கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 4, 2025
பார்வையிட்டோர்: 4,710 
 
 

(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது சிரித்த முகத்துடன், துள்ளல் நடையுடன் வராமல் அழுத கண்களுடன் சோர்ந்து போய் காணப்பட்ட மகளின் தோற்றம் கண்டு அதிர்ந்து போனாள் சாவித்திரி.

”என்னாச்சு, ஏன் உன் கண் கலங்கியிருக்கு ? ஸ்கூல்ல டீச்சர் திட்டினாங்களா?”

மனசு தாளாமல் கேட்டாள் மகள் அருகில் சென்ற சாவித்திரி.

ஏதோ நடக்கக் கூடாதது நடந்திருக்க வேண்டும். அதனால்தான் இப்படி இருக்கிறாள் என பட்டது சாவித்திரிக்கு.

அம்மாவின் கேள்விக்கு தேவி பதில் சொல்லவில்லை. தன் முதுகில் இருந்த சுமையை சோஃபாவில் இறக்கினாள். ஷூ, சாக்ஸ்களை கழற்றி தூர விட்டெறிந்தாள். பிறகு கை, கால், முகம் கழுவிக்கொண்டு அம்மா எதிரில் வந்து நின்றாள், சீருடையைக் கூட கழற்றாமல்!

“டீச்சர் திட்டலைம்மா! என் கிளாஸ் மாணவிங்க ரெண்டு பேர் என்னைக் கிண்டல் பண்ணாங்க. அதைக் கேட்டு சில பேர் சிரிச்சாங்க. எனக்கு அவமானமாப் போச்சு!” சொல்லும்போதே மீண்டும் அழுகை வந்தது.

“நீ இப்படி கண்ணீர் விடும் அளவுக்கு அப்படியென்ன கிண்டல் பண்ணினாங்க?”

”சொல்றேன். அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி! எனக்கு ஏம்மா எம்.தேவின்னு பேர் வச்சீங்க?” தொண்டையடைக்க மகளிடமிருந்து வந்த கேள்வி விசித்திரமாக இருந்தது. கூடவே பெயருக்கும் கிண்டலுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்ற வினாவும் சாவித்திரி மனதில் எழுந்தது.

”இதென்னடி அசட்டுத்தனமான கேள்வி? உங்கப்பா பெயர் மகேஷ். அவரோட முதல் எழுத்து எம். அதை இனிஷியலா வெச்சு உனக்கு எம்.தேவின்னு பேர் வச்சோம். நானும் உங்கப்பாவும் ஒண்ணா சேர்ந்து ஆசைப்பட்டு வெச்ச நல்ல பெயர். அதுல என்ன ஓட்டை கண்டே?” எரிச்சலுடன் கேட்டாள் சாவித்திரி.

”பிரச்னையே அதுதாம்மா!”

”என்னடி உளற்ரே?” திடுக்கிட்டாள் சாவித்திரி.

”உளறல்லே. நீங்களும் அப்பாவும் நல்ல பர்ஸனாலிடியா இருக்கீங்க. நான் மட்டும் ஏன்மா கன்னங் கரேல்னு கோரமா இருக்கேன். அதோட தெற்றுப் பல் வேற. அதனால. எம்.தேவிங்குற என்னோட பேரை விளிச்சு மூதேவின்னு ரெண்டு பசங்க கிண்டல் பண்றாங்கம்மா” கேவி கேவி அழும் மகளைப் பார்த்து மேலும் அதிர்ந்து போனாள் சாவித்திரி.

சாவித்திரி நல்ல நிறம். மகேஷ் மாநிறம். இருவரும் பார்க்க பாந்தமாக இருப்பார்கள். உண்டாகி இருக்கும்போது தினமும் இரவில் குங்குமப்பூ கலந்த பால் குடிப்பாள் சாவித்திரி. வேண்டாமென்று சாவித்திரி மறுத்தாலும் மகேஷ் கேட்க மாட்டான். வற்புறுத்தி குடிக்க வைப்பான்.

எல்லாவற்றையும் முழுங்கி விட்டு கருப்பாக ஜனித்தது பெண்குழந்தை! மருத்துவ மனையில் பிறந்த குழந்தையை நர்ஸ் சாவித்திரியிடம் காட்ட, பார்த்தவளுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. குழந்தை பற்றிய கனவு இடிந்து தூள் தூளானது. ஏற்கனவே குழந்தையைப் பார்த்த மகேஷ் மனம் வெறுத்துப் போய் வெளியேறினான். குறைந்த பட்சம் மாநிறத்திலாவது பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மனைவி நல்ல போஷாக்கு, குங்குமப்பூ கலந்த பால் எல்லாம் எடுத்துக் கொண்டும் குழந்தை கருப்பாக பிறந்தது கண்டு வருத்தமுற்றான். தங்களுக்கு இப்படியொரு குழந்தை பிறந்ததை எண்ணி வேதனையும் குறையும் பட்டுக்கொண்டிருந்த அவர்கள் மனநிலை அறிந்தார் மருத்துவர். நல்லவிதமாக எடுத்துச் சொன்னார். அறிவுரையை இருவரும் வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டனர்.

அக்கம் பக்கத்தவர்கள், உறவினர்கள் குழந்தையின் தோற்றம் கண்டு முகம் சுளித்தனர். நல்ல ஜோடியான இவர்களுக்குப் போய் காக்கையின் நிறத்தில் இப்படி ஒரு குழந்தையா? என மலைத்தார்கள்!

ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருந்த சாவித்திரியும் மகேஷூம், பிறகு நாள் செல்ல செல்ல மகள் மீது அன்பும் பாசமும் வைக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு ஒரு நாளும் மகளிடம் முகம் சுளித்தது கிடையாது. அவள் ஆசைப்பட்டபடி நடந்து கொண்டனர். எல்லாம் சுமூகமாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நிலைமை உண்டாகியிருப்பதைக் கண்டு கவலை கொண்டு, மகளின் கண்களை தன் புடவைத் தலைப்பால் துடைத்து விட்டு, ”இதோ பார் கண்ணு! யாரோ ஏதோ சொன்னாங்கங் குறதுக்காக உன் மனச தளறவிட்டு இப்படி அழறது சரியில்லை.” ஆறுதலாகச் சொன்னாள் சாவித்திரி. ”இல்லேம்மா! பார்க்கறவங்க கிண்டல் பண்ற மாதிரி இனிஷியலும் பெயரும் கன கச்சிதமாக பொருந்தியிருக்கு! நீங்க வேற ஏதாவது பேரை எனக்கு வெச்சிருக்கலாம். இல்ல, என்னை நீங்க கொஞ்சம் அழகாவாவது பெத்திருக்கணும். அப்படி இல்லாம போனதால் தான் எனக்கு பெரிய இக்கட்டே!”

மகளின் பேச்சு தலையில் இடியாக இறங்க ஒரு கணம் ஆடிப் போனாள் சாவித்திரி. எந்த அளவிற்கு அவள் மனம் நொந்து போயிருக்கும்! அதனால் இப்படி வெறுத்துப் போய் பேசுகிறாள் என்பது புரிந்தது. அவளின் இந்த முதிர்ச்சியான பேச்சு யோசிக்க வைத்தது. சில வினாடிகள்தான். சுதாரித்துக் கொண்டாள்.

”சரி, நீ இப்போ பத்தாம் வகுப்பு படிக்குறே”

”ஆமாம்”

”அதுக்கு முன்னால் ஆறாம் வகுப்பு முதல் நீ முதல் ரேங்க் தான். இப்போ படிக்குற பத்தாம் வகுப்பில் கூட இதுவரை நடந்த காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளில் நீ எல்லாப் பாடங்களிலும் நிறைய மார்க் எடுத்து பள்ளியிலேயே முதல் மாணவின்னு பேர் வாங்கியிருக்கே. அதற்கான சான்றிதழ்களும் உன் கிட்டே இருக்கு. அது மட்டுமில்லே, பேச்சுப் போட்டி, மாணவர் மன்ற கட்டுரைப் போட்டியிலும் கூட முதல் பரிசு உனக்கு தான் இல்லையா ?”

‘ஆமாம்.’ என தலையாட்டினாள் தேவி. அம்மாவின் பேச்சு புரியவில்லை தேவிக்கு.

“அதனால உன்னைப் பாராட்டியவர்கள் எத்தனைனயோ பேர்! உன்னோட பள்ளி டீச்சர்கள், வகுப்பு மாணவிகள் இப்படி எல்லாரும் உன்னைத் தலை மேல் தூக்கி வைக்காத குறையாக நடந்து கொண்டாங்கன்னு நீ சொன்னதுண்டு! இவ்வளவு ஏன்?

உன் ஃப்ரெண்டஸ் பக்கத்து வீட்டு பரிமளா, எதிர் வீட்டு ரோகிணி அவங்கக் கூட உன் கை பற்றிக் குலுக்கி தங்களோட சந்தோஷத்த பகிர்ந்துகிட்டாங்க. நானும் பார்த்தேன்.”

தேவிக்கு இன்னும் புரியவில்லை. ஆனால் அழுகை நின்றிருந்தது. விழியசையாமல் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சாவித்திரி தொடர்ந்தாள். ”அப்படி உன்னைப் பாராட்டி புகழ்ந்தவர்கள் ரெண்டு பேர் வாய் தான் கிண்டலும் பண்ணியிருக்கு. பாராட்டை பெரிசா எடுத்துக் கிட்ட நீ கிண்டலையும் அப்படி எடுத்துக்கிட்டே. சரி, கல்விக்கு அதிபதி யார் கண்ணு?”

“கலைமகள், அதாவது சரஸ்வதி!” யோசிக்காமல் பட்டென்று பதில் சொன்னாள் தேவி.

”கரெக்ட். கல்வியின் கடவுளான சரஸ்வதியே உன் கிட்ட குடியிருக்கா இல்லையா? அதனாலதான் படிப்பு விஷயத்தில் நீ கெட்டிக்காரியா இருக்கே”

இப்போது தேவிக்கு ஏதோ புரியற மாதிரி இருந்தது. இருந்தாலும் மலங்க மலங்க விழித்தாள்.

சாவித்திரி தொடர்ந்து, “அப்படி அந்த சரஸ்வதி தேவியே உன் கிட்ட குடி இருக்கும்போது மூதேவி எப்படி கிட்ட நெருங்குவா ? நல்லா யோசிச்சுப் பாரு! அதோட உனக்கு வெச்சிருக்கறது நல்ல பெயர். அந்தப் பெயரை வாயில் வந்த மாதிரி கிண்டலாக அழைக்கறவங்க தான் கெட்டவங்க! அதை காதில் வாங்காதே. பதிலும் சொல்லாதே. ரொம்ப கடுப்பாய் இருந்தால் கிளாஸ் டீச்சர் கிட்டே கம்ப்ளெயிண்ட் பண்ணப் போவதாக பயமுறுத்து அடங்கிடுவாங்க”. என்றாள்.

அம்மாவின் தீர்க்கமான பேச்சு தேவி மனதை லேசாக்கியது, தன் கண்களைத் துடைத்துக் கொண்டாடு, நிம்மதி கலந்த ஆசுவாசத்துடன், மென்மையாகச் சிரித்தபடி அம்மாவை அணைத்துக் கொண்டாள்.

– மலர்வனம் மின் இதழ், டிசம்பர் 2023.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *