மாப்பிள்ளையும் அப்பாவும்
கதையாசிரியர்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 125
(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்).

“என்ன, உனக்குத் திருமணமாமே! எப்பொ ழுது எங்களுக்கு விருந்து வைக்கப்போகிறாய்?” கோடைக் கால விருந்து ஒன்றில், பியோர் பெட் ரோவிச் மில்கினிடம் அவனுடைய நண்பன் கேட் டான்.
கொஞ்சம் கூச்சத்துடன், மில்கின், “நான் திருமணம் செய்து கொள்ளப்போவதாய் எங்கு பேசிக் கொண்டார்கள்? எந்த முட்டாள் அப்படிச் சொன்னான்?” எனக் கேட்டான்.
“எல்லோரும் அப்படித்தான் பேசிக்கொள்கி றார்கள். நடப்பதை எல்லாம் பார்க்கும்போது அப்ப டித்தான் தெரிகிறது. தம்பி, இனி எதையும் மறைக்க முடியாது. எங்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறாயா? ஹா, ஹா! எல்லா விஷயமும் தெரியும். கொண்ட்ராஷ்கின் குடும்பத்தினரோடு தான் நாள் முழுக்க இருக்கிறாய். பகல் சாப்பாடு, இரவு விருந்து எல்லாம் அங்குதான். ஆடல், பாடல் எல்லாம்… அவர்களுடைய பெண்ணான நஸ்தயா கொண்ட்ராஷ் கினைத் தவிர யாருடனும் நீ நடை பயிற்சிக்குப் போவதில்லை. அவளுக்கு மட்டும் தான் மலர்க் கொத்து கொண்டு போகிறாய். எல் லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கி றோம். அன்று ஒரு நாள், நஸ்தயாவின் அப்பாவைச் சந்தித்தேன். அவரும் விரைவில் திருமணம் நடக்கும் என்றார். நீ இங்கிருந்து நகரத்திற்கு மாற்றலாகிப் போனதும் அது நிகழும் என்று சொன்னார். எது எப்படியோ! நன்றாக இருங்கள். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்குக் கிடைக்கட்டும். உன்னைவிட, கொண்ட்ராஷ்கினுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பாவம்! அந்த மனிதருக்கு ஏழு மகள்கள். ஆமாம். ஏழு! இது ஒன்றும் விளையாட்டில்லை. ஏதோ ஒன்றாவது முடிந்ததே!”
“என்ன சோதனையடா இது!” என்று நினைத்தான் மில்கின்.
“நஸ்தயாவை நான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக, இவனோடு சேர்த்தால், இதுவரை பத்துபேர் சொல்லிவிட்டார்கள். இதை எல்லாம் இவர்கள் எப்படிக் கணக்கு போடுகிறார்கள்? வீணாய்ப் போனவர்கள்! காரணம் இது தான். கொண்ட்ராஷ்கின் வீட்டில் சாப்பிடுகிறேன். அவர் மகளுடன் மாலையில் நடைபயிற்சிக்குச் செல்கிறேன். இனி முடியாது. இது போன்ற வதந்திகளுக்கு இப்பொழுதே முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆமாம். இதற்கான நேரம் வந்துவிட் டது. இல்லையென்றால், நான் எங்கு இருக்கிறேன் என்று யோசிப்பதற்குள் இந்தப் படுபாவிகள் என்னை எதிலாவது சிக்கவைத்து விடுவார்கள்! நாளைக்கே அந்த வீட்டிற்குப் போய், அந்த மரமண்டை கொண்ட்ராஷ்கின்னிடம் இரண்டில் ஒன்று பேசித் தீர்த்துவிட வேண்டும். அப்பொழுது தான் அந்த ஆள் வீணாக மனக்கோட்டை கட்டாமல் இருப்பான். பிறகு என்ன, சும்மா விட்டுவிட முடியுமா?”
இந்த உரையாடல் நடந்த அடுத்த நாள், சங்கடத்தோடும் கொஞ்சம் பயத்தோடும் காணப்பட்ட மில்கின், நீதிமன்ற அதிகாரியான கொண்ட்ராஷ்கின் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.
“வா! வா! எப்படிப் போகுது வாழ்க்கை! என்ன, அவளைக் காணோம் என்று பார்க்கிறாயா? ஹா! ஹா! நஸ்தயா இதோ ஒரு நொடியில் வந்து விடுவாள். குஸ்ஸேப் வீடுவரை போய், தலையைக் காட்டிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனாள்.”
“பார்க்கப்போனால், நான் நஸ்தயாவைப் பார்க்க இப்பொழுது வரவில்லை. உங்களைச் சந்திக்கத்தான் வந்தேன். உங்களோடு ஒரு விஷயம் பேச வேண்டும். என் கண்ணில் ஏதோ…” எனக் கண்களைக் கசக்கிக்கொண்டு வாய்குழறியபடி ஆரம்பித்தான்.
கண்களைச் சிமிட்டியபடியே, “என்ன விஷயம் பேசப் போகிறாய்? ஹோ! ஹோ! ஏன் ரொம்ப பதற்றமாய் காணப்படுகிறாய்? காதெல்லாம் வியர்வை. இதுதான் உன்னிடம் உள்ள பிரச்சனை. என்ன விஷயம் பேசப் போகிறாய் என்று எனக்குத் தெரியும். ஹா! ஹா! ஏறக்குறைய அதற்கான நேரம்…”
“சுருக்கமாகச் சொல்வதென்றால், வேறு மாதிரி சொல்ல வேண்டுமென்றால்… என்ன சொல்ல வருகிறேன் என்றால்… நான் உங்களிடம் விடைபெற்றுப் போகலாம் என்று வந்தேன்… நான் நாளைக்குக் கிளம்புகிறேன்?”
“என்ன சொல்கிறாய்? கிளம்புகிறாயா?” ஆச்சரியத்தில் கொண்ட்ராஷ்கினின் கண்கள் விரிந்தன.
“கிளம்புகிறேன் என்றால் அப்படித்தான். நீங்கள் இதுவரை என்னிடம் காட்டிய விருந்தோம்பலுக்கு நன்றி. உங்கள் மகள்கள் மிகவும் அன்பானவர்கள். உங்களோடு பழகிய நாட்களை நான் எப்பொழுதும் மறக்க மாட்டேன்”.
வெளிறிப்போன முகத்தோடு, கொண்ட்ராஷ்கின் அவனைப் பார்த்து,
“தம்பி, எனக்கு நீ பேசுவது எதுவும் புரியவில்லை. யாராக இருந்தாலும் விலகிப் போவதற்கு உரிமை இருக்கிறது. உன் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ ஏதோ முக்கியமான காரணத்தைச் சொல்லாமல் தப்பிக்கப் பார்க்கிறாய். அப்படிச் செய்வது நேர்மையில்லையே!”.
“நான்… எனக்கு… புரியவில்லை. நான் என்ன தப்பிக்கப் பார்க்கிறேன்”.
“இந்தக் கோடைக்காலம் முழுவதும் நீ இங்கு வந்துகொண்டு இருக்கிறாய்; சாப்பிட்டாய்; குடித்தாய்; காலை, மாலை, இரவு என்று நாள் முழுவதும் என் மகள்களோடு அரட்டையடித்தாய். திடீரென்று இப்பொழுது, ‘நான் கிளம்புகிறேன்’ என்று சொன்னால்… அதுதான்…”
“என் எதிர்பார்ப்புக்களை நான் மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை”.
“நிச்சயமாக, நீயாக எதையும் கேட்கவில்லை. ஆனால், உன் நடவடிக்கையெல்லம் எதை நோக்கி இருந்தன என்று எனக்குத் தெரியாது என்றா நினைத்தாய்? நீ தினமும் எங்களுடன் விருந்து சாப்பிட்டாய். மாலை முழுவதும் நஸ்தயாவுடன் நடைபயிற்சிக்கு சென்றாய். இதற்கெல்லாம் அர்த்தம் எதுவும் இல்லை என்றா சொல்கிறாய்? மாப்பிள்ளையாக வரப்போகிறவர்கள் தான் தினமும் இப்படிச் சாப்பிடுவார்கள். நீ அப்படி இல்லை என்றால், இங்கு வருவதை ஊக்குவித்திருப்பேனா? ஆமாம். நான் அப்படித்தான் நினைக்கிறேன். இதில் நேர்மை வேண்டும். இனி நான் எதுவும் உன்னிடம் கேட்க விரும்பவில்லை. தயவு செய்து இப்பொழுதாவது உன் விருப்பத்தைச் சொல்லிவிடு. இல்லையென்றால்…”
“நஸ்தயா மிகவும் இனிமையானவள். அருமையான இளம்பெண். அவள்மீது பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன். அவளைவிட சிறந்த மனைவி எனக்குக் கிடைக்க மாட்டாள். ஆனால், எங்களிடையே ஒத்த கருத்துக்கள் இல்லை”.
“இதுதான் காரணமா?” புன்னகையோடு தொடர்ந்த கொண்ட்ராஷ்கின்,
“இவ்வளவுதானா? தன் கருத்துக்களும் கணவனின் கருத்துக்களும் ஒன்றாக இருக்கக்கூடிய பெண்ணை நீ கண்டுபிடித்துவிடுவாய் என நினைக்கிறாயா? ஓ! இளைஞர்களே! பசுமை நிறைந்த இளமைக்காலம் இப்படித்தான். இப்படி ஏதாவது ஒரு புதிய நடைமுறையைக் கண்டுபிடிக்கும். ஹா! ஹா! திடீரென யாரையும் ஒரேயடியாக மாற்றிவிட முடியாது. இப்பொழுது வேண்டுமானால் உங்கள் இருவருடைய கருத்துக்களும் வேறுபடலாம். ஆனால், நீங்கள் ஒன்றாக வாழத் தொடங்கிய பிறகு ஏற்ற தாழ்வுகள் அனைத்தும் சரி செய்யப் பட்டுவிடும். புதிதாக அமைக்கப்பட்ட பாதையில் நன்றாக சவாரி செய்ய முடியாது. ஆனால், கொஞ்சம் பயன்பாட்டுக்கு வந்ததும் வழவழப்பாக மாறிவி டும்”.
“இருக்கலாம்… ஆனால், நான் நஸ்தயாவுக்கு ஏற்றவனில்லை”
“இல்லை. இல்லை! அப்படிக் கண்டதையும் பேசக்கூடாது! நீ ஓர் அற்புதமான இளைஞன்”.
“அய்யோ. உங்களுக்கு என் குறைகளைப் பற்றி தெரியாது.. நான் ஏழை”.
“அதனால் என்ன? கடவுள் புண்ணியத்தில் உனக்கு ஒரு சம்பளம் கிடைக்கிறது!”
“நான் ஒரு குடிகாரன்.”
“அதெல்லாம் கிடையாது. நீ அதிகம் குடித்து நான் எப்பொழுதும் பார்த்ததில்லை.”
அவன் சொல்வதை அவர் ஏற்றுக்கொள்ள வில்லை என்பது தோளைக் குலுக்கியதிலிருந்து புரிந்தது.
“இளைஞர்கள் குடிக்காமல் இருக்க முடியாது. நானும் இளைஞனாக இருக்கும்போது குடித்தவன்தான். இப்பொழுது அதற்கான சுவடே என்னிடம் இல்லாமல் செய்துவிட்டேன். சில நேரங்களில் முடியாது என்று எதுவும் கிடையாது.”
“ஆனால், நான் நிறைய குடிப்பேன். அது ஒரு பரம்பரை பலவீனம்”.
“இருக்காது. நான் அதை நம்பமாட்டேன். நம்பவே மாட்டேன்”.
“எமகாதகன்! இவனை ஏமாற்ற முடியாது” என நினைத்தான் மில்கின். “எப்படியாவது தன் பெண்களைத் தள்ளிவிடப் பார்க்கிறான்”.
“எனக்குக் குடிப்பழக்கம் மட்டும் இல்லை. லஞ்சம் வாங்குவேன்”.
“தம்பி, இங்கே பார். யார்தான் வாங்கவில்லை. ஹி! ஹி! இதையெல்லாம் சொல்லி எனக்கு அதிர்ச்சி அளிக்க முடியும் என்று நினைக்கிறாயா?’
“இதற்குமேல் உங்களிடம் மறைக்க என்ன இருக்கிறது. என் தலையில் என்ன எழுதியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் நான் திருமணம் செய்து கொள்ள முடியாது. உங்களிடம் அந்த விஷயத்தை மறைத்து வந்தேன். ஆனால், இப்பொழுது நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அரசு பணத்தை முறைகேடு செய்த வழக்கு ஒன்றில் என்மேல் விசாரணை நடந்து வருகிறது”.
“என்ன, வழக்கு விசாரணையா?” என்ற கொண்ட்ராஷ்கின் வாயடைத்துப் போனார். “இது எனக்குப் புதிதாக இருக்கிறது. எனக்கு அதைப் பற்றித் தெரியாது. உன் வழக்கின் முடிவு என்ன என்று தெரிந்துகொள்ளும்வரை, நீ நிச்சயமாகத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. நிறைய கையாடல் செய்துவிட்டாயா?”
“ஒரு லட்சத்து நாற்பத்து நான்காயிரம்”.
“ஊம்! கொஞ்சம் பெரிய தொகைதான். நிச்சயம் நீ சைபீரியா போக வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். அப்படியானால், என் பெண்ணின் கதி அவ்வளவுதான். இதில் வேறு எதுவும் செய்வதற்கில்லை. கடவுள்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும்”.
மில்கின் ‘அப்பாடா’ எனப் பெருமூச்சு விட்டபடித் தன் தொப்பியை எடுக்கப் போனான்.
கொஞ்சம் யோசித்த கொண்ட்ராஷ்கின்,
“ஒரு வேளை, நஸ்தயா உன்னை நேசிப்பதாக இருந்தால் உன்னுடன் அங்குச் செல்லத் தயாராக இருப்பாள். தியாகம் செய்ய பயந்தால், அப்புறம் காதலில் என்ன இருக்கிறது?
மேலும், தோம்ஸ்க் குபேர்னியா செழிப்பாக இருக்கும். சைபீரியாவில் என் நண்பர்களின் வாழ்க்கை இங்கு இருப்பதைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது. என் குடும்பச் சூழ்நிலை தடுக்கா விட்டால், நானேகூட சைபீரியாவுக்குச் சென்றுவிடுவேன். நீ அவளிடம் திருமணம் பற்றிப் பேசு”.
“என்ன ஒரு விடாப்பிடியான ஆள் இவன்” என மில்கின் நினைத்தான். “தன்னை விட்டுப்போனால் போதும், பேயாக இருந்தாலும் திருமணம் செய்துவைத்துவிட சம்மதிப்பான்போல் இருக்கிறதே” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
சற்று உரத்த குரலில்,
“அத்துடன் முடியவில்லை. பண முறைகேடு மட்டுமல்ல, பண மோசடிக்காகவும் என்மேல் அவர்கள் வழக்குப் போடக்கூடும்”.
“இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லையே. ஒரே தண்டனைதான் கிடைக்கும்.”
“போச்சுடா!”
“என்ன முணுமுணுப்பு?”
“நன்றாகக் கவனியுங்கள். உங்களிடம் நான் எல்லாவற்றையும் சொல்லிவிடவில்லை. என் வாழ்க்கையில் முக்கியமான ரகசியத்தைச் சொல்லும்படி வைத்துவிடாதீர்கள். அது ஒரு பெரிய ரகசியம்.”
“உன் ரகசியத்தைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. அது ஒன்றும் இருக்காது”
“அய்யோ. அது இல்லை. நீங்கள் அதைக் கேட்டால்… நான் யார் என்று உங்களுக்குத் தெரிந்தால், அவ்வளவுதான். அப்படியே வாயடைந்து போய்வி டுவீர்கள்.
“நான் ஒரு…. தப்பி ஓடி வந்த குற்றவாளி”.
ஏதோ தேள் கொட்டியதுபோல் துணுக்குற்று, மில்கின்னிடமிருந்து கொண்ட்ராஷ்கின் ஓர் அடி பின்வாங்கினார். கொஞ்ச நேரம் அப்படியே பேசாமல், அசையாமல் மில்கினையே உற்றுப் பார்த்தபடி நின்றார். அவருடைய கண்களில் பயம் குடிகொண்டிருந்தது. பிறகு அங்கிருந்த சாய்வு நாற்காலியில் சோர்ந்துபோய் முனகியபடியே சரிந்துவிழுந்தார்.
“நான் இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்க வில்லை. என் வீட்டில் பாம்புக்கு அல்லவா பால் வார்த்திருக்கிறேன்? போய் விடு! தயவு செய்து போய்விடு. இனி உன்னைப் பார்க்க விரும்ப வில்லை! அய்யோ!”
மில்கின் தன் தொப்பியை எடுத்துக்கொண் டான். எப்படியோ வெற்றி பெற்றுவிட்டோம் என்று மனம் கொண்டாட, கதவை நோக்கி நடந்தான்.
“கொஞ்சம் இரு!” என்று கொண்ட்ராஷ்கின் அவனை நிறுத்தினார்.
“ஏன் உன்னை இன்னும் கைது செய்யாமல் இருக்கிறார்கள்?”
“நான் வேறு ஒரு பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை அவ்வளவு சுலபமாகக் கைது செய்துவிட முடியாது”.
“நீ சாகும்வரை அப்படியே வாழ்ந்து விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. யாருக்கும் உன்னைத் தெரியாது. கொஞ்சம் பொறு! இப்பொழுது, நீ ஒரு நேர்மையான மனிதன். நீ செய்த குற்றங்களுக்காக சீக்கிரமாய் வருந்திவிட்டாய். கடவுளும் உன்னைக் கைவிடமாட்டார். என் மகளைத் திருமணம் செய்துகொள்”.
மில்கினுக்கு வியர்த்துக்கொட்டியது. தப்பித்து வந்த குற்றவாளி என்பதைவிட மேலும் வளர்த்திக் கொண்டு போவதில் பயன் இல்லை என்று முடிவு செய்தான். ஒரே வழிதான் பாக்கி இருந்தது. அது சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய்விடுவது. அதற்காகக் கதவை நோக்கி அடி எடுத்து வைக்க நினைத்தபோது, மின்னல் போல் ஓர் எண்ணம் அவன் மனதிற்குள் உதித்தது.
“இங்கே பாருங்கள். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இன்னும் முடிந்தபாடில்லை. ஆமாம். நான் வந்து… நான் ஒரு பைத்தியம். மன நலம் சரியில்லாமல், பைத்தியமாக இருக்கும் ஒருவர் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள முடியாது”.
”இதை நான் நம்பமாட்டேன். பைத்தியமாய் இருக்கும் ஒருவன் இந்த அளவு தர்க்கரீதியாக வாதாட முடியாது”.
“அப்படியானால் உங்களுக்குப் புரியவில்லை என்று தெரிகிறது. சில குறிப்பிட்ட நேரங்களில்தான் பெரும்பாலான பைத்தியங்கள் தாறுமாறாக நடந்து கொள்ளும். மற்ற நேரங்களில் சாதாரண மனிதர்களுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. இது உங்களுக்குத் தெரியாதா?”
“இல்லை. இதை நான் நம்பமாட்டேன். வீணாக நேரத்தைப்போக்க வேண்டாம்”.
“சரி. மருத்துவரின் சான்றிதழைக் கொண்டு வந்து காட்டுகிறேன்”.
“சான்றிதழ் இருந்தால் நம்புகிறேன். ஆனால், இப்போதைக்கு…”
“இதோ அரைமணி நேரத்தில் வருகிறேன்!”
தொப்பியை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் வெளியேறினான் மில்கின். ஐந்து நிமி டத்தில், மனநில மருத்துவராகப் பணிபுரியும் தன் நண்பர் பிட்டுயுயேவின் வீட்டிற்குப்போய்ச் சேர்ந்தான். ஆனால், இவனுடைய போதாக காலம், சற்றுமுன்தான் அவன் தன் மனைவியுடன் சண்டை செய்து முடித்துத் தன் தலைமுடியைச் சரிசெய்து கொண்டிருந்தான்.
“உன்னிடம் ஓர் உதவிக்காக வந்திருக்கிறேன். பிரச்சனை என்னவென்றால், எப்படியாவது என்னை ஒரு பெண்ணிடம் மாட்டிவிடப் பார்க்கிறார்கள். இந்தப் பேராபத்திலிருந்து தப்பிக்க நான் பைத்தியம் போல் நடிக்க முடிவு செய்துவிட்டேன். ஹாம்லெட்டின் உத்திதான். உனக்குத்தான் தெரியுமே, பைத்தியமாக இருந்தால் திருமணம் செய்து கொள்ள முடியாது. நீ என் நண்பன் என்ற முறையில் எனக்குப் பைத்தியம் எனச் சான்றிதழ் கொடு”.
“என்ன? திருமணம் செய்துகொள்ள உனக்கு விருப்பம் இல்லையா?” என்று ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்துக் கேட்டான்.
“கோடி கொடுத்தாலும் எனக்கு திருமணம் வேண்டாம்”.
“அப்படியென்றால் நான் உனக்குச் சான்றிதழ் வழங்க முடியாது. யார் ஒருவர் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லையோ, அவர் பைத்தியம் இல்லை. மாறாக, அவர் அதிபுத்திசாலி. எனினும், திருமணம் செய்து கொள்ள நீ விரும்பும்போது, நேராக இங்கு வா. அதுதான் என்னிடம் சான்றிதழ் பெறச் சரியான நேரம். அப்பொழுது உனக்கு மரை கழண்டுவிட்டது, சரியான பைத்தியம் பிடித்துவிட்டது என்பது உறுதியாகிவிடும்…”
– இக்கதை முதன்முதலில் 1885 ஆம் ஆண்டு வெளியானது.
– ஆன்டன் செக்காவ் ஆகச்சிறந்த கதைகள், தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், முதற் பதிப்பு: 2019, தடாகம் பதிப்பகம், சென்னை.