கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: September 21, 2025
பார்வையிட்டோர்: 135 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம் – 1

“பார்ப்பது, பேசுவது அதாவது ஒளி, ஒலி என்னும் இரண்டும்தான் உயிர்களுக்கே ஆதாரம். 

இதில் ஒளிகூட பிரதானமில்லை. ஒலியே பிரதானம். இந்த ஒலியைக் கொண்டதுதான் நாம் பேசும் மொழிகள் மற்றும் உச்சரிக்கும் மந்திரங்கள்! 

மந்திரங்களில் சில விசேஷ ஒலியமைப்பு நிறைந்த மந்திரங்கள் உண்டு. இவை ஆவிகளை வசப்படுத்தி இழுத்து வருபவை. 

இந்த மந்திரங்களில் தேர்ந்தவர்கள் சில புத்த பிட்சுக்கள்!”


பால்டால்! 

காஷ்மீரத்தின் ஸ்ரீநகருக்கு எண்பது கிலோ மீட்டரில் இருக்கும் ஒரு சிறிய ஊர். 

அதற்காக நமது பச்சப்பட்டி, புளியம்பட்டிகளை உதாரணமாக சொல்ல முடியாது. 

வானத்துக்கே ஒட்டடை அடிக்கக் கிளம்பிவிட்டது போன்ற ஆல்பைன் மரங்கள், நானும் கொஞ்சம் முயற்சிக்கிறேனே. என்கிற மாதிரி காற்றிலாடும் யூகலிப்டஸ்- இவைகளுக்கு நடுவே பச்சைப்பசேல்தனமாக கண்ணடித்துக் கொண்டிருந்தது. 

இமய மலைச்சாரலின் ஒரு சின்னத் துண்டுப் பகுதிதான் பால்டால். எனவே. தூங்கு மூஞ்சித்தனமாய் பல மலைக்குன்றுகள் பனிக்கட்டிகளால் நெய்த போர்வையையும் சேர்த்தே போர்த்தி இருந்தன. 

சூரியனாகப்பட்டவன் சென்னையில் நம்மையெல்லாம் பெண்டு கழட்டுகிற மாதிரி அங்கே செயல்பட முடிவதில்லை. 

எனவே, அவனும் சோர்வாக தன்னால் ஆட்டி வைக்கப்பட முடியாத அந்த ஊரில் பேருக்கு வெளிச்சத்தை பெய்து கொண்டிருந்தான். 

அந்தப் பசுமையான பிராந்தியத்தில் வளைவான தார்ச் சாலைகளும் நல்ல அழகு! 

இந்திய மண்ணாக இருந்தாலும், உலகைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடமாயிற்றே…! எனவே, சாலைகள் சுத்தமாக – மேடு பள்ளம் இல்லாமல் இருந்தன. 

அதிலும் பால்டாலில் இருந்து லடாக் நோக்கிச் செல்லும் மலைப்பாதை ஏதோ சொர்க்கத்துக்கு செல்லும் பாதை போல இருந்தது. 

அதில்தான் தொழிலதிபர் அருணாச்சலாவின் காரும் சீறிக்கொண்டிருந்தது. 

ஊரும், காடும் அழகாக இருந்து என்ன பிரயோஜனம்?

அருணாச்சலாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. வருஷம் 300 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி மட்டுமே செய்யும் பெரிய ‘பிசினஸ் மேக்னட்’. 

மாதமானால் 2,400 பேர் அவர் கையால் சம்பளம் வாங்குகிறார்கள். 

மத்திய அரசிலிருந்து மாநில அரசு வரை பலரும் அவர் பாக்கெட்டில்… ஏதாவது ஒரு செய்தியில் அடிக்கடி இடம் பிடித்துக்கொண்டே இருப்பவர். 

நிறைய எச்.ஆர்.டி. மேனேஜர்கள், ‘எங்கள் ரோல் மாடல் மிஸ்டர் அருணாச்சலாதான்’ என்று கூறி இருக்கிறார்கள். 

ஒரு பிரபல நடிகர்கூட அருணாச்சலாவை அப்படியே ‘இமிடேட்’ செய்து நடித்து மத்திய அரசின் சிறந்த நடிகருக்கான விருதே வாங்கிவிட்டார். 

அப்படிப்பட்ட அருணாச்சலாவையும் ஒரு கவலை கவ்விக்கொண்டிருந்தது. 

அதன் எதிரொலிதான் அவரது தாடை முடிகள்! 

ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள டெல்லி வந்தபோது மொழுமொழுவென்று சவரம் செய்த திலீப்குமார் போலத்தான் இருந்தார். 

கருத்தரங்கு முடிந்து அவரது பி.ஏ. கார்த்திகேயன் காதைக் கடித்த பிறகுதான் இப்படி ஆகிவிட்டார். 

கார்த்திகேயன் காரின் முன் இருக்கையில் அமர்த்திருந்தான். காருக்குள் அருணாச்சலா இருப்பது தெரியக்கூடாது என்பதற்காக கார் கண்ணாடிகளுக்கு ‘கூல் பிலிம்’ ஒட்டப்பட்டிருந்தது. 

ஆனால், உள்ளே இருந்து வெளியே பார்வை ஊடுருவ முடித்தது. அவனும் அமைதியாக ஊடுருவியபடியே வந்தான். அருணாச்சலா தன் ‘லேப்டாப்’பில் கணக்கு வழக்கு பார்த்தபடியே வந்து கொண்டிருந்தார். அருகில் ‘தேவதாஸ்’ பட சி.டி. கிடத்தது. அவ்வப்போது அதன் பாடல்களால் காதையும் நனைத்துக்கொண்டார். ஞாபகமாக செல்போனை ஆப் செய்து வைத்திருந்தார். 

கார் சீறிக்கொண்டே இருந்தது. 

ஏனோ அந்த மலைப்பாதையில் கைப்பிடிச்சுவரே இல்லை. அதுதான் ஸ்ரீநகர் பாணி என்று யாரோ சொன்னது ஞாபகத்தில் வந்தது. விழுந்தால் அதலபாதாளம்தான். ஜன்னல் கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்த அருணாச்சலாவுக்கு கொஞ்சம் வயிற்றைக் கலக்கியது. 

டிரைவரைப் பார்த்தார். மொய்தீன் என்று பெயர். ஸ்ரீநகரைச் சேர்த்தவன். 6 அடி உயரம், கருடன் மூக்கு, ‘டிரிம்’ செய்த தாடி, இவைகளுடனான காஷ்மீரத்தைச் சேர்ந்தவன். மலைப் பாதைகளில் ஓட்டிப் பழக்கப்பட்டவன் என்று அவனைப் பிடித்திருந்தார்கள். விரைப்பாக காரைச் செலுத்திக்கொண்டிருந்தான். 

அருணாச்சலா, கார்த்திகேயனைக் கூப்பிட்டார்.

“கார்த்தி….” 

“சார்..” 

“என்னய்யா இது… ரோடு ரொம்ப பயங்கரமா இருக்குதே…?” 

“ஆமாம் சார்…” 

“நீ ஆமோதிக்கறதுக்காக நான் ஆதங்கப்படலை. இந்த டிரைவர் லடாக் வரை ஜாக்கிரதையா ஓட்டுவானா?” 

“ரொம்ப அனுபவசாலி சார்… ஒரு பிரச்சினையும் வராது.”

“ஏதுக்கும் மெதுவாவே போகச் செல்லு” 

“ஓ.கே. சார்” 

“ஆமா எப்ப போய்ச் சேருவோம். எதாவது ஐடியா இருக்கா…?” 

“அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் போயிடலாம் சார். இங்க அஞ்சு மணிக்கெல்லாம் விடிஞ்சிடுது. அதோட அப்ப போனாதான் அந்த பிட்சுவைப் பார்க்க முடியும்”. 

“ஏன்… கொஞ்சம் தாமதமா போனா பார்க்க முடியாதா?” 

“இல்ல சார்… காலையில அஞ்சு மணியில இருந்து ஆறு மணி வரைதான் அவர் குகையைவிட்டு வெளியே வருவார். அப்ப சந்திச்சாதான் உண்டு. அதுக்குப் பிறகு குகைக்குள்ள போய்டுவார்…” 

“நாமளும் குகையிலேயே போய் பார்ப்போமே?” 

“இல்ல சார்… அப்படியெல்லாம் குகைக்குள்ள போய்விட முடியாது. அந்த பிட்சு தியானத்துல உக்காந்துட்டா, கடவுளே வந்தாலும் கலையமாட்டார்னு சொன்னாங்க.” 

“என்னய்யா, என்னென்னவோ சொல்றே… இதுக்குத்தான் நான் இந்த மாதிரி விஷயங்கள்ல எல்லாம் இறங்கறதே இல்லை. பேசாம நம்ம ஜி.எம்.யையே அனுப்பி இருக்கலாம்…”

“அப்படி இல்ல சார்… ஜி.எம். நம்ம காரியத்தை முடிக்கவே முடியாது.” 

“இந்த சதாசிவம் ஒரு கிறுக்கன்யா…இவன் செத்ததால் இப்படி புத்த பிட்சுவையெல்லாம் தேடிப்போக வேண்டியிருக்கு, ஹூம்!” சலித்துக்கொண்டார் அருணாச்சலா. 

அத்தியாயம் – 2

“இமாலய மலை வெளிகளில் ‘லே’வையொட்டி ‘ஷிகாரா’ என்று ஒரு மலை இருக்கிறது. அசப்பில் மண்டை ஓடு போலவே இருக்கும். இந்த உலகை ஆட்டுவிக்க விரும்பும் துர்தேவதைகளின் வாசஸ்தலமாக அது கருதப்படுகிறது. 

இந்த மலையின் பக்கம் மிகத்துணிச்சலாக செல்லக்கூடியவர்கள் சில புத்தபிட்சுகள் மட்டுமே. 

மிகவும் கொடிய ஆசார முறைகளையுடைய இந்த பிட்சுகள் தங்கள் யோக பராக்கிரமங்களால் உயிரின் ரகசியத்தையே தெரிந்து வைத்திருப்பவர்கள். 

இவர்களின் கண்களுக்கு அந்த துர்தேவதைகள் தெரியும் என்பதோடு, அவை இவர்கள் இடும் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் என்பதும் நம்ப முடியாத உண்மைகளாகும்!”


மாவுப் பையை உதறின மாதிரி பனி மழை பெய்து கொண்டிருந்தது. 

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சையாகவோ, கறுப்பாகவோ ஒரு விஷயத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் பனிப் படுக்கை. நடுக்கும் குளிரும் ஒரு ராணுவ அணிவகுப்பே நடத்திக்கொண்டிருந்தது. 

அதிசயமாக ‘ஷிகாரா’ என்னும் ஒரே ஒரு குன்றுப் பகுதி மட்டும் துளி கூட பனியால் ஆக்கிரமிக்கப்படாமல் வெறும் கல்குன்றாய் தனியாகத் தெரிந்தது. 

அதன் பருத்த ஒரு பாறை மேல் ஒரு கிழட்டுக் கழுகு. அதன் கழுத்தில் துளி கூட முடி இல்லை. கழுத்தும் கிட்டத்தட்ட ஒரு சாணுக்கு ஒரு கைப்பிடிக்குன் அடங்கிவிட்ட அரக்கு நிற இரும்புத்துண்டு போல இருந்தது. 

அது யாருக்கோ காத்திருப்பது போலத் தெரிந்தது. குறிப்பிட்ட ஒரு திசையையே பார்த்துக்கொண்டிருந்தது. 

அந்த பனிமலைக் காட்டில் ஒரு ஜீப் ஓடி இருக்கிறது என்பதற்கு அடையாளமாய் டயர் சக்கரங்கள் உழுது போட்டது போல ஒரு பாதைக்கீறல். 

அதன் மேல் ராணுவத்தின் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் ‘டிரக்’ ஒன்று நெடுந்தொலைவில் வந்தபடி இருந்தது. 

நெருங்க நெருங்கத்தான் அதில் இருபதுக்கு மேல் வீரர்கள் இருப்பதும், நடுநாயகமாய் ஒருவர் மட்டும் ‘மெஷின்கள்’னுடன் ‘டிரக்’கின் நடுமுதுகில் நின்றுகொண்டிருப்பதும் தெரிந்தது. 

அந்த ‘டிரக்’கும், அதே குன்றுப் பக்கமாக வரவும் சற்று வேகம் எடுத்தது. அந்த வேகம் தாளாமல் நாலாப்புறமும் பனிக்கட்டிகள் உடைந்து சிதறி, ஒரு வெள்ளைப் புகை மூட்டத்தையே தற்காலிகமாக உருவாக்கிக் காட்டின. 

‘டிரக்’ வேகமெடுக்கும் நேரம் அந்த ‘டிரக்’கில் உள்ள வீரர்கள் ஒருவித அச்சத்துடன் அந்த மலையைப் பார்த்தார்கள். சிலர் சிரித்தார்கள். 

இந்தியில் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். 

“இந்த ஷிகாரா மலையிலதான் எல்லா துர்ஆத்மாக்களும் குடி இருக்குன்னு சொல்றதை என்னால் நம்ப முடியலை…” என்றார் மேஜர் சந்தர்பால். 

“அப்படியா… அப்படின்னா இறங்கி அந்த மலை மேல ஏறி ஒரு கல்லை எடுத்துக்கிட்டு வர தைரியம் இருக்கா, உனக்கு?” 

பிரதாப் என்பவர் திருப்பிக் கேட்டார். 

“கல் என்ன… விட்டா ஒரு மூட்டை மணலே கூட அள்ளிக்கிட்டு வந்துடுவேன்…” 

“மூட்டையெல்லாம் எதுக்கு… ஒரு கல்துண்டு, ஒரே ஒரு கல்துண்டு போதும் மேஜர் சந்தர்பால்.” 

“ஓ.கே ‘டிரக்’கை நிறுத்துங்க… நாமெல்லாம் பாகிஸ்தானோட துப்பாக்கிகளுக்கே பயப்படாதவங்க. இந்த மலைக்குன்றைப் பார்த்து பயப்படறது கேவலம்.” 

‘டிரக்’ நின்றது. மேஜர் சந்தர்பால் கீழே குதித்தார்.

“வேண்டாம் மேஜர்… அங்க போன யாரும் திரும்ப கீழே இறங்கினதே இல்லை” – என்றார் பிரகாஷ் என்பவர். 

“நோ… ஐ வான்ட் டு கோ… பனியே இல்லாத இந்த குன்றுல ஒரு ‘டென்ட்’ போட்டு ஒரு ‘டெலஸ்கோபிக் வீயூ’ கட்டடத்தையே கட்டலாம். அவசியப்பட்டா இந்த ஜோனுக்கு தேவையான உணவைச் சமைக்க ஒரு கேன்டீன் கூட இங்கே அமைக்கலாம்.” 

“இப்படி பல திட்டங்களை ஏற்கெனவே பிரிகேடியர் ஒருத்தர் போட்டார். ஆனால், அந்த மலை மேல ஏறின அவர் திரும்ப வரவேயில்லை. நாம் அவரோட நினைவுநாளை அனுஷ்டிச்சுகிட்டுதான் இருக்கோம் மேஜர்.” 

“பிரிகேடியர், கர்னல்னு நீங்க யாரைப் பத்திச் சொன்னாலும் ஐ டோன்ட் கேர். நான் சந்தர்பால். என் வழி தனி வழி…” 

“வேண்டாம். நாம இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள ‘லே கேம்ப்’புல இருந்தாகணும். கர்னல் ராம்நாயக்கோட ‘பேர்வெல் பார்ட்டி’ நமக்காக காத்துகிட்டுருக்கு. விசேஷமாக அதுல டெல்லி ‘கேபரே டான்சர்’ ஷில்பாவோட டான்சும் இருக்கு…” 

“கட்டாயமா அதுல கலந்துக்கறோம். அப்படி கலந்துக்கும்போது என் கைல நீங்க மிரட்டலா சொன்ன இந்த ஷிகாரா மலையோட கல் ஒண்ணாவது இருந்தாத்தானே எனக்கு பெருமை…?” 

மேஜர் சந்தர்பால் தான் ஒரு விடாக்கண்டன் என்கிற மாதிரி பேசிவிட்டு நடந்தார். ‘டிரக்’கிலுள்ள வீரர்கள் விதிர்ப்புடன் பார்த்தார்கள். 

ராணுவ வீரர்களுக்கு மலை ஏறுவது என்பது ஒரு சுண்டைக்காய் விஷயம். அதிலும் சந்தர்பால் அந்தப் பனி மலையில் ஆக்சிஜன் பற்றிக் கவலைப்படாமல் பல சிகரங்களின் உச்சியைத் தொட்டு, அங்கே நம் தேசியக் கொடியை பறக்கவிட்டு மகிழ்ந்தவர். 

எனவே; விறுவிறுவென்று தாவிக்குதித்து மேலேறினார். அந்த பாறைக் கழுகும் பார்த்துக்கொண்டே இருந்தது. நடுநடுவே பாறைகள் அவரை மறைத்தன. அந்தப் பாறைகளின் மேல் ஏறி திரும்பிப் பார்த்தார். இரு கைகளையும் ஆகாசத்திற்கு உயர்த்தி உற்சாகத்தை பதிவு செய்துகொண்டார். 

சில இடங்களில் பாறைகளுக்கு நடுவில் மண்வாகு மிக ஈரமாக சேறு போல இருந்தது. அதையெல்லாம் பார்த்துக்கொண்டே நடந்தார். 

பாறைகளில் எல்லாம் கூட உப்பு பூத்திருந்தது. பனிக்கட்டி உறையாமல் கரைந்துவிட, அந்த இடத்தின் மண்ணில் ஏதோ அமிலச்சத்து இருக்க வேண்டும் என்று புத்தியில் ஒரு கவுனி சொல்லிற்று. 

ஆனால், இதை ஆராயாமல் இந்த ஷிகாராவை ஆவிகளின் சாம்ராஜ்ஜியமாக ஆக்கிவிட்டார்களே என்று ஒரு மெல்லிய கோபமும் அவருக்குள் கனன்றது. 

ஒரு பாறை மேல் நின்றுகொண்டு அதை எதிரொலித்தார். “மேஜர் பிரதாப் – பிரிகேடியர் பிரகாஷ் – சோல்ஜர்ஸ், இங்க எந்த அதிசயமும் இல்ல… இங்க நம்ப எண்ணெய் வள ஆராய்ச்சிக்காரங்க வந்து ஆராய்ஞ்சா பெட்ரோல் கிடைக்கலாம்… நீங்க எல்லாம் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க…” 

வாய்க்கு பக்கத்தில் இரு கைகளை அடைத்து ஒரு கூவலோடு அவர் கத்தியது மிக மிக தேய்ந்து, ‘டிரக்’கில் இருப்பவர்களைப் போய் சேர்ந்தது. அவரால் பிரிகேடியர் பிரகாஷ் என்று அழைக்கப்பட்டவர் ‘டிரக்’கிலிருந்து ஒரு டெலஸ்கோப்பை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டு சந்தர்பாலை கவனிக்க ஆரம்பித்தார். 

விரல் நுனிகள் லென்ஸை ஒடுக்கி தூரப்புள்ளியாய் தெரிந்தவரை சமீபமாக்கி விஸ்தரித்துக் காட்டத் தொடங்கியது, அது. அதே சமயம் பிரகாஷின் அந்த கூரிய பார்வையில் சந்தர்பாலின் தலைக்கு மேலே கறுப்பாக புகை போல சில உருவங்கள் பறக்கின்ற மாதிரியும் இருந்தது. 

“மைகாட்…” பிரகாஷ் உதடிரண்டும் பதறின. 

“என்ன மிஸ்டர் பிரகாஷ்…?”- மேஜர் பிரதாப் அருகே இருந்துகொண்டு கேட்டார். 

“ஒண்ணுமில்ல… கறுப்பா சில உருவங்க மேஜர் சந்தர்பால் தலைக்கு மேல வவ்வால் மாதிரி பறந்துகிட்டு இருக்கு பிரதாப்…”. 

“கொண்டாங்க…” – பிரதாப் அந்த டெலஸ்கோப்பை வாங்கிப் பார்த்தார். அவர் பார்த்தபோது பாறை மேல் நின்றுகொண்டிருந்த சந்தர்பாலைக் காணவில்லை. கறுப்பு உருவங்களும் தெரியவில்லை. 

“ஏன் பிரகாஷ் சந்தர்பாலையே இப்ப பார்க்க முடியலையே…?” 

“அங்கதானே நின்னுகிட்டிருந்தாரு…?”

“இல்லையே… பாருங்க…” 

டெலஸ்கோப் திரும்ப கை மாறியது. பாறைதான் தெரிந்தது. அதே நேரம் வானவெளியில் யாரோ அவசரமாகக் கூப்பிட்ட மாதிரி திமுதிமுவென்று கருமேகக் கூட்டம் வரத் தொடங்கி – ஒரு மின்னல் சவுக்கும் சொடேர் என்றது. 

“ஓ.. திஸ் இஸ் மான்சூன் ரைன். இவ்வளவு அடர்த்தியா வந்தா மழை ரொம்ப பலமாக இருக்கும்னு அர்த்தம். இப்ப பார்த்து இந்த ஆள்வேற போய்த் தொலைஞ்சுட்டாரே…?” 

பிரகாஷ் பதற – மழையும் திடமான நீர்ச் சொட்டுகளாக தரை இறங்கி – மொத்தமாக அவர்களை ஆக்கிரமிக்கப் பார்த்தது. 

“சார்… இனியும் இங்க இருக்கறது ஆபத்து… நிலச்சரிவு ஏற்பட்டா பனி நம்மை அப்படியே மூடிடும்..” 

“ஓ.கே. கிளம்புங்க… கமான் குவிக்!” 

அவர்கள் திரும்பவும் ‘டிரக்’கினுள் அடங்க – ‘டிரக்’ அங்கிருந்து மீண்டும் சீறத் தொடங்கியது. பிரதாப் சொன்னது போலவே நூறு யானைகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட மாதிரியொரு இடி சப்தம். மின்னல் ஒன்று ஒரு பனி மேல் ஈட்டிபோல் இறங்க – அப்படியே ஒரு ராட்சஸப் பாளம் பெயர்ந்து சரிய, ஓடும் ‘டிரக்’கின் பின்புறம் திபுதிபுவென்று பனிக்கட்டிகள் ஓடி வந்து விழுந்து குவிந்தன. 

அவர்கள் அத்தனை பேர் கண்களும்கூட முட்டை போல அகண்டு போயின. 

“சந்தர்பால் அவசரப்பட்டுட்டார்… நாம அவரை இழந்துட்டோம்…” 

‘டிரக்’கினுள் பிரதாப் கைகளைக் குத்திக்கொண்டார்! ‘டிரக்’கும் முடிந்த வேகத்தில் இருந்தது. பல இடங்களில் பனிப் பாளங்களின் மேல் ஏறி அப்படியே ஆழ அமிழ்ந்து சேற்றில் சிக்கிக்கொண்ட மாதிரி பற்றுதல் இன்றிச் சுழன்று – பின் எப்படியோ ‘கிரிப்’ கிடைத்து உருண்டது. 

ஏறத்தாழ ஒரு பத்து கிலோ மீட்டர் தூரம் வரை வந்த பிறகு ஓரளவு சமதளத்தை அடைந்து – நிலப்பரப்பும், அங்கங்கே புற்களோடு கண்ணில்பட்டது. 

‘டிரக்’கை நிறுத்தச் சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தபோது, ஷிகாரா மலையே தெரியாதபடி மழை மேகங்கள் அதை மூடியிருந்தன. 

எல்லோரும் அமிலத்தைச் சப்பினது போன்ற முகபாவங்களில் இருக்க – சந்தர்பாலுக்காக ‘ஜீசஸ்’ என்றபடி சிலுவை போட்டுக்கொண்டான் ‘டிரக் டிரைவர். 

ஆனாலும் நிசப்தம்! 

“இன்னிக்கு நடக்கப்போறது ‘பேர்வெல் பார்ட்டி இல்ல, சந்தர்பாலுக்கான நினைவாஞ்சலி கூட்டம். கமாண்டர் நம்மளை எல்லாம் காச்சி எடுக்கப் போறாரு. என் ‘ரெக்கார்டு’ல ஒரு கரும்புள்ளியும் விழப்போகுது.” 

பிரதாப் குரலில் வருத்தம் நசுக்கிக்கொண்டு வெளிப்பட்ட போது, அவர்கள் காதில் சன்னமாக ஒரு கொரட்டுச் சப்தம். 

சப்தம் வந்த திக்கில் எல்லோர் பார்வையும் திரும்பியது. புத்த பிட்சு ஒருவர் தன் இடக்கரத்தில் பிட்சுகள் பூஜை செய்யும் கவண்கல் போல சுழற்றிச் சப்தமெழுப்பும் கொரட்டுக் குச்சி ஒன்றைப் பிடித்து, அதை சுழற்றியபடியே நடந்து கொண்டிருந்தார். 

அந்துவான பனிமலைக் காட்டில் – கழுத்தை வளைத்துக் கட்டியிருந்த காவி வேட்டியோடும், மொட்டைத் தலையோடும் அவர் இருந்தார். 

அந்த மலைக்காட்டில் அங்கும், இங்குமாக புத்த பிட்சுகளின் ஆன்மாலயங்கள் உண்டு. சீன பாணியிலான கூம்புக் கூரையோடு கூடிய புத்தர் கோவில்களும், பிட்சுகள் தங்கும் விகாரங்களும் கூட சில இடங்களில் இருந்தன. 

பிட்சுகளும் ஏகாந்தமாய் மலைச் சித்தர்கள் போல குளிரோ, மழையோ எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்கிற மாதிரி திரிவார்கள்… 

இதெல்லாம் அங்கே காவலில் இருக்கும் ஜவான்களுக்கு புதியதே அல்ல. இருந்தாலும் மழை வளைத்துப் பிடித்திருக்கும் ஷிகாரா குன்று நோக்கி அந்த பிட்சு நடந்து செல்வது, ‘டிரக்’கில் இருக்கும் வீரர்கள் மனதில் ஆச்சரியத்தையும், கிலியையும் மூட்டின. 

பார்த்துக்கொண்டே நின்றார்கள். 

அந்த பிட்சுவும் ஒரு கட்டத்தில் கண்களைவிட்டு மறைந்து விட்டார். 

‘டிரக்’ மீண்டும் புறப்பட்டது! 

– தொடரும்…

– ராணிமுத்து, நவம்பர் 1, 2009.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *