வேண்டுமடி எப்போதும் விடுதலை…
கதையாசிரியர்: வையவன்
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: February 2, 2026
பார்வையிட்டோர்: 8,065
(1983ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மைசூர் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டியன் லாங்வேஜஸ் கட்டிடத்தின் வெளியில் சிவப்பு மஞ்சள் ஊதா என்று வாரி இறைத்தாற்போல் பூத்திருந்த ரோஜாக்களில் கீர்த்தி நின்றிருந்தாள். அவள் முகத்தைப் பார்த்ததும் அதை ஒரு சிவப்பு ரோஜாவாக கிரீஷுக்குக் கற்பனை செய்யத் தோன்றியது.
“குட் மார்னிங்” என்றான்.
அதற்குக் கீர்த்தி பதிலளித்தாள்.
“குட் மார்னிங்”
“நான் ரோஜா சொன்னதைச் சொன்னேன்” என்று வளைத்தான் கிரீஷ்.
“நானும் ரோஜாவுக்குத்தான் சொன்னேன்.”
கீர்த்தியின் புத்திகர்மைக்காக அவன் சிரித்தான், அவன் சொன்ன பதிலுக்காக அவள் சிரித்தாள்.
“கவிஞர் இல்லையா, ரோஜா ஒங்களண்டே வேறு என்ன சொல்லும்?”
“கவிஞன் காலையிலிருந்து பட்டினி.”
“ஸாரி… காலைல கொஞ்சம் லேட்டாப் போச்சு. ஒரு ஃபோர்ட்டீன் பி பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன், எதுக்காக நீங்கள் எனக்காக வெயிட் பண்ணனும்? போகட்டும்னு நினைச்சு நீங்க டிபன் பண்ண வேண்டியது தானே!”
கீர்த்தி படபடவென்று பொரிகிற மாதிரி வேகமாகப் பேசினாள். அவள் வேகமாகப் பேசும் போது கண்களும் உதடும் துடிப்பதை, அவன் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்து விட்டு நிதானமாகச் சொன்னான். “யுனிவர்ஸிடி கேண்டீன்லே ஓங்களோடு சாப்பிடற காலை டிபன் கூட ஒரு குட் மார்னிங்.”
அவள் முகம் பளிச்சிட்டது.
“நீங்க வெயிட் பண்ணிட்டிருப்பீங்கன்னு தெரிஞ்சு தான் நானும் சாப்பிடாம வந்திருக்கேன். வாங்க போகலாம்.”
அவர்கள் இருவரும் மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள்.
பரவியிருந்த மைசூர் வெயில் இன்னும் உறைக்க ஆரம்பிக்கவில்லை, ரோஜாவின் மீது நின்ற மாதிரி சுற்றிலும் வழி நெடுகவிருந்த செடிகளின் மீது வைர மணி போன்று பனித்துளிகள் பிரகாசித்தன.
”இன்னிக்கு ஏன் லேட்னு நீங்க கேட்கவே இல்லியே?”
“சொல்லத் தோணினாச் சொல்லப் போறீங்க” என்றான் கிரீஷ்.
காந்தி சென்டர் கடந்து மைசூர் யூனிவர்ஸிடி லைப்ரரி ரோடில் மெதுவாக இருவரும் நடந்தனர்.
“காலைல ரெண்டு அழகான விஷயம் நடந்தது.”
கீர்த்தி நிறுத்தினாள்.
“என்னென்ன?”
“தம்பி முரளியோட ரிசல்ட் பேப்பர்லே வந்தது. அடுத்து அப்பா என் டிவோர்ஸ் ஸுட் ஃபைல் பண்ண சாமராஜபுரத்திலிருந்து வந்திருந்தார், ஏதோ கையெழுத்து வேணுமாம்.”
கிரீஷ் நடக்காது நின்றான்.
இரண்டடி முன்னே போன கீர்த்தி அவன் பின் தங்கியதைக் கண்டு நின்றாள்.
“ரிஸல்ட் என்ன ஆச்சு?”
“பெயில்”
அவள் முகம் சாந்தமாக இருந்தது.
கீர்த்தி தன் தம்பி முரளியின் என்ஜினீரிங் படிப்புக்காக மைசூரில் மூன்று ஆண்டுகளாகத் தங்கியிருந்தாள். நஞ்சன்கூட்டிலிருக்கும் ஹோலி கிராஸ் பப்ளிக் ஸ்கூலில் அவள் ஓர் ஆசிரியை, அங்கே பணியாற்றும் ஆசிரியர்கள் அங்கேயே பள்ளி ஹாஸ்டலில் தங்கியாக வேண்டும். மதர் சுபிரியரிடம் கெஞ்சாக் குறையாக வேண்டி அந்த விதிக்கு விலக்கு வாங்கி ரயிலிலும் பஸ்ஸிலும் இத்தனை காலம் மூட்டையாக நசுங்கி போய் வந்து கொண்டிருந்தாள். அந்தச் சிரமம், கவலை அக்கறை எல்லாம் அந்த ரிசல்டைக் கேட்டு எப்படி நொறுங்கியிருக்கும்!
“ஸாரி டு ஹியர் இட்.”
“ஓய் ஷூட் யூ… முரளியே அதனாலே பாதிக்கப்படலியே,” அவள் மெல்லிய புன்னகையில் ஒரு தூரிகை சோகம் இழை யோடிற்று. சட்டென்று மறைந்தது.
“ஈஸிட்… எப்படி எடுத்துக்கிட்டார்?”
“கொஞ்ச நேரம் பேசாம உட்கார்ந்திருந்தான். மொகம் வெளுத்துப் போச்சு. காப்பி சாப்பிடறியான்னு கேட்டேன். ஊம் னான். காப்பி குடிச்சுட்டு கிரிக்கெட் பிராக்டிஸ் இருக்குன்னு வெளியே கிளம்பிட்டான்.
கிரீஷ் ஒரு கோபத்தை அடக்கிக் கொள்வது அவன் புருவங்கள் நெறிந்து துடிப்பதில் தெரிந்தது. கீர்த்தி குறுகுறுவென்று ஒரு சுவாரஸ்யத்தோடு அதை வேடிக்கை பார்த்தாள்.
“ஒங்களுக்குக் கோபம் வர்றது இல்லே?”
“கோபப்படாம என்ன பண்றது?”
“கோபப்பட்டு என்ன பண்றது?”
அவள் எவ்வளவு அமைதியாக அதை ஜீரணித்துக் கொண்டாள் என்று கிரீஷ் புரித்து கொண்டான்.
“டிவோர்ஸ் விஷயம்?” என்று இழுத்தான்.
”அவரை நான் டிவோர்ஸ் பண்ண முடியாது, அவர் வேணும்னா என்னை டிவோர்ஸ் பண்ணிக்கட்டும்னு அழுத்தம் திருத்தமாச் சொல்லி அனுப்பிச்சுட்டேன்.”
கிரீஷின் மனதில் தன்னை மீறி ஒரு சபாஷ் ஓசையின்றி எழுந்து மறைந்தது.
அறுகோண வடிவமான யூனிவர்ஸிடி காண்டீனுக்கு வெளியே வண்ண வண்ண உடைகளில் மேனி நிறங்களில் இளமையின் வசந்தோற்சவம் போன்று ஆண்களும் பெண்களும் சிரித்துப் பேசி, கைகோர்த்து கேண்டீன் வாசலில் கூடி நின்றனர்.
”இந்த மரம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.”
“ம்ம்ம்…”
“இட்ஸ் எ லிம்பல் ஆஃப் லைஃப். இதை ரெண்டாவது முறை சொல்றேன்னு நினைக்கிறேன்.”
எத்தனை சுலபமாகத் தன் சொந்தத் துயர்களை மறந்துவிட்டு இவளுக்கு ஓர் அரச மரத்தை ரசிக்கத் தோன்றுகிறது?
கிரீஷ் அவளை ஒரு தனி மரியாதையோடு பார்த்தான்.
“ஐ அட்மையர் யூ”
‘சச்’ என்று நாக்கில் ஒரு சிறு ஓசை எழுப்பி கீர்த்தி அதை ஆட்சேபித்தாள்.
எதிரே ஓர் இம்பாலா கார் வந்தது.
அவர்கள் இருவரையும் அது இரு திசைகளுக்குப் பிரிப்பது போன்று அவர்கள் இடைவெளியை அகற்ற வைத்துவிட்டு அது சற்றே வேகம் குறைத்து இருவருக்கும் மத்தியில் நீந்திச் சென்றது.
செக்கச் செவேலென்று ஒரு முப்பது வயதுக்காரன் இறுகிய உதடுகளும் தடித்த பிரேம் போட்ட ஸ்பெக்ஸுமாக அதை ‘ட்ரைவ்’ செய்து கொண்டு வந்தான். அவன் கீர்த்தியை வெறித்துப் பார்த்துவிட்டு நகர்ந்தான்.
“ராஸ்கல்… இதுதானே ஆணவம்கறது!” என்று கார் அகன்றதும் கிரீஷ் சொன்னாள்.
“அவர்தான் என் கணவர்” என்று கீர்த்தி அமைதியாகச் சொன்னாள்.
“ஈஸிட்” என்று கிரீஷ் திரும்பி தூரத்தில் போகும் அந்தக் காரைப் பார்த்தான், அவனது அகன்ற தோள் மட்டும் தெரிந்தது.
அவனைத் திட்டியதற்கு ஸாரி என்று சொல்லத் தோன்றியது. ஆனால் சொல்லலில்லை.
2
‘இன்று முரளியின் ரிஸல்ட் வந்தது. எதிர்பார்த்தது போலவே பெயில் ஆகிவிட்டான். அப்பா வந்து டைவர்ஸ் ஸூட் கொடுக்க வேண்டுமென்றார். மறுத்து விட்டேன். மனைவியை விலைக்கு வாங்கிய பொம்மை என்று நினைக்கின்ற ஆண் உலகத்தில் விடுதலை வாங்கிக் கொண்டு இனி நான் செய்யப் போவது என்ன? இன்னொரு விஷப் பரிட்சையா? இன்று யூனிவர்சிடி காண்டீனுக்குப் போகும் வழியில் அவர் கார் என்னைக் கடந்து சென்றது.
நானும் கிரீஷும் இணைந்து சென்றதை கண்டு அவர் முகத்தில் துடித்த கோபத்தை அந்த சலவைக் கல் நெற்றி எனக்குக் காட்டிக் கொடுத்தது. ‘ஆண்! என்ன விசித்திரமான பிறவி! தனக்காக எல்லாப் புறக்கணிப்புக் களையும் பொறுத்துக் கொண்டு ஒரு பெண் தவம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிற உணர்ச்சிக் கோளம்…’
டைரி எழுதிக் கொண்டிருந்த கீர்த்தி நிறுத்தினாள். வெளியே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. முரளி தான். டைரியை மூடிவிட்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தாள்.
அன்று மாலை காலேஜ் விட்டு வந்ததிலிருந்து முரளியைக் கீர்த்தி பார்க்கவில்லை, இப்போது இரவு மணி பத்தாகியிருந்தது. எங்கே போய் வருகிறான்? சினிமாவுக்கா?”
முரளியின் கண்கள் சிவந்திருந்தன.
முதல் பார்வையிலேயே கீர்த்தியின் மனசில் ஒரு சிவப்பு வெளிச்சம் எரிந்தது.
தலை குனிந்தவாறு அவளைக் கடந்து உள்ளே வரும்போது பழம் அழுகிய வாசனை. கீர்த்தி உடனே புரிந்து கொண்டாள். குடித்திருக்கிறான். கீழுதட்டை அவள் மெல்லக் கடித்துக் கொண்டாள்.
‘ஃபெயில் ஆனதைத் தாங்க முடிய வில்லையோ! இருந்தாலும் குடித்துவிட்டு என் முன்னால் நிற்க வேண்டும் என்று இவனுக்கு எப்படித் தோன்றுகிறது?’
அவன் காலைக் கழுவிக்கொண்டு வந்தான். கீர்த்தி சமையல் அறைக்குப் போய் சாப்பிடுவதற்காக மணையை எடுத்துப் போட்டாள்.
அவன் சமையல் அறைக்குள் வராமல் வெளியே நாற்காலியில் வந்து உட்கார்ந்தான்.
அவள் இரண்டு தட்டுக்களை எடுத்து வைக்கும் ஓசை அவனுக்குக் கேட்டது.
“எனக்குச் சாப்பாடு வேண்டாம்.”
“ஏன்?”
”பசிக்கலே”
“பசிக்கலியா… சாப்பிட்டா ஒத்துக்காதா”
அவன் மௌனமாக இருந்தான்.
கீர்த்திக்குத் தனியே சாப்பிடப் பிடிக்கவில்லை. சாப்பிடவே வெறுப்பாக இருந்தது. காஸ் ஸ்டவ்வைப் பற்றவைத்துப் பால் காய்ச்சினாள். இரண்டு டம்ளர்களில் பாலை நிரப்பிக் கொண்டு மீதியைத் தயிர் தோய வைப்பதற்காக சூடு ஆறவிட்டு பால் டம்ளர்களை வெளியே கொண்டு வந்தாள்.
“இந்தா…”
அவன் பால் டம்ளரை ஏறிட்டுப் பார்த்தான். வாங்கவில்லை.
“வேண்டாம்.”
”ஏன் போதை தெளிஞ்சுடுமோ?”
சவுக்கால் அடிபட்ட மாதிரி அவன் டம்ளரை வாங்கிக் கொண்டான்.
அவள் எதிரிலிருந்த கட்டிலின் மீது போய் உட்கார்ந்தாள்.
பிரம்பை வைத்துக் கொண்டு நிற்கிற வாத்தியாரம்மாவின் குரல் மாதிரி அவள் கட்டளை கணீரென்று வந்தது. முரளி பேசாமல் எழுந்து போய் உள்ளே யிருந்து பாலை ஆற்றுவதற்காக ஒரு டம்ளர் கொண்டு வந்தான். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஆற்றினான். அவளை நிமிர்த்து பார்க்கவே இல்லை. பாலைக் குடித்துவிட்டு டம்ளரை மேஜை மேல் வைத்தான்.
“எத்தனை நாளா இப்படி?”
“….”
“இன்னிக்குத்தான் ஆரம்பமா?”
“…”
”ரொம்பப் பெருமையான ஆரம்பம். சாமராஜபுரம் வாசுதேவ ஆச்சார்யார் பிள்ளை, மானம் பொறுக்காமெ காவேரியிலே பிராணனை விட்ட நாகலட்சுமியின் பையன். என்ஜினீயரிங் பரீட்சையிலே பெயில் ஆனதுக்காகக் குடிக்காம இருக்கலாமா…”
அவன் கையிலிருந்த பால் டம்ளரைக் கட்டில் ஓரத்தில் வைத்து விட்டாள்.
அவன் நாற்காலியை விட்டு எழுந்துகொண்டான்.
”ஏண்டா எழுந்துட்டே”
“போதும்.”
“என்னது?”
“….”
“அவ்வளவு வருத்தப்படறவன் ஏன் குடிச்சே? நீ ஃபெயில் ஆனதை செலிப்ரேட் பண்ணணும்னா…”
அவன் மௌனமாக இருந்தான்.
“குடிச்சிட்டு என்னை அவமதிக்கிற மாதிரி என் முன்னால வரணும்னு உனக்கு எப்படித் தோணித்து?”
“அக்கா யார் அந்த கிரீஷ்?”
கீர்த்தியை யாரோ முதுகில் அறைந்த மாதிரி இருந்தது.
“நீ ஏன் அவனோட சுத்தறே?”
இதுவரை அவளுக்கு அடங்கிய தம்பியாக இருந்த முரளி இப்போது திடீரென்று சமூகமாகி அவனைக் கேள்வி கேட்கிற ஆளாக மாறிவிட்டது கீர்த்திக்கு வியப்பாக இருந்தது. தப்புச் செய்தவர்கள் வேறு எதன் மீதோ யார் மீதோ குற்றம் சுமத்துகிற சிறு பிள்ளை முயற்சி மாதிரி தோன்றிற்று. அடுத்து அவன் மீது வருத்தமாக வந்தது. இத்தனை வருஷங்கள் இப்படி இவளோடு ஒன்றி யிருந்து கூடப் பிறந்து இன்னும் கூட தன்னைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறானே… இவன் என்ன தம்பி!
“யார் சொன்னது?”
“என் ஃபிரெண்ட் பார்த்தானாம் கண்ணுக்கு நேரே.”
“ஒடனே நீ நம்பிட்டியாக்கும்”
“…”
”நாளைக்கு சாயந்திரம் அவரை இங்கே அழைத்து வருறேன். யூ மீட் ஹிம், தெரிஞ்சுப்பே.”
“ஐ டோண்ட் வாண்ட் டு மீட் ஹிம்.”
“நோ… நீ கட்டாயம் அவரை மீட் பண்ணணும். அதோட ஒன் ஃப்ரெண்ட் இருக்கான் பாரு… ஒன்கிட்டச் சொன்னவன் அவனையும் கூட்டிக்கிட்டு வா. ரெண்டு பேருமா அவரை மீட் பண்ணுவீங்க.”
அவன் தலை குனித்து நின்றன்.
“‘ஃபூல், இருபத்திரண்டு வருஷமா இந்த அக்கா கூடப் பழகறயே… நான் எப்படிப் பட்டவள்னு புரிஞ்சுக்க முடியலையே.”
“வந்து…. நான்…அவர் மாமாவினுடைய குமாஸ்தா ரங்கையா வந்து…”
”ஒன்னை மீட் பண்ணாரா?”
அவன் தலையாட்டினன்.
கீர்த்தியின் கணவன் சந்திரமௌலியின் கப்பல் மார்க் ஊதுபத்தி கம்பெனியின் முக்கிய காரியஸ்தர் ரங்கையா, அவருக்குத் தான் கிரீஷோடு சேர்ந்து சுற்றுவதாக யார் சொல்லி யிருப்பார்கள்?
அவளுக்கு இன்று சந்திரமௌலியின் கார் தன்னைக் கடந்து சென்றது பளிச்சென்று பொறி தட்டிற்று. அவரே சொல்லியிருப்பாரா? அந்தச் சந்தேகமே அவளைக் கூனிக் குறுக வைத்தது.
“ப்ரெண்டுன்னு சொன்னியே?”
“வந்து… ப்ரெண்டுக்கு அவர் அப்பா.”
“ம்ஹூம்…”
அழுவதா…கதறுவதா அவறுவதா… ஒன்றும் வேண்டாம். ஜஸ்ட் ஸ்மைல் அட் இட், மனிதனும் எவரெஸ்ட் உச்சிக்கும் போகமுடியும். அதவ பாதாளத்தில் சேற்றிலே விழுந்து புரளவும் முடியும்.
“முரளி” என்று சின்னப் பையனைக் கூப்பிடுகிற மாதிரி அழைத்தாள் கீர்த்தி.
அவன் ஒரு முறை அவள் கண்களின் மின்னிய உண்மையின் தெளிவை அதில் உறுதியை எடுத்துப் பார்த்துவிட்டுத் தலை குனிந்தான்.
“இப்பச் சொல்றேன் கேட்டுக்க… அந்த கிரீஷும் நானும் ரீஜனல் காலேஜ்லே ஒரே மெயின் எடுத்திருக்கோம். அவர் என்னுடைய உண்மையான நண்பர். ஓனக்கு எத்தனை கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க… அதையெல்லாம் வச்சு ஒன்னை நான் சந்தேகப்பட்டிருக்கேனா?”
“நான் சத்தேகப்படலே.”
“பிறத்தியார் அபவாதத்தை நம்பிட்டே”
அவள் குற்றம் சாட்டுவது போலச் சொன்னாள்.
“ரங்கையாவே சொன்னார், அவர் ‘ஸன்’னும் சொன்னான்.”
”லெட் மீ கிவ் யூ எ ஷாக்கிங் நியூஸ். என் மதிப்புக்குரிய கணவரே இன்னிக்கு நேரிலே பார்த்தார். அவருடைய அட்வைஸின் பேரிலே ரங்கையா மறைமுகமா என்னை ‘வார்ன்’ பண்ணியிருப்பார்”.
முரளிக்குப் போதை தெளிந்து விட்டதோ என்னவோ இந்தக் குற்றச்சாட்டின் வேர் எங்கிருந்து தொடங்கியது என்று கேள்விப் பட்டதும் அவனுக்குத் தன மீதே அருவருப்பாக இருந்தது.
“அக்கா” என்று ஏதோ சமாதானம் சொல்ல வந்தவன் போன்று இழுத்தான் முரளி. அவன் வருந்த ஆரம்பித்துவிட்டான் என்று கீர்த்தி புரிந்து கொண்டாள்.
“சரி… நீ படுத்துக்கோ. ஒன் ப்ரெண்டை நீ அழைச்சுண்டு வர்றியோ இல்லையோ…”
அதைச் சொல்லிலிட்டு குடு தணித்திருந்த பாலை ஒரே மூச்சில் குடித்து அவனுக்குக் கட்டிலைக் காலி செய்தவாறு உள்ளே போனாள்.
பாத்திரத்தில் சூடு தணிந்திருந்த பாலுக்குப் புரைகுத்தி ஜாடியில் ஊற்றி வைத்து விட்டு அவள் கட்டிலைக் கடந்து உள்ளே போனாள்.
உள்ளறையில் டேபிள் லாம்பைப் போட்டுக்கொண்டு அவள் விளக்கை அணைத்தாள், அந்தப் போர்ஷன் கதவை முரளி தாளிட்டு விட்டுப் படுக்கையில் வந்து விழுவது கேட்டது. பாதியில் விட்டு வைத்திருந்த அன்றைய டைரியைப் பூர்த்தி செய்வதற்காக அவள் உட்கார்ந்தாள்.
முன்பு எழுதியவற்றைப் படிக்கும்போது அவளுக்குப் புன்னகை வந்தது. பெண் என்ற வார்த்தையைப் பார்த்தாள். மீண்டும் எழுதத் தொடங்கினாள்.
எதிலிருந்தோ நான் தப்பி ஓடுகிறேனா?
எஸ்… என்னிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன். எல்லோருமே தப்பி ஓடுகிறார்கள். முரளி இன்று தான் கிரீஷோடு சேர்ந்து சுற்றுவதாக ரங்கையாவும் அவர் பிள்ளையும் சொல்கிறார்கள் என்றான். இன்று முதல்முறையாக அவன் குடித்துவிட்டு வந்திருந்தான்.
அவள் எழுதுவதை நிறுத்தினாள்.
வெளியே விசும்பல் ஒலி கேட்டது.
முரளி அழுது கொண்டிருந்தான், தேம்பித் தேம்பி…
3
“கீர்த்தி… ஏன் இன்னும் தூங்கிண்டிருக்கே.”
காதருகில் வந்து யாரோ… யாரோ அல்ல அம்மா நாகலட்சுமிதான் கத்தினாள். பளிச் சென்று கீர்த்தியின் தூக்கம் சுலைந்தது.
விழித்துப் பார்த்தபோது சற்றே ஒருக்களித்திருந்த ஜன்னல் வழியே வாசலில் நிலா வெளிச்சம் தெரிந்தது. இன்னும் விடியலில்லை. மணி என்ன?
அவளுக்கு எழுந்து மணி பார்க்கத் தோன்றவில்லை. எத்தனையானால் என்ன? இன்னும் விடியவில்லை. வெளியே பால் டெப்போவுக்கு ஓட்டிச் செல்லப்படும் எருமைகளின் காலடி ஓசை ஒரு படை அணிவகுப்பு மாதிரி ஓரிரு நிமிஷத்துக்கு விடாது கேட்டது.
‘மகிஷங்கள்… மகிஷாசுரர்கள்… மகிஷா சூராகிய இந்த மைசூர்’, அவளுக்குச் சட்டென்று சாமுண்டீஸ்வர் மலையில் உள்ள அம்மன் விக்கிரகமே நினைவுக்கு வந்தது.
“அசப்பிலே பார்த்தா நாகலட்சுமி சாமுண்டீஸ்வரி விக்கிரகம் மாதிரியே இல்லை” சின்ன வயசில் வீட்டுக்கு விருந்தாளியாக வந்த ஒரு சுமங்கலி, அம்மாவைப் பார்த்துச் சொன்னது திடீரென்று இந்தப் பின்னிரலில் பல வருஷங்களுக்கு அப்பால் நினைவு வந்தது.
‘மனசு எனும் ரகசியப் பேழையில் என்னென்ன வெல்லாம் சேமித்து விடுகிறது. அப்புறம் சேமிப்புக்களை எடுத்து வேடிக்கை பார்க்கும் சிறுமி மாதிரி எப்படியெல்லாம். புரட்டிப் பார்க்கிறது?
‘அம்மாதான் கனவில் வந்தாள். ஏன் என்னை எழுப்பினாள்? சாமுண்டீஸ்வரியையும் மகிஷாசூரனையும் இப்படி நினைப்பதற்காகவா?’
‘யார் மகிஷாசுரன்? தன் கணவர் சந்திரமௌலியா? இல்லை … ரங்கையாவா… சீச்சி… அரக்கனாக இருப்பதற்குக் கூட ஒரு மாட்சிமை வேண்டும். இவர்கள் பாவம், சாமுண்டி யார்? நானா… ஐயோ பாவம். அம்மாவா… இருக்கலாம்… எனக்குத் தெரியாது.
அவள் படுக்கையில் தலையையும் முதுகையும் மட்டும் சற்றே உயர்த்தியவாறு மார்பு வரை போர்த்திக் கொண்டு யோசித்தாள்.
***
சாமராஜபுரத்தில் காவிரி ஓடுகிறது. கரையில் ஒரு சிவன் கோயில், கவரிலிருந்து ஒரு படித்துறை தயங்கித் தயங்கித் தவழ்ந்து இறங்குகிறது. கரையிலே வந்து நின்றாள். பெரிய பெரிய மீன்கள், மூன்றடி நாலடி உயரத்துக்குக் கொழுத்து வளர்ந்த மீன்கள். கோயிலுக்கு வருவோர் அந்த மீனுக்காகப் பிரசாதம் கொண்டு வருவார்கள். அவற்றைப் பிடிக்க யாருக்கும் அனுமதி இல்லை. அவை சிவன் சொத்து.
கீர்த்தி சிறு குழந்தையாக இருக்கும்போதிலிருந்து அவற்றைப் பார்த்து வருகிறாள். பௌர்ணமிகளில் நாகலட்சுமி கீர்த்தியையும் முாளியையும் கோயிலுக்கு அழைத்து வருவாள். நைவேத்தியம் பண்ணிய சித்ரான்னத்தில் ஒரு பங்கை அவர்கள் கையில் கொடுத்து மீன்களுக்கு வீசி எறியச் சொல்வாள்.
மீன்கள் பௌர்ணமி நிலளில் காவிரியில் ஜலக் கிரீடை செய்ய வந்த மச்ச கன்னிகைகள் போலத் திரளாக ஜொலித்துக் கொண்டு அந்த நைவேத்தியங்களைத் தின்ன வரும்.
அம்மாவுக்கு சிவ பக்தி அதிகம்.
அவள் நாள் தப்பாமல் கோவிலுக்கு வந்தாள்.
வரும்போது வெறுங் கையோடு வத்து விட்டால் அவள் மனசு பரிதவிக்கும். நதிக்கரையில் காத்திருக்கும் குழந்தைகள் போல் வாயைக் குவித்துக் குவித்து மீன்கள் கூட்டம் கூடுவது அவள் மனசைத் துளைத்து விடும். அவள் எப்போதும் பொரியாவது பிடிக் கடலையாவது இல்லாமல் கோவிலுக்கு வரமாட்டாள்.
கீர்த்திக்குப் பத்து வயது வரை அந்தக் கோவிலுக்கு அம்மாவுடன் வந்து போன அனுபவங்கள் மனசில் சிற்பம் செதுக்கியது மாதிரி நினைவிருக்கிறது.
அப்புறம் ஒரு நான் அவளது அம்மா நாகலட்சுமி அதே படித்துறையில் குதித்து உயிரை விட்டாள். ஒரு மைல் தொலைவில் மறுநாள் அவள் உடல் கரை ஒதுங்கியிருந்தது. உடம்பெல்லாம் மீன்கள் கொத்திவிட்டிருந்தன. இரண்டு நிமிஷம்தான் கீர்த்தி அந்தக் கோரத்தைப் பார்த்திருப்பாள். யாரோ அவளை அதற்கு மேல் பார்க்க விடாது இழுத்துக்கொண்டு போய்விட்டனர்.
பின்பு அவள் மட்டும் தன்னத் தனியாக எத்தனையோ முறை வந்து கடைசிப் படியில் காலைச் சில்லென்று தழுவும் காவிரியைப் பார்த்துக் கொண்டே மணிக் கணக்காசு உட்கார்ந்திருக்கிறாள். அப்போதும் வாயைக் குவித்தவாறே மீன்கள் வந்தன. அவளுக்கு ஆரம்பத்தில் அவற்றின் மீது கோபம் கோபமாக வந்தது. ஓடும் காவிரியில் அவனது சூடான கண்ணீர் கலந்து கரைந்தது.
கீர்த்திக்குப் பதினோரு வயதான போது அவளையும் முரளியையும் பராமரிக்க ஒரு சித்தி வந்து சேர்ந்தாள். அவள் கண்களில் எப்போதும் மை வைத்துக் கொள்வாள், அவள் வந்த பின்புதான் அம்மா ஏன் ஆற்றிலே விழுந்து விட்டாள் என்ற விவரம் புரிய வத்தது.
“ஓடுகாலி பெத்த பிள்ளைகளுக்கு ஓடுகாலி புத்திதானே இருக்கும்” அந்த மயக்கும் பார்வை கொண்ட சித்தி சுலோசனா அவர்களை அடிக்கும் போதெல்லாம் அந்த வார்த்தைகளைத்தான் பயன்படுத்தினாள். பழங்காலத்துச் சிற்றன்னை கதைகளிலே கேள்விப்பட்ட ‘டிபிகல் சிற்றன்னை’ மாதிரியே அவளும் இருந்தாள்.
மனம் ஒரு பேழையல்ல. அது லட்சோப லட்சம் பக்கங்கள் கொண்ட ஒரு பெரிய ஆல்பம், ஒவ்வொரு மனுஷ ஜீவனும் ஓர் ஆல்பம். அதிலே எத்தனை சீந்திரங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றனர். ஆனால் கீர்த்தியைப் பொறுத்த வரையில் சாமராஜபுர வாழ்க்கையில் நடந்த பல சம்பவச் சித்திரங்களின் முத்தாய்ப்பாக மீன்கள் மேயும் அந்தப் படித்துறை வந்துவிடுகிறது.
கீர்த்தி நஞ்சன்கூடு ஹோலி கராஸ் பப்ளிக் ஸ்கூலில் நியமன உத்தரவு கிடைத்தபோது அவளது சிற்றன்னை காலமானாள். பத்து வருஷம் அப்பாவை அவள் பாடாய்ப்படுத்தி அவரை உறிஞ்சிக் குடித்துவிட்டு கடைசியில் அவள் எலும்பும் தோலுமாகி அஸ்தமித்துச் சாம்பலானாள்.
இரண்டாவது முறையாக ஒரு மனைவி தவறியதற்கு அப்பா குலுங்கிக் குலுங்கி அழுதார்.
அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
இவ்வளவு சீக்கிரம் செத்துப் போவோம் என்று தெரிந்திருந்தால் அவள் இவ்வளவு அதிகாரம் செலுத்தி வெறுத்துப் பொரித்திருக்க மாட்டாளோ….
அவளுக்கு யார் மீது வெறுப்பு? கோயில் குருக்களோடு உறவு வைத்திருந்தாள் என்று சொந்தப் புருஷனாலேயே குற்றம் சாட்டப்பட்ட மூத்தாள் மீதா… குற்றம் சாட்டிய அவர் மீதா… அந்த இடத்தை நிரப்ப வந்த தன் தலைவிதி மீதா… எப்படியோ அப்பா அம்மாவை ஆட்டிப் படைத்ததற்கு இவள் அவரை ஆட்டிப் படைத்து விட்டாள்.
எல்லாத் துக்கமும் எல்லா வெறுப்பும் கரைந்து விடுகின்றன. சித்தி சுலோசனா மீதிருந்த வெறுப்பும் அன்றோடு கரைந்து போயிற்று.
நஞ்சன்கூடு ஹோலி க்ராஸ் பப்ளிக் ஸ்கூலின் மதர் சுபீரியர் கடுகளவும் வெறுப்பு இல்லாதவள். மாம்பழம் மாதிரி குண்டு முகம். எப்போதும் பிரகாசமான ஒரு ரோஜாப் புன்னகை.
பப்ளிக் ஸ்கூலுக்கு ஒரு நாள் வந்து, “அப்பா உன்னை இரண்டு நாள் லீவு போட்டு விட்டுக் கையோடு அழைத்து வரச் சொன்னார்” என்றான் முரளி.
காரணம் சொல்லவில்லை. அவள் சாம்ராஜபுரம் புறப்பட்டுப் போனாள்.
4
சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டியன் லாங்வேஜஸ் கட்டிடத்துக்கு எதிரில் ஒரு காந்தி மண்டபம். மாஞ்சோலை சூழ்ந்த ஓர் அமைதி விக்கிரகம் எதுவுமில்லாத ஒரு பிரார்த்தனைக்கூடத்தின் படிக்கட்டில் கிரீஷும் கீர்த்தியும் உட்கார்ந்திருந்தனர்.
கிரீஷ் ஒரு நோட்டீஸை அவளிடம் நீட்டினான், அவள் வாங்கினாள்.
அது ஒரு கராத்தே கிளாஸ் ஆரம்ப தோட்டீஸ்,
“பஸ் ஸ்டாண்டிலே எங்கிட்டக் கொடுத்தாங்க, இஃப் யூ லைக் டு ஜாய்ன்..”
அவள் சிரித்தாள்.
“ஏன் சிரிக்கிறீங்க?:
“காந்தி மண்டபத்துக்குக் கிட்டே இதைக் கொடுத்துட்டு என்னைச் சேரச் சொல்றீங்களே!”
“தற்காப்புக்காகப் பெண்கள் போராடலாம்னு காந்திஜியே சொல்லியிருக்கார்.”
“என் தற்காப்புக்கு இந்த வயலன்ஸ் தேவையில்லே கிரீஷ். நீங்கள் கவி. வயலன்ஸை நம்பலாமா?”
“வயலன்ஸ்தான் இன்றைய கவிதை”
“நீங்களும் அதை ஒப்புக்கிறீங்களா?”
“நான் ஒப்புக்கறது இருக்கட்டும். உலகம் பூரா கவிதை இப்போ ஒரே கோபமும் சாபமுமாக் கொந்தளிக்கிறது.”
“என் ஹஸ்பெண்டை நீங்க நேத்து பார்த்தீங்க இல்லே?”
“சொல்லுங்க,”
”அவருக்கு ஷுட்டிங் தெரியும். கராத்தே தெரியும். பாக்ஸிங் தெரியும். ஹார்ஸ்ரைடிங் தெரியும், சொந்தமா ரெண்டு குதிரை வச்சிருக்கார்.”
தேவையில்லாமல் அதைச் சொன்ன மாதிரி கீர்த்தி சட்டென்று வாய் மூடிக் கொண்டாள்.
அவன் இதுவரை கீர்த்தியிடம் அவளது குடும்ப வாழ்க்கையைப் பற்றிக்கேட்டதில்லை. அவளும் சொன்னதில்லை. இன்று திடீரென்று ஆரம்பித்ததால் அவளுக்கே சற்று எல்லை மீறுவது போன்று தோன்றிற்று.
”பாதியிலே நிறுத்திட்டீங்க.”
“ம்ம்… இவ்வளவும் தெரிஞ்சுக்கிட்ட தாலே என்ன ரிசல்ட் தெரியுமா?”
அவன் காத்திருந்தான்,
“ஹி மிஸ்ட் ஒன் திங்… லலிங்”
“யூ மீன்…?” என்று அவன் திகைத்த போது அவள் தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.
“ஆமா. நேசிக்க அவருக்குத் தெரியலே. அதான் எங்களுடைய முதலாவது ஸ்ட்ரகிள்”
”ஓங்க மேரேஜ் ஒரு லவ் மேரேஜ்னு நெனச்சேன்”
கீர்த்தி புன்னகை பூத்தாள்.
”இல்லை. அவருக்கு ஜூலியஸ் சீசராத் தான் இருக்கணும். ஹி கேம். ஹி ஸா அண்ட் ஹி கான்க்வர்ட் மீ.”
“புரியலே”
“எங்க பப்ளிக் ஸ்கூலுக்கு ஏதோ டொனேஷன் கொடுக்க வந்திருக்கார். என்னைப் பார்த்தாராம், மூணாவது நாளே எங்க வீட்டிலே இருந்து தம்பி வந்துட்டான்.”
தன் கணவரைப் பற்றி ஒரு அந்நியனிடம் பேசுகிற உணர்வு அவளுக்குள் குறுக்கிட்டது. தன்னை வரம்பு மீறாமல் அடக்கிக் கொண்டாள்.
“தென் தி யூஷுவல் ஸ்டோரி. ஒரு மாசத்துலே அவர் மயக்கம் தீர்ந்துபோச்சு, அவரா விரும்பிச் செஞ்சுட்ட இந்தத் திருமணத்திலே ஏதோ பெரிய வரத்தை எனக்குக் கொடுத்துட்ட பகவான் மாதிரி தன்னை நெனச்சுட்டார். நெஜமா பகவானா மாறியிருந்தா நானும் பக்தையாய் இருப்பேனோ என்னவோ?”
கையிலிருந்த கராத்தே கிளாஸ் நோட்டீஸை நான்காக மடித்து அவள் ஒரு கப்பல் செய்தாள். அந்தக் காதெக்கப்ப பிரார்த்தனைக் கூடத்தின் மொஸைக் தரையில் வைத்து விட்டு அதைப் பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டாள்.
“வாட் வாஸ்தி ட்ரபிள்… நான் ரொம்ப பர்ஸனல் கேள்வியைக் கேக்கறதா யிருந்தா மன்னிக்கணும்.”
அவன் முகத்தில் விஷயம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை. உண்மையான ஈடுபாடு இருந்தது.
கீர்த்தி அவன் முகத்தை ஒரு சித்திரத்தைப் பார்ப்பது போல அமைதியாகப் பார்த்தாள்.
“நேத்து ஒங்களையும் என்னையும் சேர்த்துப் பார்த்தவுடனே என்ன நெனச்சிருப்பார்னு ஓங்களுக்குத் தோணுது?”
கிரீஷ் இவளது குடும்ப அமைதியில் தான் குறுக்கே வந்து விட்டோமோ என்று நினைத்தான்.
“சந்தேகப்பட்டிருப்பாரா?”
அவள் உதடு சற்றுப் பிரிந்தது. துடித்தது. மீண்டும் சலனமின்றி மூடிற்று.
“அதுக்கு மேலே, சந்தேகம்னா கொஞ்சம் நம்பிக்கையும் சேர்ந்ததுதானே. ஆனா அவர் முடிவே கட்டியிருப்பார்.”
இப்போதுதான் அவள் வாழ்க்கையின் பின்னணியில் இருந்த பயங்கரம் அவனுக்குப் புரிந்தது.
“ஐ வாண்ட் டு மீட் ஹிம்.”
கீர்த்தி கிரீஷை ஏறிட்டுப் பார்த்தாள்.
5
கிரீஷை முரளி பார்க்க வேண்டுமென கீர்த்தி கூப்பிட்டிருந்தாள். அவனால் அன்று மாலை வரமுடியவில்லை. மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. ஆதலால் காலையில் வருவதாகக் கீர்த்தியிடம் சொன்னான். சொன்னபடி வந்தான்.
சமையலறையில் கீர்த்தி மும்முரமா யிருந்தாள். வாசல் நடையில் படிக்கட்டின் மீது உட்கார்ந்து நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் முரளி.
“அக்கா'” என்று கிரீஷைப் பார்த்துவிட்டு உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தான் முரளி.
கீர்த்தி வெளியே வந்தாள். அறிமுகம் செய்து வைத்தாள்.
“மீட் முரலி… என் தம்பி…. இவர் ஜே.கிரீஷ். மை கிளாஸ்மெட், கவிஞர்”
ஒரு விரோத பாவத்துடன் இருந்த முரளியின் முகபாவம் கிரீஷின் சினேகபாவமான இந்த ‘கார’த்திற்கு நான் எவ்வகையிலும் இலக்கு இல்லையே என்ற எளிமையான தோற்றத்தில் சற்று நெகிழ்ந்தது.
“க்ளாட் டு மீட் யூ.”
“நீங்க கிரிக்கெட் ப்ராக்டீஸ் பண்றீங்கன்னு கேள்விப்பட்டேன். பௌலரா..பாட்ஸ்மேனா?”
ஐந்தாறு வருஷம் முரளி கிரீஷுக்கு இளையவனாயிருப்பான். சற்றும் மிகையின்றி இயல்பாகக் கிரீஷ் கொடுத்த மரியாதையில் அவன் வெறுப்பு இன்னும் கொஞ்சம் இளகிற்று.
“பௌலர்”
“ஸ்பின்?”
“ம்ம்ம்…”
சமீபத்திய டென்ட் மாட்சைப் பற்றி கிரீஷ் பேச ஆரம்பித்தபோது பத்து நிமிஷத்தில் ஒரு நெருக்கத்தை முரளி உணர்ந்தான். கிரீஷின் சாமர்த்தியத்தைப் பார்த்து அவனுக்கு மட்டும் அறிவிக்கிற மாதிரி ஓர் அட்மீரேஷன் புன்னகை செய்துவிட்டு சமையலறைக்குப் போய் விட்டாள்.
பேச்சு திலீப் ஜோஷியிடமிருந்து மெல்ல கபில்தேவுக்குப் போயிருந்தது. கிரீஷூக்கு இப்படி, ஒரு கிரிக்கெட் டேஸ்ட் உண்டா என்று அவளுக்கு வியப்பாக இருந்தது. அன்று அவள் மைசூர் ஜூவுக்குப் போக சித்ரான்னம் தயாரித்துக் கொண்டிருந்தாள். நெய் சுத்தமாக இல்லாதது அப்போதுதான் தெரிந்தது.
கிரீஷ் காப்பி சாப்பிடும்போது முரளியை உள்ளே அழைத்தாள்.
“கொஞ்சம் நெய் வாங்கிட்டு வர்றியா?”
“சரி… பணமும் பாத்திரமும் கொண்டா, இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை. எந்த ஸ்டோர் தொறந்திருக்குமோ தெரியலை.”
ஒரு பையில் பாத்திரத்தைப் போட்டு ஓரமாக நிறுத்தியிருந்த சைக்கிளில் மாட்டினான் முரளி.
“எங்கே முரளி ஷாப்பிங்கா?” என்று கேட்டான் கிரீஷ்.
“நானும் வர்றேனே…ஐ லைக் எ மூவ்…மைசூரிலே ஹாலிடே மார்னிங் ரொம்ப ப்ளெஸண்டா இருக்கும்.”
தான் தனியே இருப்பதைத் தவிர்ப்புதற்காக அவள் அப்படிச் சொல்கிறானோ என்று கீர்த்தி நினைத்தாள்.
“நீங்க வேண்டாம் ஸார். ஐ’ல் கம் விதின் டென் மினிட்ஸ்”
“ரெண்டு பேருமாத்தான் போயிட்டு வருவோமே, அருமையா இருக்கே”
அதற்கு மேல் அவளுால் ஆட்சேபிக்க முடியனில்வை. எடுத்த சைக்கிளை மீண்டும் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான்.
கலந்த அரிசியைக் குக்கரில் போட்டு விட்டு காய்கறிகளை அரியத் தொடங்கினாள்.
நேற்று கிரிஷ் சொன்னது எங்கிருந்தோ மரத்தில் வந்த ஒரு சிட்டுக் குருவி கீச்சிட்ட போது கவனம் வந்தது.
“நான் ஒரு முயற்சி பண்றேனே.”
கீர்த்தி தன் ஒரு வருட குடும்ப வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை நினைத்துக்கொண்டாள்.
சந்திரமௌலி காலையில் குதிரைச் சவாரி கொஞ்ச நேரம் செய்து வருவான்.
அப்படி அவன் அன்று திரும்பி வந்தபோது கீர்த்தி தோட்டக்காரனுக்குப் புதிய ரோஜா பதியல்களை நடுவதைப் பற்றி யோசனை சொல்லியவாறு தோட்டத்தில் நின்றிருந்தாள். அவன் வீட்டுக்குப் போய் அவளைத் தேடிவிட்டு ஆத்திரத்தோடு அங்கே வந்தான்.
“ஓய் ஆர் யூ ஸ்டாண்டிங் ஹியர்? இன்னிக்கு சேம்பர் ஆஃப் காமர்ஸ் மீட்டிங் இருக்குன்னு நான் ஒங்கிட்டச் சொல்லலே?”
தோட்டக்காரன் எதிரில் இப்படி சிறுமியை அதட்டுகிற மாதிரி அவன் பேசியது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“ப்ரீஃப் கேஸிலே ஃபைலை யெல்லாம் எடுத்து ரெடி பண்ணிட்டேனே”.
அவள் நயமாகப் பேசினாள்.
“ஒய் கான்ட் யூ வெயிட் ஃபார் மீ தேர்?”
“நீங்கதான் ஹார்ஸ் ரைடிங் போயிருக்கீங்களே. இந்த ரோஸஸ் தஞ்சன்கூட்லேருந்து மதர் சுபீரியர் கொடுத்தனுப்பிச்சாங்க. இது ஸ்பெஷல் வெரைட்டி.”
அவளை மேலே தொடர விடாமல் “ப்ளடி ரோஸஸ். நான் சேம்பர் ஆஃப் காமர்ஸுக்குப் போகணுமேன்னு ரைடிங்கை ஹாப் பனவரிலே கட் பண்ணிட்டு வர்றேன்… காலங்கார்த்தாலே வந்து தோட்டத்திலே நின்னுக்கிட்டிருக்கியே…”
கீர்த்திக்கு முகம் சிவந்தது. வேலைகாரர்கள் எதிரில் அசம்பாவிதம் செய்து கொள்ள வேண்டாம் என்று இப்படி அவனுக்கு ஆங்காரம் வரும்போதெல்லாம் அவள் தணித்து விடுவாள். அன்று அவ ளுக்கே தாங்கவில்லை.
மேற்கொண்டு அங்கே நிற்காமல் விடு விடுவென்று வீட்டுக்குள் நடந்தாள். பின்தொடர்ந்து வந்த அவனுக்குக் கோபம் தலைக்கேறியிருந்தது,
“இது என் வீடு, அவங்க என் வேலைகாரங்க, நீ என் மனைவி. ஐ ஆம் தி பாஸ் ஹியர்.”
“ஒங்களுக்கே சந்தேகமா இருக்கா? சொல்லிச் சொல்லிப் பார்த்துக்கறிங்களே!”
“ஷட் அப்”
“டோன்ட் ட்ரீட் மீ லைக் தட்”
அவள் கண்ணீர் பொங்க கூறினாள்.
“யூ டோன்ட் டிசர்வ் மோர் தன் தட்”.
அதற்கு மேல் அவள் பேசுவது வீண் என்று அப்போது உணர்த்தாள்.
6
அந்த வாழ்க்கையில் அன்றாடம் எத்தனை விஷ வாசனை வீசுகின்ற அகந்தைகள் பூத்தன! ஒரு கருணையால் கடாட்சிக்கப்பட்டதாக ஒவ்வொரு நாளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒருத்திக்கு உணர்த்திக் கொண்டே இருந்தால் என்ன நேருமோ அது ஒரு நாள் நேர்ந்தது.
சந்திரமௌலியின் விஸ்கி கலப்பதற்கு ஐஸ் இல்லை. இரவு பதினொரு மணியாகிவிட்டதால் எந்தக் கடை திறந்திருக்கும்… யாரை அனுப்புவது என்று பிரச்னை தோன்றிவிட்டது. ஏதோ வேலையில் ஃபிரிஜ்ஜில் தண்ணீர் ஊற்றி ஐஸ் ட்ரேயை நிரப்ப கீர்த்தி மறந்து விட்டாள். அவனுக்குக் கோபம் வந்து விட்டது.
”யூ டோன்ட் பிஹேவ் லைக் எ வய்ஃப்.”
அவனுக்காக ஒவ்வொரு பாராக ஐஸ் இருக்கிறதா என்று போன் செய்துகொண்டு நின்ற கீர்த்திக்கு அந்தச் சொற்கள் குத் தீட்டிகள் போன்று பாய்ந்தன. குபு குபு வென்று அவள் காதும் கன்னங்களும் சிவந்து சூடேறின.
“இப்ப அதுக்கு என்ன பண்ணலாம்?”
“இந்தத் திமிர்… இந்தத் திமிர்…” என்று உறுமிக்கொண்டே அவன் எழுந்து வந்தான்.
அதற்குள் மறு முனையில் “ஹலோ” என்று குரல் வந்தது.
”க்வாலிட்டி பார்?”
“எஸ்…”
“இங்கே’ ஹில் வியூ’விலேருந்து பேசறேம். ஐஸ் கியூப்ஸ் கிடைக்குமா?”
“ஓ எஸ்”
“வில் யூ ப்ளீஸ் ஸென்ட் இட் த்ரூ எ மெஸஞ்சர்… ஆமாம்… ஆட்டோவிலே அனுப்புங்க. ஆட் தி ஃபேர் இன் தி பில்…”
அவள் போனை வைத்துவிட்டு விறைத்து நின்ற சந்திரமௌலியை வெறித்துப் பார்த்தாள்.
“ப்ரொஸீட்…” என்றாள்.
அவன் அருகில் வந்து அவளை ஓங்கி அறைந்தான். கீர்த்தி எதிர்க்கவில்லை. தடுக்கவும் முயற்சிக்கவில்லை. மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டினாள்.
“இது பாக்கி இருக்கு.”
வெறி தலைக்கேறியிருந்த அவன் அவள் காட்டிய கன்னத்தின் மீதும் ஓங்கி ஓர் அறை விட்டான்.
“இப்ப திருப்தியாயிடுத்தா?”
“வாயைத் திறந்தா கொலை விழும்,”
“செத்துடுவோம்னு நான் பயப்படுறதா நீங்க நினைக்கிறீங்களா?”
அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவன் பற்களைக் கடித்தான்.
“உன்னைக் குப்பையிலேருந்து கோபுரத்துக்குக் கொண்டாந்தேன் பாரு… அதுக்கு இதுவும் சொல்வே.. இதுக்கு மேலேயும் சொல்வே.”
கீர்த்தி அந்தக் கணத்தில் தனது கடைசி இழைப் பொறுமையைக் கைவிட்டாள்.
“ஹு ஆஸ்க்டு யூ… ஓங்களை யாரு என்னைக் கைதூக்கி விடச் சொல்லி கெஞ்சிக் கேட்டுக்கிட்டது?”
“யூ பிச் வாட்டு யூ ஸே.”
“நான் ‘பிச்’ இல்லே. கேர்ஃபுல் ஆஃப் யுவர் வர்ட்ஸ். நானா வந்து உங்களை என்னை கட்டிக்கோங்கன்னு ஓங்க கழுத்தைப் புடிச்கட்டுத் தொங்கலை. இப்பக் கூட ஒங்க கழுத்துலே நான் ஒரு பாரமா இல்லே. யூ ஆர் ஃப்ரீ…”
“எஸ்…எஸ்…எஸ்… கெட் அவுட்,’
“ஆல் ரைட்” என்று ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.
“இதோ பாருங்க… மிஸ்டர் சந்திரமௌலி. ஒரு உண்மையை நீங்க தெரிஞ்சுக்கணும். ஐ டோண்ட் லவ் யூ… இத்தனை நாள் ஓங்களுக்கு நான் பயந்து நடுங்கி ஒடுங்கிப் போனேன்னு நினைக்கிறீங்களா… இல்லே… ஐ பிடீட் யூ.. ஐ பிடிட் யுவர் ஈகோ… யுவர் ஸ்டேட்டஸ் யுவர் மனி… எல்லாத்தையும் பார்த்து எனக்குப் பரிதாபமாயிருந்தது”
“ஸ்டாப் இட்” என்று ஆக்ரோஷமாகக் கத்தினான் சந்திரமௌலி.
“இல்லே. இன்னும் சொல்ல வேண்டியது பாக்கி இருக்கு. ஐ’ம் நாட் கோயிங் டு ஸ்டாப். நீங்க கொலை செஞ்சாக் கூட சரி, ஐம் நாட் அப்ரெய்ட் ஆஃப் யூ.”
சந்திரமௌலி தன் மேஜை மீது வைத்திருந்த விஸ்கி பாட்டியைத் திறந்து சோடா இல்லாமல் ஐஸ் இல்லாமல் ‘ரா’வாக நேராகக் கொஞ்சம் வாய்க்குள் ஊற்றிக் கொண்டான். நடுங்கும் கைகளோடு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான். இரண்டு இழுப்பு இழுத்தான், ஏதோ ஒரு பலம் வந்தது.
“கமான் கண்டின்யூ” என்றான்.
“எத்தனை பரிதாபமான வெலங்குகள்ளே மாட்டிக்கிட்டு நீங்க தவிக்கிறீங்க.. ஸோ தட்… ஒங்களுக்குச் சொந்தப் பொண்டாட்டி கூட எஸ் பாஸ் எஸ் பாஸ்னு தலையாட்டற ஒரு அடிமையாட்டம் தேவைப்படறா. மிஸ்டர் சந்திரமௌலி….” என்று இரண்டாம் முறையாக அவள் அவன் பெயரைச் சொல்லி அழைத்தாள்.
மகிஷாசூர மர்த்தினியாக சாமுண்டீஸ்வரி நிற்பது போல் அவனுக்கு ஒரு பிரமை தட்டிற்று.
“எ வய்ஃப் ஈஸ் எ வய்ஃப். நீங்க அவளை ஏமாத்தலாம். துரோகம் பண்ணலாம். அடிக்கலாம் வதைக்கலாம்… ஸ்டில்.. அந்த ஸ்டேட்டஸ் யூ கெனாட் ஷேக் இட்… அப்படியே நீங்க குப்பை மேட்டிலே இருந்து இந்தக் கோபுரத்துக்குக் கொண்டு வந்துட்டதா நெனச்சாலும் இது ஒரு ஸ்டேட்டஸ்!”
“ஐ வில் டிவோர்ஸ் யூ” என்று அதிர்ச்சி யடைந்தவன் போன்று அவன் சொன்னான்.
“அப்பக் கூட அது ஒரு ஸ்டேட்டஸ்…. கோர்ட் முன்னாலே நீதிபதி லாயர்… சொஸைட்டி முன்னாலே நின்னு யூ ஹாவ் டு அக்ஸெப்ட் யுவர் ஃபெய்லியர்”
”கெட் அவுட் கெட் அவுட்” என்று குண்டு பாய்ந்து நகர முடியாத வேங்கை மாதிரி அவன் அலறினான்.
அடுத்த நாள் அதிகாலையில் தன்னுடைய டிகிரி சர்ட்டிபிகேட்டுகள் கொண்ட ஒரு பிரீஃப் கேஸை மட்டும் எடுத்துக்கொண்டு சாமராஜபுரத்துக்குப் போனாள். அவளைக் கண்டதும் வீட்டில் நிலவிய அதிர்ச்சியை லட்சியம் செய்யாது பெட்டியை வைத்து விட்டுப் படித்துறைக்குப் போனாள்.
அம்மா…நீ பயந்து கொண்டு.. மனுஷ மனசினுள் இருக்கும் மகிஷாசூரர்களை மர்த்தனம் செய்வதில் இருக்கும் ஆயாசத்துக்கு அஞ்சிப் பிராணனை விட்டுவிட்டாய். நான் ஓர் அகந்தைக்கு எதிரே நின்றுவிட்டு வந்திருக்கிறேன். அதை ஹதம் செய்தேனோ என்று தெரியவில்லை. அல்லது உன் மாதிரியே என்னை வேறொரு வகையில் ஹதம் செய்து கொண்டேனா என்றும் தெரியவில்லை.
அன்று மத்தியானமே சுருக்கமாக விஷயத்தைச் சொல்லிவிட்டு நஞ்சன்கூட்டிற்கு பஸ் ஏறினாள் கீர்த்தி. மதர் சுபீரியர் அவளை அணைத்துக்கொண்டாள்.
7
நெய் வாங்கிக் கொண்டு திரும்பி வந்த போது முரளி கிரீஷிடம் ஒரு தனி மரியாதை கொண்டுவிட்டான் என்று புரிந்தது.
“கீர்த்தி… முரளி ஒரு முக்கியமான கேள்வி கேட்டார்”
“அவன் சின்னப் பையன்தானே! கேட்டான்னே சொல்லுங்க, கோவிச்சுக்க மாட்டான்”
”ஸாரி… எனக்கு அவன் இவன்னு யாரைப் பேசியும் பழக்கமில்லை.”
முரளிக்கு மேலும் அவன் மீது மதிப்பு உயர்ந்தது.
“சரி, ஓங்க இஷ்டம் என்ன கேள்வி கேட்டான்?”
“கவிஞனாலே ஓலகத்துக்கு என்ன பிரயோஜனம்?”
கீர்த்தி சொன்னாள்: “சாந்தி நிகேதன் விஸ்வ பாரதி யூனிவர்ஸிடி! அது ஒரு கவிஞர் வேலை தானே… ரவீந்திரநாத் டாகோர் செய்ததுதானே”
கீர்த்தி சொன்னதைக் கேட்டு கிரீஷ் முரளியைப் பார்த்தான்.
“அவ்வளவு ஏன்… நம்ம யூனிவர்ஸிடி காம்பஸ் மான்ஸ கங்கோத்ரி இருக்கே. அது கன்னட மகாகவி குவேம்புவோட லட்சியக் கனவுதானே….”
”ஸ்டில்…” என்று நிறுத்தினான் கிரீஷ்.
”சீக்கிரமா டிபன் சாப்பிட்டுட்டு ஜூவுக்குப் போவோம். அங்கே யோசிக்கலாம்.”
“ஜூவுக்கா?”
“ஆமா… இன்னிக்கு ஹோலி க்ராஸ் ஸ்டுடண்ட்ஸெல்லாம் ஜூவுக்கு பிக்னிக் வரப் போறதா மதர் சுபீரியர் லெட்டர் போட்டிருக்கா.”
“நாங்களும் அந்த ஸ்டூடன்ட்ஸ் டீச்சரை மீட் பண்ற சம்பவத்துக்கு ஸ்பெக்டேடர்ஸா இருக்கணுமா?”
***
அந்தக் கனத்த பூட்டுக்கள் அடைத்த கம்பிக் கதவுகள்… வட்டமான கிராதி சுவர்… இதனாலெல்லாம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாலும் சிங்கங்கள் இன்னும் சிங்கங்களாகவே இருந்தன.
கீர்த்தி சிங்கங்களின் செக்ஷனை விட்டு அகலவே மனமின்றி நின்று கொண்டிருந்தாள்.
“ஒங்களுக்குப் பறவைகள் செக்ஷன் தான் ரொம்பப் பிடிக்கும்னு நெனச்சேன்” என்று கிரீஷ் சொன்னான்.
“நீங்கள் கவிஞர் அல்லவா?!”
“ஏதாவது கூல்டிரிங்க்ஸ் சாப்பிடுவோமா” என்று குறுக்கிட்டான் முரளி.
”போரா?”
“நாட் எக்ஸாக்ட்லி”
“கிட்டத்தட்ட” என்று முரளிக்கு எடுத்துக் கொடுத்தாள்,
அவன் புள்னகையோடு தலையாட்டினன்.
“என்னமோ எனக்கு சிங்கத்தைப் பிடிக்கிறது. அதுவும் ஆண் சிங்கத்தை. வலிமை, மக்னானிமிடி… கருணை…”
“கருணையா? சிங்கத்துக்கிட்டயா?”
‘”எஸ். லுக் அட் த ஐஸ். ஒரு ராயல் பெனவலன்ஸ் தெரியலே. அம்பிகைக்கு இதை வாகனமா ஹிந்துக்கள் கற்பனை பண்ணியிருக்காங்களே!'”
“அக்கா…” என்று மறுபடியும் முரளி கூப்பிட்டான்.
”எனக்கு வேணாம் முரளி, நீ போய்ச் சாப்ட்டு வா.”
“நான் வரட்டுமா முரளி” என்று கூட வேண்டுமானால் துணைக்கு வருகிறேன் என்ற பாவத்தில் கிரீஷ் கேட்டான்.
“வேண்டாம் சார்.”
எங்கே கிரீஷ் போய்விடுவானோ என்று கீர்த்தி கவலையுற்றாள். அந்த நேரத்தில் ஏனோ அவன் கூட இருக்க வேண்டும் என்று தோன்றியது.
முரளி தூரத்தில் தெரிந்த கூல் ட்ரிங்க் பாருக்குப் போனான்.
“ஹவ் ஈஸ் முரளி?” என்று தம்பியைப் பற்றிப் பொதுவாக விசாரித்தாள்.
”வெரி நைஸ்”.
அலைகின்ற சிங்கத்தையே பார்த்துக் கொண்டு கீர்த்தி சொன்னாள்:
”முந்தா நேத்து முரளி குடிச்சுட்டு வந்திருந்தான். ஓங்களையும் என்னையும் சம்பந்தப்படுத்தி யாரோ என்னமோ சொன்னாங்களாம். யாரோ என்ன எங்க ஹஸ்பெண்ட் குமாஸ்தாதான்….”
சிவுக்கென்று தலையையும் கால்களையும் தன் ஓட்டுக்குள் ஓர் ஆமை இழுத்துக் கொள்வது போன்ற உணர்வு கிரீஷுக்கு ஏற்பட்டது.
என்ன சகஜமாக அதைத் தெரிவிக்கிறாள் இவள்… ஈஸ் ஷி ஸோ ஷாலோ…ஆழமற்றவளா… இல்லை ஆழம் உணர்ந்தவளா?
“என்ன பேசாம ஒரு சைலன்ஸ்?”
அவள் திரும்பி அவளை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் கண்கள் அவளை முற்றிலும் வித்தியாசமாகப் பார்த்தன. அவற்றில் இத்தனை உணர்ச்சிகள் செறிந்து கீர்த்தி இன்று தான் பார்த்தாள். திடீரென்று அவளுக்கு எந்த ஆளரவமும் இல்லாத ஒரு வனாத் தரத்தில் தானும் அவனும் மட்டும் தனித்து நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
”டூ யூ லவ் மீ கீர்த்தி?” அவன் தொண்டை கரகரக்கக் கேட்டான்.
அவன் கேள்விக்குச் சொல்வதற்கு அவளிடம் எந்தப் பதிலும் இல்லை.
”ஐ நீட் நோ ரிப்ளை” என்று அவளது சுருள் சுருளாய் வளைந்த கூந்தலைப் பார்த்தவாறே சொன்னான்.
“ஐ ஷுட் பீ ஹானஸ்ட்… ஐ லவ் யூ… ஐ லைக் யூ… ஐ அட்மைர் யூ.”
”ஷ்ஷ்’” என்று அவன் உணர்ச்சிவேகத்தை அவள் அடக்கினாள். நல்ல வேளையாக அவர்களைச் சுற்றி இரண்டு சிங்கங்களைத் தவிர வேறு யாருமில்லை.
”லெட் மீ ஃபினிஷ்”
“நவ் ஒன்லி ஸ்டார்டட்… ஒரு டீன் ஏஜ் பையன் மாதிரி,”
“அதனாலேதான் முடிச்சுடறேன். என்னவே உங்களுக்கு ஒரு அபவாதம் வந்தா… எதுவுமே நடக்கலேன்னாலும் நான் குற்றவாளியா எனக்குத் தோன்றது.”
கீர்த்தி அவன் குரலில் இருந்த ஒரு நேர்மையில் நிசப்தமாய்விட்டாள்.
”ஐ லவ் யூ…நீங்க பயப்படவே வேண்டாம். நத்திங் வில் ஹாப்பன். ஆனா ஒண்ணு. நீங்க எவ்வளவு பிடிவாதமா மறுத்தாலும் சரி. நான் ஒரு முயற்சி பண்ணியே தீரணும்”
“புரியலே” அவள் முகம் வெளிறிவிட்டது.
“நான் முரளியோட போய் மிஸ்டர் சந்திரமௌளியை மீட் பண்ணப்போறேன்”
அவள் மௌனமாக இருந்தாள்.
“கவிஞனாலே நாட்டுக்கு என்ன பிரயோஜனம்… வாட் எ ப்ரோவோகிங் க்வெஸ்சன்”. திடீரென்று அவன் எங்கோ ஒரு மூலையில் சம்பந்தப்படுத்துவதை அதில் தன் வாழ்க்கை சம்பத்தப்பட்டிருந்ததை அந்தச் சூழ்நிலையின் அசந்தர்ப்பத்தை கீர்த்தி அவ்வளவு ரசிக்காமல் நெளிந்தாள்.
கூல்ட்ரிங்க்ஸ் குடித்துவிட்டுத் திரும்பி வரும்போது யூனிஃபார்ம் அணிந்த நாற்பது ஐம்பது குழந்தைகளின் குதூகலக் குரல்களோடு வந்தான் முரளி.
8
அன்று கிரீஷ் லீவு போடப் போவதாகத் தெரிவித்திருந்தான். அதனால் அவனை எதிர்பாராமல் யூனிவர்ஸிடி காண்டீன் அருகே பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்தாள்.
ஜலதோஷம் ஆரம்பிக்க அறிகுறி தென்பட்ட உடன் (தும்மல் + மூக்கு உளைதல் + லேசாக நீர் வருதல்) ஓமத்தை இடித்து உச்சியில் அரக்கி குழித்தால் ஜலதோ ஷம் மாறிவிடும். -பட்டு
மைசூர் என்ற மனோகரத்தின் ஒரு தனி மந்தகாச இதழ் என்று மானஸ கங்கோத்ரியைப்பற்றி அவளுக்கு எண்ணத்தோன்றிற்று.
காலையிலிருந்து இன்னதென்று தெரியாத ஒரு மகிழ்ச்சி அலை அலையாக வந்துகொண்டிருந்தது. துயரம் என்பதையோ கவலை என்பதையோ இதுவரை கண்டே அறியாதவள் போன்று அவளுக்குள் ஒரு குதூகலம் குமிழ்ந்தது.
‘என்ன காரணம்?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டு அவள் காலேஜை நோக்கி நடந்தாள்.
நேற்று ஜூவில் கிரீஷ் தன்னை வெளியிட்டுக் கொண்டதா… இரவில் அடிக்கடி நேர்த்த விழிப்பில் ஏன் காலையில் எழுந்து டிரஸ் செய்து புறப்படும் வரை, பஸ்ஸில் உட்காரும்வரை கூட அவனது வெளிப்படையான பேச்சு காதருகில் வந்து ஒரு ஹலோ சொல்லிவிட்டுச் சொல்லிவிட்டுப் போயிற்று. கிரீஷை நான் காதலிக்கிறேனா…
அந்தக் கேள்விக்கு அவளிடம் சுத்தமாகப் பதில் இல்லை, ஆனால் தான் காதலிக்கப்படுகிறோம் என்ற உணர்வில் ஒரு சுயத்துவம் பற்றிய வெற்றி இருந்தது. அது ஒரு மூன்றாந்தர உணர்ச்சியைப் போலன்றி இன்னும் அவளிடம் உயிர்க்களை இருக்கிறது என்று, யாரோ நினைவூட்டியது போல உணர்ந்தாள்.
நேசித்தல் நேசிக்கப்படுதல் இந்த இரண்டு விவகாரம் தவிர உலகில் வேறு பிரச்னையே இல்லையோ?
அவளுக்குத் திடீரென்று கணவன் சந்திரமௌலி பற்றி நினைவு வந்தது.
“மிஸ்டர் சந்திரமௌலி என்று தனக்குள் அழைத்துக் கொண்டாள். அவரைப் பெயர் சொல்லி அழைத்தது ஒரு பெரிய இன்ஸல்ட்டாக இருந்திருக்குமோ!
அந்த ஓராண்டு வாழ்வில் அவள் அனுபவித்ததெல்லாம் ஸ்டேட்டஸ்… ஹை சொஸைட்டி…கல்ச்சர்.. அப்பாடா எத்தனை சிறைகள்… நடப்பது… நிற்பது பேசுவது எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு ஒத்திகையை மனசுக்குள் பார்த்துக் கொள்ள வேண்டி வந்தது, வெறும் மனிதர்களுக்காக இல்லாமல், மனித உணர்ச்சிகளுக்காக இல்லாமல் சில சம்பிரதாயங்களுக்காக வாழ வேண்டிய மாதிரி… ஒரு யந்திரமான மாதிரி…
அன்பு என்றால் என்னவென்று அவருக்குத் தெரிந்திருக்குமா?
சின்ன வயசிலேயே அவருடைய அம்மா செத்துப் போய்விட்டாள். கான்வென்டிலும் போர்டிங்கிலும் வளர்ந்தவர். கர்ள் பிரண்ட்ஸ் நிறைய இருந்திருக்கலாம். ஆனா உண்மையான பெண் ஒருத்திகூடவா கிடைத்திருக்க மாட்டாள்?
கிடைத்திருக்கலாம். அவரால் நம்பியிருக்க முடியுமா?
‘அன்புக்கு நம்ப வேண்டுமா?”என்று தனக்குள்ளேயே அவள் ஒரு கேள்வி முளைத்ததை உணர்ந்தாள்.
‘சம்பிரதாயங்களிலும் அந்தஸ்திலுமே ஊறிப்போன அவரால் அதைத்தான் நம்ப வேண்டி வந்திருக்கும். வேறு எதை அவர் நம்புவது? சார்ந்திருப்பதைத்தான் நம்ப முடியும்!
யூனிவர்ஸிடி காண்டீனிலிருந்து ரீஜனல் காவேஜுக்குப் போகும் பஸ் ரூட் சாலையில் நடக்கும்போது அவள் மனம் தெளிவாக இருந்தது.
பொருள்களை வாங்குவது மாதிரியா என்னை அவர் வாங்கியிருப்பார்?
அப்படி மதிப்பிடுவது இந்த மனோநிலையில் அவளுக்கு ஓர் அநியாயம் போல் தோன்றியது. தான் ஒரு வஸ்துவில்லை என்று உணர்த்த உணர்ந்த அவர் குமுறி எழுந்து அடக்கிவிடச் செய்த முயற்சிகளை நினைத்தாள் கீர்த்தி.
“ஐ டோன்ட் லவ் யூ”
அதுதான் அவள் எறிந்த கடைசி ஆயுதம். அதைவிடக் கொடுமையானதை ஒரு கணவன் தன் மனைவியிடமிருந்து கேட்க முடியாது.
அது உண்மையா?
‘ஐ லவ் யூ. ஐ லைக் யூ. ஐ அட்மயர் யூ.’
கிரீஷின் வார்த்தைகள் மீண்டும் எதிரொலித்தன.
அந்தஸ்து, கௌரவம். ஆணவம் என்று எத்தனை புறக் கவசங்கள் பூட்டி நின்றாலும் எங்கோ ஒரு மூலையில் நின்ற ஒரு பெண்ணிடம் ஏதோ ஒரு கவர்ச்சியால் கொஞ்ச காலம் என்றாலும் தன்னை இழந்துவிட்ட அந்த மனிதர் மீது எனக்கு நேசமில்லையா?
ஒரு மாத தேனிலவு மயக்கத்தில் அவர் அவளுக்காக வாங்கிக் குவித்த பொருள்கள் எங்கெங்கோ அவளை டூருக்கென்று அழைத்துப் போனது எல்லாம் இப்போது அவளுக்கு ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. அந்த ஒவ்வொரு செயலும் அவளது அந்த அன்பிற்காகப் போடப்பட்ட விண்ணப்பங்கள் அல்லவா?
‘ஹி வாண்டட் டு பொஸஸ் மீ’
தன்னை ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சி செய்தார். பாவம், அந்த அந்தஸ்தையும் விட நான் ஒரு முக்கிய சொத்து என்று அவருக்குத் தோன்றியிருக்கும், ஹவ் புவர் ஹி ஈஸ். என்று பரிதாபப்பட்டாள்.
அன்பு வேறு ஆக்கிரமிப்பு வேறு என்று அவருக்குத் தெரிந்திராது. ஆக்கிரமித்தாலே அன்பு அடைபட்டு விடும். என்ற விஷயம் எங்கே அவருக்குத் தெரியப் போகிறது? தெரிந்துகொள்ளாத விஷயங்களை ஒருவருக்கு எப்படித் தெரிய வைப்பது? விலகி வந்தா.. புறக்கணித்தா….
எங்கோ தான் ஒரு தவறு செய்த மாதிரி முதல் தடவையாகக் கீர்த்தி நினைத்தாள். கணவன் என்பதற்காக அன்றி, தனக்குச் சொற்ப காலம் ஓர் அந்தஸ்தை வழங்கியதற்காக அன்றி, ஒரு மனிதர்… தன் அன்பிற்கு ஒரு மாதமேனும் இடைவிடாத விண்ணப்பங்கள் போட்டவர் என்பதற்காக தான் இன்னும் கொஞ்சம் ‘மக்னானிமஸாக’ நடத்திருக்கலாமோ…
‘ஐ டோண்ட் லல் யூ’
என்ன கொடுமையான வார்த்தை அது? வேறு ஒரு மனிதனால் இவ்வளவு பகிரங்கமாக ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று அறிவிக்கப்பட்ட பின்தான் தான் சொன்ன வார்த்தைகளின் கொடுமை அவளுக்கு உறைத்தது.
அவளுக்கு அம்மா ஞாபகம் வந்தது. அபலாதத்திற்கு அஞ்சி கயிர் துறந்த அம்மா, ஹவ் ஷி வேஸ்ட்ட ஹர் சுஃப், வெறும் அபவாதத்துக்காக உயிரை விட்டு விடலாமா? என் மேல்… முரலி மேல்… அப்பா மேல் அவளுக்கிருந்த அன்பு எங்கே போயிற்று? எல்லாரையும் விட்டு விட்டு ஆற்றில் விழுந்து போவதென்றால் அது யார் மேல் வைத்த அன்பு?
தன் மேல் தானே வைத்திருக்கும் அன்பா? ஈஸ்ன்ட் இட் ஈகோ?
அவள் ரீஜினல் காலேஜ் பஸ் ஸ்டாப்பை தெருங்கும்போது பஸ்ஸூக்குக் காத்திருந்த ஒருவன் கையில் வைத்திருந்த ட்ரான்ஸிஸ்ரில் சென்னை வானொலி கேட்டது.
‘வேண்டுமடி எப்போதும் விடுதலை’
பாரதி பாட்டு, விடுதலை எதிலிருந்து? பளிச்சென்று ஒரு சூர்யோதயமாவது போல அந்த மன மூட்டத்திலிருந்து அவளுக்கு ஒரு பதில் உதயமாகியது.
தன்னிடமிருந்து-
‘ஈகோ’விலிருந்து-
‘நான்’ என்ற நினைவிலிருந்து-
அதுதான் உண்மையான விடுதலை. அந்த விடுதலை கிடைத்து விட்டால் எந்த ஆக்கிரமிப்பும் எவரையும் ஒன்றும் செய்து விட முடியாது. அது கிடைக்காதவரை ஒவ்வொரு விடுதலையும் வேறொரு தளைதான்!
அது மகான்களுக்கு மட்டும்தான் சாத்தியமா?
ஒரு மனைவிக்கு? ஒரு கணவனுக்குச் சாத்தியமில்லாமல் போய்விட்டால் குறைந்த பட்சம் ஒரு மனைலிக்கு? அது அம்மாவுக்குச் சாத்தியமில்லாமல் போய்விட்டது! ஆனால் தனக்கு?
தன் சிந்தனை போகும் போக்கை கீர்த்தி ஒரு ‘ரூட்-மேப்’பைப் பார்க்கிறவள் போன்று மீண்டும் திருப்பிப் பார்த்தாள்.
இதுதான் தணிந்து போதலோ! ஆண்களின் அடக்குமுறையால் கட்டுப்பட்டிருக்கின்ற ஒரு சமூகத்திற்கு இண்டலெக்கவலாகவோ ஸ்பிரிச்சுவலாகவோ தான் வழங்குகின்ற அங்கீகாரமோ!
அவள் தன்னை மீறி வந்த புன்னகையை கட்டுப்படுத்திக் கொண்டாள். இந்த நினைப்பு தனக்குத் தோன்றுவதன் காரணமே இன்னும் தான் விடுதலை பெறவில்லை என்பது தானே என்று எண்ணினாள். மிகவும் சிக்கலான ஒரு கணக்கிற்கு விடை கண்டு பிடித்த மாதிரி ஒரு சின்ன சந்தோஷம் தோன்றிற்று.
அவள் ரீஜனல் காலேஜ் கேட்டை நெருங்கியபோது மெர்க்காரா ரோடிலிருந்து வந்து கொண்டிருந்த ஓர் இம்பாலா கார் சாலையில் நின்றது.
அவள் திரும்பிப் பார்த்தாள்.
அந்தக் காரின் டிரைவர் சீட்டில் சந்திரமௌலி உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில் கிரீஷ் அமர்ந்திருந்தான்
அவள் உள்ளே போகலாமா வேண்டாமா? அதற்குள் கதவைத் திறந்து கொண்டு காரிலிருந்து சந்திரமௌலி கீழே இறங்கி வந்தான் . ஒரு கணம் கீர்த்தியின் முதுகு சிலிர்த்தது. தலை குனிந்துவிடப் பார்த்தது. ஆனால் அவன் தன் பலத்தை சேகரித்துக் கொண்டு நிமிர்ந்து நின்றாள்.
“கீர்த்தி…”
சந்திரமௌலி தொண்டையை ஒரு முறை செருமிக் கொண்டாள். தன் கையை இறுக்கிப் பிடித்திருந்த ரிஸ்ட் வாட்சின் கோல்ட் ஸ்ட்ராப்பை அதன் ‘ப்ரஸ்’ஸை அலிழ்ந்து லூஸாக விட்டுக் கொண்டான். கையில் அது அழுத்தியிருந்த தழும்புகள் தெரிந்தன. அதைத் தேய்த்து விட்டுக் கொண்டே பேசினான். அது அவனுக்கு ஒரு மானரிஸம்.
“ஐ வாண்ட் டு டாக் டு யூ”
தன்னை முகத்துக்கு முகம் சந்திப்பதற்குக் கூச்சப்பட்டுத்தான் இந்த மானரியத்தில் அவன் ஈடுபட்டிருக்கிறான் என்று அவள் உணர்ந்து கொண்டாள்.
அதைச் சொல்லி முடித்து விட்டு பளிச் சென்று அவளை அவன் ஒரு பார்வை பார்த்தான், தோல்வி… வருத்தம்… ஒரு நிராதரவு என்று உணர்ச்சிகளின் வானவில் ஒன்று அந்தப் பார்வையில் தெறித்தது.
இப்போது தான் பெரியவளாக வேண்டிய சந்தர்ப்பம் வந்து விட்டதை உணர்ந்தாள்.
”ஓ… எஸ்”
“வில் யூ கம் வித் மீ?”
”எங்கே?” அதைக் கேட்டிருக்க வேண்டாம் என்று கீர்த்தி அப்புறம் உணர்த்தாள்.
“ஜஸ்ட்… ஜஸ்ட்… ஒரு ஃபைவ் மினிட்ஸ் காரிலேயே போய்விட்டு மறுபடியும் ஒன்னைக் கொண்டாந்து ட்ராப் பண்ணிடறேன்!”
”ஆல்ரைட். ஆனா காலேஜுக்கு டயம் ஆறது”
“நோ..ஐ வோண்ட் டிலே யூ”
சந்திரமௌலியின் நடத்தை முற்றிலும் ஃபார்மலாக இருந்தது. அவன் வருந்துகிறான் என்பது அவள் பெண் மனசுக்கு மட்டும் தெரிந்தது.
”இது என்ன இவர்” என்று அவளுக்கே கஷ்டமாக இருந்தாலும் கீர்த்தியால் அதைத் தவிர்க்க முடியவில்லை.
அவள் பின்தொடர சந்திரமௌலி போய் தன் காரின் கதவைத் திறந்தான். அதற்குள் கிரீஷ் எழுந்து கதவைத் திறந்து வெளியே நடை பாதையில் இறங்கி நின்று கொண்டான்.
கீர்த்தி அந்த இடத்தை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு காரின் பின் சீட் கதவைத் திறந்தாள்.
“ஓய் கான்ட் யூ” என்று தன் பக்கத்து சீட்டைக் காட்டி ஒரு கேள்வி கேட்ட சந்திரமௌலி அதன் அபத்தத்தையும் தன் அவசரத்தையும் உணர்ந்து வாயை மூடி கொண்டான்.
பின்னால் திரும்பிப் பார்த்து லிட்டு சந்திரமௌலி காரை ஸ்டார்ட் செய்தான். ஓர் இங்கிதமான உறுமலோடு காரின் என்ஜின் உயிர் பெற்றது.
“ஸோ…. தாங்க்யூ” என்று மிகவும் அந்யோன்யமான ஒரு சிநேக பாவத்தோடு நடைபாதையில் நின்ற கிரீஷுக்கு சந்திரமௌலி கை ஆட்டினான்.
அந்த தாங்கிஸ் பொருள் பொதிந்தது என்று கீர்த்திக்குத் தோன்றியது.
கிரீஷுக்கு அவள் கையை அசைத்தாள், அவன் மகிழ்ச்சியோடு முகத்தில் ஒரு பிரகாசம் தெரிய கையாட்டினான். அந்த இம்பாலா புறப்பட்ட போது ஜூவில் நேற்று கிரீஷ் சொன்ன வார்த்தைகள் எதிரொலித்தன.
“ஐ லவ் யூ… ஐ லைக் யூ… ஐ அட்மயர் யூ.”
என்னமாய்த் தன் நேரத்தை கிரீஷ் நிருபித்திருக்கிறான் என்று நினைத்தபோது சந்திரமௌலி பேசத் தொடங்கினான்.
”ஐ ஆம் வெரி ஸாரி கீர்த்தி”
அந்த இம்பாலா சந்திரமௌலீ சொன்ன மாதிரி ஐந்து நிமிஷத்துக்குள் ரீஜனல் காலேஜுக்குத் திரும்பி வரவில்லை. ஹோட்டல் உட்லாண்ட்ஸ் எதிரில் அது அரை மணி நேரம் நின்றிருந்தது.
பின்பு கீர்த்தியின் விருப்பப்படி அங்கிருந்து புறப்பட்டு நஞ்சள்கூட்டிற்குச் செல்லும் சாலையில் கம்பிரமாக மிதந்து சென்றது. கீர்த்தி சந்திரமௌலியின் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தாள்.
“எவ்வளவு நாளா ஓனக்குக் கிரிஷைத் தெரியும்?”
“ஜஸ்ட் ஆறு மாசமா”
“பர்ஃபெக்ட் ஜெண்டில்மன்”
கீர்த்தி பதிலளிக்கவில்லை.
”யூ நோ ஹவ் ஹி மெட் மீ… கையிலே ஷேக்ஸ்பியரோட ஜூலியஸ் சீசர் ஒரு காப்பி கொண்டு வந்திருந்தார். என்ன பேசாமல் வர்றியே?”
“என்ன பேசறது?”
ஹோட்டலில் சர்வர் காப்பி கொண்டு வரப் போனதும் சந்திரமௌலி கர்ச்சீப்பை எடுத்து அழுத்தமாக முகத்தைத் துடைத்துக் கொண்டதை நினைத்தாள், அவர் கண்ணீரை மறைக்கிறார் என்று அவளுக்குப் பளிச் சென்று புலப்பட்டது.
கண்ணீர் கூட ஒரு சில சமயங்களில் விடுதலையின் சின்னமாகி விடுவதை நினைத்துப் பார்த்தாள், ஏதோ கிரீஷ் போய் இவர் மனசைத் தொட்டதனால் மட்டுமே இவர் இளகிவிட்டிருக்க மாட்டார் என்று நினைத்தாள். எங்கோ ஓர் உறுத்தல் இவரை வருத்திக் கொண்டிருக்க வேண்டும்!
சந்திரமௌலியோடு வந்த பயணங்களில் அது ஒரு தனி விதமாக நதனமாக இருப்பதைக் கீர்த்தி உணர்ந்தாள். இதற்குக் காரணம் அந்தப் பயணமா? மீண்டும் சந்திரமௌலியோடு சேர்ந்து மதர் சுபீரிவரை சந்திக்கப் போவதா… எதிர் காலமா என்று அவளால் அப்போது தீர்மானிக்க முடியவில்லை.
– 01-01-1983, குறுநாவல், மங்கையர் மலர்.

