மலராத பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 1, 2025
பார்வையிட்டோர்: 70 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாண்டியன் கமலநாகன் அந்தப்புரத்தி லுள்ள ஓர் பளிங்கு மேடைமீது அமர்ந்திருந் தான். அப்போது அவன் மகள் அங்கயற்கண்ணி பூங்காவனத்திலிருந்து வந்து கொண்டிருந்தாள். தன் தகப்பன் ஏதோ ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்திருப்பதைக்கண்டதும், “ஏனப்பா என்ன யோசனையில் ஆழ்ந்துவிட்டீர்கள்?” என்றாள். 

“எல்லாம் உன் கவலைதான். எத்தனையோ தடவை கேட்டேன் நீ பதில் சொல்லவில்லை. இப்போதாவது சொல். நீ யாரை விரும்புகிறாய்?” என்று கேட்டுக்கொண்டே அவள் அழகிய கூந்தலைக் கோதிவிட்டான். 

அங்கயற்கண்ணி தலையைக் குனிந்து கொண் டே, “அப்பா நாளைக்குக் கட்டாயம் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள். 

முதல் மந்திரி மகன் அம்பலவாணனும், இரண்டாவது மந்திரி மகன் மதிவதனனும் அரண்மனை உத்தியான வனத்தினுள் நுழைந்தார்கள். அங்கயற்கண்ணியும் பின் தொடர்ந்தாள். இருவரும் சட்டென்று திரும்பி நின்றார்கள். தங்கள் சிநேகிதியின் முகத்தில் ஏற்பட்டிருந்த மாறுதலைக் கவனித்த அவர்கள் எப்போதும் போலக் குதூகலமாக அவளைக் கூப்பிட்டுப் பேசவில்லை. 

“அங்கயற்கண்ணி, ஏன் இப்படி இருக்கிறாய்? அப்பா எதாவது கோபித்தாரா?” என்று கவலையோடு கேட்டான் மதிவதனன். 

” இல்லை. ‘உன் இரண்டு கண்களில் நீ எதை விரும்புகிறாய்? என்ற கேள்வியைக் கேட்டிருக்கிறார் அப்பா! அதற்குப் பதில் சொல்ல முடியாமல் நான் திகைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள் அங்கயற்கண்ணி. 

“நீ சொல்வது எங்களுக்குப் புரியவில்லையே!” என்றான் அம்பலவாணன். 

“எல்லாம் என் கலியாண விஷயத்தைப் பற்றியதுதான்!” என்றாள். 

அம்பலவாணன் சிரித்துக்கொண்டே “இதற்குக் கண்களையா உபமானம் சொல்வது? ஒரு பெண் ஒருவர்மீது தானே காதல்கொள்ள முடியும்!” என்றான். 

“ஆனால் என் விஷயத்தில் மட்டும் அப்படி இல்லை. விதி என்னோடு விளையாடுகிறது.இரண்டு உருவங்கள் என் இதயத்தில் பதிந்துவிட்டன. அந்த இரண்டும் ஏற்றத் தாழ்ச்சியற்றவை. அவைகளில் ஒன்றை நிறுத்திக் கொண்டு ஒன்றை நீக்கிவிடுவதென்பது முடியாத காரியம். என் இதயத்தில் அந்த உருவங்கள் இடம் பெற்றது, இன்று நேற்று அல்ல. பொருனைநதிக் கரையில் நாம் மூவரும் மணல் வீடு கட்டி, பெண் மாப்பிள்ளை விளையாட்டு விளையாடிய காலத்தி லிருந்தே என் மனக்கோவிலில் அவை பதிந்து விட்டன. எப்பொழுதுமே நாம் அம்மாதிரிக் குழந்தைகளாக இருந்துவிடக்கூடாதா என்று தோன்றுகிறது” என்றாள். 

அவள் இந்தமாதிரிப்  பேசிக்கொண்டே போவதை அம்பலவாணனால் தாங்கமுடியவில்லை. “அங்கயற்கண்ணி, இன்னும் நீ குழந்தை மாதிரியே பேசுகிறாய். இது சரியல்ல. வயதிற் கேற்றபடியும் உலக நடவடிக்கைகளுக்கேற்ற படியும் நடக்க வேண்டாமா?” என்றான். 

“உலகத்தைப் பற்றி எனக்கு அக்கரை யில்லை. நீங்கள் இருவரும் என்ன சொல்கிறீர்களோ அதன்படி நான் நடக்கிறேன் ” என்றாள். 

“சரி நான் ஒன்று சொல்கிறேன். அதன் படி நடக்கச் சம்மதிப்பாயா?” என்றான் அம்பலவாணன். 

“சரி ……ஆனால் ஒன்று ! ஒருவரைவிட்டு மற்றவரை மணந்துகொள்ளும்படி மட்டும் என்னிடம் நீங்கள் சொல்லவே கூடாது. உங்களில் ஒருவர் பிரிவையும் என்னால் சகிக்கமுடியாது” என்றாள். 

“இன்னும் பழைய கதையைத்தானே படிக்கிறாய். நீ நினைப்பது நடக்காத காரியம்.நீ எங்கள் இருவர்மீதும் சமமான அன்பையே செலுத்துகிறாய் என்பதும், நாங்கள் இருவரும் ஏற்றத் தாழ்வில்லாமல் உன்மீது அன்பு கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மைதான். ஆனால் கலியாணம் என்று வருகிறபோது எங்கள் இருவரில் யாராவது ஒருவர் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் பண்ணித்தான் ஆகவேண்டும். இதைத் தேர்ந்தெடுப்பதற்காக எங்கள் இருவர் பெயர்களையும் எழுதித் திருவுளச் சீட்டாக எடுப்போம். அதில் யார் பெயர் வருகிறதோ அவரை நீ மணந்துகொண்டு வாழலாம்” என்று அம்பலவாணன் கூறினான். 

அங்கயற்கண்ணிக்கு இது சரியென்று தோன்றவில்லை. “அப்படியானால் உங்களில் ஒருவரை எப்படியாவது தள்ளவேண்டி வருமே! அவர், வேறு யாராவது ஒரு பெண்ணை மணந்து கொண்டு வாழ்வதானால், ஆ! அதை என்னால் நினைக்கவே முடியவில்லை. என் வாழ்க்கை, அவர் வாழ்க்கை இரண்டும் பாழாகவல்லவா முடியும்” என்றாள். 

அம்பலவாணன் நிதானமாக ” அங்கயற்கண்ணி! அவ்வாறு தள்ளப்பட்டவன் நானாக இருந்தால் வேறு மணம் செய்துகொள்ள மாட்டேன். முன்போலவே ஒரு சிநேகிதனாக என் வாழ்க்கையை நடத்துவேன். இது நிச்சயம்” என்றான். 

இது வரையில் மௌனமாகக் கவனித்துக் கொண்டிருந்த மதிவதனனின் முகம் கோபத்தினால் சிவந்தது. ‘திருவுளச்சீட்டாவது மண்ணாங் கட்டியாவது! என் அங்கயற்கண்ணி எனக்குத் தான். திருவுளச் சீட்டின்படி அம்பலவாணன் அவளை மணக்க நேரிட்டால்!…’ என மனதிற் குள்ளாகக் குமுறினான். ஆத்திரத்தோடு துடி துடித்துக் கொண்டிருந்தான். அவன் அம்பலவாணனைப்போல அவ்வளவு பொறுமை உடையவன் அல்ல. உணர்ச்சிகளை அவனால் அடக்கவே முடியாது. அம்பலவாணன் சொன்ன யோசனை முட்டாள் தனமாகவே அவனுக்குப்பட்டது. ஆகையால் அங்கயற்கண்ணியின் எதிரே சென்று “அங்கயற்கண்ணி, அந்தத் திருவுளச் சீட்டு யோசனைகள் ஒன்றுமே தேவையில்லை. உனக்கு யாரைப் பிடித்திருக்கிறது? என்னைத் தானே! உம், சொல், சொல்லி விடு!” என்று பரபரப் போடு கேட்டான். “அம்பலவாணன் தன் உயிர்த்தோழன்; தன்னைப் போலவே அவனுக்கும் கோபிக்க உரிமை உண்டு என்பதைக்கூட அவன் அந்த நேரத்தில் மறந்து விட்டான். அவன் எதிரிலேயே இவ்வாறு நிதானமிழந்து பேசுவதற்கு அவன் வெட்கப்படவில்லை. 

அங்கயற் கண்ணி தங்கப்பதுமைபோல் அசைவில்லாமல் நின்றுகொண்டிருந்தாள். அம்பலவாணன் தன் நண்பனுடைய நிலைமையை அறிந்து அவனைச் சாந்தப் படுத்தினான். மதிவதனன் ஒருவாறு தன் ஆத்திரத்தைத் தணித் துக்கொண்டவன் போலக் காணப்பட்டாலும், அம்பலவாணனை அந்த வினாடியிலிருந்து ஒரு ஜன்ம விரோதியாகவே தீர்மானித்துவிட்டான். “திருவுளச்சீட்டில் யார் பெயர் வந்தாலும் சரி தான். வேறு எந்த விதத்திலும் அங்கயற் கண்ணியை மனைவியாக அடைந்தே தீருவது” என்று மதிவதனன் மனதிற்குள் முடிவுகட்டி விட்டான். 

அம்பலவாணன் இருவர் பெயர்களையும் இரண்டு சீட்டுக்களில் எழுதி, ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்த அங்கயற்கண்ணியின் முன்பு போட்டு ‘ஒன்றை எடு’ என்றான். கனவு நிலையில் இருந்த அங்கயற்கண்ணி ஏதோ ஒரு சீட்டை எடுத்து வாசித்தாள். ‘அம்பலவாணன்’ என்று எழுதியிருந்தது. 

மதிவதனனின் உடம்பு படபடவென்று துடித்தது. சட்டென்று எழுந்து விரைவாக கடந்தான். அங்கயற்கண்ணி அவன் முன்னால் போய் நின்றுகொண்டு, “நாம் மூன்று பேரும் ஒன்றாகத் தானே வாழப்போகிறோம். உங்களை நான் தள்ளி விட்டதாக எண்ணிக்கொண்டீர்களே! நில்லுங்கள்” என்று எவ்வளவோ கெஞ்சினாள். 

“சரி, எட்டிநில்” என்று சொல்லிவிட்டு அவர்களைப் பிரிந்து போய்விட்டான். பின்பு அம்பலவாணனும் மிகுந்த வருத்தத்துடன் தனது  மாளிகைக்குச் சென்று விட்டான். அங்கயற்கண்ணி அங்கிருந்த பளிங்குமேடையின் மேல் உட்கார்ந்தாள். 

மூன்று பேர்களுடைய மனதிலும் ஏதோ ஒன்று வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. 

அன்று மாலை மதிவதனன் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டான். மணம் செய்து கொள்ளப்போகும் தம்பதிகளைத் தன் வீட்டில் விருந்து சாப்பிடும்படி அழைத்து வந்தான். அவனே இருவருக்கும் அன்போடு பரிமாறி னான். 

மதிவதனன் அடைந்துவிட்ட மாறுதலைக் கண்டு இருவரும் ஆச்சரியப் பட்டார்கள். அங்கயற்கண்ணி கூட ஒருவாறு தன் துக்கத்தை மறந்து விட்டாள். 

மதிவதனன் அவர்களோடு சந்தோஷமாக அளவளாவிக்கொண்டிருந்தாலும் தன் மனதிற்குள், “என் அங்கயற்கண்ணியை அவன் மணப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கவா? அடே, அம்பு! நீ என்ன பகற்கனவு கண்டு கொண்டிருக்கிறாயோ? இன்னும் இரண்டு வினாடிதான் உன் வாழ்வு. அதன்பிறகு அங்கயற் கண்ணி என்னைத் தவிர வேறு யாரை மணக்க முடியும்?” என்று சொல்லிக் கொண்டான், சாப் பாட்டிலேயே அவன் மனம் செல்லவில்லை. 
 
கடைசியாக மதிவதனன் இரண்டு வெள்ளித் தம்ளர்களில் பழரசம் கொண்டுவந்தான். அவன் அவைகளைக் கொண்டுவரும் போதே அவனது வலதுகை அவனையறியாமலே நடுங்கியது. வலதுகையிலிருந்த தம்ளரை அம்பல வாணன் முன் வைத்துவிட்டுச் சற்று நின்று தன்னை நிதானப் படுத்திக்கொண்டான். ஆனாலும் அவன் கண்களுக்கு அந்த அறை, அதிலுள்ள பொருள்கள் எல்லாம் சுற்றிச்சுற்றி வட்டமிடு வதுபோலவே தோன்றியது. தன் உடம்பெல் லாம் எரிவதுபோல ஒரு உணர்ச்சி…! அவ னுடைய சிந்தனை எதிர்காலக் காட்சியில் மூழ்கியது. 

“ஆமாம். அம்பலவாணன் இறந்து விடு வான். ஆனால்/… ஆனால் அதை அங்கயற் கண்ணி எப்படிச் சகிப்பாள்? நான் முரடன். சகித்துக்கொண்டு விடுவேன். அவளைத் தேற்ற முடியுமா? சிநேகிதன் உயிரையே வாங்கிவிடும் ஒரு துரோகி என்றுதானே அவள் என்னை எண்ணுவாள் ! அப்புறம் நாங்கள் வாழ்வது எப்படி?… சரி, அதை வீட்டுவிடுவோம். அவர்கள் இருவரும் இப்படியே மணந்து கொள்ளும் படி விட்டுவிடலாம். ஆனால்… முடியாது. அந்தக் காட்சியையும் என்னால் பொறுக்கமுடியாது. முடியாது…அங்கயற்கண்ணி வருந்துவதையோ, அல்லது அவனோடு வாழ்வதையோ நான் காணக் கூடாது…… இதற்கு வழி? ஆம் ஒரு வழியிருக் கிறதே! இந்த வினாடியில் எல்லோருமே சந்தோ ஷத்தோடுதான் இருக்கிறோம். இந்தக்காட்சி தான் நான் கடைசியாகக் காணவிரும்புவது. துபோதும். இதற்குமேல் போய்விடக் கூடாது” என்று மதிவதனனுடைய மனதில் எண்ண அலைகள் மோதிக் கொண்டிருக்கையில், அம்பலவாணன் தன் எதிரே இருந்த பழரசத் தைக் குடிப்பதற்காகக் கையில் எடுத்தான். அவன் தம்ளரை வாயின் பக்கம் கொண்டு போவதற்குள் மதிவதனன் அதை அவன் கையி லிருந்து வெடுக்கென்று பிடுங்கி அதிலுள்ளதை முழுதும் தானே குடித்துவிட்டு மலர்ந்த முகத் துடன் கீழே சாய்ந்துவிட்டான். 

அதன் பிறகு அவன் அங்கயற்கண்ணி அல றிய அழுகைக் குரலையும் கேட்கவில்லை; அம்பல வாணன் உடனே துறவு பூண்ட காட்சியையும் பார்க்கவில்லை. 

பாண்டியனின் மகள் கன்னிகையாவே தன் வாழ்நாளைக் கழித்தாள்!

– ஆனந்த விகடன், மணிக்கொடி, வசந்தம், யுவன், சக்தி ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன.

– சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.

சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம்  தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.   நன்றியுரை  "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *