கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: September 28, 2025
பார்வையிட்டோர்: 175 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம் – 5

“தொலைந்து போனது கிடைக்க வேண்டும் என்றால், தொலைத்த இடத்தில் தேட வேண்டும் என்பார்கள். அந்த இடத்தைத் தவிர்த்து உலகம் முழுவதும் தேடினாலும் தொலைந்து போனது கிடைக்காது. 

சூட்சமமான விஷயங்களும் இப்படித்தான். இதற்கென்று ஒரு பார்வையும், தேடலும் இருக்கிறது. அதில் வராதவரை சூட்சம விஷயம் ஒரு அசுரப் பொய்யாகவே நம்மை நினைக்க வைக்கும்!” 

அந்த காலைப் பொழுதில் ஓரளவு பனிமூட்டம் விலகி, பாதையும் தெரிந்தது. 

அருணாச்சலா அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க – கார் டிரைவர் மெல்லக் கண் திறந்து பார்த்தான். கார் கண்ணாடி மேலெல்லாம் பொட்டுப் பொட்டாக பனித்துளிகள். 

அவன் உதட்டில் கொட்டாவி பிரிந்தது. 

அதனால் லேசான சப்தம் உருவாகி, அது அருகிலே அமர்ந்த நிலையில் இருந்த கார்த்திகேயனை எழுப்பியது. 

“ஸலாம் மாலிக்..” என்றான் டிரைவர். 

“ஸலாம் ஸலாம்…” என்றபடியே கார்த்திகேயனின் பார்வை பின்பிக்கமாய் திரும்பி அருணாச்சலாவைப் பார்த்தது. 

கம்பளிக்குள் ஒரு தெருப் பிச்சைக்காரன் சுருண்டு படுத்திருக்கிற மாதிரி படுத்திருந்தார். மிக மெலிதாக குறட்டையையும் உதடுகள் வெளிப்படுத்திக்கொண்டு இருந்தன. 

“எழுப்புங்க… கிளம்புவோம். இனிமே கவலையில்லை” என்றான் டிரைவர். 

“அது சரி… ஆனா அந்த பிட்சுவை இன்னிக்கு பார்க்க முடியாதே. நாளைக்குக் காலையிலதானே பார்க்க முடியும்!” 

“அவரைப் பார்க்கவா ஸ்ரீநகர்ல இருந்து வர்றீங்க…?”

“மெல்லப் பேசு… சார் தூங்கட்டும்…” 

மெலிதாக சொல்லிவிட்டு, காரைவிட்டு வெளியே வந்தான்.

டிரைவரும் இறங்கி சப்தமில்லாமல் கதவை மூடினான். 

பிறகு பரபரவென்னு கைகளைத் தேய்த்து விட்டுக்கொண்டு பெருமூச்சு விட… சிகரெட் புகை போல பனிப்புகை ஒரு அரையடி தூரம் ஓடியது. 

“மொய்தீன்! நேத்து ராத்திரி இந்தப் பனிக்கூடத்துக்கு நடுவுலேயும் ஒரு மிலிட்டரிக்காரரைப் பார்த்தேன்…” 

“சொன்னீங்களே… எனக்கென்னவோ இங்க பக்கத்துல ‘மிலிட்டரி கேம்ப்’ இருக்கற மாதிரியே தெரியலை…” 

“அவர் நடந்துதான் போனார். ஷூ சப்தமும் கேட்டது. அப்படின்னா பக்கத்துல நிச்சயமா ‘கேம்ப்’ எதாவது இருக்கணும்.” 

“போய்ப் பார்க்கலாமா?” 

“சரி பார்ப்போம். சார் கார்லயே தூங்கிகிட்டு இருக்கட்டும்…” 

சொன்னபடி ‘பேண்ட்’ பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொண்டு நடந்தான். நீண்ட தார்ச்சாலை… இரு பக்கமும் மலைச்சரிவு. சரிவுகளில் அங்கும் இங்குமாய் சில பெயர் தெரியாத தாவரங்கள். 

சரிவின் ஆழத்தில் பனி நீர் ஆறாக ஓடும் அற்புதம் வேற. புசுபுசுவென்னு நுரை ததும்ப வெளிர் நீலத்தில் அது ஓடும் அழகு மனதை சொக்கவிட்டது. 

பாதை எங்கும் ஈரம் வேறு… 

“மிலிட்டரிக்காரரைப் பார்த்தேன்னீங்களே… ஷூ போட்டிருந்தாரா?” டிரைவர் மொய்தீன் நடந்தபடியே கேட்டான். 

“என்ன கேள்வி இது? இந்த மலையில ஷூ போடாம நடக்க முடியுமா…? அதுலேயும் மிலிட்டரிக்காரங்களுக்கு ஷூவும் பெல்ட்டும்தான் பிரதானம்…” 

“கரெக்ட் சார்… நீங்க ரொம்ப நல்லா காஷ்மீரி பேசறீங்க எங்க கத்துக்கிட்டீங்க?” 

“அதை விடு… என் எம்.டி.கிட்ட பி.ஏ.வா இருக்கணும்னா பத்து பாஷை தெரிஞ்சிருக்கணும். அவர் ஒண்ணும் சாதாரண ஆள் இல்லை. இவ்வளவு தூரம்லாம் அவர் கார்ல வந்ததே கிடையாது”. 

“மாலிக் பெரிய பிஸினஸ்மேனா?” 

“ஆமாம் மொய்தீன்… இவர் மேல ஒரு சின்ன கீறல் விழுந்தாலும், என் வேலை போயிடும். இவர் அவ்வளவு பெரிய புள்ளி” 

“அப்ப நீங்க ‘பிளைட்’ல போயிருக்கலாமே…?” 

டிரைவர் மொய்தீன் லாஜிக்காகக் கேட்டது கார்த்திகேயனைக் கொஞ்சம் இடித்தது. 

“அது எனக்குத் தெரியாதா…? காரணமாத்தான் அவர் கார்ல வந்திருக்கார். அவர் இப்படி வந்ததே யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது.” 

“ஏன் மாலிக்?” 

“இதோ பார்… நீ ஒண்ணு என்னை மாலிக்னு சொல்லு. இல்ல அவரைச் சொல்லு. குழப்பாதே.” 

“நாங்க உங்களை மாதிரி எங்களுக்கு வேலை கொடுக்கூற எல்லாரையும் மாலிக்குனுதான் சொல்வோம். அது எங்க வழக்கம்…” 

“சரி சரி.. ஷூ தடயம் எங்கேயாவது தெரியுதா பார். அது ‘கேம்ப்’ இருக்கற இடத்தை நமக்குக் காட்டலாம்….”
 
கார்த்திகேயன் அவனைக் கத்தரித்தான். பார்வையும் ஷூ தடயங்கள் எங்காவது தென்படுகிறதா என்று பார்த்தது. 

தார்ச் சாலையில் தடயங்கள் தெரியவில்லை, பக்கத்தில் அதல் பாதாள சரிவு அதில் நிச்சயமாக அந்த மிலிட்டரிக்காரர் இறங்கி இருக்க வாய்ப்பும் இல்லை. 

கார்த்திகேயனும் விடாமல் பார்வையை விரட்டினான். நாலாபுறமும் ராட்சஸ அளவில் வெள்ளைக் குல்லாய்களாக பனிமலைகள்! 

நெடுந்தூரம் வந்ததில் ஒரு இடத்தில் இறங்கி நடக்க முடிந்தது போல சரிவு. 

அதில் ஷூக்களின் தடயம்! 

“ஏய் மொய்தீன்… இங்க பார்!” 

கார்த்திகேயன் உற்சாகமானான். 

ஆனால் அந்த தடயங்கள் நேராக ஷிகாரா மலைக் குன்றை நோக்கித்தான் நீண்டிருந்தன. 

எல்லா இடத்திலும் பனிப்பாளம் இருக்க – ஷிகாரா குன்று மட்டும் துளியும் பனியின்றி காலை வெயிலில் பளீர் என்று துப்புரவாக பாறைகளோடு கண்ணில் பட்டது. 

“என்னய்யா.. அந்த ஒரு மலையில மட்டும் கொஞ்சம்கூட பனியே இல்ல…” 

“அட, ஆமாம்…” 

“இந்த தடயங்களும் அங்கதான் போகுதாட்டம் இருக்கு. வா, போய் பார்ப்போம்…” 

“இப்ப அங்க எதுக்குங்க? உங்க எம்.டி. முழிச்சுகிட்டா நம்மைத் தேடலாம்”. 

“எனக்குத் தெரியும்…. அவர் இப்ப முழிக்கமாட்டார். ‘மிலிட்டரி கேம்ப்’ கண்ணுல பட்டா காபியோ, டீயோ கிடைக்க வழி இருக்கு. அதோடு அவரைப் பார்த்தா சந்தோஷப்படுவார்…” 

“எங்கங்க… எதிர்க்க அந்த மலைதானே தெரியுது. ஆமா புத்த பிட்சுவை தேடறீங்களே எதுக்குங்க?” – டிரைவர் மொய்தீன் பிரதான கேள்வியை முதல் தடவையாகக் கேட்டான். 

கார்த்திகேயனுக்கு கொஞ்சமாய் நெஞ்சை அடைத்தது.

சாதாரண சந்திப்பாகவோ, இல்லை மதிப்புமிக்க சந்திப்பாகவோ இருந்தால் பதிலும் தயக்கமே இல்லாமல் அதற்கு ஏற்ப உடனேயே வரும். ஆனால், இதுவோ அப்படி இல்லையே..! 

அருணாச்சலா பார்க்க விரும்புவது ஒரு அந்தரங்க மர்மமான விஷயத்துக்காக…! எனவே பதில் சட்டென்று தோன்றாதபடி ஒரு திணறல் கார்த்திகேயனிடம் கூடு கட்டியது. 

டிரைவர் மொய்தீனோ அதைப் புரிந்துகொண்டு அப்படியே விடாமல் தொடர்ந்தான். 

“நீங்களோ இந்து… நீங்க போய் ஒரு புத்த பிட்சுவைப் பார்க்க நினைக்கறது ஆச்சரியமா இருக்கு சார்” என்றான். 

அதற்கு மட்டும் கார்த்திகேயனிடம் ஒரு உடனடி பதில். “புத்தர் நம்ம நாட்டைச் சேர்ந்தவர் மொய்தீன். அடிப்படையில் அவரும் ஒரு இந்துதானே…?” 

“ஓ… நீங்க அப்படி வர்றீங்களா?” 

“அப்படியேதான். இதற்கு மேல என்னைக் கேள்வி ‘கேட்காதே! இப்பவே நான் ஒரு நாள் வீணா போற கவலையில் இருக்கேன். 

என் ‘பாஸ்’வரைல ஒரு நாளுங்கறது ரொம்பப் பெரிய விஷயம். ஒருநாள் வீணானாலும் எவ்வளவு விஷயங்கள் ஸ்தம்பித்துப் போகும் தெரியுமா? 

நடந்தபடியே கேட்டான் மொய்தீன். அவனுக்கு நாள் மதிப்பெல்லாம் ஒன்றும் பெரிதே இல்லை. 

“ஏதோ உங்களால் ஒரு சவாரி கிடைச்சு வந்திருக்கேன் சார். வாஸ்தவத்துல காஷ்மீர்ல நாங்கள்ளாம் ஈ ஓட்டிக்கிட்டு இருக்கோம்..” 

“ஏன்யா… அங்க கூட ஈ இருக்குதா என்ன?” 

“விளையாடாதீங்க சார்.. எங்க ஊரோட பலமே ‘டூரிஸ்டு’களோட ‘விசிட்’தான். தீவிரவாதிகளுக்கு பயந்துகிட்டு யாரும் சரியா வர்றதில்லை. இதனால எங்களுக்கு எவ்வளவு சிரமம் தெரியுமா?” 

“சிரமப்படற நீங்க ஏன்யா தீவிரவாதிகளை உள்ளாற விடுறீங்க…” 

“என்ன சார் நீங்க… யாராவது தெரிஞ்சு உள்ளே விடுவாங்களா? எங்க ஊர் அழகைப் பார்த்து உலகமே கண்ணு வெச்சிடுச்சு. அதனால வந்த விளைவுதான் இது. எங்க ஊர்ல நூத்துக்கு தொண்ணூத்தி ஒன்பது பேர் இந்தியாவைத் தன் தாய் நாடாகவும், தீவிரவாதத்தை விஷமாகவும்தான் சார் நினைக்கறோம்” 

“பரவாயில்லியே… நல்ல பற்றுதலோட பேசறியே ! வெரிகுட். ஆமா… எப்படி இவ்வளவு மலைக்கூட்டத்துல இந்த ஒரு மலை மேல மட்டும் துப்புரவா பனியே இல்லையே…?” 

“ஒருவேளை இது ஷிகாராவோ என்னவோ?”

“ஷிகாராவா?” 

“ஆமாம் சார். ஸ்ரீநகர்ல படகு வீடுகளை ஷிகாரான்னு சொல்லுவாங்க. அந்த பேர் இந்த பகுதியில ஒரு மலைக்கும் இருக்கறதா கேள்விப்பட்டிருக்கேன். இந்த ஷிகாராவுல உலகத்தோட கெட்ட சக்திகள்லாம் வசிக்கிறதா ஒரு நம்பிக்கை…” 

மொய்தீன் அப்படியும் இப்படியுமாக கஷ்டம் கவலைகளைப் பற்றிப் பேசிவிட்டு, அப்படியே அந்த ஷிகாரா பற்றியும் தெரிந்தவன் போல் பேசியது கார்த்திகேயனை மிரளச் செய்தது. 

நடையை தேக்கினான்… 

மேஜர் சந்தர்பாலின் பூட்ஸ் கால் தடயங்களும் அங்கங்கே தெரிந்தன. 

“என்ன மொய்தீன் சொல்றே நீ. அப்ப இந்த மலை பேய் மலையா?” 

“சார்… இருக்கலாம்னுதான் சொன்னேன். உடனே பயந்துட்டீங்களே சார்…” 

“சரி, எது வேணா இருக்கட்டும்… ஷூ தடயம் அங்கங்கே தெரியுது பார்…” 

“திரும்பவும் சொல்றேன் சார். நிச்சயம் இந்தப் பக்கத்துவ எந்த கேம்பும் இருக்க வாய்ப்பு இல்லை. பேசாம நாம திரும்பி நடப்போமே…?” 

“பயப்படுறியா…?” 

“இல்ல சார்… நேரமாகுதுல்ல. அதைச் சொன்னேன்.” 

“நேரமானா ஆகட்டும். எப்படியும் இன்னிக்கு நாங்க புத்த பிட்சுகளைப் பார்க்கப் போறதில்ல. நாளைக்குத்தான். வந்த இடத்துல என்னதான் இருக்குதுன்னு தெரிஞ்சுக்கத்தான் முயற்சிப்போமே…?” 

கார்த்திகேயனிடம் உற்சாகம் பீரிட்டது. 

ஷிகாரா மலைக்குன்றும் கொஞ்சம் கொஞ்சமாக தூரம் குறைந்து அவர்களை வரவேற்றது. நடுவில் நடந்துகொண்டிருந்த பாதைகளில் பனிப்பாளங்கள் வழி மறித்தன. அதன்மேல் கால் வைத்தபோது மிக மிருதுவாக இருந்தது. 

“பார்த்து சார்…” 

“எங்க பார்… ஒரே பனியா இருக்கு. அப்படியே உட்கார்ந்து சறுக்குவோமா?” 

“என்ன சார் இது சின்னக் குழந்தை மாதிரி….”

“அப்பப்ப சின்னக் குழந்தையாவும் ஆகணும் மொய்தீன், அப்பதான் மனசு லேசாகும்…” 

சொன்னபடியே கார்த்திகேயன் அந்த பனிப்பாறைகள் மேல் அமர்ந்தான். ஜீன்ஸ் பேண்ட்டை மீறி சிலுசிலுப்பு உச்சி மண்டை ஊடுருவியது. வரை ஒரு மின்னோட்டமே நிகழ்த்தியது அது. ‘எழுந்திருங்க சார்… உட்காராதீங்க அப்புறம் பேண்ட் காயறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்…! 

மொய்தன் படபடத்தான். 

கார்த்திகேயனும் எழுந்துகொண்டான். ஒரே சிலிர்ப்பாக இருந்தது. காது மடலில் ஈரக்காற்று சரிகமப் பாடிற்று. ஸ்ஸ்ஸ்… என்று தொண்டைக்குழி கடந்தது சப்தம், 

“எவ்வளவு அழகா இருக்கு இந்த இடம்… வாவ்!” 

“போதும் சார்… திரும்புவோம். அங்க கார்ல உங்க எம்.டி- எழுந்திடப் போறாரு…” 

“போகலாம்… அவர் கேட்டா காப்பி-டீ கிடைக்குதான்னு பார்க்கப் போனோம்னு சொல்லிக்கலாம்…”

மெல்ல நடந்தபடியே பதிலுக்கு பதில் சொன்னபோது, ‘ட்ரொயிங்… ட்ரொய்ங்ங்…’ என்று ஒருசப்தம். 

நிசப்தமான அந்தப் பகுதியில் அந்த சப்தம் துல்லியமாகவே கேட்டது. 

“என்ன சப்தம் மொய்தீன்?” 

“தெரியலியே…” 

இருவரும் சப்தத்துக்குக் காரணம் தெரியாமல் பார்வையை சுழலவிட – ஒரு மறைவான பனிப்பாறை பின்னால் இருந்தபடி வந்து கொண்டிருந்தார் பிட்சு ஒருவர்! 

அவரைப் பார்க்கவும் இருவரிடமும் திகைப்பு. 

அவரும் அவர்களைப் பார்த்து திகைத்தது மாதிரி இருந்தது. நெருங்கினார். தன் சப்பையான முகத்தில் பூசினது போன்ற கண்களில் ஒருவித தீர்க்கமுடன் இருவரையும் பார்த்தார். 

“ஹலோ…” கார்த்திகேயன் நட்போடு வாய் திறந்தான்.

“ஹூ ஆர் யூ…?” அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி.

கார்த்தியும் உற்சாகமாக பதில் சொன்னான். 

“நாங்க மெட்ராஸ்ல இருந்து வர்றோம். என் பேர் கார்த்திகேயன், ‘லே’வுக்கு போய்கிட்டு இருக்கோம்.” 

“இங்க எங்க போறீங்க…?” 

“ஜஸ்ட்… ஜஸ்ட் ஒரு வாக். அதோ அந்த பனியே இல்லாத மலைக்கு….” 

“நோ… திரும்புங்க… அங்கெல்லாம் போக வேண்டாம்.”

“அது சரி… நீங்க…?” 

“பார்த்தா தெரியலியா? நான் ஒரு பிட்சு.”

“அது தெரியுது… நீங்க எப்படி இங்கே?” 

“இது எங்க பிரதேசம்… நாங்க எங்க வேணா போவோம்.”

“நீங்க போகலாம்… நாங்க போகக்கூடாதா?”

கார்த்திகேயன் அவரை மடக்கிவிட்டது மாதிரி கேட்டான்.

அவர் குத்துவது போல தொடர்ந்து பார்த்தார். 

“ஆமா… இங்க எங்கேயாவது உங்க மடாலயம் இருக்கா? அங்க நாங்க சாப்பிட சூடா எதாவது கிடைக்குமா?” – அப்படியே பேச்சை மாற்றினான். 

“பிளாக் டீ கிடைக்கும். பரவாயில்லியா?” 

“அய்யோ… அது அமிர்தமாச்சே! என் எம்.டி.க்கும் ‘பிளாக் டீ’ன்னா ரொம்ப பிடிக்கும்…” 

“அப்ப மிஸ்டர் அருணாச்சலாவும் வந்துருக்கார்னு சொல்லு.” 

பிட்சுவின் கேள்வி கார்த்திகேயனை ஒரு இடி இடித்தது.

“உங்களுக்கு… உங்களுக்கு எப்படித் தெரியும் அவரை…. “

“அவர் வரப்போறதா தகவல் வந்தது. அதான் அவரைத் தேடி நடந்துகிட்டிருக்கேன்…” 

“அப்போ நீங்க… நீங்க…” 

“நான்தான் பிட்சு லீ யுவான்…” 

“யூ.. யூ… நீங்கதான் லீ யுவானா? அப்ப நாங்க ‘லே’ கிட்ட வந்துட்டோமா?” 

“லே… தூரத்துலதான் இருக்கு. நான்தான் நீங்க பாதி வழியில தேங்கிட்டது தெரிஞ்சு உங்களைப் பார்க்க வந்துகிட்டிருக்கேன்…” 

“எப்படி…எப்படி உங்களுக்கு நாங்க பாதி வழியில தேங்கிட்டது தெரியும்?” 

“இப்போ இந்த கேள்விக்கு பதில் சொல்றதா பெரிசு? கமான்… அங்க உங்க எம்.டி. அருணாச்சலா காருக்கு வெளியே தவிச்சுகிட்டிருக்கார். அவரைப் போய்ப் பார்ப்போமே…?” 

லீ யுவான் என்னும் அந்த பிட்சு மிக அழகாக அவன் கேள்வியை கத்தரித்துவிட்டு முன்னால் நடந்தார். 

அதை நடை என்று கூட சொல்ல முடியாது. ஒருவித மாராத்தான் ஓட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். 

கார்த்திகேயனாலும், மொய்தீனாலும் அவரைப் பின் தொடரவே முடியவில்லை. 

ஆக்ஸிஜன் அவ்வளவாக இல்லாத காற்று, இவர்களை மிகவே சோதித்து பெரிதாக மூச்சிரைக்கச் செய்தது! 

தட்டுத்தடுமாறி நடந்து காரை நெருங்கியபோது – பிட்சு சொன்னதுதான் உண்மை. அருணாச்சலா காருக்கு வெளியீ புகை பிடித்தபடி டென்ஷனோடு நின்றுகொண்டிருந்தார். 

பிட்சுவைப் பார்க்கவும் புருவத்தில் வளைசல். 

பிட்சு உடம்பை வளைத்து வரவேற்றார்.

“வெல்கம்…வெல்கம் மிஸ்டர் அருணாச்சலா…”

“என்னை…என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?” 

“டில்லியில மிஸ்டர் குப்தா சொல்லித்தானே என்னைய பார்க்க நீங்க வந்துருக்கீங்க. ஐ நோ… ஐ நோ…” 

“அப்போ… நீங்க… நீங்க…?”- அருணாச்சலா நெற்றியை தேய்க்க, கார்த்தி தமிழில் இடை வெட்டினான். 

“சார் இவர்தான் நாம தேடி வந்த பிட்சு லீ யுவான்.”

“மைகாட்… இங்க எப்படி? நீதான் போய் கூட்டிகிடடு வந்தியா?” 

“இல்ல சார்…சும்மா கொஞ்ச தூரம் ‘வாக்கிங்’ போனோம் வழியில பார்த்தோம். எப்படியோ நம்மை அடையாளம் தெரிஞ்சுகிட்டு விசாரிச்சார். எப்படின்னுதான் தெரியலை.” 

“என்னைய்யா சொல்றே… அப்ப நாம ‘லே’கிட் வந்துட்டோமா?” 

“இவரைக் கேட்டா இல்லேங்கறார். எது எப்படியோ… பிட் லீ யுவான் ஒரு அதிசய மனிதர்னு குப்தா சொன்னது சரியாத்தான் இருக்கு…” 

“அப்ப கும்புடப் போன தெய்வம் எதிர்லையே வந்துடிச்சுன்னு சொல்லு…” அருணாச்சலா பரவசமடைய- பிட்சுவுக்கும் அது புரிந்திருக்க வேண்டும். 

“நான் தெய்வமில்ல மிஸ்டர் அருணாச்சலா. சாதாரன மனுஷன். வெரி புவர் மேன்.” 

“யார்? நீங்களா…? இந்த நடுங்கற குளிர்ல உடம்புல ஒரு கால் வேட்டியோட இருக்கற நீங்க புவர் மேளா… நோ… நோ…” 

கார்த்தி புகழ்வது போல சிலிர்த்தான். 

“ஓ.கே.. லெட் அஸ் மூவ். முதல்ல பிளாக் டீ. அப்புறமா நீங்க வந்த விஷயம் பத்தி பேசுவோம்…” 

“வாங்க… கார்லேயே போய்டலாம். போகலாம்ல?” 

“வித் ப்ளெஷர்!” 

கார் அடுத்த பத்தாவது நொடி கிளம்பியது.

பாதையிலும் பனி விலகி, வழி துல்லியமாகத் தெரிந்தது. 

அத்தியாயம் – 6

“உலகில் எவ்வளவோ ஆராய்ச்சிகள்! மண்ணைப் பொன்னாக்குவதிலே இருந்து, பெண்ணை ஆணாக்குவது வரை எவ்வளவோ முயற்சிகள். 

இதில் உயிர் பற்றிய ஆராய்ச்சி மட்டும் ஒரு பெரிய கண்ணாமூச்சி விளையாட்டாகவே இன்று வரை இருந்து வருகிறது. 

‘இறப்பு என்றால் என்ன?” 

இறப்பதற்கு முன் வரை இயங்கு சக்தியாகத் திகழ்ந்த உயிர், இறந்த பிறகு என்னாகிறது? இறக்காமல் வாழவே முடியாதா…?” என்பன போன்ற கேள்விகளுக்கு விஞ்ஞானத்திடம் தெளிவான பதில் இல்லை. ஆனால், மெய்ஞானம் முடியும் என்கிறது. சராசரி வாழ்க்கைக் காலமான நூறு ஆண்டு என்பதை எவ்வளவோ மெய்ஞானிகள் பல நூறு வருடங்களுக்கு நீட்டித்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வித்தை தெரியாத வரை அதை ஒரு கற்பனையாகத்தான் நினைக்க முடியும். வித்தையைக் கற்றவர்களோ. ‘இது சொல்லிப் புரியவைக்கும் ஒன்றல்ல, சுய அனுபவம்’ என்கின்றனர். 

எது உண்மை? 

அது என்னவோ தெரியவில்லை. மாயம், மந்திரம் என்று வாழ்பவர்கள் ஜனக் கூட்டத்தோடு சேர்ந்து வாழ்வதே இல்லை. தனியாக ஒரு மலை இரண்டு ஆண்டு அடிவாரம்பக்கமாகவோ, இல்லை ஒரு ஆண்டு ஏதோ ஒரு காட்டுக்குள்ளேயோ ஆறு மாதம் புகுந்துகெ விடுகின்றார்கள். 

தர்மனும் தன் குடியிருப்பை ஒரு ஆண்டு ஒரு மலை அடிவாரத்தில்தான் ஆறுமாதம் அமைத்துக்கொண்டு இருந்தான். ஆஸ்ரமம் போல ஒரு குடிசை. சுற்றிலும் மரங்கள். முன்னால் நிறைய கார்கள். 

உள்ளே சின்னதாக துர்க்கை அம்மனுக்கு ஒரு சந்நதி. அதன் முன்னால் ஒரு அலங்காரமான பலகை மேல் உட்கார்ந்துகொண்டு வந்திருப்பவர்களோடு பேசிக்கொண்டிருந்தான். 

வெளியே மர நிழலில் லோகநாதன் என்னும் பத்திரிகையாளர் ஒருவர் ஜோல்னா பை தொங்கும் தோளோடு தர்மன் குறிசொல்வதையும், எலுமிச்சம்பழத்தை மந்திரித்துத் தரும் அழகையும் நோட்டம் போட்டுக்கொண்டிருந்தார். 

ஆச்சரியம், அதிர்ச்சி, குழப்பம் என்று பல உணர்ச்சிகளும் மாறி மாறி லோகநாதன் முகத்தில் விளையாடிக்கொண்டு இருந்தன. சபாரி சூட்டில் ஒரு தொழில் அதிபர். அவரது கார் டிரைவர் அவர் எதிரில் நிற்கக்கூட அச்சப்பட்டான். அப்படியொரு ஆளுமை. 

அப்படிப்பட்டவரே தர்மனின் காலில் விழுந்து எழுந்தபோது ஆச்சரியமாக இருந்தது. “நீங்க சொன்ன நேரத்துலதான் ‘அக்ரிமெண்ட்’ போட்டேன். அப்படியே டெண்டருக்கும் எழுதிக் சொன்னதுதான் என்கிறது சரியாப் போச்சுங்க” என்று அவர் கொடுத்தேன். எனக்கே அது கிடைச்சுடுச்சு. சாமி சொன்னா சொன்னதெல்லாம் லோகநாதனுக்குள் சுழன்றடித்துக்கொண்டே இருந்தது. 

இறுதியாக அவனையும் தர்மன் கூப்பிட்டுவிட்டான். “தம்பி… நீங்கதானே லோகநாதன் என்கறவர்?” 

“ஆமாம்.” 

“சாமி கூப்பிடுது…” தர்மனின் உதவியாளர் கூப்பிட- உள்ளே நுழைந்தான். 

‘என் பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்?’ என்று கேட்கத் தோன்றினாலும், அது ஒரு பெரிய விஷயமில்லை என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். 

“வா தம்பி… உக்கார்.” 

தர்மனும் கைகாட்டி எதிரில் அமரச் சொன்னான். லோகநாதனும் அமர்ந்தான். 

“என்ன விஷயம், சொல்லுங்க…?” 

“என்ன விஷயமா…? என் பேரைக் கண்டுபிடிச்சு கூப்பிட முடியுது. நான் எதுக்கு வந்திருக்கேன்கறது தெரியலியா?” 

“ஏன் தெரியாம…? உழைச்சு பொழைக்காம மாயம், மந்திரம், பில்லி சூனியம், ஏவல்னு ஏதேதோ சொல்லிகிட்டு வர்றவங்க போறவங்கள ஏமாத்திப் பொழைக்கறதும் ஒரு பொழப்பா… எப்படி அந்த பொழப்ப சாமர்த்தியமா ஒரு திடத்தோட எப்படி நான் நடத்தறேன்னு தெரியணும்… சரிதானே?” 

“பரவால்லியே… என் மனசுல இருக்கறத அப்படியே சொல்லிட்டீங்களே. உங்களுக்கு ‘பேஸ் ரீடிங்’, டெலிபதி இதெல்லாம் தெரியும்னு நினைக்கறேன்.” 

“எனக்கு வெங்கடாசலபதியை தெரியும். ‘டெலிபதி’ன்னா என்னென்ன தெரியாது. இப்படியெல்லாம் மனசுல இருக்கறத புட்டுப் புட்டு வைக்கறதுக்குப் போதான் உங்க இங்கிலீஷ்ல ‘டெலிபதி’ன்னு சொல்வீங்களோ?” 

“அப்படியும் சொல்லுவாங்கன்னு வெச்சுக்குங்களேன். ஆனா, டெலிபதிங்கறது ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்காம், டெலிபோன் உதவியில்லாம பேசிக்கற ஒரு வித்தைன்னு சொல்வாங்க. அது எவ்வளவு தூரம் உண்மைன்னு தெரியாது.” 

“அப்ப உங்களுக்கு எல்லாத்துலயுமே ஒரு சந்தேகமும் இருக்குன்னு சொல்லுங்க.” 

“சந்தேகப்படாம யார் இருக்காங்க சொல்லுங்க பார்ப்போம்… சந்தேகப்பட்டாத்தானே கேள்வி கேட்க முடியும்.”. 

“சரி, இப்ப உங்களுக்கு என்ன தெரியணும்…?” 

“உங்க மாயம் மந்திரமெல்லாம் எந்த அளவுக்கு உண்மை?”

“அவ்வளவும் பொய்!” 

பொட்டிலடித்தது, தர்மனின் பதில். 

“பொய்யா…?” 

“ஆமாம்… பொய்யேதான். எல்லாமே தகிடுதத்தம்.”

“இல்ல, எனக்காக நீங்க வேணும்னே சொல்றீங்க?” 

“அட, என்ன தம்பி நீங்க… எதுக்கு வெட்டிப் பேச்சுன்னு நான் ஒரு வார்த்தையில பதில் சொன்னா அதைக்கூட சந்தேகப்படுறீங்களே?” 

“அப்ப நீங்க சொன்னதை நான் அப்படியே பத்திரிகைல எழுதவா?” 

“இல்லாட்டி மட்டும் எல்லாம் பெரிய உண்மைன்னு புகழ்ந்தா எழுதப் போறீங்க?” 

“அப்ப வெறுத்துப் போய்தான் இப்படி சொல்றீங்களா?” 
 
“வெறுக்கறதுக்கு என்ன இருக்குது… ஏமாறத் தயாரா இருக்கறவங்களை ஏமாத்த வேண்டியது, ஏமாத்த முடியாதவங்ககிட்ட ‘சரண்டர்’ ஆயிட வேண்டியது. இதுதான் எங்க பாலிசி” 

தர்மன் மிக சாதாரணமாக படுபடு கேஷுவலாகச் சொன்னான். 

லோகநாதனுக்குள் திணறல். நிறைய வாக்குவாதங்கள். விளக்கங்கள் என்று இந்த சந்திப்பு போகும். ஒரு சுவாரசியமான கட்டுரை கிடைக்கும் என்று நினைத்தால்- இந்த மனிதன் இப்படி பொசுக்கென்று முருங்கைக் கட்டை போல விஷயத்தை ஓடித்துவிட்டானே… 

வெறித்தான். 

சற்று முன்வரை எல்லாம் பொய் நம்பிக்கைகள் என்று நினைத்துக்கொண்டு இருந்தவன், கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும் யோசிக்கத் தொடங்கினான். உலகில் தப்பான யாரும் இவ்வளவு தைரியமாகத் தங்கள் தப்பை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதில் கொஞ்சம் வெட்கமும், தயக்கமும் நிச்சயமாக இருக்கும். தர்மனிடமோ சுத்தமாய் அது இல்லை. 

தன்னிடம் விவாதம் செய்ய விருப்பம் இல்லாததால் ஒருவேளை இப்படிப் பேசுகிறானோ…? 

“என்ன தம்பி… எனக்கு உங்ககிட்ட விவாதம் பண்ணப் பிடிக்காம நான் ஒரு வார்த்தையில முடிச்சுகிட்டதா நினைக்கறீங்களா?” 

தர்மன், லோகநாதனின் மனதை அப்படியே படம் பிடித்தான். 

“அது… அது…” 

“என்ன தயக்கம்…? என்னை எந்த கணக்குல எடுத்துக்கறதுன்னே தெரியல… அப்படித்தானே?” 

“ஆமாம்.” 

“அப்படி வாங்க வழிக்கு எதையும் புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க. முன்னாடியே ஒரு முடிவுக்கு வந்து, அதுல நின்னுகிட்டு எதையும் பாக்காதீங்க…” 

“அப்படின்னா?” 

“மாந்திரீகமும் ஒரு விஞ்ஞானம்தான் தம்பி..” 

“இப்பத்தான்..இப்பத்தான் நீங்க நான் எதிர்பார்த்த விஷயத்துக்கு வாறீங்க, எப்படி… எப்படின்னு சொல்லுங்களேன்…” 

“அணுகுண்டைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா?”

“எதுக்கு இப்ப இந்தக் கேள்வி..?” 

“இல்ல. கேள்விப்பட்டு இருக்கீங்களான்னு கேக்கறேன்”

“நிறைய… ‘புத்தர் சிரித்தார்’ன்னு ‘கோட்வேர்ட்’ல நம்ப வாஜ்பாய் அரசாங்கம் கூட அணுசக்தியை பரிசோதனை செய்து பார்த்தாங்களே?” 

“அந்த குண்டை எப்படி செய்யறதுன்னு விஞ்ஞானிங்கிட்ட கேட்டா அவங்க சொல்லுவாங்களா?” 

“அது எப்படி…அது ‘டாப் சீக்ரெட்’ ஆச்சே”

“அவங்க சொல்லலைங்கறதால அது பொய் இல்லையே!”

“நிச்சயமா.” 

“மாந்திரீகம் ஒரு விஞ்ஞானம்னு நான் சொல்றதும் அப்படித்தான். இதுவும் ஒரு ‘டாப் சீக்ரெட்’. என்னால சொல்ல முடியாது.” 

“இல்ல… இல்ல… இது சாமர்த்தியமான பதில். நீங்க பயங்கர புத்திசாலி. என்னை இப்படியெல்லாம் சொல்லி கட்டிப் போட முயற்சிக்காதீங்க. மாந்திரீகத்தை நான் புரிஞ்சுக்க விரும்பறேன்.” 

“அப்படின்னா என்கிட்ட ஒரு மாணவனா சேருங்க. அதுக்கு முன்னாடி உங்க ஜாதகத்தைக் கொண்டுகிட்டு வாங்க. அதையும் பார்த்துட்டு பிறகு சொல்றேன்.” 

“ஜாதகம் எதுக்கு?” 

“எல்லாரும் எல்லாத்தையும் படிச்சு தெரிஞ்சுக்க முடியா மாயா சாஸ்திரம் படிக்க கர்மவினையில் இடம் இருக்கணும்.” 

“இது… இதுவும் சாமர்த்தியமான பதில். எந்த ஒரு விஷயத்தையும் சுத்துக்க ஆர்வமும், அக்கறையும் இருந்தா போதும். கூடவே உழைப்பு, அந்த விஷயம் தானாக வசப்பட்டுடும்…” 

“அதெல்லாம் இந்த ஒரு வித்தைக்கு மட்டும் பொருந்தாது…” 

“இல்ல… பொருந்தும். மனுஷன் முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமில்லை,” 

“அப்படியா?” 

“என்ன அப்படியா…? நிலாவுல கால் வைக்கலே? செவ்வாய்கிரகத்துக்கே ‘சாட்லைட்’ அனுப்பலையா?” 

“அப்படியா?” 

“திரும்பத் திரும்ப அப்படியான்னா என்ன அர்த்தம்? மனுஷ சக்தியால எது முடியாது? ஒரு படிப்பு வாசனையே இல்லாத நீங்க மாயம் மந்திரம்னு என்னென்னமோ பண்ணலாம். என்னால முடியாதா?” 

“அப்ப மனுஷனால என்ன வேணா பண்ண முடியுமா?”

“எது முடியாது…? அதைச் சொல்லுங்க…” 

“சரி… நான் ஒரு விஷயத்தைச் சொல்றேன். வீட்டுக்கு வீடு நடக்கற விஷயம்தான். அரசாங்கமே இதைத் தடுக்க என்னடா பண்ணலாம்னு மண்டைய பிச்சுகிட்டிருக்கிற ஒரு விஷயம். அதைச் சொல்றேன். உங்களால முடியுமான்னு சொல்லுங்களேன்…?”

“வீட்டுக்கு வீடு நடக்கற விஷயமா…? என்ன சொல்றீங்க?”

“குழந்தைப் பிறப்பைத்தான் சொல்றேன். அது எந்த வீட்டுல நடக்கலை?” 

“அப்ப நான் குழந்தை பெத்துக்கணுமா?”

“ம்…உங்க முயற்சியால நீங்க கருத்தரிச்சு, பத்து மாசம் சுமந்து ஒரு குழந்தையைப் பெத்துக் காட்டணும். முடியுமா?” 

“இல்ல… நீங்க திரும்பவும் விதண்டாவாதம் பண்ணுறீங்க. ஒரு ஆண் எப்படி பிள்ள பெத்துக்க முடியும்?” 

“முயற்சி… உழைப்பு… அப்படி இப்படின்னீங்க?”

“இயற்கைக்கு எதிரா எது செய்தாலும் உருப்படாதுங்கறது உங்களுக்குத் தெரியாது?” 

“மாந்திரீகமும் அப்படித்தான். இது மட்டுமல்ல… இதைப் போல பல விஷயங்கள் இருக்கு தம்பி.” 

“நீங்க ஒரு ஆண். உங்களால இந்த மாய மந்திரங்கள்ல ஈடுபட முடியும்னா, நானும் ஒரு ஆண். என்னாலேயும் முடியும்!” 

“அப்படியா?” 

“திரும்பவும் ‘அப்படியா’ன்னு நக்கலா கேக்காதீங்க, என் தன்னம்பிக்கையை நீங்க என்ன பண்ணினாலும் எதுவும் செய்ய முடியாது. எனக்கு ஒண்ணுல உங்க விஷயமெல்லாம் மாய்மாலங்கறது தெரியணும். இல்லை, உண்மைன்னா அது எப்படின்னு தெரியணும்.” 

“சரி… உங்களுக்கு ஒரு பரீட்சை வைக்கறேன். அதுல நீங்க ‘பாஸ்’ பண்ணிட்டா உங்களை நான் சேர்த்துகிட்டு வித்தைகளை சொல்லித் தரேன். எனக்கும், எனக்குப் பிறகு பேர் சொல்ல ஒரு சிஷ்யன் இல்லையேங்கற குறை இருக்கு…” 

“குட்… என்ன பரீட்சை…? முதல்ல அதைச் சொல்லுங்க.”

“இரண்டு பேரும் ஆண்தானேன்னு சொன்னீங்கள்ல…?”

“இல்லையா பின்னே?” 

“உருவத்துல ஆணா இருந்து பிரயோஜனமில்ல. உள்ளத்துலேயும் ஒரு ஆணா இருக்கணும்.” 

“எதாவது வீரதீரச் செயல் செய்து அதை நிரூபிக்கணுமா?”

“ஆமா, கத்தி கபடான்னு எதுவும் இல்லாம – முட்டி மோதாம் நாம ஆம்பளைங்கறதை காட்டற ஒரு பரீட்சை இருக்கு. அந்தப் பரீட்சைதான் மாந்திரீகத்துலேயே ரொம்ப முக்கியமான பரீட்சை….” 

“என்ன பரிட்சை அது?” 

“இன்னிக்கு போய்ட்டு நாளைக்கு ராத்திரி வாங்க. இரண்டு பேரும் சேர்ந்தே பரிட்சை எழுதுவோம்.” 

“மாறமாட்டீங்களே…” 

“நீங்க மாறாம இருந்தா சரி…” 

“அப்ப நான் இப்ப புறப்படுறேன்.”

“பார்த்து போய்ட்டு வாங்க…” 

தர்மன் விடை கொடுத்தான். 

லோகநாதனும் ஏதோ கூரை ஏறி கோழியாவது பிடிக்க முடிந்ததே என்கிற மாதிரி அங்கிருந்து புறப்பட்டான்! 

தர்மன் முகத்தில் ஒருவித மர்மச் சிரிப்பு. 

– தொடரும்…

– ராணிமுத்து, நவம்பர் 1, 2009.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *