வேறு வேறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 2, 2026
பார்வையிட்டோர்: 3,580 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உச்சியிலிருந்து மேற்கில் சரிந்து விட்டது பொழுதுக் கால். நிழல்கள் கிழக்கில் நீளநீளமாய் நகர்ந்தன. அப்போது தான் வீடு வந்து சேர்ந்திருந்தாள் பூவனம்.

காலையில் எட்டு மணிக்கு கூலி வேலைக்குப் போனவள். ஊர்ப்பட்ட வெயில் பூராவும் அவள் தலையில்தான். மிளகாய்ச் செடிக்குள் குனிந்து குனிந்து, ஓடி ஓடி களை வெட்டியது, குறுக்கெலும்பு எல்லாம் குடைச்சலெடுக்கிற வலி. உடம்பின் ஒவ்வொரு இணுக்கும் ‘உட்காரு உட்காரு’ என்று கெஞ்சிக் கூத்தாடியது.

வயிறுமுட்ட ஒரு செம்புத் தண்ணீரை குடித்து விட்டு முந்தியை விரித்து அப்படியே சாயலாம் போலிருந்தது. சாயப் போனவள் மனசுக்குள் பிள்ளைகள். பள்ளிக்கூடம் போயிருக்கிறதுகள். வருகிற நேரம்தான். அம்மா மடியில் விழுகிற ஆசையில் சிட்டாய்ப் பறந்து வரும். பார்த்து விட்டால் போதும்… ரெண்டும் கும்மாளம் போடும். “யம்மா… யம்மா…” என்று ஒரே குதூகலக் கொஞ்சல்தான்.

“காப்பியிருக்காம்மா? போட்டுட்டீயாம்மா?” என்று பறப்பெடுத்துப் போய்க் கேட்பான் முத்துப் பயல்.

“திங்குறதுக்கு ஏதாச்சும் இருக்காம்மா?” என்று அமுங்கிய குரலில் ஆவலாய்க் கேட்பாள் மூத்தவள் ராஜி.

“திங்குறதுக்கா? உங்க ஆத்தாதான் இருக்கேன். பிய்ச்சுத் தின்னுங்க” என்று அலுப்பில் எரிந்து விழுந்தால்… அந்தப் பூச்செண்டுகள் வாடிப் போகும். அரண்டுபோகும். அடிபட்ட அதிர்வில் வேதனையோடு பார்க்கும் பச்சைப் பிள்ளைகள். பாவம்.

இந்தக் கொடுமையை கண்கொண்டு பார்க்கவா பெத்தவள்னு சொல்லிக்கிட்டு இந்தப் பாதகத்தி உசுரோட இருக்கணும்?

அலுப்பையும் ஆயாசத்தையும் மறந்துவிட்டு பாசமும் பதைப்புமாய் புறப்பட்டாள் பூவனம். கட்கத்தில் சின்னப் பெட்டி. கதவைச் சாத்திவிட்டு தெருவில் இறங்கினாள்.

புஞ்சைக்காரியிடம் சம்பளம் வாங்கப் போனாள். அவள் ஏகமாய் முக்கி முனங்கினாள்.

“கால்லே தீயை வைச்சுக்கிட்டுத்தான் திரியுதீக, கூலி கூலின்னு. கூலியாளுக சம்பளம் குடுத்தே வருச வெள்ளாமை கரைஞ்சு போகுது.”

சலித்துப் புளித்துப்போய் சம்பளம் தந்தாள் புஞ்சைக் காரி. பதினைந்து ரூபாய். முகத்தில் பதினைந்து கோணல். பிச்சை வாங்குவதைப் போல அவமானமாய் உணர்ந்தாள் பூவனம். மனசு கிடந்து தகித்தது.

‘ஒழைச்ச காசை தர்றதுக்கு இம்புட்டு வருத்தமா? தானமாவா தர்றாக? வருச வெள்ளாமை எங்கேயிருந்து வெளையுமாம்! கூலிசனங்க கால் படலேன்னா புஞ்சை வெறும் மண்ணுதானே?”

கொதிபானைச் சோறாய் தளதளத்துத் தகிக்கிற நினைவுகள்.

தகிப்பைக் காட்ட முடியாது. புஞ்சைக்காரர்களை பகைத்துக் கொள்ளவும் முடியாது. வயித்துப் பாட்டுக்கு அவர்களிடம் கால் வைத்தாகணும். சாயங்காலம் கையேந்தியாகணும். வேறு புகல்?

பலசரக்குக் கடையில் ஏகக் கூட்டம். நெரிபுரியாய் சாயங்கால வியாபாரம். ‘கச கச’ வென்று பெண்கள். ‘எனக்குக் குடு ஒனக்குக் குடு’ என்று சலசலத்த கூச்சல்.

எல்லாரும் இவளைப் போலத்தான். வேலைக்குப் போய்வந்த ஆட்கள். வீட்டு வேலைகள் முடித்தாக வேண்டிய அவசரம். ‘புருஷன் வந்துருவானே’ ‘புள்ளைக வந்துருமே’ என்கிற பதற்றம்.

கடைக்காரருக்கும் பத்து கையா இருக்கிறது? பாவம். அவரும் பறந்து பறந்துதான் சரக்கு கொடுத்தார். வேர்வை துடைக்க நேரமில்லாமல் கணக்குப் பார்த்தார்.

“ம்…. வேற… ம், வேற… ம், வேற…” என்ற ஒரே ஸ்தாயியில் கடைக்காரரின் விறுவிறுப்பு.

பூவனம் கடைக்குள் பார்த்தாள். தட்டில் கத்தரிக்காய். பச்சைப் பசேலென்று கண்ணுக்குக் குளிர்ச்சியாய். பார்க்கிற ஆளுடன் பேசும்.

முத்துப் பயல் கத்தரிக்காய் என்றால்… குடியிருந்து தின்பான். ராஜி வட்டிலில் விழுந்த காய்த்துண்டுகளையும் பொறுக்கி வாயில் போட்டுக் கொள்வான். அதுக்கொரு வாய்ச்சண்டை நடக்கும், அக்கா தம்பிக்குள். பார்க்கப் பார்க்க சிரிப்பு வரும்.

இவளும் சரக்கு வாங்கினாள். அரிசி, கத்திரிக்காய், வெல்லம், தேயிலை, அரைசாமான், நாலுமுறுக்கு, ஐம்பது கிராம் காராச் சேவு…

“எம்புட்டாச்சு கணக்கு?’

“பதினாறு ரூவா அறுவது காசு.’

“அடியாத்தி. அம்புட்டா ஆச்சு?’

“ம்.”

“கத்தரிக்காய் என்ன வெலை?”

“நூறு கிராம் ஒரு ரூவா இருவது பைசா.”

அவளுக்குள் அதிர்வின் பரவல். “அட கிரகசாரமே… கத்தரிக்காய்க்கா இந்தத் ‘தீ’ வெலை?”

அவளுக்கு மிளகாயை கடித்த மாதிரியிருந்தது. கடைக்காரர் உதட்டில் ஏளனப் புன்னகை.

“என்னம்மா?”

“வெலைவாசியை நெனைச்சா… நெஞ்சுலே ‘பக்’ குன்னு தீப்பிடிக்கு.”

“காலமாச்சும் நின்னு நிதானிச்சு ஓடும். நிதானங் கெட்ட வேகத்துலே ஓடுறது வெலைவாசி ஒண்ணுதான்.”

“சம்பளம் ஆணியடிச்சு அறைஞ்ச ச மாதிரி பானைஞ்சுலேயேதானே நிக்குது?”

“நீங்க வாயைத் தொறந்து கேக்கணும்.”

“உள்ள சம்பளத்தை குடுக்கிறதுக்கே ஏழு பேச்சு பேசுதாக. ம்… என்னத்தைக் கேக்க? கூலி சனங்கபாடு பெருந்தும்பம் தான்.”

பதினாலு ரூபாய் தந்தாள். ஒரு ரூபாய் பாலுக்கு வேணும்.

சகஜத்தன்மை சட்டென்று காணாமல் போயிற்று. கடைக்காரர் கண்ணில் ஓர் எரிச்சல். துல்லியமான வெறுப்பு.

“சொச்சம்?…”

“பாக்கியிலே சேத்துக்கங்க.”

“பாக்கியிலா? ஏற்கெனவே ரொம்ப இருக்கு.”

“சீட்டுவுழுந்தா கடனை குடுத்துருதேன்.”

“சீக்கிரமா கடனை குடுக்குறதுக்கு வழியைப் பாரு.”

“ம்.”

“மேலும் கடன் ஏறாமலாச்சும் பாத்துக்க.”

“ஆட்டும்.”

***

பூவனத்துக்கு முள் சொருகின மாதிரி நறுக்கென்றது. கடைக்காரரின் வெறுப்பும், சிடுசிடுப்பும் இவளுக்குள் அவமானமாய் உணர வைத்தது.

“கத்தரிக்காய் வாங்காம இருந்துருந்தா இன்னிக்கு கடன் இல்லாம தப்பிச்சிருக்கலாம்…” என்ற வருத்தமான முணுமுணுப்போடு கடையை விட்டு நகர்ந்தாள்.

முத்து முகம் மனசுக்குள். “அய்ய்… கத்தரிக்காய்” என்று முகமெல்லாம் பூத்துச் சிரிக்கிற முகம். கண்ணில் தெறிக்கிற மின்னல். குதூகலக் கும்மாளம்.

முள் குத்தலைப் பிடுங்கி மென்மையாய் மருந்து போட்டது மகனின் பூஞ்சிரிப்பு.

தெருவை அடைத்துக் கொண்டு தடதடத்த பேயிரைச்சலாய் வருகிற டக்கர் (டிராக்டர்) சத்தம்.

வீடு வந்து சேருவதற்குள் மூன்று டக்கர்களுக்கு விலகி வழிவிட வேண்டியிருந்தது பூவனத்துக்கு.

கதவைச் சாத்திவிட்டு பால் வாங்க ஓடினாள், பால் சொசைட்டிக்கு. சொசைட்டியில் க்யூ வரிசை. பால் ஊற்றவும் வரிசை. வாங்கவும் வரிசை.

இதெல்லாம்… இப்ப வந்த புதுக்கூத்து.

பால் சொசைட்டி வந்த பிறகு… பால்மாடு ஒரு தொழிலாகிவிட்டது. வீடு தப்பாமல் மோர் கடைவார்கள், முன்பு. ஓசி மோர் அட்டியில்லாமல் உரிமையோடு வாங்கிக் கொள்ளலாம் எந்த வீட்டிலும். தாய்ப்பால்காரிக்கு தட்டுப்பாடு என்றால்… பிள்ளைப்பால் வாங்கிக் கொள்ளலாம் ஓசியாக. மனுச மக்களுக்குள் அப்படியோர் பின்னல்.

போச்சு, அந்த வழமுறையெல்லாம் கொள்ளை போச்சு, அந்த அந்நியோன்யம், பந்தமெல்லாம் பறிபோச்சு.

பால்மாட்டுக்காரிக்கே பாலில்லை. பீச்சிய பாலையெல்லாம் சொசைட்டியில் ஊற்றிவிட்டு, சட்டியில் ஒட்டியிருக்கும் நுரைதான் வீட்டுக் காப்பிக்கு.

அதோ… மஞ்சள் பூதமாய் பால் லாரி வருகிறது. கொள்ளையடிக்க வருகிற மூர்க்க வேகத்தில்.

காத்திருந்து பாலை வாங்கிக் கொண்டு வந்தாள் பூவனம். அவசர அவசரமாய் அடுப்பை மூட்டினாள். பய வந்துருவான். வெல்லம் தேயிலையைப் போட்டு கொதிக்க வைத்தாள். அரிசியை கல்பார்த்து அலசிப் பிசைந்தாள். வேலை தன் போக்கில் நடந்தது… யந்திரமாய்.

மனசு வேறு எங்கோ அலைந்து கொண்டிருந்தது. ஆறுமாசத்துக்கு முந்தித்தான் ‘போய்ச்’ சேர்ந்த புருஷன்.

அந்த ஆள் இருக்கிறவரைக்கும் பிழைப்பில் இந்த மூச்சு முட்டல் இல்லை. ரெண்டாள் சம்பளம். வயிற்றுப்பாடு சிரமமில்லாமல் கழிந்தது. ‘நல்லது பொல்லது’ செய்ய கையில் சில்லறை இருந்தது.

இப்போது… அன்றாடப் பிழைப்பே திண்டாட்டம். ஒரு மனுஷி வியர்வையில் மூன்று வயிறுகள் நனையணும். தகப்பன் இழப்பை உணரவிடாமல் பிள்ளைகளை வளர்க்கணும். முகவாட்டம் வந்து விடாமல்-ஏங்க விடாமல்- பார்த்துக் கொள்ளணும்.

பூவனம் அழ நினைக்கவில்லை. நினைவு உள்ளுக்குள் பின்னிப் பின்னி எங்கெங்கோ, அலைய, கண்ணில் நீரின் உறுத்தல். கன்னத்தில் சரமாய் இறங்கிச் சரிகிற கண்ணீர்.

ஏனோ தெரியவில்லை. கடைக்காரர் நினைவுப் பின்னலுக்குள் சிக்கினார். ‘பாக்கி ஏறவிடாம பாத்துக்க என்று அதட்டலாய் வந்த குரல்.

இனிமே பாக்கி வாங்கப் போனா மானக்கேடா பேசிருவாரோ..! -மனசுக்குள் வந்த பயப் படப்படப்பு. வயிற்றைக் கலக்குகிற கிலி.

இனிமேல் கடன் வங்கக்கூடாது. கடனைக் குடுத்து கணக்கு முடிக்காட்டாலும் மேற்கொண்டு கடன் ஏறாமப் பாத்துக்கணும். அதுதான் மரியாதை.

இன்னிக்கு கத்தரிக்காய் வாங்குனது தப்பு வாங்கியிருக்கக்கூடாது. சின்னவன் ஆசைப்படு வானேன்னு நெனைச்சது தப்பாப் போச்சு…

நெஞ்சுக்குள் சப்பென்று அறைகிற வாழ்வின் அவலம். உடைப்பெடுத்து மீறிக்கொண்டு சீறுகிற அழுகை.

பச்சைப்பிள்ளையோட சின்ன ஆசையை மதிக்கிறதுக்குக் கூட தாய் மனசுக்கு இம்புட்டுத் தடங்கலா…

“ஐயோ, பாதரவே” என்று வாய்விட்டுக் கதறினாள். மடேர் மடேரென்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

“ஏ… சீமைராசா. ஒழக்கரிசி ஜீவன். நீங்க இல்லாமப் போகப்போய், உங்க புள்ளைக இப்படி அலையணுமா? நாக்கு ருசிக்கு வழியத்துப் போய் அலமந்து திரியணுமா?”

கதறலோடு சேர்ந்து கசிகிற வார்த்தைகள். புலம்பிச் சிதறுகிற சோகச் சொற்கள். அடுப்பு வெக்கை அலை அலையாய் வந்து காலில் மோதுகிறது.

“யம்மாய்… யம்மா…ய்.”

முத்துப் பயல். அவனுக்கு முந்திக்கொண்டு வருகிற அவனது காலடிச் சத்தம். பைக்கட்டை தொப்பென்று போட்ட வேகத்தில் அம்மாவிடம் பாய்ந்து தாவுகிற வேகம்.

காலடிச் சத்தத்திலேயே மகனை உணர்ந்து கொண்ட பூவனம் சுதாரித்துக் கொண்டாள்.

முந்திச் சேலையில் முகத்தையும் அழுகையையும் துடைத்துக் கொண்டாள். மூக்கைச் சீறி, மனசைச் சமனப்படுத்திக் கொண்டாள்.

“யம்மா…ய்.”

“வாடா ராசா, ஏஞ்செல்லம்.”

“வேலை முடிஞ்சு வந்துட்டீயாம்மா?”

“வந்துட்டேங் கண்ணு.”

“காப்பி போட்டாச்சா?”

“ஆச்சு ராசா.”

அவன் பிஞ்சுக் காலெல்லாம் விளையாட்டுப் புழுதி. ஓடி வந்த மூச்சிரைப்பு. அவனாகவே ஒரு கிளாஸ் தண்ணீரை முகர்ந்து ‘மடக் மடக்’ கென்று குடித்தான். வாய்க்கடை வழியாக இரு புறமும் இறங்கும் நீர்க்கோடுகள்.

“சேவு வேணுமா… முறுக்கு வேணுமாடா?”

“ரெண்டும்.”

“அக்காளுக்கு?”

“ரெண்டுலேயும் ஆளுக்குப் பாதி.”

“கூருக்கார (கூர்மையான) ராசா. எங்க அண்ணன் மாதிரி.”

அம்மாவின் மெச்சுதல் பிச்சுப் பூக்களாய் விழ, அந்த மூன்றாம் கிளாஸ் சிறுவன் கூச்சமாய் குறுநகை செய்தான். மேல்ச் சட்டையின் முன் பக்கத்தை மடியாக ஏந்த, அதில் சேவும் முறுக்கும்.

“யம்மா, நீ கையை நீட்டு.”

“எதுக்குடா?”

“நீட்டேன்.”

“சரி, கையை நீட்டியாச்சு.”

தன் பங்கிலிருந்து கொஞ்சம் சேவு அள்ளி அம்மாவின் உள்ளங்கையில் வைத்தான். அவனும் ஆசை ஆசையாக தின்றான். ‘நறுக் நறுக்’ சத்தத்துக் கிடையில் ‘நீயும் தின்னும்மா. நல்லாருக்கும்மா’ என்று மழலைக் குளிர்ச்சி காட்டி தலையையாட்டினான்.

அவள் கையில் நடுக்கம். அவளுக்குள் எங்கோ ஓர் உடைவு. உடைந்து நொறுங்கி, நெகிழ்ந்து பாகாய்க் கரைந்த மனசு. குத்தலெடுக்கிற கண்கள். குபுக்கென்று வழிகிற கண்ணீர். பாசத்தின் கற்றையான தாக்குதல்.

நெகிழ்ந்து மிருதுவான குரல். அழுகையில் நனைந்த குரல்.

“எனக்கெதுக்குடா… இதெல்லாம்?”

“சும்மா தின்னும்மா, சேவு நல்லாருக்கு.”-அவன் சொல்லில் ததும்புகிற கொஞ்சல்.

சின்னக் கண்ணில் பரிவின் மின்னல்.

அந்தப் பூச்செண்டின் பாசத்தை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அந்தப் பிஞ்சின் வெள்ளை யான கருணை… ஈர மனசு. மனுச ஈரம்.

வெடித்து அழுதுவிட்டாள். அம்மாவின் அழுகை அவனுக்குப் புரியவில்லை. இருந்தாலும் பதறவில்லை. இது சந்தோச அழுகைதான்.

தின்று முடித்து காப்பியைக் குடித்தான். காப்பியைக் குடிக்கிறபோது ஓர் அவசரம். மடக் மடக்கென்று ஆவியோடு முழுங்கிய வேகம். மகனையே பெருமிதமாய் பார்த்துக் கொண்டிருந்த பூவனம், அந்த மெல்லிய பதற்றத்தைக் கவனித்தாள்.

“என்ன…கண்ணு?”

“வெளையாடப் போவணும். அர்ஜெண்ட்.”

“எங்கடா?”

“களத்துக்கு.”

“போய்ட்டு சீக்கிரமா வந்துரு. சாப்புடணும்.”

“ம். என்ன கொழம்பும்மா?”

“கத்தரிக்காய்.”

“அய்ய்… சக்கை. கத்தரிக்காயா” – அந்தச் சின்ன முகமே அகலமாகிப் போன மாதிரியிருந்தது. ஒளிச்சிரிப்பு. முகமெல்லாம் மனசின் வெளிச்சம்.

“அப்ப… நா வெளையாடப் போவலை.”

முத்துவின் குஷி. அடித்த பல்டி. வாசத்தை மறைத்துக் கொள்ளத் தெரியாத பூவின் வெள்ளைக் குணம்.

பூவனத்துக்கு சிரிப்பாணி பொத்துக்கொண்டு வந்தது. “ஏலேய்… கொழம்பு ஓடியா போயிரும்?” என்று சொல்லிக்கொண்டே சின்னப் பிள்ளை மாதிரி விழுந்து விழுந்து சிரித்தாள். பூவனமாய்ச் சிரித்து ஒளிர்கிற பூவனம்.

முத்து கூச்சத்தில் வெட்கப்பட்டுப் போய் நெளிய… ராஜி வந்துவிட்டாள். அந்த மகிழ்ச்சி சூழலில் கலந்து கொள்கிற ஆவல் பரபரப்பில் நச்சரித்தாள்.

“யம்மா… என்னம்மா சிரிக்கே? தம்பி என்ன செய்ஞ்சாம்மா?”

ராஜியிடம் வாய்கொடுத்துக் கொண்டே அரிவாள் மனையில் கத்தரிக்காயை நறுக்கத் துவங்கினாள்.

கத்தரிக்காய்ப் பிரியத்தில் முத்துப் பயல் பூவனத்தின் அச்சு. அவளுக்கும் கத்தரிக்காயென்றால் போதும்… வாயில் எச்சில் ஊறும். அதிலும் வறுத்த கத்தரி வத்தல் என்றால்.. தின்பண்டம் போல ஆவலாய்த் தின்பாள்.

முன்பெல்லாம்…

எண்ணெய் ஊற்றி வத்தலை வறுத்து வைத்துக் கொண்டு, ஓசி மோரில் கரைத்த சோளக்கஞ்சியை குடித்தால்… அதன் வாசமே தனி….! கஞ்சியை ‘கொண்டா கொண்டா’ என்று கேட்கும்.

ஒவ்வொரு மொடாப்பானையிலும் வகை வகையாய் வத்தல். கத்தரி வத்தல், சீனியவரைக்காய் உப்பு போட்டு வேகவைத்து, காயப்போட்டு அள்ளி வைத்த வத்தல்.

வேலைக்குப் போன புஞ்சைகளில், வரப்புப் பயிராக உள்ள காய்கனிகளை உரிமையோடு பொறுக்கிக் கொள்ளலாம். மார்கழி, தை மாசி மாசங்களில் ‘சேர்ந்த’ காய்கனிகள் வத்தலாகி…, சித்திரை, வைகாசி கோடை பூராத்துக்கும் வாசமான ‘கடிக்சிக்கிடை’யாகும்.

காய்கனியை பறிக்காதே என்று எந்தப் புஞ்சைக்காரி மகராசியும் சொல்லமாட்டாள். “தாயீ… ரெண்டு காயை பறிச்சு மடியிலே போட்டுக்கிட்டுப் போ. புள்ளைக்காகும்” என்பார்கள்.

‘உனக்கு நான், எனக்கு நீ வேணும்’ என்கிற மாதிரியான பிணைப்பு கிராமத்து வாழ்வில். புஞ்சைக் காரிக்கும் கூலிசனத்துக்கும் இடையிலிருந்த பொருளாதார வித்தியாசங்களை மூடி மறைக்கிற படுதாக்களாய்… சில சில ஈர உறவுகள். தாயாய் பிள்ளையாய் பந்தம். அலையடிச்சு அலைவிலகாத உள்பின்னலான உறவுகள்… பரஸ்பர பாச நெருக்கம்.

அந்த ஈர நாட்களெல்லாம் கடந்து ஓடியே போய் விட்டது. கரண்டு, டக்கர், டீசல் வெக்கையில் எல்லா உறவும் வற்றி உலர்ந்து விரிசலாயிற்று. தாயானாலும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்ற கசப்பான நிஜம். எல்லாமே துட்டு. கூலி பதினைந்து ரூபாய் என்கிற நாணய பந்தம் மட்டும்தான். வேறு ஒட்டு மில்லை, உறவுமில்லை. அம்மணமான பைசா உறவு.

ஓசி கொடுத்தால் வாங்க மறுக்கிற பூசணிக்காய், சுரைக்காய் கூட இப்போது துட்டாகி விடுகிறது. இந்தக் கூத்தில் கத்தரி வத்தலை நினைத்தாவது பார்க்க முடியுமா? நடக்கிற காரியமா?

பூவனம் மனசுக்குள் பழைய நினைவுகள். வத்தல் வத்தலாய் வாச நினைவுகள். கசப்பான நிகழ்நாளில் வந்து முட்டியவுடன்…. உள்ளுக்குள் துயரமாய் வந்து உட்கார்கிற ஏக்க உணர்வுகள்.

மறுநாள்.

பூவனத்துக்கு மாரியம்மாள் அத்தை புஞ்சையில் வேலை. மிளகாய் செடிக்கு தூருக்கு தூர் உரஉப்பு வைக்கிற வேலை. நாலைந்து நாட்களாய் அத்தை இவளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

போக வழியில்லை. ஆள் கிராக்கியான நேரம்.

நேற்று ராத்திரி வந்து அத்தை மன்றாடினாள். கெஞ்சிக் கூத்தாடினாள். நாடியை பிடிக்காதது ஒன்று தான் குறை. பூவனம் சரியென்ற பிறகுதான் அத்தை முகம் முகமாயிற்று.

கூட ரெண்டு பெண்கள். பெட்டியில் உரஉப்பை வைத்துக் கொண்டு ஓடி ஓடிக் குனிந்தாள். ஊர்ப் புரணியும் வேலையும் பொழுதைப் போல நகர்ந்தன.

புஞ்சைக்குள் ரெண்டு வரப்பில் நெடுக கத்தரிச் செடிகள். பொசுபொசுவென்று முரட்டு இலைகள், நாய்க்காது மாதிரி. டிசம்பர் பூ நிறத்தில் ஜில்லென்று சிரிக்கிற கத்தரிக்காய். இலைகளை விலக்கிப் பார்த்தால் பச்சைப் பசேலென்று காய்கள், கோழி முட்டை மாதிரி. பார்க்கப் பார்க்க லட்சணம். கடித்துத் திங்கலாம் போலிருந்தது.

‘வேலை முடிஞ்சு போறப்ப… நாலைஞ்சு காய்கள் பறிச்சிட்டுப் போகணும், முத்துப்பயல் கூத்தாடி கொண்டாடுவான். கடையிலேயும் பாக்கி ஏறாமப் பாத்துக்கிடலாம்…’

உள்ளுக்குள் வலை பின்னுகிற ஆசைகள். பின்னப் பின்ன ஆசை. வெயில் பட்டால் சிலந்தி வலை மின்னுகிற மாதிரி… சின்னவனின் மின்னல் சிரிப்பு…

சாயங்காலம்.

மாரியம்மா அத்தை வீட்டுக்குச் சம்பளம் வாங்கப் போயிருந்தாள் பூவனம். சிரித்துக் கொண்டே பதினைந்து ரூபாயைத் தந்தாள்.

அத்தை உதட்டில் சிரிப்பு சிரிப்பாக இருக்க, பொத்தாம் பொதுவாகச் சொல்கிற மாதிரி அங்கலாய்த்தாள்.

“அஞ்சு பைசா குறையாம சம்பளம் வேணும்ங்காக. அடிச்சு வாங்குற மாதிரி புடுங்கிட்டுப் போறாக. அதுக்கும் மேலே புஞ்சையிலே காய்கனியை கை வைக்காக, என்ன ஞாயம் இது?”

சிரித்துக் கொண்டே செருப்பால் அடிக்க முடியுமா? பூவனத்துக்குள் ஆழத்தில் வெட்டுகிற வேதனை. நறுக்கிடுகிற அவமான வலி.

சிரிப்பால் மழுப்பப் பார்த்தாள்.

“அதுக்கென்ன அத்தை? கூலியாளுக இல்லாட்டா புஞ்சை வெறும் மண்ணுதானே? வெளைஞ்சதுலே ரெண்டு பறிச்சா கொறைஞ்சா போகும்?”

“சும்மாவா வெளையுது? உரம் போடாம, செல வழிக்காம வெளையுமா? காய்கனியும் இப்ப துட்டுதானே? துட்டை எடுத்தா களவாணித் தனமில்லையா?”

பூவனத்துக்கு செத்துப் போகலாம் போலிருந்தது. தாட்சண்யமில்லாமல் மூஞ்சியில் விழுந்த அடி. உயிர் நரம்புகளையே சுண்டி அதிரவைக்கிற அடி.

பள்ளிக்கூடம் விட்டு வந்து, காபியை குடித்து விட்டு விளையாடப் போன முத்து, போன வேகத்தில் அம்பாய்ப் பாய்ந்து வந்தான். “யம்மா… யம்மா…”

உயிரில்லாமல் ‘ம்’ கொட்டினாள் பூவனம்.

“கத்தரிக்காய் நெறைய நம்ம குப்பையிலே கெடக்கும்மா. ஏம்மமா. நீ போட்டீயா? எதுக்கும்மா?”

திரும்பிக் கூட பார்க்கவில்லை அம்மா. அடுப்பில் எரியும் தீயையே வெறித்தாள். “அது நம்ம வழமுறைடா.”

சம்பந்தமற்ற பதில். அந்தச் சின்ன முகத்தில் இருட்டாய் ஒரு திகைப்பு.

“நல்ல நல்ல காய்க. பாக்கப் பாக்க ஆசையாயிருக்கு. எடுத்துட்டு வரட்டா… ம்மா?”

அம்மா பார்த்தாள். அறுபட்ட பல்லி வாலின் மெல்லிய துடிப்பாய் ஒரு வலி, பார்வையில்.

“குப்பையிலேயும், மயானத்துலேயும் போட்டதை எடுத்துட்டு வரக்கூடாதுப்பா… அது மனுசத் தன்மை யில்லே.”

“கத்தரிக்காய் வெயில்லே கெடந்து வீணாய்ப் போகும்மா…”

“நாம ஒண்ணும் சூத்தைக் கத்தரிக்காய் இல்லேடா. நம்ம மாதிரி ஏழை பாழைகளுக்கு சூடு சொரணைதான் சொத்து.”

மகன் முகத்தைப் பார்க்கிற சக்தியில்லாமல் அடுப்பைப் பார்த்தாள் பூவனம். அவளுக்குள் ‘தீ’ வனம்.

தொடர்பற்ற பேச்சின் அர்த்தமும் புரியவில்லை முத்துப் பயலுக்கு. அம்மாவும் புதிராகத் தோன்றினாள். புரியாமையும் திகைப்பும் இருட்டாக அந்தப் பிஞ்சைச் சூழ்ந்து கொண்டது, வாழ்க்கையைப் போல.

– ‘இந்தியா டுடே’ இலக்கிய ஆண்டு மலர், 1994-95.

– விரல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1995, கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *