அப்பம்மாவின் மூக்குத்தி





(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘இப்ப அப்பம்மா உயிரோட இருக்காங்களா? இல்லையா?’
மூன்றாவது முறையாக அழுத்தமாய்க் கேட்டேன். இந்தக் கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காத என் அண்ணன்,
‘வருத்தம் கூடவாம்… கொஞ்சம் வாய மூடிட்டு வாறியா?’
கோபம் கலந்த பதட்டத்துடன் பஸ்சிற்கு வெளியே பார்வையை திருப்பிக் கொண்டான்.
ஒன்றுமே புரியாத அவஸ்தையில் தடுமாறிக்கொண்டிருந்தேன். கொழும்பில் இருந்து பதுளை போகும் பஸ் அது. புறப்பட இன்னும் ஐந்து நிமிடங்களே இருக்க, சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டேன்.
உள்ளுக்குள் ஓராயிரம் போராட்டம். எதையென்று நினைப்பது? போனமாதமும் இப்படித்தான் அப்பம்மாவிற்கு சரியான வருத்தம் என்று பத்து நாள் லீவுடன் வீட்டுக்குப் போய் இறங்க, அப்பம்மா எலும்பும் தோலுமாக ஆளே மாறிப்போய்… கடைசி நேரம் அப்பம்மாவைக் கவனிக்க முடியல்லயேன்னு அடிக்கடி கவலைப்பட்டதுண்டு. இந்தச் சந்தர்ப்பத்தை சாதகமாக்கி கூடவே இருந்து கவனித்தேன். ஆனால் அப்பம்மாவிற்கு என்னை அடையாளம் காண முடியல்ல.
என் முகத்தையே பார்ப்பாங்க. கண்ணீர் நிற்காமல் வடியும். சிலநேரம் அடையாளம் கண்டு கதைப்பாங்க.
“பெரியபுள்ள சாப்பிட்டியாம்மா?”
என் அப்பாவிற்கு முதல் பொம்பிளப்பிள்ளை நான்தான். அதால என்ன பெரியபுள்ளன்னேதான் கூப்பிடுவாங்க.
அப்பம்மாவிற்கு ஐந்து ஆணும் மூன்று பெண்ணுமாய் ஏழு பிள்ளைகள். தான் வாழ்ந்த சந்தோஷத்தை கதைகதையாக சொல்லுவாங்க. தாத்தா துணையும் இல்லாம தனியா எல்லா பிள்ளைகளையும் படிப்பித்து, கல்யாணம் பண்ணி வைத்து… கடைசியில் வீடு நகை நிலம் மாடுகள் இப்படி எல்லா சொத்துக்கும் உரிமை கொண்டாடி ஆளுக்கொரு பக்கமாகிட்டாங்களாம். ஒரு மூக்குத்தியும், ரெண்டு தோடும் கட்டின புடவையுமா எங்க அப்பாகிட்ட வந்தவங்கதானாம்.
“நான் செத்தா என் தலைமாட்டில அழுகிறவங்களுக்குத்தான் இந்த மூக்குத்தி. நீயே நின்னு அழுதுட்டு நீயே எடுத்துக்க…”
இப்படி அடிக்கடி சொல்லுவாங்க.
குளித்து தலையை அழுந்தவாரி கொண்டை போட்டு பெருவிரல் அளவுக்கு விபூதி பூசினா, எழுபது வயதுன்னு சொல்லவே முடியாது. நாலைந்து பற்கள் கூட விழாம கெட்டியா இருக்கும். சந்தோஷமா சிரித்தாலும், பிள்ளைகள்ட ஏக்கம் அவங்களுக்குள்ள இருந்திட்டேதான் இருந்தது.
எறும்பு மாதிரி எந்த நேரமும் ஏதாவது செய்திட்டேதான் இருப்பாங்க. வீட்ட சுத்தி பப்பாளிமரம், மாமரம், கோப்பி, ஈரப்பலா இப்படி ஏகப்பட்ட மரங்கள். போதாததுக்கு மிளகாய்ச்செடி வேறு…
“பெரியபுள்ள அந்த கோழிய வெரட்டி விடு… பாத்திய கௌறிப்போடுதும்மா”
ஏதாவது சொல்லிட்டேதான் இருப்பாங்க. சிலநேரம் கேட்காதமாதிரி பாவனையில் புத்தகத்தையே பார்த்துக்கொண்டிருப்பேன். அவங்களே எழும்பி கோழிய விரட்டுவாங்க.
அப்பம்மா ரொட்டிசுட்டா சும்மா தூக்கலா இருக்கும். தேங்காய்ப்பூ நிறையப்போட்ட, சுடச்சுடரொட்டியும் சம்பலுமா ஒருபிடி பிடிச்சிறுவேன்.
“என்னதான் இருந்தாலும் அப்பம்மா கைப்பக்குவம் உங்களுக்கு வரவே வராதும்மா….”
அம்மாவிடம் கூறி வாங்கிக்கட்டிக்கொண்ட சந்தர்ப்பம் கூட உண்டு. ஏனோ தெரியதாது அப்பம்மான்னா எனக்கு ரொம்பப்பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே அப்பம்மாகூடதான் படுப்பேன். என் தலையை கோதிவிட்டபடியே ராஜாராணி கதை, பேய்க்கதை, சின்னச்சின்ன விடுகதை எல்லாம் சொல்லுவாங்க. இதமான தலைவருடலோடு கண்மூடி கதைகேட்கிற சுகம் இருக்கே…! அது வேறு எதிலையுமே கிடைக்காது. இதுமாதிரி தனிமை சந்தர்ப்பங்கள்ள தன் பிள்ளைகள் ஞாபகத்தில் கண்கலங்கறத எத்தனையோ சமயம் பார்த்திருக்கிறேன். மாமிகளையும் சித்தப்பாக்களையும் எண்ணி கோபம் கோபமா வரும். என்னால என்னதான் செய்ய முடியும்?
என் முதல் வேலைக்காய் அப்பம்மாவ பிரிஞ்ச நேரம் உடைஞ்சு போயிட்டேன். அப்பம்மாவும் விக்கி விக்கி அழுதபடியே,
“நீ திரும்ப வாற நேரம் இருப்பேனோ தெரியாது…”
சொல்லிக் கொண்டே விபூதியை நெற்றி நிறைய பூசி அனுப்பினாங்க.
லீவில் வீடு போனநேரம் சொன்னது போலவே வருத்தமாகியிருந்தது.
பிள்ளைகள்ட ஞாபகம்தான் அவங்கள இந்தளவு பாதிப்பதாய் எனக்குத்தோணிற்று. எல்லோருக்கும் கடிதம் போட்டு வரச்சொல்லியும் யாரும் வரவேயில்லை.
ஒருமுறை அப்பம்மா ஆஸ்பத்திரியில் இருந்த நேரம், மூன்று நாள் பிந்தி பெரியமாமி வந்து, துரமா நின்று கைகட்டியபடியே பேசினாங்க. தன் அம்மா முடியாமல் தவிக்கிறத ஒரு பிள்ளையால எப்படி பார்த்திட்டிருக்க முடியும்? பதறிப்போகணுமில்லையா? துடிச்சிப்போயிருக்கணுமே? ஆனா என் மாமி ஏன் அப்படி நடந்துகொண்டாங்கன்னு இதோ! இப்பவரைக்கும் புரியவேயில்லை.
டியூப் வழியாகத்தான் சிறுநீர் எடுத்தோம். மாமி வந்த நேரம் டியூப்பில் சிறுநீர் வந்து அந்த பக்கற்று நிரம்பி போய் இருந்தது. அதை அப்புறப்படுத்த மாமிக்கு தோன்றவே இல்லை. பின் நானே அதை சுத்தப்படுத்த, கைதவறி மூத்திரத்துளிகள் என் கைகளிலெல்லாம் சிதறிவிட…. மாமி அதை கண்டுகொள்ளவே இல்லை.
ஒரு பதினைந்து நிமிடநேர பார்வையுடன் என்னிடம் பணம் கொஞ்சம் தந்துவிட்டு வெளியேறிட்டாங்க.
என்ன நினைத்தோ தெரியல்ல, என் கைகளை தன் முகத்துடன் சேர்ந்து அணைத்தபடி நிறையநேரம் அப்பம்மா அழுதாங்க.
இந்தமுறை ஏசியாவது எல்லா மாமிகளையும் வரவைக்க எண்ணிக்கொண்டேன். ஆனால் அண்ணாவின் பதட்டமும் மௌனமும் எனக்கு சரியாகப்படவில்லை. என்னிடம் ஏதோ மறைத்து தடுமாறுகிறானென சந்தேகமாகவே இருந்தது. அப்பம்மாவை உயிருடன் பார்த்துவிட வேண்டுமே என ஒவ்வொரு நொடிகளையும் கடத்திக் கொண்டிருந்தேன்.
எட்டு மணித்தியாலப் பிரயாணம் அப்பம்மா நினைவுகளுடனே முடிந்திருந்தது. பதுளையில் இறங்கி வீட்டிற்குப்போக அண்ணா ஒரு ஆட்டோ பிடித்தான். வழமையாக ஆட்டோக்காரனுடன் தர்க்கிக்கும் அண்ணன், கேட்ட பணத்திற்கு தலையாட்டினான். என் சந்தேகம் வலுவாகியது. மனதை திடப்படுத்திக் கொண்டேன்.
நான் கால்பதித்து திரிந்த பாதைகள்… நான் பார்த்திருக்க வளர்ந்த மரங்கள்… எல்லாம் தாண்டி ஆட்டோ வீட்டை நெருங்க நெருங்க என் படபடப்பு அதிகமாகியது. வியர்த்துக் கொட்டியது.
வீட்டிற்கு முன்னால் நிறைய மனிதர்கள். மாமிமார்களின் அழுகைச்சத்தம் வீட்டையே அதிரவைத்துக் கொண்டிருக்க, அண்ணா என்னை அணைத்தபடியே வீட்டுக்குள் அழைத்துச் செல்கின்றான்.
என் அப்பம்மா சடலமாய்… சுற்றி மகன், மகள் பேரப்பிள்ளைகள் என எல்லா உறவுகளும் கத்திப்புரண்டு கொண்டிருக்க, அப்பம்மாவின் தலைப்பக்கம் நின்று பெரியமாமி தேம்பியபடி…!
நான், அப்பம்மாவின் மூக்குத்தியை பெரியமாமிக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று எண்ணியபடியே உள்ளே அடியெடுத்து வைக்கிறேன்.
– தினக்குரல்
– பீலிக்கரை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2007, ஞானம் பதிப்பகம்,கொழும்பு.
![]() |
பிரமிளா பிரதீபன் (எ) பிரமிளா செல்வராஜா (26 மார்ச் 1984) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தென்னிலங்கையில் ஆங்கில ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி (பட்டயம்) கற்கைநெறியின் நிலைய இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். பிரமிளா பிரதீபன் (எ) பிரேமிளா செல்வராஜா (1984.03.26) பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராஜா; தாய் சிவகாமி. ஆரம்ப கல்வியை ஊவாகட்டவளைத் தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை…மேலும் படிக்க... |