கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2026
பார்வையிட்டோர்: 1,774 
 
 

(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆத்திசூடியும் பாரதியார் பாப்பா பாடல்களும் சுகந்தாவின் காலடியில் கிடந்தன.

அவற்றை தனது சின்ன வயது புத்தக அலுமாரியில் இருந்து எடுத்து வந்து வீசியெறிந்த சுசானாவின் கண்கள் சிவந்திருந்தன. உதடுகள் துடித்தபடி இருந்தது. சுகந்தாவை ஆதரவாக கட்டிப் பிடித்து அழுது கொண்டிருந்தாள்.

“அறம் செய விரும்பு”

“ஆறுவது சினம்”

“இயல்வது கரவேல்”

20 வருடங்களுக்கு முன்னால் இருவரும் வெள்ளைச் சட்டையுடனும் கறுத்த கழுத்துப் பட்டியுடனும் வெள்ளை நிற காலணிகளுடனும்… சுகந்தா கைகளை பின்னால் கட்டிய படியும்… சுகந்தா கைகளை முன்னால் கட்டியபடியும் தனித் தனியே பேச்சுப் போட்டியில் பேசியவை இன்று போலுள்ளது.

சுகந்தா பாரதியாராக… சுசானா ஒளவையாராக…

ஜேர்மனி முழுக்க உள்ள தமிழ் பாட சாலைகளில் அன்று மனனம் செய்து ஒப்புவிக்கும் போட்டியில் குறைந்தது ஆயிரம் சிறுவர்களின் குரலில் “அறம் செய விரும்பும்…” “பொய் சொல்லக் கூடாது பாப்பாவும்” ஒலித்துக் கொண்டிருந்தன.

ஒவ்வோர் பிரதேச ஆசிரியர்கள் மற்றைய பிரதேச மாணவர்களுக்கு மத்தியஸ்தர் களாய் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள்.

முதலில் நகரசபைகள் மட்டத்தி லும் பின்பு மாவட்ட மட்டத்திலும் அதன் பின்பு மகாண மட்டத்திலும் இந்தப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இறுதிப் போட்டியில் ஜேர்மனி யின் வட பகுதியில் இருந்து சுகந்தாவும் தென்பகுதியில் இருந்து சுசானாவும் பங்கு பற்றியிருந்தார்கள்.

சுகந்தா இலங்கையில் பிறந்து தனது பெற்றோருடன் கைக் குழந்தையாக இருக்கும் பொழுது ஜேர்மனிக்கு வந்தவள்.

சுசானா இலங்கையில் இருந்து வந்த ஒரு குடும்பத்தின் அருகே சிறுவயதில் இருந்து பழகி விளையாடி அந்தப் பிள்ளைகளின் பாட்டியின் பாடல்களால் கவரப்பட்டு தமிழ் படிக்க விரும்பியவள்.

இறுதிப் போட்டியில் முதல் பரிசு இருவருக்கும் என அறிவிக்கப்பட்ட வேளை யில் இருவரும் முதன் முதலில் மேடையில் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டதில் ஆரம்பமானது தான் இந்த உறவு.

போட்டியில் சுசானாதான் வெற்றியாளராக அறிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது மக்களின் தீர்ப்பாயும்… “என்னதான் சொன்னா லும் ஒரு ஜேர்மன் பிள்ளையை முதலிடத்திற்கு வரவிடக் கூடாது”, என்று திரைக்குப் பின்னால் நடந்த கருத்தாடல்கள் பின்னாளில் இருநடுவர் குடும்பங்களுக்கு இடையில் நிர்வாக மோதல் வந்த பொழுது வெளிக்கசிந்த உபசெய்தி.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் சென்ற நாடுகள் எல்லாவற்றி லும் தமிழையும் கலாசாரத்தை யும் பேணிக்காப்பாற்றுகிறார்கள் என லங்காசிறி பெருமைப்பட்டுக் கொண்டு இருந்தது.

குழந்தைப் பருவத்தையும், குமரிப் பருவத்தையும் தாண்டி பல்கலைக்கழக நுழைவாயில் வயது வந்த பொழுது மீண்டும் அவர்கள் இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் ஒரே துறையில் இணைந்தார்கள்.

“காலமையோடை எழும்பி படி… ரி. வி. பார்க்காதே… கைத்தொலை பேசியை நோண்டிக் கொண்டு இராதே” என்ற தாயின் கண்டிப்போ…

“மற்ற ஜேர்மன் பிள்ளையள் மாதிரி நீ உழைச்சுப் படிக்க வேண்டும் என்ற நிலை உனக்கில்லை… உனக்காகவும் சேர்த்து தான் நான் இரண்டு வேலை பார்க்கிறன்… நீ நல்ல ரிசல்ட் எடுத்தால் போதும்” என்ற தகப்பனின் அரவணைப்பும் அதன் பின்பு இருந்த எதிர்ப் பார்ப்புகளோ…

எந்த திருப்பள்ளியெழுச்சியோ திருவெம்பாவையோ இல்லாத காலைப்பொழுதாக பல்கலைக்கழக காலைப்பொழுதுகள் எப்போதும் அமைதியாக அமைந்திருந்தன சுகந்தாவிற்கு.

காலையில் பல்கலைக்கழகம்… மாலையில் சுசானாவுடன் அரட்டைகள்… மாலையில் ஒன்றாக இணைந்து விடுதியில் சமையல்… சனி – ஞாயிறுகளில் நகரத்தினுள் ஒரு சுற்று சுற்றி அங்கு உணவுண்டு சில வேளை படமும் பார்த்து… விடுதிக்கு திரும்பி வந்த பின்பு என்னதான் தூக்ககளை இருந்தாலும் முகத்தைக் குளிர்ந்த தண்ணீரால் கழுவி விட்டு பாடப்புத்தகங் களுடன் போராடிக் கொண்டிருந்த பொழுது தான் அந்த சுனாமி வந்தது.

ஒன்றாக சமைக்கும் அந்த சமையலறையில் தான் அது நிகழ்ந்தது.

அந்த ஜேர்மனிய இளைஞன் அடிக்கடி வந்து சுகந்தாவிடம், “அதனை இரவலாக தாருங்கள்… இதனை இரவலாக தாருங்கள்”, எனக் கேட்கும் பொழுது அவனுடன் சேர்ந்து ‘அது’வும் தன்னை நெருங்குவதை அவள் உணர்ந்த பொழுது… அதனிட மிருந்து தள்ளி தள்ளி பின்னாலேயே சென்றாள்.

“இதுக்குத்தானா உன்னைப் படிக்க விட்டனாங்கள்” என தாயும் தகப்பனும் மோலாக அவர்கள் வாழ்ந்த நகரமே அவளை மிரட்டுவார்கள் என்று எண்ணிய பொழுது இன்னமும் இன்னமும் பின்னாலேயே சென்றாள்.

புத்தகத்தினுள் ஒன்ற கண்கள் மறுத்தன. கணனியில் கட்டுரை எழுதும் பொழுது கைவிரல்கள் மெதுவாகவே இயங்கியன.

இவள் மறுக்க மறுக்க ‘அது’ மேலும் மேலும் அவளை நோக்கி நோக்கி வந்தது.

அடுத்த சிலநாள் அவன் சுசானாவுடன் பேசிக்கொண்டு திரிந்த பொழுது மனதினுள் சின்னப் பொறுமையாயும் இருந்தது.

“ஆம்பிளையே இப்பிடித்தான் ஒருத்தி இல்லாவிட்டால் இன்னொருத்தியிடம் போய் விடுவான்” என மனத்தினுள் திட்டினாலும் சுசானா மீது தான் பொறாமைப்படுவது போல உணர்ந்தாள்.

அடுத்த சனி சுசானாவுடன் கோப்பி பாரில் இருந்து கதைத்துக் கொண்டிருந்த பொழுது சுசானாவே கேட்டாள், “நீ அவனை விரும்புறியா?” என. “என்ன” என்பது போல தலையை நிமிர்த்தினாள். “உண்மையைச் சொல்லு… பி ஒனஸ்ற்…. அவன் எல்லாம் எனக்கு சொல்லி விட்டான்….”

சுகந்தாவின் உதடுகள் துடித்து கண்கள் கலங்கின. நடுங்கிய அவளது கைகளை சுசானா ஆறுதலாகப் பிடித்துக் கொண்டாள்.

“அப்பா அம்மாவை நினைத்தால் தான்…..” சொல்லி முடிக்க முடியாது திக்கித்தபடி தவித்தவள், “நோ… நோ… என்னாலை எதுவும் சொல்ல முடியாது”உறுதியாகச் சொல்லி விட்டு குனிந்த தலைநிமிராமல் தனது கோப்பிக் கிண்ணத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“நீ இப்படியே அழுது கொண்டிருந்து விட்டு அப்பா அம்மா கொண்டுவாற ஒரு எஞ்சியினரை அல்லது டொக்டரைக் கட்டிக் கொண்டு இரு… இப்படி ஒருத்தன் எனக்கு கிடைத்திருந்தால் இத்தருணம் அவனுடன் எனக்கு முதலிரவு முடிந்திருக்கும்”

சுசானாவை சுட்டெரிப்பது போல சுகந்தா பார்த்தாள்.

“வேண்டாமடி… உன்ரை ரோமியோ எனக்கு வேண்டாம்… எனக்கும் ஒரு ஹம்லட் கிடைப்பான்” என்ற வாறு எழுந்து செல்ல நினைத்தவளை சுகந்தாவின் கைகள் இறுக்கமாகப் பற்ற மீண்டும அவளை அரவணைத்த படியே இருந்தாள் – கன்னங்கள் வழியே கண்ணீர் ஓட.

***

சுகந்தாவுக்கும் அவனுக்கும் இடையேயான தாச்சி மறிப்பு அடுத்த விடுமுறைவரை தொடர்ந்து கொண்டே யிருந்தது.

இவளால் மறுக்கவும் முடியாது ஏற்கவும் முடியாது இருந்தது.

அலைகள் எழுந்தும் தாழ்ந்தும் கொண்டேயிருந்தன. அவன் அவளை முழுமையாக ஏற்றுக் கொண்ட விதமாகவே அவளுடன் பேசியும் பழகிக் கொண்டும் இருந்தான்.

பொதுச் சமையறையில் சுகந்தாவும் சுகானாவும் சமைப்பதை எடுத்து சுவைப்பதும் தான் சமைப்பதை இவர்களுக்கு இடைக்கிடை பரிமாறுவது மாக நடந்து கொண்டே இருந்தான்.

நாளாக நாளாக சுகந்தாவின் கைகள் அவளையும் அறியாமல் ஒரு அரைச்சிறங்கை அரிசியை அதிகமாகவே பாத்திரத்தில் போடத்தொடங்கியது.

கண்களும் அவனைச் சாப்பாட்டு வேளையில் தேடத்தொடங்கியது.

சுசானா விளையாட்டாக “ஏன் அதிகமாக சமைத்திருக்கிறாய்” எனக் கேட்பதும்… “நாளைக்குமாய் சேர்த்து சமைத்தேன் ” என சமாளிப்பதும்… சுசானா உதட்டினுள் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதாயும் நாட்கள் ஓடிக் கொண்டு இருந்தது.

முதலாம் ஆண்டு வின்ரர் விடுமுறைக்கு அனை வரும் கிறிஸ்மஸ் லீவு நெருங்கிக் கொண்டு இருந்த பொழுது “அவளின் சம்மதம் எனக்கு இந்த வருட கிறிஸ் மஸ் பரிசாக கிடைக்குமா” என சுசானாவிடம் கேட்டான்.

அன்னம் தூது வந்து தமயந்தியின் தோளில் உட்கார்ந்து கொண்டது.

அன்றிரவு முழுக்க சுகந்தா தூங்கவேயில்லை. அவளது கனவில் அலைகள் எழுந்தும் தாழ்ந்தும் வந்து கொண்டேயிருந்தன.

பெரிய இராட்சதக் கப்பலில் தகப்பன் – தாய் – அண்ணன் – தம்பி – அக்கா சித்தப்பா பெரியப்பா- சின்ன மாமா பெரிய மாமா அனைவரும்..

அந்த இளைஞன் சிறிய துடுப்புபடகில்…

இவள் கரையில் கதறியபடி…

நடுநிசியில் திடுக்கிட்டு எழும்பியவளின் தேகமெல்லாம் வியர்த்திருந்தது.

மிகுதி இரவு தூக்கமில்லாத இரவாக கழிந்தது. அடுத்தநாள் காலையில் தத்தம் நகரங்களுக்கு செல்வதற்கு புகையிரநிலையத்தில் சுகந்தாவும் சுசானாவும் காத்திருந்த பொழுது அவன் சின்ன 2 பாசல்களுடன் வந்து “ஹப்பி கிறிஸ்மஸ்” என்றபடியே இவர்களிடம் நீட்டினான்.

தயங்கியபடியே சுகந்தா பெற்றுக் கொண்டாள். “எனக்கு ஒன்றுமில்லையா?” சிரிந்தபடியே கேட்டான்.

“சிலவேளை புதுவருடப் பரிசு கிடைக்கலாம்” என அர்த்தம் புரிய இருவரையும் பார்த்தபடி சுசானா சொன்னாள்.

சுகந்தா மெதுவாக தலையை நிமிர்ந்து பார்க்க தூரத்தில் புகையிரதம் வந்து கொண்டிருந்தது.

அவன் தன் தலையைக் கோர்த்தபடி, தன் வாயில் ஒரு சிகரட்டை எடுத்து வைக்கும் பொழுது, ” சிகரட் பெட்டியில் ‘உடலுக்கு தீமை பயக்கும்’ என்று எழுதியிருப்பதை பார்ப்பதில்லையா” என மெதுவாக கேட்டாள்.

புகையிரதம் கிட்டவந்த பொழுது வாயில் இருந்த சிகரட்டையும் பொக்கற்றில் இருந்த சிகரட் பெட்டியையும் தண்டவாளத்தில் போட்டான்.

“ஏன் வீணாக எறிந்தனீங்கள். காசுக்கு வேண்டியதுகளை முடிச்ச பிறகு பிறகு புகைக்காமல் விடலாம்தானே”

“நான் எந்த முடிவையும் சரி என்றால் அப்போதே எடுத்திடுவன்”

எதற்காக சொன்னவன் என்பது சுசானாக்கும் தெரியும் சுகந்தாவுக்கும் தெரியும்.

புகை கக்காத அந்த மின்சார புகையிரத்தில் மனப்புகைச்சலுடன் சுகந்தாவின் பயணம் தொடர்ந்தது.

***

கிறிஸ்மஸ் தினத்தின் ஒரு நாள் மாலைப் பொழுதில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த பொழுது பக்கத்து வீட்டு கனகம் மாமியின் மகள் ஒரு டெனிஸ்காரரைக் கட்டி விட்டு விட்டு ஒரு வருடத்தின் பின்பு வந்து விட்டாள் என்ற கதை வந்த பொழுது சுகந்தாவின் கைகள் நடுங்கி சீட்டைத் தவறவிட்டு விட்டன.

“கனகம் மாமியின் மகளின்டை கதை சொல்ல நீ ஏன் நடுங்கிறாய்” என தமக்கையார் கேட்க, கடந்த ஆறு மாதமாக அவளை தடுமாற வைத்துக் கொண்டிருந்த சீட்டை எடுத்து மேசையில் போட்டாள்.

அவ்வளவு தான்!

பாலன் பிறப்பு சிலுவையில் கழுவேற்றமாக மாறியது.

ஆளுக்காள் தங்கள் தங்கள் நியாயங்கள்.. அறிவுரைகள்… கவலைகள்…. மிரட்டல்கள் என அத்தனையும் வந்து விழுந்து கொண்டிருந்தது.

“இப்ப உன்ரை முடிவைச் சொல்லவா வந்தனி”

“எல்லாம் முடிஞ்சுதா… மிச்ச மீதி ஏதும் இருக்கா”

“இதுக்காகத்தானா உன்னை படிக்க வைச்சனாங்கள்”

ஆளுக்காள் விளாசிக் கொண்டிருக்க மூத்த மருமகன், “இப்ப ஏதும் நடக்கேல்லை என்று சுகந்தா சொல்லுறாள்… ஏன் அவளுக்கு ஒரு 3 வருட தவணை கொடுத்துப் பார்க்க கூடாது. அந்த நேரம் அவளின்ரை படிப்பும் முடிஞ்சிடும். இந்தக் காதலும் உண்மை எண்டால் பிறகு செய்து கொடுக்கிறதைப் பற்றி பிறகு யோசிக்கலாம்”, என சொல்லி முடிக்க முதல்…

“ஓம்… ஒரு வருசத்துக்கிடையிலை தான் ஒருவனைப் பிடிச்சிட்டன் என்று சொல்லுறவள் 3 வருசத்துக்கிடையிலை இரண்டு பிள்ளைகளோடை வந்து இறங்குவள்….அதைத் தூக்கி பேரப்பிள்ளை என்று கொஞ்ச சொல்லுறிங்களோ மாப்பிள்ளை” தகப்பன் மருமகனின் ஆலோசனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

“குளிசைகள் ஒழுங்காய்ப் போடுறளா இல்லை யூனிவேசிற்றி கொஸ்பிற்றலிலை அடிக்கடி வயிற்றைக் கழுவுறாளா” என்று கேளுங்கோ குசினியுள் நின்று தலை தலையாய் தாய் அடித்தபடி கடைசியாக தாய் கேட்ட கேள்வி அவளைத் தூக்கி தலைகீழாக அடித்தது.

அவள் கல்லாய் சமைந்து போனாள். இத்தனை நாட்களாக சின்னதாயும் பெரிதாயும் எழுந்து வந்த அலைகள் எல்லாம் அமைதியாக கீழிறங்கிக் கொண்டு இருந்தன.

“என்ன எதுவும் சொல்லாமல் எழுந்து போறாய்?”

“என்ன சொல்ல வேணும் என்று எதிர்பார்க்கிறி யள்… 26 வருசம் நீங்கள் வளர்ந்த பிள்ளையை… அதுவும் எதுவும் நடக்காமலே இருக்க பெத்த பிள்ளையை ஒரு வேசி என்றளவிலை கேள்வியள் கேட்கிறியள்… நான் அவனை விட்டுட்டன் என்று ஒரு பொய் சொல்ல வேணும்… நீங்கள் கைகாட்டுற ஒருத்தனை கை பிடிச்சுக் கொண்டு அக்கினியை வலம் வர வேணும் என்று எதிர்பார்க்கிறியளா” என்றவாறு தனது அறைக்குள் போய் அறைக்கதவை இறுக்க சாத்திக் கொண்டாள்.

***

அடுத்த நாள் அதிகாலையில் சுசானா வீட்டிக் கதவை சுகந்தா தட்டிய பொழுது சுசானா அதிர்ந்து போனாள் – இரவு முழுக்க நித்திரையில்லாத வீங்கிய அவள் முகத்தைப் பார்த்த பொழுது.

புறப்படும் பொழுது தாய் கேட்டார், “திரும்பி வருவியா… அல்லது இதோடை சரியா… நாங்கள் எல்லாம் தற்கொலை செய்யுறதா” என்று.

“ஒருத்தனை விரும்புறனா இல்லாயா என நானே தடுமாறி உங்களோடை கதைக்க வந்த எனக்கு எல்லாப் பட்டமும் சுமத்தின நீங்கள் ஒரு நாளும் தற்கொலை செய்ய மாட்டியள். திரும்பி வந்தாள் கண்டு கொள்ளுங்கள். இல்லாட்டி என்ரை பிள்ளைக்கு சீதனம் சேர்த்து வைச்சிறன்…வைச்சிருக்கிறன் என்று அப்பா அடிக்கடி சொல்லுவாரே… அதனை மற்றச் சகோதரங்களுக்கு கொடுங்கோ…”

சுகந்தா வீட்டில் நடந்த அனைத்தையும் கேட்டு சுசானா ஆத்திரத்தில் துடித்துப் போனாள்.

“நீங்கள் எல்லாரும் இங்கை வந்து 30 வருசம் ஆகி உன்ரை சகோதரங்கள் எல்லாம் நல்லாய் படிச்சு… இதுக்குப் பிறகும் காட்டேறி சனங்கள் போல நடக்கி னமா? பிறகும் ஏன் இப்பவும் உங்கள் பிள்ளையளுக்கு பேச்சுப் போட்டியள் வைச்சுக் கொண்டு உங்களையும் அதுகளையும் ஏமாத்திக் கொண்டு இருக்கிறியள்?

சுசானா மிகவும் ஆவேசமாக தனது அறைக்கு சென்று தனது சின்ன வயது புத்தக அலுமாரியில் இருந்த ஆத்திசூடியையும் பாரதியார் பாப்பா பாடல்களையும் எடுத்து வந்து வீசியெறிந்தாள்.

சுகந்தாவின் காலடியில் அவை பரவிக் கிடந்தன. பின் சுசானா வேகம் குறைந்தவளாக சுகந்தா விடம் வந்து அவளை ஆதரவாக கட்டிப் பிடித்தாள்.

சிறிது நேர மௌனத்திற்கு பின் சுகந்தா பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள்.

– மாசி 2019, ஜீவநதி, 12ஆவது ஆண்டு மலர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *