அவளின் ஆத்மா அழுகின்றது

0
தின / வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
முதல் வெளியீடு: 1989
இணைய வெளியீடு: November 15, 2026
பார்வைகள்: 454
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலைப் பொழுதாகிவிட்டதால், சூரியனின் கிரணங்களின் மூர்க்கந் தணிந்திருந்தாலும், ஏற்கனவே அவன் அள்ளியிறைத்த வெப்பத்தின் வேகரத்தில் பூமி தகிக்கும் தணலாகிக் கிடந்தது. 

ஆயிரம் பிரச்சினைகளாலும், அவற்றால் அனுபவித்த அவலங்களாலும், வேதனைகளாலும் வெந்து கிடந்த சரசுவுக்கு கால்கள் தார் வீதியிற் பட்டபோது ஏற்பட்ட தகிப்பு அவ்வள வாகத் தெரியவில்லை. நாளும் பொழுதும் கஷ்டப்பட்டே பழகி விட்ட கால்கள். 

‘எப்பொழுது இந்த வேதனைகள் தீர்ந்து ஒரு விடிவு ஏற்படும்?’ என்றொரு ஏக்கம் மனதினுள்ளே கிடந்தாலும் இன்னும் வரப்போகும் கஷ்டங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கத் தயார் என்பது போல், கஷ்டங்களை அனுபவித்துப் பழக்கப்பட்டு விட்ட மனம். 

அவளது பிள்ளைகள் இருக்கும்போது அவளுக்கு விடிவு காலம் வராமற் போய்விடுமா? 

இந்த இமாலய நம்பிக்கையிலேதான் அவள் எந்தக் கஷ்டமும் படத் தயாராக இருக்கிறாள். 

இப்படியொரு கஷ்டகாலம் வருமென்று அவள் எதிர்பார்க்க வில்லைத்தான். 

அந்தக் காணி அவளுக்கும் அண்ணனுக்குமுரியதென்று முடிவானபோது அவள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தாள். அண்ணனும் அவளுமாய் அதிலிருந்த குடிசையைக் கோபுரமாக்கி மண்ணிலே பொன் விளைய வைத்து…. 

எதிர்காலம் ஒரு சுவர்க்க போகமாகுமென்று அவள் கண்ட, கனவுகள்….? 

அந்தக் கனவுக்கோட்டையிலே சுயநலம் முளைவிட்டு. விருட்சமாகி, அந்தக் கோட்டையே பிளந்து நொருங்கி… 

அவர்களின் தந்தையிடமிருந்து அந்தக்காணியை முதலியார் தந்திரமாக, ஏதோ கடனுக்கும், வட்டிக்குமாகவென்று பறித்துக் கொண்டார். அண்ணனும் அவளும் எவ்வளவோ முயன்று தம் உரிமையை நிலைநாட்டினர். அந்த மகிழ்வும் உரிமையும் நீடிக்க வில்லை. முதலியாரை விட மோசமானவனாக அண்ணனே மாறி விட்டபோது அவள் திகைத்து விட்டாள். 

அண்ணன் தனதென்று சொந்தம் கொண்டாடும் காணியின் ஒரு மூலையிலே, ஓட்டைக் குடிசையிலே எவ்வளவு காலம் வாழ்வது? அவளது கண்களிலே கண்ணீர் கரை தாண்டுகிறது. 

‘இந்தக் காணியிலை எங்களுக்கும் பங்கிருக்கெண்டு மச்சானை ஒப்புக்கொள்ள வைப்பன்’ எங்களுக்கும் சம உரிமை இருக்கெண்டு நிலைநாட்டுவன். என்று உதயத்தில் சவால் விட்டு மாலையில் மச்சான் கொடுத்த மது மயக்கத்தில் – அத்தனையை யும் மறந்துவந்து விழுந்துகிடக்கும் கணவன், துயரம் நெஞ்சினுள் புரண்டு பொங்கி விம்மலாக வெளிவருகிறது. சேலைத்தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள். 

‘யாரும் கவனிப்பார்களோ?’ 

சரசு சுற்றிவரப் பார்க்கிறாள். செல்லமாமி வீட்டுக் கப்பல் வாழையொன்று குலையின் பாரத்தைத் தாங்கமுடியாது தலை குனிந்து நிற்பது கண்ணிலே படுகிறது. 

அவளுடைய வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு வாழைக்குட்டி நடுவதென்றாலும் அண்ணனின் அனுமதியை எதிர்பார்க்க வேண்டும். 

அவனுக்குக்கோபம் வரும்போது வாழைக்கு நீரிறைப்பதைத் தடுத்தும், சில சமயம் வாழையையே வெட்டியெறிந்தும், அவன் செய்யும் அட்டகாசங்களைப் பொறுக்க வேண்டும். 

இத்தனையும் தாண்டி வாழை குலைபோட்டால் அது தனக் குரியதென்று சொந்தங் கொண்டாடி. அதில் அண்ணன் பூண் சீப்புப் பழத்தை மட்டும் வெட்டித்தர ஏக்கத்தோடும் வேதனை யோடும் பெற்றுக்கொள்ள வேண்டும். 

எத்தனை காலத்திற்கு இந்த வேதனைகள்? 

தகித்துக்கொண்டிருந்த கால்களிலே சில்லென்ற உணர்வு அந்தக் கடையின் முன்புறம் நீர் தெளித்த் மண்ணிலே கால் பட்டதும் ஏற்பட்ட சுகம். 

‘என் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்!’ 

“என் செல்வங்கள் என்மேல் உயிரையே வைத்திருக்கிறார் கள். எனக்காக உயிரைக் கொடுக்கவுந்தயாராக இருக்கிறார்கள்” 

இது அவளின் உறுதியான நம்பிக்கை. 

ஆத்மார்த்தமான எதிர்பார்ப்பு. 

“ஐயோ அம்மா” 

காலிலே கண்ணாடித் துண்டொன்று குத்திவிட சுரீரென்ற வலிப்பு. அவள் மெல்லக் கண்ணாடித் துண்டை எடுத்தெறிகிறாள். 

அடி மனதிலே ஒரு நெருடல். 

தகித்துக்கொண்டிருக்கும் பாதையினிடையில் பாதத்தில் பட்ட குளிர்மை தொடரப்போவதில்லையோ? 

காலிலே இரத்தம் கசிகிறது. 

மாமாவிடம் கேட்டு, தம் பங்கில் முழுமையான உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்ற ஆவல். 

தங்கள் வீட்டைச் செம்மைப்படுத்தி, அழகுறச்செய்து அதில் அம்மாவையும், தங்கையையும் சீரோடும் சிறப்போடும் வாழ வைக்க வேண்டுமென்ற ஆசை. 

இவை மூத்தவனிடமும், இளையவனிடமுமிருந்தாலும் தம் இலட்சியத்தை நிலைநாட்ட இருவரும் ஒன்றுபட்டுச் செயற்படுவதாகக் காணோம். 

இருவரையும் தட்டிவிட்டுக் கூத்துப் பார்ப்பதில் ஊருக்குள் பலருக்கும் ஒரு சந்தோஷம். இதில் மாமா பெரும் பங்கு வகித்தார். 

இதனால் வாய்ச்சண்டை கைச்சண்டையாகி பிளவு பிரிவாகும் நிலை. 

‘நான் நினைப்பதும், செய்வதுந்தான் சரி; அந்த வழியில் மற்றவனும் வந்தாலென்ன?’ என்ற ரீதியில் இருவரும் அழுங்குப் பிடி பிடித்துக்கொண்டிருந்தார்கள். 

இதென்ன சீனி சிந்திக் கிடக்கிறது. அவளுடைய வீட்டுச் சீனிப் போத்தல்தான் உடைந்து கிடக்கிறதோ? அதன் ஒரு துண்டுதான் அவளது காலைப் பதம்பார்த்திருக்க வேண்டும். 

சரசு வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கிறாள். வீடு, கிடந்த அலங்கோலத்திலும் கீழான அலங்கோலமாகக் கிடக்கிறது. 

மகள் செல்வி தலைவிரிகோலமாகக் கன்னம் கன்றிப்போய், விக்கி விக்கி அழுது கொண்டிருக்கிறாள். 

தாயைக் கண்டதும் தூறல் பெருமழையானது போல் கதறியழுகிறாள். 

“என்ன செல்வி, என்ன நடந்தது?” சரசு பரபரப்புடன் கேட்டாள். 

“இந்த வீட்டிலை இன்னும் என்னம்மா நடக்க வேணும்? நாங்களெல்லாம் ஒரு தாயின்ரை வயிற்றிலை பிறந்த பிள்ளை யளே? அம்மா அண்ணையவை செய்யிறதைப்பாருங்கோ” செல்வி முறையிடுகிறாள். 

“எந்த அண்ணை என்ன செய்தவர்?’ 

“காலமை பெரியண்ணை வந்தார். மாமா தந்த வாழைப் பழத்தைத் தூக்கி எறிஞ்சார். சின்னண்ணை வீடு மேயவும், வீட்டுச் செலவுக்குமெண்டு பக்கத்து வீட்டு மாமாவிட்டைக் காசு வாங்கினவராம்”. 

‘உங்களுக்கு மானம் ரோசமில்லையோ? சின்னவர் வாங்கித் தாற பிச்சைக் காசிலை வீடுமேஞ்சு சாப்பிட்டுக் குசாலாயிருங்கோ. என்ரை பாட்டன் காலந்தெர்ட்டு இந்தக் காணியுக்கை இருக்கிறம். பாடுபடுகிறம், இது எங்கடை காணி, நான் நட்ட வாழை, அதிலை பழுத்த வாழைக்குலையை எடுத்து எதுவோ பெரிய தானஞ் செய்த மாதிரி அவர் தாறார். இவையும் கையேந்தி வாங்கிச் சாப்பிடுகினம். முதலிலை எங்கடை காலிலை நிற்கப்பழக வேணும்.’ எண்டு கத்தி, நாலு அடியுந்தந்து கோபத்தைத்தீர்த்துப் போட்டுப் போனார்.” 

செல்வியின் கை கன்றி வீங்கிய கன்னத்தைத் தடவியது. 

சரசு மெல்ல அவளை அணைத்துக் கொண்டாள். 

“பிறகு என்ன நடந்தது” 

“பிறகு சின்னண்ணை வந்தார். பெரியவர் வந்தவரோ? கன ஆர்ப்பாட்டம் நடந்திருக்கு, அவரை வீட்டுக்குள்ள விடவேண்டா. மெண்டல்லே சொன்னனான். சாப்பாடும் குடுத்தனியோ? எண்டு குதிகுதியெண்டு குதிச்சார். சீனிப் போத்தலைத் தூக்கி எறிந்தார். என்ரை தலைமயிரைப் பிடித்திழுத்து அடிச்சார்.” 

சரசுவின் கால் விண்ணென்று வலித்தது. இதயத்தின் வலி அதை விஞ்சியது. 

“அம்மா! நாங்களெல்லாம் உங்களின்ரை பிள்ளையள் : தானே, பிறகு ஏனம்மா அண்ணைமார் தாங்களும் அடிபட்டு, என்னையும் அடிச்சு இம்சைப்படுத்துகினம்? வீட்டைத்திருத்தி, சீர்சிறப்பாயிருக்க வேணுமெண்டு சொல்லிப்போட்டு, ஒருத்தரை ஒருத்தர் விஷம் மாதிரி வெறுத்துச் சண்டை பிடிக்கினம். தங்கச்சியை நல்லா வைச்சிருக்கவேணுமெண்டு இவை வாயாலை சொல்லியென்ன? என்னை நிம்மதியாயிருக்கக் கூட விடாயினமாம். எவ்வளவு வதைக்கினம்?” 

மகள் அழுதுகொண்டே சொன்ன முறைப்பாட்டைக் கேட்டு சரசு அதிர்ந்துபோய் நின்றாள். பெரியவன் துவக்கைச் சின்னவ னின் நெஞ்சிலும், சின்னவன் கத்தியைப் பெரியவனின் கழுத் திலும் வைத்துக்கொண்டு நிற்பது போன்ற ஒரு பிரமை. 

‘என் செல்வங்களே வேண்டாமடா. போதும் உங்கட சண்டை, அன்பும், அருளும், கருணையும், பாசமும் உங்களின் இதயங்களிலே வற்றிப்போய் விட்டனவா?” சரசுவின் ஆத்மா அலறியது. 

‘அம்மா மற்றொருவனுடைய கைகள் என்ரை கழுத்தை நெரிச்சால் என்னுடைய கைகள் அதைத்தடுக்கும். ஆனால் என்ரை கைகளே என்ரை கழுத்தை நெரிக்கிற நிலையிலை..’ செல்வி தாயின் மடியிலே முகம் புதைத்து விம்மினாள். 

அந்தத் தாயின் கற்பனைகளெல்லாம் அவளுடைய கண் முன்னேயே அஸ்தமனமாகின்றனவா? 

சரசுவின் காலிலிருந்து இரத்தம் வடிவதைக் கவனிக்க எவருமில்லை. 

‘என்னுடைய பிள்ளைகள் சண்டை போடக்கூடாது. நீங்கள் ஒற்றுமையாய் பாசமுள்ள சகோதரர்களாயிருக்க வேண்டும். என் செல்வங்களே ஒற்றுமைபாயிருங்கள்.’ 

அவளுடைய மனம் இரந்து வேண்டியது. 

– மல்லிகை, கார்த்திகை 1989.

– கணநேர நினைவலைகள் (சிறுகதைத்தொகுதி), முதற் பதிப்பு: சித்திரை 2001, பிரணவன் வெளியீட்டகம், கோப்பாய், ஸ்ரீலங்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *