அடையாளம் தந்தது ஆசை தீர்ந்தது

கண்ணபிரானுக்கு இருப்பு கொள்ளவில்லை. அதை எப்படியாவது செய்து பார்த்து விட வேண்டும் என்ற ஆசை தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ‘எண்பத்து நாலு வயசுக்கு இந்த கிழத்துக்கு இப்படி ஒரு ஆசை கூடாது’ என்று எல்லோரும் சொல்வார்கள் என்பது மனதில் பட்டாலும், அவரால் அணை போட முடியவில்லை. நாளைக்கு மதியம் ஊரிலிருந்து வந்திருக்கும் தம்முடைய பெண், பேத்தி, பேத்தி கணவர், குழந்தைகள், பேரன் இவர்கள் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நாம் இதை செய்து விடலாம் என்று எண்ணினார்.
ஆனால் பேரன் அதை உள்ளே கொண்டு போய் வைத்து விட்டால் என்ன செய்வது என்று ஒரு கணம் கவலையுற்றார். அவன் உள்ளே எடுத்துப் போகாதபடி அவனிடம் ஏதாவது காரணம் சொல்லி தடை போட்டு விடலாம் என்று சமாதானப்படுத்திக் கொண்டார் தன்னை.
‘சின்ன வயதில் ஆர்வத்துடன் ஆரம்பித்து கிட்டத்தட்ட அறுபத்தைந்து வயது வரை இந்த பழக்கத்தை விடாமல், யார் சொல்வதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்துட்டு அப்புறம் இனி போதும்னு நிறுத்திட்டேன். ஆனால் இப்ப மறுபடியும் ஒரு தடவையாவது அதை செஞ்சு அந்த சந்தோஷத்தை அனுபவிக்கணும்னு ரெண்டு மாசமா மனசுல உறுத்திட்டே இருக்கு. இந்த முறை அதுக்கு ஒரு முடிவு கட்டிடுவோம்’ என்று தனக்குள் பேசிக் கொண்டார் கண்ணபிரான்.
அன்று இரவு வரை வெளியே வராண்டாவில் இருந்த மேசையை கண்காணித்துக் கொண்டே இருந்தார். நல்ல வேளையாக அந்த பாக்கெட் அங்கேயே இருந்தது. பேரன் உள்ளே எடுத்துப் போகவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி, அதன் மேலிருந்த வழவழவென்று சுற்றப்பட்ட தாளை தடவிவிட்டு தூங்கச் சென்றார்.
மறுநாள் காலை எப்போதும் போல வீட்டில் பரபரப்பு. அதுவும் விருந்தாளிகள், அதிலும் மிக இஷ்டமான உறவுகள் குழந்தைகளுடன் வந்து விட்டால் கேட்கவே வேண்டாம். கண்ணபிரான் வழக்கம் போல் சீக்கிரம் எழுந்து அவருடைய சில மூச்சு பயிற்சி, எளிதான யோகாசனங்கள் இவைகளை செய்து விட்டு வெளிப்புறம் இருந்த சாய்மான நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
கண்ணபிரானுக்கு அந்த காலை காஃபி அவசியம் வேண்டும். அதை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை அவர். அதற்காக காத்துக் கொண்டிருந்தார்.
ஊரிலிருந்து வந்திருந்த பெண் அகல்யா “அப்பா, இந்தாங்க காஃபி, ராத்திரி நல்லா தூங்கினீங்களா அப்பா? நாங்க எல்லாரும் பேசிட்டு இருந்தது தொந்தரவா இருந்ததா?” என்று சிரித்தபடி கேட்டாள்.
காஃபியை வாங்கிக் கொண்டு “சேச்சே, அதெல்லாம் ஒண்ணும் இல்லேம்மா. இப்படித்தான் வீடு கலகலன்னு இருக்கணும். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. குழந்தைங்க எழுந்திருச்சுட்டாங்களா? இன்னிக்கு என்ன ப்ளான் வச்சிருக்கீங்க?” என்று கேட்டு காஃபியை அருந்தினார்.
அவர் நீட்டிய டம்ளரை வாங்கியபடி “இன்னும் தெரிலப்பா. இவங்க எல்லாம் எழுந்திருச்சு முதல்ல நாளைத் தொடங்கட்டும். அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டே அகல்யா உள்ளே சென்றாள்.
கண்ணபிரான் ‘இன்னும் ஐந்து மணி நேரம் தள்ளணும். அதுக்கு முன்னாடி அதுல ஒண்ணை எடுத்து நம்ம கிட்ட வச்சுக்கணும். நான்தான் பன்னண்டு மணிக்கு முன்னாடி சாப்பாடு முடிச்சுடுவேன். இவங்க ஒரு மணிக்கு லன்ச்க்கு உட்காரும்போது நாம் அதை செஞ்சுடலாம். மேட்ச் பாக்ஸ் எடுத்து வச்சுப்போம் முதலில்.’ என்று தனக்குள் பேசிக் கொண்டார்.
மதியம் சரியாக பனிரெண்டு மணி ஆவதற்கு முன்பே கண்ணபிரான் சாப்பாட்டை முடித்துக் கொண்டார். அவர் பெரும்பாலும் காலையில் சில பழங்கள் மட்டும் எடுத்துக் கொண்டு மதிய உணவை சீக்கிரம் முடிப்பார்.
ஒண்ணேகால் மணிக்கு எல்லோரும் உள்ளே சாப்பிட உட்கார்ந்தனர். கண்ணபிரான் எதிர்பார்த்த அந்த நேரம் வந்துவிட்டது. மெள்ள எழுந்து தான் வெளிப்பக்கம் மறைத்து வைத்திருந்த அந்த பாக்கெட்டை எடுத்து ஆசையோடு தடவினார். அதன் மேலிருந்த மிருதுவான பேப்பரை பிரித்தார். “ஆஹா, எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது! இந்த சான்ஸை விடாமல் இன்னிக்கு அனுபவிச்சுடணும்.” என்று சொல்லி தீப்பெட்டியை எடுத்து வீட்டின் வெளிச் சுவர் பக்கம் சென்றார். பாக்கெட்டில் இருந்து எடுத்ததை கையில் பிடித்து பிறகு அங்கே மூலையில் இருந்த சிமெண்ட் தரையில் ஒரு பேப்பரை வைத்து அதன் மேல் வைத்தார். தீப்பெட்டியை எடுத்து பற்ற வைத்து புகை லேசாக வரும் போது யாரோ வரும் சத்தம் கேட்டது. அந்த இடத்தை விட்டு முடிந்த வரை உள் பக்கம் வேகமாக ஓடி வர ஆரம்பித்தார். நான்கடி கடந்ததும் ஒரு கல் ஒன்று தடுக்கி தடுமாறி விழ, முழங்கால், தோள்பட்டையில் அடிபட, முகம் கீழே தரையில் பட்டு கன்னம், நெற்றியில் சிராய்ப்பு ஏற்பட, அதிர்ச்சியில் அரைகுறை மயக்கமானார். “தாத்தா, தாத்தா, என்னாச்சு, அப்பா, என்னப்பா” யார் யாரோ என்னவோ கேட்பது காதில் விழவில்லை. “டமார், படார், டம் டம்” என்று எங்கேயோ சத்தங்கள் கேட்க முழுவதுமாக மயங்கிப் போனார்.
கண்ணபிரான் கண்விழித்த போது இரவு எட்டரை மணி. அவர் மனைவி பரிமளம் “ஏங்க இப்படி?” என்று மெல்லிய குரலில் கேட்டாள். அகல்யா “அப்பா, ஞாபகம் இருக்கா, நீங்க வெடி சரத்தை பத்த வச்சுட்டு ஓடி வந்தீங்க. அப்படியெல்லாம் ஓடமுடியுமா உங்களால? உங்களுக்கு இந்த சரவெடி வெடிக்கற ஆசை இன்னும் போகலையா? நல்ல வேளை, ஒண்ணும் எக்குத்தப்பா அடியெல்லாம் படலை. இப்ப ஆஸ்பத்திரியில் இருக்கீங்க. கவலை வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டார்.” என்று சொல்லி சிரித்தாள்.
“தாத்தா, சரவெடியை சூப்பரா வச்சு பத்த வச்சிருக்கீங்க. அட்டகாசமான சத்தத்தோட வெடிச்சது. எக்ஸலண்ட் தாத்தா” என்று பேரன் பாராட்டினான். “எனக்கு இன்னிவரை சரவெடி வெடிக்கும் போது பயமா இருக்கும். ஆனால் தாத்தா ஜாலியா வெடிச்சுட்டாரே! ஆச்சரியமா இருக்கு. சூப்பர் தாத்தா” என்று பேத்தி புகழ் பாடினாள்.
பேத்தி கணவர், சின்ன குழந்தைகள் எல்லோரும் ‘கண்ணபிரான் தாத்தா சூப்பர்மேன்’ என்று சொல்லி சிரித்தார்கள்.
“அவர் கொஞ்ச நாளாவே இந்த டிவியில் வெடி வெடிக்கும் காட்சிகள் வரும் போது சொல்லிட்டே இருப்பாரு. ‘பரிமளம், எவ்வளவு வருஷம் ஆயிடுச்சு, நான் இந்த மாதிரி சரவெடி வெடிச்சு? ஒரு நாள் செஞ்சு பாத்துடணும்’ அப்டின்னு ஆசைய வச்சுட்டு இன்னிக்கு நடத்தி காண்பிச்சுடார்” என்று பரிமளம் பெருமையுடன் சொன்னாள்.
இவைகளை எல்லாம் பார்த்தும் கேட்டும் இருந்த கண்ணபிரான் லேசான புன்னகையுடன் எல்லோரையும் பார்த்து மெல்லிய குரலில் “ரொம்ப நாள் ஆசை கண்ணுங்களா, அது தீர்ந்தது மட்டும் இல்லை ஒரு அடையாளத்தையும் தந்துட்டு போச்சு” என்றார்.
![]() |
பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க... |