முதல் குழந்தை
கதையாசிரியர்: கி.சரஸ்வதி அம்மாள்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 145
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“குழந்தை என்ன பண்ணுகிறான்? இன்று உடம்பு கொஞ்சம் தேவலையா?”
“தேவலை இல்லாமல், என்ன? அவனுக்கு என்ன பெரிதாக வந்துவிட்டது? பவானிதான் தொட்டதற் கெல்லாம் பயந்து போகிறாள்.”
“இருக்குமோ இல்லையோ; முதல் குழந்தை அல்லவா?”
“முதல் குழந்தை என்றாலும், இப்படியா! நான் பார்த்ததில்லை. எல்லாருந்தான் தலைச்சன் குழந்தை பெற் றிருக்கிறார்கள். யாரும் இப்படித் தவித்துப் போன தில்லை!”
“குழந்தை சுவர்ண விக்கிரகம்போலே இருக்கிறான்.”
“அழகில்லாவிட்டாலும் யாருக்கும் அவரவர் குழந்தை என்கிறது இல்லாமல் போகுமா? என்னவோ இவள்தான் தனியாகப்பெற்றுவிட்ட மாதிரி பிரமாதப்படுத்துகிறாள். குழந்தைக்குத் தலையை வலித்து விட்டால் அதோடு உயிரை விடுகிறாள்.”
இந்தச் சம்பாஷணை, வாசல் திண்ணையில் பவானியின் தாய்க்கும், அவர்கள் பக்கத்து வீட்டு அம்மாளுக்கும் நடந்தது.
காமரா உள்ளில் தூங்கிக்கொண் டிருந்தது குழந்தை. அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பவானியின் காது களில் இந்தப் பேச்சுத் தெளிவாக விழுந்தது. குழந்தை யின் ஆண்டு நிறைவு கழித்துப் பெற்றோரின் வற்புறுத்த லுக்கு இணங்கி, அவள் தன் பிறந்தகத்தில் சில நாள் தங் கிப் போக வந்திருந்தாள். அப்படி வந்த இடத்தில்தான் குழந்தைக்கு இரண்டு நாளாகச் சிறிது ஜலதோஷம் பிடித்து, லேசாகக் காய்ச்சலும் அடித்துக்கொண் டிருந் தது. இன்று தேவலையாகி இருந்தது. ‘டாக்டர் இல்லாத பட்டிக்காட்டில் வந்திருக்கிறோமே; எங்காவது நிமோனியா என்று பெயர் வைத்துவிட்டால் என்ன செய்வது!’ என்று அவன் பட்ட கவலையைத்தான் அவள் தாய் குத்த லாகச் சொல்லிக்கொண் டிருந்தாள். ‘எல்லாருக்கும் முதல் குழந்தை பிறக்கவில்லையா என்கிறாள். ஆனால் என் முதல் குழந்தையும், மற்றவர்களுடைய முதல் குழந் தைகளும் ஒன்றாகிவிடுவார்களா? அம்மாவுக்கு நானும் முதல் குழந்தையாகப் பிறந்தேன். அவளுக்கும் என் னிடம் அன்பு இருக்கத்தான் இருந்தது. இருந்தாலும் என் குழந்தையிடம் எனக்கு இருக்கும் ஆசைக்கு அது உறைபோடக் காணுமா?’ என்று நினைத்தாள் பவானி.
அவளைச் சதா வருத்திக்கொண் டிருந்த மனத் துயரத் தைப் போக்கடித்து, அவள் வாழ்க்கையைப் பாழ் பண் ணிக்கொண்டு விடாதபடி காப்பாற்றினான் அவள் மகன். அதிலிருந்து சந்தோஷமற்று, இருள் சூழ்ந்துகிடந்த அவள் இருதயத்தை, சூரியனைக் கண்ட தாமரையென மலரச் செய்த அவள் கண்மணிக்கு உலகில் மற்றக் குழந்தைகள் ஈடாவார்களா? மாட்டார்கள்.
‘பிள்ளைக் கலிதீர்க்க வந்தவன், ‘மலடி என்கிற அவச் சொல்லை நீங்கப் பிறந்தவன்’ என்று அவள் பெருமைப் படவில்லை. குழந்தை பிறக்க ஒன்றும் நாளாகிவிடவில்லை. உரிய காலத்தில்தான் அவள் குழந்தையை ஈன்றாள். அவ் விதமானால் பவானி, தன் பிள்ளையைத் தனிச் சிறப்புடை யவனாகக் கருத என்ன விசேஷம் இருக்கும்? பவானியின் அடக்கமான சுபாவமும் அவள் நுட்பமான இருதயத் திலே தோன்றும் உணர்ச்சிகளும் அவளைப்பற்றிய மற்ற எல்லா விவரங்களும் தெரிந்தால்தான், இருண்டு சூன்ய மாகத் தோன்றின அவள் வாழ்க்கை, அவள் தலைச்சன் பிள்ளையால் எவ்விதம் இன்பம் நிறைந்து பிரகாசமாயிற்று என்பது தெரியவரும்.
‘சிவப்பே ஓர் அழகு, சூடே ஒரு ருசி’ என்று அழகிற்கு முக்கிய அம்சமாகச் சொல்லும் சிவப்பு நிறம் அவளுக்கு இல்லை. அதனால் அவள் அழகோடு சேர்த்தியில்லை என்றே எல்லாரும் நினைத்தார்கள். சிலரைப்போலத் தங்களிடத் தில் உள்ள சுய அபிமானத்தினால் தங்கள் குறைவை அவ்வளவாகப் பொருட்படுத்தாமல் இருக்கும் சுபாவம் உடையவள் அல்ல அவள். அவளுக்கு, தான் எல்லா அம்சத் திலும் உயர்வாக இருக்க வேண்டுமென்று ஆசை. அந்த ஆசைக்கு முதல் இடையூறாக அமைந்தது அவள் சிவப்பு இல்லாமல் போன குறை. கண்களால் பார்த்ததுமே ஜனங்கள் உயர்வாகக் கருதும்படி செய்வது ஒருவருடைய சௌந்தரியந்தானே! அது இல்லாவிட்டால் மற்ற உயர்வு கள் இருந்தாலும் அவை எளிதில் பிரகாசிப்பதில்லையே!
ஆனால் பவானிக்கு மன்மதனை யொத்த அழகு வாய்ந்த கணவன் கிடைத்தான். அதனால் அவள் தன் குறையை மறந்து சந்தோஷப்படலானாள். அவள் கணவன் சிவந்த மேனியும் உயரமான உடலும் களை பொருந்திய முகமும் படைத்தவனாய், பார்ப்பதற்குச் சுந்தர புருஷனாய் விளங்கினான். திருப்பதி மரப்பாச்சி போன்ற கறுப்பு உருவம் கொண்ட எங்கள் பவானிக்கு, இத்தனை அதிருஷ் டம் இருந்ததே!’ என்று அவள் அம்மாவே எல்லாரிடமும் சொல்லிப் பெருமைப்பட்டு மகிழ்ந்து போனாள் என்றால் சொல்லுவானேன்?
‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு’ என்று நினைக்க வேண்டிய தாயே, மகளைக் குறைத்துக் கூறிக் கொண்டாளென்றால் மற்றவர்களைப்பற்றிக் கேட்க வேண்டுமா? கல்யாணத்தின்போது, மணையில் பவானியை யும், அவள் அகமுடையானையும் சேர்த்துப் பார்த்தவர்கள் பவானியின் அதிருஷ்டத்தை எண்ணி, அதிசயித்து மெச்சி னார்கள். பவானியும் அப்பொழுது அவைகளைக் கேட்டு மகிழ்ந்துதான் போனாள். தான் எப்படி இருந்தாலும், தனக்கு எல்லோரும் கண்டு புகழும்படியான பேரழகு வாய்ந்தவன் கணவனாக வாய்த்துவிட்டான் என்கிறதில் அவளுக்கு உண்டான ஆனந்தம் அவளை ஆகாயத்திற்கே கொண்டுபோயிற்று.
புக்ககம் சென்று வசிக்கத் தொடங்கின பிறகுதான் அவள் ஆகாயத்திலிருந்து இறங்கி பூமிக்கு வந்தாள்: மெள்ள மெள்ள மறுபடியும் தன்னுடைய ரூபக் குறைவை எண்ணி, வருந்தும் நிலை உண்டாயிற்று. புது மாட்டுப் பெண்ணைப் பார்க்க வந்த அவள் மாமியாரின் சிநேகிதிகள், “ராஜாவுக்குப் போயும் போயும் இப்படி அழகில்லாத பெண்ணைப் பிடித்துக்கொண்டு வந்திருக்கி றாயே!” என்று பவானிக்கு எதிரிலேயே கேட்டு, அவளுக்கு இருந்த வருத்தத்தை மேலும் பெருக்கினார்கள். “அண்ணாவுக்கு மன்னி சந்திரனில் களங்கம்போல; அழகிய நெற்றிக்குச் சாந்துப்பொட்டுப் போல” என்றெல்லாம் அவளுடைய நாத்தனார்கள் சதா விளையாட் டாக வர்ணித்தது கேட்டு, அவள் உள்ளுக்குள்ளே புழுங் கினாள். அவர்கள் நாவல் படித்தவர்கள். அதனால்தான் அப்படிச் சாதுரியமாகச் சொன்னார்கள்.
அவர்கள் வீட்டில் அவள் மாமியார், நாத்தனார் இருவர், இரண்டு ஓர்ப்படிகள் எல்லாருமே மிகுந்த லக்ஷணம் பொருந்தியவர்களாகவே இருந்தார்கள். வித வைக் கோலத்தில் இருந்தாலும் அவள் மாமியாரின் அழகு குன்றாமல் சோபித்தது. அவர்கள் மத்தியில் அன்னக் கூட்டத்தின் நடுவில் காக்கைக்குச்சமமாகத் தான் இருப்ப தாகப் பவானி எண்ணினாள். ஒருநாள் அவர்கள் அகத் திற்கு வந்த பந்து ஒருத்தி, “ராஜா ஆயிரம் வக்கணை சொல்வானே; பவானியை எப்படிக் கல்யாணம் பண்ணிக் கொண்டான்?” என்கிற பாவனையில் கேட்டாள்.
“ஏன், பவானிக்கு என்ன குறைவு? அடுப்பங்கரைப் பெண்ணுக்கு இதைவிட அழகு என்னத்துக்கு?” என்று அவள் மாமியார், வந்தவள் வாயை அடக்கப் பேசினாலும், பவானியின் மனத்தில் அது ஊசி நுழைவதுபோல் நுழைந்து துன்புறுத்தியது.
அதுவரையும் தனக்கு அழகான கணவன் வாய்த்து விட்டான் என்கிற திருப்தியிலேயே அவள் இருந்தாள். ரூபமற்ற தன்னை மணந்தது அவனுக்கு எப்படி இருக்கும் என்பதை அவள் சிந்தித்துப் பார்க்கவே இல்லை. இப் பொழுதோ மனசு அதில் சென்று லயித்தது. அவனையும் அவன் சகோதரர்கள் இருவரையும் அவள் கூர்ந்து கவ னிக்கத் தொடங்கினாள். அவன் தமையன்மார்கள் தங்கள் மனைவிகளிடம் நடந்துகொள்ளும் விதத்தையும், அவன் தன்னிடம் நடப்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தாள். அந்தத் தம்பதிகள் ஒருவருக்கொருவர் எல்லாருடைய எதிரிலேயும் சங்கோசமின்றிப் பரிகாசமாகப் பேசிச் சிரித்து விளையாடுகிறார்கள். அவள் கணவனோ அவர்களுக்கு முற்றும் விரோதமாக இருக்கிறான். இன் னொருவர் எதிரில் அவன் அவளுடன் சாதாரணமாகக் கூடப் பேசுவதில்லை. கண்ணோடு கண் நோக்கும்படி அவன் அவளைப் பார்ப்பதே இல்லையே! ‘மணமான புதிது, வெட்கமாக இருக்கும்’ என்று அவள் முதலில் நினைத் தாள். அந்த எண்ணம் இப்போது மாறி, வேறுவிதமாக எண்ணலானாள். ‘இந்த அழகான பெண்டாட்டியுடன் பேச்சென்ன வேண்டியிருக்கிறது!’ என்ற அருவருப்பி னால் பேசுவதில்லை, ஆசையாகப் பார்ப்பதுகூட இல்லை என்று அவள் நிச்சயித்தாள். இவ்விதம் சந்தேகங்கள் எழத் தொடங்கின பிறகு கணவனுடைய ஒவ்வொரு நடத் தைக்கும் அவள் மனம் காரணங்களைக் கற்பிக்க ஆரம்பித்தது.
ஒரு சமயம் அவர்கள் எல்லாரும் நாடகம் பார்க்க வென்று கிளம்பினார்கள். ‘இரவு நேரமாகுமே; ஆட்களை மட்டும் நம்பி, வீட்டைவிட்டுப் போகிறதா?’ என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது. ஆண்பிள்ளைகள்தாம், நாடகம் பார்க்கவேண்டும் என்ற விஷயத்தையே ஆரம் பித்தவர்க ளாகையால் அவர்கள் போகவேண்டியது முக்கியமென்று தீர்மானமாயிற்று.
பவானியின் மாமியார், “இந்த வயசில் எனக்கு. எதற்கு நாடகமும், இன்னொன்றும்? நான் வரவில்லை: நீங்கள் போய்வாருங்கள்” என்றாள்.
“நன்றாயிருக்கிறது அம்மா! நீ இல்லாமலா? உனக்குத் தான் சிவபக்தி அதிகம். சிவலீலா நாடகம் நீ கட்டாயம் பார்க்கவேணும், உனக்காகத்தானே நாங்களே போகிறோம்?” என்று மூன்று பிள்ளைகளும் பிடிவாதமாகச் சாதித்துவிட்டார்கள். பவானியின் ஓர்ப்படிகள் இரு வரும், “நாங்கள் இருக்கிறோம்” என்று சொன்னதற்கு, “போதுமே; சிறிசுகள் நீங்கள் இருக்கிறதாவது!’ என்று மாமியார் சொல்வதற்குள்ளேயே, அவர்கள் கணவன் மார்கள் இருவரும் தங்கள் மனைவிமார் நின்றால் தாங்களும் நின்றுவிடுவதாகப் பயமுறுத்தினார்கள். “மனைவியை விட்டு எங்களுக்கு நாடகம் ரசிக்காது’ என்று சொல்லி விட்டார்கள். நாத்தனார்கள் சின்னப் பெண்கள். அவர்களை விட்டுப்போவது என்பது சாத்தியம் இல்லை.
“நான் நின்றுகொள்ளட்டுமா?” என்று பவானி தயக்கத்துடன் கேட்டாள். தமையன்மார்களைப்போல, அவள் போகாவிட்டால் தானும் போகவில்லை என்று தன் கணவன் ஏதாவது சொல்லுவானோ என்ற ஆசையில் அவள் அவ்விதம் சொல்லியிருந்தால், அவள் மிகுந்த ஏமாற்றத்திற்குத்தான் ஆளாகி இருக்கவேண்டும்.
“காவலுக்கு ஆட்கள்மட்டும் போதாமல் என்ன?” என்று பட்டும் படாமலும் சொல்லிப் பேசா திருந்தான், அவள் கணவன். அவள் தங்களுடன் வருவதும் வராத தும் ஒன்றுதான் என்ற பாவனையில் அவன் இருப்பதாகவே அவளுக்குப் பட்டது.
“சின்னப் பெண்; நீ தனியாக இருக்கிறதாவது! நீ மட்டும் நாடகம் பார்க்கவேண்டாமா? ராஜா சொல்வது போல, வீட்டை யாரும் கொண்டுபோய்விட மாட்டார் கள்” என்று அவள் மாமியாரே அழுத்தமாகச் சொல்லிப் பிரச்னையைத் தீர்த்தாள்.
“மைத்துனரின் கெட்டிக்காரத் தனத்தைப் பார். எப்படியும் காரியம் நடந்துவிடும் என்னும் தெம்பில் தமையன்மார்களைப்போலப் பிதற்றாமல், சாமர்த்தியமாக வாயை மூடிக்கொண் டிருந்து விட்டார்” என்று ஓர்ப்படி கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
அந்தப் பேச்சுப் பவானியின் காதில் விழவில்லை தங்கள் கணவன்மார்கள் தங்களிடம் ஆசையாக இருக்கும் பெருமையை அவர்கள் அவ்விதம் பறை சாற்றிக்கொள்ளு கிறார்கள். நம்மிடத்தில் அவர்களுக்கு உள்ளுக்குள் ஏளனங்கூட இருக்கும்’ என்பது அவள் எண்ணம். கொண்டவன் தூற்றினால் கூரையும் தூற்றும்’ என்ப தல்லவா பழமொழி?
மேலும் மேலும் அவள் மனப்புண் அதிகமாவதற்கு ஏற்றபடியே காரியங்கள நடந்துகொண்டு போயின. அவள் கணவனுடைய கலாசாலை நண்பன் ஒருவன், புதி தாக மணமானவன், தன் மனைவியுடன் அவ்விடத்திற்குப் புதுக் குடித்தனம் செய்ய வந்திருந்தான். அவனைப் பார்த்து வரவேண்டியது முறை என்று சொல்லிப் பவானியின் கணவன் ராஜா, அவளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான். அவர்கள் இருவர் மட்டுமே தனித்துச் சென்றுங்கூட வழியில் அவன் அவளுடன் அதிகம் அளவளாவவில்லை. “அந்தத் தம்பதிகள் மிக நாகரிகமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். உனக்கு அது அதிகமாகத் தோன்றலாம். நீ அதை அவர்களுக்குத் தெரியும்படி வெளிக்காட்டக் கூடாது” என்று மட்டும் எச்சரிக்கை செய்தான்.
அவள் என்ன அவ்வளவு பட்டிக்காடா? நாகரிகமாக இருப்பவர்களைப் பார்த்ததில்லையா? அதிசயத்தில் வாயைப் பிளந்துகொண்டு நிற்பாளா? அவன் எச்சரிக்கையைக் கேட்டு அவளுக்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று. அவனோடு முதல் முதல் தனித்துப் போகிறோம் என்ற உற்சாகம் சிறிது முதலில் ஏற்பட்டது; அதை இது போக் கடித்து விட்டது.
‘கிராமத்திலே பிறந்தவர்களுக்கும் மனம் என்பது ஒன்று உண்டு. அவர்களுக்கும் எல்லாவற்றையும் நுட்ப மாகக் கிரகித்துக்கொள்ளும் சக்தியும் புத்தியும் இருக்கும் என்பது இவருக்குத் தெரியவில்லையே!” என்று அவள் வருந்தினாள். அவள் பட்டிக்காட்டிலே பிறந்தாலும் ஏதோ சில வகுப்புக்கள் படிக்கவேண்டி மாமாவின் அகத்தில் பட்டணத்தில் கொஞ்சநாள் இருந்திருக்கிறாள். அவள் நடை உடை பாவனைகளில் பட்டணத்துப் புது நாகரிகத்தை அநுசரிக்கா விட்டாலும், நாகரிகமா இருப் பது என்றால் என்ன என்பது அவளுக்குத் தெரியும். அதை அறியாமல் அவன், அவளை முழுப் பட்டிக்காடாக வைத்துப் பேசுகிறான் என்றால் அவளுக்கு வருத்தம் ஏற்படாமல் என்ன செய்யும்?
அந்த நண்பனின் வீட்டை அவர்கள் அடைந்த பொழுது அவள் எதிர்பார்த்ததற்கு மேலாக இருந்தது, அந்தத் தம்பதிகள் நடந்துகொண்ட மாதிரி. அந்தப் பெண் நல்ல அழகியாக இருந்தாள். கொடி போன்ற துவண்ட உடலும், பால்போல் வெளுப்பான மேனியும், நல்ல வட்ட வடிவமான அழகிய முகமும் படைத்தவளாக இருந்தாள். அவள் கணவன் அவள் அழகில் சொக்கிப்போயிருக் கிறான் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது. இரு வரும் பவானிக்கும் அவள் அகமுடையானுக்கும் எதிரில், மற்றொருவர் தங்களைப் பார்த்துக்கொண் டிருக்கிறார்கள் என்னும் நினைவே இல்லாதவர்களாக, ஒருவருக்கொருவர் வெகு சுதந்தரத்துடன் நடந்துகொண்டார்கள். அவர்கள் புதுக்குடித்தனம் வைத்திருந்தார்கள். வந்தவர்களும் உட்கார்ந்து, அவர்களும் உட்கார நாற்காலிகள் போதவில்லை.
“வா, உன்னை நான் மடியில் உட்கார்த்திக்கொள் கிறேன்” என்று அவன், தான் ஒருநாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பெண்டாட்டியிடம் கூறினான். “போதுமே!” எனக்கொன்றும் உங்கள் மடி வேண்டியது இல்லை. பக்கத் தில் இடம் கொடுங்கள். போதும்” என்று அவள் சொல்லி, அவனை நாற்காலியில் ஒருபுறமாய்த் தள்ளிக்கொண்டு இடித்து உட்கார்ந்தாள்.
“என் மடியில் உட்கார்ந்தால் என்னவாம்? நம் முடைய ஈசுவராதிகள் அவ்வளவு பேரும் பெண்டாட் டியை மடியில்தானே வைத்துக்கொண் டிருக்கிறார்கள்; இல்லையாடா ராஜா?” என்று பவானியின் கணவனைத் தனக்குச் சிபாரிசு செய்ய அழைத்தான் அந்த நண்பன்.
“மடியில் மட்டும் என்ன? மார்பிலும் தலையிலுங் கூட வைத்துக்கொண் டிருக்கிறார்கள்” என்று ராஜா விளை யாட்டாக விடை பகர்ந்தபொழுது, “நீங்கள் இவருக்குச் சரியான சிநேகிதராக இருப்பீர்கள்போல் இருக்கிறதே! இவரை மேலும் தூபம் போட்டுத் தூண்டிவிடுகிறீர் களே!’ என்று, சற்றே கோபித்துக்கொள்ளும் பாவனை யில் அந்தப் பெண் கூறினாள்.
அவர்கள் ஒருவரை ஒருவர் பரிகசித்துக்கொண்டு திரும்பத் திரும்பத் தங்களைப்பற்றியே பேசினார்களே தவிர, பொதுவான சம்பாஷணையே நடக்கவில்லை. காலையில் அவள் உப்புப் போட மறந்து, உணவு சமைத்ததை அவன் பரிகாசமாக எடுத்துச் சொன்னான். தனக்குச் சமையலில் உதவி செய்வதாக வந்து, தன்னையே சுற்றிக் கொண்டு அவன் தொந்தரவு கொடுத்ததால், தனக்குத் தட்டுக்கெட்டுப் போய்விட்டது என்று, அவன்மேல் அவள் குற்றத்தைச் சாட்டினாள். இவ்விதம் அவர்கள் ஒருவருக் கொருவர் கேலி வார்த்தைகள் பரிமாறிக் கொள்வதைப் பவானி, நாடகம் பார்ப்பதைப்போலப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு அதில் கலந்துகொண்டு ஒரு வார்த்தையாவது பேசத் தெரியவில்லை.
அவர்கள் விடை பெற்றுக்கொண்டு கிளம்பின பொழுது அந்தத் தம்பதிகளும் சிறிது தூரம் அவர்க ளுடன் உலாவ வருவதாகப் புறப்பட்டார்கள். “நான் என்ன உடுத்துக்கொள்ளட்டும்?” என்று அவள் தன் கணவனைக் கொஞ்சலாகக் கேட்டாள்.
“இவள் வெளியே கிளம்பினால், நான்தான் ஆடை பொறுக்கிக் கொடுக்க வேண்டும். நீங்கள் ஒன்றும் இது மாதிரி ராஜாவைத் தொந்தரவு செய்ய மாட்டீர்களே?” என்று அவன், தன் மனைவியிடத்தில் இருக்கும் சந்தோ ஷத்தில் பவானியைப் பார்த்துக் கேட்டான். அவன் திடீ ரென்று அவ்விதம் கேட்டால் அவள் என்ன பதில் சொல்லுவாள்? ஏதோ விளையாட்டுக்கு அவன் கேட்டா லும் அவளுக்கு ஒன்றும் சொல்லத் தெரியாமல் போயிற்று.
“நீ கலா ரசிகன். உன்னைப்போலவா நான்? என்னைக் கேட்டால் எனக்கு என்ன சொல்லத் தெரியும்?” என்று ராஜாதான் அவளுக்காக ஏதோ பதில் சொன்னான்.
பவானிக்கு, தான் பேசக்கூடத் தெரியாமல் இடித்த புளிமாதிரி அவர்கள் மத்தியில் உட்கார்ந்திருப்பதாகப் பட்டது அவள் கணவன், அந்தத் தம்பதிகள், ஆகிய மூவரும் உற்சாகமாகப் பேசுவதற்குத் தான் தடையாக இருப்பதாக நினைத்தாள். அவளுக்கு அவர்களோடு சேர்ந்து, அந்த இடத்தில் இருக்கவே பிடிக்கவில்லை. அந்த நண்பனின் மனைவியைப்போலத் தான் அழகில்லை என்றா லும், அவள், தன் கணவனுக்குச் சமமாகச் சமத்காரமாக வார்த்தையாடுகிறாளே, அதுமாதிரியும் தனக்குச் சிறிதும் தெரியவில்லையே என்ற நினைப்பு, பின்னும் அவளை மௌனம் சாதிக்கச் செய்தது.
பிறகு அவர்கள் வீடு திரும்பினபொழுது வழியில் அவள் கணவன், “என்ன, அப்படிப் பேசாமடந்தையாக உட்கார்ந்திருந்தாயே?” என்று கேட்டான். அவன் குரலில் கோபம் தொனிப்பதாக அவளுக்குத் தோன்றிற்று. “எனக்குப் பேசத் தெரிந்தால்தானே?” என்று தாழ்மை யாகப் பதில் சொன்னாள். “பேசத் தெரியாதென்று உண்டா? அப்படி என்ன பெரிய விஷயங்கள் பேசிவிட் டார்கள்? எப்பொழுதும் நாலு பேர் நடுவில் கலகலப்பாக இருக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்; தெரியுமா? அது தான் அழகு” என்று அவன் சற்றுக் கடுமையாகச் சொன்னான்.
சிநேகிதன் மனைவியையும் தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்து,தன்னுடைய குறைகளைப் பின்னும் அதிகமாகக் கண்டு, அவனுக்குத் தன்னிடம் வெறுப்பு மேலிட்டிருக் கிறது, என்று அவள் நினைத்தாள். துக்கம் அவள் நெஞ்சை அடைத்தது. ‘நம்மைச் சொல்லுகிறாரே! இவர் என்ன செய்கிறார்? அந்தப் பெண்ணின் கணவனைப் போலவா இவர் நம்மிடம் ஆசை பொங்க நடந்துகொள்ளு கிறார்? வீட்டில் இவர் சகோதரர்களைப்போலக்கூடச் சகஜமாக நம்மிடம் பழகுவதில்லையே! வெளிப்படையாக அன்புகாட்டி,ஒரு வார்த்தை சொல்லுவதில்லையே! அப்படி இருக்கத் திடீரென்று இவரோடு தாராளமாக இருக்க எப்படித் தோன்றும்? இவர் அதை எதிர்பார்ப்பதுதான் நியாயமா?’
அவள் கண்களில் நீர் துளித்தது. அதை அரை குறையாகக் கவனித்த அவன், “உன்னை யார் என்ன சொல்லிவிட்டார்கள்? எதற்காக அழுகிறாய்?” என்று சொல்லி, மேலே ஒன்றும் பேசாமல் நிறுத்திக்கொண் டான். தான் சாதாரணமாகச் சொன்னதை அவள் தப்பாக எடுத்துக்கொள்ளுகிறாள். மேலும் மேலும் அந்தப் பேச்சு வேண்டாமென்று அவன் நிறுத்தினான். ஆனால் காரணம் எதுவானாலும் பவானிக்குப் பேச்சு அந்த மட்டோடு நின்றதில் ஆறுதல் உண்டாயிற்று.
பேச்சுத் தொடர்ந்து நடந்தால் அவள் மனத்திலே உறுத்திக்கொண் டிருக்கும் எண்ணங்களை அவள் அசட்டுத்தனமாக வெளியிட நேரலாம். அவற்றை அவன் தெரிந்துகொள்ளாதவரைக்கும் நல்ல தல்லவா? தெரிந் தால் அந்தப் பெண்ணிடத்தில் அவளுடைய அழகுக் காகவும் சமர்த்துக்காகவும் அவளுக்குப் பொறாமை என்று எண்ணிவிடுவான். அவனும் அந்த அழகில் ஈடு பட்டுத்தான் அவர்களுடன் அவ்வளவு உற்சாகமாகப் பேசிக்கொண் டிருந்தான் என்பதை ஒப்புக்கொள்வானா? அதற்குத் தடையாக இருந்தாளென்று பவானியிடம் அவனுக்குக் கோபம் வருகிறது என்பதையும் ஏற்றுக் கொள்வானா? மாட்டான். தன்னைக் கலாரசிகன் அல்ல என்று கூறிக்கொண்டானே, பவானி மட்டும் அந்த நண்ப னின் மனைவியைப்போல அழகியாக இருந்தால் அப் பொழுது அவன் தானாகவே ரசிகனாக மாறி, அவள் ஆடை அலங்காரங்களில் சிரத்தை காண்பிக்க மாட்டானா?- இவ்வாறெல்லாம் இருந்தது அவள் மனம்.
அவளுக்கு ரூபம் இல்லை, படிப்பு இல்லை, சமர்த்தும் இல்லை. இவ்விதம் ஒரு குறை இருந்துகொண்டு எல்லாக் குறைகளையும் அவளிடம் தோன்ற வைக்கிறது. இதனா லெல்லாம் அவருக்கு என்னிடம் பிரியம் இல்லை’ என்று உறுதியாக எண்ணினாள் பவானி. ‘என்னிடம் அன்பில்லா மல் இருக்கிறதே! என்னை என் மணந்துகொண்டார்?’ இந்தக் கேள்வியைத் தனக்குள்ளேயே கேட்டுக் கேட்டு மனம் புழுங்கினாள். ‘அம்மாவின் வற்புறுத்தலுக்கு வேண்டிக் கல்யாணம் செய்துகொண்டு விட்டாரோ?’ ஆனால் அவள் மாமியார், ஒரு தரமும் அப்படிச் சொன்ன தில்லை. ‘ஏண்டா, பெண்ணைப் பார்த்தாயே; கறுப்பே; பிடித்ததா, தேவலையா?” என்று பவானியைப் பார்த்து வந்த மகனிடம் அவள் கேட்டதற்கு, “அம்மா, நீதான் சொல்லுவாயே, அம்பாளே மரகத வர்ணமென்று. உனக் குப் பிடித்திருக்கிறது; குலம் இருக்கிறது; பணம் இருக் கிறது; குணமும் இருக்கும். வேறே என்ன வேணும்?” என்று பதில் சொன்னானாம். மாமியார் வாய்க்கு வாய் அதைச் சொல்லுகிறாள். ‘பவானி கறுப்பே!’ என்று யாராவது கேட்டால், “விதியுடையாள் கண்ணுக்கு விளக் காய் இருப்பாள்; அவனுக்குப் பிடித்துவிட்டது; பண்ணிக் கொண்டிருக்கிறான்” என்றுதான் அவள் பதில் சொல்லு கிறது வழக்கம். இதைப் பவானி அடிக்கடி கேட்டிருக் கிறாள். இருந்தாலும் என்ன?
அவன் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் மனத்தி னுள் அவனுக்குத் தன்னிடம் பிரியம் இருக்க நியாயம் இல்லை என்று அவளுக்கு நிச்சயமாகத் தோன்றிற்று. சந் தோஷம் இல்லாமல் நாட்களைக் கழிக்கத் தொடங்கினாள். இனி அவனோடுகூட ஜன்மத்துக்கும் எங்கும் போகக் கூடாது என்று உறுதி கொண்டாள். தன்னை உடன் அழைத்துச் செல்வதால்தானே அவனுக்குத் தன்னால் அவ மானம் ஏற்படுகிறது? வெறுப்பும் அதிகமாகிறது? அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்னும் எண்ணம் அவளுக்கு. பிறகு வாழ்க்கையே பிடிக்காமல் அவளுக்கு அலுத்துவரக் கேட்கவேண்டுமா? வீட்டில் நாத்தனார்கள், ஓர்ப்படிகள் இவர்களிடத்திலுங்கூட மன வேற்றுமை கொண்டாள். அவர்கள் பேசிய சாதாரண வார்த்தைக ளெல்லாம் விபரீதமாகப் பட்டன.
ஒரு சமயம் அவள், ஸ்நானம் செய்யவில்லையோ என்ற அரை குறையான சந்தேகம் எழுந்தது. “மன்னி, உனக்குப் பெண் வேணுமா? பிள்ளை வேணுமா? குழந்தை யாரைக்கொண்டு பிறக்கவேணும்? உன்னையா, அண்ணாவையா?” என்று அவள் நாத்தனார்கள் வேடிக்கையாகக் கேட்டார்கள். தன் ரூபத்தை அவர்கள் கேலி செய்வ தாக அவள் எண்ணிக்கொண்டாள். அதற்கு அவள் ஒர்ப்படிகள் சிரித்தபொழுது அவளுக்கு அவர்களிடம் மிகுந்த கோபமே வந்தது. யாருடனும் சகஜமாக இராமல் ஒதுங்கி இருக்கத் தொடங்கினாள்.
‘பவானிக்கு ஏன் நம்மைக் கண்டால் இப்படிப் பிடிக் காமல் போய்க்கொண்டு வருகிறது?’ என்று அவள் புக்க கத்தவர்கள் நினைக்கலானார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் சிறு குற்றங் குறைகள் தலைகாட்டத் தொடங்கி, மனஸ்தாபம் உண்டாக ஆரம்பித்தது. அவள் தன் செயல்களாலும் பேச்சாலும், புக்ககத்தில் தனக்கு வேண்டியவர்கள் யாரும் இல்லை என்கிற நிலைக்கு வந்து விட்டாள். இவ்விதம் அங்கு எல்லாரையும் பகைத்துக் கொண்டு போவதில் நம் கணவருக்கு எவ்வளவு ஏமாற்றத் தையும் வருத்தத்தையும் கொடுக்கிறோம் என்பதை அவள் புரிந்துகொள்ளவே இல்லை.
பட்டணவாசத்துப் பெண்களுடைய அடக்கமற்ற மாதிரிகள் பிடிக்காதத னாலேயே, கிராமத்துப் பெண்ணான அவளை மணந்தான் அவன். சுபாவத்தில் அவளுக்கு அமரிக் கையான குணம் பழகியிருக்குமென்று எதிர்பார்த்தான். நல்ல முறையில், வேணுமென்ற அளவு, புது நாகரிகத்தை அவளுக்குக் கற்றுக்கொடுத்து, தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கையைத் தன் மனம்போல உயர்வாகச் செய்து கொள்ள வேண்டுமென்று அவன் நினைத்திருந்தான். அவ் வளவையும் தன் சொந்தக் கற்பனைகளால் ஏதோ ஒரு விதமாக நடந்து பாழ்படுத்திக்கொண்டாள் பவானி. அவன் தன்னிடம் நிஜமான வெறுப்புக் கொள்ளும்படி செய்தாள். அவள் தன் மனக்குறையை வாய்விட்டு அவ னிடம் சொல்லியிருந்தாலும் அவன் அதை ஒருவிதமாகத் தீர்த்திருப்பான். அவ்வளவுக்கு அவனிடம் சொந்தம் தோன்றினால் அல்லவா அவளுக்கு அது சாத்தியமாகும்? ஆகையால் அதற்கு வழி இல்லாமல் போயிற்று. புக்ககத் தில் இருக்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை.
ஒரு முறை பிறந்தகம் சென்றவள், வருஷம் ஒன்றாகி யும் திரும்பக் கணவன் வீடு செல்லாமல் இருந்தாள். ஊரில், அவள் கணவனுடன் சண்டை இட்டுக்கொண்டு வந்துவிட்டதாக, ஏதேதோ வதந்தி கிளம்பினதைக் கேட்டு, அவள் பெற்றோர் அவளைப் பிடிவாதமாகக் கொண்டு போய் விட்டு வந்தார்கள். அவள் மனசு இல் லாமல் வந்து சேர்ந்தாள்.
இவ்வளவையும் மாற்றக்கூடிய நிலைமை ஒன்று அவள் எதிர்பாராமல் சீக்கிரமே உண்டாயிற்று. அவள் கர்ப்பம் தரித்தாள். ஏதோ ஓர் இன்ப உணர்ச்சி அவள் உள்ளத்திலே பரவத் தொடங்கியது. அவள் எப்படி இருங் தாலும் அவளை உண்மையாக நேசிக்கக்கூடிய ஓர் ஆத்மா உதயமாகப் போகிறதல்லவா? அந்த ஆனந்தம் அவள் மனத்தில் நிறைந்து, அவளையே மாற்றியது எனலாம். வீட்டில் கணவன், மாமியார் முதலிய எல்லாருமே அவள் உடல் நலத்தில் சிரத்தையும் கவலையும் காண்பிப்பதாகத் தோன்றவே, சிறிது திருப்தி கொண்டாள். அவள் பிர சவிக்க வென்று பிறந்தகம் புறப்பட்டபொழுது, அவள் குழந்தையும் கையுமாக க்ஷேமமாகத் திரும்ப வேண்டி, அவள் மாமியார் க்ஷேம தண்டுலம் கட்டிக் கொடுத்து, ரக்ஷையாகத் தலையில் வேப்பிலை செருகி, நெற்றிக்குச் சுவாமி விபூதி இட்டாள். கணவன் அவளை ரெயிலடி வரையில் கொண்டுவந்து விட்டு, ஜாக்கிரதையாகப் பார்த் துக்கொள்ளும்படி மாமனாரிடம் சொல்லிச சென்றான். இவை அவ்வளவும் அவளை உள்ளுறப் பூரிப்படையச் செய்தன.
பிறகு அவளுக்கு ஆண்குழந்தை பிறந்தபோது, குழந்தை அவள் கணவனையே உரித்து வைத்தாற்போலச் சிவந்த மேனியுடன் விளங்கிற்று. பார்த்தவர்க ளெல்லாம் குழந்தையின் அழகை மெச்சினார்கள்; அவள் புக்ககத்த வர்கள் அவ்வளவு பேரும் குழந்தையின் அற்புதமான அழகில் மனத்தைப் பறிகொடுத்தார்கள்.
பவானியின் ரூபத்தைக் குறித்து அவள் நாத்தனார்கள், ஓர்ப்படிகள் இவர்களுக்குப் பரிகாச எண்ணம் இருந்திருந்தால், அது இப்பொழுது இருந்த இடம் தெரியாமல் போயிருக்க வேண்டும். அழகிகளான அவள் ஓர்ப்படிகளுக்கு இவ்வளவு லக்ஷணமான குழந்தை பிறக்கவில்லையே! பவானி, தான் அழகில்லை என்பதையே இப்போது மறந்து போனாள். அந்தச் சுந்தரமான குழந்தையைப் பெற்றுவிட்டதில், தானும் சுந்தரமாகிவிட்டதாக அவளுக்குத் தோன்றியது.
முதலில் குழந்தையையும் அவளையும் கணவன் பார்க்க வந்தபொழுது, குழந்தையை மட்டுமல்ல, தன்னையும் அவன் ஆசை பொங்கப் பார்ப்பதாக எண்ணினாள். அவன் கண்களிலிருந்து அவள் எதையோ புதிதாக அறிந்து கொண்டாள்.
கணவனிடம் புதிதாகத் தோன்றின ஒருவித சுவாதீ னத்தில், “இனிமேல் உங்களுக்கு நான் அழகில்லை என்கிற குறை இருக்காதல்லவா?” என்று கேட்டேவிட்டாள். “நீ அழகில்லை என்று நான் குறைப்பட்டேனா? யார் சொன்னது?” என்று அவன் அதிசயத்தோடு கேட்டபொழுது, ஒருவர் சொல்ல வேண்டுமா? எனக்குத் தெரியாதா? நீங்கள் இவ்வளவு சுந்தர புருஷராக இருக்கும்பொழுது, நான் குரூபியாக இருந்தால், நியாயமாகக் குறை இருக்கத் தானே இருக்கும்? அதில் தவறு என்ன?” என்றாள் பவானி.
அப்பொழுதுதான் அவனுக்கு விஷயம் விளங்கிற்று. இவ்வளவு நாளும் அவள் ஏதோ ஒருமாதிரி நடந்துகொண் டதற்குக் காரணமும் புரியத் தொடங்கியது. தான், அவள் நினைத்தபடி இருப்பவன் அல்ல என்று அவளுக்கு எடுத்துச் சொன்னான். பிறகுதான், ‘நம்முடைய விபரீதமான மனப் போக்கினால் இவருக்கு மன வருத்தத்தைக் கொடுத்து நாமும் துன்புற்றோமே?’ என்பது அவளுக்குத் தெரிய வந்தது. நல்லகாலம்; முழுதும் அவ்விதமே இருந்து தன் வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொண்டுவிடாமல், அந்த ம ட்டும் அழகான குழந்தையைப் பெற்றதன் பலனாக, மனம்விட்டுப் பேசிச் சரிசெய்து கொண்டோமே என்று அவள் மிகுந்த ஆறுதலை அடைந்தாள்.
இப்பொழுதெல்லாம் கணவனின் சௌந்தரியத்திற் குத்தகுந்தபடி தனக்கு ரூபமில்லையே என்கிற குறையோ வருத்தமோ அவளுக்குத் துளியும் இல்லை. தானும் அவ னும் ஒன்று என்ற மனோபாவம் அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. இவ்வளவும் அவளுடைய முதல் குழக்தை, தந்தை யைக் கொண்டு, மிகுந்த லட்சணத்துடன் பிறக்கக் கொண்டுதானே சாத்தியமாயிற்று? இனி அவளுக்குப் பிறக்கப்போகும் மற்றக் குழந்தைகள் எப்படி இருந்தா லும் அது ஒரு பொருட்டில்லை. உலகத்தில் எதிலும் முதல் தோற்றத்திற்குத் தனி மதிப்புத்தானே?
அவள் பிறந்தகம் வந்து, பத்துத் தினங்களே ஆகின் றன. அதற்குள் அவளை. ‘எப்பொழுது வரப்போகிறாய்?? என்று கேட்டுப் புக்ககத்தவர்களிடமிருந்து கடிதத்திற்கு மேல் கடிதம் வந்தது. ஏன்? குழந்தையைப் பார்க்காமல் அவர்களால் இருக்க முடியவில்லை. அவளுடன் தானே குழந்தை வருவான்? அதனால் அவர்கள் அவ்விதம் அவளை வருந்தி அழைக்கிறார்கள். அவர்கள் வீட்டில், அவள் எல்லோருக்கும் தாழ்வாக இருந்தவள்; இப்பொழுது, ராம னைப் பெற்ற கௌசலையைப்போல எல்லாருக்கும் மேலா கக் கருதிக் கௌரவிக்கப்படுகிறாள். எல்லாம் அவளு டைய முதல் குழந்தையால்தான்.
அந்தக் குழந்தையும், அவள் ரூபத்துக்காகவோ. வேறு எதற்காகவோ அவளிடம் அன்பு செலுத்தப் போகிறதில்லை. எந்தக் குழந்தைக்கும் அதன் தாய் உல கத்தில் எல்லாரையும்விட மேலானவள், பிரியமானவள் அல்லவா?
பவானியின் குழந்தையும் அதுபோலத்தான். இ பொழுது அவன் கண்ணை விழித்ததும் பவானியைப் பார்த்து, எவ்வளவு ஆவலுடன், எப்படி, வேகமாக அவளி டம் தாவி வருகிறான், பாருங்களேன்!
– இரட்டைக் கதைகள் (வெள்ளிவிழா வெளியீடு), முதற்பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.