அப்பாச்சிக்கு முதன்மந்திரி பட்டம் கொடுத்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 75 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இராயர் இராசரீகம் பண்ணுகிற காலத்திலே தமக்குள் அடங்கிய குறுநில மன்னர்களையெல்லாம் வரச்சொல்லி உத்தரவு செய்தார். ஒருவன் தவிர மற்றவர்கள் எல்லோரும் வந்தார்கள். 

அவ்வொருவனுக்குப் பதிலாக அவனிடத்தில் மந்திரியாக இருந்த அப்பாச்சி வந்தான். எல்லாரும் இராயர் தரிசனத்துக்குச் சென்றபோது தனித்தனியே அவரவர் பேரைக் கேட்டுத் திட்டவட்டம் செய்து வருகையில், கடைசியில் அப்பாச்சி வந்தான். “உன் பேர் என்ன? என்று கேட்கும்போது, “என் பெயர் அப்பாச்சி, என் எசமானனுக்குப் பதிலாக வந்தேன்” என்றான். 

முதலாளி வராமல் தன்னுடைய மனுசனை அனுப்பினான் என்று கோபங்கொண்டு, அதைக் காட்டாமல் ராயர், “உன் எசமானனை அனுப்பு” என்று உத்தரவு செய்தார். 

அப்படியே அழைப்பித்து நாலு நாழிகை வழிக்கு அப்புறம் ஓரூரிலே நிறுத்திவைத்தான். 

இப்படி இருக்கிறச்சே ஒருநாள் இராயர் கசாப்புக் கடை மார்க்கமாகச் சவாரி போகிறபோது, அந்தக் கடைக்காரன் ஆட்டைக் கட்டி உரிக்கிறதைப் பார்த்து, “உன் எசமானைச் சீக்கிரத்தில் அழைப்பி” என்று அப்பாச்சியுடனே சொன்னார். 

கசாப்புக்கடை அண்டையிலே போகிறபோது உத்தரவு செய்தபடியினாலே ஆட்டைக்கட்டி உரிக்கிறதுபோல் தன் எசமானைக் கட்டி உரிக்க நினைத்து இருக்கிறதாகத் தோன்றி அப்பாச்சி சீக்கிரத்தில் தன் எசமானை ஊருக்குப்போய்விடச் சொல்லிச் சமாசாரம் எழுதிப்போட்டான். 

அப்படியே அவன் போய் ஊரிலே போய்ச் சேர்ந்தான். 

கொஞ்சநாள் போன பிறகு இராயர் சந்தோஷமாய் இருக்கிற நாளையிலே அப்பாச்சியைப் பார்த்து, “உன் எசமான் வந்தானோ?” என்று கேட்டார். 

இன்னும் வரவில்லையென்று சொன்னான். “என்னத்தினாலே ஆலசியம்?” என்று கேட்டார். “அய்யா” என் எசமானை ரட்சிக்கிறேன் என்று வாக்குக் கொடுத்தால் ஆலசியத்திற்குக் காரணஞ் சொல்லுகின்றேன்” என்றான். 

“உன் இஷ்டப்படியே வாக்கு கொடுத்தேன். சொல்” என்றான். “என் எசமான் சமீபத்திலே வந்து இருந்தான். தாங்கள் கோபங்கொண்டு இருக்கிறதைக் கண்டு ஊருக்குப் போகச்சொல்லி எழுதி அனுப்பிவிட்டேன்” என்றான். 

“எனக்குக் கோபம் வந்தது உனக்கு எப்படித் தெரிந்தது” என்றான். “கசாப்புக்கடை அண்டையிலே போகிறபோது ஆட்டை உரித்துக் கொண்டிருக்கிறது தங்கள் பார்வையில் பட்ட மாத்திரத்தில் அழைப்பிக்கச் சொல்லி உத்தரவு செய்தபடியினாலே ஆட்டை உரிக்கிறதுபோலே என் எசமானைக் கட்டி உரிக்க நினைத்ததாக என் புத்தியில் தோன்றினது” என்றான். 

இராயர் அதுகேட்டு மெத்த ஆச்சரியப்பட்டு அப்பாச்சியைத் தன்னிடத்தில் மந்திரியாக வைத்துக்கொண்டு அவன் எசமானையும் ரட்சித்தார். 

ஆகையினாலே புத்தியுள்ளவர்களுக்குச் சித்தியாத தொன்றில்லை என்றறிக. 

– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

இராயர் அப்பாஜி கதைகள் பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை :  மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை.  இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *