காமராஜ் நாற்காலி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 2,281 
 

(இதற்கு முந்தைய ‘கண்ணீர்த் துளிகள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

அதிகாரத்தில் இருக்கும் போதும்; அதிகாரத்தில் இல்லாதபோதும் என அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்கள் எதிர்கால இந்தியாவில் அரசியல்களுக்கான அங்கீகாரங்களை எப்படியெல்லாம் மாற்றிக் கொள்ளும் மனசாட்சி இல்லாத செயல் முறைகளை மேற்கொள்கிறார்கள் என்பதற்கு ஈவேராவின் மன மாற்றத்தை அவன் அப்பா ஒரு உதாரணமாகப் பார்த்தார். பெரியாரிடம் அப்பா இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. இது அவரை மிகவும் சோர்வடையச் செய்திருந்தது.

1967 சட்டசபைத் தேர்தலில் தோற்றுப் போயிருந்த காமராஜ் வெகு சீக்கிரம் நாகர்கோயில் மக்களவைக்கான தேர்தலில் போட்டியிட்டு எளிதாக வெற்றி பெற்றதில்கூட அவன் அப்பா பெரிய மகிழ்ச்சி அடைந்து விடவில்லை. அந்தத் தேர்தல் பணியிலும் அவர் முழு மூச்சுடன் ஈடுபடவில்லை.

சில நாட்கள் நாகர்கோயிலுக்குப் போய் வெறுமே வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வந்தார். இந்தியா பற்றிய சில நம்பிக்கைகளை அப்படி அவரின் உள் மனதில் இழந்து விட்டிருந்தார். அப்பாவின் இந்த அவ நம்பிக்கைகள் மேலும் அதிகமாகும் விதத்தில் அடுத்தடுத்த சம்பவங்கள் இந்திய அரசியலில் நடைபெற ஆரம்பித்தன.

பிரதமர் இந்திராகாந்தி பல கொள்கைகளில் கட்சியின் மூத்தத் தலைவர்களின் அபிப்பிராயங்களுக்கு முற்றிலும் மாறாக நடக்கத் தொடங்கினார். கட்சிக்குள் அபிப்பிராய பேதங்கள் கடுமையாயின. காமராஜ் உட்பட மூத்த தலைவர்களை இந்திராகாந்தி வெளிப்படையாகவே அலட்சியப் படுத்தினார். பின் ஒரு கட்டத்தில் மூத்த தலைவர்கள் அனைவரையும் மொத்தமாக நிராகரித்துப் புறக்கணித்தார்.

காங்கிரஸ் கட்சி இதன் விளைவால் உடைந்தது. காமராஜ், நிஜலிங்கப்பா போன்ற மூத்த தலைவர்களின் அணி ஸ்தாபன காங்கிரஸ் எனவும்; இந்திராகாந்தியின் அணியினர் இந்திரா காங்கிரஸ் எனவும் பெயர் கொண்டனர். அந்த நேரம் மெட்ராஸில் இருந்த அவன் விருதுநகர் புறப்பட்டுப் போனான்.

அவன் அப்பா கிட்டத்தட்ட மெளன விரதத்தில் இருந்தார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ் என்பது காமராஜை சார்ந்ததாகவே இருந்தது. இருந்தாலும் காமராஜ் போன்ற மூத்த தலைவர்களை உதாசீனம் செய்து கட்சியை உடைத்து விட்டிருந்த இந்திராகாந்தியின் அரசியல், காமராஜின் ஆதரவாளர்களின் மனங்களில் பெரும் காயத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்திராகாந்தி பற்றிய அவன் அப்பாவின் சில பயங்கள் உண்மையாகி விட்டிருந்தன. இந்திரா இதோடு நிற்கமாட்டார் என்றே அப்பா கவலைப் பட்டுக் கொண்டிருந்தார். விரைவிலேயே இந்திராகாந்தியின் சுபாவம் ஒன்றைக் காட்டுகிற சம்பவம் நடந்தது.

நாகர்கோயிலில் ரயில்வே துறையின் ஒரு விழா பாரதப் பிரதமரான இந்திராகாந்தியின் தலைமையில் நடைபெற்றது. அந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்கிற முறையில் காமராஜ் அந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று ரயில்வேதுறை அவரிடம் கேட்டுக்கொண்டது. அதன்பேரில் காமராஜும் அந்த விழாவில் பங்கு பெற்றார். மேடையிலேயே காமராஜும் அமர்ந்து இருந்தார்.

ஆனால் அந்த விழா நிகழ்ச்சியின் போது இந்திரா காமராஜிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. காமராஜை அவர் ஏறிட்டும் பார்க்கவில்லை. இந்தச் சம்பவத்தால் காமராஜ் மனம் உடைந்து போனாரோ இல்லையோ; அவன் அப்பா மிகவும் மனம் உடைந்து போனார். அதிர்ந்தும் போனார். இந்திய அரசியல் அப்பாவின் நம்பிக்கைகளை முற்றிலுமாக தகர்த்துப் போட்டிருந்தது.

இந்த நேரத்தில் 1972 ல் வர வேண்டிய தமிழக சட்டசபைத் தேர்தலை 1971 ம் ஆண்டிலேயே சந்திக்கும்படி அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி முற்பட்டு நிறைய ஏற்பாடுகளை செய்து விட்டிருந்தார். அவன் அப்பா அந்தத் தேர்தலில் முழுமையான ஆர்வம் காட்டவில்லை. தேர்தல் பணிகளிலும் பங்கு பெறவில்லை.

தேர்தலில் காமராஜின் ஸ்தாபன காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெறப் போகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் ஒட்டு மொத்தமாகக் கருதினார்கள். ஆர்.வெங்கட்ராமன் முதலமைச்சர் ஆவார் என்ற செய்திகள் வந்து கொண்டிருந்தன.

ஆனால் நேர் விரோதமாக அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குவதாகக் கூறி காமராஜ் தோல்வியை ஏற்றுக்கொண்டு மெளனத்தில் ஆழ்ந்துவிட்டார். எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. பத்திரிகைகள் எதற்கும் பேட்டி கொடுக்கவில்லை.

ஆறு மாதங்கள் காமராஜ் அவருடைய மெட்ராஸ் திருமலைப்பிள்ளை தெரு வீட்டை விட்டு வெளியேறவில்லை. பிப்ரவரி மாதம் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த பின், ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக வீட்டை விட்டுக் கிளம்பி வெளியூர் பயணம் மேற்கொண்டது, அவன் ஊரான விருதுநகரில் நடந்த அவனுடைய இளைய சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்குத்தான். அதனால் அவன் சகோதரியின் திருமணம் அப்போதைய அனைத்து தினசரிகளிலும் செய்தியாக வெளிவந்தது.

அந்தக் கால வழக்கப்படி அந்தத் திருமணம் அவன் வீட்டில்தான் நடந்தது. பெரிய இடைவெளிக்குப் பிறகு விருதுநகர் வரும் காமராஜைக் காண ஊரே அவன் வீட்டின் அருகே திரண்டிருந்தது. அவனுடைய அப்பா காமராஜை மாலையிட்டு வரவேற்றார்.

நாற்பது வருட நண்பர்கள் வித்தியாசமான சூழலில் மன நெகிழ்ச்சியோடு சந்தித்துக்கொண்ட இதமான சம்பவமாக காமராஜின் வருகையை அவன் பார்த்தான். அவன் வீட்டின் மைய ஹாலில் அழகான கலைச்செறிவு கொண்ட வட்டமான மேஜை ஒன்று போடப்பட்டு அதைச் சுற்றிலும் மூன்று அழகிய நாற்காலிகள் இருக்கும். காமராஜ் எப்போது அவன் வீட்டுக்கு வந்தாலும் அந்த மூன்று நாற்காலிகளில் கிழக்கு பார்த்தபடி போடப் பட்டிருக்கும் நாற்காலியில்தான் அமர்வார்.

அதனாலேயே அவனுடைய சின்ன வயதில் அத்தகு ‘காமராஜ் நாற்காலி’ என்று பெயர் வைத்திருந்தான். அன்றும் காமராஜ் அதே நாற்காலியில் முகம் மலர்ந்த சிரிப்புடன் அமர்ந்தார். அவன் அவரின் அப்பா முகத்தைப் பார்த்தான். அப்பாவின் முகமும் மன நிறைவில் மலர்ந்து இருந்தது.

காமராஜ் கல்யாண வீட்டுச் சாப்பாடு வேண்டாம் என்றார். மரியாதைக்கு ஒரு டம்ளர் பால் பாயாசம் அருந்தினார். ஒருமணி நேரம் போல இருந்துவிட்டு விடைபெற்றுக் கொண்டார்.

அவன் சகோதரியின் திருமணமும் அதில் காம்ராஜ் வந்து கலந்து கொண்டதும் அவன் அப்பாவை மிகவும் சந்தோஷப் படுத்தியிருந்தன. கல்யாணப் போட்டோ ஆல்பத்தில் இருந்த காமராஜின் புகைப்படங்களை அடிக்கடி புரட்டி புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இருந்தாலும் அவரின் மன ஆழத்தில் ஏற்பட்டிருந்த சோர்வுகள் அவரிடமிருந்து விலகவில்லை. முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காமராஜைப் பார்க்க அப்பா மெட்ராஸ் போய் வருவார். அந்தப் பயணங்கள் ஏனோ கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டு வந்தன.

நிறைய விதங்களில் வெளியுலகத் தொடர்புகளை நீக்கி அப்பா வீட்டுக்குள்ளேயே நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தார். ஆனால் வீட்டில் எல்லோருடனும் அவருடைய உறவு சுமூகமாகவும், சந்தோஷமாகவுமே இருந்தது.

முப்பது வயதைத் தாண்டிவிட்ட நிலையில் இருந்த அவன் அவ்வப்போது மெட்ராஸில் இருந்து விருதுநகர் போகிறபோதெல்லாம் அப்பா அவனை உட்காரவைத்து சர்ச்சில், முசோலினி, ஹிட்லர் பற்றியெல்லாம் சொல்லி விளக்கிக் கொண்டிருப்பார்.

அதேபோல ஹிண்டு பேப்பரை ஒரு வரி விடாமல் வாசிக்கிற பழக்கமும் எப்போதுபோல அவரிடம் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத செய்தி ஒன்றை அவன் அப்பா வெளியிட்டார்.

Print Friendly, PDF & Email

1 thought on “காமராஜ் நாற்காலி

  1. சரித்திரத்தைப் பகிர்ந்து கொள்வது அவ்வளவு சுலபமில்லை! கண்ணன் சார் மிக எளிமையாகவே இதைக் கையாண்டிருக்கிறார். பாரட்டுக்கள். லென்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *