வேள்வி மயக்கம்
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 112
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மேனி முழுதும் ஆயிரமாயிரங் கங்கு மட்டைக் கரங்களை நீட்டிக் கொண்டு, செம்புழுதியில் குளித்துப் பசுமை மங்கிய ஓலைகளோடு நிற்கும் பனைவடலிகளின் நடுவே தனிமையில் உறங்கும் அந்த ஒலைக்குடிசையில் செல்லன், பொன்னி இருவருமே மரணவெறியில் சுதந்திரமாக ஏதேதோ செய்து எதை எதையோ எல்லாம் உளறிக் கொட்டிவிட்டு கிடந்த கிடந்த பாட்டில் உறங்கி விட்டார்கள்.
அன்று அவ்வூர்ப் பத்திரகாளி கோவிலில் வேள்வி! ஆட்டுத்தலைக்குழம்பும் குடல் சொதியும் சாராயமும் பனங்கள்ளும் நடுப்பகல் ஒரு தடவையும் இரவு ஒரு தடவையுமாக அவர்கள் வயிறுகளை நிரப்பின. பிறந்தமேனியும் துறந்த நாணமும் இறந்த தூக்கமுமாக அம்மா அப்பா கிடக்கிறார்களே என்ற கவலை அந்த ஒன்றரை வயதுக்குழந்தைக்கு இருக்கவில்லை.
வழமை யான எட்டுமணி வரும் வரை அதற்குத் தூக்கம் வரவில்லை. குதலைக் குழறலெழுப்பி விளையாட்டுணர்வோடு கண்களைச் சுழற்றிக் குடிசையை நோட்டம்விட்ட போது வழமையாகச் சுவர்மாடத்தில் ஏறி உட்கார்ந்து கொள்ளும் தகரக் குப்பி விளக்கு தரையில் கிடந்து சுடர்த்தலையாட்டுவது கண்ணில் பட்டு விட்டது.
தேன்குடத்துள் குதிக்கும் வண்டின் ஆனந்தக் குதூகலத்தோடு விளக்கை நோக்கித் தவழ்ந்து சென்ற குழந்தை அதை எட்டிப்பிடிக்க முயன்ற போது அது தட்டுண்டு நிலத்தில் வீழ்ந்து மண்ணெய் குபீரென்று சரிந்தது.
குழந்தை மகிழ்ச்சியோடு மண்ணெய் வெள்ளத்திலமர்ந்து, கையால் சளுக் சளுக் கென்று தட்ட, மண்ணெய் பறந்து பளிங்கு மேனியை நனைக்க தீ பரந்தோடி அந்தக் குழந்தையைச் சூழ்ந்து பற்றிக் கொள்ள குழந்தை அலறித்துடித்து விழுந்து புரண்டு கைகால்களை நிலத்தில் பட படவென அடித்து….
இவையெல்லாம் சில நிமிடங்களுள் நடந்து விட்டன. வெறி மயக்கத்தில் பிணங்களாகக் கிடந்த செல்லனும் பொன்னியும் அருண்டு விழித்தெழும்ப முயன்றும், முடியாமல், மயக்கத்தில் மீண்டும் நிலத்தில்சாய, கருகிச் சுருண்ட குழந்தையின் தலையும் சாய்ந்து அடங்கிற்று.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
இரண்டு கடவுள் வாழும் வீடு
செ.தமிழ்ராஜ்
October 12, 2026
மதுரை விடியல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 12, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 12, 2026