்

ஜூலியுடனான தனது காதல் விளையாட்டு தடைப்பட்டதால் அவளை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணம் கொண்டு கருப்பன் அபிராமியின் அருகே நெருங்கினான். அபிராமியோ

“இப்ப ஏன் எங்கிட்ட வறிங்க அவ பின்னாடிதான மனுஷன் மாதிரி சுத்தி சுத்தி அலைஞ்ஜிங்கயில்ல அவ கிட்டயே போங்க” என பிகு செய்தபடி விலகி ஓடினாள். அவள் பின்னாலேயே ஓடிய கருப்பன், “அபி, அபி, நீதாண்டி என் செல்லம், என் அழகு தேவதையே, என் காதல் தேவதையே” என காதல்பித்தில் ஏதேதோ பிதற்றிக்கொண்டு அவளிடம் கெஞ்சி, கொஞ்சி, சிரிப்புக் காட்டி, அழுது மன்னிப்பு கேட்டு பல விந்தைகள் புரிந்து அவள் மனத்தை மாற்றி அவளிடம் காதல் லீலைகள் பல புரிய ஆரம்பித்தான்.

கருப்பனின் ஸ்பரிசத்தால் சிலிர்த்தெழுந்த இன்ப உணர்வுடன் இருந்த அபிராமி கருப்பனை இன்னும் கொஞ்சம் அலைய வைக்கலாம் என எண்ணம் கொண்டு “என்னிடம் இல்லாத என்ன அழகை அவளிடம் கண்டீர்கள், அவளிடமே போங்கள்” என பொய்க் கோபத்துடன் கூறிவிட்டு அவனிடமிருந்து மீண்டும் விலகி ஊடல் கொண்டு ஓடினாள். ஊடலுக்குப் பின் கூடும் கூடல்தானே அதிக சுகம். கருப்பன் அவளை மறுபடியும் மறுபடியும் கெஞ்சி, கொஞ்சி கூத்தாடி, தனது ஸ்பரிசத்தால் அவளின் பெண்மை உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்து மயக்கி காதல் பித்தேறச் செய்து அவளைத் தனது வழிக்கு கொண்டு வந்துவிட்டான். அபிராமியும் அவனைப் பொய் கடி கடித்தும், லேசாய் பற்குறி பதித்தும், விலகி ஓடுவதுபோல் பாவனை புரிந்தும் சரசம் பல புரிந்து முடிவில் கருப்பனுடன் மன்மதவேள்விக்கு, உச்சநிலைக்குத் தயாரானாள். கருப்பன் அபிராமியை ஓரிடத்தில் நிலையாக நிற்க செய்து, தன்னிரு பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி நின்றுகொண்டு, அபிராமியின் பின்புறமாய் அவள்மேல் தழுவி ஏறி தன்னிரு முன்னங்கால்களால் அவளின் துடியிடையை இறுகப் பற்றி அவளருகே நெருக்கமாய் நெருங்கி,எக்கி எக்கி அவள் உள் நுழைய முயல, அபிராமியும் அவன் உடல் கனம் தாங்கி தன் பின்னுடலைத் தாழ்த்தியும் உயர்த்தியும் அவனுக்கு வாகாய் அசைய, இருவரும் ஓருயிர் ஈருடலாய் சங்கமித்து மெய்மறந்திருந்த அவ்வேளையில் எங்கிருந்ததோ பறந்து வந்த எமனின் பாசக்கயிறு போன்ற ஒன்று கருப்பனின் கழுத்தில் விழுந்து இறுக்கி இழுத்து அவனை அபிராமியிடமிருந்து பிரித்தது. என்ன நடக்கிறது என்பதை அறியாமல் ஸ்தம்பித்து நின்ற அபிராமி கல், மண் தெரியாமல் ஓடி ஒரு வீட்டினுள் தஞ்சம் புகுந்தாள்.

மாட்டிக்கொண்ட மாவீரன்

இன்பப் பிணைப்பில் மாட்டிக் கொண்டு இழுபடாமல், துன்பப்பிடியில் சிக்கித்தவித்த கருப்பன், நாய்வண்டி (மாநகரப் பேருந்து அல்ல) என்றழைக்கப்படும் வாகனத்தினுள் பலாத்காரமாக அடைக்கப்பட்டான்.

அவ்வண்டியினுள் அறிவுடைநம்பி வகையறாக்கள் கருப்பனிடம் தம்பகை மறந்து, “நீ எப்படி இவர்களிடம் மாட்டிக் கொண்டாய்” என்று துக்கம் விசாரித்தனர். தன்னுயிர் காதல் கண்மணி அபிராமியுடன் கூடலில் இருந்து பலவந்தமாய் பிரிக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளாத கருப்பன்,தப்பிச்செல்ல வழியின்றி விதியின் பாதையில் பயணம் தொடர்ந்தான்.

அபிராமி தஞ்சம் புகுந்த வீடு ஜூலியின் வீடு. தேர்தலில் வைப்புத் தொகை இழந்த வேட்பாளரைப் போல் முகவாட்டம் கொண்ட அபிராமியை ஜூலிதான் நல்வார்த்தைகள் சொல்லித் தேற்றினாள்.

ஜூலி அழகி மட்டுமல்ல, உலக நடப்புகள் பலவும் தெரிந்து வைத்து இருந்தாள். அவள் சொன்ன ஒரு செய்தி அபிராமியின் வயிற்றில் பாலை வார்த்தது. “நீ வேணா பாரு. அவர் நிச்சயம் உயிரோடு திரும்பி வந்துவிடுவார், அவரைக் கொல்ல மாட்டாங்க, அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்து திருப்பிக் கொண்டு வந்து விட்டுருவாங்க”, என்றாள். (ஜூலி கருப்பனைக் குறிப்பிட்டுப் பேசும் போதெல்லாம் ‘ர்’ விகுதி சேர்த்து மரியாதையுடன் பேசினாள். ஆகவே கருப்பன் இனி கருப்பர் என அழைக்கப்படுவார்) “நீ சொல்றத என்னால் நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல, அது என்ன அறுவை சிகிச்சை, அதை ஏன் கருப்பருக்கு செய்யனும், அந்த மனுஷங்க போக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குதே” என்றாள் அபிராமி. ஜூலியும் தயக்கத்துடன் பதில் சொல்ல ஆயத்தமானாள். ஆனால் அப்போது அங்கு வந்த ஜூலியின் வீட்டார் அவளை அழைத்துகொண்டு அபிராமியை வெளியே அனுப்பி விட்டார்கள்.

காத்திருந்த கண்கள்

அபிராமி கருப்பரின் வரவுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கத் தொடங்கினாள். அவள் மட்டுமல்ல உடன் ஜுலியும்தான். அந்த தெருவினில் மகிழ்வுந்து, பேருந்து, தனி மற்றும் பல இருசக்கர வாகனங்களும் வந்து சென்று கொண்டிருந்தது. ஆனால் கருப்பரை ஏற்றிச் சென்ற வாகனம் மட்டும் வரவேயில்லை. அவர்கள் இருவரும் கருப்பருக்காக காத்திருந்தபோது, அபிராமி, அன்று ஜூலியினால் சொல்ல முடியாமல் தடைபட்ட செய்தியான கருப்பருக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சையைப் பற்றி வினவினாள். ஜூலியும் அதைப் பற்றி தயக்கத்துடனும் மன வருத்தத்துடனும் அபிராமியிடம் கூறியது பின்வருமாறு:

தெருவினில் பிறந்து, தெருவினில் வளர்ந்து, தெருவினில் வாழ்ந்து, தெருவினிலேயே இறந்தும் போகின்ற தெருநாய் இனத்தவரை மனித இனத்தவருக்கு இடையூறாகவும், ஊறு விளைவிப்பதாகவும் கருதி, அந்நாய் இனத்தவரை பிடித்துச் சென்று கொன்று விடுவதற்கு பதில், அவர்களின் சந்நதியை உருவாக்கும் சக்தியை அகற்றி அவர்களை மலடாக்குவதற்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை முறையாம் அது. பெண்களுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை ஸ்பேயிங் (Spay) எனவும் ஆண்களுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை காஸ்ட்ரேஷன் (Castra tion) எனவும் அழைக்கப்படுமாம். மேலும் வெறிபிடிக்காமல் இருக்க வெறிநாய்த் தடுப்பு ஊசியும் போடுவாங்களாம்.

இதைக் கேட்டதும் அபிராமிக்கு நெஞ்சே வெடித்துவிடும்போல் வேதனையும், கோபமும் பொங்கியது. இப்படி தெருநாய் இனத்தவரின் வம்சவிருத்தித் திறனை அகற்றி அவர்களை உயிரோடு உலவ விடுவதுதான் அகிம்சைமுறையா? இப்படி சித்திரவதை செய்து சிறுகச் சிறுகக் கொல்லாமல் ஒரேயடியாகவே கொன்று விடலாமே, கடவுள் படைப்பில் இப்பிரபஞ்சத்தில் அனைத்துயிர்களும் சமமன்றோ! இந்த மனிதர்கள் வாழும் பூமியில் மற்ற உயிரினங்கள் சுதந்திரமாய் வாழ உரிமை இல்லையா? இவர்களிடம் முதன் முதலில் தோழமை கொண்டு பழகியது நாய் இனம்தானே. நன்றி உணர்வுக்கு நாய் இனத்தைத் தவிர வேறு யாரையாவது விளையாட்டுக்கு கூட உதாரணமாக சொல்ல முடியுமா? இந்த மனிதர்கள் மீது வேறு யாரையாவது இம்மாதிரி கருத்தடை முறையை வன்முறையாய் செயல்படுத்தினால் அப்போது தெரியும் எங்கள் வலியும், துக்கமும். ஐயோ, கருப்பருக்கு பதில் நான் அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாதா எனப் பலவிதமான எண்ணங்கள் அவள் உள்ளக் கடலில் அலைகளாக ஆர்ப்பரித்து எழுந்தன. ஆயினும் கருப்பர் உயிரோடு திரும்பிவருவார் என்ற நம்பிக்கைத் தோணி பற்றி எண்ண அலைகளின் மேல் மிதக்கத் தொடங்கினாள்.

ஜூலிக்கு வந்த ஆபத்து

மீண்டும் ஒருநாள் அபிராமியும் ஜூலியும் சந்தித்தபோது, அபிராமி ஜுலியிடம், “எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நீ ஏன் இப்படி வாடிப்போய் இருக்கிறாய்”, என வினவ, “அபி, கருப்பர் ஆண்மை இழந்தாலும் அவர் உயிரோடு திரும்பி வருவது நமக்கு மகிழ்ச்சிதான். அவர் நிச்சயம் திரும்பி வந்துவிடுவார், அது, அந்த…. அது வந்து, அந்த விஷயத்தை நான் எப்படிச் சொல்வேன். அதை சொல்ல எனது உமிழ்நீர் வடியும் நாக் கூசுகிறது. எனக்கு, எனக்கு…. விவாகம் செய்ய என் வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள்”, என்றாள் ஜுலி.

அபிராமிக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த விவாகம், விவாகரத்து என்ற பைத்தியகாரத் தனத்தையெல்லாம் மனிதர்கள் அவர்களுக்குள் செய்து கொள்வதுதானே. கருத்தடையை நம்மீது வலுக்கட்டாயமாகத் திணித்ததைப் போன்று இப்போது அதையும் நம்மீது திணிக்கிறார்களா, இது என்ன அநியாயம் என்றாள்.

ஜூலி அதற்கு பதிலாக, இல்லை அபி, அது கருத்தடை விவாகத்திற்கு முன்பே மனிதர்கள் நம்மீது திணித்ததுதான், நீ தெருவில் பிறந்து வளர்ந்த விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதால் உனக்கு இதுபற்றியெல்லாம் தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால் எங்களைப் போன்ற மேட்டுக் குடியினருக்கு இதில் விருப்பம் உள்ளதோ இல்லையோ இதைத் தவிர்க்க முடியாது என்றாள்.

தொடர்ந்து ஜுலி சொன்னதிலிருந்து அபிராமி தெரிந்து கொண்டது. ஜுலிக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவளை வேறொருவனோடு புணர வைப்பார்களாம். தனக்குப் பிடித்தமானவனை தன் இணையாகத் தேர்ந்தெடுக்க அவளுக்கு உரிமை இல்லையாம். அவளைப் புணரும் வேறொருவன் தெருநாயாக இல்லாமல் ஜுலியை போன்றே அவள் ஜாதியை சேர்ந்தவனாக, உயர்ஜாதியை சேர்ந்தவனாக இருப்பதுதான் முக்கியமாம். இப்படி அவளைக் கருவுறச் செய்வதற்கு அந்த வேறொருவனைச் சேர்ந்த உரிமையாளர்கள் வரதட்சனை போன்று பணம் பெற்றுக் கொள்வார்களாம். இதைவிடக் கொடுமை பிறகு கருவுற்று பிறக்கும் பால்மணம்மாறா பச்சிளம் குழந்தைகளைத் தாயிடமிருந்து பிரித்து நல்ல விலைக்கு விற்றுவிடுவார்களாம் அந்தக் கொடூர மனிதர்கள். நேற்று ‘டைகர்’ என்ற பெயருடையவனை ஜுலியின் வீட்டார் வீட்டிற்கு அழைத்து வந்து ஜுலியுடன் பழக வைத்தார்களாம். அவள் முரண்டு பிடித்து நேற்று எப்படியோ தப்பி விட்டாளாம். ஆனால் காரியத்தை முடிக்க இன்னொரு நாளை நிச்சயித்து அதற்கு பணமும் கைமாறிவிட்டதாம். “அந்த நாள் எப்போதோ நினைத்தாலே எனக்கு குலை நடுங்குகிறது. அதோ பார் நான் வீட்டைவிட்டு ஓடி தப்பிச் செல்லாமல் இருக்க கனமான இரும்புச் சங்கிலி போட்டு என்னை பிணைத்து வைத்து இருக்கிறார்கள்”, என சொல்லி விட்டு ஜுலி குலுங்கி குலுங்கி விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். அபிராமி ஜுலிக்கு ஆறுதல் சொல்லி தேற்றினாள். அவளுக்கு அப்போது மனிதர்கள் மீது வந்த கோபம் சொல்லி மாளாதது.

ஜூலி அடைந்த பேரிடர்

பிறிதொரு நாள் அபிராமி, ஜுலியை சந்திக்க நாக்கில் வியர்க்க வேகவேகமாக ஓடினாள். “கருப்பர் திரும்பி வந்துவிட்டார். அவர் உயிரோடு திரும்பி வரவேண்டும் என்று நான் உணவு உண்ணாமல் விரதமிருந்து புல்லையும், பச்சிலைகளையும் தின்றது வீண்போகவில்லை. இப்போதுதான் அவரை சந்தித்துவிட்டு வருகிறேன். அவரை அழைத்து வந்த வாகனம் அதோ போகிறது பார்” இதை சொல்லத்தான் அவள் ஜுலியின் வீட்டிற்கு அப்படி ஓடினாள்.

அபிராமி ஜுலியின் வீட்டின் இரும்பு வாசல் கம்பிக் கதவு வழியே உடலை நெளித்து நுழைத்து உள்ளே சென்று ஜுலியைத் தேடினாள். தேடலின் இறுதியில் இவள் கண்ட காட்சி!? உடல் சிலித்து முகம் சிவந்து சுவாசம் தடைபட சிலைபோல் நின்றாள் அபிராமி. அங்கே, அங்கே ஒரு கற்பழிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்த கற்பழிப்பு நாயகன்தான் ஜுலி சொன்ன டைகர்போலும். ஜுலியைப் பார்த்தாலே தெரிந்தது அவள் முடிந்தவரை போராடி களைத்துபோய் இருக்கிறாள் என்று. அந்த கொடூர மனிதர்கள் ஜுலியை பிடித்துக்கொண்டு டைகரை அவள் மேல் ஏற்றி இயக்க வைத்துக் கொண்டு இருந்தார்கள். கரும்பு தின்னக் கூலி வேண்டுமா? என்று நினைத்து கொண்டார் போல் டைகர் ஜுலியிடம் உற்சாகமாக ‘ஜமாய்த்து’ கொண்டிருந்தான்.

அந்தக் கொடூர மனிதர்கள் ஜூலியையும் டைகரையும் சுற்றி நின்றுகொண்டு கேளிக்கையும் பெரும் ஆர்ப்பாட்ட சிரிப்புமாய் ‘அதை ரசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண் அவளது கைபேசியில் இருந்த படம் எடுக்கும் தொழில்நுட்பம் மூலம் அக்காட்சியை சலனப் படமாகப் பதிவு செய்துகொண்டு இருந்தாள். ‘பாவம் ஜுலி’ என்று அபிராமியின் மனம் ஜுலிக்காக வேதனைப்பட்டது. அவள் அங்கிருந்து அரவம் செய்யாமல் திரும்பிச் செல்ல எத்தனித்தபோது, அப்போதுதான், கருப்பரும் இவ்வளவு நேரமாக அவளின் பக்கத்தில் நின்றுகொண்டு ஜுலிபடும் துயரத்தை வருத்தத்துடன் பார்த்துக்கொண்டு இருந்ததை அறிந்தாள். இருவரும் மௌனமாக தலையை தொங்கப் போட்டுக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்கள். அபிராமி அங்கிருந்து வெளியேறும் போது மெல்ல ஜுலியை திரும்பிப் பார்த்தாள். ஜூலி, டைகரின் பிணைப்பிலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்ள, அவள் ஒரு திசையிலும் டைகர் அவனது ஆண்மையை நிரூபிக்கும் விதமாக ஜுலியை இழுத்துகொண்டு அவன் ஒரு திசையிலுமாக இழுப்பட்டுக் கொண்டு இருப்பதைக் கண்டாள். அதுதான் அபிராமி ஜுலியை கடைசியாக பார்த்தது. அதன் பிறகு அவளுக்கு ஜுலியை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவேயில்லை.

மனம் கலங்கிய மன்னவன்

கருப்பரின் பேச்சு குறைந்துவிட்டது. அவர் எப்போதும் துயரமே உருவாக படுத்துக் கிடந்தார் கம்பீரம் அற்று இளைத்துப்போய் .

இருந்த அவரின் அழகிய செவிகளில் ஒன்றின் நுனிப்பகுதியும் அவரின் அழகிய விதைப்பையும் காணவில்லை. கருத்தடை அறுவை செய்த பின்

அடையாளத்திற்காக கருத்தடை செய்யப்பட்டவரின் ஒரு காதில் நுனியை வெட்டி விடுவார்கள் என்று ஜுலி சொன்னது அபிராமிக்கு ஞாபகம் வந்தது. பொங்கி வரும் துக்கத்தை தன்னுள் அடக்கிக்கொண்டு அபிராமி கருப்பரிடம் பல ஆறுதல் மொழிகளைச் சொல்லி அவரை தேற்றினாள். “நடந்தது நடந்து போச்சு இதையெல்லாம் நாம் அனுபவிக்கனுமுனு இருக்கு, நடந்ததையே நெனைச்சுகிட்டு இருந்தா வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் போயிடும். நம்மால குழந்தை பெத்துக்க முடியலனா என்ன? எனக்கு நீங்க குழந்தை, உங்களுக்கு நான் குழந்தை” என்றாள். கருப்பர் அவளிடம், “அபி நான் சொல்லறத நீ கொஞ்சம் கோபப்படாம கேளு…. இனி நான் உனக்கு உதவ மாட்டேன், எனக்காக நீ ஏன் உன் வாழ்க்கையை வீணாக்கிக்கணும்? அதனால் நீ உனக்கு ஒரு வாழ்க்கை துணையை….” கருப்பர் என்ன சொல்ல வருகிறார் எனப் புரிந்துகொண்ட அபிராமி தரையில் விழுந்து முதுகு தரையில் பட புரண்டு தன் இரு முன் கரங்களால் முகத்தில் அறைந்து கொண்டு செவிகளை மூடிக்கொண்டு, “போதும் நிறுத்துங்கள், இனிமேல் என்னிடம் இந்த மாதிரி பேசினால் அப்புறம் என்னை உயிரோடு பார்க்க முடியாது” என ஆவேசத்துடன் கூற, கருப்பர் திகைத்துப்போய் மேலும் ஏதும் பேசாமல் மவுனமானார்.

நாட்கள் சில சென்றது. கருப்பரின் உடல் நிலை தேறவேயில்லை. அவரின் நடை அழகே மாறிப்போய் எப்போதும் தலையைக் குனிந்துகொண்டே தனது பின்னங்கால்களை இயக்குவதில் சிரமத்துடன், ஒரு மாதிரியாக இழுத்து இழுத்து நடந்து கொண்டு இருந்தார். தனது இனப்பெருக்கத் திறனை இழந்துவிட்ட பின் இந்த உலகில் வாழ்ந்தென்ன பயன் என நினைத்துக்கொண்டு மனம் புழுங்கி உடல் ஒடுங்கி அவதியுற்றுத் தன் உடல் நிலை குறித்து அக்கறைகொள்ளாமல் உடல் மெலிந்து நடை தளர்ந்து அவர் தேகம் முழுவதிலும் தெள்ளுப் பூச்சிகளும், தட்டை உண்ணிகளும், குண்டு உண்ணிகளும் அடை அடையாக பற்றிக் கொண்டு சொறிபடர்ந்து நடைப்பிணமாக வாழ்ந்த கருப்பர் ஓர் இனிய காலைப் பொழுதில் இறந்து போனார்.

அபிராமிக்கு ஊளையிட்டு அழக்கூட உடலிலும் மனசிலும் தெம்பு இல்லை. அவள் அழவே இல்லை. கருப்பரின் மறைவுக்குப் பிறகு அபிராமியின் போக்கு மாறிவிட்டது. சில நேரங்களில் மவுனமாக ஒரே இடத்தில் முடங்கிக் கிடந்தாள். சில நேரங்களில் ‘உர்’ என்று தொடர்ச்சியாக உறுமிக்கொண்டு அங்கும் இங்கும் இலக்கில்லாமல் அலைந்து கொண்டு இருந்தாள். கண்ணில் தென்படும் பொருட்களையெல்லாம் பேதம் பாராமல் கடித்துக் குதற ஆரம்பித்தாள்.

வாலை காலிடுக்கில் ஒடுக்கிக்கொண்டு வாயில் எச்சில் ஆறாய் வழிய சுற்றியலைந்து அவளுக்கு உணவு உண்ணப் பிடிக்கவில்லை. தண்ணீரை கண்ணால் காணக்கூட பிடிக்கவில்லை.

கதை முடியப்போகிறது

அபிராமி கண்ணில் பட்ட மனிதர்களையெல்லாம் துரத்தி துரத்திக் கடித்தாள். கடித்துக் கடித்துக் குதறினாள், குதறிக் குதறிக் கடித்தாள். அவள் தம் இனமக்களின் விடுதலைக்கு ரகஸிய திட்டம் தீட்டிக்கொண்டு இருந்ததையும், அவள் ஒரு போராளியாக மாறி விட்டதையும், அவளின் மனிதர்களின் மீதான தாக்குதலின் போதுதான் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆம். அவள் தம் இன மக்களின் மீதான இனப்படு கொலைக்கும், மெல்ல மெல்லப் பனி உருகுவதுபோல் நடைபெற்று வரும் அழித்தொழிப்புக்கும் எதிரான நடவடிக்கை ஆயுதப் போராட்டம்தான் வலிமை மிக்கது என்பதை தீர்மானித்து விட்டாள். ஆயுதம்? அவளே ஆயுதமாக மாறி விட்டாள். அவளின் நஞ்சு எச்சில் படிந்த கூரிய பற்களுக்கு ஈடாக வேறு எந்த ஆயுதத்தைக் கூற முடியும்?

அவளின் தாக்குதலுக்கு அஞ்சி மனிதர்கள் அவள் இருக்குமிடம் நெருங்கவும், கடக்கவும் அஞ்சினர். அவர்களில் குற்றமற்றவர்களும், நாய் அபிமானிகளும் இருப்பார்கள் என்பதும் அவள் அறியாதது அல்ல. ஆயினும் அவள் கோபம் அடக்க இயலாததாக இருந்தது. அவள் தனது போராட்டத்தில் தம்மின மக்களையும் ஈடுபடுத்த நினைத்தாள். ஒரு கடி, அது கூட தேவையில்லை. அவளின் ஒரு துளி எச்சில் போதும். அவள் இன மக்கள் வீறுகொண்டு மனித வர்க்கத்தை பழிவாங்க ஓரணியில் திரள்வர். ஒரே ஆயுதம் பகை தீர்க்கவும், தம் வீரப் படை பெருக்கவும் பயன்படும் விந்தைதான் என்ன ஆச்சரியம். வீரத்திருமகள் அபிராமி தான் எடுத்த காரியத்தை இனிதே முடிக்க மெய்வருத்தம் பாராமால் பசி நோக்காமல் கண் துஞ்சாமல் கருமமே கண்ணாயிருந்தாள். ஆனால் அந்தோ பரிதாபம். அவளின் எண்ணம் முழுவதும் ஈடேறவில்லை. ஒருநாள் மனிதர்கள் பலர் ஒன்றுகூடி அபிராமியை ஓட ஓட விரட்டி கற்களால் அடித்தே கொன்றார்கள்.

– 21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள் என்ற தொகுப்பை  கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்து இருக்கிறார். இந்த கதை உட்பட பதினேழு நவீன   சிறுகதை ஆசிரியர்களின் படைப்புக்கள் இதில் இருக்கின்றன. இந்த தொகுப்பை ஆழி பதிப்பகம் 2012 வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *