கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 169 
 
 

(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் – 7

மண்டியிலிருந்து சீக்கிரமே திரும்பிவிட்ட சர்மா, “தயாராயிருக்கிறாயா, சுந்தர்?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார். 

“பெட்டி படுக்கையெல்லாம் கட்டி வைத்துவிட்டேன்; புறப்பட வேண்டியதுதான்!” என்றான் சுந்தர். 

“கையில் பணம் வைத்திருக்கிறாயா?” என்று கேட்டார் சர்மா. 

“ஐம்பத்தைந்து ரூபாய் இருக்கிறது. அப்பா இருபத் தைந்து ரூபாய் கொடுத்தார்; சோடா பாக்டரிக்கு போர்டு எழுதிக் கொடுத்ததில் கிடைத்த முப்பது ரூபாயும் அதனுடன் சேர்ந்து இருக்கிறது” என்றான் சுந்தர். 

”வருமானத்தோடுதான் கிளம்புகிறாய் என்று சொல்! ம், நான் ஏதாவது கொடுக்கட்டுமா?” 

“வேண்டாம், மாமா! உங்கள் ஆசீர்வாதம் போதும்” என்ற சுந்தர், அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தான். 

“என் ஆசிர்வாதம் நிறைய இருக்கிறது. பட்டணவாசம் புதுசு உனக்கு. துர்ச்சகவாசம் எதுவும் வைத்துக்கொள்ளாதே! எந்தக் கஷ்டங்கள் வந்தாலும் நேர்மையாக நடந்துகொள். அடிக்கடி கடிதம் போடு இந்தா, இந்தக் கம்பராமாயணத்தை கையோடு எடுத்துக்கொண்டு போ! மனம் சோர்வடைகிற போது இதை எடுத்துப் படி; கவலைகள் தீர்ந்து போகும்!” என்று கூறிப் பார்சலாகக் கட்டியிருந்த அப் புத்தகத்தை அவனிடம் கொடுத்தார் அவர். சுந்தரம் அதைப் பெற்றுக் கொண்டு புன்சிரிப்புடன் சர்மாவைப் பார்த்தான். 

“என்ன பார்க்கிறாய்? ராமாயணம் படித்தால் கவலைகள் எப்படித் தீரும் என்றுதானே யோசிக்கிறாய்? ராமனுடைய கஷ்டங்களைப் படிக்கும்போது அவனைக் காட்டிலும் நாம் என்ன கஷ்டப்பட்டு விட்டோம் என்று ஓர் ஆறுதல் ஏற்படும். அதுவே நம் கவலையைத் தீர்க்கும்” என்றார் சர்மா. 

”போய் வருகிறேன், மாமா!” என்று சுந்தரம் விடை பெற்றுக் கொண்டபோது, அவனுக்கு இதயத்தின் அடிவாரத் திலிருந்து துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது. 

“சாயபு, சுந்தரை ஜாக்கிரதையாகக் கொண்டுபோய் ரெயிலேற்றிவிட்டு வா!” என்றார் சர்மா. சுந்தர் வண்டியில் ஏறுமுன் காவேரிப் பாட்டியிடம் சொல்லிக்கொள்ளும் சாக்கில் உள்ளே போனான். சகுந்தலா அங்கே கண்ணீரும் கம்பலையுமாக நின்று கொண்டிருந்தாள். 

“போயிட்டு வரேன், பாட்டி!” என்று சொல்லிக் கொண்டு புறப்பட்ட சுந்தரின் தொண்டையிலிருந்து ‘வரேன், சகுந்தலா!’ என்று கிளம்பிய வார்த்தைகள் வெளியே வராம லேயே தடைப்பட்டு நின்றுவிட்டன. தலை குனிந்தவாறே வாசலுக்குப்போய் வண்டியில் ஏறிக்கொண்டான். இதயமில் லாத வண்டி மீண்டும் அந்த இரு இளம் உள்ளங்களையும் பிரித்துவிட்டுப் புறப்பட்டது. 

வாசலில் வந்து நின்ற சகுந்தலாவுக்கு உலகமே தன் கால் களிலிருந்து நழுவி ஓடுவதைப்போல் இருந்தது! 


அதே ராணிப்பேட்டை ஸ்டேஷன். 

மனைவியிடம் சொல்லிக்கொண்டு சென்னைக்குப் போய்க் கொண்டிருந்த வழிப்போக்கன் சுந்தரம், பாலாற்றங்கரைக்கு வந்தபோது தன்னுடைய பால்ய வயது நினைவுகளில் லயித்த வனாய்த் தன்னை மறந்து தன் கையிலிருந்த பையை விளா மரத்தடியில், பிள்ளையார் கோயிலுக்கு எதிரிலேயே வைத்து விட்டு வந்துவிட்டான் அல்லவா? ஸ்டேஷன் வரை நடந்து வந்துவிட்ட பிறகுதான் அவனுக்குச் சுய நினைவு வந்தது. 

கையிலிருந்த பையைக் காணாமல் துணுக்குற்றவனாய், “அட்டா! பிள்ளையார் கோயிலுக்கு எதிரில் அல்லவா மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன்? இனி திரும்பிப் போனாலும் அது கிடைப்பது நிச்சயமில்லையே! குழந்தைக்கு வெள்ளி அரை ஞாண் செய்துபோட வேண்டும் என்று வைத்திருந்த பதினைந்து ரூபாயைச் சாப்பாட்டு டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்என்று அவள் என்னிடம் கொடுத்தனுப்பினாள். எனக்கு அது கிட்ட வில்லை. என்னைக் காட்டிலும் கஷ்டப்படுகிறவர்கள் யாருக் கேனும் அது போய்ச் சேரவேண்டும் போலிருக்கிறது. அதனா லேயே நான் அதை அங்கேயே மறந்து வைத்துவிட்டு வந்திருக் கிறேன். பாவம், யாருக்காவது அது உபயோகப்படட்டும். தகுதியுள்ள ஓர் ஆசாமியிடம் பிள்ளையார் அதைச் சேர்த்து விடுவார். ஆனால், இப்போது நான் சென்னைக்குப் போய்ச் சேர ரெயிலுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமே! பணத்துக்கு என்ன செய்வது? ஒரு வழியும் புரியவில்லையே!” என்று தவித்துக் கொண்டிருந்தான் வழிப்போக்கன் சுந்தரம். 

அப்போது சற்றுத் தூரத்தில் இருந்த மைதானத்தில் இருந்து ஒலி பெருக்கியின் மூலம் வந்துகொண்டிருந்த ஒரு பிரசங்கியின் கணீரென்ற குரல் சுந்தரத்தின் செவிகளில் தேனாகப் பாய்ந்தது. ஆம்; அது அவனுடைய நண்பனின் குரல் தான்! 

வழிப்போக்கன் சுந்தரம் முகம் மலர, அகம் குளிர, குரல் வந்த அந்தத் திக்கை நோக்கி நம்பிக்கையுடன் நடந்தான். 


ஆயிற்று; அப்படியும் இப்படியும் ஒரு மாதம் ஓடியே போய்விட்டது. கையிலுள்ள பணம் இன்னும் ஒரு வேளைக்குத் தான் காணும். அப்புறம்? பட்டணத்து நடைபாதையில் தவிக்கும் எத்தனையோ அனாதைகளைப்போல் தானும் நடுத் தெருவில் நிற்க வேண்டிய நிலை வந்துவிடுமோ? சுந்தரம் கண் களில் நீர் சுரந்துவிட்டது. 

இந்த ஒரு மாத காலமாக அவன் சென்னையில் அலையாத இடமே இல்லை. போர்டு எழுதிப் பிழைத்துவிடலாம் என்று நம்பிக்கொண்டு வந்த அவனுக்கு நேர்மாறான அனுபவமே கிட்டியது. எங்கே போய்க் கேட்டாலும், இப்போது வேண்டாம்’ அல்லது ‘இப்போதுதான் எழுதினோம்’ என்ற இரண்டு விதமான பதில்களே கிடைத்தன. அவர்களாகத் தேடிக்கொண்டு வந்து கொடுக்க வேண்டிய ஒரு வேலையை நாமாகத் தேடிச் செல்லும்போது வேறு என்ன பதிலை எதிர் பார்க்க முடியும்? 

நாளை ராயருக்கு ரூம் வாடகை கொடுத்தாக வேண்டும். இன்றே அவர் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுப் போய்விட் டார். கையிலிருப்பதோ பத்தணாதான். ஆமாம், பத்தே அணா! 

எங்கேயாவது போய், யாரையாவது கேட்டு, எப்படி யாவது ஒரு போர்டுக்கு ஆர்டர் பிடித்துக்கொண்டு வந்தே தீருவதென்ற திட சங்கல்பத்துடன் அந்தப் பத்தணாவை எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினான் சுந்தரம். 

கால் நடையாகவே பெல்ஸ் ரோடு வழியாகச் சென்று வாலாஜா ரோடில் திரும்பினான். அப்போது யாரோ கை தட்டிக் கூப்பிடும் சத்தம் கேட்ட சுந்தரம் திரும்பிப் பார்த் தான். அவனை அழைத்தது ஒரு போலீஸ்காரர்; “இங்கே வா!” என்று கூப்பிட்ட அவர் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்று கொண்டிருந்தார். சுந்தருக்குத் தூக்கி வாரிப் போட்டது. 

“உன்னைத்தாம்பா, இங்கே வா!” போலீஸ்காரர் சற்று அதிகாரமாகவே கூப்பிட்டார். 

சுந்தரம் பயந்தபடியே ஸ்டேஷனுக்குள் சென்றான். அவனைப் பின்தொடர்ந்து வந்த கான்ஸ்டேபிள் தன் கேள்விக் கணைகளைத் தொடுத்தார். 

“எங்கிருந்து வரே?” 

“திருவல்லிக்கேணியிலிருந்து.”

“எங்கே போறே?” 

“தங்கசாலைத் தெருவுக்கு.”
 
“இன்னா வேலை செய்யறே?” 

“ஒண்ணுமில்லை!” 

“ஆள் வாட்டசாட்டமாகத்தான் இருக்கே, இப்படி வந்து நில்லு!” 

சுந்தரம் அவன் காட்டிய இடத்தில் நின்றான். 

“கை இரண்டையும் மேலே தூக்கு!” 

சுந்தரம் கைகளை உயர்த்தினான். 

“மூச்சை உள்ளுக்கிழுத்து ‘டம்’ பிடி!” 

சுந்தரம் மூச்சை அடக்கினான். 

“சரி, மூச்சை விடு!” 

மூச்சை விட்டான். 

“குனிந்து கால் கட்டை விரலைத் தொடு!” 

தொட்டான். 

“உன் விலாசம் என்ன?” 

சொன்னான். 

“போட்டோ வெச்சிருக்கிறாயா?” 

“இல்லை.” 

“சரி, உள்ளே போ!” 

சுந்தரம் விழித்தான். 

“போப்பா, உள்ளே!” 

“உள்ளேயா! நான் ஒரு தப்பும் செய்யலையே?” 

சுந்தரம் கெஞ்சினான். 

“உள்ளே போய் அந்தப் பெஞ்சியிலே உட்காரு. இன்ஸ்பெக்டர் வந்ததும் விசாரிப்பாரு. மத்தியானம் சாப்பாடு உனக்கு இங்கேதான்!” 

சுந்தருக்குத் துக்கம் துக்கமாக வந்தது. 

“ஏன் பயப்படறே? பயப்படாதே! உனக்கு நல்ல பர்சனாலிடி இருக்குது; போலீசிலே சேர்ந்துடு; ஹெட் கான்ஸ்டேபிளாக்கூட ஆவலாம், என்ன படிச்சிருக்கே நீ” 

“ஐந்தாவது பாரம்!” 

“அடேயப்பா! அவ்வளவு படிப்பு அதிகம் இதுக்கு. என்ன சொல்றே? சேர்ந்துக்கிறியா? இப்போ ஆள் எடுக்கிறங்கள் அப்புறம் இந்தச் சான்ஸ் கெடைக்காது. சொல்லிட்டேன்!” 

சுந்தருக்குப் போன உயிர் திரும்பி வந்தது. ஒருகணம் போலீசில் சேர்ந்து விடலாமா என்று சபலம் தட்டியது. ஆனாலும் அடுத்த கணமே அவ்வெண்ணத்தை மாற்றிக் கொண்டான். 

“வீட்டிலே உள்ள பெரியவங்களைக் கேட்டுக்கொண்டு வந்து அப்புறம் சேருகிறேன்; இப்போது நான் போகிறேன்” என்றான் சுந்தரம். 

“சரி, அப்புறம் உன் இஷ்டம். உன்னை இன்ஸ்பெக்டர் பார்த்தா அப்படியே கவ்விக்குவாரு!” என்றான் கான்ஸ்டேபிள். 

‘தப்பினேன், பிழைத்தேன்’ என்று வெளியே வந்தான் சுந்தரம். 

அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள அவனுக்கு வெகு நேரமாயிற்று. 

“புறப்பட்ட வேளை சரியில்லை; நேரமும் ஆகிவிட்டது. அறைக்கே திரும்பிவிடுவது நல்லதென்று நடந்தான் சுந்தரம்: வீட்டை அடைந்தபோது வாசலில் ராயர் உட்கார்ந்திருந்தார். சுந்தரைக் கண்டதும், “இந்த மாச வாடகையைத் தரீங்களா?” என்று அவர் கேட்டே விட்டார். 

“தருகிறேன்!” என்று கூறிவிட்டு மாடிப்படி ஏறிச் சென்ற சுந்தரம், தன் அறைக்குப் போய் உட்கார்ந்து யோசிக்கலானான். 

அவன் மனம் குழம்பிப் போயிருந்தது.பசி ஒரு பக்கம்; “ராயருக்கு எப்படி வாடகை கொடுப்பது? நாளைச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது?” என்ற கவலை இன்னொரு பக்கம். 

“ஆண்டவனே! எனக்கு என்ன வழி காட்டப் போகிறாய்?” என்று உள்ளம் உருகக் கடவுளை வேண்டினான் அவன். 

“கஷ்டங்கள் வருகிறபோது கம்பராமாயணத்தை எடுத்துப் படி!” என்று சர்மா சொன்ன மணிமொழிகள் அவன் காதுகளில் ஒலித்தன. 

பார்சலாகக் கட்டப்பட்டிருந்த அந்தக் கம்பராமா யணத்தை எடுத்துப் பிரித்து, ஒவ்வொரு ஏடாகத் தள்ளிக் கொண்டே வந்தான். சுந்தர காண்டத்துக்கு வந்தபோது அவன் முகம் ஆச்சரியத்தால் மலர்ந்தது. 

என்ன அதிசயம்! அந்தப் பகுதியில் ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்கள் அடுக்காக வைக்கப்பட்டிருந்தன! சுந்தரத்தின் கஷ்ட காலத்துக்கு உதவட்டும் என்று சர்மாதான் அதை வைத்திருந்தார்! 

அத்தியாயம் – 8

சுந்தரம் தமிழ் போதினி காரியாலயத்தைத் தேடிச் சென்ற சமயம் அந்தப் பத்திரிகை முதலாளி தபாற்காரருடன் பேசிக்கொண்டிருக்கவே. சுந்தரம் வெளியிலேயே காத்திருந்தான். 

தபாற்காரர் வெளியே சென்றார். போஸ்ட்மேன் எப்போது போகப் போகிறார் என்று காத்துக்கொண்டிருந்த கம்பாசிட்டர் ஒருவர், அடுத்த கணமே முதலாளியின் முன் பிரசன்னமானார். 

“என்னய்யா, மணியார்டரைக் கண்டுட்டு வந்துட்டியா? போய் வேலையைப் பாருய்யா! எனக்குத் தெரியும், எப்பேய கொடுக்கணும்னு?”- இது முதலாளியின் குரல். 

“மூணு மாசமா சம்பளப் பாக்கி நிக்குதுங்களே? பத்து ரூபாயாவது கொடுங்க!”-இது கம்பாசிட்டரின் குரல். 

“முனுசாமிக்கு நாலு மாசச் சம்பளம் நிக்குதுய்யா! அவன் வாயைத் திறந்து கேட்கிறானா, பார்த்தாயா? என் குணம் தெரியும் அவனுக்கு. உனக்கு வேலை வேணுமா, பணம் வேணுமா?” 

“ரெண்டும்தான்!” 

“ரெண்டுக்கும் ஆசைப்பட்டா எப்படிய்யா முடியும்? ஆவட்டும் போ, நானே கூப்பிட்டுத் தரேன்!” 

கம்பாசிட்டர் உள்ளே சென்றதும் பேப்பர் கடை குமாஸ்தா வந்தார். பத்திரிகை முதலாளி சுருட்டை ஊ திக் கொண்டே, “வாய்யா, ராமானுஜுலு! காப்பி சாப்பிடறயா? எங்கே இவ்வளவு தூரம்?” என்றார். 

“உங்களைப் பார்க்கத்தான்; எங்க முதலாளி பார்த்துட்டு வரச் சொன்னாரு!” 

“என்னய்யா, விஷயம்? அதுதான் செக் கொடுத் துட்டேனே?” 

“அதை நீங்க போடச் சொன்ன தேதிக்கு ரெண்டு நாள் கழிச்சே போட்டோம்; பாங்கிலேருந்து திரும்பி வந்துட்டுது!” 

“அதான் தப்பு! அதையெல்லாம் சொன்ன டயத்துலே போட்டு வாங்கிடணும்யா! பிசினெஸ்னா அப்படித்தான். சரி அந்தச் செக்கைக் கொண்டா, இப்படி. இருநூறு ரூபாதானே? நாலு நாளில் நானே பணத்தை அனுப்பி வைக்கிறேன்!” 

“மறந்துடாதீங்க!” 

“மறக்கிறதாவது? நீ போய் வாய்யா!” 

அன்றைய நிலைமையைச் சமாளித்துவிட்ட திருப்தியுடன், மணியார்டரில் வந்த பணத்தை எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியே புறப்பட்டுக்கொண்டிருந்தார் அவர். 

அப்போதுதான் அவருக்கு எதிரேபோய் நின்றான் சுந்தரம். 

“யார் நீ?” 

“பெயிண்டர்! உங்க ஆபீஸ் போர்டு…” என்று இழுத் தான் சுந்தரம். 

“ஆமாம் பழசாப் போடுச்சு! வேறே புதுசா எழுதிகிட்டு வாயா? என்ன சார்ஜ் பண்ணுவே?” 

“என்ன கொடுத்தாலும் வாங்கிக்கறேன்!” என்றான் சுந்தரம். அந்தப் பத்திரிகையுடன் எப்படியாவது தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவனுடைய நீண்ட நாளைய அவா. அதற்கு வாய்த்துள்ள சந்தர்ப்பத்தை நழுவ விட மனம் இன்றியே ‘கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன்!’ என்றான் அவன். 

“சரி, போர்டை எடுத்துக்கிட்டுப் போ! சீக்கிரம் முடிச்சு கொண்டாரணும்!” 

“ஆகட்டும், அட்வான்ஸ் ஏதாவது..” 

”அட்வான்ஸா? உன்னை நம்பி போர்டைக் கொடுக்கிறேனே, அது போதாது?” 


போர்டைக் கழற்றிச் சென்ற சுந்தரம் ஒரே வாரத்துக்குள் அதை எழுதியும் முடித்துவிட்டான்; பணம்தான் கைக்கு வரவில்லை. 

‘நாளைக்கு, நாலு நாள் கழித்து, ஒரு வாரத்துக்கப்புறம். என்று எத்தனையோ கெடு வைத்தும்கூட சுந்தரம் திரும்பத் திரும்பச் சளைக்காமல் போய்க்கொண்டே இருந்தான். அந்த முதலாளிக்கே அவனிடம் ஒரு தயையும் தாட்சணியமும் பிறந்துவிட்டது. ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்தார். 

முழுப் பணம் வராதது பற்றிச் சுந்தரத்துக்கு ஒரு விதத் தில் மகிழ்ச்சியே! அந்தத் தாட்சணியத்தை வைத்துக் கொண்டு, முதலாளியிடம் இருந்து வேறொரு காரியத்தைச் சாதித்துக் கொள்ளச் சமயத்தை எதிர் நோக்கியிருந்தான் அவன். 

ஒரு நாள் அவர் ஒய்வாக உட்கார்ந்திருந்தபோது, “எனக்குச் சித்திரம்கூட வரையத் தெரியும். ஏதாவது படம் எழுதிக் கொடுத்தால் உங்கள் பத்திரிகையில் போடுவீர்களா?” என்று கேட்டான். 

“ஓ, எழுதிக்கிட்டு வாயேன்; போடறேன்!” என்றார் அவர். 

அவ்வளவுதான். அப்போதே மூர்மார்க்கெட்டுக்குச் சென்று பழைய இங்கிலீஷ் பத்திரிகை ஒன்றை விலைக்கு வாங்கி வந்து, அதிலிருந்த ஒரு சித்திரத்தைக் காப்பி அடித் துக்கொண்டு போய்க் கொடுத்து விட்டான் அவன். 

அடுத்த “தமிழ் போதினி” சஞ்சிகையை வாங்கிப் பிரித்த போது, என்ன ஆச்சரியம், சுந்தரம் எழுதிய படம் அதில் வெளியாகியிருந்தது! அதிசயம், ஆனால் உண்மை!’ என்ற பகுதியின் கீழ், தான் வரைந்த படம் வெளியாகியிருப்பதைக் கண்ட சுந்தருக்குத் தலை கால் புரியவில்லை; அன்றெல்லாம். கால்கள் தரையில் பாவாமல் அவன் ஆகாசத்திலேயே மிதந்து கொண்டிருந்தான். அந்த நிகழ்ச்சியே அவனுக்கு அதிசயம். ஆனால் உண்மையாக இருந்தது! 

“தமிழ் போதினி” பத்திரிகையைத் தன்னுடைய அறைக்கு எடுத்துக்கொண்டு போய், அதிலுள்ள தன் சித்திரத்தையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். தான் போட்டிருந்த கோடுகள் ஒவ்வொன்றும் அப்படி அப்படியே அதில் வந்திருப்பதைக் சுண்டபோது அவனுக்குப் பெருமை தாங்கவில்லை. ‘சுந்தர்’ என்னும் கையெழுத்துக்கூட அப்படியே பிரதியாகியிருந்தது. ஏதோ மகத்தான காரியத்தைச் சாதித்து விட்டது போன்ற ஒரு பர பரப்பும் ஆவேசமும் அவனை ஆட்கொண்டது. ‘இந்தச் சித்திரத்தை சகுந்தலா பார்த்தால் ஆச்சரியப்படுவாள்! என்று நினைத்த அவனுக்கு, உடனே அந்தப் பத்திரிகையோடு அப்படியே ஆற்காட்டுக்குப் பறந்துபோய் சகுந்தலாவுக்கு அதைக் காட்ட வேண்டும் போல் இருந்தது! 

இந்தச் சமயத்தில்’ ‘போஸ்ட்’ என்ற குரல் கேட்கவே, திரும்பிப் பார்த்தான். தபாற்காரர் அவனிடம் இரண்டு கடிதங்களைக் கொடுத்து விட்டுப் போனார். ஒன்று மஞ்சள் நிறக் கலியாண அழைப்பிதழ்; இன்னொன்று மாங்குடியி லிருந்து அவன் அப்பா எழுதிய கடிதம். முதலில் அந்த மஞ்சள் நிறக் கவரையே பிரித்தான். பிரித்தவன் சற்றுநேரம் அதையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றான்!” 

‘சகுந்தலாவுக்கும் சாம்பசிவத்துக்கும் அடுத்த ஞாயிற்றுக் கிழமை ஆற்காட்டில் திருமணம்!’ 

இதுதான் அந்த அழைப்பிதழில் அடங்கியிருந்த விஷயம். திடீரென்று வானமெங்கும் கருமேகங்கள் சூழ்ந்துகொண்டு, ஒளியும் காற்றும் ஸ்தம்பித்து விட்டதுபோல் தோன்றியது சுந்தருக்கு. துக்கத்தை அடக்க எவ்வளவோ முயன்றும், அவனையும் மீறிக்கொண்டு கண்ணீர்த் துளிகள் வெளிப்பட்டு விட்டன. 

‘சாம்பசிவம், சாம்பசிவம்’ என்று இரண்டு முறை அவன் உதடுகள் முணுமுணுத்தன. யார் இந்த சாம்பசிவம்? அந்தக் கறுப்புப் பையனா? சமையற்காரியின் மகனா? சகுந்தலா! உனக்கா இந்தத் தலைவிதி? அழகையே நாடும் உன் மனம் சாம்பசிவத்தை மணந்துகொள்ள எப்படித் துணிந் த்து?” 

அப்பாவின் கடிதத்தை எடுத்துப் பார்த்தான் அவன்.

“சுந்தருக்கு, ஆசீர்வாதம். 

நேற்று சர்மா இங்கே வந்தார். சகுந்தலாவுக்கு அடுத்த ஞாயிற்றுக் கிழமை ஆற்காட்டில் திருமணம் நடக்கிறது. என்னையும் உன் அம்மாவையும் கட்டாயம் கலியாணத்திற்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி அழைத்துவிட்டுப் போயிருக் கிறார். நாங்களும் போகிறோம். உனக்கும் அழைப்பு அனுப் புவதாகச் சொன்னார். ‘திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்படுதில்லை; பிறக்கும்போதே நிச்சயமாகி விடுகிற விஷயம்’ என்று சர்மா இங்கு வந்திருந்தபோது சூசகமாகச் சொன்னார். 

எங்களுக்கும் உன்னைப் பார்க்க வேண்டும்போல் இருக் கிறது. அவசியம் புறப்பட்டு வரவும். 

இப்படிக்கு,
கங்காதரய்யர். 


அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டான். சுந்தரம். கடற்கரை பக்கமாகவே நடந்தான். உள்ளச் சுமை அவனை அழுத்தியது; உடல் கனத்தது; உலகம் சூனிய மாய்க் காட்சி அளித்தது. எதிரே வந்த உருவங்கள் நீரில் கரைந்த சித்திரமெனத் தெளிவின்றிக் காட்சி அளித்தன. 

ஈர மணலில் கொஞ்ச தூரம் நடந்து போய் அலைகளுக் கருகே உட்கார்ந்து கொண்டான். உள்ளச் சுமை உடலைக் கனக்க வைத்ததால், கால் சுவடுகள் மணலில் ஆழமாகப் பதிந்தன. 

மனம் எதிலும் லயிக்கவில்லை; அவன் கைவிரல் மணலில் மூன்று பெயர்களை எழுதியது. 

சாம்பசிவம், சகுந்தலா, சுந்தரம் – திடுமெனச் சீறி வந்த அலை ஒன்று சாம்பசிவம் என்ற எழுத்தை அழித்துவிட்டுப் போய்விட்டது. இயற்கைக்கே பொறுக்கவில்லை இது’ என்று கூறியது அவன் உள்ளம்; அங்கே இருக்கப் பிடிக்காமல் எழுந்து நடந்தான். 


சகுந்தலா – சாம்பசிவம் திருமணம் இனிதே நடந்தேறி யது. விடியற்காலையில் இருந்தே கும்’மென்று காதை நிரப்பிக்கொண்டிருந்த மேள வாத்திய இசை ஓய்ந்து கலியாண வீட்டில் ஒருவித கலகலப்பும் சலசலப்பும் ஏற் பட்டன. முதல் பந்திக்கு வேண்டிய ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. புது மணத் தம்பதியர் பூ மாலையுடன் ஜோடியாகச்சென்று பெரியோர்களை வரிசைக்கிரமமாக நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டிருந்தனர். 

கங்காதரய்யரையும் பார்வதி அம்மாளையும் நமஸ்கரித்த போது, சகுந்தலாவின் கண்ணில் நீரே பெருகிவிட்டது; பார்வதி அம்மாளுக்கும் கூடத்தான்! 

சாப்பிட்டு முடித்த மறுகணமே சகுந்தலா மாடியறைக்குச் சென்று விட்டாள். இனி இரண்டு மணி வரை அவளுக்கு ஓய்வுதான். மணப் பந்தலில் உட்கார்ந்தபடியே சுந்தரின் வரவை எதிர்பார்த்து எதிர்பார்த்துப் பெரும் ஏமாற்றத்துக் குள்ளாகியிருந்தாள் அவள். 

மன அமைதியின்றிச் சுந்தரின் அறைக்குச் சென்றவள் கதவை ஒருகணித்துச் சாத்திக்கொண்டாள். கழுத்திலிருந்த மணமாலையைக் கழட்டி, சுவரிலிருந்த ஆணியில் மாட்டினாள். அப்போது அவளுடைய அடி வயிற்றிலிருந்து துக்கம் பொங்கி வுந்தது. அந்த இடத்தில்தான் சுந்தர் தன் சட்டையை மாட்டி வைப்பது வழக்கம். சோகத்தின் சிகரமாக, உணர்ச்சி களின் உறைவிடமாக, ஏமாற்றத்தின் சின்னமாக, ஏக்கத்தின் வடிவமாக, சுந்தரின் நாற்காலியில் அமர்ந்து கண்ணீர் உகுத் துக் கொண்டிருந்தாள் அப் பேதை! யாரோ கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரும் ஓசை; திரும்பிப் பார்த்தபோது… 

அவன் மவுனமாக வந்து அவளுக்கு எதிரேயிருந்த மேஜை மீது அமர்ந்துகொண்டான். 

“சுந்தர்!” 

அவனுடைய கைகளைப் பற்றிக் கொள்ளும் ஆவலோடு எழுந்தாள் அவள் அவளுடைய பிடியிலிருந்து விலகிக் கொண் டான் அவன்! 

“சுந்தர், நீ ஏன் நேற்றே வரவில்லை? உன்னைக் காணாமல் எவ்வளவு நேரமாக நான் அழுதுகொண்டிருக்கிறேன், தெரியுமா?” 

“ஏன் அழவேண்டும்? உனக்குப் பிடித்த கணவனாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட பிறகு, என் வரவை எதற்காக நீ எதிர்பார்க்கிறாய்?” 

“சுந்தர், என்னை வாள் கொண்டு அறுக்காதே! தாத்தா வாகப் பார்த்து முடிவு செய்த பிறகு, நான் என்ன செய்ய முடியும்?” 

”உன் தாத்தாவுக்கு என்மீது என்ன வெறுப்பு? அவருக்கு நான் என்ன துரோகம் செய்துவிட்டேன்?” 

“உன் ஜாதகம் சரியில்லையாம்; உனக்கு ஆயுள் பலம் இல்லையாம். ஆனால், அதை வெளியே சொல்ல இஷ்டப்பட வில்லை அவர். என் அப்பாவுக்குக்கூட இந்தத் திருமணத்தில் கொஞ்சமும் சம்மதமில்லை. அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். தாத்தாதான் ஒரே பிடிவாதமாக இருந்துவிட் டார். அவரை மீறி அப்பாவால் ஒன்றுமே செய்ய முடியவில்லை சுந்தர், காப்பி சாப்பிட்டாயா?” 

“எனக்கு ஒன்றும் வேண்டாம்!” 

“உன் கையிலே என்ன அது?” 

“உனக்குக் கலியாணப் பரிசு கொண்டு வந்திருக்கிறேன்!”

“எங்கே?” 

சகுந்தலா ஆவலுடன் அதை வாங்கிப் பார்த்தாள். 

“நீ வரைந்த படமா அது? எவ்வளவு அழகாயிருக்கிறது! இயற்கைக் காட்சியா?” என்றாள் அவள் மகிழ்ச்சியுடன். 

“இல்லை; செயற்கைக் காட்சி!” என்றான் சுந்தர் வெறுப் புடன், 

அந்தப்படத்தில் மூன்று மரங்கள் இருந்தன. 

ஒன்று அரசமரம், மற்றொன்று வேப்புமரம், இன்னொன்று கலியாண முருங்கை மரம். 

அரசமரத்துக்கும் வேப்பமரத்துக்கும் இடையே ஒரு வேலி இடையிலிருந்த வேம்பு புதிதாக முளைத்த கலியாண முருங்கை மரத்தைத் தழுவிக்கொண்டிருந்தது. அந்தச் சித்திரம் சகுந்தலாவின் இதயத்தைத் தாக்கியது. 

“நான் வருகிறேன், சகுந்தலா!” சுந்தர் எழுந்து நடந்தான்.

“சுந்தர்!” 

சகுந்தலா வாய்விட்டுக் கூவிவிட்டாள். அங்கே அவனைக் காணவில்லை; அவன் வரவேயில்லை. இத்தனை நேரமும் அப்படி ஒரு பிரமை! 


காலையில் அவசரமாகப் புறப்பட்டுச் சென்ற சுந்தரம் பார்க் டவுன் கந்தசாமிக் கோயில் பக்கம் சென்றான். ஞாயிற்று கிழமையானதால் அங்கே உள்ள பெயிண்டு ஷாப்புகள் அத்தனையும் மூடிக் கிடந்தன. மறுபடியும் டிராம் வண்டியைப் பிடித்துத் திருவல்லிக்கேணிக்குப் போய்ச் சேர்ந்தான். அதற்குள் மணி பதினொன்று ஆகிவிடவே, நல்ல பசி எடுத்து விட்டது. எனவே, வழக்கமாகச் சாப்பிடும் ஓட்டலுக்குச் சென்று, இலைக்கு முன்னால் உட்கார்ந்தான் அவன். சாப்பிடும் போது அவன் மனமெல்லாம் ஆற்காட்டிலேயே இருந்தது. 

“இந்த நேரத்தில் முகூர்த்தம் முடிந்து, எல்லோரும் வடை பாயசத்துடன் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்!” என்று எண்ணிக் கொண்டான். 

“சார், பாயசம் போடட்டுமா?” 

ஓட்டல் சர்வர் பாயசத்தை இலையில் பரிமாறினான்.

“பாயசமா! இன்றைக்கு என்னப்பா விசேஷம்?” 

“ஸ்பெஷல் சார்! சண்டே ஸ்பெஷல்!” என்றான் அவன்.

“பாயசம் எனக்குப் பிடிக்காது!” என்று கூறிய சுந்தர், அதை ஒதுக்கிவிட்டுச் சாப்பாட்டை அவசரமாக முடித்துக் கொண்டு எழுந்துவிட்டான். 

நேராகத் தன் அறைக்குச் சென்று படுத்தவன்தான்; அன்றெல்லாம் ஒரு வேலையும் ஓடவில்லை அவனுக்கு. 

சாயந்திரம் கடற்கரைக்குப் போய்விட்டு வந்து மீண்டும் படுத்துக்கொண்டான். புரண்டுப்புரண்டு படுத்ததுதான் மிச்சம்; தூக்கம் எப்படி வரும்? 

திடீரென்று வாசலில் நாதசுவர இசை கேட்கவே, படுக்கையைவிட்டு எழுந்து போய்க் கீழே எட்டிப் பார்த்தான். 

காஸ் லைட் வெளிச்சத்தில் நாதசுவர இசை முழங்க, ஆடவரும் பெண்டிரும் சூழ்ந்து வர, கலியாண ஊர்வலம் ஒன்று மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. காருக்குள் மணப் பெண்ணும் மாப்பிள்ளையும் உட்கார்ந்து இருந்தனர்.அவர்களை சுற்றிலும் துளி இடம்கூட இல்லாதபடி வாண்டுகளின் கூட்டம்! பெண்கள் சூடியிருந்த மலர்களின் நறுமணம் ஜம்மென்று காற்றிலே மிதந்து வந்தது. அந்த மணத்தை நுகர்ந்தபோது, அன்றொரு நாள் சகுந்தலா முல்லைமொட்டால் தன்னைச் சீண்டி விளையாடிய காட்சி அவன் நினைவுக்கு வந்தது. 

“இந்த நேரத்தில் ஆற்காட்டிலும் ஊர்வலம் நடந்து கொண்டிருக்கும்!” 

சுந்தரம் பெருமூச்சு விட்டான். அந்த மூச்சில் எத்தனையோ இன்ப நினைவுகளும், இன்ப நிகழ்ச்சிகளும் பொதிந்து கிடந்தன! 


சுந்தரம் ‘தமிழ் போதினி’ காரியாலயத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, வழக்கம்போல் நாலைந்து கடன்காரர்களுக்குச் ”சால்ஜாப்பு’ சொல்லிக்கொண்டிருந்தார் அந்தப் பத்திரிகை யின் முதலாளி. கடன்காரர்களுக்குப் பதில்கூறி அனுப்புவதில் அவருக்கு நிகர் அவரேதான்! 

சுந்தரைக் கண்டதும் அவர், “என்ன சுந்தர், ஏதாவது படம் எழுதிக்கிட்டு வந்திருக்கிறாயா?” என்று கேட்டார். 

“ஆமாம், சார்!” 

“எங்கே, காட்டு பார்க்கலாம்?” சுருட்டுப் புகையை ஒரு முறை உறிஞ்சி ஊதினார்; பிறகு, சுந்தர் கொடுத்த படத்தை வாங்கிப் பார்த்தார். புருவத்தைச் சுளித்துக்கொண்டே, ரொம்ப நல்லாயிருக்குதே!” என்றார். அவர் ரசிக்கிற விதம் அப்படித்தான். 

“இண்டியன் இங்க்கும், டிராயிங் பேப்பரும் சரியில்லே!” இழுத்தான் சுந்தர். 

அதெல்லாம் நானே வாங்கித் தரேன் உனக்கு; நீ எத்தனை படம் வேணும்னாலும் எழுது; கவலைப்படாதே!” என்று உற்சாகப்படுத்தினார் அவர். 

“உங்களை இன்னொரு விஷயம் கேட்கணும்னு…” “என்ன அது?’ 

“உங்க ஆபீசிலேயே என்னை ஒரு ஆர்ட்டிஸ்ட்டா சேர்த்து கொண்டால்……” 

“சேர்ந்துக்கயேன்! இப்பவே வேணும்னாலும் சேர்ந்துக்க!” சுந்தருக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. “நிஜமாகத்தான் சொல்றீங்களா?” 

“இதிலே என்ன விளையாட்டு? நிஜமாத்தான் சொல்றேன்; உன் மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் எனக்குத் தேவைதான்!” 

“ஆரம்பத்திலே என்ன கொடுப்பீங்க?” 

“அம்பதுதான் கொடுப்பேன்!போகப்போக உன் வேலை யைப் பார்த்துக் கூட்டுவேன். நூறு, இருநூறுகூடக் கொடுப் பேன். எல்லாம் உன் திறமையிலே இருக்கு.” 

“அம்பது ரூபாயா? அதிகம் சார்!” 

“ரூபாயா! யார் சொன்னது ரூபாய்ன்னு? அம்பது பிரதி தமிழ் போதினி’ கொடுப்பேன்னு சொன்னேன். ஒண்ணு நாலணாவாச்சே? மாசத்துக்கு இரண்டு முறை வருது நம்ம பத்திரிகை. ஆக, மாசம் நூறு பிரதி கிடைக்கும் உனக்கு. அந்த நூறையும் கொண்டுபோய்க் கடைகளிலே விற்றுக்கலாம். கடைக்காரன் கமிஷன் போக உன் கைக்கு எப்படியும் இருபது ரூபா ‘நெட்’ டாக் கெடைச்சுடும்” என்றார் முதலாளி, 

சுந்தரம் அவரை வெறிக்கப் பார்த்தான். 

“ஏன் அப்படிப் பார்க்கிறே? பத்திரிகை ஆபீசிலே பணமா கண்ணாலே பார்க்கிறது ரொம்பக் கஷ்டம். என் கைக்கே அது சிக்கறதில்லையே, இந்தக் கடன்காரனுங்க எங்கே விட்டு வைக்கிறானுங்க?” 

சுந்தரம் வேலையை ஒப்புக்கொண்டான். வேறு வழி? இரண்டு மாதங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்ததன் பயனாகச் சித்திரம் எழுதுவதிலும் அவனுக்கு நல்ல தேர்ச்சி ஏற்பட்டு விட்டது. அதுதான் அவன் கண்ட பலன்! 

திருவல்லிக்கேணியிலிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்குத் தினமும் நடந்தேதான் போய் வருவான் அவன். சம்பளமாகக் கிடைக்கும் தமிழ் போதினி பிரதிகளை வழியிலுள்ள வெற்றிலைப்பாக்குக் கடைகளில் கொடுத்து விற்கச் சொல்லி, போகும்போதும் வரும்போதும் அவை விற்று விட்டனவா என்று பார்த்துக்கொண்டே இருப்பான். சில சமயங்களில் அவை விற்றுப் போவதும் உண்டு! மொத்தத்தில் சுந்தரம் அந்தப் பத்திரிகையில் ‘ஆர்ட்டிஸ்டாகச் சேர்ந்த பிறகு, தமிழ் போதினியின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. ஆமாம்; முன்பெல்லாம் ஆயிரத்து இருநூறு பிரதிகளே அச்சிடப்பட்டு வந்த அப்பத்திரிகை, இப்போது 1250 பிரதி களாக உயர்ந்து விட்டது! சுந்தரத்துக்கு ஐம்பது கொடுக்க வேண்டும் அல்லவா? 

அத்தியாயம் – 9

ஒரு நாள் மாலை அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவன், கதவின் கீழே விழுந்து கிடந்த கடிதத்தைக் கையிலே எடுத்துப் பார்த்தான். 

“சுந்தருக்கு, ஆசிர்வாதம். வரும் ஆனி மாதம் 27-ந் தேதி வெள்ளிக்கிழமை உனக்குத் திருமணம் செய்வதாக நிச்சயமாகியிருக்கிறது. நம் பக்கத்து ஊர்ப் பெண்தான்; நானும் உன் தாயாரும் போய்ப் பெண்ணைப் பார்த்தோம். பெண் எங்கள் மனசுக்குப் பிடித்திருக்கிறாள். கலியாணத்துக்கு இன்னும் பத்தே நாட்கள்தான் இருக்கின்றன. இத்துடன் அச்சிடுவதற்காக முகூர்த்தப் பத்திரிகை எழுதி அனுப்பியிருக் கிறேன். நீ வரும்போது அதைப் ‘பிரிண்ட்’ செய்துகொண்டு வரவும். ஒரு வாரம் முன்னதாகவே வந்து விடவும். 

இப்படிக்கு,
கங்காதரய்யர்.” 

கடிதத்தைப் படித்து முடித்ததும் சுந்தரின் முகம் சட்டென வாட்டமுற்றது. சகுந்தலாவின் இனிய முகம் அவன் கண்முன் தோன்றியது. கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டான் அவன். தன் தந்தைமீது அவனுக்குக் கோபமாகக்கூட இருந்தது. 

குறிப்பிட்ட பஸ்ஸை ஒருவன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு நிற்கும்போது, அந்த பஸ் மெதுவாக அவன் அருகில் வந்து, நிற்காமலேயே போய்விடுகிறது. அதே சமயத்தில் வேறொரு ‘ரூட்’டில் செல்லும் பஸ் ஒன்று அங்கே வந்து, அவனை அதில் ஏறிக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினால் அவனுக்கு எப்படி இருக்கும்? 


“சார்! எனக்குக் கலியாணம் நிச்சயமாகியிருக்கிறது; பத்து நாட்கள் லீவு வேண்டும்” என்றான் சுந்தரம் முதலாளியிடம். 

“ரொம்ப சந்தோஷம்; எப்போ போகணும்? பத்து நாட்கள் லீவு வேணுமா அதுக்கு?” 

“ஆமாம், சார்! அத்துடன் கலியாணப் பத்திரிகை பிரிண்ட் பண்ணனும்; நம்ம பிரஸ்லே……” 

“நம்ம பிரஸ்லே வெறும் கம்போசிங்தான்; மிஷின் கிடையாது. உனக்குத்தான் தெரியுமே!  நம்ம வாடிக்கையா ‘ஸ்டிரைக்’ பண்ணிகிட்டு வருவோமே, ‘காடிகானா’ பிரஸ், அவங்ககிட்டே கொண்டு போய்க் கொடு, செஞ்சு கொடுப்பாங்க?” 

“ப…ண… ம்?” 

‘பணமா! நம்ம பத்திரிகை அச்சடிக்கவே எங்கிட்டே பணம் கிடையாது; கலியாணப் பத்திரிகை அச்சடிக்க நான் எங்கே போவேன் பணத்துக்கு? விளம்பரப் பணத்தை வசூல் பண்ணிக்கிட்டு வா; அப்புறம் பார்க்கலாம்.” 

சுந்தரம் அந்தக் ‘காடிகானா’ பிரஸ்ஸுக்குப் போய்க் கலியாணப் பத்திரிகையை அச்சிடக் கொடுத்தான். அச்சுக் கூலியும் காகிதமும் சேர்ந்து ஐந்தேகால் ரூபாய் ‘சார்ஜ்’ செய்துவிட்டார்கள் அந்தப் பிரஸ்சில். 

அன்று மாலையே அவன் மாங்குடிக்குப் புறப்பட்டான். 


வேதகோஷம் முழங்க, கெட்டி மேளம் ஒலிக்க, பெண்கள் மங்கள கீதம் இசைக்க, பெரியவர்கள் ஆசீர்வதிக்க, சுபயோக சுப வேளையில் காமுவின் கழுத்தில் மூன்று முடிச்சுக் களைப் போட்டான் சுந்தரம். அப்போதே அந்தப் பெண்ணின் அழகிய முகத்தையும் நன்றாகப் பார்த்துக் கொண்டான் அவன். குனிந்த தலை நிமிராமலேயே சுந்தரின் அழகிய வதனத்தை அடிக்கடி கடைக்கண்ணால் கவனித்துக் கொண் டிருந்தாள் காமு . மணப்பந்தலில் கணவனின் கரம் பிடித்து உட்கார்ந்திருந்த அவளுடைய கரங்கள் கூறின. 

“இன்று உங்கள் கை பிடித்த நான் இதைப் போலவே என்றென்றும் நம் இல்லற வாழ்க்கையில் ஏற்படக் கூடிய சுக துக்கங்களுக்கெல்லாம் கை கொடுப்பேன்”. 

முகூர்த்தம் முடிந்து ஆசீர்வாதம் நடந்து கொண்டிருந் தது. மணமக்களுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த பெண்களின் கூட்டத்தில் ஒரே வேடிக்கையும் விளையாட்டும் சந்தோஷ ஆரவாரமுமாக இருந்தன. எட்டு மணிக்கே வருவதாகக் கூறியிருந்த சர்மாவைக் காணாததால் கங்காதரய்யருக்கு எதிலுமே மனம் ஓடவில்லை. வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தார் அவர். 

“அதோ வந்து விட்டாரே சர்மா!” என்றது ஒரு குரல். அதைக் கேட்டபோதுதான் கங்காதரய்யரின் முகம் மலர்ந்தது “எங்கே?” என்று கேட்டுக்கொண்டே வாசலுக்கு விரைந்தார். இதற்குள் சர்மாவின் குதிரை வண்டி வாசலில் வந்து நின்றது. 

“வாங்கோ, வாங்கோ! என்ன இப்படிச் செய்து விட்டீர் கள்?” என்றார் கங்காதரய்யர். 

“வழியில் குதிரை ‘மக்கர்’ செய்துவிட்டது!” என்றார் சர்மா. சகுந்தலாவும் குதிரை வண்டியிலிருந்து இறங்கி வருவதைக் கண்ட சுந்தரின் தாயார் பார்வதி அம்மாள், “வாடி அம்மா, வா! எங்கே வராமல் இருந்துவிடுவாயோன்னு நினைத்தேன்; நல்ல வேளை!” என்று அன்புடன் அவள் கைகளைப் பிடித்துப் பந்தலுக்குள் அழைத்துச் சென்றாள். 

“ஆசீர்வாதமெல்லாம் ஆகிவிட்டதா?” என்றார் சர்மா.

“நடந்துகொண்டே இருக்கிறது; நல்ல சமயத்தில் வந்தீர்கள்!” என்று சர்மாவை அழைத்துச் சென்றார் கங்காதரய்யர். 

திடுமென சகுந்தலாவைக் கண்டதும் சுந்தருக்கு ஒரு கணம் ஒன்றுமே தோன்றவில்லை. 

அல்லி மலர் ஒன்று ஆடி வருவதுபோல் அழகாக நடந்து வந்தாள் சகுந்தலா. 

‘சகுந்தலாவா இவள்! எவ்வளவு அதிசயமாக, அழகாக மாறிப் போயிருக்கிறாள்!’ சுந்தர் வியந்தான். 

சகுந்தலா கன்னங் குழியச் சிரித்தாள். அந்த மோகனச் சிரிப்பு அவன் உள்ளத்தை அசைத்துவிட்டது. ஆனாலும், ‘இவளுடன் இனி எனக்கென்ன பேச்சு?’ என்பதைப்போல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் சுந்தரம். சகுந்தலா வந்ததும் ஆயிரம் கேள்விகள் கேட்கவேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தவன், இப்போது அவளை நேரில் கண்டதும் தன் ஆசைகளையெல்லாம் அடக்கிக் கொண்டவனாய் முகத்தைத் திருப்பிக் கொண்டான். 

ஆற்காட்டில் இருந்தபோது சகுந்தலாவின் இதயமும் சுந்தரைக் காணத் துடித்துக்கொண்டிருந்தது. இங்கே வந்த பிறகோ, பொய்க் கோபம் குறுக்கிட்டு, சுந்தருடன் பேசாமலே இருந்துவிட்டாள். 

பக்தர்கள் கோயிலுக்குச் செல்லுமுன் கடவுளைக் கண்ணாரக் கண்டு தரிசிக்க ஆசைப்படுகிறார்கள். கோயிலுக்குப் போன பிறகோ, ஆண்டவன் சந்நிதியில் போய் நின்று கொண்டு, பக்தி மேலீட்டால் கண்களை மூடிக்கொண்டு விடுகிறார்கள். ஒருவர் சந்நிதியில் ஒருவர் நின்ற சுந்தரும் சகுந்தலாவும் பக்தர்களின் நிலையிலேதான் இருந்தார்கள்! 

சற்று நேரத்துக்கெல்லாம் மணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் முடிச்சுப் போடும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த பெண்கள் கோஷ்டியில் சகுந்தலாவும் சேர்ந்து கொண்டாள். 

சுந்தர் அவளைக் கவனிக்காததுபோல் இருந்தான். எல்லாம் முடிந்து, பெண்ணும் பிள்ளையும் மணையை விட்டு எழுந்து, திசைக்கு ஒருவராகச் சென்றபோது அந்தப் பெண் கள் எல்லோரும் கை தட்டிச் சிரித்துவிட்டார்கள். காரணம், சுந்தரும் காமுவும் எதிர் எதிராகப் போக முடியாதபடி இருவரையும் முடிச்சுப் போட்டுப் பிணைத்து விட்டிருந்தாள் சகுந்தலா! 

“என்னுடன் முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கவேண்டிய இவள் தப்பித்துக் கொண்டு, எனக்கும் காமுவுக்கும் முடிச்சுப் போடுகிறாளே?” என்று எண்ணிக் கொண்டான் சுந்தர். 

‘இவள் வேறொருவனுக்குச் சொந்தமாகி விட்டபிறகு. நான் இன்னொருத்திக்கு உரிமையாகிவிட்ட பிறகு, இனி என்ன விளையாட்டு வேண்டியிருக்கிறது?’ 

சுந்தரும், அவன் கை பிடித்த காமுவும் சர்மாவை நமஸ்கரித்து எழுந்தார்கள். அப்போது சர்மாவுக்கு சுந்தரின் ஜாதகம் பற்றிய எண்ணம் தோன்றிவிடவே கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. 

‘தீர்க்க சுமங்கலீ பவ!  தீர்க்காயுஷ்மான் பவ!’ என்று மணமக்கள் இருவரையும் மனப்பூர்வமாக ஆசீர்வதித்தார் அவர். 


மணி மூன்று இருக்கும். கலியாண வீடு நிறையக் கூடத்திலும் தாழ்வாரத்திலும் பெண்கள் கூட்டம் ஆங்காங்கே அலங்காரம் செய்து கொள்வதில் ஈடுபட்டிருந்தன. 

சுந்தரம் ஒரு மூலையில் போய் முடங்கியபடி அலுப்புத்தீர தூங்கிக் கொண்டிருந்தான். “டேய் சுந்தரம் எழுந்திருடா! நலங்குக்கு நாழியாகிறது. இந்தா காப்பி, இதைக் குடித்து விட்டுப் போய் முகம் அலம்பிக்கொண்டு வா!” என்று அவனைத் தட்டி எழுப்பினாள் பார்வதி அம்மாள். 

சுடச் சுட காப்பியை வாங்கிக் குடித்த பிறகுதான் சுந்தரத்துக்குத் தூக்க மயக்கம் தெளிந்தது. எழுந்து தோட்ட பக்கம் சென்றான். தட்டியினால் மறைத்துக் கட்டப்பட்டிருந்த குளியல் அறைக்குள் சென்றபோது, அங்கே சகுந்தலா கண்களை மூடிக்கொண்டு, முகம் நிறையப் பூத்திருந்த சோப்பு நுரையை கழுவிக் கொண்டிருந்தாள். சுந்தரைக் கண்டதும் வெட்கத் தினால் பதறிப்போய் வெளியே ஓட எத்தனித்தாள் அவள்.

“ஏன் ஓடறே, சகுந்தலா? உன்னை நான் விழுங்கிவிட மாட்டேன்!” 

“என்னோடு நீ ஒண்ணும் பேச வேண்டாம், போ! சகுந்தலா அவனைத் தாண்டிக்கொண்டு ஓடப் பார்த்தாள். சுந்தர் தன் கையிலிருந்த டவலால் அவளை வழி மறித்து, “உன்னைப் போகவிட மாட்டேன்!” என்று மடக்கினான். 

“என்ன விளையாட்டு இது! யாராவது பார்த்தால் ஏதாவது நினைச்சுக்க மாட்டா?” 

“நினைக்கட்டும்; என்மீது உனக்கு என்ன கோபம் என்பதை சொன்னால்தான் விடுவேன்!” 

“என் கலியாணத்துக்கு நீ ஏன் வரலே?” 

“என்னை வரச்சொல்லி நீ லெட்டர் போடலையே!” 

“தாத்தா போட்டிருப்பாரே?” 

“நீ போட்டாயா?” 

“எனக்கு உன் விலாசமே தெரியாதே! நான் எப்படிப் போடுவேன்?” 

“உன் தாத்தாகிட்டே என் விலாசம் இருக்குமே?” 

“தாத்தாவிடம் இருந்தால் அது எனக்கு எப்படிக் கிடைக்கும்?” 

“விலாசம் வேணும்னா எப்படியும் கிடைக்கும்.. ம்.. என்னை மறந்துட்டேன்னு சொல்லு!” 

“சுந்தர், உன்னை நான் மறக்கவே மாட்டேன். அது இந்தப் பிறவியில் முடியாத காரியம்… இதென்ன, பார்த்தாயா?” 

“என் சோப்புப் பெட்டி; ஆற்காட்டில் நான் வைத்து விட்டு வந்தது. ஏன் அழறே, சகுந்தலா?….அழாதே!விதிப்படி தான் எதுவும் நடக்கும்……” 

“சுந்தர்! எனக்கு வழி விடு; நான் போகிறேன்!” என்றாள் சகுந்தலா. 

“ஏன் தடுமாடுகிறாய்? உன் உடம்பு ஏன் இப்படி நடுங்குகிறது?” என்று கேட்டான் சுந்தரம். 

“எனக்கொன்றும் இல்லை; இது பாத்ரூம்; ஜாக்கிரதை சறுக்கிவிடப் போகிறது!” என்று சிரித்துக்கொண்டே கூறி விட்டு ஓடிவிட்டாள் சகுந்தலா. 

‘பொல்லாத பெண்! இதுகூட ஆற்காட்டு வெந்நீர் அறை என்று நினைத்துக் கொண்டாளோ?’ என்று எண்ணியவனாய் முகம் கழுவத் தொடங்கினான் அவன். 

சகுந்தலாவின் கூந்தலில் இருந்து வந்த தாழம்பூ வாசனை யும் மல்லிகையின் மணமும் அவனுக்கு இன்ப வேதனையை அளித்தன. 


இராணிப்பேட்டை சந்தைத் திடலிலிருந்து ஒலிபெருக்கி மூலம் வந்துகொண்டிருந்த குரல் வேறு யாருடையதும் அல்ல; மலேயா சோமசுந்தரத்தின் குரல்தான். 

“தமிள் மொளி இனிய மொளி. அதனாலே தான் பாரதியார் “யாமறிந்த மொளிகளிலே தமிள் மொளி போல் இனி தாவ தெங்கும் காணோம்’ என்று பாடினார்…” 

மலேயா சோமசுந்தரத்தைத் தவிர, தமிழ் மொழியை இவ்வளவு ‘அள’ காக வேறு யாரால் பேச முடியும்? 

பணத்தைப் பாலாற்றங்கரையில் மறந்து வைத்துவிட்டு வந்த சுந்தரத்துக்கு, அந்தக் குரல் ஆண்டவனுடைய குரலாகவே தோன்றியது. பழைய நிகழ்ச்சிகளின் எண்ணச் சுழலிலிருந்து விடுபட்ட அவன் உள்ளத்தில் இப்போது ஒரே எண்ணம்தான் குடிகொண்டிருந்தது. 

கூட்டத்தை முண்டி அடித்துக்கொண்டு, மேடையருகே போய் நண்பனின் கண்ணில் படும்படியாக நின்றுகொண்டான் சுந்தரம். இவனைக் கண்டதுமே சோமசுந்தரம் புன்முறுவல் பூத்தான். 

‘சோமசுந்தரம் தன்னைக் கவனிப்பானா? கவனித்தாலும் பேசுவானா?’ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த சுந்தரத் துக்கு இது சற்று வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது. 

கூட்டம் முடிந்ததுதான் தாமதம். சோமசுந்தரம் ஆவலோடு சுந்தரை அருகில் அழைத்து, “எப்போ வந்தீங்க? இங்கே எங்கே வந்தீங்க?” என்று கேட்டான். 

“கிராமத்திலேருந்து வரேன்… ஒலிபெருக்கியிலே உங்க குரல் கேட்டுது…” 

“மெட்ராசுக்குத்தானே? என்னோடயே வந்துடுங்களேன். கார் போகுது!”
 
“ஆகட்டும்” என்றான் சுந்தரம். 

வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பனிடம் எப்படி முதன் முதலில் பேசுவது? தன் நிலைமையை அவனிடம் எப்படி எடுத்துச் சொல்வது? என்று திகைத்துக் கொண்டிருந்த போது, நண்பனாகவே காரில் வரும்படி அழைத்ததும் சுந்தரத் துக்குப் பாதிக் கவலை தீர்ந்து போயிற்று. 


கூட்டம் முடிந்ததும் சுந்தரையும் அழைத்துக்கொண்டு போய் சாப்பிட்டுவிட்டு, காரிலேயே சென்னைக்குப் புறப்பட் டான் மலேயா சோமு. காரில் மவுனமாக உட்கார்ந்திருந்த சுந்தர் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தான். 

“என்ன சுந்தர்,என்ன யோசிக்கிறீங்க? எதையோ பறி கொடுத்துட்ட மாதிரி உட்கார்ந்து இருக்கீங்களே?” 

“ஆமாம்; பதினைந்து ரூபாயைப் பாலாற்றங்கரையில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன். இங்கே வந்த பிறகு தான் நினைவுக்கு வந்தது. என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோதுதான் ஒலிபெருக்கியில் உங்கள் குரலைக் கேட்டேன்” என்றான் சுந்தரம். 

”பதினைந்து ரூபாய்க்கா இப்படி கவலைப்படறீங்க? போனா போகுது ; உங்களைப் போன்ற ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு பதினைந்து ரூபாய் ஒரு பெரிசா? இப்படியும் அப்படியும் இரண்டு கோடு களைப் போட்டால் படமாயிடுது!” 

“படமாயிட்டாப் போதுமா? பணமாக வேண்டாமா?” 

“படத்துக்கும் பணத்துக்கும் ஒரு எளுத்துத்தானே வித்தியாசம்? எளுத்துக்கு”

“அடுத்த எழுத்து ‘ண ‘ தானே?” 

“பணம் சம்பாதிப்பது இவ்வளவு சுருக்கத்திலா இருக்கிறது?” என்று வியப்புடன் கேட்டான் சுந்தரம், 

“ஏன் இல்லே? நீங்க படம் எளுதுங்க; நான் பணம்தரேன் நீங்கதான் பளய சிநேகத்தை வெட்டிக்கிட்டுப் போயிட்டீங்க. நான் அப்படி இல்லே! எப்பவும்ஒரே மாதிரி தான் இருக்கேன்!” 

சுந்தரம் மவுனமாகவே நண்பனைப் பார்த்தான். 

“என்ன பார்க்கிறீங்க? பளசையெல்லாம் மறந்துடுங்க; அந்தக் காலம் வேறே! இப்ப முன் மாதிரியெல்லாம் இல்லே; செக் வெட்டிக்கிட்டே இருக்கேன். நீங்க மட்டும் சொன்ன டயத்திலே படத்தை எழுதிக் கொடுங்க; பணத்தை உடனே கொடுத்துடறேனா இல்லையா பாருங்கள்?” 

“புதுப் புத்தகம் ஏதாவது வெளியிடப் போறீங்களா” “ஆமாம்; ஆறு புத்தகங்களுக்கு அட்டைப் படம் போட்டுத் தருவீங்களா? அதுக்கு முன்னாலே உங்களுக்கு இன்னொரு அர்ஜண்ட் வேலை இருக்குது. நானே உங்க ரூமுக்கு ஆள் அனுப்பித் தேடினேன். நீங்க இப்போ நல்ல தம்பி தெருவில் இல்லையாமே?” 

“ஆமாம், அந்த ரூமைக் காலி பண்ணிட்டேன். இப்போ நான் தமிழ் போதினி பத்திரிகையிலேயும் இல்லே…” 

“அதுக்கென்ன ஆயிரம் இடம் இருக்குது; நீங்க மட்டும் எனக்கு…” 

“என்ன செய்யணும்?” 

“இன்னும் ரெண்டு மாசத்திலே, நான் ஒரு ஆர்ட் எக்சிபிஷன் நடத்தப் போறேன். அதுக்கு உங்க படம் வேணும்.புத்தர்,காந்தி,தாகூர், பாரதியார்-இவங்க பட மெல்லாம் எழுதிக் கொடுத்தீங்கன்னா, எக்சிபிஷன்லே வைக்க லாம். உங்களுக்கு இருக்கிற புகளும் பேரும் அதனாலே இன்னும் அதிகமாகும்.” 

“புகழும் பேரும் இருந்தாப் போதுமா? பொருள் வேணாமா?” 

“கலைஞர்கள்கஷ்டப்படக் கூடாதுங்கறதுக்காகத்தானே முக்கியமா இப்படி ஒரு சித்திரக்காட்சி நடத்தறேன்? தமிளனின் புகள் நாடெங்கும் பரவணும். அவங்க பெருமையை மக்கள் உணரணும்..உங்களுக்குச் சம்மதம்னா சொல்லுங்க, மாசச் சம்பளமாகவே கொடுத்துடறேன். நாளை யிலேருந்து நீங்க நம்ம ஆபீசிலேயே வேலை செய்யலாம்.” 

“எவ்வளவு கொடுப்பீங்க?” 

“நூறு ரூபாய் போதுமா?” 

“இப்போதைக்குப் போதும். இரண்டு மாசத்துக்கெல் லாம் குடும்பத்தை அழைத்துக்கொண்டு வரலாம்னு இருக்கேன். அப்போ எனக்கு மொத்தமா முன்னூறு ரூபா வேணும்.” 

“அவ்வளவுதானே? எக்சிபிஷன் முடியட்டும் முன்னூறு என்ன ஐந்நூறு தரேன்… இப்போ நாளைக்கே நூறு ரூபா அட்வான்ஸ் தரேன். புத்தர் படத்தை மட்டும் முதல்லே எளுதிடுங்க. அது கொஞ்சம் அவசரம்!” என்றான் சோமு. 

சுந்தர் சிரித்தான். 

“என்ன சிரிக்கிறீங்க?” 

“இல்லே; திடீர்னு சித்திரக் கலையிலே இப்படி ஒரு அக்கறை வந்துட்டுதே உங்களுக்கு. அதை நினைச்சு சிரிச்சேன்!” 

“இப்படித்தான் ரொம்பப் பேர் என்னைத் தப்பா நினைக்கி றாங்க. ஒரு மனுசன் கலையிலே ஆர்வம் காட்டறதிலே என்னய்யா தப்பு?” 

“தப்பு ஒண்ணும் இல்லே; சோழியன் குடுமி சும்மா ஆடாதே!” 

“நான் சோளியனுமில்லே, எனக்குக் குடுமியும் இல்லே!” வேகமாக போய்க்கொண்டிருந்த கார் ஒரு டீக்கடையின் முன்னால் போய் நின்றது. 

சுந்தரத்துக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது.

“டீ சாப்பிடுறீங்களா?” 

“வேணாம்; நீங்க சாப்பிடுங்க!…” என்று கூறிவிட்டு கண்களை மூடியபடியே பழைய நினைவுகளில் லயித்துவிட்டான் சுந்தரம். அவன் மனக்கண்முன் பழைய நிகழ்ச்சிகள் நிழலாடின.

– தொடரும்…

– வழிப்போக்கன் (நாவல்), எட்டாம் பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *