அரண்மனை நாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 3,147 
 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பார்க்குப் பக்கத்தில் நின்றுகொண்டு யாரோ இம்சை செய்வது போலிருந்தது. புரண்டு படுக்கையில் நெஞ்சைப் பிறாண்டுவது போல் சத்தம் கேட்டது. தூக்கக் கலக்கத்தில் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தான். எதுவும் தட்டுப்படவில்லை. தூக்கம் கலைந்து கொண்டே வந்தது. 

எழுந்து பாயில் அரைகுறையாய்ச் சப்பளம் போட்டு உட்கார்ந்தான். திண்ணையைச் சுற்றி இருட்டா யிருந்தது. பட்டியல் கதவைத் தாண்டித் தெரு கண்ணுக்குத் தெரியவில்லை. ஒரு நிமிடம் கழித்துத் தூக்கத்தில் கேட்ட சத்தம் வாசலிலிருந்து மறுபடி வந்தது. பிறாண்டல் சத்தம் கூடவே ஈனஸ்வரத்தில் முனகல். 

தலையணையடியிலிருந்து தீப்பெட்டியை எடுத்து ஒரு குச்சியில் வெளிச்சத்தைக் கொண்டு வந்து பட்டியலைத் திறந்து பார்த்தான். அதிசயமாயிருந்தது. வாசலில் அரண்மனை நாய் பரிதாபமாய் முனகிக் கொண்டும் பிறாண்டிக்கொண்டும் கிடந்தது. உள்ளே போய் சிம்னி விளக்கை ஏற்றி எடுத்துக்கொண்டு வந்தான். முனகலும் அரற்றலும் கண் நிறைய நீருமாய் வாயோரம் மண் அப்பிப் படுமோசமாய்க் கிடந்தது. 

கொஞ்சம் தள்ளி சாலையில் இன்னும் ஜனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள். சாயங்காலம் ஏழு மணிக்கு மஹாராஜாவின் உடலை அடக்கம் செய்து விட்டுக் கிளம்பிய ஜனம் இன்னும் கிராமங்களுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. மஹாரஜாவின் உடம்பை ஒருநாள் பூராவும் அரண்மனையில் வைத்திருந்தார்கள். இவன் ஒரு முழத்தில் மாலை வாங்கிக்கொண்டு வரிசையில் போன போது இந்த நாய் ஒடுங்கிப் போய் அழுதுகொண்டு காலடியில் கிடந்தது. இவனைப் பார்த்தபோது லேசாய் வால் ஆடியதாக ஒரு சின்ன ஞாபகம். 

அரண்மனை வாசல் தாண்டி சாலைக்கு சமீபமாய் மஹாராஜாவிற்குச் சொந்தமான ஒரு இடம் சும்மா கிடந்தது. நாற்பது வயது வரை என்னென்னவோ பிழைப்புப் பிழைத்துவிட்டு ஒரு கதியும் இல்லாமல் கிடந்தான் இவன். அப்பா அரண்மனையில் சேவகம் செய்ததும் அரண்மனைக்குச் சொந்தமான அந்த இடம் சும்மா கிடப்பதும் சேர்ந்து ஒருநாள் காலையில் ஞாபகத்திற்கு வந்தது. 

அன்று மஹாராஜா சென்னையிலிருந்து வந்திருந்தார். கூடம் மாடம் மதில்கள் விதானமெல்லாம் காரை பெயர்ந்து கிடந்தன. பழைய குதிரை லாயம் நொறுங்கித் தூள்களாய்த் தெரிந்தது. மேற்சுவர்களில் ஆலஞ்செடிகள் வேர்விட்டுச் செழித்து அரண்மனையை அலங்கோலமாய்ப் பிளந்து கொண்டிருந்தன . உள்ளே சபாமண்டபத்திற்கு மேல் நூலாம் படை கருநிறத்திற்கு வந்து கொடி ஊசலாடியது. மூன்றாங்கட்டில் சுவரோரமாய்க் கிடந்த பல்லக்கு அழுக்கு மூடி செல்லரித்துக் கிடந்தது. 

ஐந்தாங்கட்டில் மஹாராஜா பழைய சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தார். ஊர்ப் பெரியவர்கள் அட்ரஸ் இல்லாமற்போன நாலைந்து பேர் தரையில் உட்கார்ந்து மஹாராஜாவிடம் கதையளந்து கொண்டிருந்தார்கள். உட்கார்ந்திருந்த எல்லோரும் டீக்கடையில் கடன் சொல்லித் திட்டு வாங்கும் ஆட்கள். 

மஹாராஜாவிற்குப் பெரிய மீசை. கனமானஉடம்பு. பூப்போட்ட ஜிப்பாவிற்கு மேல் கழுத்திலிருந்து வயிறுவரை தொங்கும் ஒரு பெரிய தங்கச்சங்கிலியும் உள்ளங்கை அகலத்தில் ஒரு பதக்கமும் அசைந்து கொண்டிருந்தது. காலடியில் இந்த நாய். இவனைக் கண்டதும் அது எழுந்த வேகமும் குரைத்த சத்தமும் இப்போது னைக்கையில்: உச்சியில் சுள்ளென்று தெறிக்கிறது 

அகல நீளத்தில் அரைமாடு, பாய்ச்சல் பார்க்கையில் புலி, சுறுசுறுவென்று மான் – மஹாராஜா சைகை காட்டியதும் விசுவாசம் மேலோங்க அடங்கி ஒடுங்கிய நேரத்தில் தான் நாய். 

மஹாராஜாவுக்கு வாரிசு இல்லை. சென்னையில் தனியாக வாழ்ந்தார். எப்போதாவது ஊருக்கு வந்து சொத்துகளை விற்றுப் பணத்தோடு போவார். அவர் வரும்போது நாய் மட்டும் துணையாக வரும். 

அரண்மனைக்கு வெளியே ஒரு சின்னப் பெட்டிக் கடை வைத்துக்கொள்ள மஹாராஜா சம்மதம் தந்தார். இந்த இரண்டு வருஷத்தில் ஒரே ஒரு முறை மஹாராஜா வந்தார். அவர் அரண்மனையில் தங்கியிருந்த பத்து நாளும் அரண்மனைச் சேவகன் காலையில் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு நாயோடு இரண்டு மைல் ஒடுவான். 

கடையைத் தாண்டி நாய் ஒடும் போது ராஜகளை நாலா புறமும் சிந்தும். அரண்மனை தனக்கு வாழ்வு கொடுத்த நன்றியில் ஒரு நாள் ஒட்டம் முடிந்து நாய் திரும்பி வருகையில் ஜாடிகளிலிருந்து இரண்டு ஸாரைகள் இரண்டு பிஸ்கட்களை எடுத்தான். தாரிலிந்து இரண்டு பழங்களைப் பிய்த்தான். ஒரு தட்டில் வைத்து நாய்க்கு முன்னால் நீட்டினான். 

அரண்மனைச் சேவகன் கத்தினான். ‘பொறை திங்கிற நாயா இது தள்ளுப்பா’ தட்டைப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்து பயங்கரமாய்க் குரைத்தது, பாய வந்ததைச் சேவகன் இழுத்துப் பிடித்து நிறுத்தி விட்டான். 

சிம்னி விளக்கைத் தூக்கிப் பார்த்தான். நாயின் கண் நிறையக் கண்ணீர். தலையைக் கூடத் தூக்க முடியவில்லை, ம்ஹாராஜா இறந்த சோகத்தில் இப்படிச் கிடக்கிறது என்று முதலில் நினைத்தான். முக்கலும் முனகலும் பிறாண்டலும் ஒரு தினுசிலிருக்கவே ‘பசியாயிருக்குமோ’ என்று நினைத்தான். 

உள்ளே போய் மனைவியை எழுப்பிக் கூட்டி வந்து காட்டினான். 

“அநியாயமாவுல இருக்கு” என்றாள் நாயைப் பார்த்துவிட்டு. ‘அரண்மனையிலிருந்து வந்ததைச் சொல்கிறாளா’ பரிதாபமாய்க் கிடப்பதைச் சொல்கிறாளா என்று அவனுக்குப் புரியவில்லை. பெண்ணின் சொல்லுக்குச் சரியான அர்த்தம் சொன்ன ஆண் உலகத்திலில்லை என்று அவன் தகப்பன் அடிக்கடி சொல்லியிருக்கிறான். அரண்மனைப் பழக்கங்களினால் பெரிய பேச்சு பேசத் தெரிந்தவன் தகப்பன். ”பசியாயிருக்குமோ” என்றான் விலகி நின்ற மனைவியிடம். வெளிச்சம் இருந்தாலே அவள் முகத்தைப் பார்த்து என்ன நினைக்கிறாள் என்று அறிய முடியாது, இருட்டுவேறு. சற்று நேரம் நாயைப் பார்த்துக் கொண்டே நின்றவள் சொன்னாள். “நடு ராத்திரி யிலே நல்ல கூத்து”. 

வீட்டிற்குள் போகத் திரும்பினாள். சிம்னியோடு இவ னும் பின்னாலேயே போனான். தண்ணீர் ஊற்றிய சோற்றைப் பிழிந்து ஒரு சட்டியில் போட்டாள். சுண்ட வைத்திருந்த கருவாட்டுக் குழம்பை ஊற்றிப் பிசைத்தாள். வாசலில் கொண்டுவந்து நாய்க்கு முன்னால் வைத்தாள். 

நாய் மெல்ல எழுந்து மோப்பம் பிடித்தது. சற்று யோசித்தது. திணறியது. அப்புறம் நாக்கை நீட்டித் தின்ன ஆரம்பித்தது. சோற்றுக்கு முன்னால் நீளமாய் ஓடிவந்த நாக்கைப் பார்க்கையில் அதுதான் நாய்க்குக் கைபோல இருந்தது. 

ஒரு பருக்கை பாக்கியில்லை. குண்டாவில் தண்ணீர் கொண்டு வந்து வைத்தான். தின்று குடித்தது உடம்பை நெளித்துக்கொண்டு இவன் காலடியில் நின்று வாலை ஆட்டியது. காலைச் சுற்றிச்சுற்றி வந்தது. வால் ஆடிக்கொண்டே இருந்தது. உள்ளே ஒரு பிள்ளை தூக்கத்தில் அழுத சத்தம் கேட்டு மனைவி வீட்டிற்குள் போனாள். 

திண்ணைமேல் சிம்னியை வைத்து வாசல்படியில் உட் கார்ந்தான். ஆச்சரியமாய் இருந்தது. மறுபடி மறுபடி நாயைப் பார்த்தான். அரண்மனை நாய் பெட்டிக் கடைக்காரன் காலைச் சுற்றி வந்து வாலை ஆட்டுவ தாவது. நம்பமுடியவில்லை. அடுத்து என்ன செய்வ தென்றும் தெரியவில்லை. ‘விடியட்டும் பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டான். 

ராத்திரிப் பொழுதுக்கு’ நாயை எங்கே விடுவதென்ற யோசனை வந்தது. வெளியே படுக்கவைக்க மன சில்லை. நாயை வீட்டிற்குள் படுக்கவிட என்னவோ போலிருந்தது. நினைத்தபடியும் செய்துவிட முடியாது. ஆயிரம் பேச்சுப் பேச அவள் ஒருத்தி இருக்கிறாள். யோசிக்க யோசிக்க சிக்கல் மேல் சிக்கலாய் விழுந்து கொண்டிருந்தது. எரிச்சல் வந்து நினைத்தான். அரண்மனையிலிருந்து ராத்திரி வேளைகளில் மஹாராஜா வைப்பாட்டிகளுக்கு வைரத்தையும் வைடூரியத்தையும் கொடுத்தார். எனக்கு இந்நேரத்தில் அரண்மனையிலிருந்து ஒரு நாயா வரவேண்டும். 

கடைசியில் கதவைத் திறந்து திண்ணையில் படுக்க விட்டான். நாய்க்கு அது பிடிக்கவில்லை. சுகமாக  அவன் பாயில்’ அவனுக்குப் பக்கத்தில் படுக்க வந்தது என்ன இருந்தாலும் நாய். கூச்சமும் அருவருப்புமா யிருந்தது. ராத்திரி ஒரு பொட்டுத் தூக்கமில்லை. காலையில எழுந்ததும் நாயை சொடக்குப் போட்டுக் கூ கூட்டிக் கொண்டே அரண்மனைக்கு நடந்தான். காரியஸ்தர் பழைய ரிக்கார்டுகளைக் கிளறிக்கொண் டிருந்தார்; நாய் ராத்திரி பசியோடு வீட்டிற்கு வந்ததைச் சொன்னான். கிளறுவதை நிறுத்திவிட்டுக் காரியஸ்தர் இவனை வெற்றுப் பார்வையாய்ப் பார்த்தார். 

“இந்த நாயை ஒப்புக்கிறாங்க” என்றான். 

காரியஸ்தர் அதே வெற்றுப் பார்வையோடு நாயை ஒருமுறை பார்த்தார். அது இவன் காலைச்சுற்றி வந்து வாலை ஆட்டியது. 

“இதைக்கட்டி தெனம் அம்பது ரூபாய் செலவழிக்க மஹாராஜா இல்லையேப்பா. ஒங்கிட்டப் பிரியமா வந்திருச்சு. மஹாராஜா கொடுத்ததுன்னு நீயே வச்சுக்க”  என்று சொல்லி விட்டுத் திரும்பிக் கொண்டார். 

ஒன்றுந் தோன்றாமல் வீட்டிற்கு நடந்தான். கூடவே நாயும் காலைச் சுற்றிக்கொண்டும் வாலை ஆட்டிக் கொண்டும் ஓடி வந்தது. 

வாசலுக்கு வந்ததும் நிதானமாய் நின்று வீட்டைப் பார்த்தான். உடைந்த ஓடுகள். பட்டியலடைத்த திண்ணை. உள்ளே கொடியில் பழசும் பட்டையுமாய் ஐந்தாறு துணிமணிகள். பெயிண்ட் உதிர்ந்து அழுக்குப்பட்ட ஒரு டிரங்க் பெட்டி. நாலைந்து எவர்சில்வர் பாத்திரங்களோடு அடுப்படியில் கிடந்த அலுமினியச் சட்டி பானைகள். 

இதைக் காவல் காக்க ராஜ களையோடு தினம் ஐம்பது ரூபாய் செலவில் ஒரு நாயா என்று தனக்குள் கிண்டினான். அப்புறம் அவனுக்கு ஞாபகம் வந்தது. மஹாராஜாக்களும் முதலாளிகளும் காவல்காக்க மட்டுமல்லாமல் பிரியத்திற்காகவும் செல்லத்திற்காகவும் நாய் வளர்க்கிறார்கள். 

‘உள்ள இரண்டு பிள்ளைகளிடமும் பெண்டாட்டியிடமுமே பிரியம் செலுத்தப் பொழுதில்லை.. நாயிடம் பிரியம் காட்ட நாம் என்ன மஹாராஜாவா, முதலாளியா’ என்று நினைத்தான். ஒரே குழப்பமா யிருந்தது. இப்படி இவன் ஒவ்வொன்றாய் நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்கையில் நாய் இவன் காலைச் சுற்றித் துள்ளியது. வாலை ஆட்டியது. 

தூக்கத்திலிருந்து எழுந்த பிள்ளைகள் வாசலில் நாயைப் பார்த்துவிட்டுக் குதியாட்டாம் போட்டன. தொட்டு விளையாடின. தெருஜனங்கள் கூடி விட்டார்கள் நாயைப் பார்ப்பது கூட அவர்களுக்குப் பெரிய ஆச்சரியமில்லை. நாய் இவன் காலைச்சுற்றித் துள்ளுவதும் இவனுக்காக வாலை ஆட்டுவதும் இவன் சொற்படி கேட்பதும் தான் அவர்களுக்கு அதிசயம். 

அரண்மனை நாய் வீட்டிற்கு வந்ததில் வீடே அரண்மனையாகி விட்டதாகப் பிள்ளைகள் கும்மாளம் போட்டன. இவன் நாயைப் பார்த்தான். இந்த ஊரிலேயே இவ்வளவு அழகான மனுஷன் கூட இல்லை!. ராஜோபச்சாரத்தில் வந்த மினுமினுப்பு. பார்க்கும்போதே கழுத்தைத் தடவிக் கொடுக்க வேண்டும் போலிருந்தது. இவ்வளவு ஜனம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நாய் இவன் காலைச்சுற்றித் துள்ளியது. வாலை ஆட்டியது. 

பார்த்துக் கொண்டேயிருந்தான். ஜனங்களை, தன் பிள்ளைகளை, அன்பான நாயை. மஹாராஜாவிற் காக ஆடிய வால் தனக்காக ஆடுவதைப் பார்த்ததும் எட்டாத உயரத்திற்குப் போவது, போலிருந்தது. மெல்ல மெல்ல உற்சாகம் வந்தது. 

நாயைப் பிள்ளைகளோடு விளையாட விட்டு உள்ளே போனான். பெட்டிக் கடைக்கு மொத்த சாமான் வாங்க வைத்திருந்த பணத்தில் பத்து ரூபாயை எடுத்து கொண்டுபோய் மாட்டிறைச்சி வாங்கினான். அரண்மனைச் சமையற்காரனைக் கண்டு பேசி நாய்க்கு எப்படி சமைத்துப் போடுவது என்று கேட்டு வந்தான். 

டவுனுக்குப் போய் மெல்லிய சங்கிலி, நாய்க்குப் போடும் சோப்பு, நாய் சாப்பிடும் பிஸ்கட் எல்லாம் வாங்கி வந்தான். மொத்த சாமான் வாங்க வைத்திருந்த பணம் எல்லாவற்றையும் காலி செய்து முடித்தான். தெருப்பூராவும் நாயைப் பார்க்கவும் இவன் நாய்க்குப் பணிவிடை செய்வதைப் பார்க்கவும் கூடிக்கூடிக் கலைந்து கொண்டிருந்தது. 

அன்று நாய் வேலைகள் முடிந்து கடை திறக்க மதியமாகி விட்டது. பலபேர் பார்க்க நாயோடு கடைக்கு நடந்தான். பெட்டிக்கடை நிழலில் கட்டிப் போட்டான். கடைக்கு முன்னால் நாய் பார்த்த கூட்டத்தை விலக்கி சாமான் வாங்கும் ஆட்கள் இவனை நெருங்க வேண்டியதாயிற்று. 

சாயங்காலத்தில் முக்கிய பீடி சிகரெட் கடையில் தீர்ந்துவிட்டது. அன்று கரலையில் மொத்தமாய் வாங்கி யிருந்திருக்க வேண்டியவை. இரவு கல்லாக் கட்டிய போது எப்போதையும்விட கால்வாசிதான் வியாபாரம் ஆகியிருந்தது. 

கடை மூடி வீட்டிற்கு வரும்போது அவள் வாசலில் நின்றாள். இவனைப் பார்த்து முறைத்தாள். நாயைப் பார்த்து காறித் துப்பிவிட்டு உள்ளே போனாள். 

நாளாக ஆகக் கடையில் மேலும் மேலும் சாமான்கள். குறைந்து கொண்டே வந்தன. சில சாமான்கள் சுத்தமாக இல்லை, வீட்டில் அவள் தொடர்ந்து காறித் துப்புவதும் கரித்துக் கொட்டுவதுமாயிருந்தாள். அரைகுறை வருமானத்தையும் நாய் மாட்டுக்கறியாகவும் பிஸ்கட்டாகவும் அரைத்துத் தின்று கொண்டிருந்தது. 

சில நேரங்களில் பெண்டாட்டியை நினைத்தும் வியாபாரத்தை நினைத்தும் வாழ்க்கையை நினைத்ததும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பான்: அந்த நேரங்களில் அவன் முகம் பார்த்துக் காலடியில் பொசுக்கென்று ஒடுங்கிக் கிடக்கும் நாய். அவன் சிரிக்கையில் காலைச் சுற்றித் துள்ளி ஓடி வாலை ஆட்டும். 

அவனுக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து அம்மா அப்பா பின்னால் பெண்டாட்டி பிள்ளை யாரும் இப்படி மனமறிந்து முகமறிந்து நடந்து கொள்ளவில்லை. இந்த வாயில்லா ஜீவன் இவ்வளவு காலத்திற்குப்பின் அவர்கள் காட்டியிருக்க வேண்டிய அன்பை எல்லாம் சேர்த்துக் கொட்டிக் கொண்டிருப்பதாக நினைத்தான். 

வரவரக் கடை வியாபாரம் படுத்துக்கொண்டே வந்தது. பழைய கைலியோடும் கசங்கிய சட்டை யோடும் இவன் எலும்பும் தோலுமாய் கொழுத்துப் போய் திமிறி ஓடும் நாயின் கழுத்துச் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு சாலையில் நடந்து செல்வதைப் பார்த்து ரொம்பப் பேர் இரக்கப்பட்டார்கள். 

இவன் தூங்கிக் கொண்டிருந்தபோது நடுராத்திரிகளில் இரண்டு தடவை நாயை வெளியே விரட்டிக் கதவைப் பூட்டினாள் மனனவி. விடிந்து இரண்டு தடவையும் அவளைக் கைநீட்டி அடித்துக் கலகம் பண்ணினான் இவன். 

ஒரு மாதமாகியபோது கடையைப் பேருக்குத் திறத்கிறாற்போல் இவனுக்குத் தோன்றியது. கடைக்கு வருவதென்பது அவளோடு சண்டை போடாம லிருப்பதற்கும் நாய் நடக்கப் பின்னால் சங்கிலி பிடித்து நடக்கும் சந்தோஷத்தை அனுபவிக்கக் தானென்றாகி விட்டது. 

அன்று பிஸ்கட் வாங்க சுத்தமாய்ப் பணமில்லை. மாட்டிறைச்சி வாங்கிப் போட்டு ஒரு வாரமாகி விட்டது – அவள் ஒரு பக்கம் நாய்க்கு விஷம் வைத்துக் கொல்லப் போவதாய்க் காலையில் மிரட்டி விட்டாள். அரை வயிற்றுக்குக்கூட சோறுபோட முடியவில்லை. 

நாய் மெலிந்தது போலிருந்தது. முகத்தில் வாட்டம் வந்து கொண்டிருந்தது. ரொம்பக் கவலையாய் சாலையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். 

ஒரு மாருதி கார் வேகமாய்ப் போனது ரிவர்ஸில் வந்து கடை முன்னால் நின்றது. பாலிஸ்டர் வேஷ்டியும் ஜில்லென்று வெள்ளைச் சட்டையுமாய் நடுவயதில் ஒருவர் இறங்கி வந்தார். டிரைவர் ஓடி முன்னால் வந்தான். 

டிரைவர் அவசரமாய் இவனிடம் பேசஆரம்பித்ததை அவர் கை ஜாடையால் தடுத்து விட்டு, “ஒரு சோடா உடைப்பா” என்றார். 

இவன் சோடாவை உடைத்துக் கொடுத்தான். சோடாவை வாங்கிக் கொண்டே இவனை முழுவதுமாய்ப் பார்த்து முடித்துவிட்டார். அப்புறம் குடித்துக்கொண்டே ஓரத்தில் கிடந்த நாயை ஆழ்ந்து பார்த்தார். 

“இந்த நாய்க்கு என்ன பேரு?” என்றார். 

நாயென்றால் பேர் வைத்துக் கூப்பிட வேண்டுமென்பது கூடத் தெரியவில்லையே. அரண்மனையில் கூப்பிட்ட பேரையும் என்னவென்று கேட்டு வைத்துக் கொள்ளவில்லையே என்று கூசி நிற்கையில் –  

“ஒடிவந்ததா?” என்றார். 

“ஆமா” என்றான் 

”எங்கேருந்து?” 

“அரண்மனையிலிருந்து” 

‘”என்ன குடுக்குறெ தெனமும்” 

“மாட்டிறைச்சி. நாய் பிஸ்கட்” 

“இதெல்லாம் போட்டு எவ்வளவு நாளாச்சு?” 

“ஏன் அப்படிக் கேக்கறீங்க?” 

“ரொம்ப எளைச்சிருச்சே”

டிரைவர் பழைய அவசரத்தோடு இவனிடம் பேசினான். 

“இதெல்லாம் ஒனக்குக் கட்டுபடி ஆகுமா? நாயைப் பாத்துட்டுத்தான் எறங்கினோம். என்ன வெலை கேக்கிறியோ கேளு” 

உச்சந்தலையில் ஒங்கி அடித்தது போலிருந்தது இவனுக்கு. மயக்கமாய் வந்தது. எச்சலைக் கூட்டி விழுங்கினான். குனிந்து பானையிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரை அள்ளிக் குடித்தான். கடையிலிருந்து வெளியே குதித்து நாயிடம் வந்தான். அதற்கு லேசாய்ப் புரிந்திருக்க வேண்டும். எழுந்து வாலை ஆட்டியது. 

வாலாடுவது வந்த ஆளுக்கா தனக்கா என்று புரியாமல் நின்றான்.

– பூவுக்குக் கீழே (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 1987, அன்னம் (பி) லிட், சிவகங்கை.

கந்தர்வன் கந்தர்வன் (க.நாகலிங்கம்) (பெப்ரவரி 3,1944-ஏப்ரல் 22,2004) தமிழ் எழுத்தாளர், முற்போக்கு இலக்கிய அழகியலை சார்ந்து எழுதியவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யுடன் தொடர்புகொண்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்தார். தொழிற்சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். கந்தர்வனின் முதல் சிறுகதை 'சனிப்பிணம்' 1970 -ல் தாமரையில் வெளிவந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் பணியாற்றினார். கண்ணதாசன் இதழில்இலக்கிய விமரிசனங்கள்,சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். தாமரை, சுபமங்களா, சிகரம், செம்மலர், ஆனந்த விகடன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *