ஸ்ரீமத் பாகவத ஸாரம்






(1945ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40
முப்பத்தோராம் அத்தியாயம்
ஜராஸந்த வதம்

இவ்வாறு கம்ஸவதம் முடியவே, அவனுடைய மனைவிகள் தங்கள் தந்தையாகிய ஜராஸந்தன் காலில் விழுந்து அழுதார்கள். ஜராஸந்தன் மிகப் பொல்லாதவன். கம்ஸனோடு சம்பந்தஞ் செய்துகொண்டவன் எப்படி இருப்பான்? அவன் உடனே மிக்கக் கோபங்கொண்டு பெரும் படையோடு வந்து மதுரையை முற்றுகையிட்டான். அப்பொழுது பகவானுக்குமுன் இரண்டு ரதங்கள் ஆகாயத்திலிருந்து இறங்கின. ஒன்றில் கருடத்துவஜம் இருந்தது. மற்றொன்றில் பனைமரக்கொடி இருந்தது. கருடத்துவஜமுடைய ரதத்திலே பகவான் ஏறிக் கொண்டார். பனைக்கொடியுடைய ரதத்தில் பலராமர் ஏறிக்கொண்டார்.
இருவரும் வெகு கோலாகலத்துடன் போய் ஜராஸந்தனை எதிர்த்தார்கள். ஜராஸந்தன் பகவானைச் சிறு பிள்ளையென்று விலக்கிவிட்டுப் பலராமரோடு சண்டை செய்தான். பலராமர் சண்டையில் அவனைக் குத்திப் புரட்டி உதைத்துத் தள்ளிக் குற்றுயிராக்கி விட்டார். பகவான் மற்றவர்களைக் கொன்றார். ஜராஸந்தன் தப்பிப் பிழைத்துத் தன் ஊர்போய்ச் சேர்ந்தான்.
பிறகு இப்படிப் பதினேழுமுறை யுத்தத்திற்கு வந்து தோல்வியடைந்து ஓடினான். அப்பால் வெட்கமில்லாமல் பதினெட்டாவது தடவை சண்டைக்கு வந்தான். அவன் வரும்போது காலயவனன் என்பவன், பெரும் சேனையோடு வந்து மதுரையை முற்றுகையிட்டான். பகவான், தெய்வத் தச்சனைக்கொண்டு மேற்குக் கடலிலே ஒரு தீவில் ஒரு பட்டணத்தை உண்டாக்கி அதற்குத் துவாரகை யென்று. பெயரிட்டு அங்கே மதுராபுரி வாசிகளைக் குடியேற்றினான். பலராமரை அவர்களுக்குக் காவலாக வைத்துவிட்டுத்தான் மாத்திரம் மதுரையிலிருந்து எதிரிகளை எதிர்த்தான்.
காலயவனன் பகவான் நிராயுதபாணியாய் வந்து இருப்பதைக் கண்டதும், தானும் நிராயுதபாணியாய் இருந்து எதிர்த்தான். கண்ணன் அவனுக்குப் பயந்து ஓடுவதுபோல் ஓடினான். அவனும் துரத்தினான். பகவான் வெகுதூரம் ஒடி ஒரு மலையடிவாரத்துக்குக் கொண்டு போய், அம்மலையிலிருந்த ஒரு குகைக்குள் நுழைந்தான். காலயவனனும் நுழைந்தான். பின்பு அங்கே பகவானைக் காணவில்லை.
அங்கொருவர் படுத்துக்கொண்டிருந்தார். காலயவனன் அவரைக் கண்டதும், “அடே கிருஷ்ணா, உன் மாயம் எனக்குத் தெரியும்! யாரை ஏமாற்றுகிறாய்?” என்று கூறி ஆர்ப்பரித்துக் குத்தப் போனான். தூங்கினவர் விழித்துக் கொண்டார். அவர் விழித்த மாத்திரத்தில் காலயவனன் சாம்பலானான்.
குகையில் தூங்கினவர் யாரென்றால் மாந்தாதாவின் மைந்தராகிய முசுகுந்த சக்கரவர்த்தி. அவர் பரம் பக்திமான்; இணையற்ற பராக்கிரமசாலி. அவர் ஒரு சமயம் தேவர்களுடைய சேனைகளுக்கு அதிபதியாய் இருந்தார். சுப்பிரமண்யர் தேவசேனாதிபதி யானதும், முசுகுந்தர் தமது சிரமத்தைத் தீர்த்துக் கொள்வதற்கேற்றபடி, நல்ல தூக்கம் தமக்கு உண்டாக வேண்டுமென்று தேவர்களைக் கேட்டுக்கொண்டார். தேவர்கள் அந்த வரத்தைக் கொடுத்தார்கள். கொடுக்கும்போது, “உன்னை யார் தூக்கத்திலிருந்து எழுப்புகிறார்களோ, அவர்கள் உன் னுடைய கண் நோக்கடைந்த மாத்திரத்தில் சாம்ப லாவார்கள் ” என்று கூறி அனுப்பினார்கள். இப்படி வரம் பெற்றுவந்து அவர் இங்கே தூங்கிவருகையில் அவருடைய திருஷ்டி பட்டமாத்திரத்தில் காலயவனன் சாம்பலானான்.
அவன் சாம்பலானவுடன், பகவான் முசுகுந்த சக்கரவர்த்திக்குக் காட்சி தந்தான். முசுகுந்தர் பகவானுடைய திவ்யதரிசனத்தைத் திடீரென்று கண்டதும் பிரமித்து நின்று, மிகவும் வணக்கமாய்க் கண்ணனை யாரென்று விசாரித்தார். பகவான் தன் வரலாறு கூறினான். முசுகுந்தர் இது கேட்டதும் பரமானந்த மடைந்து பகவானைத் துதித்து மெய்ம்மறந்து நின்றார். பிறகு மீண்டும் துதித்துத் தம்மைக் கர்ம பந்தத்தி லிருந்து விடுவிக்கும்படி கேட்டார். பகவான்,”நீ இந்தப் பிறவியில் என்னை மறவாமல் இரு. அதனால் நீ அரசு செலுத்திய காலத்தில் வேட்டையாடிய பாபமெல்லாம் நீங்கும். அடுத்த ஜன்மத்தில் நீ ஒரு ஸத் விப்ரனாகப் பிறப்பாய். பின்னர்ப் பரமபதம் அடைவாய்!” என்று வரந்தந்து மறைந்தான்.
பிறகு முசுகுந்தர் அந்தக் குகையை விட்டு வெளிப்பட்டுப் பதரிகாசிரமம் போய்த் தவம் புரியலானார்.
பகவான் அப்பால் மதுரைக்குப் போய் ஜராஸந்தனை எதிர்த்தார்.சண்டையில் பகவான் அவனுக்குப் பயந்தவர் போல் நடித்து ஓடத் தலைப்பட்டார். ஜராஸந்தனும் பகவானைத் தொடர்ந்தான். பகவான் வெகுதூரம் ஓடி, பரவர்ஷணம் என்கிற மலையை அடைந்து அதன் மேலேறி மறைந்தார். ஜராஸந்தன் பகவானை அந்த மலையில் கஷ்டப்பட்டு நெடுகிலும் தேடினான். அங்கே பகவான் அகப்படவில்லை. அதனால் அவன் கோபங்கொண்டு அந்த மலையைத் தீயிட்டுக் கொளுத்திவிடும்படி தன் சேனைகளுக்கு ஆணையிட்டான். அப்படியே அவர்கள் கொளுத்தினார்கள். கண்ணபிரான் அதிலிருந்து அவனுக்குத் தெரியாமல் வெளிப்பட்டுத் துவாரகை போய்விட்டார். மலை முற்றும் எரிந்து தணிந்தது. பகவான் தீயில் அகப்பட்டு இறந்து விட்டதாக எண்ணிச் சந்தோஷங்கொண்டு ஜராஸந்தன் திரும்பிப் போய்விட்டான்.
முப்பத்திரண்டாம் அத்தியாயம்
பலராம கிருஷ்ணர்களின் விவாகம்
அப்பால் கிருஷ்ணபலராமர்களுக்கு விவாகம் செய்ய யத்தனம் செய்யப்பட்டது. ரேவதன் என்கிற ஓர் அரசன் தன் பெண் ரேவதி என்பவளைப் பிரம்மாவின் கட்டளைப்படி பலராமருக்கு விவாகம் செய்து கொடுத்தான்.
இந்தக் காலத்தில் லக்ஷ்மிதேவியே விதர்ப்பாதிபதி யாகிய பீஷ்மக ராஜனுக்குப் பெண்ணாக அவதரித்திருந்தாள். அவள் கிருஷ்ண பகவானுடைய குணாதிசயங்களைக் கேள்விப்பட்டு அவனையே கல்யாணம் செய்து கொள்ள விருப்பங் கொண்டிருந்தாள். பகவானும் அவளையே மணஞ் செய்துகொள்ள நிச்சயித்திருந்தான். அவள் பெயர் ருக்மிணி. ருக்மிணிக்கு நான்கு தமையன் மார்கள். அவர்களுள் மூத்தவன் பெயர் ருக்மி. நால்வரும் துஷ்டர்கள். ருக்மி பகவானிடம் விரோதம் கொண் டிருந்தான். அதனால் அவன் தன் தங்கை ருக்மிணியைச் சேதி தேச அரசனுடைய பிள்ளையாகிய சிசுபாலனுக்குக் கொடுப்பதாகப் பேசித் தீர்மானித்து முகூர்த்தம் வைத்தான். முகூர்த்தப் பத்திரிகை எல்லோருக்கும் அனுப்பப்பட்டமையினால் அரசர்கள் எல்லோரும் வந்துசேர்ந்தனர்.
ருக்மிணி தன் விருப்பத்திற்கு விரோதமாகக் கல்யாணஞ்செய்ய யத்தனம் நடப்பதை யெண்ணித் துக்கப்பட்டாள். அவளை ஒருவரும் கவனிக்கவில்லை, அதனால் அவள் பகவானுக்கு ஒரு கடிதம் எழுதி அதை ஒரு பிராம்மணன் மூலமாக அனுப்பினாள்.
பிராம்மணன் கடிதத்தை எடுத்துக்கொண்டு துவாரகைக்குப் போய்க் கிருஷ்ண பகவானிடம் கொடுத்தான். பகவான் கடிதத்தைப் படித்தார். அதில், “என் ஆசை முழுவதும் உம்மிடமே இருக்கிறது. ஆதலால் என்னை எப்படியாவது மணஞ் செய்துகொண்டு ஆதரிக்க வேண்டும். என்னைச் சிசுபாலனுக்கு விவாகம் செய்து கொடுக்க என் அண்ணன் நிச்சயித்துவிட்டான். முகூர்த்தம் நடக்க இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்றன. என்னைச் சிசுபாலன் கொண்டு போகாமல் காப்பாற்ற வேண்டும். எங்கள் குலாசாரப்பிரகாரம் கல்யாணத்திற்கு முதல் நாள் என்னைக் கௌரி பூஜைக்கு அனுப்புவார்கள். அப்பொழுது என்னைத் தாங்கள் ராக்ஷஸ விவாக முறைப்படி அங்கீகரித்தருள வேண்டும். இதைத் தவிர வேறு உபாயத்தைக் காணேன். என்னை மன்னிக்க வேண்டும்” என்று எழுதியிருந்தது.
கடிதத்தைப் படித்ததும் கண்ணன் ருக்மிணியிடம் இரக்கங்கொண்டு பிராம்மணனிடம், “நான் வந்து ருக்மிணியின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகச் சொல்லும்” என்று கூறி அனுப்பிவிட்டான். பிறகு கண்ணன் விதர்ப்ப தேசம் போனான். பலராமரும் யாதவ சேனைகளுடன் அவனுக்குத் துணையாகச் சென்றார். ருக்மிணி கௌரி கோவிலுக்கு வரும் வழியில் கிருஷ்ணமூர்த்தி ரதத்துடன் காத்துக்கொண் டிருந்தான். கல்யாணத்துக்கு முதல் நாள் ருக்மிணி குலாசாரப்படி கௌரி கோவிலுக்கு மேளவாத்தியத்துடன் சென்று கௌரி பூஜை செய்துவிட்டுத் திரும்பினாள். அப்பொழுது கண்ணன், அவளைத் தூக்கித் தன் ரதத்தில் வைத்துக் கொண்டான். பகவானை ருக்மிணியின் தமையனான ருக்மி எதிர்த்தான். அவனுடைய சேனைகளையும் அவனைச்சார்ந்த அரசர்களையும் யாதவசேனையும் பலராமரும் சேர்ந்து அதமாக்கினர், ருக்மி கிருஷ்ணனனைத் தைரியமாய்த் தொடர்ந்தான். பகவான் அவனைக் கொல்ல ஓர் அம்பை எடுத்தார். அப்பொழுது ருக்மிணி அவனைக் கொல்லாமல் விட்டுவிடும்படி பகவானைக் கேட்டுக்கொண்டாள். கண்ணன் அவனைப் பிடித்துத் தனது தேர்க்காலோடு கட்டி ஜங்குடுமி வைத்துத் துரத்திவிட்டான். அவன் தன் ஊருக்குள் போக வெட்கப்பட்டுக்கொண்டு ஊருக்கு அருகிலிருந்த போஜகடம் என்னும் பட்டணத்திலிருந்து அரசுபுரிந்துவந்தான். பிறகு கிருஷ்ணன் ருக்மிணியைத் துவாரகைக்குக் கொண்டுபோய் நல்ல சுபமுகூர்த்தத்தில் வேதவிதிப்படி விவாகம் செய்துகொண்டான்.
கிருஷ்ண பகவானுக்கு ருக்மிணியினிடம் குழந்தை பிறந்தது. அதற்குப் பிரத்யும்னனென்று பெயரிட்டார்கள். அவனைத் தன் பகைவனென அறிந்த சம்பரன் என்கிற அசுரன், தன் மாயா சக்தியினால் ருக்மிணியின் பிரசவ அறைக்குட் பிரவேசித்துச் சிசுவை எடுத்துக் கடலில் எறிந்துவிட்டான். அந்தக் குழந்தையை ஒரு பெரிய மீன் விழுங்கியது. அந்த மீன் வலைஞர் வலையிலே சிக்கியது. அவர்கள் அதைச் சம்பராசுரனுக்குக் கொடுத்துச் சன்மானம் பெற்றார்கள். சம்பராசுரனுடைய சமையற்காரர்கள் அந்த மீனை அறுத்தனர். அதன் வயிற்றில் குழந்தை உயிரோடிருந்தது. அது பகவானுடைய குழந்தையல்லவா? அதை மாயாவதி யென்கிற வேலைக்காரியினிடம் கொடுத்தார்கள். மாயாவதி அந்தக் குழந்தையை வைத் திருக்கப் பயந்தாள். நாரதர் அவள்முன் தோன்றி, “பெண்ணே, நீ முன் ஜன்மத்தில் ரதி; இவன் முன் ஜன்மத்தில் மன்மதன். ஆகையினால் இவனை நீ காப்பாற்றி வா. இவன் சம்பராசுரனை வதஞ்செய்து உனக்கு மணவாள னாவான்” என்று கூறித் தேற்றி மறைந்தார். பிறகு மாயாவதி பயமின்றிப் பிரத்யும்னனை வளர்த்துவந்தாள். அவன் பெரியவனானதும் மாயாவதியினிடத்திலிருந்து, அசுரமாயைகளைத் தடுத்து அச்சம்பரனை வெல்லும் விதத்தை அறிந்தனன். அறிந்தவுடன் அந்தச் சம்பரனை எதிர்த்துப் பொருது வதஞ்செய்து மாயாவதியுடன் துவாரகையை அடைந்தான்.
பிரத்யும்னன் முதலில் அந்தப்புரத்தில் பிரவேசித்த படியால் அவனைக் கண்ட ருக்மிணிக்கு அவனிடம் அன்பு உண்டாயிற்று, ருக்மிணி அதனால் வியப்படைந்து, ‘இவன் யாரோ தெரியவில்லையே! இவனிடம் எனக்கு அன்பு உண்டாகிறதே’ என்று எண்ணித் திகைத்து நின்றாள். அப்பொழுது அங்கே கிருஷ்ணபகவான் வந்தான். நாரதரும் அச்சமயத்தில் வந்து சேர்ந்தார். நாரதர் பிரத்யும்னனையும் மாயாதேவியையும்பற்றி அவர்களுக்கு விஸ்தாரமாகச் சொன்னார். எல்லோரும் சந்தோஷமடைந்து பிரத்யும்னனையும் மாயாவதியையும் ஆசிர்வதித்தார்கள். பிறகு அவர்கள் இருவருக்கும் விவாகம் விமரிசையாக நடந்தது. பிரத்யும்னனுக்கு அநிருத்தன் என்று ஒரு பிள்ளை பிறந்தான்.
துவாரகாபுரிக்கருகில் சத்துருஜித்து என்று ஒரு வேந்தன் இருந்தான். அவன் சூரிய பகவானிடம் பக்தி செலுத்தும் உத்தமன். சூரிய பகவான் அவனுக்கு ஸ்யமந்தகம் என்னும் ஒரு மணியைக் கொடுத்தார். அந்த மணி சூரியனைப்போன்ற பிரகாசமுடையது. அது வியாதிகளைத் தடுக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. நாள் ஒன்றுக்கு எட்டுப் பாரம் தங்கம் கொடுக்கும். அதை அவன் ஒரு நாள் தன் கழுத்தில் அணிந்துகொண்டு பகவானிடம் வந்தான். பகவான் அந்த மணியைக் கண்டதும் அது தனக்கு வேண்டுமென்று கேட்டார். அவன், “இது எனக்குச் சூரிய பகவான் தந்தது. இதைக் கொடுத்தற்காகாது” என்று சொல்லிப் போய்விட்டான்.
பிறகு ஒருநாள் அந்த அரசனுடைய தம்பி அந்த மணியை அணிந்துகொண்டு வேட்டைக்குப் போனான். வேட்டையாடி வருகையில் ஒரு சிங்கம் அவனைக் கொன்று அந்த மணியைக் கவ்விக்கொண்டு ஓடியது. வழியில் அதை ஜாம்பவான் மடக்கிக் கொன்று அந்த மணியைத் தன் பெண்ணுக்கு ஆபரணமாக்கிக் கொண்டது.
தம்பி இறந்ததையும், மணி காணாமற் போனதையும் சத்துருஜித் அறிந்து விசனப்பட்டான். “கிருஷ்ணன் என்னிடத்தில் மணியைக் கேட்டான்; நான் அவனுக்கு அதைக் கொடுக்க மறுத்தேன். அவன்தான் இந்த வேலை செய்து விட்டான் போலும்” என்று சொன்னான். அரசன் இப்படிச் சொன்னது பகவானுடைய காதிற் பட்டது. கண்ணன், “சை! இப் பழியை நாம் நீக்கிக்கொள்ள வேண்டும்” என்றெண்ணி உடனே தன் பரிவாரங்களோடு புறப்பட்டுச் சத்துருஜித்தின் தம்பி இறந்துகிடந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தான். அங்கிருந்து அடிச்சுவடு ரத்தம் முதலியவற்றைப் பிடித்துக்கொண்டு ஒரு குகைக்குப் போய் அதில் நுழைந்தான். பரிவாரங்கள் எல்லாம் வெளியே இருந்தனர். போனவன் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. அதனால் அவர்கள் துவாரகைக்கு ஒடி நடந்ததைக் கூறினர்.
அதைக் கேட்டதும் எல்லோரும் சத்துருஜித்தைத் திட்டினார்கள்; பகவான் க்ஷேமமாய் வரவேண்டுமே என்று பூஜை முதலியன செய்தார்கள். பிறகு பகவான் பத்தொன்பதாவது நாள், ஸ்யமந்தக மணியோடும் ஜாம்பவதி யென்கிற ஒரு பெண்ணோடும் துவாரகை வந்து சேர்ந்தான். மணியைச் சத்துருஜித்தினிடம் கொடுத்தான். ஜாம்பவதியைப் பகவான் மணந்துகொண்டான்.
பகவான்மேல் பழி சுமத்தியது சத்துருஜித்தின் மனத் தைத் துன்பப்படுத்தியது. அதனால் அவன் தன் பெண் ஸத்ய பாமையைப் பகவானுக்குக் கல்யாணம் செய்துகொடுத்து, அந்த மணியையும் கொடுத்து மனத்திருப்தி யடைந்தான்.
பிறகு, பாண்டவர்கள் அரக்குமாளிகையில் துரியோதனனுடைய சூழ்ச்சியினால் இறந்துவிட்டார்கள். என்ற செய்தி கேட்டுப் பகவானும் பலராமரும் ஹஸ்தினாபுரம் போனார்கள். அப்பொழுது சததன்வா என்பவெனொருவள் சத்துருஜித்தை இரவில் கொன்றுவிட்டு மணியைக் கொண்டுவந்துவிட்டான். ஸத்யபாமை மிகத் துக்கமடைந்து தன் தந்தையின் தேகத்தைத் தைலக் கொப்பரையிலிட்டுப் பத்திரப்படுத்திவிட்டு ஹஸ்தினாபுரம் சென்று கிருஷ்ண பகவானிடம் சொன்னாள். பகவான் உடனே பலராமருடன் புறப்பட்டுச் சததன்வாவைக் கொல்லவந்தான். அவன் பயந்து சத்துருஜித்தைக் கொல்லும்படி தன்னைத் தூண்டிய அக்ரூரர், கிருதவர்மா இவர்களிடம் வந்து சரணமடைந்தான்.
அவர்கள், “பகவானுக்குமுன் நாங்கள் எம்மாத்திரம்?” என்று கூறவே அவன் ஸ்யமந்தகம் என்கிற அந்த மணியை அவர்களிடம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான். பகவான் அவனைப் பின்தொடர்ந்து கொன்றான். அவனிடம் மணி இல்லாதிருக்கவே, “சை, இவனைக் கொன்றது வீண்” என்றெண்ணித் திரும்பித் துவாரகை வந்துசேர்ந்தான். பலராமர் அப்படியே மிதிலை போய், அங்கே அத் தேச ராஜனிடம் சில வருஷகாலம் தங்கினர். பிறகு பகவான் சத்துருஜித்துக்கு ஈமக்கடன்களைச் செய்து முடித்தான். சததன்வா இவ்வாறு இறந்ததைக் கேட்டதும் அக்ரூரரும் கிருதவர்மாவும் பகவானுக்குப் பயந்து ஊரை விட்டு ஓடிப்போய் விட்டார்கள். அக்ரூரர் சென்றதும் துவாரகையில் மழையற்றுப் போய்விட்டது. ஜனங்கள் கஷ்டப்பட்டார்கள். பிறகு பகவான் அக்ரூரரைத் தேடி அழைத்துக்கொண்டு வந்து அவரை உபசரித்து அவரிடம் ஸ்யமந்தகமணி இருக்கக் கண்டு சந்தோஷமடைந்து அந்த மணியை அவருக்கே கொடுத்துவிட்டான்.
அப்பால் ஒரு நாள் கண்ணபிரான் பாண்டவர்களைப் பார்க்க இந்திரப்பிரஸ்தம் போனான். அங்கிருந்து அர்ஜுனனோடு வேட்டையாடச் சென்று யமுனாநதியில் நீர் அருந்தி இருவரும் களைப்பினால் அதன் கரைமேல் சற்றுத் தங்கினர். அப்பொழுது அங்கே அழகிய பெண் ஒருத்தி வந்தாள். அவளைக் கண்டதும் அர்ஜுனன் யாரென்று விசாரித்தான். அவள், “நான் பகவானைக் கல்யாணஞ் செய்துகொள்ள விரும்பியுள்ளவள்; என் பெயர் காளிந்தி. நான் அவரை விவாகம் செய்துகொள்ளும் வரையில், என் தந்தை இந்த யமுனையிலே கட்டியுள்ள பட்டணத்திலேயே இருப்பேன்” என்றாள். அர்ச்சுனன் பகவானிடம் இதைச் சொன்னான். பகவான் சந்தோஷம் அடைந்து அவளை ரதத்தில் ஏற்றி வைத்துக்கொண்டு ஹஸ்தினாபுரம் வந்தான். பிறகு காளிந்தி தேவியுடன் துவாரகை சென்று அவளை மணம் செய்துகொண்டான்.
பிறகு கண்ணன் தன் அத்தை பெண்ணாகிய மித்ரவிந்தா தேவி என்பவளைப் பலாத்காரமாகக் கொண்டு வந்து விவாகம் செய்துகொண்டான். இவள் பகவானை ஸ்வயம்வரத்தில் வரனாக வரித்தாள். இவள் சகோதரர்கள், துரியோதனனிடம் கொண்ட பயத்தால் பகவானுக்குக் கொடுக்காமல் வைத்திருந்தார்கள்.
பிறகு பகவான் ஸத்யவதிதேவி என்பவளை மணந்து கொண்டார். இவள் அயோத்தியை ஆண்டுவந்த ரத்னஜித் என்பவனுடைய பெண். ரத்னஜித் ஏழு கொழுத்த எருதுகள் வைத்திருந்தான். அவைகளை அடக்கிக் கொல்லுகிறவர்களுக்குத் தன் பெண்ணைக் கொடுப்பது என்று கூறிவந்தான். கண்ணன் அவனது அந்த ஏழு எருதுகளையும் பிடித்து அடக்கிக்கொன்று ஸத்யவதியை மணந்துகொண்டான்.
அப்பால் அவன், சுருதகீர்த்தி தேவியை மணந்து கொண்டான். இவள் கேகய ராஜன் பெண். பகவானுடைய அத்தை மகள். இவளை அவள் சகோதரர்களே பகவானுக்கு விரும்பி விவாகம் செய்துகொடுத்தார்கள்.
அதன் பிறகு கிருஷ்ணன் மத்திர தேசாதிபதியின் பெண்ணாகிய பிருஹத்ஸேனை என்பவளை ஸ்வயம்வரத்தில் மணந்துகொண்டான்.
இவ்வாறு பகவான் எட்டுப் பட்ட மகிஷிகளை அடைந்தான்.
பிராக்ஜ்யோதிஷம் என்னும் பட்டணத்தில் நரகாசுரன் என்றோர் அசுரராஜன் இருந்தான். அவன் மகா கொடியவன். அவனுக்காக எல்லோரும் பயந்து அடங்கியிருந்தனர். அவன் ஒரு சமயம் இந்திரனுடைய குடையையும் அவன் அன்னையின் கர்ண குண்டலங்களையும் திருடிக்கொண்டு வந்துவிட்டான். அதை அறிந்த பகவான் அவ்வசுரன்மீது படையெடுத்துச் சென்றான். ஸத்யபாமையும் சென்றிருந்தாள். பகவான் அவ்வசுரனைக் கொன்று அவனுடைய பட்டணத்திற்குள் நுழைந்தான். அங்கு அவ்வசுரனால் சிறையாக்கப்பட்டிருந்த பதினாறாயிரத்து நூறு ராஜ கன்னிகைகளைக் கண்டான். அவர்கள் பகவானைக் கண்டதும், அவனையே விவாகம் செய்துகொள்ள விரும்பினர். அதையறிந்த கண்ணன் அவர்கள் விருப்பப்படி அவர்களை விவாகம் செய்து கொண்டான். ஆகவே பகவானுக்குப் பதினாறாயிரத்து நூற்றெட்டு மனைவிமார்களாயினர். பகவான் அவர்கள் எல்லோரையும் அனுப்பிவிட்டுத் துவாரகைக்கு தேவலோகம் போனான். அங்கே போய்த் தேவேந்திரனிடம் அவனுடைய குடையையும் அவன் அன்னையினிடம் அவளுடைய கவச குண்டலங்களையும் கொடுத்தான். ஸத்யபாமையின் விருப்பத்திற் கிணங்கி அங்கிருந்த பாரிஜாத மரத்தை வேரோடு பெயர்த்துக் கருடன்மீது ஏற்றிக்கொண்டு பூலோகத்துக்கு வந்து ஸத்யபாமையின் வீட்டுக் கொல்லையில் அதை நட்டான். பிறகு கிருஷ்ணன் தன்னுடைய மனைவிமார்களுடள் சுகமாய் இருந்து வந்தான்.
முப்பத்து மூன்றாம் அத்தியாயம்
உஷா பரிணயம்
இதன் பிறகு ஒரு நாள், ருக்மிணியின் பிள்ளை பிரத்யும்னனுக்கு ருக்மியின் பெண்ணைப் பகவான் விவாகம் செய்துவைத்தார். அவள் பெயர் ருக்மாவதி. ஸ்வயம்வரத்தில் ருக்மாவதி பிரத்யும்னனுக்கு மாலை யிட்டாள். பகவானிடம் ருக்மி பகை கொண்டிருந்த போதிலும், ருக்மாவதி ஸ்வயம்வரத்தில் மாலை யிட்டபடியால் அவளைப் பிரத்யும்னனுக்கு விவாகம் செய்துகொடுத்தார். பிறகு அவன் தன் பேத்தி ரோசனை என்பவளைப் பிரத்யும்னன் பிள்ளை அநிருத்தனுக்குக் கொடுத்தான்.
இந்தக் கல்யாணத்தில் ருக்மியும் பலராமரும் சூதாடினர். அந்த ஆட்டத்தில் ருக்மி இரண்டு மூன்று தடவை! அவரை வஞ்சித்தான். அதனால் அவர் கோபங் கொண்டு அவனைக் கொன்றார்; அவன் பக்கத் துணையாயிருந்தவர்களுடைய பல்லையும் தகர்த்து அவமானம் செய்தார்.
இப்படியிருக்கையில் ஒருநாள் அநிருத்தன் காணாமற் போய்விட்டான். யா தவர்கள் எல்லோரும் நாலு பக்கங்களிலும் ஓடி அவனைத் தேடிப் பார்த்தார்கள். எங்கும் காணவில்லை. அதனால் அவர்கள் மிகவும் துக்கப்பட்டார்கள். அப்பொழுது நாரதர் வந்து, “அநிருத்தனைப் பாணாசுரன் சிறை யிட்டுவிட்டான் என்று கூறினார்.உடனே பகவான் அவனோடு போருக்குப் புறப்பட்டார்.
பாணாசுரனென்பவன் சோணித புரத்தில் அரசுபுரிந்து வந்தான். அவன் மகாபலியினுடைய முதற் பிள்ளை. அவனுக்குத் தொண்ணூற்றொன்பது தம்பிமார்கள். பாணாசுரன் பிரபல சிவபக்தன். சிவபிரானை நோக்கித் தவஞ்செய்து ஆயிரங் கரங்களைப் பெற்றான், இதனையன்றி அந்தப் பரமசிவத்தையே தன் நகரத்திற்குள் காவலாகச் செய்துகொண்டான்.
இப்படிக் கர்வங்கொண்டிருந்த பாணாசுரன், ஒருநாள் பரமசிவத்தை நோக்கி, “நீண்டகாலமாகச் சண்டையில்லை ; ஆகையினால் என் தோள்களில் தினவுண்டாகின்றது; எனக்கு நீரே சமமானவர்; அல்லது என்னோடு போர் செய்ய வல்லவர் யார்?” என்று பெரிய இறுமாப்புக் கொண்டு சொன்னான். பரமசிவம், “கொஞ்சம் பொறு. வெகு சீக்கிரத்தில் என்னைப்போன்ற ஒருவர் உன்னோடு சண்டைக்கு வருவார்” என்று சொல்லியனுப்பினார்.
பாணாசுரனுக்கு உஷை யென்று ஒரு பெண் இருந்தாள். அவள் அநிருத்தனைத் தன் கனவில் கண்டாள்; கண்ட அந்தச் சுந்தர புருஷனையே தான் விவாகம் செய்து கொள்ள வேண்டுமென்று எண்ணங்கொண்டாள். அதை ஒருவரோடும் சொல்லவில்லை ; ; ஆனால் மனக் கவலையோடிருந்தாள். அதை அறிந்த தோழி சித்திரலேகை என்பவள் அவளைத் தனியே அழைத்து, “நீ ஏதோ கவலை கொண்டிருக்கிறாய் என்று தெரிகிறது. அதற்குக் காரணம் என்ன ?” என்று கேட்டாள். உவை, அவளிடம் தன் மனக் கவலைக்குக் காரணத்தைச் சொன்னாள்.
சித்திரலேகை சித்திரம் எழுதுவதில் சாமர்த்தியம் உடையவள். அவள் அநேக ராஜகுமாரர்களுடைய சித்தி ரத்தை எழுதிக்காட்டினாள். அவற்றில் அநிருத்தன் படமும் ஒன்று. அதைக் கண்டதும் உஷை வெட்கப்பட்டாள். “ இவன்தான், இவள் கனவிலே கண்ட சுந்தரரூபன் ” என்று சித்திரலேகை நிச்சயித்து, அன்றிரவில் தன் மாயா சக்தியினால் ஆகாயமார்க்கமாய்த் துவாரகை போய் மாளிகையில் நித்திரை செய்திருந்த அநிருத்தனைத் தூக்கிக்கொண்டு வந்து உஷையினிடம் சேர்த்தாள். இதுதான் அநிருத்தன் காணாமற் போனதற்குக் காரணம்.
அநிருத்தன் உஷையோடு சுகமாயிருந்தான். அவள் அவனை வெளியே போகவிடவில்லை. இது பாணாசுரனுக்குத் தெரிந்தது. அவன், “நம்மை அறியாமல் இந்தப் பயல் இந்தக் காரியம் செய்வதா?” என்று சினங்கொண்டு அநிருத்தனைப் பிடித்துச் சிறையில் அடைத்துவிட்டான்.
இச்சமயம் யுத்தத்திற்குப் புறப்பட்ட பகவான் சோணிதபுரத்தை வந்து வளைத்துக்கொண்டார். பாணாசுரனும் யுத்தத்திற்கு ஆயத்தமானான். பரமசிவம் சிவகணங்களோடு அவனுக்குச் சகாயமாய் நின்றார். பிறகு கிருஷ்ணருக்கும் பாணாசுரனுக்கும் போர் மூண்டது. போரில் பரமசிவம் அவனுக்காக யுத்தம் செய்வதுபோல் சற்று நேரம் யுத்தஞ் செய்துவிட்டுப் பிறகு வேண்டு மென்றே தோல்வி அடைந்தார். பாணாசுரனுடைய இறுமாப்பைக் குலைக்கவேண்டுமென்பதல்லவா அவர் கருத்து? இப்படியாகவே பாணாசுரனைக் கிருஷ்ண பகவான் எதிர்த்துப் பெரும்போர் புரிந்து அவனுடைய கரங்களை வெட்டித்தள்ளிக் கொல்ல முயன்றான். அவனுடைய தாய் வந்து குறுக்கே நின்று அவனைத் தப்புவித்தாள். பாணாசுரன் ஓடிப்போய்த் தன் பட்டணத்திற்குள் புகுந்து கொண்டான். பகவான் அவனைப் பிடித்து அவனுடைய கரங்களில் நான்கைத் தவிர, மற்றவற்றைச் சேதித்து அவனை உயிரோடு விட்டார். அப்பால் அவன் அநிருத்தனையும் உஷையையும் பகவானிடம் ஒப்பித்தான். துவாரகையில் அவர்களுக்கு விவாகம் விமரிசையாக நடந்தது.
முப்பத்துநான்காம் அத்தியாயம்
பலராம கிருஷ்ணர்களின் வீரச் செயல்கள்
இப்படியிருக்கையில் ஒரு நாள் பிரத்யும்னன் சில ரோடு தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அவர்களுக்குத் தாகம் உண்டாயிற்று. தாகவிடாய் தீர்த்துக்கொள்ள அவர்கள் ஒரு கிணற்றுக்குப் போனார்கள். அக்கிணற்றில் ஒரு பெரிய ஓணான் வெளி யேற முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. அதைக் கண்டதும் பிரத்யும்னன் இரக்கங்கொண்டு அதை எடுத்து வெளியே விட முயன்றான். அவனால் முடியவில்லை. மற்றவர்களும் முயன்றார்கள். அவர்களாலும் முடிய வில்லை. ஒருவன் ஓடி இதைக் கிருஷ்ண பகவானிடம் சொன்னான். பகவான் வந்து பார்த்து, அந்த ஓணானைத் தனது இடது கரத்தினால் வெகு சுலபமாகத் தூக்கிக் கரை யேற்றினார். அந்த ஓணான் கரை சேர்ந்ததும், ஒரு திவ்ய புருஷனாய்விட்டது. பகவானுடைய கரஸ்பரிச மகிமை இது என்று எல்லோரும் தெரிந்துகொண்டு சந்தோஷப்பட்டார்கள்.
அந்தப் புருஷன், “நான் இக்ஷ்வாகு வம்சத்திற் பிறந்தவன். என் பெயர் நிருக சக்கரவர்த்தி. நான் தினந்தோறும் பிராம்மணர்களுக்கு அநேக கோதானங்கள் செய்துவந்தேன். ஒரு பிராம்மணனுக்குக் கொடுத்திருந்த பசு, ஒருநாள் எங்கள் பசுவோடு வந்து சேர்ந்துவிட்டது. அதை ஒருநாள் வேறொரு பிராம்மணனுக்குத் தானம் செய்துவிட்டேன். முன் தானம் வாங்கிய பிராம்மணன், தன் பசுவைப் பின்னே தானம் வாங்கினவன் அபகரித்துக் கட்டிக்கொண்டதாக வழக்குக் கொண்டுவந்தான். அந்த வழக்கைத் தீர்த்து அவர்களைத் திருப்திசெய்து அனுப்பு வதற்கு என்னால் முடியவில்லை, அதனால் நான் ஓணானாகப் பிறக்க நேர்ந்தது” என்று கூறிப் பகவானைத் துதித்து வணங்கிவிட்டு விடைகொண்டு மறைந்தான். பிறகு கண்ண பிரான் அங்கிருந்த யாதவர்களை யெல்லாம் பார்த்து, “பிராம்மணர்களுடைய சொத்தை அபகரிக்கலாகாது; அது விஷத்தைவிடக் கொடியது” என்று போதித்தார்.
அப்பால் ஒருநாள் பலராமர் கோகுலம் போனார். அங்கிருந்தவர்களெல்லோகும் பலராமரிடம் ஓடிவந்து பகவானுடைய யோகக்ஷேமத்தை மிகுந்த ஆவலாய் விசாரித் தார்கள். பகவான் முன் செய்த லீலைகளை யெண்ணி இனி எப்போது அவரைப் பார்ப்பது என்று கூறி வருந்தி னார்கள். பலராமர் அவர்களைத் திருப்தி செய்வித்துக் கொண்டு இரண்டு மாதகாலம் அங்கிருந்தார். அப்பொழுது ஒருநாள் பலராமர் கோபிகைகளோடு யமுனைக்கரையில் விளையாடினார். தமது விளையாட்டுக்கு உதவிசெய்யும்படி யமுனையைத் தாங்கள் இருக்கும் இடத்துக்கு வரும்படி அழைத்தார். அது அவ்வாறு வரவில்லை.உடனே பலராமர் தமது கலப்பை ஆயுதத்தால் அந்த யமுனையை வளைத்துத் தேக்கிவிட்டார். பிறகு யமுனை வேண்டிக்கொண்டதனால் ஓடும்படி விட்டார்.
இப்படி, பலராமர் கோகுலத்தில் இருக்கையில், கருஷ தேசத்து அரசனான பௌண்ட்ரக வாஸுதேவன் என்பவன் பகவானைத் தூதன் மூலமாகச் சண்டைக்கு அழைத்தான். அவன் பகவானுடைய சின்னங்களை யெல்லாம் தாங்கிக்கொண்டு தானே பகவான் என்று சொல்லிக் கொண்டு இறுமாப்புட னிருந்தான். அவனோடு கண்ண பிரான் போர் புரியப் போனார். அவன், “நானல்லவா உண்மையான வாஸுதேவன்; என் அடையாளங்களை நீ தரித்துக்கொண்டு ஏன் வீண் புரட்டுச் செய்கிறாய்? என் னோடு இப்பொழுது சண்டை செய்து உன் பராக்கிரமத் தைக் காட்டு ” என்று கூறினான். பகவான், ஆகா, அப்படியே செய்து காட்டுகிறேன்” என்று கூறி அவனோடு சண்டைசெய்து அவனைச் சங்கரித்துத் துவாரகை சென்றார்.
ஒருநாள் பலராமர் ரெய்வதக பர்வதத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கே துவிதன் என்னும் ஒரு குரங்கு வந்து தான் கண்டதையெல்லாம் அசுத்தப்படுத்தி அழித்தது. அது மிகப் பொல்லாத குரங்காயிருந்தது. அது ராமாவதாரத்தில் சுக்கிரீவனுக்கு நட்பாயிருந்த குரங்கு களில் ஒன்று. அதனைப் பலராமர் எதிர்த்துச் சண்டை செய்து கொன்றார்.
ஜாம்பவதிக்குச் சாம்பன் என்றொரு மைந்தன் பிறந்தான். அவன் துரியோதனனுடைய பெண் லக்ஷ்மணை என்பவளைச் சுயம்வரத்தில் அவள் விருப்பப்படி எடுத்து வந்தான். இதைக்கண்டு மனம்பொறாத துரியோதனாதியர் சாம்பனைப் பிடித்துச் சிறையிட்டனர். இதைக் கேள்விப் பட்ட பலராமர் உத்தவருடன் ஹஸ்தினாபுரம் போய்த் துரியோதனாதியரைச் சமாதானம் செய்யப் பார்த்தார். அவர்கள் சமாதானத்துக்கு வரவில்லை. பலராமர் அந்த ஹஸ்தினாபுரியையே கங்கையில் எறிந்துவிடுகிறவர்போல் கோபங்கொண்டார். அதைக் கண்டு பயந்து துரியோதனன் சாம்பனையும் தன் பெண் லக்ஷ்மணை யென்பவளையும் பலராமரிடம் கொண்டுவந்து ஒப்பித்தான்.
பிறகு ஒருநாள் நாரதர், கிருஷ்ணர் ஒரு பதினாறாயிரத்து நூற்றெட்டு ஸ்திரீகளிடமும் எவ்வாறு இல்லறம் நடத்துகிறாரென்று பார்ப்பதற்காக வந்தார். பகவான் ஒரு வீட்டில் ஸ்நானம் செய்துகொண்டிருந்தார்; ஒரு வீட்டில் ஸ்நானஞ் செய்து அநுஷ்டானம் செய்து கொண்டிருந்தார்; ஒரு வீட்டில் போஜனம் செய்து கொண்டிருந்தார்; வேறு ஒரு வீட்டில் உத்தவர் முதலியவர்ளோடு சந்தோஷமாக வீற்றிருந்து ஆலோசனை செய்துகொண்டிருந்தார். இப்படி ஒவ்வொருவருடைய வீட்டிலும் ஒவ்வோர் அலுவலிற் பிரவேசித்துப் பகவான் அவர்களைத் திருப்தி செய்வதைக்கண்டு நாரதர் சந்தோஷங் கொண்டு பகவானிடம் விடைகொண்டார். பகவான் அவருக்குத் தகுந்த மரியாதை செய்தனுப்பினார்.
முப்பத்தைந்தாம் அத்தியாயம்
சிசுபால வதம், குசேல உபாக்கியானம்
இப்படியிருக்கையில் கண்ணபிரான் ஒருநாள் காலையில் சுதர்மை என்ற சபையில் வீற்றிருந்தார். அப்பொழுது ஒரு தூதன் வந்து பகவானை வணங்கி, “நான் ஜராஸந்தனது பட்டணமாகிய கிரிஹரத்திலிருந்து வருகிறேன். அங்கே சிறைப்பட்டு வருந்தும் வேந்தர்கள் என்னை அனுப்ப நான் இங்கே வந்தேன். ஜராஸந்தன் உம்மை ஜயித்துவிட்டானாம்; அதனால் தனக்கு ஒருவரும் ஈடில்லையென்று இறுமாப்படைந்திருக்கிறான். அரசர்கள் எல்லாம் தங்களுடைய உதவியை விரைவில் எதிர் பார்க்கிறார்கள்’ என்று கூறினான்.
பகவான் அதைக் கேட்டதும், ஒ, தெரிந்து கொண்டேன். அப்படியே செய்கிறேன்; போ” என்று கூறியனுப்பினார். அவன் சென்றதும் நாரதர் சபைக்கு வந்தார். அவர் இந்திரப்பிரஸ்தத்தில் தருமபுத்திரர் ராஜஸூய யாகம் செய்யத் தீர்மானித்திருப்பதாகச் சொல்லிச் சென்றார். பிறகு கண்ணபிரான் உத்தவரை வருவித்து அவரிடம் ஜராஸந்தனைக் கொல்வதற்கு உபாயம் எப்படி என்று விசாரித்தான். உத்தவர், “ஸ்வாமி,இப்பொழுதுதான் தருமபுத்திரர், ராஜூஸூய யாகம் செய்யப் போகிறாரே; அதற்காக அவர் எல்லா அரசர்களையும் தம் வசப்படுத்த வேண்டும். அப்படிச் செய்ய முடியாதவர்களை அவர் கொல்லவேண்டும். ஜராஸந்தன் அவர் வசத்திற்கு உட்படமாட்டான். அப்பொழுது அவன் இறப்பான். ஸ்வாமி, அவனுக்கேற்ற பலமுடைய வீரன் பீமன்தான். அவனைத் தாங்கள் தூண்டிவிடவேண்டும்; அவன் பிராம்மண ரூபத்துடன் ஜராஸந்தனிடம்போய்த் துவந்துவ யுத்தம் செய்ய அவனை அழைக்கவேண்டும். அழைத்தால் ஜராஸந்தன் வராமல் இரான். வந்தால் அவனைப் பீமன் தவறாமல் கொல்வான். இதுதான் அவனைக் கொல்ல உபாயம்” என்றார்.
கண்ணபிரான் இதைக் கேட்டதும் சந்தோஷமடைந்து தம் பரிவாரங்களுடன் புறப்பட்டு இந்திரப்பிரஸ்தம் சென்றார். பகவானைத் தருமபுத்திரர் முதலிய ஐவரும் சகல மரியாதைகளுடனும் வரவேற்று உபசரித்தார்கள். தாங்கள் ராஜஸூய யாகம் செய்ய நிச்சயத்திருப்பதைக் கூறி, அதற்கு உதவி செய்யவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டனர். “எல்லா அரசர்களும் வழிக்கு வந்துவிடுவார்கள்; ஜராஸந்தன் பரம துஷ்டன்; ஆகையினால் அவன் வழிக்கு வரமாட்டான். அவனை வதஞ் செய்து தீரவேண்டும்; இதற்கென்ன உபாயஞ் செய்யலாம்?” என்று கேட்டார்கள்.
பகவான் உத்தவர் கூறிய உபாயங்கூறிப் பீமனையும் அர்ஜுனனையும் பிராம்மண வேஷம் பூண்டு கொள்ளும்படி உத்தரவிட்டுத் தாமும் பிராம்மண வேஷங்கொண்டு அவர்களிருவரையும் அழைத்துக்கொண்டு ஜராஸந்த னுடைய பட்டணம் போனார். அந்தப் பட்டணத்துக் கோட்டை மதிலேறிக் குதித்து ஜராஸந்தனைக் கண்டார்கள். ஜராஸந்தன் இவர்களைக் கண்டதும், ” பிராம்மணர்களோ அல்லவோ?” என்ற சந்தேகத் தோடேயே உபசரித்து, “வந்த காரியமென்ன? நீங்கள் யார் ?” என்று கேட்டான். அவர்கள் தாங்கள் இன்னா ரென்ற உண்மையைச் சொல்லி, “நாங்கள் உன்னோடு சண்டை செய்ய வந்திருக்கிறோம். எங்களுக்குள் எவனோடேயாவது நீ போர்புரியலாம்” என்றார்கள்.
ஜராஸந்தன் பீமனோடு போர்புரியச் சம்மதித்தான். பிறகு அவ்விருவரும் போர் செய்யச் சித்தமானார்கள். இருவரும் பதினான்குநாள் போர்புரிந்தனர். பதினான்காவது நாள் இரவில் ஜராஸந்தன் களைப்படைந்தான். பிறகு இருவரும் ஆயுதங்களில்லாமல் துவந்துவ யுத்தம் செய்யத் தொடங்கினார்கள். இந்த யுத்தத்தில் பீமன் வல்லவ னானதனால், கொஞ்ச நேரத்தில் ஜராஸந்தனைக் கீழே தள்ளிக் குத்திக் கொன்று வீரகர்ஜனை செய்தான்.
மறுநாட்காலையில் மூவரும் ஜராஸந்தனுடைய ரதத்தில் ஏறிக்கொண்டு இந்திரப்பிரஸ்தத்திற்குப்
புறப்பட்டார்கள். அப்பொழுது ஜராஸந்தனுடைய பிள்ளைவந்து பகவானைச் சரணமடைந்தான். எம்பெருமான் அவனுக்குப் பட்டங்கட்டி வைத்துவிட்டுப் புறப்பட்டு பீமார்ஜுனர்களுடன் இந்திரப்பிரஸ்தம் வந்து சேர்ந்தார்.
அப்பால் பாண்டவர்கள் திக்விஜயம் செய்துவந்து ராஜஸூய யாகம் நடத்தத் தொடங்கி அதை நன்கு நடத்தினர். கடைசி நாள் சபையோருக்கு அக்கிரபூஜை செய்ய வேண்டியதாயிற்று. அப்பொழுது தர்மபுத்திரர் யாருக்கு அந்தப் பூஜை செய்வதென்று ஆலோசித்தார். பீஷ்மர் கிருஷ்ணபகவானுக்குச் செய்யும்படி ஆக்ஞா பித்தார். அவ்வாறே பகவானுக்கு அவர் பூஜை செய்தார். இது சிசுபாலனுக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. அவன் கிருஷ்ணபகவானிடம் விரோதங்கொண்டவன். இவன் மணந்துகொள்ள எண்ணியிருந்த ருக்மிணியைப் பகவான் மணந்தாரல்லவா?சிசுபாலன் பகவானை வரம்பு கடந்து தூஷித்தான். பகவான், “இனி இவனை வதஞ் செய்தே தீரவேண்டும்” என்றெண்ணி அவனை எல்லோரும் அறிய யுத்தம் செய்து கொன்றார்.
இவ்வாறு பகவான் ராஜஸுய யாகம் நிறை வேறுதற்குரிய காரியத்தில் ஈடுபட்டு இந்திரப் பிரஸ்தத்தில் இருக்கையில் சால்வன் என்னும் அரசனொருவன் துவாரகையின்மேல் படையெடுத்துவந்து இருபத்தேழுநாள் போராடித் துவாரகையை அழித்தான். சால்வன் சிசுபால னுக்கு நண்பன். தன் நண்பனைப் பகவான் கொன்றமை யினால் அவன் கோபங்கொண்டு இவ்வாறு செய்தான். நோக்கித் தவமிருந்து தவிர, இவன் பரமசிவத்தை எல்லோரையும் தூக்கிச் செல்லக்கூடிய இரும்பு விமான மொன்று பெற்றிருக்கிறான்.
இவன் பகவானில்லாத வேளையில் துவாரகையை நிர்ப் பயமாய்ப் பாழ்படுத்திவிட்டுச் சென்றான். அப்பொழுது இந்திரப்பிரஸ்தத்தில் சில அபசகுனங்கள் காணப்பட்டன. கண்ணபிரான் துவாரகையில் ஏதோ துவாரகையில் ஏதோ அபாயம் நேர்ந் திருக்கிறதென்று அறிந்து, பலராமருடன் துவாரகை வந்து துவாரகை யிருக்கும் நிலைமையைக் கண்டு பலராமரை அங்கே காவல் வைத்துவிட்டுச் சால்வ ராஜனை எதிர்க்க ரதத்தில் ஏறிக்கொண்டு புறப்பட்டார்.
பிறகு இருவருக்கும் போர் நடந்தது. சால்வன் பகவானுடைய கதையால் அடியுண்டு ரத்தத்தைக் கக்கினான். கக்கிக்கொண்டிருந்தவன் திடீரென்று மறைந்து விட்டான். கிருஷ்ணபகவான், சால்வன் எங்கே மறைந்தான்?” என்று மலைத்து நின்றார். சற்று நேரத்திற் கெல்லாம் சால்வன் வஸுதேவருடன் பகவான்முன் வந்து, “ இதோ உன் தந்தையை வெட்டுகிறேன். உன் சாமர்த்தியத்தை இப்பொழுது காட்டு” என்று கூறி, அக்கணமே அவருடைய தலையை வெட்டி அவரை எடுத்துக் கொண்டு மறைந்தான். கிருஷ்ணபிரான் கோபங்கொண்டு சால்வராஜனைத் தொடர்ந்து சென்று மடக்கிக்கொண்டு போர்புரிந்து அவனுடைய இரும்பு விமானத்தை உடைத் தெறிந்து அவனையும் சங்கரித்தார்.
இப்படிப் பகவான் சால்வனைக் கொன்றதைக் கேட்ட அவனுடைய நண்பனாகிய தந்தவக்கிரன் என்ற அசுரன் பகவானிடம் கோபங்கொண்டு போருக்கு வந்து மாண்டான். பிறகு அவனுடைய தம்பி விடூரதன் என்பவன் சண்டைக்கு வந்தான். அவனைப் பகவான் சக்கராயுதத்தினால் கொன்றார்.
இதன் பின்பு பாரத யுத்தம் நடக்கப்போவதாகத் தெரியவந்தது. அதில் பலராமர் இரண்டு கக்ஷியிலும் சேர மனமில்லாமல் தீர்த்தயாத்திரை புறப்பட்டுப் போனார். போகையில் நைமிசாரண்யத்தில் சூதபுராணிகர் என்பவர் உயர்ந்த ஆசனத்திலே வீற்றிருந்தார். அவர் இவரைக் கண்டதும் எழுந்திருக்கவில்லை. அதனால் பலராமர் கோபங் கொண்டு தமது கரத்திலிருந்த தருப்பைப் புல்லினாலே அவரைக் கொன்றார். அதைக்கண்ட நைமிசாரண்ய முனிவர்கள் ஓடிவந்து பலராமரைப் பார்த்து, சூதபுராணிகர் எங்கள் வேண்டுகோட்கு இணங்கி அவ்வாறு அமர்ந்திருந்தார். அவரைக் கொன்றதனால் உமக்குப் பிரம்மஹத்தி தோஷம் உண்டாயிருக்கிறது என்று கூறி அதற்குப் பிராயச்சித்தமும் சொன்னார்கள். பலராமர் அவர்கள் தெரிவித்தபடி பிராயச்சித்தம் செய்து கொண்டார்; பிறகு அந்தப் புராணிகரை எழுப்பித் தந்தார்; அந்த ரிஷிகளுக்கு இடையூறு செய்துவந்த அசுரனையும் கொன்றார்.
இப்படியான பிறகு, பகவானிடம் ஒருநாள் குசேலர் என்ற ஒரு முனிவர் வந்தார். அவர் பகவானுடன் சேர்ந்து ஸாந்தீபினி மகரிஷியினிடம் படித்தவர். இருவரும் அப்பொழுது பரம சிநேகிதர்களாய் இருந்தனர்.குசேலர் இப்பொழுது இன்னது வேண்டும் என்கிற விருப்பம் இல்லாமல் பகவானிடம் பக்தி செய்துகொண்டு பரம பக்தராக விளங்கிவந்தார். அவருக்கு இருபத்தேழு குழந்தைகள். அவர் மிகுந்த கஷ்ட ஸ்திதியில் இருந்தமையினால், அவர் மனைவி அவரை நோக்கி, “துவாரகாநாதர் உம்முடைய நண்பராயிற்றே! அவரிடம் போய் நமது கஷ்டத்தைக் கூறி ஏதேனும் திரவியம் கொண்டுவந்தால் எவ்வளவு உதவியாய் இருக்கும்!” என்றாள்.
குசேலர் தம் மனைவியைத் திருப்தி செய்வதற்காகப் பகவானிடம் வந்தார். வரும்போது அன்போடு கையுறையாகக் கொடுக்க நான்கு பிடி அவலை முடிந்து எடுத்துக்கொண்டு வந்தார். கண்ணபிரான் அவரைக் கண்டதும், என்றும் அடையாத ஆனந்தம் அடைந்து வரவேற்று, வீற்றிருக்கச்செய்து உபசரித்து அவருக்குக் கால் கழுவினார்; கால் பிடித்தார்; ஸ்நானம் செய்வித்தார்; அப்பால் போஜனஞ் செய்வித்து, இருவரும் ஓரிடத்தில் அமர்ந்து தாங்கள் மாணவராயிருந்த காலத்தில் செய்தவைகளையும் நடந்தவைகளையும் பற்றிப்பேசிக் கொண்டிருந்தார்கள். கோபாலர் குசேலர் எதற்காக வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டார்; குசேலர் எதையும் விரும்பி, ‘இது வேண்டும்’ என்று கேட்க மாட்டார் என்பதையும் உணர்ந்தார். ஆகையினால் அவரைப் பார்த்து, “எனக்குக் கொடுக்க ஏதாவது கொண்டுவந்திருக்கிறீரா?” என்று கேட்டார். குலேசர் தாம் கொண்டுவந்த அவலைக் கொடுக்க வெட்கப்பட்டு மறைத்தார்.கண்ணபிரான் அந்த அவல் முடிச்சைத் தாமே அவர் கரத்திலிருந்து பெற்று அவிழ்த்து, ஒரு பிடி அவலை யெடுத்து வாயில் போட்டுக்கொண்டு, “நன்றாயிருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே தின்றார்; மற்றொரு பிடி யெடுத்து வாயிற் போட்டுக்கொள்ளப்போனார். அருகில் இருந்த ருக்மிணி தேவி, “போதும்” என்றாள். பகவானும் உடனே நிறுத்திவிட்டார்.
கிருஷ்ணர் ஒரு பிடி அவல் வாயிலே போட்டுத் தின்றவுடன் குசேலருக்கு அவர் ஊரில், வீடு வாசல் முதலிய சகல ஐசுவரியங்களும் உண்டாகிவிட்டன. இனிமேல் வேண்டியதொன்றுமில்லையே யென்று கருதி ருக்மிணிதேவி தடுத்தாள். இந்த ரகசியம் குசேலருக்குத் தெரியாது. குசேலர் அன்றைத்தினம் முழுவதும் பகவானோடு இருந்து மறுநாட் காலையில் புறப்பட்டுப் பகவானைத் தியானித்துக்கொண்டே தம் ஊர் வந்தார்.
இங்கே அவருக்குத் தம் வீடு எது என்று அறிய முடியவில்லை. அவர் இருந்த குடிசை மாளிகையாய் இருக்கிறது. அதில் எல்லாம் நிறைந்திருந்தன. குசேலர் ஆச்சரியப்பட்டுப் பகவானைத் தியானித்துக்கொண்டு நின்றார். அவர் மனைவி ஓடிவந்து வணங்கி, வீட்டிற்குள் அழைத்துப்போய் வேண்டிய உபசாரங்கள் செய்தாள். குசேலர் எதையும் கவனிக்கவில்லை. பகவானிடமே மனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தார். மனைவிக்குத் தாம் பகவானிடம் போய்வந்த வைபவத்தைக் கூறி மகிழ்ந்தார்.
பிறகு, ஒருநாள் பூரண ஸூர்யோதய புண்ணியகாலம் வந்தது. அப்பொழுது யாதவர்கள் எல்லோரும் பரசுராமர் உண்டாக்கிய ஸ்யமந்தபஞ்சகம் என்னும் தீர்த்தத்திற்கு ஸ்நானஞ் செய்யப்போனார்கள். கண்ணபிரானும் போனார். அங்கே பாண்டவர்களும் மற்ற நண்பர்களும் ஸ்நானத்திற்கு வந்திருந்தார்கள். கிருஷ்ணர் தம்முடைய உறவினரையும் நண்பரையும் கண்டு சந்தோஷம் அடைந்தார். அச்சமயத்தில் பகவானைப் பார்க்க அங்கே மகரிஷிகள் வந்தார்கள். வசுதேவர் அவர்களைப் பார்த்துத் தமக்குப் பரமபதம் சித்திக்கத்தக்க ஒரு யாகம் செய்விக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அவர்கள், ‘ஓகோ, இவர் பகவானைத் தம் பிள்ளையென்று எண்ணி மயங்கி இவ்வாறு கேட்கிறார் ‘ என்றறிந்து, ‘இருக்கட்டும்; இப்பொழுது இவர் விருப்பப்படி இவருக்கு யாகம் செய்விக்காமல் பகவானுடைய உண்மையை நாம் இவருக்குக் கூறினால் இவர் திருப்தி யடையமாட்டார். ஆகையினால் யாகம் செய்வித்துப் பிறகு உண்மையைக் கூறுவோம்’ என்று தீர்மானித்துக்கொண்டு, அவர் விருப்பப்படி அங்கே யாகம் செய்வித்தார்கள். பிறகு கிருஷ்ண பகவானுடைய உண்மைச் சொரூபத்தை வசுதேவருக்கு உபதேசித்தருளினார்கள். பின் எல்லோரும்– தத்தம் இருப்பிடம் அடைந்தனர்.
பகவானுடைய உண்மை இவ்வாறு வெளியானதும் தேவகி தேவி அவரிடம் போய்த் தன்னுடைய ஆறு பிள்ளைகளையும் பார்க்கவேண்டுமென்று கேட்டாள். கண்ணபிரான், முன் தம்முடைய குருவின் மைந்தனை உயிர்ப்பித்துக் கொடுத்திருக்கிறா ரல்லவா? அதையும் தேவகி இச்சமயம் எடுத்துக் கூறினாள்.
பகவான் தம் தாயைத் திருப்தி செய்விக்க வெண்ணி உடனே பலராமரோடு பாதாளலோகம் சென்று அங்கிருக்கும் மகாபலியைக் கண்டு, “உம்மிடமிருக்கும் இந்த ஆறு பிள்ளைகளும் மரீசி மகரிஷியின் பிள்ளைகள். பிரம்மதேவர் ஆதியில் ஸரஸ்வதியை மணஞ்செய்து கொண்ட காலத்தில் இவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். இதற்காக முதலில் இவர்கள் ஹிரண்யகசிபுவின் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். பிறகு தேவகிக்குப் பிள்ளைகளாகப் பிறந்து உடனே இறந்து, இப்போது தமது பூர்வ பதவியில் ஞானிகளாக விளங்குகின்றனர். தேவகி இவர்களைப் பார்க்க விரும்புகிறாள். இவர்களை அழைத்துக்கொண்டுபோய் அவளிடம் காட்டிவிட்டு இவர்களை இவர்களிருப்பிடத் திற்கு அனுப்பிவிடுகிறேன் ” என்று கூறி, அவர்களோடு துவாரகை வந்து தேவகிக்கு அவர்களைக் காட்டித் திருப்தி செய்துவிட்டு, “உங்களுடைய ஸ்தானத்திற்குப் போங்கள்” என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டார்.
– தொடரும்..
– ஸ்ரீமத் பாகவத ஸாரம் (நாவல்), முதல் பதிப்பு: 1945, விவேக போதினி ஆபீஸ், சென்னை.