அன்பின் அடையாளம்
(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இராமபிரான் சீதாதேவியைக் கல்யாணம் செய்து கொள்வதற்காகக் கைலையங்கிரியிலிருந்த சிவதனுசு பூலோகத்துக்கு வரவேண்டியிருந்ததல்லவா? அதே போல் புவனேசுவரன் தேவகியைக் கல்யாணம் செய்து கொள்வதற்கும் வேலங்காட்டிலிருந்த புலி ஊருக்குள் நுழைய வேண்டியிருந்தது.
புஷபவனம் ஜமீன்தாரின் ஏக புத்திரன் புவனேசுவரன். சுக வாசத்தின் காரணமாகச் சோம்பல் ஏறிப் போயிருந்த அவன் உடம்புக்கு எப்பொழுதாவது கொஞ்சம் சுறுசுறுப்பு வேண்டியிருக்கும். அப்பொழுதெல்லாம் அவன் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது வழக்கம்.

அன்று பரிவாரங்கள் அவனுக்கு முன்னாலேயே சென்றுவிட்டன. அவன் மட்டும் தனியே காரில் சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு பயங்கரமான காட்சி. நடு ரஸ்தாவில் புலி ஒன்று அப்படியும் இப்படியுமாகப் பார்த்துப் பயங்கரமாக விழித்துக் கொண்டே, ஓட்டமும் நடையுமாகச் சென் று கொண்டிருந்தது. ஜனங்கள், “செத்தோம்! பிழைத்தோம்!” என்று தங்கள் மனம் போனபடி ஓடிக் கொண்டிருந்தனர். காட்டிலாகா அதிகாரிகள் இருவர் கையில் துப்பாக்கியுடன் அந்தப் புலியைச் சுட்டு வீழ்த்தக் குறி பார்ப்பதும், பின் வாங்கு வதும், முன்னேறுவதுமாக இருந்தனர். சாலையோரத்து மரங்களின்மேல் ஏறிக்கொண்டிருந்தவர்கள் பின்வருமாறு பேசிக் கொண்டிருந்தார்கள்.
“இந்த நேரத்தில் இது எங்கிருந்து வந்து சேர்ந்தது?”
“அதோ, அந்த வேலங் காட்டிலிருந்து தான் ஓடி வந்திருக்கும்!”
“அட, என்னடா! அதைச் சுட்டுத் தள்ள இத்தனை நேரமா இரண்டு பேரும் குறி பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!”
“என்னிடம் மட்டும் அந்தத் துப்பாக்கி இருந்திருந்தால் இத்தனை நேரம் அதைச் சுட்டுத் தள்ளியிருப்பேன்!”
“இன்று எனக்கு உடம்பு சரியாயில்லை; இல்லா விட்டால் அந்தப் புலியைப் பார்த்துவிட்டுப் பேசாமல் மரத்தின்மேல் ஏறிக்கொண்டிருப்பேனா?”
இம்மாதிரி பேச்சுகளுக்கு மத்தியில் யாரோ ஒருவன், “ஐயய்யோ! அதோ பாருடா, கலெக்டரு ஐயாவின் தங்கச்சி மவ!” என்று அலறியது, ஜமீன்தார் மகனின் காதில் விழுந்தது.
அடுத்த நிமிடம் காரில் கனவேகமாகச் சென்று கொண்டிருந்த புவனேசுவரன்,பயத்தால் நடுநடுங்கி நின்ற ஒரு யுவதியின்மேல் அந்தப் புலி பயங்கரமாக உறுமிக் கொண்டு பாய்வதற்குச் சித்தமாயிருந்ததைக் கண்டான். உடனே பரபரப்புடன் அந்தப் புலியை நோக்கிக் காரைச் செலுத்தினான். இயந்திரப் புலியைக் கண்டதும் இயற்கைப் புலி சிறிது நகர்ந்தது. காரை அந்த யுவதிக்கு முன்னால் ‘டக்’ என்று நிறுத்தி, “ஏறிக் கொள்ளுங்கள்!” என்றான்.
அவளும் யோசனை ஒன்றும் செய்யவில்லை; மின்னல் வேகத்தில் பாய்ந்து காரில் ஏறிக்கொண்டாள். அதே வேகத்தில் அவனும் காரைச் செலுத்தினான்.
அவன் மனம் கற்பனை உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்துவிட்டது. காதல் நவீனங்களில் கண்ட அத்தனை காதலர்களும் அவன் மனக் கண்முன் அப்பொழுது காட்சியளித்தனர். கற்பனைக் காதலிகளைப்போல் தனக்குப் பின்னால் உட்கார்ந்திருக்கும் நிஜக் காதலியும், “அதோ, அந்த மலரைச் சுற்றி வண்டு ரீங்காரம் செய்வதைப் பார்த்தீர்களா?” ஆஹா! இந்தச் சந்திரன் தன் அமுத கிரணங்களினால் நமக்கு எவ்வளவு ஆனந்தத்தை அளிக்கிறான்!” என்று ஏதாவது பேச ஆரம்பிக்கக் கூடாதா? இல்லை, நாமாவது “உன்னைப் பிரிந்து இனிமேல் ஒரு நிமிஷம்கூட உயிரை வைத்துக் கொண்டிருக்க மாட்டேன்!”, “உன்னைக் கண்ட கண்கள் உறங்கா; உன்னுடன் பேசிய வாய் உண்ணா!” என்று ஏதாவது சொல்லி வைப்போமா?
ஊஹும்; எதற்கும் அவனுக்குத் தைரியம் வரவில்லை. ஆனால் பகற் கனவு மட்டும் காண ஆரம்பித்து விட்டான். அவள் ஏதோ ஒரு பங்களாவைச் சுட்டிக் காட்டிக் காரை நிறுத்தச் சொல்கிறாள். அவன் நிறுத்துகிறான். காரை விட்டுக் கீழே இறங்கியதும் அவள் ஓடோடியும் சென்று தன் அப்பாவிடம் நடந்தவற்றை யெல்லாம் மூச்சு விடாமல் சொல்கிறாள். அவள் அப்பா பறந்து வந்து அவனை ஆலிங்கனம் செய்துகொண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். “அப்பா! எமன் வாயிலிருந்து என் குழந்தையைக் காப்பாற்றினாயல்லவா? இனிமேல் அவளைக் கடைசி வரையில் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உன்னுடையது தான்!” என்று சொல்லி, அவள் கரத்தைப் பிடித்து அவன் கரத்தில் வைத்து ஆசி கூறுகிறார்.
இம்மாதிரி மனோலோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த அவனை நோக்கி, “அதோ, ‘ஹரிஹரன் ஐ.ஸி.எஸ்.’ என்று சுவரில் ‘போர்டு’ மாட்டி யிருக்கிறது, பாருங்கள். அந்தப் பங்களாவுக்கு முன்னால் தயவு செய்து காரை நிறுத்துங்கள்!” என்றாள் அந்தப் பெண்.
அந்தக் குரலொலி,ஏதோ மின்சார சக்தியைப்போல் அவன் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ஊடுருவிச் சென்றது.
அவள் சுட்டிக் காட்டிய வீட்டுக்கு எதிரே காரை நிறுத்தினான். ‘திடுதிப்பென்று காரை விட்டுக் கீழே இறங்கிய அவள். ‘தாங்க்ஸ்’ என்று சொல்லிவிட்டு, வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்துவிட்டாள்.
ஆனாலும் புவனேசுவரன் நம்பிக்கையை இழக்கவில்லை. அவன், அவள் அப்பா வரப் போவதையும், அவர் தன்னை ஆலிங்கனம் செய்துகொண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கப் போவதையும் எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
ஆனால், அப்பா வரவில்லை; அவளே வந்தாள். வந்தவள் சும்மாயிருக்கவும் இல்லை; “எதற்காகக் காத்திருக்கிறீர்?” என்று அவனைத் தூக்கிவாரிப் போடும் படியாக ஒரு காரசாரமான கேட்டு கேள்வியையும் வைத்தாள்.
அவன் என்னத்தைச் சொல்வது? “என்ன நன்றி கெட்ட உலகம்!” என்று நினைத்துக்கொண்டே காரை வந்த வழியே திருப்பினான். அப்பொழுது ‘கொல்’ லென்ற சிரிப்பொலி அவன் காதில் விழுந்தது.
சிரித்தவள் அவள் தான்!
இந்தச் சம்பவம் நடந்து மூன்று மாதங்களாகியிருக்கும். அவளை மீண்டும் சந்திக்க முடியும் என்று புவனேசுவரன் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் உலகத்தில் நாம் சற்றும் எதிர்பாராத காரியங்கள் தானே சர்வ சாதாரணமாக நடக்கின்றன?
அந்த வருடத்துக் கோடை வெப்பத்தைப் புஷ்பவனத்து மகாஜனங்கள் அத்தனை பேராலும் சகித்துக் கொள்ள முடிந்தது; ஜமீன்தார் மகனால் மட்டும் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே உதக மண்டலத்திற்கு அவன் பிரயாணமானான். அன்று ‘நீலகரி எக்ஸ்பிரஸ்’ஸில் அவனுக்கென்று பிரத்தியேகமாக முதல் வகுப்பில் இடம் நிச்சயம் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்த வகுப்புக்குள் அவன் நுழைந்தபோது, யானைத் தலை அளவு ‘டிஸம்பர்’ பூக்களைத் தலையில் கட்டி வைத்துக் கொண்டிருந்த ஒரு யுவதி, அடிக்கடி ‘பிளாட்பார’த்தை நோக்கிய வண்ணம் அங்கே உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவள் அப்படியும் இப்படியுமாக அசையும் போதெல்லாம் அவளுடைய தலையிலிருந்த பூச்செண்டும் அவளுடன் அசைந்தாடிக் கொண்டிருந்தது. கன்னங் கரேலென்று மை தீட்டப்பட்டிருந்த அவள் கண்கள் புவனேசுவரனை என்னவோ செய்தன. கம்பன் கண்ட சீதையும், காளிதாசன் கண்ட சகுந்தலையும் அழகுக்கு அவளிடம் பிச்சை எடுக்க வேண்டும்போலிருந்தது. தன்னைக் கண்டதும் சற்று நாணிக் கோணிக் கொண்ட அவளைப் புவனேசுவரன் வைத்த விழி வாங்காமல் பார்த்தான்.
அவ்வாறு பார்த்தபோது அவள் வதனம் எங்கேயோ பார்த்த வதனமாயிருந்தது. புருவத்தை நெரித்துக் சிறிது நேரம் சிந்தையைத் தூண்டிப் பார்த்தான்-ஆம்; அவன் பள்ளி மாணவனாயிருந்தபோது பார்த்த முகம். அவள் பெயர் தேவகி. சதா சர்வகாலமும் அவள் மேலேயே கண்ணோட்டமாயிருந்த ஓர் இளம் தமிழ் பண்டிதரை அவன் அவளுக்காகக் கண்டித்திருக்கிறான். அது எப்பொழுது என்றால், ஒருநாள் வகுப்பில் தமிழ்ப் பண்டிதர் அவளுக்கென்றே கன்னிமாடத்தில் கண்ட சீதையை வர்ணிக்கும் கம்பன் பாடல் ஒன்றை எடுத்துக் கொண்டு, விரசமாக வியாக்கியானம் செய்துகொண்டிருந்தார். அந்த வியாக்கியானத்தைக் கேட்கக் கேட்க அவள் எவ்வளவுக் கெவ்வளவு முகத்தைச் சிவக்க வைத்துக் கொண்டாளோ, அவ்வளவுக் கவ்வளவு தமிழ்ப் பண்டிதர் அவள் அழகில் அறிவை இழந்து என்னவெல்லாமோ பிதற்றிக் கொண்டிருந்தார். அவருடைய இனத்தைச் சேர்ந்த சில மாணாக்கர்களும் அந்த வியாக்கியானத்தை அன்று வெகுவாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அருவருக்கத் தக்க அந்தக் காட்சியைப் பார்த்துப் பொறாத புவனேசுவரன், “இதென்ன கலைக்கூடமா, காதல் கூடமா?” என்று நடுவே எழுந்து இரைந்தான். பண்டிதர் முகத்தில் அசடு வழியத் தம் வியாக்கியானத்தை அத்துடன் நிறுத்திக் கொண்டார். அதே கணத்தில் அவள் பார்வை புவனேசுவரனின் மீது விழுந்தது. அவ்வளவு தான்; அதற்குப்பிறகு அவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டதைத் தவிர வேறொன்றும் அறியார்கள்!
இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்ததும், அவள் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று அவன் கவனிக்க ஆரம்பித்தான். ‘பிளாட்பா’ரத்தில் இருவர் யாரோ ஒரு பெரிய மனிதருடன் பேசிக்கொண்டிருந்தனர். என்ன ஆச்சரியம்! அந்த இருவரில் ஒருத்தி அன்று புலிக்கு எதிரே அவன் சந்தித்த யுவதி. அவளுடன் சேர்ந்தாற்போல் நிற்கிறானே, அந்த மனிதன் யார்? அவளுடைய கணவனா? அதற்குள் அவளுக்குக் கல்யாணமாகிவிட்டதா?
இப்படி அவர்கள் விஷயத்தில் அவன் அனாவசிய மாகத் தலையிட்டு அவதிப்பட்டுக்கொண்டிருந்தபோது, அந்த யுவதி புவனேசுவரனைப் பார்த்துவிட்டாள்.
உடனே தனக்கு அருகேயிருந்த வாலிபனின் காதோடு காதாக அவள் ஏதோ சொல்ல, “என்ன! நிஜமாகவா, உமா?” என்று வியப்புடன் கேட்டுக்கொண்டே அவன் விரைந்து வந்து புவனேசுவரனின் கையைப் பிடித்துக் குலுக்கினான்.
“இதென்ன, கஷ்டம்?” என்று ஒன்றும் புரியாமல் விழித்தான் புவனேசுவரன்.
“உங்களை நான் என் உயிருள்ளவரை மறக்க முடி யாது!” என்றான் அந்த ஆசாமி, அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டே.
“இப்படி தேவகி சொன்னாலாவது நன்றாயிருக்குமே!” என்று நினைத்த புவனேசுவரன், “ஏன்?” என்று அசட்டையுடன் கேட்டு வைத்தான்.
“உங்களால் தான் நான் உமாவைக் கல்யாணம் செய்து கொள்ள முடிந்தது!” என்று ஒரு போடு போட்டான் அவன்.
“என்னாலா! அது எப்படி?”
“அந்தப் புலி விபத்திலிருந்து நீங்கள் உமாவைக் காப்பாற்றினீர்களல்லவா?”
“ஆமாம்; அதற்கென்ன?”
“அதற்கென்னவா! அந்த விபத்திலிருந்து நான்தான் தன்னைக் காப்பாற்றியதாகத் தன் அப்பாவிடம் பொய் சொன்னாள் உமா. அதனால் தான் அவள் அப்பா எங்களுடைய கல்யாணத்திற்குச் சம்மதித்தார்!”
“என்ன!”
“ஆமாம்; நீங்கள் அன்று உமாவைக் கொண்டு வந்துவிட்டது உண்மையில் அவள் வீடு அல்ல; என் வீடு. என்னுடைய அத்தையின் பெண்தான் உமா. அவள் என்னைக் காதலித்தாள்; நானும் அவளைக் காதலித்தேன். ஆனால் அவள் அப்பா ஏதோ குடும்பத் தகராறைக் காரணமாக வைத்துக்கொண்டு, எங்கள் கல்யாணத்தை ஆட்சேபித்துவந்தார். நல்லவேளையாகச் சமயத்தில் நீங்கள் உதவி செய்தீர்கள். இல்லாவிட்டால் இந்தப் பிறப்பில் நான் உமாவை அடைந்திருக்க முடியாது!”
பதிலுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை புவனேசுவரனுக்கு; விதியின் விசித்திரத்தை எண்ணிப் பேசாமல் இருந்தான்.
“உங்கள் உதவிக்குப் பிரதியுபகாரமாக நான் செய்வதற்கு என்ன இருக்கிறது?” என்றான் அந்த வாலிபன்.
இந்தச் சமயத்தில், “ஏன் இல்லை? உங்கள் தங்கை தேவகியில்லையா?” என்றாள் உமா.
அவளுடைய யோசனையைக் கேட்டதும், “போ மன்னி!” என்று சொல்லியவண்ணம், தலையைக் குனிந்து கொண்டாள் தேவகி.
“ஆமாம், உங்களிடம் எனக்கு இருக்கும் அன்பின் அடையாளமாக நீங்கள் தேவகியை ஏற்றுக்கொண்டால் நம்முடைய நட்பு என்றும் நீடித்திருக்கும்” என்று சொல்லி விட்டு, அந்த வாலிபன் புவனேசுவரனின் முகத்தைப் பார்த்தான்.
அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.