அதிசய சிம்மாசனத்தை அடைந்த கதை
கதையாசிரியர்: அரு.ராமநாதன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2025
பார்வையிட்டோர்: 315
(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்
1-வது வினோரஞ்சிதப் பதுமை சொல்லிய விக்கிரமாதித்தன் பூர்வீகக் கதைகள்
கதை – 3 | கதை – 4 | கதை – 5
4. அதிசய சிம்மாசனத்தை அடைந்த கதை
விக்கிரமாதித்த மகாராஜன் சகல கலைகளிலும் விற்பன்னனாகி தன் பட்டணத்தைக் கலை நகரமாக்கினான்.
அவனுடைய பேரும் புகழும் நாற்புறமும் பரவின. அவனைக் கொண்டாடாதார் பூலோகத்தில் யாருமில்லை; வான்முகட்டையும் கடந்து கலை சேகரனென அவனுடைய கீர்த்தி தேவலோகத்திலும் பரவியது.
அந்த நாளில் விசுவாமித்திரர் கடுந்தவம் செய்து வந்தார். முனிவரின் கடும் தபசினால் தேவ லோகத்தில் இந்திரன் பதவிக்கே ஆபத்து வந்து விடும் போலாகி விட்டது. விசுவாமித்திரரின் தவத்தைக் கலைத்துத் தன் பதவியை நிலை நிறுத்திக் கொள்ள விரும்பிய இந்திரன், தேவலோக நடன மாதர்களான ஊர்வசி, ரம்பை இருவரையும் அழைத்தான். பூவுலகத்திற்கு அவர்களில் ஒருத்தியை அனுப்பி முனிவரின் தவத்தைக் கலைக்க விரும்பினான்.
விசுவாமித்திரர் கடுந்தவத்திலீடுபட்டிருக்கிறார். அவர் தவம் வெற்றி பெறக் கூடாது. அவருடைய ஏகாக்கிரகச் சிந்தையைக் கலைத்துவிட வேண்டும். நடனக்கலை யாருடைய சிந்தையையும் கவர்ந்து விடும். உங்கள் இருவரில் நடனக்கலையில் எவள் சிறந்தவளோ, புறப்பட்டுச் செல்லவேண்டும்! விசுவாமித்திரரின் தவத்தைக் கலைப்பதில் வெற்றி பெறுபவளுக்கு விலை மதிக்கவொண்ணாத பரிசு நான் கொடுப்பேன்!” என்று தெரிவித்தான் தேவேந்திரன்.
இந்திரன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட ஊர்வசி, ‘பிரபோ! என்னைவிட நடனக் கலையில் சிறந்தவர் யார் இருக்கிறார்கள்? என்னைப் புறப்பட்டுப் போக அனுமதியுங்கள்!” என்று வேண்டினாள்.
ரம்பை அதற்குச் சளைத்து விடவில்லை. “ஸ்வாமி! எல்லாக் கலைகளையும் முறையாகப் பயின்று இணையற்றவள் என்று தேர்ச்சி பெற்றிருக்கும் என்னை விட்டு விட்டு வேறு ஒருத்தி போவதற்கு அனுமதிப்பீர்களா?” என்று கேட்டாள் ரம்பை.
நடனக் கலையில் எவள் சிறந்தவள் என்பது பற்றி அவ்விரு நடன அப்சரஸ்களிடையே தோன்றிய தகராறைத் தேவேந்திரனால் தீர்த்து வைக்க முடியவில்லை. இருவரும் தானே சிறந்தவள் என்று பிடிவாதம் செய்தார்கள். ஒருத்தியைப் புறக்கணித்து மற்றவளை அனுப்பி மனக்கசப்பை உண்டாக்கிக் கொள்ள இந்திரன் பிரியப்படவில்லை. ஆகவே, மறுநாள் இந்திர சபையில் இருவருடைய நடனத்திற்கும் போட்டி வைக்க ஏற்பாடு செய்தான். நடனத்தில் வெல்பவளுக்குப் பாரிஜாத மாலை வெற்றிச் சின்னமாக அணிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப் பட்டது.
சபையிலே சகல விற்பன்னர்களான தேவர்களும், சுந்தர்வர்களும் நிறைந்தார்கள். முதலில் ரம்பை நடனமாடினாள்; அடுத்தபடியாக ஊர்வசி ஆடினாள். பிறகு இருவரும் சேர்ந்து ஆடினார்கள். இருவருடைய நடனத்திலும் அப்பழுக்கு சொல்ல முடியவில்லை. அவர்கள் இருவரில் சிறந்தவள் யார் என்று தேர்ந்தெடுக்க முடியாமல் தேவர்கள் அவஸ்தைப்பட்டார்கள். இவ்விதம் அவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கையில், நாரதர் எழுந்திருந்து, “தேவேந்திரா! இங்கு கூடியிருக்கும் தேவர்களாலும், கந்தர்வர்களாலும், இவர்களில் சிறந்தவரைப் பொறுக்க முடியாது! பூலோகத்திலே உஜ்ஜயினி மாகாளி என்றொரு பட்டணம் உண்டு. அந்நகரத்தில் விக்கிரமாதித்த ராஜன் நீதிநெறி வழுவாது ஆண்டு வருகிறான். அவன் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவன். பரதநாட்டியங்களின் நுட்பங்களை அறிந்தவன். அவன் ஒருவனே, ஊர்வசி, ரம்பை இவர்களில் சிறந்த நடனக்காரியைப் பொறுக்கி எடுக்கும் திறமை வாய்ந்தவன். உடனே மாதலியை அனுப்பி விக்கிரமாதித்தனை அழைத்துவர ஏற்பாடு செய்!” என்றார்.
இந்திரனும் தன் தேர்ப்பாகனான மாதலியை வரவழைத்து, “மாதலி! பூவுலகத்திற்கு நம் விமானத்தில் சென்று, உஜ்ஜயினி பட்டணத்தை ஆண்டு வரும் விக்கிரமாதித்த பூபதியை நான் அழைத்துவரச் சொன்னதாகத் தெரிவித்துக் கூட்டிவா” என்றான்.
நர ஜன்மத்தையா தேவலோகத்திற்கு அழைத்து வருவது என்று மாதலி தயங்கினான். ஆனால் அவனுடைய நினைப்பை முறிக்கும் விதமாய் நாரத மகரிஷி, “மாதலி! நர ஜன்மம் என்று எண்ணத் தேவையில்லை! நேர்மையாகப் பாரபக்ஷமின்றித் தீர்ப்பளிப்பதில் தேவர்களை விட நர ஜன்மங்கள்தான் மேலானவர்களாய் விளங்குகிறார்கள். விக்கிரமாதித்தனோ தேவர்களையும் மிஞ்சக்கூடிய அதி சாமர்த்தியசாலி!” என்றான்.
அந்த க்ஷணமே தேவராஜனின் தேர்ப்பாகனாகிய மாதலி விமானத்தில் ஏறிக்கொண்டு பூவுலகிற்குப் புறப்பட்டான். உஜ்ஜயினி பட்டணத்தை மாதலி அடைந்து அரண்மனைக்குச் சென்றான். அரசனை முறைப்படி வணங்கி தான் வந்துள்ள காரியத்தைத் தெரிவித்தான் தேவசாரதி.
“அரசே! தேவலோகத்து இந்திரன் சபையில் நடன மாதர்களான ஊர்வசி, ரம்பை இருவரில் சிறந்தவள் எவள் என்கிற தகராறு கிளம்பியுள்ளது. அவர்களுடைய நடனப் போட்டியைக் கண்டு தேவாதி தேவர்களாலும் சிறந்தவள் யாரென்பதைச் சொல்லமுடியவில்லை. நாரத பகவான் தங்களது மேதா விலாசத்தைப் பற்றி சபைக்குப் பிரசங்கித்துத் தங்கள் ஒருவராலேயே அது தீர்மானிக்க முடியும் என்று தெரிவித்தார். அதன்மீது தேவராஜனும் தங்களை அழைத்து வரும்படி தேவ விமானத்துடன் என்னை அனுப்பி வைத்தார். தங்கள் வரவுக்காக தேவர்கள் காத்திருக்கின்றனர்! நீர் வருகிறீரா இல்லையா?” என்றான் பாதலி. மதிமந்திரி பட்டியும் தன் மகாராஜனைத் தேவலோகத்திற்குப் போய் தன் வீரப் பிரதாபங்களை நிலைநாட்டி வரும்படி தெரிவித்தான்.
விக்கிரமாதித்தனும் மறுமொழி பேசாது பத்திரகாளியம்மனை வணங்கித் திருநீறும் எலுமிச்சம்பழமும் பெற்றுக் கொண்டு அமராவதி பட்டணத்திற்குப் புறப்பட்டான். தேவேந்திரனின் அழைப்பை உதாசீனப்படுத்த முடியுமா?
விமானத்தின் தேர் தட்டிலே விக்கிரமாதித்தன் தனது வலது காலின் பெருவிரலை வைத்து அழுத்திக் கொண்டு, இடது காலையும் எடுத்து வைப்பதற்குள்ளாகச் சட்டென விமானத்தைப் படுவேகமாகக் கிளப்பி விட்டான் மாதலி. நரன் தேவ விமானத்தில் ஏறுவதா என்கிற நினைப்பு தேவசாரதிக்கு இன்னும் இருந்தது. ஆனால் விக்கிரமாதித்தன் கீழே விழுந்துவிடவில்லை. தேவசாரதியின் கருத்தை யூகித்துக் கொண்ட விக்கிரமாதித்தனோ, தன் ஒரு காலின் பெருவிரலைத் தேர் தட்டில் அழுத்தியபடி ஆணி அடித்ததுபோல் நின்று கொண்டிருந்தான். அவனுடைய சாமர்த்தியத்தை கண்ட தேவ சாரதியும் மனம்மாறி தன்னுடைய பிழையை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டான். அதன் பின்னர் தேவ விமானம் தேவேந்திரனின் கொலுக்கூடத்தை அடைந்தது.
இந்திரன் சபையிலே அரசனுக்குத் தகுந்த ஆசனம் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டது. அரசனும் மற்றவர்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்து உட்கார்ந்தான். நடனப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன் பாரிஜாதமாலை விக்கிரமாதித்தன் கையிலே கொடுக்கப்பட்டது. உடனே ரம்பையின் நடனம் ஆரம்பமாயிற்று. அவள் ஆடலழகிலே சொக்கிப் போனார்கள் தேவர்கள். இரண்டாம் நாள் ஊர்வசியின் நடனம் தொடங்கியது. இருவர் நடனத்தையும் கண்டு களித்த விக்கிரமாதித்தன் மறுநாள் அவ்விருவரும் சேர்ந்தாற்போல் நடனமாட வேண்டுமெனவும், மறுநாள் அதைப் பார்த்து விட்டுத் தன் தீர்ப்பை வழங்குவதாகவும் கூறினான். அதன் பிரகாரமே மறுநாள் போட்டி நடனத்திற்கு ஏற்பாடாயிற்று. அன்றையத்தினம் அதிகாலையில் விக்கிரமாதித்தன் ஒருவரும் அறியாதபடி நந்தவனம் சென்று தேவலோகத்துப் புஷ்பங்களைப் பறித்து இரண்டு பூச்செண்டுகள் கட்டி, இரண்டிலும் வண்டுகளைத் திணித்துக் கட்டினான்.
அப் பூச்செண்டுகளை எடுத்துக் கொண்டு விக்கிரமாதித்தன் கவர்ச்சி அன்றிரவு தேவ சபைக்குச் சென்றான். இரவின் கருதியோடு நடனப் போட்டி ஆரம்பமாகும் வேளை வந்தது. ரம்பையும், ஊர்வசியும் இசைப் பின்னணிகளுடன் இடது சாரி வலது சாரியாக நடனமாடச் சித்தமானார்கள். அவ்விருவருக்கும் விக்கிரமாதித்தன் ஒவ்வொரு பூச்செண்டு கொடுத்து, “நீங்கள் வெறுங்கையோடு நடனமாடுவதைவிட கையிலே பூச்செண்டு பிடித்துக்கொண்டு ஆடினால் அலங்காரமாயிருக்கும்!” என்றான்.
ரம்பையும் ஊர்வசியும் குதூகலத்துடன் ஆளுக்கொரு பூச்செண்டு வாங்கிக் கையில் பிடித்துக்கொண்டு பரத நாட்டியமாடலானார்கள்.
ஒரு முகூர்த்த காலம் அவ்வாறு இருவரும் நடனமாடி வரும்போது, ரம்பை துரித காலத்தில் ஆடிய வேகத்தில் தன் கையிலிருந்த பூச்செண்டை சற்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டாள். அப்போது பூச்செண்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வண்டு ரம்பையின் கைப்பிடிக்குள் சுரீரென்று துளைக்கவே, அவளுக்கு விஷ வேகம் ஏறி, பூச்செண்டை விட்டெறிந்து விட்டு அவள் சுருதி முதலானவை தவறி நடனமாடலானாள். ஊர்வசியோ பூச்செண்டை மிருதுவாகத் தன் கையில் பிடித்திருந்ததால். வண்டு துளைப்பிற்கு ஆளாகாமல் சுருதிலயத்துடன் ஆடிக்கொண்டிருந்தாள்.
அவ்விருவரின் சூக்ஷமங்களையும் அறிந்துகொண்ட விக்கிரமாதித்தன் சீக்கிரமாக எழுந்து நின்று சபையை நோக்கி, “ஊர்வசியின் நடனமே நுட்பமானது! ஊர்வசியே ஜெயித்தவள்! ரம்பை தோற்றவள்!” என்றான்.
“அது எப்படி?” என்று தேவேந்திரன் கேட்கவே நடனமாதர் இருவரையும் விக்கிரமாதித்தன் நோக்கி, “உங்கள் கையில் கொடுத்த பூச்செண்டுகள் எங்கே?” என்று கேட்டான்.
ஊர்வசி பூச்செண்டைத் திருப்பிக் கொடுத்தாள். ரம்பையோ முகம் சுளித்து நின்றாள்.
அப்போது பூச்செண்டிற்குள் இருந்த வண்டை விக்கிரமாதித்தன் எடுத்துக் காண்பித்து, “இந்தப் பூச்செண்டை ஊர்வசி மிருதுவாகக் கையில் பிடித்துக் கொண்டு ஆடினபடியால் வண்டு கொட்டாமல் செவ்வையாக நடனம் செய்தாள். ரம்பையோ ஆட்டத்தின் நடுவே முரட்டுத் தனமாக பூச்செண்டைப் பிடித்ததால், வண்டு கொட்டியது. அதன் வேதனையால் அவளுடைய நடனத்தின லயிப்பு மாறிவிட்டது! அதனால் ஊர்வசியே ஜெயித்தவள்!” என்றான்.
ஊர்வசி சிறந்த நடனமாது என்ற தீர்ப்பைக் கேட்டதும் தேவேந்திர சபை ஆனந்தத்தால் ஆரவாரம் செய்தது. ஏனெனில் எவள் சிறந்தவள் என்பதைத் தேவர்களால் நிதானிக்க முடியாமல் இருந்து வந்தது இத்தனை காலமும்! அதை நுணுக்கமாகப் பரீக்ஷித்து விக்கிரமாதித்தன் தெரிவித்துவிட்டான்.
தேவேந்திரன் அவனை நோக்கி, “நராதிபதியே! இருவருடைய நடன அப்பியாசத்திலும், வித்தைச் சிறப்புகளிலும் வித்தியாசம் ஒன்றும் காணமுடியாதே! ஊர்வசிதான் பூச்செண்டை மென்மையாகப் பிடித்திருந்தாள் என்பது ஒன்றே அவளுடைய வெற்றிக்குப் போதுமான காரணமாகுமா? விளக்க வேண்டும்!” என்று கேட்டான்.
“தேவேந்திரா! நடனத்தில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது அங்க அசைவுகளே. வஸந்த ராஜன் எழுதியுள்ள நாட்டிய சாஸ்திரத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது; “நாட்டியத்தில் பயிற்சியைக் காட்டிலும் இயற்கையான பாவமே முக்கியமானது என்று அக்கலையில் பெரியோர் கூறுவார். பாதங்களை எடுத்து வைப்பதில் மென்மை முக்கியம். பாதத்தை மிகவும் உயரமாகவோ, தாழ்மையாகவோ இல்லாமல் ஒரே சீராக அசைப்பது அவசியம். முகபாவம், கைகால்களின் அசைவு. இடுப்பின் நெளிவு, காதுகள் ஆகியவை இயற்கையாகவே அமையவேண்டும். முகத்தின் தோற்றமுடன் நெஞ்சம் விம்மிப் புடைத்து வடிதலும் பார்வைக்கு ரம்மியமாக இருக்க வேண்டும்.
“மேலும் ஆட்டத்தைத் தொடங்கும் முன்பாகவே, ஆடுபவர் எந்த அவஸ்தை (கருத்து) என்பதை, அதற்கென்று வகுக்கப்பட்ட தோற்றத்தின் மூலம் உணர்த்த வேண்டும். சதுரம் என்னும் அவஸ்தையை உணர்த்த அவயவங்கள் ஒழுங்காக (சதுரமாக) இருக்கவேண்டும். சமபாதம் என்பதை உணர்த்த, பாதம், கைகள் அல்லிக் கொடி போன்று துவண்டு இருத்தல் வேண்டும். இவைகளே நாட்டியத்தின் ஆரம்பத்தில் இருக்க வேண்டிய பொதுவான தோற்றம்.
“இதற்கேற்ப அவளுடைய உடல் தோற்றமோ, சரத்கால சந்திரனைப் போன்ற அழகிய முகம், நீண்ட கண்கள், தோளிL ருந்து சரிந்து தொங்கும் கைகள், உயர்ந்து உறுதியான இளம் நெஞ்சகம், வழவழவென்று மிருதுவான விலாப்பாகம், கைப் பிடியில் அடங்கும் இடை, வளைந்த விரல்களுடைய பாதம்; இவ்வாறு நிருத்தியாசாரியார்கள் வகுத்தபடி அமைந்திருக்க வேண்டும். ஆட்டத்தின் முடிவில் அவளுடைய உடல் இருக்க வேண்டிய தோற்றமோ பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது: இடது கை இடுப்பிலே வைத்திருக்கப்படவேண்டும். இடையிலே அணிந்திருக்கும் மேகலை சிறிது கீழிறங்கித் தளர்ந்திருக்க வேண்டும். மற்றொரு கையோ கீழே துவண்டு தொங்க வேண்டும். கண்கள் தரையை நோக்கியவாறு இருக்க, கால் கட்டை விரல்கள் கீழே சிதறிக் கிடக்கும் பூவி தழ்களிடையே விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். இடுப்புக்கு மேலே உள்ள பாகம் நேராக நிமிர்ந்திருக்க வேண்டும். நாட்டியம் ஆடும் பொழுது உண்டாகும் கவர்ச்சியைவிட இந்தத் தோற்றமே மிக்கக் கவர்ச்சி பொருந்தியதாக இருக்கும்.
”இன்னும் வார்த்தைகளிலே பொதிந்திருக்கும் முழு அர்த்தத்தையும் அங்க அசைவுகளின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். பாதங்கள் லயம் தவறாது எடுத்து வைக்கப்பட வேண்டும். ரசபாவம் முறைப்படி எடுத்துக் காட்டப்பட வேண்டும். நடிப்பு, கைகளின் உதவியால் மென்மையாக இருக்க வேண்டும்.
“நாட்டிய சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்விதிகளின் மூலம் ஊர்வசியே சிறந்த நடனமாது என்பதை அறிந்து கூறினேன்.”
இவ்விதம் விக்கிரமாதித்தன் கூறியதைக் கேட்ட இந்திரனும், மற்ற தேவர்களும் களிப்புற்று அவனைப் புகழ்ந்தார்கள். அவனுக்கு அநேக பரிசுகளும் ஆபரணங்களும் கொடுத்து இந்திரன் கௌரவித்தான். அவைகளுடன் ஈடு இணையற்ற நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட இரத்தின சிங்காதனம் ஒன்றையும் பரிசாக அளிப்பதாகச் சொல்லி பொக்கிஷத்திலிருந்த அதைக் கொண்டுவரும்படி கணநாதர்களுக்குக் கட்டளையிட்டான் தேவேந்திரன்.
அந்த நவரத்தின சிங்காதனத்தில் முப்பத்திரண்டு படிகளும் ஒவ்வொரு படிக்கும் ஒரு பதுமையும் இருந்தன. சிங்காதனத்தில் ஏறுவதானால், பதுமைகளின் தலையில் காலை வைத்துத்தான் ஏறவேண்டும். அந்த அதிசயச் சிம்மாசனம் முன்பு கைலாயத்தி லிருந்து தேவேந்திரனுக்கு இந்திரப்பட்டம் கட்டியபோது கொடுக்கப்பட்டதாகும்.
முப்பத்திரண்டு பதுமைகள் உள்ள விசித்திரமான அந்தச் சிம்மாசனத்தை விக்கிரமாதித்த மகாராஜனுக்குத் தேவேந்திரன் பரிசளித்து, “பூபதியே! இந்த சிம்மாசனத்தில் நீ ஏறி அமர்ந்து ஆயிரம் வருஷங்கள் வரை, ஏறின சிம்மாசனம் இறங்காமல் இராஜ்ய பரிபாலனம் செய்து வருவாய்!” என்று வரப் பிரசாதமும் கொடுத்தான்.
தேவராஜன் அளித்த இதர பரிசுகளையும் விக்கிரமாதித்தன் மன மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு அனேக ஆசிர்வாதங் களையும் அடைந்து, தேவலோகத்தாரிடம் விடைபெற்றுக் கொண்டு சிம்மாசனத்துடன் தேவவி மானம் ஏறி உஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்திற்கு வந்து சேர்ந்தான்.
– தொடரும்…
– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.