அம்மா எப்போ வருவாங்க?
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 2,226
(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஜெனிஃபர் என்னைக் கடந்த ஒரு மாதமாக விடாது கேட்கும் கேள்வி இதுதான், “அம்மா எப்போ வருவாங்கப்பா?” எனக்கு எனது மூளை வேலை செய்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.
ஆமாம் என் என் மனைவி மேரி என்னருகில் என்னருகில் இல்லாத துயரம் என்னை அரித்தெடுத்தாலும் அதைவிட அதிகமாக என் மகள் அரிப்பதை என்னால் பொறுக்க இயலவில்லை. அந்தக் குழந்தை மனம் படும்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால் சில நேரம் எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருவதற்கும் அதுவே மூல காரணம்.
என் மேரி எப்போது வருவாள்? இது என்னை அடிக்கடி வட்டமிடும் கேள்வி. வருவாளா? மாட்டாளா? என்பது என் உயிரைத் துடிக்க வைக்கும் அடுத்த கேள்வி.
ஓ… என் மேரி …ஆம்..அவள் என்னைச் சுற்றிவந்த, எனக்குச் சொந்தமாகிய அந்தக் காலத்தை மனத்தில் நினைத்தாலே என்னை அறியாமல் சூழ்நிலையை மறந்து எம்பிக் குதித்துச் சந்தோஷத்தில் ஆடுவேன்.
அன்று ஞாயிற்றுக்கிழமை…மாதா கோவிலில் காலைப் பிரார்த்தனை. சரியான கூட்டம். நானும் சென்றேன், என் நண்பனுடன். பிரார்த்தனையின் உச்சக்கட்ட நேரம். கண்மூடி என் தியானத்தை நான் செய்துகொண்டிருந்தேன். பாதிரியார் மெழுகுவர்த்தியைக் கூட்டத்தின் முன்பு ஒளியைக்காட்டி அனைவரையும் ஆசீர்வதித்தார்.
அப்போது, “மம்மீ” என்று ஒரு குழந்தையின் அலறல் சத்தம். காதில் கேட்டும் கேளாதவனாய் மாதாவிடம் என் கோரிக்கைகளை எடுத்துச் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தேன். நல்ல வேலை, நல்ல வாழ்க்கைத்துணை இரண்டும் எனக்கு வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை. இவையிரண்டும் சரியாக அமைந்துவிட்டால் ஒரு மனிதனுக்குச் சுகம் தருவதற்கு வேறு என்ன வேண்டும்?
சற்று நேரத்தில் கண் விழித்துப் பார்த்த போது என் காலடியில் ஒரு குழந்தை.
ஆங்கில இனத்தவரின் குழந்தை. அழகிய குழந்தை. அதன் தலையைக் கோதிவிட்டபடி ஓர் ஆண் …அல்ல…அல்ல…ஆண் உடை தரித்த, தலைமுடியை ஒட்ட வெட்டியிருந்த பெண், பெண், ஆம்… ராணுவ உடையில் புகுந்துள்ள இளவயதுப் பெண்.
சற்று நேரத்தில் குழந்தையின் தாய் எங்களருகில் வந்து அந்த ஆணுடை தரித்த பெண்ணிடம், “Thank you for your great help” என்று நன்றி பூத்த கண்களை விரித்துக்கூற, ராணுவப் பெண்ணோ சிரித்தபடி, “No mention please. It’s OK” என்று சொல்லியபடி குழந்தையின் ரோஜா இதழொத்த கன்னங்களில், “இச்” சென்று முத்தம் பதித்தாள். இத்தனையையும் நெட்டை மரம் போல் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தேன். வேறு என்ன செய்ய முடியும் என்னால்? செய்ய முடிந்தது அது ஒன்றுதான்.
அந்த ராணுவப்பெண் மெல்ல என்னைப் பார்த்தாள். அவளது மூன்றாம் பிறை நெற்றியில் சிறிய திலகம்!…அட…இவள் இந்தியப் பெண்! இதையே தான் அவளும் என்னைப் பார்த்துப் புரிந்து கொண்டிருப்பாள். அதுவும் ஒரு தமிழன் என்பதை நிச்சயம் புரிந்திருப்பாள். எனது நெற்றியில் கம்பி போல் போல் பதிந்திருந்த திருநீறைப் பார்த்து, பளிச்சென ட்யூப் லைட் போல் சிரித்தாள். “ஹலோ மிஸ்டர், காலடியில் குழந்தை ஓடி வந்து விழுந்ததே! காதில் கேட்கவில்லை? அதை மெல்லத் தூக்கக்கூடாது? மனிதாபிமானமே இல்லாதவரோ?” விகல்பமில்லாமல் கேட்டுவிட்டாள்.
எனக்கு ஒரு பக்கம் வெட்கம்! மறுபக்கம் சிரித்துப்பேசி இப்படிக் கழுத்தறுத்து விட்டாளே, என்று கோபம். எனினும் சமாளித்தபடி, “இல்லாங்க பிரார்த்தனையில் மனம் ஒன்றிப் போயிட்டேன். அதனாலதான். எப்படியிருந்தாலும் தப்புதான்” என்றேன் மென்று விழுங்கியபடி.
“அப்படி என்னடா பெரிய பிரார்த்தனை?” பக்கத்திலிருந்து குமார் கேட்டதும், “சொன்னா சிரிச்சுடாதேடா… நல்ல வேலை…நல்ல மனைவி” என்றேன். இருவருமே சிரித்துவிட்டார்கள். இந்தப் பிரார்த்தனை அவளுக்குப் பிடித்திருந்தது என்று நினைக்கிறேன்.
“எல்லாரும் தன் இஷ்டத்துக்குப் பொண்ணுகளைப் பாத்துப் பழகிப் பின்னால் பாதியில் விடுற இந்தக் காலத்துல இப்படிப்பட்ட ஒருத்தரா? மிஸ்டர் யுவர் ஃபிரெண்ட் ஈஸ் ரியலி கிரேட்” என்றாள் குமாரைப் பார்த்து. எனக்குப் பெண்பிள்ளை போல வெட்கம் வந்துவிட்டது.
“ரொம்ப வெட்கப்படாதீங்க மிஸ்டர்… ஒய்ஃபுக்குக் கொஞ்சம் மிச்சம் வையுங்க” என்றவள்,”என் பேரு மேரி ஏஞ்சல். ஐ ஆம் எ கிறிஸ்டியன். ஆனா இந்தியப்பெண். எங்க அப்பா காலத்துலேயே அமெரிக்கா வந்தாச்சு, இப்போ ஆர்மியில அண்டர் ஆஃபீஸராக இருக்கேன்” என்று தன் மூல விலாசத்தை விடுவிடுவென்று கூறினாள்.
“பிறகென்ன… நானும் என் பெயர் கார்த்திக்’ எனப் பிள்ளையார் சுழி போட்டு என் சுயபுராணத்தைப் பேசினேன். சற்று நேரத்தில் நானும் குமாரும் விடுதிக்குப் போனோம். எங்களுடன் மேரியும் வந்தாள். மூவரும் பேசினோம். அவ்வாறு பேசும்போதே, நானும் அவளும் ஒருவர் இதயத்தில் மற்றவர் புகுந்து விட்டோம்.
இப்படி மெல்ல மெல்ல எங்கள் நட்பு வளர்ந்தது. தினமும் சந்தித்தோம். சந்தித்த போதெல்லாம் மனம் தித்தித்தது. பிரிந்த போதெல்லாம் மனம் பட்டாம்பூச்சியாய்ப் பறந்து பறந்து கனவு கண்டது. ஓ…இதுதான் காதலா? இதற்கிடையில் எனக்கு நல்ல வேலையும் கிடைத்தது. அறிவியல் துறையில் பேராசிரியர் வேலை. படித்த படிப்பு வீணாகவில்லை. பிடித்த உறவும் சோடை போகவில்லை.
ஆம்! ஒரு நல்ல நாளில் பெற்றோர் முன்னிலையில் மேரி ஏஞ்சல் என் இதயத்திலும் இல்லத்திலும் ராணியாக ஆட்சி செய்ய உரிமை பெற்றாள். தினம் தினம் சந்தோஷம்; உல்லாசம். இதில் தனிக்குடித்தனம் வேறு. கேட்கவா வேண்டும்? ஒரே ஒரு கவலையும் உண்டு.
அடிக்கடி ஆர்மி ட்ரெயினிங்கிற்காக வெளியூர் ‘கேம்ப்’ போய் விடுவாள் மேரி. அப்போதெல்லாம் எனக்கு ரொம்பக் கவலையாக இருக்கும். அவள் வந்ததும், “ஏன் மேரி, இப்படி என்னைச் சித்ரவதை பண்றே? பேசாம வேலையை விட்டுடு. கஞ்சி குடித்தாலும் சேந்தே குடிப்போம்!” என்பேன். அவ்வளவுதான்! “ஏங்க நாட்டுக்குச் சேவை செய்யணுங்க. இந்த வாய்ப்பு இந்த ஜென்மத்துல எனக்குத் திரும்பக் கிடைக்காதுங்க. நான் என்ன கொஞ்ச நாள்தானே பிரிஞ்சி இருக்கேன். ஆனா எப்பவும் உங்களையேதான் நினைச்சுகிட்டு இருக்கேன். நீங்க என்ன பொம்பள மாதிரி கவலைப்படறீங்க…?” என்று கேட்பாள். என்ன செய்வது? அமைதியாகி விடுவேன்.
ஆனால் ஒரு மூன்று மாதம் என் மேரி வீட்டிலேயே இருந்தாள். அப்போது எனக்கு இரட்டிப்புச் சந்தோஷம். அப்போதுதான் என் மகள் பிறந்தாள். ஆனால் அவள் மேரியிடம் என்னை நெருங்க விடாமல் பக்கத்திலேயே இருந்தாள். ஆனாலும் தூர இருந்தே என் மேரியை ரசிப்பேன். மெல்ல அவள் தலை வருடி என் பாசத்தை வெளிக்காட்டுவேன். இப்படி என் வாழ்வில் முழுமையாய் இணைந்தாள் மேரி.
மகள் ஜெனிஃபர் இப்போது மூன்றரை வயதுக் குழந்தை. வளைகுடாப் பிரச்சினையைச் சமாளிக்க அமெரிக்கப் படைகள் அங்கு சென்றபோது என் மேரிக்கும் அங்கே போக ஆணை வந்தது. ஆணையைக் கையில் வாங்கிய நாளிலிருந்து இருவரும் அழுதோம். என் மேரி… என் மேரி…நீ போகத்தான் வேண்டுமா? என் மகளுக்குப் புரிந்தும் புரியாத வயதில் எப்படி அம்மா இல்லாமல் அவளைச் சமாளிப்பது? மூளைக்குள் வண்டு ஓடுவதுபோல் ஒரு குழப்பம்.
என்ன செய்வது? எப்படி எல்லாமோ மேரி என்னைத் தேற்றினாள். ஆனால் உள்ளுக்குள் அவளும் அதிகமாக அழுதாள்.
அந்த நாளும் வந்தது. விமான நிலையம் வரை சென்று வழியனுப்பினோம். விழியில் கண்ணீர்க் கடலுடன் ஜெனிஃபர் ஓயாது அழுதாள்.
வீட்டிற்கு வந்தது முதல் “அம்மா எப்போ வருவாங்கப்பா? சொல்லுங்கப்பா” என்று கேட்பாள்; சிணுங்குவாள். என் சட்டை, தலைமுடியைப் பிடித்து இழுப்பாள்.
எனக்கு அந்தப் பிஞ்சு மனத்தின் சோகத்தை நினைத்து அழுகையும், இந்த மேரி இப்படித் தவிக்கவிட்டுப் போய்விட்டாளே! என்று கோபமும் வரும். வெறியில் சில நேரம் அவளை அடித்தும் விடுவேன். ஆனால் என் கைவிரல்கள் பட்ட இடம் சிவந்திருக்கக் கண்டு கண்ணீர் விட்டும் அழுவேன்.
எங்களுக்கு உறவு என்று யாரும் அருகில் இல்லை. ஒரு தாயாய், தாதியாய், வேலைக்காரனாய், தந்தையாய் இப்போது என் மகளுக்கு நான் அவதாரம் எடுத்துள்ளேன். எனக்கு, என் சோகத்தைக் குறைக்க ஒருவருமில்லை, என் மகளைத்தவிர.
எங்கள் வீட்டில் இப்போது செலவேயில்லை. ஒரு மாதத்திற்குச் செலவாகக்கூடிய சமையல், மளிகைப்பொருட்கள் எல்லாம் அப்படியே இருக்கின்றன. மேரி வெகுதூரத்தில் இருப்பதால் எப்போதாவதுதான் தொலைபேசியில் பேசுவாள்; அழுவாள். மூவரும் அழுவோம். தொலைக்காட்சியில் அமெரிக்கப் போர் வீரர்கள் நிலையைக் காட்டுவது கண்டு, என் மேரி எங்காவது தென்படுகிறாளா? என்று தேடுவேன். தொலைக்காட்சி என்னை ஏமாற்றிவிட்டு அடுத்த செய்திக்குத் தாவிவிடும்.
ஜனவரி 17-ஆம் தேதி போர் ஆரம்பித்துவிட்டது என்ற செய்தி கேட்டுத் துடித்தேன். என் உடலை ஆயிரம் ஊசிமுனைகள் ஒரே நேரத்தில் துளைப்பது போல் துடித்தேன்; அழுதேன். என் தெய்வங்களை எல்லாம் அழைத்து அழுதேன். என் மகளோ, “அம்மா எப்போ வருவாங்கப்பா?” என்று கேட்டாள். என்ன சொல்வேன்? கடவுளே! போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ? இப்படித் துடிக்கிறேன்.
“என் மகளைப் பார்…தலைவாராமல் முகம் அலம்பாமல்…அழுக்கு உடலுடன் அழுது அழுது அம்மாவைத் தேடுகிறாள்! அவள் என்ன பாவம் செய்தாள்? எனக்கு மகளாய்ப் பிறந்ததால் இப்படி அவதிப்படுகிறாள். வேறு யாருக்காவது மகளாய்ப் பிறந்திருந்தால் பணத்தில் புரளாவிட்டாலும் பாசத்தில் புரண்டிருப்பாளே! பணம் எதற்கு? பணம் இருந்து நாங்கள் என்ன பயனைக் கண்டோம்? கடவுளே!” என்று என் மகளைக் கட்டிக் கொண்டு கதறிக்கதறி அழுதேன். ஜெனிஃபரும் அழுதாள். நேரம் ஓடியது.
நாள்கள் இப்படியே சோகமாகக் கழிந்தன. என் மேரி மட்டும் என்ன? அங்கே போருக்கும் கவலைக்கும் இடையே துடிக்கத்தான் செய்வாள்.
ஒரு நாள் டெலிகிராம் வந்தது. பிரித்தேன். பிரிக்கும்போது விரல்கள் தந்தியடித்தன. என் மனம் துடித்தது. படித்தேன். அய்யோ கடவுளே! அடப்பாவப்பட்ட கடவுளே! என் மேரியைப் போருக்குப் பலி கொடுத்துவிட்டேனே! என்னைப் பலி வாங்கிவிட்டாயே! மயக்கத்தில் விழுந்து விட்டேன். வெகு நேரம் கழித்து விழித்தபோது ஜெனிஃபர் என் மார்பில் தூங்கிக்கொண்டிருந்தாள்.
அன்று மாலை ராணுவ வண்டியில் வந்த வீரர்கள் ஒரு பெரிய பெட்டியை வீட்டுக்குள் எடுத்து வந்தனர். துடித்தபடி பெட்டியைத் திறந்தேன்.
என் மேரி…. துப்பாக்கிக் குண்டுக்கு உணவாகி விட்டாள். சிதைந்த, பிய்ந்த உடலுடன் பளிச்சென்று திலகமிட்ட முகத்துடன் சிரித்தபடி இருந்தாள். மேரி! நாட்டுச்சேவை, நாட்டுச்சேவைன்னு சொல்லிச் சொல்லியே எங்களைப் பலி வாங்கிட்டு நீ மட்டும் சிரிக்கிறியேம்மா? எங்களையும் சேர்த்துக் கூட்டிட்டுப் போயிருக்கக்கூடாதா? கழுத்தில் நான் வாங்கித்தந்த சங்கிலியை அணிந்தபடி இருந்த அவள் உடல் கழுத்துக்குக் கீழே கருகி, ரத்தக்குருதி படிந்து துண்டுதுண்டாய்க் கிடந்தது.
என் மேரி சாகும்போது எப்படியெல்லாம் துடித்திருப்பாள்? என்னவெல்லாம் நினைத்திருப்பாள்? எப்படியெல்லாம் அலறியிருப்பாள்? நினைவைக் கிளறிக் கிளறி அழுதேன்.
பெட்டியருகில் வந்த மகள் கேட்டாள்…”அப்பா….அம்மா எப்போ வருவாங்கப்பா?”
என் மீது ஆயிரம் துப்பாக்கிக் குண்டுகள் ஒரே நேரத்தில் துளைப்பதுபோல் உணர்ந்தேன்.
இன்னும் பெட்டியில் இருப்பவளைப் பார்க்காத அவளுக்குப் பதில் சொல்ல முடியாது அழுகிறேன் மேரி!…
– தமிழ் முரசு. 23.6.1991.
– கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.