கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 159 
 
 

(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“புத்தகம் கேட்டு அனுப்பியதாகக் கிரிகோரியிடமிருந்து ஒருவர் வந்தார். நீங்கள் வீட்டில் இல்லை என்று சொல்லிட்டேன். தபால்காரன் செய்தித் தாள்களையும் இரண்டு கடிதங்களையும் கொண்டு வந்தான். பிறகு, இன்னொரு விஷயம், சார், நீங்கள் கொஞ்சம், செரியோழாமீது கவனம் செலுத்தனும். இன்று காலையும் நேற்று முன் தினமும் அவன் புகை பிடிப்பதைப் பார்த்தேன். அது எவ்வளவு தவறு என்று அவனிடம் சொல்லும்போது தன் விரல்களை எப்பொழுதும் போல் காதின்மேல் வைத்து என் பேச்சு எடுபடாதபடி சத்தமாகப் பாடத் தொடங்கிட்டான்”. 

உஜின் பிகோவ்ஸ்கி, அந்தப் பகுதியின் நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். அவர் சற்றுமுன்தான் ஒரு வழக்கு விசாரணையை முடித்துவிட்டுத் தன் அலுவலகத்திற்குத் திரும்பியிருந்தார். கையுறைகளைக் கழட்டிக் கொண்டே அந்த வேலைக்காரப் பெண் சொல்லும் செய்தியைக் கேட்டதும் அவரைப் பார்த்துச் சிரித்தார். “ஆக, செரியோழா சிகரெட் புகைக்கிறான்!” எனத் தோள்களைக் குலுக்கியபடியே ஆச்சரியப்பட்டார். “அந்த வாண்டுப் பயல் வாயில் சிகரெட்! அவனுக்கு என்ன வயதாகிறது?” 

“ஏழு வயது. உங்களுக்கு இது சிறிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால், அவன் வயதுக்குப் புகைப்பது ஒரு தீய பழக்கம். மிகவும் ஆபத்தானது. மேலும், கெட்டப் பழக்கங்களை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்.” 

“நீ சொல்வது ரொம்ப சரி. அவனுக்கு புகையிலை எங்கு கிடைக்கிறது?” 

“உங்கள் மேசையிலிருந்தது தான்” 

“அங்கிருந்தா எடுக்கிறான்? அவனை என்னிடம் அனுப்பு” 

அந்தப் பெண் போனபிறகு, எழுதப் பயன்படுத்தும் தன் மேசையின் முன் இருந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தபடி யோசனையில் ஆழ்ந்தார். ஏன் என்று தெரியாமல் அவரது மனத்திரையில் ஒரு காட்சி விரிந்தது. ஒரு அடி நீளத்துக்குப் பெரிய சிகரெட்டை வாயில் வைத்தபடி செரியோழா சிகரெட் புகை மண்டலத்தின் நடுவில் இருக்கும் காட்சி அவருக்குச் சிரிப்பை வரவழைத்தது. அதே நேரத்தில், பொறுப்பும், பதற்றமும் நிறைந்த அப்பெண்ணின் முகம், கடந்த கால நினைவுகளைக் (பாதி மறந்து போய்விட்டது) கிளறியது. அப்பொழுதெல்லாம் இப்படிப் பள்ளியில் புகைபிடிக்கும் பழக்கம் ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் ஏறக்குறைய இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தியிருந்தது. அது உண்மையிலேயே பயங்கரமாக இருந்தது. புகைபிடிக்கும் பிள்ளைகளை எவ்வித தயவு தாட்சண்ய முமின்றி பிரம்பால் அடிப்பார்கள். பள்ளியைவிட்டு நீக்கிவிடுவார்கள். அவர்களது வாழ்க்கை வீணாக் கப்பட்டது. இத்தனைக்கும் எந்த ஒரு ஆசிரியருக்கும், தந்தைக்கும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் குற்றம், அதனால் விளையும் தண்டனை, இவற்றைப் பற்றித் துல்லியமாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. நல்ல அறிவுபடைத்த மக்கள் கூட தங்களுக்குப் புரியாத இந்தத் தீயப் பழக்கத்தை எதிர்க்கத் தயங்கவில்லை. 

பிகோவ்ஸ்கிக்கு வயதான அவருடைய பள்ளி முதல்வர் நினைவுக்கு வந்தார். நன்கு படித்த, நல்ல இயல்புகளைக் கொண்ட அவருக்குச் சிகரெட்டுடன் ஒரு மாணவனைப் பிடித்துவிட்டால் போதும். கடும்கோபம் வந்துவிடும். முகமெல்லாம் சிவந்து போய் உடனடியாகப் பள்ளி நிர்வாகத்தின் சிறப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அந்தக் குற்றம் செய்தவனை பள்ளியிலிருந்து நீக்க உத்தரவிடுவார். சமுதாயத்தின் சட்ட விதிகளில் அதுவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. எவ்வளவு குறைவாக ஒரு தீமை புரிந்து கொள்ளப்படுகிறதோ, அவ்வளவு மோசமாகவும் பயங்கரமாகவும் அது எதிர்க்கப் படும். 

இப்படிப் பள்ளியைவிட்டு நீக்கப்பட்ட இரண்டு அல்லது மூன்று மாணவர்களையும், தண்டனைக்குப் பிறகு அவர்களுக்கு அமைந்த வாழ்க்கையையும் அலசிப் பார்த்த வழக்கறிஞர் சிந்தனையில் மூழ்கினார். பல நேரங்களில், குற்றத்தை விட தண்டனைதான் அதிகமாகத் தீங்கு விளைவிக்கிறது என்னும் முடிவுக்கு வராமல் அவரால் இருக்கமுடியவில்லை. எந்தவொரு சூழ்நிலைக்கும் தன்னை வேகமாக மாற்றிக்கொள்ளும் வசதியை தற்போ தைய சமூகக் கட்டமைப்பு தன்னகத்தே கொண் டுள்ளது. அப்படி இல்லையென்றால், ஒருவன் தன் நியாயமான நடவடிக்கைகள், தொக்கி நிற்கும் நியாயமற்ற அடிப்படைகளைப் பற்றி ஒவ்வொரு நொடியும் கவனத்தில் கொள்வான். அதேபோல், கல்வி, இலக்கியம், சட்டம் போன்ற பொறுப்புகள் நிறைந்த, ஆனால் மோசமான விளைவுகளைத் தரக்கூடிய துறைகளில் கூட எந்த அளவு குறைவான நியாயமும் உறுதியும் காணப்படுகிறது என்ப தையும் அவன் எண்ணிப் பார்ப்பான். 

இது போன்ற எண்ண அலைகள் பிகோவ்ஸ் கியின் மூளையில் வந்து மோதியபடி இருந்தன. தளர்ந்து போய் ஓய்வெடுக்கும் மூளைகளில்தான் மேம்போக்கான, எளிதில் மறந்து போகும் நினைவுகள் வரும். அவை எப்பொழுது வருகின்றன? ஏன் வருகின்றன? என்று யாருக்கும் தெரியாது. அவை சிறிது நேரம் தான் அங்குத் தங்கும். அதிக ஆழத் துக்குப் போகாமல் மூளையின் மேற்பகுதியிலேயே அந்த நினைவுகள் பரவிவிடுவது போல் தெரிகிறது. தங்கள் தொழிலில் ஈடுபட்டு ஒரே கோட்டில் பயணம் மேற்கொண்டு, மணிக்கணக்கில், நாள் கணக்கில் மனத்தை மூழ்கடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானவர்களுக்கு இத்தகைய குடும்பப்பாங்கான, முழு சுதந்திரமான சிந்தனைகள் ஒருவித வசதியையும், ரம்மியமான அமைதியையும் கொண்டு வரும். 

அப்பொழுது மணி ஒன்பது. மேலே இருக்கும் மாடியில் யாரோ அங்குமிங்கும் வேகமாக நடந்து கொண்டிருந்தது தெரிந்தது. மூன்றாவது மாடியில் நான்கு கைகள் பியானோ வாசித்து கொண்டிருந்தன. மேலே வேகமாக நடந்து கொண்டிருந்தவனின் பதற்றமான அடிகளை வைத்துக் கணக்கிடும்போது, கடுமையான பல் வலியால் பலி வாங்கப்பட்டவன் என்பது போல் தோன்றியது. சோம்பலான கனவுகளில் சஞ்சரிக்கும் மனதுக்கு ஏற்ற ஒரு விதமான அயற்சியான மாலைப்பொழுதின் நிசப்தத்தை அடர்த்தியாக்க, அந்த காலடி சப்தமும் அது ஏற்படுத்திய எந்திரகதியான இடைவெளிகளும் உதவின. 

இரண்டு அறைகள் தள்ளி இருக்கும் கூடத்தில் செரியோழாவும் அவனைக் கவனித்துக் கொள்ளும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தார்கள். 

“அ…ப்..பா.. வந்துட்டார்….!…” பையன் பாட்டு பாடிக்கொண்டிருந்தான். 

“அப்..பா.. வந்து…ட்டாரு” அப்..அப்..அப்பா!” 

“உங்க அப்பா கூப்பிடறார். சீக்கிரமா போ!” ஏதோ பயந்து போன பறவை போலக் கத்தினாள் அந்த பெண். 

“நான் அவனிடம் என்ன சொல்லலாம்” என்று பிகோவ்ஸ்கி யோசித்துப் பார்த்தார். 

ஆனால், தன் பிள்ளையிடம் என்ன சொல் வது என நினைத்துப் பார்ப்பதற்கு முன்னதாகவே செரியோழா அலுவலக அறைக்குள் நுழைந்து விட்டான். அவன் அணிந்திருந்த உடையை வைத்துதான் பையனா பெண்ணா என்று சொல்லும் படி யான சிறிய உருவம். அந்த அளவு மென்மையாகவும், அழகாகவும், மெலிந்தும் இருந்தான். பசுமை இல்லத்தில் வளர்க்கப்படும் செடியைப் போல தளர்ந்து போயிருந்தான். அவனது அசைவுகள், சுருட்டைமுடி, அவனது பார்வை, அவன் அணிந்தி ருந்த வெல்வெட் சீருடை எல்லாமே அழகாகவும் எடுப்பாகவும் இருந்தன. 

“குட் ஈவ்னிங் டாடி”, அப்பாவின் முட்டி மீது ஏறி வேகமாக அவரது கழுத்தில் முத்தமிட்டபடி, “என்னைக் கூப்பிட்டியா?” என மெல்லிய குரலில் கேட்டான். 

“கொஞ்சம் இரு. கொஞ்சம் பொறு” என அவனைப் பக்கத்தில் இறக்கிவிட்டு சொன்னார். தொடர்ந்து, 

“நீயும் நானும் முத்தமெல்லாம் கொடுத்துகிறதுக்கு முன்ன நாம் பேசியாகணும். சீரியஸா பேசணும். நான் உன் மேல ரொம்ப கோபமா இருக்கிறேன். உன்னை எனக்கு இனிமேல பிடிக்காது. புரியுதா? சின்னமனுஷா! உன்னை எனக்கு பிடிக்கல. நீ என் பிள்ளை இல்ல” என்றார். 

செரியோழா தன் அப்பாவை உற்றுப் பார்த்தான். பிறகு பார்வையை மேசை மீது திருப்பித் தோள்களைக் குலுக்கிக் கொண்டான். 

“நான் என்ன செஞ்சேன்?” குழம்பிப் போய் கண்களை உருட்டியபடி கேட்டான். “நான் உன் ஆபிஸுக்குள்ள ஒருமுறை கூட இன்னைக்குப் போகலையே. ஒன்னையும் தொடலையே” 

“நத்தாலி நீ சிகரெட் புடிக்கிறதா இப்பதான் சொல்லிட்டு போறா. இது நிஜமா? நீ சிகரெட் புடிக்கிறாயா?” 

”ஆமா. ஒரு முறை புடிச்சேன். அவ்வளவுதான்” 

“அதான்! அப்படின்னா இந்த விஷயத்துல இப்ப ஒரு பொய் சொல்லியிருக்கிற” சிரிப்பை மறைத்தவாறு கோபமாகச் சொன்னார் வழக்கறி ஞர். ”நீ இரண்டு முறை சிகரெட் புடிக்கறத நத்தாலி பார்த்திருக்கிறா. அப்படிப் பார்த்தா நீ குறும்புத்தனமான மூன்று விஷயங்கள் செஞ்சி மாட்டியிருக்கிற. அதாவது, சிகரெட் புடிக்கறது, என் மேசையிலிருந்து உனக்குச் சொந்தமில்லாத புகையிலையை எடுத்தது, என்கிட்ட பொய் சொன்னது”. 

ஞாபகம் வந்தவனாய், 

“ஆங்! ஆமா! அது உண்மைதான். மெய்தான்! இரண்டு முறை தான் சிகரெட் புடிச்சேன். இன்னைக்கு ஒன்னு, வேற ஒரு நாள் ஒன்னு” அவன் கண்கள் சிரித்தன. 

“பார்த்தியா, அதான் இரண்டு முறை. ஒரு முறை இல்ல. போ, உன்மேல ரொம்ப வருத்தத்துல இருக்கிறேன். நீ நல்ல பையனா இருந்த. ஆனா, இப்ப பாத்தா கெட்டவனாகவும் குறும்புக்காரனாகவும் வளர்ந்து இருக்கற”. 

செரியோழாவின் சிறிய காலரை சரி செய்தப டியே, அடுத்ததாக இவனிடம் என்ன சொல்லலாம் என்று பிகோவ்ஸ்கி யோசித்துப் பார்த்தார். 

அவர் தொடர்ந்து, 

“ஆமா. அது ரொம்பத் தப்பு. உன் கிட்ட இத நான் எதிர்பார்க்கல. முதல்ல, உனக்குச் சொந்தமில்லாத புகையிலையை எடுக்க உனக்கு உரிமையில்ல. அவுங்கவுங்க பொருள உபயோகப்படுத்தத் தான் யாருக்கும் உரிமையிருக்கு. மத்தவங்க பொருள ஒருத்தன் எடுத்தான்னா அவன் கெட்ட வன். (நான் அவனிடம் சொல்ல வேண்டியது அது கிடையாது என்று பிகோஸ்வ்கி நினைத்தார்) உதாரணமாக, நத்தாலியிடம் துணிமணிகள் கொண்ட ஒரு டிரங்பெட்டி இருக்கு. அது அவளுக்குச் சொந்தமானது. அத நாம அதாவது நீயும் நானும் தொடக் கூடாது. ஏன்னா அது நம்மது கிடையாது. நீ சின்னக் குதிரை வச்சிருக்க. அப்புறம் படம் வச்சிருக்க. நான் அத எடுக்கறதில்ல. எப்பயாவது எடுத்தனா? எனக்குப் பிடிச்சுக்கூட இருக்கலாம். ஆனா, அதெல்லாம் என்னுடையது கிடையாது. உன்னுடையது” என்று நீட்டி முழக்கினார். 

“உனக்கு வேணும்னா அதையெல்லாம் நீ எடுத்துக்கலாம்” புருவங்களை உயர்த்தி செரியோழா அப்பாவைப் பார்த்துச் சொன்னான். 

“அப்பா நீ கவலைப்படாத, நீ அதையெல்லாம் வச்சுக்கலாம். அதோ உன் மேசை மேல இருக்கே மஞ்சளா சின்ன நாய்குட்டி, அது என்னோடது தான். அது அங்கேயே இருந்தா அதைபத்தி எனக்குக் கவலையில்லை” என்றான் செரியோழா. 

“நான் சொல்ல வர்றது உனக்குப் புரியல”, என்றார் பிகோவ்ஸ்கி. “அந்தக் குட்டி நாயை எனக்கு நீ பரிசுப் பொருளா கொடுத்த .இப்ப அது என்னுடையது. என் இஷ்டப்படி எது வேணும்னாலும் செய்யலாம். ஆனா புகையிலை நான் உனக்குக் கொடுக்கலையே! அது என்னுடையது. (நான் அவனுக்குச் சரியாக புரிய வைக்கவில்லை, சுத்தமாக இல்லை என்று வழக்கறிஞர் நினைத்தார்) எனக்குச் சொந்தமில்லாத புகையிலையைப் புடிக்கனும்னா முதல்ல நான் அனுமதி வாங்கியாவனும்”. 

மெதுவாக வாக்கியங்களைக் கோர்த்து, குழந்தையின் பேச்சை முறியடித்துத் தன் மகனுக்கு உரிமை என்றால் என்ன என்பதை விளக்கிக் கொண்டிருந்தார் பிகோவ்ஸ்கி. அப்பாவின் மார்பை விட்டு அகலாமல் இருந்தன செரியோழாவின் கண்கள். கவனமாகக் கவனித்துக் கொண்டும் இருந்தான். (மாலை நேரத்தில் அப்பாவுடன் பேசிக்கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கும்) பிறகு மேசையின் விளிம்பின் மீது அவனது கண்கள் குத்திட்டு நின்றன. அங்கிருந்த பேப்ப ரையும் இங்க் ஸ்டேண்டையும் பார்த்தவாறு இருந் தான். மேசையை வட்டமடித்து, அவன் பார்வை ஒரு பசை பாட்டிலின் மீது வந்து நின்றது. 

அந்தப் பாட்டிலைத் தன் கண்களுக்கு அருகில் தூக்கிப் பிடித்தபடி, 

“அப்பா, பசையை எதவெச்சு செய்யறாங்க?” எனத் திடீரெனக் கேட்டான். 

பிகோவ்ஸ்கி அவனிடமிருந்து பாட்டிலைப் பிடுங்கி அது இருந்த இடத்தில் வைத்துவிட்டுத் தன் பேச்சைத் தொடர்ந்தார். 

“அடுத்ததா, நீ சிகரெட் புடிக்கிறது, உண்மையிலேயே ரொம்பக் கெட்டது, நான் புடிக்கிறேன்னா அதுக்காக சிகரெட் பிடிக்கிறது நல்லதுன்னு எடுத்துக்கக் கூடாது. நான் சிகரெட் பிடிக்கறப்போ அது ஒரு மடத்தனம்னு எனக்குத் தெரியும். என் மேலேயே எனக்குக் கோபம் வந்து அதுக்காக வருத்தப்படுவேன். (ஆ! நான் எவ்வளவு சாமர்த் தியமான ஆசிரியர்! என வழக்கறிஞர் நினைத்துக் கொண்டார்.) புகையிலை உடல் நலத்துக்கு ரொம் பக் கெடுதல். அதைப் பிடிக்கறவங்க, அவுங்க சாக வேண்டிய நாள் வர்றதுக்கு முன்னேயே செத்துடு வாங்க. அதுவும் உன்ன மாதிரி சின்ன வயசுலியே சிகரெட் புடிக்கிறது தப்பு. உன்னுடைய இதயம் ரொம்ப பலகீனமானது. சிகரெட் பிடிச்சா காச நோய் மட்டுமில்ல, மற்ற நோய்களும் வரும். உன் மாமா சிகரெட்டினால் காசநோய் வந்துதான் செத்தான். அவன் மட்டும் சிகரெட் பிடிக்காம இருந்திருந்தா இந்நேரம் உயிரோட இருந்திருப்பான்” என்று சொல்லி முடித்தார். 

ஏதோ சிந்தனையில் விளக்கையே பார்த்து கொண்டிருந்த செரியோழா, அதன் நிழலை தன் விரலால் தொட்டுவிட்டு பேசினான். 

“இக்நாட்டியஸ் மாமா வயலின் வாசிப்பார். இப்ப கிரிகோரிவிஸ் கிட்டதான் அந்த வயலின் இருக்கு” என்றான். 

மீண்டும் மேசை விளிம்பில் சாய்ந்தவாறு சிந் தனையில் மூழ்கிப் போனான் செரியோழா. வெளிறிப்போயிருந்த அவனது முகபாவத்தை பார்க்கும் போது அவன் எதையோ கவனிப்பது போலவோ அல்லது அவனது எண்ணங்களை அவனே அலசிப் புரிந்து கொள்வது போலவோ தோன்றியது. இமைக்காத அவனது பெரிய கண்களில் சோக மும் பயம்போன்ற ஏதோவொரு உணர்வும் தெரிந் தன. கொஞ்ச காலத்துக்கு முன் தன் அம் மாவையும் மாமா இக்நாட்டியஸையும் பறித்துச் சென்ற மரணத்தை பற்றி ஒருவேளை அவன் சிந்தித்துப் பார்த்திருக்கலாம். அம்மாக்களையும் மாமாக்களையும் வேறு ஒரு உலகத்துக்கு மரணம் கொண்டு சென்றுவிட அவர்களுடைய பிள்ளைக ளும் வயலின்களும் இந்த உலகிலேயே தங்கி விடுகின்றனர். இறந்தவர்கள் எங்கோ நட்சத்திரங்களின் அருகில் சொர்க்கத்தில் வாழ்ந்தபடி பூமியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் பிரிவைத் தாங்க முடியுமா? 

“நான் அவனிடம் என்ன சொல்லலாம்?” என யோசித்தார் பிகோவ்ஸ்கி. “அவன் கவனிக்கவில்லை. என் குற்றச்சாட்டுக்கோ வாதங்களுக்கோ அவன் எவ்வித முக்கியத்துவத்தையும் அளிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. என்ன சொல்லி அவனை உருக வைக்கமுடியும்?” 

வழக்கறிஞர் எழுந்து அலுவலகத்துக்குள் நடந்தார். யோசித்துப் பார்த்தார். 

“என் காலத்தில் இத்தகைய பிரச்சனைகள் எல்லாம் சாதாரணமாகத் தீர்த்து வைக்கப்பட் டன. யாராவது ஒரு சின்னப் பையன் சிகரெட் பிடித்து மாட்டிக் கொண்டால் போதும். அவனை நன்றாக அடிப்பார்கள், பலகீனமான நெஞ்சம் படைத்த கெட்டப் பையன் இது போன்ற தண்டனையால் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிடுவான். ஆனால்,புத்திசாலியான சூட்டிகையான பையனாக இருந்து விட்டால் இப்படி அடி வாங்கியதும் புகையிலையைத் தன் பூட்ஸில் மறைத்துக்கொண்டு போய் வீட்டுக் கொல்லைப்புறத்தில் பிடிப்பதுண்டு. அங்கேயும் பிடிபட்டு, அடி கொடுத்தால் ஆற்றுப் பக்கம் ஒதுங்கி புகைப்பிடிப்பான். அவன் வளர்ந்து பெரியவனாகும் வரை இது தொடரும். நான் புகைப்பிடிக்காமல் இருக்க என் அம்மா எனக்கு மிட்டாயும் பணமும் கொடுப்பார்கள். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் இவையெல்லாம் பலவீன மான, தவறான நடவடிக்கைகளாகத் தெரிகின்றன. இன்றைய ஆசிரியரோ தர்க்கரீதியாக இவ்விஷயத்தை அணுகி அடிப்படையில் எது சரியானது என்பதை ஒரு குழந்தைக்குப் புரியவைக்க முயல்கிறார். அவனது பயத்தைத் தூண்டி, மற்றவர்களிட மிருந்து தன்னை வேறுபடுமாறு ஊக்குவித்து ஏதாவது ஒரு பலனை அனுபவிக்கும்படி அவனைச் செய்வதில்லை”. 

இப்படியெல்லாம் அவர் யோசித்தபடி நடந்து கொண்டிருந்தபோதே, செரியோழா மேசை மீது ஏறிவிட்டான். மேசைக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் ஒரு காலை வைத்தபடி படம் வரைய ஆரம்பித்திருந்தான். அவனுக்காக என்றே வெட் டப்பட்ட காகிதங்களும் ஒரு நீல பேனாவும் மேசை மேல் இருந்தன. அலுவலகத் தொடர்பான தாள் களில் அவன் கிறுக்காமல் இருக்கவும் அங்குள்ள இங்க் பாட்டிலைத் தொடாமல் இருக்கவும் தான் இந்த ஏற்பாடு. 

“கோஸ் வெட்டறப்போ சமையல்கார ஆயா விரல வெட்டிக்கிட்டாங்க”, 

ஒரு வீட்டை வரைந்து கொண்டே கண்களை விரித்து அவன் சொன்னான். “அந்த அம்மா அலறவே நாங்க எல்லாரும் பயந்துபோய் அடுப்பாங்கரைக்கு ஓடினோம். அவுங்களுக்குப் புத்தி இல்ல! அவுங்க விரல ஐஸ் தண்ணியில முக்குன்னு நத்தாலி சொன்னாங்க. ஆனா, அவுங்க கேக்கல, சப்பினாங்க. எப்படி அந்த அழுக்கான விரல வாயில வெக்கலாம்? அப்பா, அது சரி கிடையாது. அப்படித்தானே?” 

பிறகு, பகல் உணவின் போது கூடத்துக்கு வந்த ஒரு வாத்தியக்காரனைப் பற்றி விவரித்தான். அவனுடன் வந்த ஒரு சிறிய பெண் இசைக்கு ஏற்றவாறு பாடியதையும் ஆடியதையும் விபரமாகச் சொல்லிக் கொண்டே போனான். 

“அவனுக்கென ஒரு எண்ண ஒட்டம் இருக்கிறது” என வழக்கறிஞர் நினைத்தார். “அவனுக்குச் சொந்தமான ஒரு சிறிய உலகம் அவன் தலையில் இருக்கிறது. அவனைப் பொறுத்தவரை எது முக்கியம் எது முக்கியமில்லை என்பதை அறிந்து வைத்திருக்கிறான். அவனுடைய மொழியைப் போல் பேசுவதால் மட்டும் அவனது கவனத்தையும் மனசாட்சியையும் ஏமாற்றி விட முடியாது. அவனைப் போலவே சிந்திக்கவும் தெரிந்திருக்க வேண்டும். நான் உண்மையிலேயே புகையிலைக் காக வருத்தப்பட்டு மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுதிருந்தால் அவன் என்னை முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பான். எனவேதான் பிள்ளை வளர்ப்பதில், தாய்க்கு மாற்றாக யாரும் இருக்கமு டியாது. ஏனெனில், தன் குழந்தைகளோடு சேர்ந்து உணரவும், சிரிக்கவும், அழவும் அவளால் மட்டுமே முடியும். தத்துவமும் அறமும் கொண்டு எதையும் சாதிக்க முடியாது. சரி, நான் அவனிடம் என்ன சொல்வது? எதை சொல்வது?” என்று யோசித்துப் பார்த்தார் வழக்கறிஞர். 

குற்றத்தைத் தடுப்பதிலும் தண்டிப்பதிலும் உள்ள ஒவ்வொரு படிநிலையை ஆராய்வதில் பாதி வாழ்க்கையைச் செலவிட்ட தன்னைப் போன்ற அனுபவமுள்ள சட்ட நிபுணர் ஒருவர் முற்றிலுமா கக் குழம்பிப்போய் ஒரு சிறிய பையனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்கும் விசித்தி ரத்தை நினைத்துப் பார்த்த பிகோவ்ஸ்கிக்கு சிரிப்பு வந்தது. 

“இங்க பார்! இனி சிகரெட் பிடிக்கமாட்டேன் என்று என் கிட்ட உறுதி மொழி கொடு” என்றார். 

இதைக்கேட்ட செரியோழா பாட ஆரம்பித்து விட்டான். 

“உறுதி.. மொழி. .உறுதி மொ….ழி மொ…ழி……!!” 

உறுதி மொழி என்றால் என்னவென்று அவனுக்குத் தெரியுமா? என்று பிகோவ்ஸ்கி தன்னையே கேட்டுக் கொண்டார். 

இல்லை நான் ஒரு மோசமான ஆசிரியன். இந்த நேரத்தில் ஒரு கல்வியாளரோ சட்டம் பயின்றவரோ என் மூளைக்குள் எட்டிப்பார்த்தால் நான் ஒரு மரமண்டை என அழைக்கப்படுவேன், மேலும், அதிக நுட்பம் கலந்து பேசுவதாக என் மேல் புகார் எழும்ப நிச்சயம் வாய்ப்பு உள்ளது. ஆனால், உண்மை என்னவென்றால், இத்தகைய சிக்கலான பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும், வீட் டைவிட பள்ளியிலும் நீதிமன்றத்திலும் எளிதாகத் தீர்வு கிடைத்துவிடும். இங்கே வீட்டில், எல்லாவற் றுக்கும் மேலாக, நாம் நேசிக்கும் நபர்களுடன் பிரச் சனையை அணுகியாக வேண்டும். நேசம் நமக் குச் சில நிர்ப்பந்தங்களை ஏற்படுத்திவிடும் என் பதால் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி விடு கிறது. இதே குழந்தை என் மகனாக இல்லாமல் ஒரு பள்ளி மாணவனாகவோ நீதிமன்றக் கூண்டில் ஒரு கைதியாகவோ இருந்திருந்தால் நான் இப்படி ஏமாற்றுபவனாக இருக்கமாட்டேன். இப்பொழுது அலைபாய்வதைப் போல் என் மனமும் தவிக்காது. 

மேசை எதிரே உட்கார்ந்த பிகோவ்ஸ்கி, செரியோழா வரைந்திருந்த படங்களில் ஒன்றை எடுத்துப் பார்த்தார். அந்தப்படத்தில் சிறிய கூரையுடைய வீட்டின் புகைக் கூண்டுகளிலிருந்து மின்னல் வடிவத்தில் புகை எழும்புவது போல் வரையப்பட்டிருந் தது. புகை அந்த தாளின் நுனிவரை சென்றது. அந்த வீட்டின் அருகில் ஒரு படை வீரர் நின்றிருந்தார். அவரது கண்களாக இரண்டு புள்ளிகளும், துப்பாக்கியினை குறிக்க “4” எனும் வடிவிலான கோடு வரையப்பட்டிருந்தது. 

”ஒரு வீட்டைவிட உயரமாக ஒரு ஆள் இருக்கமுடியாது. இங்க பார், நீ வரைஞ்சிருக்கிற கூரை சோல்ஜரோட தோள்பட்டை வரைக்கும் தான் வருது” என்றார் வழக்கறிஞர். 

செரியோழா தன் அப்பாவின் மடி மீது ஏறி னான். அவன் அங்கு வசதியாக உட்கார்ந்து கொள்ள கொஞ்சநேரம் பிடித்தது. 

அவனுடைய படத்தை நன்றாகக் கவனித்தபடி, 

”அப்பா, சோல்ஜர சின்னதா வரைஞ்சா அப்புறம் அவரோட கண்ணைப் பார்க்க முடியாதே!” என்றான். 

அவனைத் திருத்த வேண்டிய தேவை என்ன வந்தது? தன் மகனை நாள்தோறும் கவனித்து வந்த வழக்கறிஞர் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டார். குழந்தைகள், பிராணிகளைப் போன்றவர்களுக்கு, அவர்களுக்கேயுரிய கலையுணர்வு எண்ணங்களும் வினோதமான விருப்பங்களும் இருக்கும் என்பதையும் அவை வளர்ந்தவர்களின் அறிவுக்கு எட்டாமல் இருக்கும் என்பதையும் அவர் புரிந்து கொண்டார். கூர்ந்து கவனித்தால் வளர்ந் தவர்களின் பார்வைக்கு, செரியோழாவின் நடவ டிக்கை அசாதாரணமாகத் தோன்றும். ஏனெனில், ஒரு வீட்டை விடப் படை வீரரை உயரமாக வரைய முடிந்த அவனிடம் அதற்கான காரணமும் இருந் தது. தன் எண்ணங்களை ஒரு மனிதனாகத் தெரி விக்க பென்சிலை பயன்படுத்தவும் தெரிந்திருந் தது. இப்படித்தான், இசைக் குடும்ப சப்தங்களைப் புகைவளையங்களால் காட்டியிருந்தான். முறுக்கிய கயிற்றின் வடிவம் விசிலை நினைவூட்டியது. அவன் மனதில், ஓசைக்கு வடிவத்தோடும் வண்ணத்தோடும் நெருக்கமான தொடர்பு இருந்தது. எனவே “எல்” எனும் சப்தத்துக்கு எப்பொழுதும் மஞ்சள் நிறம், ”எம்” என்றால் சிவப்பு, “ஏ” என்றால் கறுப்பு என வரைந்து போக அவனால் முடிந்தது. 

வரைந்த படத்தை ஓரமாகப் போட்டுவிட்டு மேலும் வசதியாக உட்கார்ந்து கொண்டான். இப்பொழுது அவனது கவனம் அப்பாவின் தாடிப்பக்கம் திரும்பியது. கவனமாக அதைத் தடவிக்கொடுத்தான். பிறகு அதை இரண்டு பக்கமும் மீசை போல் வருமாறு சீவிவிட்டான். 

“இப்ப நீங்க இவான் ஸ்டெபானோவிச் மாதிரியே இருக்கீங்க” என்று காதோரமாகச் சொன்னான். 

“இப்ப இன்னும் ஒரு நிமிஷத்துல நம்ம போர்ட்டர் போல மாறிடுவீங்க. அப்பா, ஏன் அவுங்க கதவுகிட்டடியே நின்றுக்கிட்டிருக்காங்க? திருடங்க உள்ள வராம பாத்துக்கவா?” 

குழந்தையின் மூச்சுக் காற்று தம் முகத்தில் படர்வதை வழக்கறிஞரால் உணர முடிந்தது. அவரது கன்னத்தை அந்த மென்மையான முடி வருடிக்கொடுத்தது. பாசமும் நெகிழ்ச்சியும் இதயத்துக்குள் சென்றவிதம், தன் கைகள் மட்டுமல்ல ஆன்மா முழுவதுமே செரியோழாவின் வெல்வெட் உடைமீது இருந்ததைப் போன்ற உணர்வு அவ ருக்கு ஏற்பட்டது. 

பிள்ளையின் அகலவிரிந்த கருமையான கண்களைப் பார்த்தார். அந்த அகண்ட கண்களில் தன் அம்மாவையும், மனைவியையும் மட்டுமல்ல அவர் ஒரு காலத்தில் நேசித்த அத்தனை விஷயங்களும் தெரிந்தன. 

“அவனை அடிக்க எப்படி மனம் வரும்? எப்படி அவனைத் தண்டனை மூலம் திருத்துவது? முடியாது. பிள்ளைகளுக்கு எப்படி போதிப்பது என்பதைத் தெரிந்திருப்பது போல் நாம் நடிக்கக் கூடாது. அந்தக்காலத்தில் எல்லோரும் சாதாரணமாக இருந்தார்கள். அவர்கள் குறைவாக யோசித்தார்கள். எனவே, அவர்கள் சந்தித்த பிரச்சனைகளில் துணிவாக முடிவெடுத்தனர். ஆனால், நாமோ அதிகமாகச் சிந்திக்கிறோம். தர்க்கத்துக்கு நாம் இரையாகிறோம். ஒரு மனிதன் எந்த அளவுக்கு அதிகமாக அறிவாளியாக இருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் சிந்தித்து முடியைப் பிய்த்துக் கொள்கிறான். முடிவெடுப்பதில் அதிக தயக்கமும் போலித்தனமும் உண்டாகின்றன. ஒரு செயலை அணுகுவதிலும் மிகவும் மந்தமாக இருக்கிறான். ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், கற்பிக்கவோ, மதிப்பீடு செய்யவோ, ஒரு பெரிய புத்தகத்தை எழு தவோ ஒரு மனிதனுக்கு எத்தகைய துணிவும் தன் னம்பிக்கையும் தேவைப்படுகின்றன என்பது புலனாகும்”. 

கடிகாரம் ஒலித்தது. மணி பத்து. 

“வாடா, படுக்க நேரமாச்சு” எனப் பையனை வழக்கறிஞர் அழைத்தார். “குட்நைட் சொல்லிட்டு போய் படு” என்றார். 

“இல்லப்பா..இன்னும் கொஞ்ச நேரம் இருக்கறனே. ஏதாவது சொல்லுப்பா, ஒரு கதைசொல்லு” என்று கொஞ்சினான் செரியோழா. 

“சரி சொல்றேன், ஆனா கதை சொல்லி முடிஞ்சதும் நாம் போயிடனும்”. 

தமக்கு ஓய்வு கிடைக்கும் மாலை வேளைக ளில் செரியோழாவுக்குக் கதை சொல்லும் வழக்கம் வழக்கறிஞருக்கு இருந்தது. பரபரப்பாக இயங் கும் பெரும்பான்மையானவர்களைப் போல் இவருக்கும் ஒரு பாடல் கூட ஞாபகத்தில் இருக்காது. அதேபோல் ஒரு கதை கூட சொல்லத் தெரியாது. எனவே, ஒவ்வொரு முறையும் எதையாவது புதி தாக இட்டுகட்டிச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். “முன்பொரு காலத்தில்…..” என்பதை ஒரு பொதுவான வாசகமாக ஆரம்பிப்பார். பிறகு தொடங்கும் போது என்ன சொன்னோம், எது அடுத்தது, எப்படி முடியும் என எதுவும் தெரியாமல் ஒன்றன்பின் ஒன்றாக வெகுளித்தனமாக அபத்தங்களை அடுக்கிக்கொண்டே போவார். காட்சிகள், கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள் என எல்லாவற்றையும் போகிற போக்கில் கற்பனை செய்வார். 

கதைக் கருவும், கதை வழங்கும் நீதியும், கதை சொல்லியின் விருப்பத்துக்குக் கட்டுப்படாமல் தன் போக்கில் அமையும். இது போன்ற கற்பனை கள் செரியோழாவுக்கு மிகவும் பிடிக்கும். கதைக் கரு மிகவும் சாதாரணமாகவும் சிக்கலில்லாமலும் ருக்கும்போது அதன் தாக்கம் மகன் மீது அதிகமாக ஏற்படுகிறது என்பதை வழக்கறிஞர் கண்டு கொண்டார். 

தன் கண்களை மேல் கூரை மீது உயர்த்திய வாறு, “கவனமா கேள்” என்று தொடங்கினார். 

“ஒரு காலத்துல ஒரு ராஜா இருந்தார். ரொம்ப வயசானவர். அவருக்குப் பெரிய தாடியும் இதோ… இது மாதிரி பெரிய மீசையும் இருந்தது எல்லாம் நரைச்சுப் போய் தான். அவர் ஒரு பளிங்கு மாளி கையில் வசிச்சு வந்தார். அது சூரிய வெளிச்சத் தில், ஒரு பெரிய சுத்தமான ஐஸ் கட்டி மாதிரி தகதகன்னு மின்னும். தம்பி, அந்த மாளிகை ஒரு பெரிய தோட்டத்துல இருந்தது. அந்தத் தோட்டத் துல என்ன எல்லாம் இருந்தது தெரியுமா? ஆரஞ்சு, பெர்கமட், செர்ரி இப்படிப் பல மரங்கள் இருந் தது. அது மட்டுமா, துய்லிப், ரோஜா, லில்லின்னு நிறைய பூக்களும் பூத்துக் குலுங்கிச்சு. கலர் கலரா பறவைங்க வந்து பாடிக்கிட்டிருக்கும். ஆமாம்! மரத்துல சின்னச் சின்ன ஸ்படிகமணி கட்டியிருக் கும். காத்துல அசையும்போது கேக்க ரம்மியமாக இருக்கும். கேட்டுகிட்டே இருக்கலாம், அலுக்காது, உலோகத்தவிட இந்தப் பளிங்கில இருந்து வர சப் தம் ரொம்ப மென்மையா, இனிமையா இருக்கும். சரி என்ன யோசிக்கற? அடுத்து என்னன்னா? அப்புறம் அந்தத் தோட்டத்துல நீர் ஊற்று நிறைய இருந்தது. உனக்கு ஞாபகம் இருக்கா? ஒரு முறை நம்ம அத்தை சோனியாவோட பண்ணை வீட்டுக்குப் போயிருந்தப்போ அங்க பாத்தியே? ஆமாம்! அதே மாதிரி நீர் ஊற்றுதான் ராஜாவோட தோட் டத்துல நிறைய இருந்தது. ஒரே வித்தியாசம். ராஜா தோட்டத்துல இருந்ததெல்லாம் பெரிசா இருக் கும். அதுல இருந்து புறப்படற சாரல் அங்க இருந்த உயரமான பாப்லார் மரத்தோட உச்சி வரைக்கும் போவும், தெரியுமா?” 

சிறிது நேரம் யோசித்த பிகோவ்ஸ்கி, தொடர்ந் தார். ”வயசான அந்த ராஜாவுக்கு ஒரே பிள்ளை, உன்னைப் போல சின்ன பையன். அவன்தான் அந்த ராஜாங்கத்தோட அடுத்த வாரிசு. அவன் நல்ல பையன். சேட்டை எதுவும் செய்யமாட்டான். சீக்கரமா தூங்கப் போவான். அவனோட அப்பா மேசை மேல இருக்கற எதையும் தொடமாட்டான். அப்புறம்…. அப்புறம், அவன் எல்லா வகையிலும் எப்படி நல்லவனாக இருக்கனுமோ அப்படி இருந் தான். அவன் கிட்ட ஒரே குறை. அவன் சிகரெட் பிடிப்பான்”. 

அப்பாவின் கண்களையே பார்த்தபடி செரி யோழா கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான். வழக்கறிஞர் யோசித்தார். “எப்படித் தொடர்வது?” நீண்ட நேர சிந்தனைக்குப்பின் இப்படி முடித்தார். 

“சிகரெட் பிடிச்சதால ராஜா பிள்ளைக்கு உடம்பு சரியில்லாம போச்சு. காச நோய் வந்ததுல இருபது வயசுலியே செத்துட்டான். நடக்க முடியாம நோய்ல கஷ்டப்பட்ட வயசான ராஜாவைப் பாத்துக்க யாரும் இல்லாம போயிட்டாங்க. ராஜாங்கத்த நிர்வாகம் பண்ணவும், மாளிகையைப் பாத்துக்கவும் யாரும் இல்ல. எதிரிங்க படையெடுத்து வந்து ராஜாவ கொன்னுட்டு மாளிகையை நாசம் பண் ணாங்க. இப்ப அந்த தோட்டத்துல எந்த செர்ரி மரமும் இல்ல, பறவையும் இல்ல, மணியும் கிடையாது. அவ்வளவுதான்”. 

 இத்தகைய முடிவு கலை நயமற்றதாகவும் அபத்தமாகவும் பிகோவ்ஸ்கிக்கு தோன்றினாலும் அந்த முழுக்கதையும் செரியோழாவின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மீண் டும் சோகமும் பீதிபோன்ற ஏதோவொரு உணர்வும் அவனது கண்களில் குடிகொண்டன. அங்கிருந்த இருட்டான ஜன்னலை சிறிது நேரம் உற்றுப் பார்த் தபடி இருந்துவிட்டு பிறகு மெல்லிய குரலில், ”இனி மேல் நான் சிகரெட் பிடிக்க மாட்டேன்” என்றான். 

அவன் ‘குட்நைட்” சொல்லிவிட்டுத் தூங்கப் போனபிறகு அவனுடைய அப்பா கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக மெதுவாக நடந்தபடியே சிரித்தார். யோசித்துப் பார்த்தார். 

இந்த விஷயத்தில் அழகும் கலை வடிவமும் தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன எனச் சொல்வார்கள். இருக்கலாம். என்ன இருந்தாலும் அவையெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்த உரிய வழிகள் இல்லை. ஏன் உண்மையையும் நீதியை யும் அது உள்ள நிலையிலேயே அப்படியே தரா மல், எதையாவது கலந்து, மாத்திரைகளைப் போல இனிப்பில் தோய்த்து முலாம் பூசித்தர வேண்டும்? அது முறை இல்லை. அப்படிச் செய்வது மோசடி, சூழ்ச்சி, ஏமாற்றும் வேலை. 

எப்பொழுதுமே நீண்ட உரை நிகழ்த்தவேண் டிய அவசியத்தில் உள்ள வழக்கறிஞர்களைப் பற்றி யோசித்துப் பார்த்தார். அவற்றைக் கேட்கும் பொது மக்களுக்கும் புராணக்கதைகள், சரித்திர நாவல்கள், கவிதைகள் போன்றவை மூலம் தான் புரியவைக்கமுடியும். மருந்து என்றால் இனிப்பாக இருக்கவேண்டும்; உண்மை என்றால் அழகாக இருக்கவேண்டும். ஆதாம் காலத்தில் இருந்தே இந்த முட்டாள் தனமான எண்ணம் மனிதனிடம் இருந்து வருகிறது. ஆனால், அவை எல்லாமே 

இயற்கையாக இருக்கலாம். அப்படித்தான் இருக்கவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்பச் சில அனுகூலங்களையும் ஏமாற்றங்களையும் இயற்கையே ஏற்பாடு செய்து வைத்துள்ளது. 

அவர் தன் பணியைக் கவனிக்க உட்கார்ந் தார். ஆனால், அவருக்கு நெருக்கமான சில நீண்ட நினைவுகள் அவரது மனதில் தொடர்ந்து வட்டமடித்தன. அவர் தலைக்கு மேல் நடந்தவரின் காலடிச் சப்தம் இப்பொழுது கேட்கவில்லை. ஆனால், இரண்டாவது மாடியில் குடியிருப்பவர் இன்னமும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டுதான் இருந்தார். 

– இக்கதை முதலில் “டோமா” என்ற பெயருடன் நியூ டைம்ஸ் இதழில் 1887இல் வெளியானது. பல பதிப்புகளில் இடம்பெற்றுள்ள இக்கதை, செக்காவின் மிக முக்கியமான கதைகளில் ஒன்றாக டால்ஸ்டாய் கருதினார்.

– ஆன்டன் செக்காவ் ஆகச்சிறந்த கதைகள், தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், முதற் பதிப்பு: 2019, தடாகம் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *