அண்டங்காத்தான்!





போர்க்களத்தில் நடந்து செல்லவே வழியின்றி சக மனித உடல்கள் வெட்டுப்பட்டு குவிந்து கிடப்பதைப்பார்க்கவே விடங்க தேசத்து மன்னன் சிங்கனுக்கு உடல் வியர்த்துக்கொட்டியது.
உடன் வந்து பார்வையிட்ட புலவர் அண்டங்காத்தான் மன்னரின் முகத்தைப்பார்க்கவே வெறுத்தார்.
“மன்னா உமது மண்ணாசையால் பல உயிர்கள் பலியாகி விட்டன….? எவ்வளவு பெரிய பாவத்தைச்செய்திருக்கின்றீர் என தெரியுமா….? உம்மைப்போலத்தானே மற்றவர்களுக்கும் ஆசைகள், உணர்ச்சிகள் இருந்திருக்கும். குடும்பம், மனைவி, குழந்தைகள், வயதான பெற்றோர் என இருப்பார்கள். போர்க்களத்திலிருந்து உயிரோடு வருவார் என எதிர்பார்த்துக்காத்திருப்பார்கள். மகாபாதகச்செயலையல்லவா செய்துள்ளீர்….” என கூறியதைக்கேட்டபின் தான் உண்மை நிலை புரிந்தது மன்னனுக்கு.
“அனைத்தும் முடிந்த பின் ஞானம் பிறந்து என்ன செய்வேன்? இந்த ஞானம் போருக்கு முன் ஏன் வரவில்லை? உங்களிடம் ஆலோசனை பெறாமல் இந்த செயலை நான் செய்து விட்டேன். இனி முன் யோசனையின்றி பின் யோசனையால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. என்னை மன்னித்து விடுங்கள்….”என சொல்லி வருந்தினார்.
‘விடங்கத்துப்போர் இனி வருங்காலத்தில் வரலாற்றில் இடம் பெறுவதோடு, பிரேதத்தோடு துர் நாற்றமும் இணைபிரியாமல் வருவது போல கொடுங்கோலன் சிங்கன் என்ற பெயரும் உலகம் உள்ளம் வரை அழியாமல் இருக்கப்போகிறது. ‘அரக்க வம்சம்’ என்று நம் அரச வம்சத்தை இனி உலகம் பேசப்போகிறது’ எனும் மன ஓட்டத்தில் எதற்கும் அஞ்சாமல் பல போர்களில் வெற்றி கண்ட மன்னனின் உடல் இந்தப்போரின் சேதத்தைக்கண்டு அஞ்சி நடுங்கியது.
‘இதற்கு பிரயாசித்தமாக ஏதாவது பெரிய நன்மையைச்செய்தே ஆக வேண்டும்’ என்று யோசித்தார்.
மனிதர்களின் சடலங்கலோடு யானைகள், குதிரைகளும் மாண்டு கிடப்பதையும், ரத்தம் ஆறாக ஓடுவதையும் பார்த்து வேதனையின் உச்சத்துக்கே சென்றார்.
மனம் உடைந்து மயங்கிய மன்னரை அவரது தேசத்து தளபதியும், வீரர்களும் பல்லக்கில் வைத்து தூக்கிச்சென்றனர்.
அரண்மனை வைத்தியர் சோதித்துப்பார்த்து விட்டு ‘உடல் சீராக உள்ளது. உள்ளம் தான் கவலையில் உள்ளது’ என கூறி ஓய்வெடுக்க ஆலோசனை சொன்னார்.
வெற்றிக்கொண்டாட்டத்தில் கலை கட்டியிருந்த அரண்மனையில் மன்னரை பூத்தூவி வரவேற்றும் முகம் மலர்ச்சியின்றி வாடியிருந்ததோடு, விருந்தில் கலந்து கொள்ள மனமின்றி படுக்கையில் பசியைப்போக்க உணவு கூட உண்ணாமல் படுத்துக்கொண்டதைக்கண்டு மகாராணி வெங்கி வேதனையடைந்தாள்.
“வெற்றியின் உயரத்தில் நிற்கும் உங்களுக்கு வேதனையும், துயரமும் எதற்கு? போர் என்பதும், அதில் பலர் மடிவதும் காலங்காலமாக நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த ஒரு வழி முறை தானே….? இன்று திடீரென ‘யுத்தம் பாபச்செயல்’ என சொன்னால் எதிரிகளிடமிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் எவ்வாறு காக்க முடியும்…?” மகாராணியின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வேறு சிந்தனையில் மூழ்கியிருந்த மன்னர், மந்திரி யவனனை அழைத்து சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.
“ஆலோசனையின் போது நமது ஆட்சிக்கு உட்பட்ட குறுநில மன்னர்களையும், இனக்குழு தலைவர்களையும், புலவர்களையும் அழைத்து வருங்கள்” என கட்டளையிட்டார்.
“மன்னா ஒரு சந்தேகம்… கேட்கலாமா…?”
“கேள்….”
“குறுநில மன்னர்கள் சரி, புலவர்கள் எதற்கு….?”
“மடையா… மன்னர்கள் என்பவர்கள் அதிகாரம் உள்ளவர்கள். அறிவுள்ளவர்கள் இல்லை என்பதை நீ இன்னும் புரிந்திருக்கவில்லையா? நான் எடுக்கவிருக்கும் முடிவிற்கு அதிகாரம் தேவையில்லை. அறிவு தான் தேவை. நல்லறிவு கொண்ட புலவர்களின் ஆலோசனைகளைக்கேட்காமல் நான் செய்த பெருங்குற்றத்தால் தானே தற்போது சித்தம் கலங்கி நிற்கின்றேன். மேலும் இது போன்ற நிகழ்வுகள் மனித குல வரலாற்றில் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்க்காகத்தானே அதிகாரத்தில் உள்ளவர்களோடு, அறிவுள்ளவர்களையும் சந்தித்து பேச ஏற்பாடு செய்யச்சொல்கிறேன்”
“கேள்விக்கு மன்னிக்கவும் மன்னா…. உடனே குறுநில மன்னர்களுக்கும், புலவர்களுக்கும் ஓலை அனுப்பிவிடுகிறேன்” என பணிந்து மந்திரி சென்ற பின் மகாராணியை தனது பக்கத்தில் அமரச்சொல்லி தனது மனநிலையை முழுவதுமாக வெளிப்படுத்தினார்.
மன்னரிடமிருந்து அவசர ஓலை வந்திருப்பதைக்கண்டு குறுநில மன்னர்களும், இனக்குழுத்தலைவர்களும் மிகுந்த கலக்கமுற்றனர்.
‘தற்போது தானே மன்னரின் பேராசைக்கு கட்டுப்பட்டு வடக்கு தேசமான அவந்தி தேசத்தை போரிட்டு வென்றதற்கு பல வீரர்களைப்பலி கொடுத்தோம். உடனே மறுபடியும் போர் என்று வீரர்களை அனுப்பச்சொன்னால் என்ன செய்வது?’ ஒவ்வொரு குறுநில மன்னர்களுக்கும், இனக்குழு தலைவர்களுக்கும் வயிற்றில் புளியைக்கரைத்தது போல் இருந்தது. வேறு வழியின்றி அழைப்பை ஏற்பதாக மறு ஓலை அனுப்பினர்.
சபை கூடியது. பல வருடங்களாக பல போரிலும் வெல்ல முடியாமல் தற்போது நடந்த பேரில் வென்று கைது செய்து விடங்கத்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவந்தி தேசத்து மன்னர் சுந்தரசேகரன் மன்னருக்கு இணையாக அமர்ந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியது. அதை விட ஆச்சர்யம் மன்னரின் இன்னொரு பக்கம் புலவர் அண்டங்காத்தானை அமரவைக்கப்பட்டிருந்தது தான்.
அண்டங்காத்தான் சாதாரண புலவர் இல்லை. சக்கரவர்த்திகளெல்லாம் மதித்து வணங்கக்கூடிய அரசியல் சாணக்யர். குருவாக இருந்து அரசர்களை வழி நடத்துபவர். நாடுகளுக்கிடையே நடக்கும் போரை தனது புத்திசாலித்தனத்தால் இரண்டு பக்கமும் பேசி நிறுத்தும் ஆற்றல் கொண்டவர். அவர் எழுதிய ‘அரச சாஸ்திரம்’ எனும் நூலைப்படித்தவர்கள் போரையே விரும்ப மாட்டார்கள். ஜீவ காருண்யக்கோட்பாடுகளை வலியுறுத்தும் நூல் என புகழப்படும் நூல்.
‘என்னதான் பெரிய புலவராக இருந்தாலும் மன்னருக்கு இணையாக அமருவது அரசர் குல வரலாற்றிலேயே இல்லையே…?’எனும் கேள்வி மக்களிடமும், மற்ற புலவர்களிடமும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடமும் எழுந்ததால் முணுமுணுத்தனர்.
அவந்தி தேசத்து மன்னர் சுந்தரசேகரனோ பெரும்புலவர்களையே விஞ்சும் அளவிற்கு புலமை வாய்ந்தவர். நல்லவர். தமது நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் அளவற்ற பற்று, பாசம் வைத்திருப்பவர். இயற்கையை நேசிப்பவர். புலவர்களால் வள்ளல் என புகழ்ந்து பாடப்பெற்றவர். மனிதருள் மாணிக்கம். அப்படிப்பட்ட சிறப்புற ஆட்சி நடத்திய ஒருவரை சிறைப்பிடித்ததும், அவரது நாட்டை படையெடுத்து பிடித்ததும் மாபெரும் தவறு என்பதை புலவர் அண்டங்காத்தான் சுட்டிக்காட்டியதை ஏற்றதாலேயே அவரையும் சிறையிலிருந்து விடுதலை செய்து தனக்கு சமமாக அமரவைத்துள்ளார் மன்னர் சிங்கன்.
விடங்க தேசம் மற்ற தேசங்களைக்காட்டிலும் அளவில் பெரியது. பல குறுநில தேசங்கள் எதிர்ப்பின்றி வரி செலுத்துவதால் மற்ற தேசங்களால் போர் தொடுக்க நினைத்தும் கூடப்பார்க்க இயலாமல் போனது. இத்தேசம் வேண்டுமானால் மற்ற தேசங்களை போர் தொடுத்து வென்றது உண்டே தவிர, மற்ற தேசங்கள் விடங்கத்தை வென்றதாக சரித்திரமே இல்லை.
அவந்தி தேசம் என்பது அளவில் சிறியதாக இருந்தாலும் இயற்கை வளம் கொட்டிக்கிடக்கும் சொர்க்க பூமியாக இருந்தது. இதன் காரணமாகவே சுற்றிலும் உள்ள தேசத்து மன்னர்களுக்கு இத்தேசத்தின் மீது ஒரு கண் இருந்தது.
முன் காலத்தில் விடங்க தேசத்துடன் சேர்ந்திருந்த அவந்தி தேசத்தை மகள் மீதுள்ள பாசத்தினால் பெண்ணுக்கு கொடுக்கும் சீர் வரிசைக்காக அப்போது நாட்டை ஆண்ட விடங்க மன்னர் மங்கன் கொடுத்து விட்டார். ஆனால் வாரிசுகளுக்கு அது பிடிக்காமல் போகவே தந்தைக்கு பின் மன்னரான சிங்கன் தங்கைக்கு கொடுத்த தேசத்தை போரிட்டு அடைய பல முறை முயன்றும் முடியாமல் இம்முறை வெற்றி கண்டு தனது நாட்டோடு இணைத்துக்கொண்டார்.
இப்போரில் இரண்டு பக்கங்களிலும் பல வீரர்கள் மாண்டதைக்கண்டு மனம் மாறியதாலேயே இச்சபையைக்கூட்டி அவந்தி தேசத்து மன்னனும் தனது சகோதரியின் கணவருமான சுந்தர சேகரனையும் தனக்கு இணையாக மதிப்பளித்து அமர வைத்தார்.
“அவந்தி தேசம் அமைதியாக இருந்தது. யாரிடமும் போரிடாமல் இயற்கையின் வளத்தை செப்பனிட்டு மக்களின் வாழ்வை செம்மைப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வந்தது. நம் தேசமும் அவ்வாறே மக்கள் நலனில் அக்கறை கொண்டு இருந்தாலும் பேராசை எனும் அரக்கன் எனக்குள் புகுந்து கொண்டதால் அத்தேசத்தைப்பிடிக்க போரிட்டு, பல வீரர்களை இழந்து அத்தேசத்தைக்கைப்பற்றியுள்ளோம்.
போர் என்பது இயற்கைக்கும், மனிதத்தன்மைக்கும் மாறான செயல் என்பதை நமது குருவும் புலவருமான அண்டங்காத்தான் எனக்குப்புரிய வைத்ததால் இனி வரும் காலங்களில் போரில் ஈடுபடாமல் நட்பாக இரண்டு தேசத்து வளங்களையும் பகிர்ந்து கொண்டு கிடைத்திருக்கும் மனித வாழ்வை சிறப்புற வாழ்வோம். அவந்தி தேசத்தை அவர்களிடமே ஒப்படைத்து விடுவோம் என்பதைச்சொல்லவே இந்த சபையை கூட்டியுள்ளேன்” என கூறி தனது சிம்மாசனத்தில் அமர்ந்தார் மன்னர் சிங்கன்.
இதைக்கேட்ட குறுநில மன்னர்களும், இனக்குழு தலைவர்களும், புலவர்களும், மக்களும் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.
‘மன்னர் சிங்கன் வாழ்க’ என எப்பொழுதும் வாழ்த்தும் மக்கள், இம்முறை ‘புலவர் அண்டங்காத்தான் வாழ்க’ என வாழ்த்தினர்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |