வாசல் தேடி வந்த வசந்தம்
கதையாசிரியர்: கல்பனா ராஜகோபால்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
இணைய வெளியீடு: November 10, 2026 முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 164
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2
திரும்பி வந்த இரத்தப் பந்தம்

முப்பது வருடங்களாக மூடிக்கிடந்த ஒரு கதவு… அந்தக் காலிங் பெல் சத்தத்தில் திறக்கப் போகிறது…
காலிங் பெல் அடித்த சத்தம் கேட்டு எழுந்து வந்து கதவைத் திறந்த வெங்கட்ராமன் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டார்.
“லஷ்மி… இங்க வந்து பாரு… உன் பேரன் வந்திருக்கான்!” என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.
“யாரு… நம்ம கோபியா?” என்று கேட்டவாறே சமையலறையிலிருந்து வெளியே வந்த லஷ்மி, பேரன் கோபியையும், தன் மகள் அச்சில் வார்த்தது போல இருந்த அந்தப் பெண்ணையும் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டார்.
“என்னடா கோபி… யாருடா இந்தப் பொண்ணு?” என்று கேள்விகளை அடுக்கினார்.
“தாத்தா… பாட்டி… முதல்ல நீங்க ரெண்டு பேரும் என்னை… இல்லை… எங்களை மன்னிச்சுடுங்க…” என்றவாறு இருவரும் அவர்கள் காலில் விழுந்து வணங்கினர்.
“என்னப்பா கோபி… என்னாச்சு? எதுக்கு மன்னிப்பு கேக்கறே?” என்று பதறியபடி கேட்டார் வெங்கட்ராமன்.
“தாத்தா… நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். இது பத்தி நான் ரொம்ப நாளா யோசிச்சுத்தான் இந்த முடிவு எடுத்தேன்.”
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், அருகில் நின்றிருந்த பெண்ணைப் பார்த்துவிட்டு மெதுவாகச் சொன்னான்.
“இது வேறு யாருமில்லை… உங்க சொந்தப் பேத்திதான்… நம்ம கவிதா அத்தையோட ஒரே பொண்ணு…”
அந்த ஒரு வார்த்தை வீட்டையே அமைதியில் ஆழ்த்தியது…
வெங்கட்ராமனின் கண்கள் அந்தப் பெண்ணின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன. பல வருடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு முகம் மீண்டும் தன் முன் நிற்பது போல இருந்தது. வயது மாறியிருந்தாலும், அந்த முகத்தில் இருந்த சாயல் மட்டும் மாறவில்லை.
லஷ்மியின் கைகள் நடுங்கின.
“கவிதா…” என்று தன்னையும் அறியாமல் உதடுகள் அந்தப் பெயரை உச்சரித்தன.
அந்தப் பெண்ணின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
“பாட்டி… நான் ராகவி… உங்க மகள் கவிதாவோட பொண்ணு…” என்று மெதுவாகச் சொன்னாள்.
அந்தப் பெயரைக் கேட்டதும் லஷ்மியின் கண்களில் தேங்கியிருந்த பல வருட வேதனைகள் கண்ணீராக வெளியேறின. அருகில் சென்று ராகவியின் முகத்தை வருடியபடி,
“என் மக கவிதாவோட பொண்ணா நீ? எம்பொண்ணுக்கு பிறந்தது ஆணா, பெண்ணான்னு கூட தெரியாம இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கேன். அவங்க எப்படி இருப்பாங்களோன்னு எத்தனை நாள் நினைச்சி அழுதிருக்கேன் தெரியுமா?” என்று கதறினார்.
ராகவியின் கைகளைப் பிடித்துக் கொண்ட லஷ்மி,
“இத்தனை வருஷம் கழிச்சு என் பேத்தி என் வாசல் தேடி வருவான்னு கனவுல கூட நினைக்கலம்மா…” என்று கண்ணீருடன் கூறினார்.
கோபி மெதுவாகச் சிரித்தபடி,
“பாட்டி… இது முடிவு இல்ல… ஆரம்பம். நம்ம குடும்பம் மறுபடியும் தொடங்குற நல்ல நாள்…” என்றான்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட வெங்கட்ராமனின் கண்களிலும் கண்ணீர் நிறைந்தது. ஆனால் அந்தக் கண்ணீரில் பல வருட வலி இல்லை… பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்த நிம்மதியும் சந்தோஷமும் மட்டுமே இருந்தது.
என்ன பேசுவது என்று தெரியாமல் நின்ற வெங்கட்ராமன், மெளனமாக கோபியைப் பார்த்தார்.
“தாத்தா… நான் உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லணும். இத்தனை நாள் நம்ம வீட்டில் சொல்லப்படாத பேசப்படாத ஒரு உறவு இருக்கு. அதை மீண்டும் சேர்க்கணும்னுதான் ராகவியை அழைச்சிட்டு வந்தேன்.”
வாசலில் நின்றிருந்த அந்த இருவரோடு சேர்ந்து, பல வருடங்களாக மூடிக்கிடந்த உறவின் கதவும் மெதுவாகத் திறக்க ஆரம்பித்தது…
– தொடரும்…
![]() |
பெயர்: கல்பனா ராஜகோபால்வயது: 56எழுதிய சிறுகதைகள்: 25பிரசுரமானவை: 12 கல்கி/மங்கையர் மலர் ஆன் லைன்: 11 கதைகள் கல்பனா ராஜகோபால் ஆரம்ப எழுத்தாளரான நான் கடந்து ஒரு வருட காலமாக கட்டுரைகள் மற்றும் கதைகளை கல்கிக்கு எழுதி வருகிறேன்.மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆத்தா…. நான் பாஸ் பண்ணீட்டேன்..!
வளர்கவி
November 10, 2026
மலரும் சுமைதானடி
இரஜகை நிலவன்
November 10, 2026
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
November 10, 2026
