அட இவ்வளவுதானா?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 16, 2025
பார்வையிட்டோர்: 467 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பெயர்-” 

“பொன்னுப்பிள்ளை” 

“மிஸ்டரின்ரை பெயர்” 

“உங்கடை அவரின்ரை பெயர்” 

“அவர் இல்லை. இல்லாத ஆளை இப்ப என்னத்திற்கு என்ற பொன்னுப்பிள்ளை சனங்களைப் பார்க்கத் தொடங்கினாள். அவரின்ரை முகத்தினைத் தேடினாளா? 

அதிகாரியின் முகத்தில் அத்து மீறாத அதிகாரம் வெளிப்பட்டது. “எங்கை அவர்’ சுத்தமான தமிழ் உச்சரிப்பு காரம் சேர்ந்திருந்தது. “அவர் செத்துப் போனார்”. எந்தவிதமான ஈரமும் இல்லாமல் பட்டென்று பதில் சொன்னாள் பொன்னுப்பிள்ளை. 

“அவரின்ரை பேரைச் சொன்னால் காணும்” 

“தம்பையா” 

“விலாசம்” 

“ஆரின்ரை” 

“உங்கடைதான்” 

“பூவோசுைடலையடி எச்சாட்டி…” சொல்லிக் கொண்டே போனாள். 

அதிகாரி தலை விறைத்துப் பொன்னுப்பிள்ளையைப் பார்த்தான். 

“வயது” 

“அறுபத்தியொன்று 

“அடையாள அட்டை இலக்கம்” 

“எந்த அடையாள அட்டை” 

“தேசிய அடையாள அட்டை” 

பொன்னுப்பிள்ளை கையில் இருந்த அட்டைகளை மேசையில் பரப்பினாள். சந்தைக் கடையாக அது விரிந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் – சிரித்து, நெளித்து, கண்சிமிட்டி, பல்லைக்காட்டி 

அதில் ஒன்றை இழுத்தெடுத்த அதிகாரி அதைப் பார்த்து பதிய ஆரம்பித்தான். 

“383546300 V – இலங்கைத் தமிழ்’ 

பதிவு முடிய எல்லா அடையாள அட்டைகளையும் விநோதமான ரசனையுடன் பார்த்த அதிகாரி “காணாமல் போனது ஆர்” என்ற கேள்வியைத் தொடுத்தான். 

அந்த மண்டபம் முழுக்க ஆட்கள் அழுத கண்களும், சிந்திய மூக்குக்களுமாக ஆண்களும் பெண்களும் புலம்பிக் கொண்டிருந் தார்கள். 

அவர்களின் புலம்பல்கள் அடுக்கடுக்காக வட்டம் போட்டு மேற்கிளம்பின. பிறகு ஒன்றின் மீது ஒன்றாகப் படியத் தொடங்கி இருக்க வேண்டும். 

அந்த அகன்ற மண்டபத்தின் கூரைகளைத் தாண்டி அப்பால் போகாமல் உள்ளுக்குள்ளேயே தம் சோகங்களை வெளிப்படுத்- திக் கொண்டிருந்தன. 

ஆட்களின் நெருக்கமும் அவர்களின் அவலங்களும் சேர்ந்து மண்டப வெளியின் காற்றினை மூச்சடைக்கப் பண்ணின. உஷ்ண சுவாசமும் வேதனையில் முக்குளித்த துயரங்களும் தத்தளித்தன. 

ஆட்கள் வரிசையாக நிற்பது போலவும், வரிசை இல்லாமல் நிற்பது போலவும் பாத்திரத்தினுள் ஓடும் பாதரசமாக நின்றிருந்தனர். 

பளீர் என்ற விசாலமான மேசைளின் முன் அதிகாரிகள் தண்டனைக் கைதிகள் போல கதிரைகளில் அழுந்த உட்கார்ந்திருந்தனர். அவர்கள் முன்னால் இருந்த கதிரைகளில் அந்தக் கதிரை- களுக்குப் பொருத்தமில்லாத ஆட்கள். 

அதிகாரிகளிற் சிலர் வானில் பூசினாற் போல மினுமினுப்பாக இருந்தார்கள். எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் மட்டமாய் வெட்- டப்பட்ட தலைமயிர், ஒருவர் மாத்திரம் கொஞ்சம் சுருட்டை, பால் நுரையில் வார்க்கப்பட்டது போல இரண்டு பேர் வெள்ளை முழுக்கை சேட்டுக்கள். வேறு இரண்டு பேர் அடக்கி ஒடுக்கப்பட்ட நீல,மஞ்சள்,நிறச் சேட்டுக்கள். பாம்புத் தோல் போல வழுவழுத்தரைகள். 

அதிகாரிகளின் உடைகளில் இருந்த “சிவில்”தனம் பார்வையிலும் தோற்றத்திலும் இல்லை. புறம்போக்காக இருந்த ஒருவரின் முகம் குளத்தில் முக்கி எழுந்தவர் போல சோர்ந்து போய் இருந்தது. 

மூப்பை ஓரங்கட்ட படு பிரயத்தனம் எடுத்து ஆனால் ஆட்களின் அமளிபோல அது கட்டுப்படாது இருந்தது. 

நரையோடிய தலைமுடி கழுத்து வரை வளைந்திருந்தது. தாடை – யில் சதை மடிப்பு முகத்தினை உப்பலாக்கியது. பவுண் நிற பிறேம் போட்ட கண்ணாடியை எடுத்து முகத்தை துடைத்த போது அவரின் சலிப்பு தலை நீட்டியது. எல்லா அதிகாரிகளும் களைத்திருந்- தார்கள். கதைத்துக் கதைத்துக் களைத்ததா என்பது புரிய- வில்லை. ஆட்களின் அமளியை விட அவர்களின் அவலங்களின் அடுக்குகளின் பாரங்களால் அதிகாரிகள் மூச்சுத் திணறினார்கள். அந்த அந்தரிப்பினைப் போக்க அவர்கள் விட்ட சிகரெட் புகை கூட போக வழியில்லாது மேசைகளின் முன்னாலேயே உயிர்பிளந்து துடித்தது. 

வெள்ளை வேட்டி, நாசினல், தோளில் தொங்கிய சால்வை சகிதம் தன்முகக் கொள்ளளவை விட அதிகமாகச் சிரித்து வந்த பிரமுகர் ஒருவர் முகம் துடைத்துக் கொண்டிருந்த அதிகாரி முன்னால் வந்து நின்றார். 

அதிகாரி சற்றே தலை நிமிர்த்த அவனின் பார்வையின் கூரிய முனை பிரமுகரின் நெற்றிப் பொட்டில் தைத்தது. 

“நான் கனகசபை…… சங்கத்தின் செயலாளர் “ஓ.ஐ.சீ.நீங்களா? இருங்கோ 

அதிகாரியின் கூரிய பார்வையில் சுவிட்ச் போட்டது போல ஏசியாகிற்று. முதல் இருந்த வெம்மை மேசையில் இருந்த ‘அவுட்’ றேக்குள் ஒளிந்தது. 

“சொல்லுங்கோ என்ன விசியம்” 

“நான் ஒரு அலுவல் அல்ல நாலைஞ்சு அலுவலாக கண்டு மீண்டது என்றாலும் அதனை வெளிக்காட்டவில்லை”. 

“சொல்லுங்கோ” 

“நீங்கள் நல்லாய் களைச்சுப் போனீங்கள் போல” என்று கேட்ட கனகசபையின் பார்வை குழையடிக்க ஆரம்பித்தது. 

“சரியான கிறவுட். சனங்களுக்கு உதவி செய்யத்தானே நாங்கள் வந்திருக்கிறம். ஆனால் அதை சனம் ஏற்றுக் கொள்ளுறதாய் இல்லை. பெரிய கரைச்சல்” சுழித்த முகத்தின் இரு பக்கங்கள் ஊடாகவும் வெறுப்பு வடிந்தது. அது உண்மைதான்.சனம் எல்லாத்துக்கும் அவசரம் தான். 

பருத்துச் சிவந்த முகத்தில் வியர்வைத்துளிகள் மணற்பரப்பில் துருத்திக் கொண்டு நிற்கும் மேடுகள் போல கையில் இருந்த தடித்த கோவைகளை மேசை மேல் பரத்தினார் கனகசபை. 

குழியில் அடக்க மறுத்த சடலத்தின் கை கால்கள் போல கோவைகள் ஊடாக தாள்கள் மிதத்திக் கொண்டிருந்தன. 

“நீங்களும் யாராவது காணாமல் போன ஆட்கள் தொடர்பாக டிஸ்கஸ் பண்ண வந்தனீங்களோ” முகத்தில் கண்ணாடியைப் பொருத்தி எதையோ பார்வையிட வெளிப்பட்டவர் போல அதிகாரி காணப்பட்டான். 

இல்லையில்லை அப்பிடி ஒரு பிரச்சினை இல்லை. அதுகளை அந்தந்த ஆட்களே பார்க்கிறது நல்லது என்று விட்டிட்டம். அதுக்கெல்லாம் தனித்தனி அமைப்புக்கள் இருக்குந்தானே”.ஓ. ஐ.சி. தோள்களை உதறிய அதிகாரி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான். தாங்கள் கதைப்பதையே சனங்கள் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கவும் கண்டான். 

பொன்னுப்பிள்ளையும் ஓரமாகவே நின்று கொண்டிருந்தாள். அவள் மனக் கூண்டுக்குள் அந்த நினைப்பு மாத்திரம் சிறகடித்துக் கொண்டிருந்தது. அது அவளின் உயிரோடு ஒட்டிக் கொண்- டிருந்தது. அவளின் இரத்தத்தின் இரத்தமாய் வளர்ந்து உ ரு- வெடுத்தது. நெஞ்சு நிமிர்த்தியதின் நினைப்பு. 

ஆயிரத்துத் தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஆறில் காணாமற் போய் வெறுமனே அந்த நினைப்பும் தவிப்பும் தான். நெஞ்சகத்தினுள் குடி கொண்டு விட்டது. அவளுக்கு மாத்திரமல்ல அவளைப் போல எத்தனையோ பேர் பாரக் கூண்டுகளை நெஞ்சிற் சுமந்தபடி தம் உணர்வுகளை மனசுக்குள்ளேயே வைத்து புடம் போட்டுக் கொண்டு கனகசபை சுற்றி சுற்றிப் பார்த்தார். சுற்றிலும் ஆட்கள் தான். பழுத்துப் போன முகங்கள் புதிதுபுதிதாக விரிந்து கொண்டு போகும் எதிர்பார்ப்புக்களும் விழியோரங்களின் ஈரப்பசைத் தவிப்புக்களுடன். 

“என்ன மிஸ்டர் கனகசபை” 

அதிகாரி சோர்வினைத் தவிர்த்துக் கொண்டு கனகசபையை வார்த்தைகளால் தீண்டினான். 

“இல்லை” மென்று விழுங்கினார் கனகசபை. 

“என்ன” 

“நான் கதைக்க வந்தது தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை”

“அப்ப” 

“பொதுப்பிரச்சினை, ஆட்கள் எல்லோருக்குமானது” 

“ஓ போக்குவரத்து பிரச்சினையா? அது சரியான பிரச்சினைதான். நாங்களும் வலுவாய்த் தெண்டிக்கிறம். எப்பிடியும் கப்பல் போக்குவரத்து செய்து போடலாம் கிழமைக்கு இரண்டு தடவை- யாவது ….” என்று நீண்ட அதிகாரியின் உரையினை கனகசபை வெட்டி இடைமறித்தார். 

“அது தெரியும் தானே. நான் கதைக்க வந்தது அதுவல்ல” கண்களைக் குறுக்கிக் கொண்ட அதிகாரி. 

“அப்ப” 

கனகசபை சுற்றிலும் பார்வையால் ஒரு வட்டம் போட்டார். 

“மீளக் குடியேற்றப் பிரச்சினை தானே. அதுக்கு இப்ப ஒண்டும் செய்யேலாது என்று தான் எங்களுக்கு மேல இருக்கிற ஆட்கள் சொல்லினம். ஏனென்டால் அதெல்லாம் பாதுகாப்போடை சம்பந்தப்பட்டது. கிட்டத்தட்ட நாற்பது ஜீ.எஸ்.டிவிசனில் உங்கட பக்கத்தில் மாத்திரம் ஆட்களை குடியேற்றாமல் இருக்குது” 

கனகசபை மீண்டும் குறுக்கே ஓடினார். 

“உதெல்லாம் தீர்க்க முடியாத பிரச்சினை எண்டு தெரியும் தானே”

அதிகாரி முகத்தில் மெல்லென சிரிப்பு கிளம்பியது. அத்துடன் இந்த மனிசன் என்ன கேட்கப் போகின்றார் என்ற முன்னூகிக்க முடியாத ஒரு அந்தரமும் ஏற்பட்டது. 

“ஆஸ்பத்திரிகளில் மருந்துப் பிரச்சினைகளா? மருந்துகளை தாராளமாய் அனுப்ப நாங்களும் எங்கட உயர் அதிகாரிகள் எல்லாரும் முயற்சி எடுக்கிறம் தான். எண்டாலும் பாதுகாப்பு அனுமதி அது இது எண்டு இழுபட்ட சரியான ரைமுக்கு அனுப்ப முடியாமல் போகுது” 

கனகசபை சிரத்தை இல்லாமல் இந்தப் பதிலை கேட்கும் போதே அதிகாரிக்கு விளங்கி இருக்க வேண்டும். தன் பேச்சை இடைநிறுத்திக் கொண்டு. 

“மிஸ்டர் கனகசபை கெதியாய் சொல்லுங்கோ – நான் கொஞ்ச நேரம் றெஸ்ட் எடுக்க வேணும்” என்றான் சலிப்புத் தடவிய குரலுடன். 

மீசை முறுக்கி முகம் பெருத்த நடுத்தர வயதுக்காரன் ஒருவன் ரீ கப்புக்களை மேசைகள் மீது லாவகமாக வைத்தபடி சென்றான். 

அதிகாரியின் கண் அசைவின் படி கனகசபைக்கும் ஒரு கப் கிடைத்தது. ஆட்கள் தரையில் வேர் விடத் தொடங்கிய கால்- களை அசைக்க முடியாமல் பொறுமை காத்தனர். 

“என்ரை உயிரைத்தான் காணேல்லை” பொன்னுப்பிள்ளை சொன்னாள். அதிகாரியின் மேசை மீது அவள் உயிரின் முகம் ஒளிப்பிழம்பாக தகித்தது. அதன் ஒளியில் அவள் விழிகள் துடித்தன. அவள் விழிகளை மூடிக் கொண்டாள். 

அவள் பதிலால் அதிகாரி பிசாசைக் கண்டவன் போலானான். தன் கீழ் கை கட்டி சேவகம் புரியும் ஒருவன் நெஞ்சு நிமிர்த்தி கேள்வி கேட்டால் எப்படி இருக்குமோ அப்பிடி அந்தரித்து கதிரையின் நுனிக்கு வந்தான். 

“ஏய் கிழவியாரைக் காணேல்லை” 

*என்ரை உயிரைத்தான் காணேல்லை” பொன்னுப்பிள்ளை எந்தவித வன்முறையாலும் வெளிப்படாத வாக்கு மூலமாக வெளிப்படுத் தினாள். 

சிறுபொழுது மெளனம் காத்த அதிகாரி தலை நிமிர்ந்த போது அவன் முகம் வன்மத்தோடு உறுமத் தலைப்பட்டது. வாயின் கோடிகளில் வேட்டைப்பற்கள் வேட்கையுடன் வெளிக்கிளம்பின. 

ஒரே பார்வையில் பொன்னுப்பிள்ளையை உதைத்தான். அந்த உதையால் அவள் வான் மண்டலத்திற்கு போயிருக்க வேண்டும். நல்ல வேளை மண்டபக் கூரை மூன்றாம் தரப்பாக வந்து விட்டது. தலையை தடவிக் கொண்ட அவளுக்கு அதிகாரியின் கோபம் புரிந்தது. 

ஆனால் அதனை அவள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. கோபப்படாத அதிகாரிகளை அவள் வாழ்க்கையில் எப்போது தான் பார்த்திருக்கிறாள். 

அதிகாரி கசக்கிக் குப்பைக் கூடைக்குள் போடும் கழிவுத் தாளாக அவளைக் கழித்தான். எங்கேயோ போக வேண்டியது திசை மாறி வந்து விட்டது என அர்த்தம் செய்து கொண்டு “அடுத்த ஆள்” என்றபடி சிகரெட் ஒன்றினை வாயினால் கௌவி நெருப்பு மூட்ட ஓலைக் குடிசைக்கு வைக்கப்பட்ட தீயாக பற்றிக் கொண்டு அது பின் அணைந்தது. 

பொன்னுப்பிள்ளை அசைவில்லாமல் உறைந்து போய் நின்றாள். நேரம் நீண்டு கழிந்தது. “அடுத்த ஆள்” மீண்டும் அதிகாரி. 

பொன்னுப்பிள்ளை அதிகாரியை தீரத்துடன் பார்த்தாள். என்னை ஒதுக்கி விட்டு அடுத்தவரை அழைப்பதன் காரணம் என்ன? என்ற தொனி அதில் இருந்தது. 

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ஆட்கள் எல்லாம் ஏன் இங்கு வருகின்றீர்கள்?’ உறுமினான் அதிகாரி. 

“நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியாச்சு” 

“என்ன” 

“என்ரை உயிரைக் காணேல்லை” 

“….”

“அடுத்த ஆளை விடு” 

கூட நின்றவர்கள் பொன்னுப்பிள்ளை பின்னால் நெருங்கி நின்றார் கள். அவர்கள் கருத்தொருமித்த செயற்பாடு அதில் புரிந்தது. 

தீர்க்கமான முடிவுடன் பொன்னுப்பிள்ளை அதிகாரியைப் பார்த்தாள் பிறகு… 

“என்ன முடிவு சொல்லுறியள்”? 

அதிகாரி முன்னால் மீண்டும் புயல் அடித்தது. அவள் சீறிக் கொண்டு எழும்பினாள். கழுத்து நெரிபடுகையில் எழும் அடிக்குரலாக கதிரை தரையில் தேய்த்து சத்தம் போட்டது. 

பொன்னுப்பிள்ளை சிரித்தாள். வரண்ட சிரிப்பு. அதில் கேலிகள் பாளம் பாளமாய் வெடித்து பிரிந்தன. 

அதிகாரிக்கு யாரோ கால்களை வாரிவிட்டது போல இருந்தது. பொன்னுப்பிள்ளை சிரித்த சிரிப்பு தன் முன்னால் விஸ்வரூபம் எடுத்து தன்னையே விழுங்கி விடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. 

அந்த இடத்தினை விட்டு அக்கணமே மறைந்து விட வேண்டும் என்ற எண்ணம் உந்தித் தள்ளியது. ஓடு தளத்தில் ஓடிக் கிளம்பத் தேவையில்லாத ஹெலி கொப்டர் ஒன்று வந்தால் நல்லது போலவும் பட்டது. 

அவனது மேசையைச் சுற்றி ஆட்கள் சந்தை மீன் வியாபாரியைச் சுற்றி நிற்பவர்களைப் போல அவளையே பார்த்துக் கொண்டு. 

விரைவாக நகர முடியவில்லை. பரிதாபமாக, அல்லாட முனைந்த அதிகாரிக்கு உதவ வந்தவர் கனகசபை, ஆட்களை விலத்தி அதிகாரியை வெளியேற்றுவதற்கு இடையில் அவர் களைத்து விட்டார். 

– ஈழநாதம், 31-07-1999. 

– மணல்வெளி அரங்கு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மாசி 2002, தேசிய காலை இலக்கிய பேரவை, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *