மாற்றம்

நான் சென்னைக்குச்செல்லும் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தேன். ‘சென்னை’ எனப் பளிச்சென்று எழுதி வைத்துக்கொண்டு புதுவைப் பேருந்து நிலயத்தில் பேருந்துகள் சில அணிவகுத்து நின்றன.
நானும் என் மனைவியும் சீர்காழிக்குப்பக்கமாக ஒரு பயணம் போய்வந்தோம்… மிகநெருங்கிய உறவினர் இறப்பொன்றுக்குச்சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தோம்.
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் வண்டியின் முன்பக்கத்தில் சென்னை என்று எழுதிய போர்டு இருக்கிறதே என்று ஏறி அமர்ந்துவிடவும் முடிகிறதா அதுதான் இல்லை. ஒரு பத்து பேருந்துக்கு ஒன்பது பேருந்து கிழக்கு கடற்கரைச்சாலை(ECR) வழி என்று சொல்லி நம்மை ஏமாற்றி விடுகின்றன. தாம்பரம் வழி சென்றால் தான் என் வீடு போய்ச்சேர வசதியாக இருக்கும். பேருந்துகளில் சில பெருங்களத்தூரோடு பைபாசில் போய்விடும் ஆக தாம்பரம் போகாது.
சென்னைக்குப் புதுச்சேரியிலிருந்து புறப்படும் வண்டிகளில் மரக்காணம் வழி சென்று மதுராந்தகம் ஏரிக்கரை காட்டி கிராமத்து அழகை எல்லாம் பாரடா பார் எனப் பார்க்க வைத்து பயண நேரத்தைக் கொஞ்சம் கூட்டி காலை வாறி விடும் ரகமும் உண்டு.
இதோ திண்டிவனம் வழியே பைபாசில் கோயம்பேடு செல்லும் ஒரு பேருந்தைக் கண்டுபிடித்தாயிற்று. அதற்குத்தானே இத்தனைப்பாடு. பேருந்துக்குள்ளாாக ஏறி இடம் போடவேண்டும். இடம் போடுவதில் ஏத்தனை சண்டை. பொறுத்தார் பூமி ஆள்வார் பொறாதார் காடாள்வார் என்கிற வசனம் எல்லாம் இங்கே கவைக்கு உதவுமா?. அந்தப்பேருந்தில் இரண்டு வழிகள் இருந்தன. முன் பக்கமும் பின் பக்கமும் மக்கள் முண்டி அடித்துக்கொண்டு ஏறினார்கள். மூட்டை முடிச்சுக்கள், குழந்தைக்குட்டிகள், கைகால் முடியாதவர்கள், காயலாக்காரர்கள் ஏறுகிறார்களே என்று யாரும் தாட்சண்ணியம் பார்ப்பதில்லை. பார்க்க முடியாதபடிக்கு நடப்புக்கள் சிக்கலாகிக் கிடக்கின்றன.
தலை வலியும் திருகு வலியும் அவர் அவர்களுக்கு வந்தால் மட்டுமே சில பூடகமான சமாச்சாரங்கள் அம்பலப்படுகின்றன. எப்படியோ ஒரு இரண்டு பேர் அமரும் இருக்கையைப் பிடித்து விட்டேன். ஒரு பேருந்தில் அமர்ந்து பயணிக்க ஒரு சீட்டுக் கிடைத்து விட்டதில் ஒரு நிம்மதி அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று பொய் சொல்வானேன்.
வண்டி கிளம்ப இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? என் மனைவி வினா வைத்தாள்.இன்னும் பத்து நிமிடம் ஆகலாம் என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். ‘லோடாயிட்டா கெளம்பிடறதுதான்’. வண்டியின் கண்டக்டர் வெடுக்கென்று பதில் சொன்னார்.
‘பாத்ரூம் போய் வரலாமா?’ என் மனைவி கண்டக்டருக்கு வினா வைத்தாள். ‘பேசாதிங்க சட்டுனு போனாமா வந்தமான்னு வாங்க’ அவர் கட்டளை தந்தார். ஒரு பத்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவள் வசம் கொடுத்தேன்.
‘இது இங்க செல்லுமா’, தமிழ் நாட்டிலே பத்து ரூபாய் நாணயத்தை அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அதன் பிறப்பில் என்னவோ குறையாம். புதுச்சேரியிலுமா அப்படி? ‘இந்த விஷயத்தில் தமிழ் நாடென்ன புதுச்சேரி என்ன எல்லாம் ஒன்றுதான்’ அவள் பதில் சொன்னாள். ஒரு இருபது ரூபாய் கொடுக்க அந்த நோட்டோடு போனாள் உடன் வந்தாள். நான் தான் அதைக்கொடுத்து அதுவும் இப்போதுதானே அனுப்பினேன். போனதும் தெரியவில்லை வந்ததும் தெரியவில்லை. என்னிடம் ஒரு பத்து ரூபாயை பாக்கி என நீட்டினாள். அதுவும் ஒரு பத்து ரூபாய் நாணயம். ‘மீண்டும் இப்படி கோகிலாவா’ என்றேன்.
‘சென்னை செல்பவர்களுக்கு ஒன்றும் பிரச்சனையே இல்லை. இந்த பத்து ரூபாய் நாணயம் அங்கு ஓடிவிடும்’ பாத்ரூம் பொறுப்பாளி சொன்னதாகச்சொன்னாள் அவள்.
எங்கள் இருக்கைக்குப்பக்கத்தில் பத்து கல்லூரி மாணவர்கள் ஏறி அமர்ந்திருந்தார்கள். அதனில் நான்கு பேருக்குப் பெண்கள். எல்லோருமே இருபது வயதுகளில் தெரிந்தார்கள். யாருக்கும் வாய் ஓயவில்லை. பேசிக்கொண்டே இருந்தார்கள். சத்தம் போட்டு ப்பேசினார்கள். பத்து பேருமே தமிழ் நாட்டுக்காரர்கள் இல்லை. இந்தியும் ஆங்கிலமும் பேசினார்கள் எத்தனை வேகம். புதுச்சேரியில் என்ன படிக்கிறார்களோ அது ஒன்றும் தெரியவில்லை. கண்டக்டர் டிக்கட் போட்டுக்கொண்டு வந்தார் பத்து பேருக்கும் பத்து சீட்டு ஒரு மாணவனே வாங்கி முடித்தான். இனி கன ஜோர். ஒருவர் மடியில் ஒருவர் படுத்துக்கொண்டார்கள். தாடை பிடித்துக் கொஞ்சிக் கொண்டார்கள். எது எதனையோ கொண்டு வந்திருந்ததை ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டுக் கொண்டார்கள். ‘பொது மக்கள் பயணம் செல்லும் அரசுப் பேருந்திலா இப்படி?’ என் மனைவி என்னைக் கேட்டாள். மெதுவாகத்தான் என்னைக் கேட்டாள். அதற்குள் ஒரு மாணவன் எங்களை முறைக்க ஆரம்பித்தாள். ‘அவர்களுக்கு தமிழும் தெரியலாம்’ என்றேன்.
‘நமக்குத்தான் தமிழ் மட்டுமே தெரியும்’
‘அது நமது வரலாறு’ நான் பதில் சொன்னேன்.. மாணவிகள் ஒரு சிலர் இந்திப்பாடல் ஒன்றை பாடினர். கோரசாக எல்லோரும் அதையே பாடிக் கொண்டார்கள். எங்களுக்குப் பின்னால் இருக்கையில் இருந்த ஒருவர் நடுத்தர வயதிருக்கலாம். நெளிய ஆரம்பித்தார். எழுந்து கொண்டார். ‘படிக்கிற பசங்கதானே நீங்க நல்ல படியா வரமாட்டிங்களா. அட்டூழியம் பண்ணுறீீங்க. இது பொது மக்கள் பயணம் செய்ற்து. கொஞ்சம் அடங்கிப் போனம்னா நல்லது. தெரிதா’ என்று சத்தம் போட்டார். பத்து பேரும் அந்த மனிதரை ஒரு முறை பார்த்துக் கொண்டனர். அவ்வளவுதான்.
கண்டக்டர் அருகில் வந்தார். ‘காலேஜ் பசங்க கிட்ட எல்லாம் யாரு பேசி மீள முடியும். புசுக்குன்னு வண்டிய நிப்பாட்டிப் போடுவாங்க. அதுவும் இதுங்க நம்ம பாஷையும் பேசறது இல்லயே. நாம என்னா பேசுனா என்ன அதுங்களுக்கு வெளங்கப்போவுது. இன்னும் செத்த நேரம் பொறுமையா இருந்தா போதும்’ சமாதானம் சொல்லிக் கொண்டர் ‘இதுவே தனியார் வண்டின்னா இப்படி கும்மாளம் போடுவாங்களா வாயையும் இன்னொண்ணையும் இழுத்து மூடிகுனு உக்காந்து இருப்பாங்க’ மீண்டும் சொன்னார் அந்த நடுத்தர வயதுக்காரர். உடன் என் மனைவியும் ஆரம்பித்தாள் அதுவும் என்னிடம்தான் ‘யாராவது ஒருத்தர் கேக்குணும். பொது எடத்துல எப்பிடி நடந்துகுறதுன்னு இருக்கு. அதுக்குன்னு ஒரு அளவு வேணாம்’ நான் தான் அவளுக்கு சமாதானம் சொன்னேன். ‘சென்னையில மின்சார ரயில்ல எப்பிடி இருக்கு. ஜோடி ஜோடியா என்ன என்ன அசிங்கமா நடக்குது. யாராவது வாய தொறக்க முடியுமா ஒரு பார்க்குக்கு இல்ல பீச்சுக்கு போய் நிம்மதியா உக்கார முடியாதா ஏன் ஒரு கோவிலு கொளம்னு போனாலும் இதே கண்றாவிதான்’ எங்களை ஒரு முறை பேருந்தின் நடத்துனர் பார்த்து ப்புன்னகை செய்தார். நாங்கள் பேசுவதில் அவருக்கு ஒரு சமாதானம் தெரிவதாய் உணர முடிந்தது. ‘நிர்வாகத்துல வேல செஞ்சி கை நிறைய சம்பளம் வாங்குற கண்டக்டருவ இந்த அநியாயத்தைக் கேக்குணும் அப்பத்தான் அது சரியாவுமிருக்கும்’ அந்த நடுத்தர வயதுக்காரர் மீண்டும் ஆரம்பித்தார். அவருக்கு முன் தலை மட்டும் கொஞ்சம் முடி இல்லாமல் வழுக்கை ஆக இருந்தது. பேருந்தில் சற்று அமைதி நிலவியது. வண்டி கிளியனூர் தாண்டிக்கொண்டிருந்தது. ‘அவரு ஆம்பளை அத கேட்டாரு எல்லாருமா கேக்குறாங்க. அது அது முழிக்கறத பாருங்க’ என்றாள் என் மனைவி. சில நிமிடங்கள் மட்டுமே கடந்தன. அந்த பத்து பேரும் கொல் என்று சிரித்தார்கள். அந்த முன் வழுக்கை நடுத்தர வயதுக்காரரைப் பார்த்துப் பத்து பேரும் ‘கொக்கு’காட்டினார்கள்.
பின் ஒருவர் மடியில் ஒருவர் படுத்துக்கொண்டு தலைமுடியை வருடினார்கள். கொஞ்சிக் கொண்டார்கள். இன்னும் என்ன எல்லாமோ செய்து கொண்டார்கள். பார்க்க அருவறுப்பாகவே உண்ர முடிந்தது. ‘நீங்க எல்லாம் பெசாசு சென்மமா எங்க ஊருக்குப், படிக்க இல்ல பொழைக்க வர்ரீங்க ஆனா உங்க கொழுப்பு கூடிகிட்டேத்தான போவுதுது. வண்டியில நாகரீகமா வருலாமுல்ல’ சொல்லிய நடுத்தர வயதுக்காரர் அமைதி ஆனார். ‘நமக்கு ஏன் வம்பு.எந்த கழுதயாவது எங்கயாவது மேயுட்டும்’ நான் என் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அந்த பத்து பேரில் ஒருத்தி கைபேசியை எடுத்தாள் ஏதோ நம்பரைப் போட்டாள்..நான்கு வார்த்தைதான் பேசினாள். கைபேசியை வைத்துவிட்டாள். அந்த பத்து பேருக்கும் என்னவோ சமிக்ஞை செய்தாள். எல்லோரும் கப்சிப் ஆயினர். எங்கும் அமைதி. அந்த பத்துபேரா இப்படி என்று எனக்கு அய்யம் தான் வந்தது. ‘கதவுன்னா அதுக்கு கண்டிப்பா ஒரு தாப்பா இருக்கணும்’ என்றாள் என் மனைவி. வழுக்கைத்தலை நடுத்தர வயதுக்காரர் உறங்க ஆரம்பித்தார். வண்டி திண்டிவனத்தைத் தொட்டுக் கொண்டு இருந்தது. தேசிய நெடுஞ்சாலை. மேம்பாலம் வருவதற்கு முன்பாகவே இருவர் எங்கள் வண்டியை நிறுத்தினர். ‘வண்டிய இங்க நிறுத்துறாங்க ஏன்.எதனா ரிப்பேரா’ நான் சொல்லிக்கொண்டிருந்தேன்.
வண்டியில் ஏறிய இருவரும் கண்டக்டரை நோக்கிச்சென்றார்கள். ‘யாரு அது குடிச்சுட்டு கலாட்டா பண்றது’ ஒரு சேர வினா வைத்தனர். ‘யாரும் அப்பிடி இல்லயே. ஒண்ணும் இங்க தகறாறு எதுவும் நடக்கவே இல்ல’ என்றார் கண்டக்டர். சற்று நேரம் முன்பு கைபேசியில் போன் செய்த அந்த இந்திக்காரப்பெண் வழுக்கைத் தலையரை கைகாட்டினாள். அவர் இன்னும் உறங்கிக் கொண்டு தான் இருந்தார். வண்டியில் ஏறிய இருவரில் ஒரு மீசைக்காரர் வழுக்கைத் தலையரின் சட்டையைப் பிடித்துக் கொண்டார் . ‘ஏய் எழுந்திரிடா. இங்க என்ன வண்டில குடிச்சுட்டு கலாட்டா பண்றயாம். இறங்குடா கீழே. உன்னை நாலு தட்டினாதான் சரியா வருவ’ தூக்கத்தில் இருந்த அந்த நடுத்தர வயதுக்காரர் ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த விழித்தார். ‘நீங்க யாரு. நீங்க என்ன ஏன் அடிச்சி விரட்டுறீங்க’ என்று ஓங்கிக்கத்தினார். ‘ஸ்டேசனுக்கு வந்தா புரியும் யாருன்னு’ பதில் சொன்னார் மீசைக்காரர்.
‘கழுதைய இறக்கி விடு. நாங்க அங்க பாத்துகறம்’ என்றார் கண்டக்டரிடம் அந்தக் காவல் அதிகாரி. இருவருமே ம்ஃப்டியில் இருந்தனர். அங்கு என்னதான் நடக்கிறது என்று நான் உற்று உற்றுப் பார்த்திக்கொண்டிருந்தேன். ‘அங்க பாக்காதிங்க நமக்கு ஏன் இந்த வீண் வம்பு’ என் மனைவி எச்சரித்தாள். ‘அதுவ இப்ப நம்பள பாத்து கூடம் மொறைக்குதே’ அந்த பத்து பேரையும் பார்த்து அவள் சொல்லிக் கொண்டாள். வழுக்கைத் தலையரை நெட்டியபடி சென்றனர் மஃப்டியில் வந்த காவல் துறையினர் இருவரும் ‘இங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணும் புரியில்ல. நானு ஏதும் போலிசு கம்ப்ளயிண்டு குடுக்கல. அந்த ஆசாமியும் தப்பா எதுவும் பேசிடல. அவரு குடிச்சிபுட்டு மப்புலயும் இல்ல. ஆனா ரெண்டு வார்த்தை நல்லதுக்குத்தான் கேட்டாரு. படிக்கிற புள்ளிவ. நம்ப பாஷை தெரியாத புள்ளிவதான். துக்குன்னு இம்புட்டு கொடுமையா’ புலம்பிக் கொண்டே இருந்தார் கண்டக்டர்.
நடுத்தர வயது வழுக்கைத் தலையரின் துணிப்பை ஒன்று அவரின் காலுக்குக் கீழாக இருந்ததை, அவர் மறந்து போய் வண்டியில் விட்டுச் சென்றதை என் மனைவியிடம் காட்டினேன். ‘மொதல்ல நம்ப பொழப்பை பாப்பம். செத்த கம்முன்னு வாங்க’ என்று மனைவி என்னை விரட்டினாள்.
‘எல்லாம் அந்த போன் போட்டுப் பேசுனவ அவ செய்ததுதான். அந்த பொம்பள நாம பேசுற பாச ரவையும் தெரியாதவ. அவளுக்கு பாரு நம்மூருல இம்மாம் பவுரு. நாயம் பேசுன மனுசன் ஒரு நல்லவரு அடி உத வாங்கிகிட்டு ப்போறாரு. கேக்குறதுக்குத்தான் யாருமில்ல.’ என் மனைவி மெதுவாகச்சொன்னாள்.
‘நாம இருக்குற ஊர்லதான் ஆவுட்டும், இப்ப எல்லாம் நாம பேசுற பாசய பேசுற நம்ம சனத்த, எங்கனா பாக்குறயா? காணோமே உனக்குத் தெரியாது. புள்ள, உலகமே மாறிகிட்டு வருது’ நான் பதில் சொன்னேன். அவர்கள் சேட்டையை மீண்டும் ஆரம்பித்தனர். நான் என் கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன்.
‘திண்டிவனம் சீட்டு எறங்கிக’ கண்டக்டர் ஆணை இட்டுக்கொன்டு இருந்தார். அந்த பத்துபேரின் அரட்டையும் கலாட்டாவும் உச்ச கதியில் தொடர்ந்து கொண்டிருந்தது.
![]() |
எஸ்ஸார்சி (பிறப்பு: மார்ச் 4 1954) என்கிற எஸ். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இளநிலைக் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 286
