கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: August 4, 2025
பார்வையிட்டோர்: 16,769 
 
 

(1945ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15

ஆறாம் அத்தியாயம்

விதுர மைத்திரேய ஸம்வாதம்

சீலம் தயை முதலிய குணங்கள் நிறைந்தவரும் மகா ஞானியுமாகிய மைத்திரேயரை அடைந்ததும், விதுரர் அவரைப் பணிந்து தாம் இன்னாரென்று தெரிவித்துக் கொண்டார். அவர் வீற்றிருக்கப் பணித்ததும் வீற்றிருந்து, 

“ஸ்வாமி, சாதுக்கள் சுகத்தை அடைவதன் பொருட்டுக் கருமங்களைச் செய்கிறார்கள். அந்தக் கருமங்களி னாலே சுகதுக்க சாந்தி என்றும் அடைவதில்லை. அந்தக் கருமங்களினாலே பின்னும் மகத்தான துக்கமே நேரிடு கிறது. ஆகையினால் இப்படிப்பட்ட இந்த ஸம்ஸாரத்திலே எங்களுக்கு யுக்தமானதை ஆலோசித்துத் தெரிவித்தரு ளல் வேண்டும். மேலும், இந்த உலகத்தில் ஹரியினிடத் தில் பக்தியில்லாதவரும் அதரும சீலருமாகிய ஜனங்களின் அநுக்கிரகத்தின் பொருட்டு ஹரியினிடம் பரமபக்தி யுடையவர்களாகிய மகான்கள் சஞ்சரித்துக்கொண் டிருக் கிறார்கள், ஆகையினால் சுகசொரூபமான வழியை எங்களுக்குச் சொல்லியருளுங்கள். பகவான் இந்தப் பிரபஞ்சத்தை எவ்வாறு படைத்தார்? எவ்வாறு ஸ்தாபித்தார்? மச்ச கூர்மாதி அவதாரங்களினாலே கருமங்களை எவ்வாறு இயற்றியருளினார்? இவற்றை விரிவாக என்பொருட்டுத் தெரிவித்தருளல் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். 

மைத்திரேயர் மனமகிழ்ச்சிகொண்டு விதுரரை அன் போடு நோக்கி, தத்துவாதிகளின் சிருஷ்டியை விவரமாகச் சொல்லியருளினார். அதைக் கேட்ட விதுரர், “ஸ்வாமி, ஒன்றோடு ஒன்று ஒட்டாத பூதங்களைக்கொண்டு பகவான் சிருஷ்டி முதலியவற்றை எவ்வாறு செய்யமுடியும்? எங்கும் பரவியிருக்கும் அவருக்குச் சிருஷ்டியால் சுக துக்கங்கள் உண்டாவானேன் ?” என்று கேட்டார். 

மைத்திரேயர், “அவையெல்லாம் பகவத் மாயையினால் அவரை அணுகாமலே வெளிவருகின்றன. சொப்பனத்தில் நடப்பவை நம்மைப் பாதிப்பதில்லையல்லவா? அதுபோல் சிருஷ்டி முதலியனவும் பகவானைப் பாதிப்பதில்லை. நீர்நிலை அசையும்போது அதில் தோன்றும் சந்திர பிம்பமும் அசை வதுபோற் காணப்படும். அதைப்போல் தேகத்தினுடைய கர்மமானது அசத்தாயிருந்தாலும், தேகத்திலே அபிமான முடைய ஜீவனுக்குச் சத்தாகக் காணப்படுவது பரமாத்மா வான ஈசுவரனுடைய குணம் அன்று. அந்த ஜீவனுக்குத் தேகத்தினுடைய குணமான ஜனன மரணம் முதலானவை, நிவர்த்திமார்க்கத்தினாலேயும் வாசுதேவரது கருணையினாலே யும் உண்டாகிற பக்தி யோகத்தினால் ஸ்ரீ ஹரியினிடத்தில் சமஸ்த இந்திரியங்களும் சலியாமல் நிலைபெற்றிருப்பது உண்டாகும். அப்பொழுது சகல ஸம்ஸாரக் கிலேசங்களும், நித்திரையால் சகல துக்கங்களும் லயமடைவதுபோல் லய மடையும். முடிவில் ஹரிபக்தியினால் சகல துக்கங் களினின்றும் விடுபட்டு உண்மைகளைத் தெரிந்துகொள்ள லாம்” என்று கூறினார். 

விதுரர், “ஸ்வாமி, எனக்கு உண்டாயிருந்த சந்தேக மானது தங்களது வாக்காகிற கத்தியினாலே சேதிக்கப் பட்டது. ஜீவாத்மா பரதந்திரன் என்றும், ஈசுவரன் சுதந்திரன் என்றும் தாங்கள் கூறத் தெரிந்து கொண்டேன் ” என்று கூறிப் பிறகு, “பிரம்மா உண்டாவதற்குமுன் சிருஷ்டி எப்படித் தொடங்கியது?” என்று கேட்டார். 

மைத்திரேயர், “பிரளய காலத்தில் ஆதிதேவராகிய நாராயணமூர்த்தி ஜீவாத்மா முதலிய சகல பிரபஞ் சங்களையும் தம்முள் அடக்கிக்கொண்டார். சிருஷ்டிக்க வேண்டிய காலம் வரும்போது தம்மை எழுப்பும்படி காலதத்துவத்திற்கு உத்தரவு இட்டுவிட்டு ஆதிசேஷனாகிய படுக்கையில் சயனித்துக்கொண்டு ஆயிரம் சதுர்யுகம் யோகநித்திரையில் இருந்தார். பிறகு விழித்துக்கொண்ட தும் ஜீவாத்மா முதலிய சகல பிரபஞ்சமும் தம்முள் அடங்கிக் கிடப்பதை அறிந்து அவற்றை வெளியே கொண்டுவர எண்ணினார். அவ்வெண்ணம் உதித்ததும் தம் மனத்தில் சிருஷ்டிச் செயல் முதலியவற்றை நினைத்துக் கொண்டார். அதிசூட்சுமமான அந்த இச்சையானது ரஜோகுணத்தோடு சம்பந்தப்பட்டுப் பிரபஞ்சவுற்பத்திக் குக் காரணமாகப் பகவானுடைய நாபிப்பிரதேசத்தி னின்றும் வெளிவந்தது. அது காலதத்துவத்தினாலே பத்ம ரூபமாக நின்று பரமாத்மாவைக் காரணமாகவுடையதாய்ச் சூரியன்போல் தனது தேஜஸினாலே விஸ்தாரமான அந்த ஜலத்தைப் பிரகாசமடையச் செய்துகொண்டு விளங்கியது. அந்தப் பத்மத்திலே ஸ்ரீ மகாவிஷ்ணுவானவர் தாமே அந்தர்யாமியாகப் பிரவேசித்தார். பிறகு அதில் சகல வேத சொரூபமான பிரம்மா உண்டானார். அந்தப் பிரம்மா கமலப் பொகுட்டிலிருந்து உலகத்தைப் பார்ப்பதன் பொருட்டு நான்கு முகங்களை அடைந்தார். அந்தக் கமலத்தையும் உலக தத்துவத்தையும் தம்முடைய ஆத்மாவையும் அறியாமல் இந்தக் கமலம் எவ்விடத்தி லிருந்து உண்டாயிற்றென்று வெகுகாலம் யோசனை செய்தார். அந்தக் கமலத்தின் கொடியின் ரந்திர மார்க்கத் தினாலே ஜலத்திற்குள் தலைகீழாகப் பாதாளத்திலே போய்த் தேடினார். அதன் மூலத்தை அறியாமல் திகைத்துப் போய்ப் பிறகு மிகுந்த சிரமத்துடன் தாமரைப் பூவில் வந்து உட்கார்ந்தார். 

“பிரம்மா இவ்வாறு வந்து உட்கார்ந்ததும், பிரளய சமுத்திரத்திலிருந்து, ‘தப,தப (தபசு செய்) என்று அசரீரிவாக்கு உண்டாயிற்று. உடனே பிரம்மா முறைப்படி தவஞ்செய்யத் தொடங்கி நூறு வருஷம் தியானத்தில் இருந்தார். அப்பால் அவருக்கு ஞானம் உதித்தது.ஞானோ தயமானதும், முன் தாம் தேக சிரமத்தினால் அறியக் கூடாமல் இருந்தவற்றை யெல்லாம் இப்போது தம் மனவலியினால் அறிந்தார். ஆதிசேஷ சயனத்தில் பகவான் சயனித்திருப்பதையும், அவர் பிரபஞ்ச முழுவதும் வியாபித்திருப்பதையும், அவருடைய அந்த வீசுயருமத்தி சகல சிருஷ்டி விசித்திரங்களும் அடங்கியிருப்பதையும் கண்டு அவருடைய கல்யாண குணங்களை மன உருக்கத் தோடு துதிக்கத் தொடங்கி, சிருஷ்டித் தொழிலைக் குறை வுறாமல் செய்வதற்குரிய அறிவும் ஆற்றலும் தமக்குத் தந்தருள வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். அவ் வாறே பகவான் அவருக்கு அறிவையும் ஆற்றலையும் கொடுத்தார்; பிரபஞ்ச முழுமையும் தம்முள்ளே தரிசிக்கும்படி செய்தார்; பிரபஞ்சத்துள் தமது சக்தி பரவி யிருக்கும் விதத்தையும் நன்கு அறியும்பொருட்டுத் தவஞ் செய்யக் கட்டளையிட்டார்; தம்மைச் சகல ஞானங் களுக்கும் இருப்பிடமாக அடிக்கடி தியானம் செய்து அப்போதைக்கப்போது வேண்டிய சக்திகளைப் பெறும்படி யும் கட்டளையிட்டார். பிரம்மா அவ்வாறே தவஞ்செய்து அறிவையும் ஆற்றலையும் அடைந்து, தவத்திலிருந்து எழுந்திருக்கையில், நாபிக்கமலமானது ஆகாய முழுவதும் அடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு உலகத்தைச் சிருஷ்டிப்பதன் பொருட்டு அதனை அவர் மூன்று பாகமாகப் பிரித்தார். அது பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் என்று மூன்று உலகமாயிற்று. அவை காமிய கர்மத்தின் பலனானபடியினால் கற்பங்கள்தோறும் உற்பத்தியையும் நாசத்தையும் உடையனவாயிருக்கும் ” என்று கூறினார். 

இவ்வாறு மைத்திரேயர் கூறியதும் விதுரர் சந்தோஷ மடைந்து, “ஸ்வாமி, இந்தச் சமயத்தில் கால ரூபியான பகவானுக்கு என்ன சொரூபம்?” என்று கேட்டார். மைத்திரேயர் கூறுகிறார்: 

“விதுரரே, பிறக்கின்ற வஸ்துவினுடைய காரணங் களுக்குள்ளே கடைசியாக இருக்கின்ற அவயவத்துக்கு அவயவமாகாமலும், அநேகமாயிருந்தும் காரியாவஸ்தையை அடையாமல் ஒன்றோடொன்று கூடாமலும் எது இருக் கிறதோ அது பரமாணுவென்று அறியத்தக்கது. இரண்டு பரமாணுக்கள் சேர்ந்து ஓர் அணுவாகிறது; மூன்று அணுக்கள், ஒரு திரிசரேணுவென்று சொல்லப்படும். மூன்று திரிசரேணு ஒரு துருதி; நூறு துருதிக்கள் ஒரு வீதம்; மூன்று வீதம் ஒரு லவம்.மூன்று லவம் ஒரு நிமிஷம், மூன்று நிமிஷம் ஒரு க்ஷணம்; மூன்று க்ஷணம் ஒரு காஷ்டை ; பதினைந்து காஷ்டை ஒரு லகு; பதினைந்து லகு ஒரு நாடி; இரண்டு நாடி ஒரு முகூர்த்தம்; ஏழு நாடி ஒரு பிரகரம்; எட்டுப் பிரகரம் ஒரு நாள். பதினைந்து நாள் ஒரு பக்ஷம்; இரண்டு பக்ஷம் ஒரு மாதம்; இரண்டு மாதம் ஓர் ருது; ஆறு மாதம் ஓர் அயனம்; இரண்டு அயனம் ஒரு வருஷம்; நூறு வருஷம் ஒரு புருஷாயுள்; முந்நூற்றறுபது வருஷம் ஒரு தேவ வருஷம். 

“சந்திராதி கிரகங்கள், அசுவினி முதலான நக்ஷத்திரங் கள் இவற்றுடன் கூடிக்கொண்டிருக்கிற கால சக்கரத் தினாலே காலஸ்வரூபியாயும் ஈசுவரனாயும் இருக்கிற சூரிய னானவன் பரமாணு முதலாக, வருஷம் முடிவாக உள்ள காலத்தினாலே (பன்னிரண்டு ராசி சொரூபமான புவன் கோசத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிறான். அந்தக் காலம் சௌரமானம், பார்கஸ்பத்தியமானம், சாந்திரமானம் முதலிய பேதங்களினாலே ஸம்வத்ஸரமென்றும், ப்ரவத்ஸர மென்றும், இதர வத்ஸரமென்றும், அநுவத்ஸரமென்றும், வத்ஸரமென்றும் சொல்லப்படுகிறது. 

“இவைகட்கெல்லாம் மேற்பட்ட காலங்களுக்கு யுகங் களென்று பெயர். யுகங்கள் கிருதயுகம், திரேதாயுகம் துவாபர யுகம், கலியுகம் என நான்கு. பன்னீராயிரம் தேவ வருஷம் ஒரு சதுர்யுகம்; அதாவது ஒரு மகாயுகம். எழுபத்தொரு மகாயுகம் ஒரு மந்வந்தரம்; பதினான்கு மந்வந்தரம் ஒரு கற்பம்; இரண்டு கற்பம் பிரம்மாவுக்கு. ஒருநாள். முந்நூற்றறுபது நாள் பிரம்மாவுக்கு ஒரு. வருஷம். நூறு வருஷம் பிரம்மாவின் ஆயுள். 

“மந்வந்தரந்தோறும் ஒரு மநு அதிபதியா யிருப்பர். மந்வந்தர முடிவில் அவாந்தரப் பிரளயம் உண்டாகும். கற்ப முடிவில் பூர்ணப் பிரளயம் உண்டாம். பூர்ணப்பிரள யத்தில் சகல லோகங்களும் அழியும். எல்லாம் அழிந்த. போதிலும் பிரம்மா அழிவதில்லை. அவருடைய ஆயுள் முடிந்தவுடன் அவர் பரமாத்மாவோடு அடங்குவார். பிரம் மாவின் நூறு வருஷ ஆயுளில் பாதிக்குப் பரார்த்தம் என்று பெயர். முதல் பரார்த்தம் முடிந்தது. இப்போது நடப்பது இரண்டாவது பரார்த்தம். முதல் பரார்த்தத்தினுடைய ஆதியில் பிரம்மமென்னும் மகாகற்பத்திலே சப்தப் பிரம்ம மென்றும் சொல்லுகிற பிரம்மா உண்டானார். ஹரியி னுடைய நாபியிலிருந்து உலகம் உண்டானதை பாத்ம கற்பம் என்று சொல்லுவார்கள். அது பிரம்மாவுக்கு இரண்டாம்பரார்த்தமாகும். அதனுடைய ஆதியில் ஸ்ரீஹரி யானவர் வராக அவதாரம் செய்தபடியினால் இந்தக் கற்பத்தை வராக கற்பம் என்று சொல்வார்கள். பகவான் வெள்ளைப் பன்றியின் உருவம் கொண்டமையினால் சுவேத வராக கற்பம் என்று இதற்குப் பெயர். சுவேத வராக கற்பத்தில், ஏழாவது மந்வந்தரத்தில், இருபத்தெட்டாவது மகாயுகத்தின் நான்காவது யுகத்தில் நாம் இப்போது இருக்கிறோம். 

“கமலத்தை மூன்று பாகமாகப் பிரித்த பிறகு பிரம்மா வானவர், முதலில் தமது சக்தியினால் பிரம்மத்தினுடைய. அப்பிரகாச ரூபமான அந்தகாரத்தையும், நான் என்கிற புத்திரூபமான மோகத்தையும், விஷய போகங்களிலே இச்சாரூபமான மகாமோகத்தையும் சிருஷ்டித்தார். பாப ஹேதுவான இவற்றைக் கண்டு மனம் நொந்து, பிறகு பகவானுடைய ஞானத்தினாலே பரிசுத்தமான மனமடைந்து, மீண்டும் சிருஷ்டிக்கத் தொடங்கி ஸநகர், ஸநந்தனர், ஸநாதனர், ஸநத்குமாரர் என்னும் நான்கு ஸந்யாஸ சிரேஷ்டர்களை உண்டாக்கினார். இவர்கள் பிரம்மாவின் மானஸபுத்திரரென்று பெயர் பெற்றனர். இவர்கள் ஸந்யாஸிகளாய் விட்டபடியால் சிருஷ்டிக்குப் பயன்படா தவர்கள் ஆயினர். இவர்கள் எல்லாவற்றையும் துறந்து தவத்துக்குச் சென்றனர். இவ்வாறு பிரம்மாவுக்குத் தம்முடைய முதல் சிருஷ்டியும் இரண்டாவது சிருஷ்டியும் பயன்படாமற்போகவே அவருக்குக் கோபம் உண்டாயிற்று. அப்போது அவருடைய புருவ மத்தியிலிருந்து ருத்திரர் உண்டானார்.ருத்திரர் தமக்கு இருப்பிடத்தையும் பெயரை யும் மனைவியையும் உண்டாக்கும்படி கேட்டார். பிரம்மா அவரைப் பார்த்து, ‘நீ மிகவும் பரபரப்புடைய பாலகனைப் போல் அழுதபடியினால் உனக்கு ருத்திரனென்று பெய ருண்டாகக்கடவது. இருதயம், இந்திரியங்கள், ஆகாசம், வாயு, அக்கினி, ஜலம், பூமி, சூரியன், சந்திரன், தமசு இவை உனக்கு ஸ்தானங்களாகும்’ என்று கூறி, ஏற்ற மனைவியர் பன்னிருவரையும் உண்டாக்கி யருளினார். அவர் கோபத்தில் உண்டானவ ராகையினால் எல்லாவற்றையும் அழிக்கத் தொடங்கினார். ஆகையினால் பிரம்மா அவரைத் தவம் செய்யப் போகும்படி அனுப்பிவிட்டார். பிறகு பிரம்மா லோக சிருஷ்டிக்குக் காரணர்களான மரீசி, அத்திரி, ஆங்கிரசு, புலஸ்தியர், புலகர், கிருது, பிருகு, வசிஷ்டர், தக்ஷர்,நாரதர் என்னும் இந்தப் பதின்மரையும் உண்டாக்கினார். நாரதர் பிரம்மாவின் மடியினின்று பிறந்தார்.தக்ஷப் பிரஜாபதி கட்டை விரலினின்று பிறந்தார். வசிஷ்டர் பிராணனினின்று பிறந்தார். புலஸ்திய ரிஷி செவியிலிருந்து பிறந்தார். ஆங்கிரசு முகத்தினின்றும் பிறந்தார். அத்திரி மஹரிஷி நேத்திரத்திலிருந்து பிறந்தார். மரீசி மனத்தினின்று பிறந்தார். ஸ்ரீமந் நாராயணர் பிரஸன்னமாயிருக்கிற தர்மமானது பிரம்மாவினுடைய வலது மார்பிலிருந்து உண்டாயிற்று. முதுகிலிருந்து அநீதி யையும், மார்பின் புறத்திலிருந்து காமத்தையும், புருவத் தின் நடுவிலிருந்து கோபத்தையும், உதட்டிலிருந்து லோபத்தையும், தமது நிழலிலிருந்து கர்த்தமரையும் சிருஷ்டித்தார். விசுவகர்த்தாவாகிய அந்தப் பிரம்மா வினுடைய தேகத்திலிருந்தும் மனத்திலிருந்தும் இந்தப் பிரபஞ்சமானது இவ்வாறு உண்டாகியது. 

“அப்பால் பிரம்மா தம்மிடமிருந்து உண்டான ஸரஸ்வதி என்னும் அழகிய பெண்ணை விவாகம் செய்து கொள்வது முறையன்று என்று மரீசி முதலியவர்கள் பிரம்மாவைப் பார்த்துச் சொன்னார்கள். பிரம்மா உடனே அந்தச் சரீரத்தை விட்டுப் புகையாக மாறிப் பின்பு வெளி வந்து அந்த ஸரஸ்வதியைத் தம் நாவில் வைத்துக் கொண்டார்.பிறகு பழையபடி சிருஷ்டியைச் சிந்திக்கையில் அவருடைய நான்கு முகத்தினின்றும் நான்கு வேதங்கள் உண்டாயின. பிரம்மா சிருஷ்டித்த மரீசி முதலியவர்கள் சிருஷ்டித் தொழிலைச் செவ்வையாய் நடத்தவில்லை. அதனால் பிரம்மா மனம் வருந்தி, இனி என்ன செய்வதென்கிற. ஆலோசனைக்கு உள்ளானார். அப்பொழுது அவருடைய தேகம் இரண்டாகப் பிரிந்தது. அவற்றிலிருந்து ஆணொன் றும் பெண்ணொன்றுமாக இரண்டு சிசுக்கள் உண்டாயின. அச்சிசுக்களிலே புருஷ சிசுவானது திரிலோகாதிபதியான சுவாயம்பு மனுவாயிற்று, பெண் சிசுவானது சதரூபை யென்று பெயர்பெற்று அந்த மனுவுக்கு மனைவியாயிற்று. பிறகு ஸ்திரீ புருஷரது தருமத்தினால் பிரஜைகள் விருத்தி யாயினர். இவ்வாறானபின் பிரம்மாவானவர், சுவாயம்பு மநுவைப் பார்த்து, “நீ உனக்குச் சமானமான புத்திரர்களை விருத்திசெய்துகொண்டு பூமியைத் தருமமார்க்கத்தில் பரி பாலனம் செய்துவா. பிரஜைகளைப் பரிபாலிக்கும் உன்னி டம் ரிஷகேசராகிய பகவான் பிரஸந்நராய் இருப்பார் ” என்று கூறினர். மநு அவரைப் பார்த்து, “உம்முடைய ஆணைப்படியே நடக்கிறேன். எனக்கும் பிரஜைகளுக்கும் இருப்பிடத்தைக் காட்டியருளும். சகல பிராணிகளுக்கும் இருப்பிடமான பூமி, பிரளயகால ஜலத்தில் மூழ்கியிருக் கிறதன்றோ? அதை எழுப்புவதற்குரிய முயற்சி செய்ய வேண்டும் ” என்றான். 

அதைக் கேட்டதும் பிரம்மா, “இந்தப் பூமியை எப்படி உத்தாரணம் பண்ணுவது?’ என்கிற கவலை கொண்டு ஸ்ரீ ஹரியைத் தியானம் பண்ணினார். அப் பொழுது அவருடைய மூக்கிலிருந்து அங்குஷ்டப் பிர மாண உருவுடையவராக சிசுவொன்று வெளிவந்து ஒரு க்ஷணநேரத்தில் பெரிய யானையளவாக விருத்தியடைந்தது. 

“இவ்வாறு தோன்றிய வராகத்தைப் பார்த்துப் பிரம்மா முதலியவர்கள், ‘இது என்ன?’ என்று மயங்கி நின் றார்கள். அப்பொழுது அந்த வராகம் ஒரு தரம் உறுமியது. அதனால், அந்த வராகத்தைப் பகவானுடைய அவதார மென்று கண்டுகொண்டு எல்லோரும் நான்கு வேதங்களி னால் துதித்தனர். உடனே பகவான், ‘ஹிரண்யாக்ஷன் என்கிற ஓர் அசுரன் பூமியைக் கடலில் மறைத்திருக்கிறான். அவனைச் சங்கரித்து பூமியைக் கொண்டு வருவேன்’ என்று கூறிக் கடலில் பிரவேசித்தார். அங்கிருந்த அசுர னைக் கண்டுபிடித்து அவனோடு போர்புரிந்து அவனைச் சங்கரித்துப் பூமியைத் தம்முடைய பற்களிலே ஏந்திக் கொண்டு வெளியே வந்தார். தேவர்கள் எல்லோரும் கண்டு வியப்படைந்து பகவானைத் துதித்தார்கள். பகவான் சந் தோஷமடைந்து பூமியை ஜலத்தின்மேல் வைத்துவிட்டு மறைந்தருளினார்.” 

ஏழாம் அத்தியாயம்

ஹிரண்யாக்ஷனுடைய வரலாறு

மைத்திரேயர் இவ்வாறு கூறியதும் விதுரர் ஹிரண்யாக்ஷனுடைய வரலாற்றைக் கூறியருள வேண்டு மென்று பிரார்த்தித்தார். மைத்திரேயர் கூறுகிறார்:- 

வைகுண்டத்தில் பகவானுடைய ஸந்நிதானத்தில் ஐய விஐயர்களென்கிற இரண்டு துவாரபாலகர் உண்டு. அவர்கள் பகவானுக்குக் கைங்கரியம் செய்துகொண் டிருப்பவர் கள். இப்படி அவர்கள் கைங்கரியம் செய்துகொண் டிருக் கும்பொழுது ஒரு நாள் பிரம்மாவினுடைய மானஸ புத்தி ரர்களாகிய ஸநகாதிகள் நால்வரும் பகவானைத் தரிசிக்க வைகுண்டம் வந்தனர். அவர்களைத் துவாரபாலகர்களான அவர்கள் இருவரும் மதிக்கவில்லை; உள்ளே செல்வதற்கும் விடவில்லை. இதனால் கோபமடைந்த ஸநகாதி யோகிகள். அவ்விருவரையும் அசுரர்களாகப் பிறக்கும்படி சாபம் கொடுத்தார்கள். சாபத்தைக் கேட்டதும் ஜயவிஜயர்கள் பயந்து ஸநகாதியோகிகளைப் பார்த்து, “இறுமாப் படைந்த எங்களுக்கு ஏற்ற தண்டனை கிடைத்தது. எங்க ளுக்கு எப்பிறவி உண்டானபோதிலும் நாங்கள் பகவானை மறவாதிருக்கும்படி அநுக்கிரகம் செய்தல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். “அப்பொழுது பகவான் அவர்களுக்கு எதிரே தோன்றி அவர்களைப் பார்த்து, ” உங்களுடைய நடத்தைக்குத் தக்க தண்டனை கிடைத்தது. ஆயினும் உங்கள் விருப்பப்படி, நீங்கள் எடுக்கப்போகும் பிறவியில் என் ஞாபகம் உங்களுக்கு இருக்கும் ‘ என்று கூறி மறைந்தருளினார். 

இந்த வரலாறு இவ்வாறு நடந்தபின், ஒரு நாள் மாலைப்பொழுதில், காசிபர் ஸந்தியா வந்தனம் செய்யப் போனார். அப்பொழுது திதியென்பவள், தான் ஒரு புத்தி ரனை அடைய விரும்பிக் காசியப ரிஷியிடம் போய்த் தன் விருப்பத்தைத் தெரிவித்தாள். காசியபர், “அதற்கு இது சமயமன்று.இப்பொழுது உன் விருப்பத்திற்கு இணங்கி னால் உனக்குக் கொடிய பிள்ளைகளே பிறப்பார்கள் ” என்றார். திதிதேவி தன் விருப்பத்தை அப்பொழுதே நிறை வேற்றவேண்டுமென்று பிடிவாதம் செய்தாள். அவர் உடனே அவள் விருப்பம் நிறைவேற அநுக்கிரகம் செய்த னர். பிறகு திதிதேவிக்குத் தன்னுடைய பிடிவாத குணத் தின் பயன் விளங்கியது. அதனால் மிகவும் துக்கமடைந் தாள். காசியபர் அவளைப் பார்த்து, “நீ வருந்திப் பயன் இல்லை.உன் பிள்ளைகள் கொடியவர்களாகத்தான் இருப் பார்கள். ஆனால் உன்னுடைய பேரன் ஒருவன் மாத்திரம் மகாத்மாவாக விளங்குவான் ” என்று திருவாய்மலர்ந்தரு ளினார். பிறகு திதிதேவிக்கு, ஜயவிஜயர்களே ஹிரண்யா க்ஷன், ஹிரண்யகசிபு என்ற புத்திரர்களாகப் பிறந்தார் கள். இவ்வசுரர்கள் பிறந்தபோது ஆகாசத்திலும் பூமியி லும் சுவர்க்கத்திலும் எல்லா உலகங்களிலும் பயங்கரமான உற்பாதங்கள் தோன்றின. பருவதங்களுடன் கூடிய பூமி நடுங்கியது. குறைக்கொள்ளிகளோடு கூடிய இடிகள் விழுந்தன. தூமகேதுக்கள் தோன்றின. பிரசண்டமாருதம் வீசிற்று. புழுதி கிளம்பி, பூமியும் அகாசமும் காணமுடி யாதபடி மூடிக்கொண்டது. கடல் கொந்தளித்தது. பெண் நரிகளானவை அமங்களமாக ஊளையிட்டன. நாய்கள் கழுத்தை உயரத் தூக்கிக்கொண்டு பாடுகிறவை போல வும், அழுகிறவை போலவும் நான்கு திக்குகளிலும் போய்க் குலைத்தன. கழுதைகளும் குதிரைகளும் குளம்புக. ளாலே பூமியைக் கீறிக்கொண்டு கூட்டம் கூட்டமாக ஓடின. பசுக்கள் பாலுக்குப் பதிலாக இரத்தத்தைக் கறந் தன. இவ்வாறு பலவாறான உற்பாதங்கள் உண்டாகவே ஜனங்கள் பயந்து பிரளயம் வந்ததோவென்று எண்ணினார் கள். தேவர்களெல்லோரும் பயந்தார்கள். தேவர்களை அசுரர்கள் துன்புறுத்தத் தொடங்கினார்கள். கடைசியில் புருஷோத்தமரான ஸ்ரீஹரியையே அசுரர்கள் யுத்தத்திற்கு அழைத்தார்கள். அதற்கு இணங்கிப் பகவான் வராகாவ தாரம் எடுத்து ஹிரண்யாக்ஷன் மறைத்த பூமியைக் கடலி லிருந்து கொண்டுவந்து அவனையும் கொன்றார். 

பகவான் பூமியை இவ்வாறு வெளியில் கொண்டுவந்த பிறகு, பூமியில் மநு தம் அரசை ஸ்தாபித்து அரசுபுரிந்து வந்தார். அவருடைய பெண் தேவஹுதி யென்பவளைக் கர்த்தமருக்கு மணஞ்செய்து கொடுத்தார், கர்த்தமருக்குத் தேவஹுதி வேண்டிய பணிவிடைகள் புரிந்துவந்தாள். கர்த்தமர் அரிய தவம் செய்துகொண்டிருந்தார். தேவ ஹுதி தன் கணவருக்கு இனிய பணிவிடை செய்துவந்த மையினால் அவர் மனமகிழ்ச்சி அடைந்து அவளுக்கு அநுக் கிரகஞ் செய்யத் திருவுளங்கொண்டு அவள் விருப்பப்படி அவளோடு வாழ்ந்துவந்தார். 

தேவஹுதிக்கு ஒன்பது பெண்களும் ஒரு பிள்ளையும் பிறந்தனர். அந்தப் பெண்களுக்கு முறையே கலை, அந் ஸூயை, சிரத்தை, கதி, கிரியாதி, யாதி, அருந்ததி, சாந்தி, ஹவிர்த்து என்று பெயரிட்டனர். அவர்கள் ஒன்பது பேரையும் மரீசி, அத்திரி, ஆங்கிரசு, புலகர்,கிரது, பிருகு, வஸிஷ்டர், புலக்ஷர், புலஸ்தியர் ஆகிய இவ்வொன் பது பேருக்கும் மணம் செய்துகொடுத்தார்கள். பிறகு தேவஹுதி தேவியினிடம் பகவான் கபிலராக அவதாரம் செய்தார். கர்த்தமர் கபிலரைப் பகவானுடைய அவதார மென்று அறிந்து அவரைப் பணிந்து விடைபெற்றுத் தவம் புரியச் சென்றார். கபிலர் தம் தாயாகிய தேவஹுதி தேவிக்கு ஞானோபதேசம் செய்யவேண்டுமென்கிற எண் ணங்கொண்டு, பிந்து ஸரஸிலேயே வாசஞ் செய்துகொண்டிருந்தார். 

அப்பால் ஒரு சமயம் தேவஹுதி, கபிலரிடம் தன் மனத்திற்கொண்ட எண்ணத்தைத் தெரிவித்தாள். கபிலர், கருணையோடு ஸாங்கியம், பக்தியோகம் முதலியவைகளின் இரகசியங்களைத் தேவஹுதிக்கு விளக்கியருளினார். பக வானிடம் இவ்வாறு ஞானோபதேசம்பெற்ற தேவஹுதி உபதேசவழியிலே நின்று,முடிவில் பரமதத்தை அடைந் தாள். பிறகு கபிலர் சித்தாசிரமத்திலிருந்து புறப்பட்டு வடக்குத் திக்கை நோக்கிச் சென்றார்; அதன்பின் லோக ஹிதத்தின் பொருட்டுப் பாதாள உலகஞ்சென்று தவம் இயற்றுவாரானார். அவர் இன்னமும் அவ்வாறே தவம் புரிந்துகொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள். 

எட்டாம் அத்தியாயம்

ஸ்வாயம்புவ மனுவின் வம்ச வரலாறு

விதுரர் கேட்க, மைத்திரேயர் கூறுகிறார்:- ஸ்வாயம்புவ மநுவுக்குச் சதரூபையினிடத்தில் ஆவூதி, தேவவூதி, பிரசூதி என்று பிரசூதி என்று மூன்று பெண் களும், இரண்டு பிள்ளைகளும் பிறந்தார்கள். ஆவூ தியை ருசி யென்பவர் விவாகம் செய்துகொண்டு பிரம்ம தேஜஸுடன் கூடிய மிதுனமென்கிற ஸ்திரீ புருஷர்களை ஈசுவரத் தியானத்தினாலே உண்டாக்கினார். மநுவும், தேவர்களும், மநுவின் மக்களும், இந்திரனும், ரிஷிகளும், ஹரியினுடைய அம்சாவதாரமும் ஆக இவ்வாறும் கூடிய காலமே மன்வந்தரமென்று சொல்வது. ப்ரியவிரதன், உத்தானபாதன் என்னும் இரண்டு புத்திரர்கள் மநு வுக்குப் பிறந்தார்கள். கர்த்தமப் பிரஜாபதியினுடைய பெண்ணான களையென்பவள் மரீசி மகரிஷியினிடம் காசிபர் பூர்ணிமாவென்று இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள். அந்தப் பூர்ணிமாவானவர், விந்தை, விசுவகா, தேவகுல்யா என்று மூன்று பெண்களைப் பெற்றார். அத்திரியின் மனைவி யான அநசூயை என்பவள் தத்தாத்ரேயர், துருவாசர். சந்திரன் என்று மூன்று பிள்ளைகளை முறையே விஷ்ணு ருத்திர பிரம்மாக்களினுடைய அம்சங்களினாலே பெற்றாள். சிரத்தை யென்கிற அங்கீரசனுடைய மனைவி சீனிவாலி என்றும் குகூவென்றும் ராகாவென்றும் அநுமதியென்றும் நான்கு பெண்களையும், உசகத்யர் பிரஹஸ்பதி யென்ற இரண்டு பிள்ளைகளையும் பெற்றாள். 

புலஸ்தியர், அவிர்ப்பூ என்கிற மனைவியிடத்தில் அகஸ்தியர், விசிரவசு என்பவர்களைப் பெற்றார். விசிரவசு இளிபிளை யென்கிற ஸ்திரீயிடத்தில் குபேரனையும், கேசினி யென்கிற ஸ்திரீயிடத்தில் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்பவர்களையும் பெற்றார். புலகர் கெதி யென்பவளிடம் கர்மசேடனென்றும் வரியானென்றும் சிகிஷ்ணுவென்றும் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். கிருதுவின் மனைவியான கிருது என்பவள் வாலகில்யர் என்கிற அறுபதினாயிரம் பிள்ளைகளைப் பெற்றாள். வசிஷ்டருக்கு அருந்ததியிடத்தில் சக்தி முதலான பிள்ளைகள் உதித்தார்கள்; ஊரசை யென்கிற மற்றொரு மனைவியிடத்தில் சித்திரகேது, சுரேரசி, விரசன், மித்தி ரன், உப்பணன், வசுபிரத்தியான், தியுமான் என ஏழு ரிஷிகள் பிறந்தார்கள். அதர்வாவின் மனைவி யான சாந்தியானவள் தத்தியங்கு என்னும் பிள்ளையைப் பெற்றாள். பிருகுவானவர் கியாதி என்கிற மனையாளிடம் தாதா, விதாதா என்றிரண்டு பிள்ளைகளையும், பார்க்கவி என்கிற லக்ஷ்மியையும் பெற்றார்.மேரு,ஆயதி, நியதி என இரண்டு பெண்களைத் தாதா விதாதா என்பவர்களுக்குக் கொடுத்தான். இவர்களுக்கு மிருகண்டு வென்றும், பிராண னென்றும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். மிருகண்டுவுக்கு மார்க்கண்டேயரும், பிராணனிடத்தில் வேத சிரசு என்சிற ரிஷியும் பிறந்தார்கள். வேதசிரசு என்பவர்க்கு, உசனசு, பார்க்கவர் என இரண்டு புத்தி ரர்கள் பிறந்தார்கள். உசனசுக்குச் சுக்கிராச்சாரியர் புத்திரரானார். 

பிரம்மகுமாரரான தக்ஷப்பிரஜாபதி மநுவினுடைய பெண்ணான பிரசூதியை விவாகம் செய்துகொண்டு பதினாறு பெண்களைப் பெற்றார்; யமனுக்குப் பதின்மூன்று பெண்களைக் கொடுத்தார்; அக்கினிக்கு ஒரு பெண்ணைக் கொடுத்தார். பிதிர்த் தேவதைகளுக்கெல்லாம் ஒரு பெண்ணைக் கொடுத்தார். பவனென்கிற ருத்திரனுக்கு ஒரு பெண்ணைக் கொடுத்தார். யமதர்மனுக்குக் கொடுத்த பெண்களில் மூர்த்தி யென்பவள் நரநாராயணர் என்னும் ரிஷிகளைப் பெற்றார். இவர்கள் விஷ்ணுவின் அம்சமுடைய வர்களாகையினால் இவர்கள் அவதரித்த காலத்தில், சத்புருஷர்களுடைய மனமும் திக்குகளும் நதிகளும் தெளிவடைந்தன. ஆகாயத்திலே வாத்தியங்கள் முழங்கின. பூமியிலே புஷ்பமாரி பொழிந்தது. முனிவர்கள் ஸ்தோத்திரம் செய்தார்கள். கந்தருவரும் கின்னரரும் கானம் பண்ணினார்கள். தேவஸ்திரீகள் நர்த்தனம் பண்ணினார்கள். அந்த நரநாராயண ரிஷிகள் கந்தமாதன பர்வதத்தை அடைந்தார்கள். பகவதம்ச பூதர்களான அவர்களே இந்தப் புவியில் துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன நிமித்தம் யதுகுலத்திலும் குருகுலத்திலும் கிருஷ்ணார்ச்சுனராக அவதரித்தனர். 

தக்ஷனுடைய பெண்களிலே சதியானவள் சிவபிரா னிடம் அந்நியோந்யமா யிருந்தும் அவருக்கும் தக்ஷனுக்கும் ஏற்பட்ட விரோதத்தினால் மனவருத்தமுற்றுத் தன் தேகத்தை யோக சக்தியினாலே ஒழித்துக்கொண்டாள். 

ஒன்பதாம் அத்தியாயம்

தக்ஷ யாகம்

இவ்வாறு மைத்திரேயர் கூறியதும் விதுரர் “சிவபிரானுக்கும் தக்ஷனுக்கும் விரோதம் வரக் காரண மென்ன?” என்று கேட்டார். மைத்திரேயர் கூறுகிறார்:- 

பூர்வம், விசுவகர்த்தாக்களான பிரஜாபதிகள் ஒரு யாகம் செய்தார்கள். அந்த யாகத்திற்குத் திரிமூர்த்திகளும் மஹரிஷிகளும் தேவர்களும் பிராம்மணர்களும் வந்திருந்தனர். அந்தச் சபைக்குத் தக்ஷன் வந்தான். அவனைக் கண்டதும் பிரம்மாவையும் சிவபிரானையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் எழுந்திருந்தார்கள். 

தக்ஷன் பிரம்மாவைப் பணிந்து ஆசனத்திலே அமர்ந்து தனக்கு மரியாதை செய்யாத சிவபெருமானைக் குரூரமாகப் பார்த்து, பிறகு உமையை நோக்கி, “இவன் லோகபாலகர் களுக்குள் ஒருவன்; வெட்கம் கெட்டவன்; சதாசார சூனியன் ; நல்ல வழியை விட்டவன்; அகங்காரம் கொண்டவன்; மரியாதை இல்லாதவன்; இவனுக்கு நான் பெண்ணைக் கொடுத்தேன். இவன் சுடுகாட்டிலே பூத கணங்கள் சூழ நின்று ஸ்மசான பஸ்மோத்தூளனம் செய்துகொண்டு ஆடுகிறவன். எலும்பு மாலையை ஆபரண மாகக் கொண்டவன். இந்த இழிஞன், மரியாதைக்குரியவனாகிய என்னை அவமதித்தான். ஆதலினால் யாகத்தில் இவன் ஹவிர்பாகம் அடையாமற் போகக்கடவன்” என்று சாபம் கொடுத்து உடனே அந்தச் சபையிலிருந்து எழுந்து போனான். 

இந்தச் சாபத்தைச் சிவபெருமான் பொருட்படுத்தவே இல்லை. அவருடைய தொண்டர்களுள் சிறந்தவரான நந்திகேசுவரர், “இந்தத் தக்ஷன் ஞான சூனியனாயும் பேத திருஷ்டி யுடையவனாயும் அறிவீனனாயும் கர்ம மார்க்கத்தையே அனுஷ்டிப்பவனாயும் பசுவுக்குச் சமான னாயும் இருக்கக்கடவன். இவனுக்கு ஆட்டுமுகம் உண்டாகக் கடவது. இவன் சாபத்தைக் கேட்டுச் சந்தோஷித்தவர் கள் அஞ்ஞானம் நீங்காதவர்களாயும், பணந்தேடுவதிலும் விஷய சுகங்களிலும் உழல்பவர்களாயும் யாசகர்களாயும் திரியக்கடவர்” என்று சாபம் கொடுத்தார். இந்தச் சாபத்தைக் கேட்டதும் பிருகு மகரிஷியானவர் கோபங் கொண்டு, “சிவனை வழிபடும் தொண்டர்க ளெல்லோரும் பாஷண்டிகளாயும் சாஸ்திர மார்க்க விரோதிகளாயும் குடியர்களாயும் உழலக்கடவர்” என்று சாபம் தந்தனர். இந்தச் சாபத்தைக் கேட்டதும் சிவபெருமான் அந்தச் சபையை விட்டு ஒன்றும் பேசாமல் புறப்பட்டுத் தம் இருப்பிடம் சென்றனர். 

இந்த வழக்கு இவ்வாறு முடிந்திருக்கையில் பிரம்மாவானவர் தக்ஷனைப் பிரஜாபதிக்கெல்லாம் அதிபதி யாக்கினார். இதனால் அவன் இறுமாப்புக் கொண் டான். பிறகு பரமசிவத்தினிடங்கொண்ட துவேஷமும் அதிகரித்தது. அதனால் பரமசிவத்தையும் பிரம்ம சிரேஷ்டர் களையும் திரஸ்கரித்து வாஜபேயம் என்கிற யாகத்தைச் செய்தான். அந்த யாகத்தில் சிவபிரானுக்கு ஹவிர்ப்பாகம் கொடுக்கவில்லை. அவரை அழைக்கவுமில்லை. இதற்குப்பின் பிரஹஸ்பதி யக்ஞம்’ என்கிற உத்தமமான யாகமொன்று செய்யத் தொடங்கினான், அந்த யாகத்திற்குப் பரமசிவத்தைத்தவிர மற்ற யாவரையும் அழைத்திருந்தான். அது பெரிய யாகமாதலால் சகல லோகங்களிலிருந்தும் எல்லோரும் புறப்பட்டுப் போனார்கள். இதைக் கைலாய மலையிலிருந்து பார்த்த ஸதி, தன் கணவரிடம் சென்று தன்னையும் அந்த யாகத்திற்கு அனுப்ப உத்தரவுகேட்டாள். சிவபெருமான், “உன் தந்தை நம்மை அழைக்கவில்லை. அழையாதவனுடைய யாகத்திற்கு நீ போவது சரியல்ல. தவிர இவன் என்னிடம் கடுங்கோபம் கொண்டிருக்கிறான். ஆகையினால் நீ இப்போது போனால் உனக்கு அவமானமே கேரிடும். நீ போகவேண்டாம்” என்று சொன்னார்.தேவி, தன் தந்தையைப் பார்க்க வேண்டுமென்கிற ஆவலினால் சிவபெருமான் சொன்னவைகளைக் கவனியாமல், மனம் வேறுபட்டுப் பெரும் வருத்தத்தோடு கண் கலங்கி நின்றாள். இதைக்கண்ட சிவபெருமான், “இவளுடைய பேதைமையை என்னென்பது? இவளை நான் இப்பொழுது போக வேண்டாமென்று தடுத்தால் தந்தையினிடத்துள்ள அன்பால் இங்கேயே சரீரத் தியாகம் செய்துகொள்வாள். இரண்டு விதத்திலும் தொந்தரவாக இருக்கிறது ” என்று எண்ணினார். 

இந்தச் சமயம் தேவி கோபங்கொண்டு தன் தந்தை யிடம் போகப் புறப்பட்டாள். சிவபெருமான் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டார். 

இவ்வாறு தனியே புறப்பட்ட தேவியைக் கண்ட நந்திதேவர், சில பூதகணங்களுடன் சென்று தேவியை விருஷபத்தின்மீது ஏற்றி வைத்துக்கொண்டு தக்ஷனுடைய யாகசாலைக்குப் போனார். தேவி அங்கே கோலாகலமாக யாகம் நடந்துகொண்டிருப்பதைக் கண்டாள். ஆனால் அங்கிருந்தவர் ஒருவரும், தக்ஷனிடம் கொண்ட பயத்தினால் தேவியை லக்ஷியம் செய்யவில்லை. அதையறிந்த தேவி உடனே அங்கிருந்து புறப்பட்டு மாதர்கள் இருக்குமிடம் சென்றாள். அங்கே தேவியின் அன்னையும் சகோதரிகளும் சந்தோஷத்தோடு தேவியை வரவேற்றுத் தழுவிக் கொண்டார்கள். இவர்களைத் தவிர மற்றொருவரும் தக்ஷனிடம் கொண்ட பயத்தினால் தேவியை ஆதரித்து வரவேற்கவில்லை. அவளுடைய தந்தையும் கவனியாமல் இருந்துவிட்டான். என்ன செய்வாள் தேவி ? தன் நாயகர் சொன்ன மொழிகள் அப்பொழுது அவள் நினைவிற்கு வந்தன. அவருடைய பேச்சைக் கேளாமல் புறப்பட்டுவந்த தன்னை நொந்துகொண்டாள். அந்தோ! எனக்கு இதைவிட அவமானம் வேண்டுமா?” என்று கருதித் துயரமுற்று, தன் தந்தையின் ஆணவத்தை வெறுத்து, “என்ன தைரியம் இவனுக்கு? தேவதேவரும் பிரபுவுமாகிய சிவபெருமானிடம் துவேஷங்கொண்ட இவன் தப்புவானா? இந்த யாகத்தில் என் நாதருக்கு ஹவிர்பாகமும் இல்லா திருக்கிறது. இவன் கெட்டான். இவனுக்குப் பெண் என்கிற என்னுடைய இந்தத் தேகத்தையும் நான் சுமந்து கொண்டிருப்பதா! இதோ விடுகிறேன் ” என்று கூறி யோகாப்பியாசம் செய்து அதனால் உண்டான தீயில் அந்த யாகசாலையில் இருப்பவர் முன்பு பிரவேசித்துத் தேகத் தியாகம் செய்தாள். 

இதைப் பார்த்த சபையோர்கள் தக்ஷனைப் பழித்தார்கள். ஸதியோடு வந்த பூதகணங்கள் த யாகத்தை அழிக்கத் தொடங்கின. அதைக் கண்ட பிருகு முனிவர் யாகத்தை ரக்ஷிக்கத் தக்ஷிணாக்கினியில் ஆகுதி செய்தார். அதிலிருந்து அநேகம் பேர் உண்டாகிப் பூத கணங்களை எதிர்த்துத் துரத்தினர். 

இங்கே நடந்த இந்த விஷயத்தை நாரதர் பரம சிவத்துக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டதும் பரமசிவம் சினங்கொண்டு பூமியில் உதைத்தார்; தமது ரோமத்தி லொன்றைப் பிடுங்கிக் கீழே எறிந்தார்; கர்ஜித்தார். அப்பொழுது அதிலிருந்து அகோர வீரபத்திரர் தோன்றினார். அவர் கோர ரூபமும் சிறந்த பலமும் வாய்ந்தவராய் விளங்கினார். பரமசிவம், தக்ஷனுடைய யாகத்தை அழித்துவரும்படி ஆக்ஞையிட்டு அனுப்பினார். 

வீரபத்திரர் உடனே பூதகணங்களோடு சென்று தக்ஷனுடைய யாகசாலையிற் புகுந்து வீரகர்ஜனை செய்து கொண்டு அதை அழித்தார். பரமசிவத்தினிடம் அகாரணமாகத் துவேஷங்கொண்ட பிருகு முனிவரின் தலைமயிரையும் மீசையையும் பிடுங்கி வீரபத்திரர் அவரை அவமதித்தார்; கொடியவனாகிய தக்ஷனுடைய தலையை அறுத்து ஹோமாக்கினியில் போட்டார். இன்னும் அங்கிருந்த சிவத்துவேஷிகளையும் அவமதித்துவிட்டு வீரபத்திரர் கைலாயம் போனார். 

இவ்வாறு தக்ஷனுடைய யாகம் அழியவே, தேவர்கள் எல்லோரும் பிரம்மாவை முன்னிட்டுக்கொண்டு பரம் சிவத்திடம் போய் வணங்கித் துதித்துத் தக்ஷனுடைய யாகத்தைப் பூர்த்திசெய்தருளும்படி வேண்டிக்கொண் டார்கள். சிவபெருமான் தேவர்களிடம் இரக்கம் கொண்டார். தக்ஷனுக்கு ஆட்டின் தலையுண்டாக்கி அவனை எழுப்பினார்; பிருகு முனிவர்க்கு ஆட்டின் தாடியை உண்டாக்கினார். மற்றச் சிவத் துவேஷிகளுக்கு இவ்வாறே இழிவான அடையாளங்கள் உண்டாகும்படி செய்தார்; பிறகு தேவர்களோடு யாகசாலைக்குச் சென்றார். 

இப்போது புத்திவந்த தக்ஷன் பரமசிவத்தைக் கண்டதும் சமகமென்னும் மந்திரத்தால் அவரைத் துடுத்து வணங்கினான். பிறகு தேவர்கள், யாகத்தை முன்விட்ட இடத்திலிருந்து தொடங்கிச் செய்தார்கள். அங்கே மகாவிஷ்ணு தோன்றித் தமக்கும் பிரம்மாவுக்கும் பரம சிவத்திற்கும் யாதொரு பேதமும் இல்லையென்று கூறி, துவேஷிப்பவாகள் தக்ஷனுடைய கதியே அடைவார்கள் என்று தெரிவித்தார். பிறகு அந்த யாகம் சிவபெருமா னுடைய திருவருளால் பூர்த்தியடைந்தது. தக்ஷனும் மேன்மை அடைந்தான். 

பத்தாம் அத்தியாயம்

துருவ சரித்திரம்

மநுவினுடைய பிள்ளை உத்தானபாதன் அரசனாய், அறநெறி தவறாமல் அரசு புரிந்துவந்தான். அவன் ஸுநீதி, ஸுருசி என்று இரண்டு மாதர்களை மணம் செய்து கொண்டான். ஸுநீதியிடம் அவனுக்குத் துருவன் என்னும் புத்திரன் பிறந்தான். ஸுருசியினிடம் உத்தமன் என்கிற பிள்ளையை அடைந்தான். 

உத்தானபாதன் தன் இளைய மனைவியிடம் அன்பும் ஆசையும் வைத்து அவளை மேன்மையாக நடத்திவந்தான். அப்படியிருக்கையில் ஒருநாள் அரசன் உத்தமனைத் தன் மடியில் வைத்துக்கொண்டு தன் இளைய மனைவியுடன் சந்தோஷமாகச் சம்பாஷித்துக்கொண் டிருந்தான். அப்பொழுது அந்த இடத்திற்குத் துருவன் வந்தான்; அவனும் அரசனுடைய மடியிலேபோய் உட்காரப் போனான். அரசன் துருவனை லக்ஷியம் செய்யவில்லை. ஸுருசி துருவனைப் பிடித்துக்கொண்டு,”அடே, உனக்கு மகாராஜாவின் மடியில் ஏறி விளையாட யோக்கியதை இல்லை. நீ என் சக்களத்தியின் பிள்ளை. மகாராஜாவின் மடியில் ஏறி விளையாட வேண்டுமென்ற ஆவல் உனக்கு இருந்தால், நீ தவம் செய்து பகவானை ஆராதித்து என் வயிற்றில் வந்து பிற; போ ” என்று கடிந்துகொண்டாள். 

துருவன் அங்கே சற்றும் தாமதியாமல் அழுது கொண்டே தன் அன்னையிடம் போய்ப் பெரும் விசனத்துடன் நடந்ததைக் கூறினான். ஸுநீதி, “விசனப் படாதே. ஸுருசி சொன்னது உண்மை. ஆகையினால் நீ பகவானை ஆராதி. உனக்கு ஒரு குறைவும் வராது” என்று புத்திமகி கூறினாள். துருவன், உடனே அரண்மனையை விட்டு, பகவானை நோக்கித் தவம் செய்யத் தைரியமாகப் புறப்பட்டுச் சென்றான். 

துருவன் போகும் வழியில் நாரதர் எதிர் தோன்றி அவனுக்குப் பகவானைக் குறித்துத் தவம் செய்யும் வழியை உபதேசித்தருளினார்; அருகிலிருந்த மதுவனம் என்கிற ஒரு வனத்துக்குப் போய்த் தவச்சாலை அமைத்துக் கொள்ளும் படியும் சொன்னார்; ஸ்ரீ ஹரியை, ஓம் நமோ பகவதே வாஸு தேவாய என்ற மந்திர மூலமாகத் தியானிக்கவும், துளஸி தளத்தினால் அவரை ஆராதிக்கவும் போதித்தார். “இவ்வாறு செய்தால் உனக்குப் பகவான் பிரத்தியக்ஷமாகி உன் விருப்பத்தை நிறைவேற்றுவார்’ என்றும் கூறிச் சென்றார். பிறகு துருவன் மன உறுதியுடன் மதுவனம் சென்று கடுமையான தவம் செய்தான். 

துருவனுக்கு இவ்வாறு இதஞ்செய்து சென்ற நாரதர் உத்தானபாதனிடம் போனார். அவன் அப்பொழுது துருவன் காடு சென்றதை அறிந்து மிகுந்த துக்கப்பட்டுக் கொண்டிருந்தான். நாரதர் அவனுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லித் தேற்றி, “துருவன் தவசித்தி பெற்று எல்லோரும் புகழ வந்து அரசுபுரிவான்” என்று சொல்லிப் போய்விட்டார். 

துருவன் ஒரே மனசாய் இருந்து உறுதியோடு தவம் செய்தான். அவனுடைய தவத்திற்கிரங்கிப் பகவான் அவனுக்குக் காட்சி அளித்தார். துருவன் சிறுபிள்ளை யாகையினால் பகவானைத் துதிக்கத் தெரியாமல் பிரமித்து நின்றான். உடனே சற்று நேரத்தில் பகவானுடைய திருவருளால் அவனுக்குத் துதிக்கும் சக்தி உண்டாயிற்று. துருவன் பகவானை வாயாரத் துதித்து வணங்கினான். பகவான் சந்தோஷமடைந்து, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். துருவன், “எனக்கு அழியாப் பதவி வேண்டும்” என்று கேட்டான். பகவான், “அன்ப, உனக்கு அழிவற்றதாயும் அசைவற்றதாயும் உள்ள பதவியைக் கொடுத்தேன். ஆனால் நீ இன்னும் வெகுகாலம் அரசு புரிந்துகொண்டிருந்து பிறகே அந்தப் பதவியை அடைதல் வேண்டும்” என்று கூறி மறைந்தருளினார். 

பிறகு துருவன் பகவானைத் தியானித்துக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டு ராஜ்யத்திற்கு வந்து, தன் தந்தை, சிற்றன்னை,தாய் முதலியவர்களைப் பணிந்து நின்றான். அரசன் அவனைக் கண்டதும் மகிழ்ந்து ஆசீர்வதித்து அவனிடம் அரசை ஒப்பித்துத் தவவேடம் பூண்டு ஸுநீதியுடன் வனம் சென்றான். 

துருவன் அரசை ஏற்றுப் பரிபாலித்து வந்தான். அப்பொழுது ஒருநாள் அவன் தம்பி காட்டிற்கு வேட்டையாடப் போனான். அங்கொரு 

அங்கொரு யக்ஷனுக்கும் அவனுக்கும் சண்டை உண்டாயிற்று. யக்ஷன் உத்தமனைக் கொன்றுவிட்டான். உத்தமனுடைய தாய் ஸுருசி அவனைத் தேடிச் சென்று ஒரு காட்டுத்தீயில் விழுந்து உயிர் துறந்தாள். 

இதை அறிந்து துருவன் கோபங்கொண்டு பெரும் சேனைகளுடன் யக்ஷர்கள் இருப்பிடமாகிய குபேர பட்டணம் போய் அவர்களை எதிர்த்துச் சண்டை செய்து அநேகரைக் கொன்று ஐயமடைந்தான். அங்கே மநு அநேக மகரிஷிகளுடன் தோன்றித் துருவனுக்கு இதஞ்சொல்லி அவனுடைய கோபத்தை மாற்றிப் பகவானை அடையும் வழியைப் போதித்துச் சென்றார். 

பிறகு, துருவனிடம் யக்ஷர்களின் தலைவனாகிய குபேரன் வந்து, “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டான். துருவன், ‘எனக்கு எப்போதும் பகவானுடைய ஞாபகம் இருக்கவேண்டும் ” என்று வரங்கேட்டான். குபேரன் அந்த வரத்தை மனமுவந்து அளித்து மறைந்தான். 

அப்பால் துருவன் தன் ராஜ்யம் வந்து வெகுகாலம் அரசு புரிந்துகொண்டிருந்து பின்பொரு நாள் மைந்தனிடம் அரசை ஒப்பித்துவிட்டு வனஞ்சென்று முன்போல் தவம் செய்தான். அப்பொழுது ஹரிஸேவகர்கள் வந்து, துருவனைத் திவ்விய விமானத்தில் ஏற்றிக்கொண்டு அழிவற்ற மேலான பதவியிலே கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். எல்லா அண்டங்களும் அவனையே ஆதாரமாகக்கொண்டு சுழன்றுவருகின்றன. இப்பொழுது அவன் ஆகாசத்தில் வடக்குப் பாகத்தில் துருவ மண்டலத்தில் ஸ்திர நக்ஷத்திரமாக விளங்குகிறான். 

– தொடரும்..

– ஸ்ரீமத் பாகவத ஸாரம் (நாவல்), முதல் பதிப்பு: 1945, விவேக போதினி ஆபீஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *