மண்ணில் தெரியுதொரு தோற்றம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2026
பார்வையிட்டோர்: 4,635 
 
 

(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16

அத்தியாயம் – 13

சுதந்திர ஜீவிகளாய்த் திரிந்த ஜாதிவெறியர்கள், பதுக்கல் பேர்வழிகள், சுரண்டற்காரர் ‘திடீ’ரென்று ஆமை உள்ளிழுத்த தலைபோல் மர்மவாசிகளாகியதால் எந்த வேளை என்ன நிகழும் என்று சொல்லமுடியாது ஜனங்கள் பேதலித்திருந்தார்கள்.

தொழிலாளர், விவசாயிகள், குடிசை வாழ் அன்றாடங் காய்ச்சிகள் போராட்ட வீறு கொண்டு கிராமத்து வீதிகளிலும் பிரசித்த நகரச் சந்திகளிலும் சஞ்சரிக்கத் தொடங் கினர். யாழ்ப்பாணந் தொட்டு மாத்தறை ஈறாக எங்கும் ஒரே பதட்ட நிலையே காணப்பட்டது.

இந்தத் தறுவாயில் பொன்ராசா பற்றிய விபரீதச் செய்திகளும் ஓயாமல் காதில் விழுந்துகொண்டிருந்தன. ‘அவன் என்ன ஆனான்?’ என்றே சரியாகத் தெரியவில்லை. ஜானகி இதனால் இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

பொன்னையர் நேற்று அவள் கன்னத்தில் அறைந்த அறைகளெல்லாம் இப்போது அவளுக்குப் புதிய நோவு கண்டு சுணைப்பது போலிருந்தது.

‘தந்தையின் பாசம் எவ்வளவுதான் உன்னதமாயிருப்பினும் அது தாயின் ஓர் அணைப்பிற்கு ஈடாகாது.’

ஜானகி வாய்விட்ட தேம்பி அழுதாள்.

‘நேற்று அந்தச் சுவரிலே எழுதிய சுலோகங்கள் யாருடைய கிறுக்குத்தனமாயிருக்கும்?’

அவள் மனசு அதிலே பூதாகரித்தது. அந்தச்சுலோகங்களின் அர்த்தபுஷ்டிகள் அவள் மனசை ஆகர்ஷித்த போதும் அத்தகைய கிறுக்கல் வேலைகளில் அவளுக்கு வெறுப்பே தட்டியது.

‘தொழிலாள வர்க்க சக்தியில் நம்பிக்கையிழந்தவர் களே தமது ஆற்றாமையை மறைக்க இப்படிப் புரட்சிச் சுலோகங்களை ஓயாமல் மீட்டுகின்றனர். உண்மையான புரட்சிவாதிகள் வர்க்க இணைப்புடன் தமது எதிரிகளோடு சமர் புரியும் வீரர்களாயிருக்கவேண்டும். அதைவிட்டு மறைந்திருந்து தங்கள் ஆசைக் கனவுகளைச் சுவர்களிலே கிறுக்கித் தள்ளுவதால் என்ன பயன்?’

வெறுப்போடு சிந்திக்கலானாள் ஜானகி. ஆயினும், அந்த வாசகங்கள் தனது மனசைக் கவர்ந்துகொண்டதை அவள் உணர்ந்தாள். அப்போது அவளுக்கு பொன்னையரில் வெறுப்புத் தட்டிற்று.

பொன்னையர் புத்திரி பாசத்தினால் தவிக்கின்ற கோல மும் ‘மனைவி’ என்ற ஸ்தானத்தில் வைத்துத் தன்னிச்சை கொண்டு சிவலிங்கம் தன்னை இங்கிஷைப்படுத்துகின்ற கோரமும், தொழிலாளர் இயக்க சக்தியில் திரண்டு மக்கள் விடுதலை வேட்கையோடு போராடுகின்ற காட்சிகளும், அப் போராட்ட சக்திகளோடு சங்கமித்த விரிவுரையாளர்- பொன்ராசாவின் தோற்றங்களும் அவள் மனக் கண்ணில் வலை பின்னித் தெரிந்தன.

அந்த இரு வர்க்கமுனைத் தோற்றங்கள்…?

சிவலிங்கமும் பொன்னையரும் நரகத்தின் பூதங்களாக வந்து உலக ஜீவராசிகளை வதம் செய்வது போலவும், பொன்ராசாவும் விரிவுரையாளரும் பூமியில் தோன்றி அவர்களுடன் போரிடும் தேவர்களாகவும் பிரமை பூண்டு அவள் மனசை வீறுகொள்ளச் செய்தன.

தந்தையும் கணவரும் தன்னைப்பற்றித் தவறாக எடை போட்டு விபரீத முடிவுகளுக்கு வந்திருக்கும்போது, தான் மட்டும் எந்தத் தீர்மானமும் எடுக்காமல் ஊமையாக விருப்பது ஆபத்தைக்கூட வருவிக்கும் என்று ஓருகணம் சிந்தித்தாள்.

‘ஓர் அதிகாரி மனைவியாக வாழ்ந்து சகல சுதந்திரங் களையும் அனுபவிக்கலாம்’ என்ற அவள் மனக்கோட்டை அப்போது சிற்றுண்டு நொறுங்கியது. அவரோடு இணைந்த அந்த வாழ்க்கை ஓர் அதிகார வரம்பிற்குள்ளா யிருந்ததேயன்றி அன்பின் பிணைப்பாக ஒரு நாள் கூடத் திகழ்ந்ததில்லை என்பதை ஒவ்வோர் சம்பவங்களும் அவளுக்குக் கட்டியங் கூறின. இலட்சியங்கள் இருமுனையாக முரண் பட்டபோது, குடும்ப வாழ்க்கை என்ற பந்தங்கூட இனி ஒரு போர்முனையாகவே மாறும் என்று அவளுக்குப் புலனாகியது.

தனது சித்தாந்த இலட்சியத்துக்கு அதே களத்தில் நின்று நியாயம் கூறமுடியாமல் பேடித்தனமாக சிவலிங்கம் சொன்ன அசிங்க வார்த்தைகள அப்போது ஜானகி நினைவு கூர்ந்தாள்.

“பொன்ராசன் இயக்கத்தையும் அவன் போராட்டங்களையும் ஆதரிக்கிறாயல்லவா? உனக்கும் அவனுக்கும் ‘ஏதோ’ இருக்கு, என்னடி அப்படித்தானே?”

‘சுத்தமான போர்வீரன் முதுகிலே பேடித்தனமாக மறைந்து நின்று ஈட்டியால் குத்திய பெருங்கோழை.’

அன்று அவர் சொன்ன வார்த்தைக்கு இப்படி அர்த்தங் கூறிப் புழுங்கினாள் ஜானகி,

‘இந்த முரட்டு ஜென்மத்தோடு எனக்கு இனி ஒரு வாழ்வா? சீ, இவரும் ஒரு மனுஷனா?தூ…ம்… எங்கேயாவது கிளம்பிப் போய்விடுவோமா?’

முகம் சுழித்தது. ஒரு விபரீத யோசனை அப்போது உதித்தது.

‘எங்கே போவது?’

மனம் மறுபாட்டம் இடித்தது.

‘விரிவுரையாளர் வீட்டுக்கு?’

இந்தத் தீர்மானம் எடுத்தபோது அவள் மனம் ஒரு வாறு சாந்தி கொள்ளலாயிற்று.

‘என்றாலும் வாழ்ந்த வீட்டை விட்டு ஒரு பெண் கிளம்பினால் அதன் அர்த்தம் என்ன; அவளைப் பற்றி உலகம் என்ன சொல்லும்?’

ஏலவே பொன்னையரும் சிவலிங்கமும் அதற்கு அடி எடுத்து வைத்தாற்போல் ‘தொடுத்து’ வைத்துக் கட்டிய கதைகள் ஆகவும் அவள் சிந்தனயைக் கிளறின.

இந்த நிலையில் விரிவுரையாளரிடம் போனாலும் ‘பொன்ராசனுடன் ஜானகி கூடிக்கொண்டு ஓடிவிட்டாள்’ என்றே ஊர் வாய்கள் ‘பத்தினிப் புராணம்’ பாடும் என்று நினைத்தாள்.

அப்படி நினைத்தபோதுதான் ‘கைதான பொன்ராசாவுக்கு என்ன நடந்தது?” என்ற தகவல் புலனாகாதிருப்பதை உணர்ந்தாள்.

அவள் நெஞ்சு வேகமாக அடிந்துக்கொண்டது.

பல நாடுகளில் பொவிஸ் கையில் சிக்கிய எத்தனையோ அரசியல்வாதிகள் சித்திரவதை செய்யப்பட்டு இறந்து போன கோர நிகழ்ச்சிகள் அவளுக்குத் தெரியும். பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தங்கள் கணவன் மார்கள் வீட்டுக்குத் திரும்பாமல் இறந்த செய்தி கேட்டுத் தாலி அறுத்து அலறி அழுத எத்தனையோ பெண்களின் சோகக் குரல்கள் இன்னும் ஜானகி செலிசுளில் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

மலையகத்தில் தொழிலாளர் மீது பொலிஸ் நடத்திய குண்டாந்தடிப் பிரயோகத்தினால் ஆஸ்பத்திரியிலே குற்றுயிராகச் சேர்க்கப்பட்டவர்களையும் கைதான பொன்ராசானையும் உடனே போய்ப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அன்று சிவலிங்கத்தின் கெடுபிடியால் பாழாய்ப் போயிருந்தது அந்த ஆவல் இன்னும் ஜானகியில் தணி யாமலே கிளர்ந்து கொண்டிருந்தது.

‘முதல் விரிவுரையாளர் வீட்டுக்குப் போய் அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்கலாம்.’

இறுதியாக ஓர் தீர்மானம் இப்படி இடித்துக் கூறிற்று. பிறகு இதைவிட வேறு ஒரு சிந்தனையும் அவளுக்கு ஓடவில்லை.

மெல்ல எழுந்து அறைக்குள் சென்று, சுவரில் மாட்டியிருந்த தாயின் படத்தைப் பார்த்தாள்.

உருவத்தைப் பார்த்த க்ஷணமே மின்னல் அடித்த மாதிரி நாளங்களின் உதிரம் புரையோடிற்று. நெஞ்சு பொருமிக் கண்கள் வெதும்பின.

‘அம்மா, என் தெய்வமே!’

வாய் குதறி அழுந்திய அந்தகாரம் அவளுள் அடங்க, அவள் கு னிந்த தலை நிமிராமல் சற்று வேளை குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

‘இன்றைக்கே வீட்டைவிட்டுக் கிளம்பவேண்டும்.’

வைராக்கிய முடிவுடன் உடனே வெளியே வந்து விருந்தையில் நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.

மனசில் சிலந்தி வலையாட்டம் ஒரு மப்புத் தோன்றி மறைந்தது.

உள்ளே திரும்பிவந்து கதிரையில் உட்கார்ந்து ஒரு கடதாசியை எடுத்து அவசரமாகக் கிறுக்கினாள்.

‘பிரியமுள்ள கணவருக்கு…’

‘சீ, பிரியமாவது கணவராவது.இரக்கமில்லாத மனிதருக்குக் ‘கணவர்’ என்ற உரிமையா?’

சற்றுவேளை மூளை மயங்கி இருந்த ஜானகி எதையோ யோசித்துவிட்டு சடா’ ரென்று ஆசுவாசித்து ஏன்கு ‘உஷாராக’ மனம்போன போக்கில் கிறுக்கித் தள்ளினாள்.

ஒற்றையில் அவள் கிறுக்கினாளா எழுதினாளா என்பதை அவளே படித்துப் பார்க்காமல் அப்படியே மேசையில் வைத்துவிட்டு உறையை எடுத்தபோது…

வெளியே பொன்னையர் அலறும் குரலில் அவசரமாக அழைத்த தொனி கேட்டது

“ஜானகி, பிள்ளை ஜானகி.”

அவள் நெஞ்சு ‘பக்’கென்று அதிர்ந்தது. பரபரப் போடு வெளியே வந்தாள்.

அப்போது அவர் முகம் ஏக்கத்தினால் குறாவிக் கிடந்ததை அவதானித்தாள். அவரோ சர்வாங்கமும் பதற, மிரண்டு மிரண்டு விழித்துக்கொண்டு நின்றார்.

நேற்றுக் கோபாவேசமாக ‘மானங்கெட்ட நாயே’ என்று ஏசி அவள் கன்னத்தில் அறைந்தவர் இன்று கனி வோடு தன்னை அழைத்தபோது ஜானகியின் இதயம் ஈரலித்துச் சுரந்தேவிட்டது. அவர் கனிவான அழைப்பில் க்ஷணவேளையில் அவள் சகலத்தையும் மறந்து ‘என்னப்பா என்ன சங்கதி?’ என்று கேட்பது போல் அவரின் முகத்தையே ஆவலோடு உற்றுப் பார்த்தாள்.

“உணவுப் பிரச்சினையால் நாடு கெம்பிவிட்டது. அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் போட்டதால் ஒன்பது பேருக்குத் துவக்குச் சூடு…!”

இத்துடன் நிறுத்தி தத்தளிப்புடன் செய்திகளை விழுங்கிக் கொண்டே உள்ளே சென்றார் பொன்னையார்.

ஜானகி சுயநினைவும் உணர்வும் இழந்து திகைத்துப் போய் கதவோரம் சமைந்தபடி நின்றாள்.

உள்ளே சென்ற பொன்னையர் உடனே வெளியே வந்து ‘மக்கள் போராட்டத்தைக் கண்ட அரசுக்கு இப்போ நடுக்கம் எடுத்துவிட்டதாம்” என்று சொல்லி விட்டு “பிள்ளை ஜானகி, என்ன நீ ஒரு மாதிரி இருக்கிறாய்? உனக்கென்ன பிடிச்சிருக்கு?” என்று எதையோ நினைத்துக்கொண்டு கேட்டார்.

ஜானகி ஒன்றும் பேசாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தாள்.

‘மக்கள் போராட்டம் – ஊரடங்குச் சட்டம் – ஒன்பது பேருக்குச் சூடு.’

ஓன்றன் பின் ஒன்றாக வந்த ‘கிடுக்’கிடும் செய்திகள் அந்தப் போராட்டக் கோலங்கள் மண்ணில் கிளர்ந்து உலகளாவி வரும் பெருங்கடலின் தோற்றம் போல் அவள் மனசில் திரைகளாகக் கவிந்தன.

பொன்ராசா என்ன கதியானான்?

இந்த ஒரே கேள்விதான் அவள் நெஞ்சினைக் கடைசியாகச் குடைந்து அறுத்துக்கொண்டிருந்தது.

இத்தனை நேரம் சாது போல் அமைதியாகவிருந்த ஜானகி, பாம்பை மிதித்தவள் போல் ‘திடீ’ரெனத் துடித்துப் பாய்ந்து, எழுந்து உள்ளே சென்று, தான் எழுதிய அந்தக் கடிதத்தைப் பார்த்தாள்,

கடிதத் தாள்கள் மேசையில் கிடந்தன. ஆனால், அந்தக் கடிதத்தை அங்கே காணவில்லை.

விளக்கு அணைந்த மாதிரி ‘பக்’ கென்று உடனே அவள் கண்கள் இருண்டு கொண்டு வந்தன.

நெஞ்சு திணறுண்டு திக்குமுக்காடிய ஜானகி, அதே கதிரையிலிருந்த வண்ணம் மேசையில் தலையைச் சாய்த்துத் திகைத்துப் போய்க் கிடந்தாள்.

அவள் இதயப் பெட்டகம் அவளுள் நெக்குவிட்டுக் கொண்டேயிருந்தது.

‘அந்தக் கடிதம் அப்பா கையில் சிக்கிவிட்டதோ? அப் படியானால்…?’

அத்தியாயம் – 14

அன்று இரவு சிவலிங்கம் வீட்டுக்குத் திரும்பவில்லை.

பொன்னையர் சொன்ன செய்திகள் உண்மை என்று தெரிந்த பின்பும் ஜானகி அவற்றைக் கொஞ்சமும் அக்கறை காட்டாதவள் போலிருந்தாள்.

‘பொலிஸ் நிலையங்கள் ‘உஷார்’ படுத்தப்பட்டிருக் கும். பொன்ராசாவைப் போல் அவரும் அங்கே அடைபட்ட கைதிபோல் இருக்கவேண்டியது தான்.’

அவள் மனசு வைராக்கியத்தில் சாந்தியடைந்தது.

அந்தக் கடிதம் தந்தை கையில் சிக்கியிருப்பின் தனது திட்டம் சிதைந்துவிடுமே என்று ஜானகி மலைத்துப் போனாள். என்றாலும், விடிந்தபின் அந்த மலைப்போ, பயமோ, கவலையோ அவளிடமிருக்கவில்லை.

திட்டங்கள். கொள்கைகள் அம்பலமாகியபின் ஒரு நிமிஷங்கூட தாமதிக்கலாகாது. ஆனால், நாடு முழுதும் யுத்தகளமாகிவிட்ட இந்த வேளையிலே அடுத்து என்ன செய்வது?

இந்த முடிவுக்கு எப்போ வந்தேனோ அப்பவே நான் கிளம்பியிருக்கவேண்டும். முரண்பட்ட எதிரிகள் தமது விரோதிகளை அழிக்க எப்போதும் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருப்பார்கள். அவர்களுடன் உறவாடுவது அவர்களையே பலப்படுத்தும். இதைச் சரியாகக் கணிக்காமல் சமாளி’த்துக் கொண்டிருந்ததால்தான் இந்தப் ‘பாதிப்பு’ களுக்கு ஆளானேன். இனி என்ன நேர்ந்தாலும் வீட்டை வீட்டுக் கிளம்பிவிடுவதுதான்.’

ஜானகி தனக்குள் திக்குமுக்காடினாள். நெஞ்சு குமுறி யது என்றாலும், இந்த முடிவுக்கே வந்தாள்.

சிவலிங்கத்துடன் வாழ்ந்த இணைப்பை அவள் இப் படி அறுத்துவிட எத்தனித்தபோது அவர் கட்டிய’தாலிக் கொடி அவள் கழுத்தில் ஓர் ‘கயிற்றுவடம்’ போலவே அவளுக்கு உணர்த்தியது.

‘புன்னகை இல்லாத குடும்பத்தில் பொன்னகைக்கு என்ன மதிப்பு?’

கேள்விக் கணையைத் தொடுத்துக் கொண்டே அந்தத் தாலிக்கொடியைத் தலை கவிழ்த்திப் பார்த்தாள்.

அப்போது அவள் மனக்கண்ணில் மனித சமுதாய மாற்றத்தின் பல வரலாற்றுச் சுவடுகள் ஒரு சங்கிலிப் பின்னல் போல் தோன்றி உயிர் பெற்றுத் தெரிந்தன.

பிரபுத்துவ சமுதாயத்திற்கெதிராகப் போராடிய வீரன் ஸ்பாட்டகஸ் ஒரு கணம் ஜானகி மனக் கோலத்தில் தோன்றினான்.

‘இங்கே சுரண்டலை ஒழிக்க, தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து அவ்வீரன்போலவே பொன்ராசாவும் ‘வர்க்கப்போரி’ல் குதித்திருக்கிறான்.’

‘ஸ்பாட்டகஸ் – பொன்ராசா,’

பிரபுத்துவம் அடிமைகளைக் கொடுமைப்படுத்திய முறைகளும், அவர்களின் சதிக்கமுடியாத வேதனைகளைப் பிரபுக்கள் வெகு குஷியாகப் பார்த்து இன்பத்திலாழ்ந்த விறுத்தங்களும் சித்திரக் காட்சிகளாக ஜானகி மனசில் திரை நீக்கம் செய்தன.

ஜானகியின் நெஞ்சு கொதித்தது!

‘என்ன கோரமான கொடுமைகள்?’

மனம் அகோரித்துக்கொண்டே நெஞ்சில் கை வைத் துத் தாலிக்கொடியைத் தடவினாள்.

‘அன்று பிரபுத்துவம் மனிதனுக்கு விலங்கிட்டுச் சாட் டைகளால் ‘அடிமை’க் குறியிட்டது, இன்று அதே சாயல் ஆண் வர்க்கம் மாங்கல்யத்தினால் இலட்சியப் பெண்களை அடிமைப் படுத்தப் பார்க்கின்றது. ‘குடும்ப வாழ்வையே துறந்து போகும் நான் அன்புப் பிணைப்பில்லாமல் அடிமை விலங்காகக் கருதி அவர் கட்டிய தாலியுடன் எப்படி வெளியே போவது?’

தர்க்கம் மண்டையைக் குடைந்தது.

சம்பிரதாயத்தில் மூழ்கிய ஒரு தமிழ்ப் பெண்ணிற்குப் பத்தாவும் அவர் மாங்கல்யமுமே நெஞ்சில் நிறைந்திருப்பவை. மரணத்திலும் அவள் இதயத்தின் உயிரோவியங்களாய்த் திகழ்ந்து இன்பத்திலாழ்த்துபவையும் இவைதாம். என்பதை ஜானகி மனசார ஒப்பினாள். பின்பு அந்த ஒப்புதலே அவளுக்கு ஆகவும் வேதனையை உண்டாக்கிற்று.

‘இந்தப் பேறுள்ள மாங்கல்யதாரியாக இருக்க முடி யாமல் போய்விட்டதே?’

அவள் நெஞ்சு குபீரித்தது. ‘

பொன்ராசன் மட்டும் இந்த மாங்கல்யத்தை என் கழுத்தில் அணிந்திருந்தால்…? எப்படியிருந்தபோதும், ஒருவனுடன் இணைந்துவிட்டு இன்னொருவனிடம் மனசை விடுவதே தூய்மையற்ற வாழ்க்கை.’

ஒரே கொள்கையுடன் வாழ்க்கை அமையுமாயின் அதிலுள்ள பரிசுத்தம், தூய்மை, காதல் – களங்கமற்றவை என்றபோதும், முரண்பட்ட வாழ்க்கையிலே ஆண் பெண்ணுக்குள்ள ‘ஒழுக்கம்’ உயர்ந்த ஸ்தானத்தை வகிக்காது என்று ஜானகி உணர்வுபூர்வமாகவும், அறிவு வாயிலாகவும் உணர்ந்தாள்.

இரு முனைப் போராட்ட நினைவுகளில் தவித்துக் கொண்டிருந்த ஜானகி, அறைக்குள் நின்றவாறே ஜன்னற் கதவுகளை நீக்கி வெளியே பார்த்தாள்.

பொழுது சரிந்துவிட்டது; நேரம் சரியாக மூன்று மணி.

‘அப்பா வீட்டுக்குத் திரும்ப முன்னம் நான் வெளி யேற வேண்டும்.’

அவள் தீர்மானம் எடுத்துவிட்டபோதே கண்கள் கலங்கிவிட்டன.

;வாழ்ந்த வீடு, பழகிய சுற்றம், அயல் மக்கள்-யாவை யும் இழந்து, தாலிக்கொடியையும்…’

ஏக்கம் நெஞ்சினில் தாக்கியபோதும். ஏதோ ஆன்ம வைராக்கிய வீறுடன்-ஒருவித தன்மான எழுச்சி யோடு இரண்டு கரங்களையும் தாலிக் கொடியில் வைத் தாள்.

கழுத்தைத் திருகிப் பார்த்த வீச்சிலே அவள் கண்ணில் ஏதோ ‘பளிச்’ சிட்டு மின்னிக் கூசிற்று. கன்னம் சரித்து உற்றுப் பார்த்தாள்.

கழுத்து நிறைந்த மாங்கல்யத்தோடு, அவள் தாய் வீற்றிருக்கும் அந்தப் படத்துக் கண்ணாடியின் பிரதி பிம்ப ஒளிக்கதிர் அது.

தாவி வைத்த கரங்களை கழுத்துவரை வைத்துக் கொண்டு, திரும்பி நடந்து போய் தாயின் படத்தை நோக்கினாள்.

‘ஜானகி, அந்தத் தாலியை நீ கழற்றினால் குற்ற மிழைத்தவள்போல் தவிப்பாய். ஆனால், அதையிட்டு உன் மனசு கற்பிக்கிற எதையும் பொருட்படுத்தாதே’ என்று தாய் கூறுவது போலிருந்தது.

‘சடா’ரென்று ஜானகியின் கரங்கள் அந்தப்படத்தில் தாவின.

“ஐயோ, என் தெய்வமே, அம்மா!” என்று முனகி அழுதாள்.

அம்மா என்று அழைத்ததின் எதிரொலி போலவே அப்போது வெளியே, “அம்மா” என்று திரும்ப அழைத்துக் கேட்டது ஒரு குரல்.

தனது மனப் பிராந்தி அப்படி ஓர் பிரதி ஒலியாக மீள்கிறதென நினைத்து ஜானகி படத்திலேயே கண்வைத்துக் கொண்டிருந்தாள்.

அதே குரல் மீண்டும் அழைத்தது.

“அம்மா, உள்ளே யாருங்க?”

அறைக்குள் நின்றவாறு, ஒருவித மனப்பிராந்தியுடன், ஜன்னலோடு மருவி நின்று வெளியே பார்த்தாள்.

அதிர்ச்சி ஆச்சரியம் ஒருங்குசேர அவளை ஆழ்த்தின. கண்கள் மிரளமிரள விழித்துப் பார்த்தாள். சந்தேகமில்லை. அன்று விரிவுரையாளர் இல்லத்தில் சந்தித்த அதே வெள்ளைச்சாமியும் சலாவுதீனும் தாம்.

நஞ்சு கமாரிட்டது; வெளியே வர அவள் மனசு தயங்கியது எனினும், அவர்களை க் கண்டபின் அவளை மீறிய குதூகலம் அவளுள் தாண்டவமாடிற்று.

“அம்மா, வூட்ல யாரும் இல்லீங்களா?”

ஜானகி கதவைத் திறந்துகொண்டு சூரியன் போல் வெளியே வந்தாள்.

அவளைக் கண்டதே சலாவுதீனும் வெள்ளைச்சாமியும் அசந்துபோய் நின்றார்கள்.

“அவரு சென்ன குறிப்போட அவுங்க வூட்டச் சரியாத்தான் தேடிக்கிட்டு வந்திரிக்கோம்”

சலாவுதீன் வெள்ளைசாமிக்குக் கூறியது, ஜானகி காதில் சாடையாக விழுந்தது.

“எவர் சொன்ன குறிப்போடு வந்து வீட்டைக் கண்டு பிடிச்சீங்கள்?” என்று கேட்டாள் ஜானகி.

வெள்ளைச்சாமி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு இரகஸ் யமாக மெல்லிய குரலில் கூறினார்.

“அவருதான், எங்க பொன்ராசாத் தோழரு…”

அவளுக்குக் கை கால் ஓடவில்லை. அங்கம் சிலிர்த்துக் குலுங்கியது. மனசு நினைப்பதை மனசே மறந்துவிட்டது. ‘எதைக் கேட்பது, எதைப் பேசுவது?’ என்று தெரியாமல் அவள் மனம் பேதலித்தது. வாயில் பேச்சே எழுவதா யில்லை. சற்றுவேளை ஒரு சின்னஞ்சிறு குழந்தை போல் நின்று துவண்டாள்.

நிதானமடைந்தபோது அவர்கள் எதிரில் தான் பரதவித்து அங்கலாய்த்ததை யூகித்த ஜானகி. தன்னில் நாணிக்கொண்டு வாய்திமிறக் கேட்டாள்:

“இப்ப பொன்ராசா எங்கே? காயக்காறருக்கு எப்படி?”

கேட்ட வாயோடு ஒருவித பரபரப்புடன், “உள்ளே வந்து கதிரையில் உட்காருங்கோ” என்று சொல்லிவிட்டு, அவர்களையே ஏறிட்டும் பார்த்தாள்.

சலாவுதீன் நாலாபக்கமும் கண்ணெறிந்தான். தயங் கிக் கொண்டே கீழ் ஸ்தாயிச் சுருதியில் கேட்டான்.

“ஒங்க அப்பாவும் இன்ஸ்பெக்டர் ஐயாவும் உள்ளே ஒரிக்காங்களா?”

‘இல்லை, ஏன்?’

“நாங்க வந்த சமாச்சாரம் அந்தத் தொரேங்களுக் குத் தெரிஞ்சிரக் கூடாது. இந்த வெசயங்களும் அவுங்க காதில உழுந்திரப்படாது”

“அதெல்லாம் எனக்குத் தெரியும், பயப்டாமல் சொல்லுங்கோ: இப்போ பொன்ராசா எங்கே?”

“அவருமேல் பொலிசு பொய்க் கேசு போட்டு மாட்டிக்கத்திட்டம் போட்டப்போ, அதெ அறிஞ்சி, நாங்க இன்னொரு ‘பிளான்’ போடுக்கிட்டோம். இப்ப அவரு- ஆளே வெளியில் வந்திட்டாரு”

“ஓ, எங்கே இருக்கிறார்?”

“தலை மறைவா, ராசியமா’ எங்க வூட்ல இரிக்காரு”

ஒரு மன நிறைவு ஜானகிக்கு உண்டாயிற்று. ஆனால், அவன் கோழைத்தனமாகப் பதுங்கியிருப்பது அவன் இலட் சியத்திற்கே அவமானமாக அவளுக்குப் பட்டது.

“தப்பி ஓடி மறைந்திருப்பது சட்டத்திற்கு விரோத மல்லவா.”

சிறு குழந்தைபோல் கேட்டாள் ஜானகி. வெள்ளைச்சாமி சிரித்தான்.

“சட்டங்களப் பத்தி உசத்தியாச் சொல்றவங்களால தான் அது அம்புட்டுக் கேவலமாயிடுத்து. அதான் அவரும் அப்புடிச் செஞ்சாரு”

வெட்டொன்றாகப் பதிலளித்தான் வெள்ளைச்சாமி.

“அதுசரி, இப்ப ஊரடங்குச்சட்டம் இருக்கே, எப்படி வந்தீங்கள்?”

ஜானகி முகத்தில் சாடையான வியப்பின் அம்மல் படர்ந்தது. பதிலை அவதானிக்காமலே அவள்

குசினிப் பக்கம் சென்றாள். அதைக்கவனித்த வெள்ளைச்சாமி வினயமாகச் சொன்னான்:

‘”த்தண்ணி ஒண்ணும் வச்சுப்புடாதையுங்க நாங்க இங்கிட்டு வந்த சுவடும் தெரிஞ்சிக்கிடாம் இப்பவே போயிடணும். அதெல்லாம் பொறவு பாத்துக்கலாம். இப்ப ஒங்கள நேரில் கண்டு ஒரு முக்கிய சமாச்சாரம் சொல்லோணும்’னுதான் வந்தமுங்க”

“என்ன சமாச்சாரம்?”

அங்கலாய்த்துக் கேட்டாள் ஜானகி.

சலாவுதீன் ‘சேட் பொக்கற்றுக்குள் கை விட்டுத் துழாவி ஒரு காகிதத்தை எடுத்து, இந்தக் கடதா சிய ஒங்ககிட்ட நேரில் குடுத்துடணும்’னு தோழர் பொன்ராசா தந்தாரு” என்று கூறி அதை ஜானகியிடம் நீட்டினான்.

‘பொன்ராசாவிடமிருந்து கடிதமா? இந்தத் தகவலைச்சொல்ல வந்தவர்களிடம் அதையும் சேர்த்துக்கூறிச் யிருக்கலாமே? ஒருவேளை அவன் மனசில் சலனம் தோன்றி ஏதும் காதல்…….?’

ஜானகியின் முகம் அருவருத்துக் கோணிற்று.

‘அப்படி ஒரு நினைப்பிருந்தால் நான் கல்யாணம் செய்ய முன்பே தெரிவித்திருக்கலாம். இப்போ இதென்ன எடுப்பு? சீ, இதை உலகம் அறிந்தால் என்ன சொல்லும்? ஓர் இலட்சியவாதிக்கு இதெல்லாம் அழகா?’

அவளுக்கு அவனில் உண்மையாக இனம் புரியாத ஓர் வெறுப்புத் தட்டிற்று.

அந்த வெறுப்பைக் கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல், ”எனக்கு எதற்காகக் கடிதம் எழுத வேண்டும்; உங்களிடமே சொல்லி அனுப்பியிருக்கலாமே?” என்று கேட்டாள்.

“அது ஒங்களுக்கு இல்லீங்க. கவரை ஓடைச்சுப் பாருங்க” என்றான் வெள்ளைச்சாமி.

அவள் ஆவல் ததும்ப அவர்களுக்கு முன்னே அந்தக் கவரைக் கிழித்துப் பார்த்தாள்.

என் தந்தைபோன்ற திரு.பொன்னையா அவர்களுக்கு-

எதிர்பாராத இந்த வாசகத்தலைப்பே அவள் மன சைக் ‘கிளுகிளு’த்திற்று. பரபரப்போடு அடுத்த ஒற்றையைத் தட்டிக் கடைசிப் பந்தியைப் புரட்டினாள்.

‘தங்கள் மைந்தன் போன்ற நா.பொன்ராசா’

கடிதத்தில் செலுத்திய பார்வையை நீக்கி வெள்ளைச் சாமி, சலாவுதீன் இருவரையும் ஆதங்கமாகப் பார்த்த ஜானகியின் முகத்தில் ஆயாசம் தட்டியது.

“இனி நாங்க போயிட்டு வர்றோமுங்க”

விடைபெற்று இருவரும் வெளியே இறங்கினர்.

“அது சரி, இன்று உங்களால் கண்டிக்கு எப்படித் திரும்பப் போகமுடியும்?” என்று கேட்டாள் ஜானகி.

“எங்க யாப்பாணத்து யூனியன் கந்தோர்ல் தங்கிப் புட்டு நாளைக் காத்தால போயிடலாமுங்க” என்றான் வெள்ளைச்சாமி.

‘வீடு தேடி வந்தவர்களை முறையாக உபசரிக்கவும் முடியாமல் போய் விட்டதே’ என்ற மனத்தாக்கம், அவர்கள் போனபின்னும் அவளை வாட்டிக்கொண்டேயிருந்தது.

இருவரும் மறைந்தபின் கதவைத் தாளிட்டு உள்ளே சென்று மணிக்கூண்டைப் பார்த்தாள். ஐந்து மணி முப் பது நிமிஷம்.

கடிதத்தை ஆவலோடு விரித்தாள். விரிக்கும்போதே வெளியே ஏதோ சந்தடி கேட்டது. கதிரையில் இருந்த படி கதவை நீக்கி வெளியே பார்த்தாள்.

இன்ஸ்பெக்டர் திடும்பன்மாதிரி அவசரமாக வந்து கொண்டிருந்தார்.

ஜானகியின் நெஞ்சு ‘படபடத்தது. ‘சடாரென்று கடிதத்தை மடித்து நெஞ்சுச் சட்டைக்குள் செருகிவிட்டு, மேசையில் பரவிக் கிடந்த புத்தகங்களை அடுக்குவதுபோல் அபிநயித்துக்கொண்டு கடைக்கண் தாவினாள்.

உள்ளே வந்த சிவலிங்கம் ஜானகியை அந்தக்கோலத் தில் கண்டதும் சற்றுத் தரித்து நின்று அவளையே ஏறுகண் வைத்துப் பார்த்தார்.

ஜானகி அப்பவும் அவரைக் கவனியாதவளாக. புத்தகங்களை அவசரமாக ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள்.

அவர் சற்று விலகிப்போய் தொப்பியைக் கழற்றி ‘ஸ்ராண்ட்’ டில் கொழுவிவிட்டு, ஜானகி அண்டை வந்து சிரித்தவண்ணம் அன்பு கனியப் பார்த்தார்.

அவரின் கனிவுப் பார்வையும் அந்தச் சிரிப்பும் அவளுக்கே வியப்பினையூட்டிய போதும், அவளின் உள்ள தினுள்ளே ஏதோ ஓர் இனம் காணாத குதூகலம் கண்ணாம் பூச்சி விளையாடிற்று.

அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் எலியை அப்பிய பூனைபோல் ‘அவுக்’ கென்று ஜானகியின் கரத் தைத் தாவிப் பிடித்து, “ஜானகி, இங்கே வா. சில நாட்களாக உனது மனசு நோக நடந்துவிட்டேன். அதுதான் உன்முகம் இப்படி வாடியிருக்கிறது. அப்படித்தானே?” என்று குழைந்தவர், வாஞ்சையுடன் ”அவற்றையெல் லாம் மறந்துவிடு” என்று சிறு குழந்தைபோல் மன்னிப்புக் கோரும் தோரணையில் சொன்னார்.

இரும்பாகப் போயிருந்த அவள் இதயம் அந்தச் க்ஷணமே கரைந்தது. எல்லா வேதனைகளையும் அவரின் ஓர் ஸ்பரிசத்திலே -அவர் வாக்கிலே மறந்து, ஒன்றும் பேசா மல் மௌனமாக அவர் பிடியில் சிக்கி அவள் இதம்கண்டு கொண்டிருந்தாள்.

”என்ன பேசாமல் இருக்கிறாய்; என்னைப் பார்த்தே சொல்லவேண்டும்”

இப்படிக் கேட்டுக் கொண்டே அப்பிப் பிடித்திருந்த அவள் கரத்தை அழுத்தி இழுத்து அவள் நாடியை லாவ கமாக நிமிர்த்தி, “என்னைப் பார்த்தே மறுமொழி கூற வேண்டும், தெரிந்ததா?” என்று மீண்டும் கொஞ்சுவது போல கூறியவர், ஆரத் தழுவிக் கொண்டே அவளை நெஞ் சோடு அணைத்தார்.

ஜானகி நெஞ்சில் தேனூறிற்று. அவள் தேகத்தை நுளுந்திக்கொண்டு, “அதெல்லாம் அப்படி இல்லை…” என்று மென் ஒலியில் கிளிக்குரல் வைத்துச்சொல்லிவிட்டு, அவர் நெஞ்சணைத்துத் துவண்டுபோய்க் கிடந்தாள்.

ஊடலின் பின் நிகழும் கூடலில் எழுகின்ற இன்ப வேதனையை அவள் அன்றுபோல் என்றும் அனுபவித்ததே யில்லை. இவற்றையெல்லாம் யோசிக்க, ஏலவே தான் போட்ட திட்டங்களும் நினைவுகளும் எவ்வளவு அபத்தமானவை என்று நினைத்து மனமுருகினாள்.

‘நான் முட்டாள்தனமாக நடந்து கொள்ளப் பார்த்தேனே’

சொற்ப நாழிகையாயிற்று.

“ஜானகி,உன்னிடம் நான் ஒரு முக்கிய விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும். நீதான் அதற்கு ஒத்தாசை புரிய வேண்டும்”

எடுத்தாற்போல் அவள் எதிர்பார்க்காத ஒரு வார்த் தையை மெல்லத் தூக்கிப் போட்டார் இன்ஸ்பெக்டர்

”நான் உங்களுக்கு ஒத்தாசை புரியாமல் வேறு யார் அதைச் செய்வது?”

”சந்தோஷம். நம்ம விரிவுரையாளர் இருக்கிறாரே அவரிடமிருந்து எனக்கு வேண்டிய சில முக்கிய தகவல்களை அறிந்து கூறவேண்டும். அவ்வளவுதான்”

“என்ன தகவல்?”

‘பொன்ராசா தப்பி ஓடித் தலைமறைவாயிருக்கிறான். அவன் எங்கே இருக்கிறான் என்று அவருக்குத் தெரியும். அந்தத் தகவல் வேண்டும்’

ஜானகி நெஞ்சு ‘திடும்’ என்று இடியுண்டு அதிர்ந்தது.

“என்ன பேசாமல் இருக்கிறாய்?”

அவள் முழிசிக் கொண்டிருந்தாள். என்ன பதில் சொல்லுவதென்று புரியாமல் திண்டாடிக்கொண்டிருக் கவே, அவர் அடுத்து ஒரு கேள்வியைக் கொழுவினார்:

“சிலவேளை உனக்கே தெரிந்திருக்கும். நீயே சொல்லு”

வந்தவுடன் அவர் புரிந்த சாகஸம் இப்போதுதான் ஜானகிக்குப் புரிந்தது. அமுதமல்ல, விஷம்.

“சொல்லு, உனக்குத் தெரியுமா?”

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிய அவரின் உத்திகள் ஜானகியிடம் பலிக்கவில்லை. அவள் ஊமையாட்டம் யோசனையிலாழ்ந்து போயிருந்தாள்.

“என்ன, உனக்குத் தெரியாதா?”

“அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்?”

“அதுதான் கேட்கிறேன். சொல்லு?

“எனக்கு ஒன்றுமே தெரியாது?”

“ஒன்றும் தெரியாது?”

“தெரியாது?”

“உண்மையாகத் தெரியாது!”

“எனக்குத் தெரியவே தெரியாது”

சிவலிங்கம் சிரித்தார். அவள், தியங்கிப் போயிருந்தாள்.

”ஏய், உனக்கு எல்லாம் தெரியுமென்று எனக்கு நிச் சயமாகத் தெரியும். அதுதான் கேட்டேன். இனி உள்ள தைச் சொல்லு: அவன் எங்கே இருக்கிறான்?”

தனக்குத் தெரியுமென்று ‘இவர் எப்படிக் கண்டார்?’ என்ற ஆராய்ச்சியில் அவள் மனசு குதித்தது.

“எனக்கு ஒன்றுமே தெரியாது”

“டியே, உள்ளதைக் கக்கு; ல்லாவிட்டால் நான் கக்க வைப்பேன்”

அட்டகாசித்த சிவலிங்கம் சடா’ரென்று எழுந்து  நாரிப் பூட்டு வாரைக் கழற்றிக் கைக்குள் திருகி வைத்துக்கொண்டு மறுபடி கேட்டார்.

“டியே கள்ளி, உள்ளதைச் சொல்லடி?”

கேட்டு வாய் ஓயமுன்பே. நாய்க்கு அடித்தமாதிரி மூச்சு வாங்க விளாசி விளாசி அடித்தார்.

அவள் வாய் உண்மை கக்கவில்லை; அவளின் முதுகு வெடித்துச் சீறிய இரத்தமே நுரைத்துக் கொண்டு கக்கியது.

அவள் பெண் கோலமே அழிந்து விட்டது. தன்னாலான மட்டும் குழறியும் அவர் கை ஓயவில்லை.

அழுது தூர்ந்துபோன தொண்டை கேரி விக்கலிட அவள் மூர்ச்சித்துப் போய் மயங்கிக் கீழே விழுந்தாள். அவள் கண்கள் அப்போது சோபை இழந்து ஒளி செத்துக் கிடந்தன.

அவளின் ஏக்கப் பார்வையில் தந்தையின் அசுமாற்றத்தையே தெரியவில்லை. 3

– தொடரும்…

– மண்ணில் தெரியுதொரு தோற்றம் (நாவல்), முதல் பதிப்பு: பெப்ரவரி 1978, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *