பிரக்ஞை வெளியில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2025
பார்வையிட்டோர்: 80 
 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘அதோ பார் அந்தப் பெண்ணை’ என்றான் சேகரன்.

‘பெண்களை…?’ என்று திருத்தினான், அவனோடு கூடப் போய்க்கொண்டிருந்த, அவன் நண்பன் கிட்டு சிரித்துக் கொண்டே. இருவரும் மணற்பரப்பைக் கடந்து, சமுத்திரக்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே, மங்கும் மாலை ஒளியில் வசீகரத் தோற்றம் கொண்டு, அநேகர் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அன்று கடற்கரையில் அதிகக் கூட்டமில்லை. கொஞ்ச தூரத்தில் கடல் அலை மடியும் கரையின் சமீபமாக, மூன்று பெண்கள், இவர்கள் பக்கம் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்துக் கொண்டே, தன் நண்பன் கிட்டுவுடன் பேசி நடந்துவந்த சேகரன் ‘எனக்குப் பெண்களைப் பார்க்கும் வழக்கம் கிடையாது. அதோ அந்தப் பெண்ணைத்தான் சொல்லுகிறேன்’ என்று மறுபடியும் சொன்னான். சேகரன், பார்வையில் குறிப்பிட்ட பெண்ணை கிட்டுவால், அம்மூவரில் யார் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. கிராம வாழ்க்கையில் அலுப் படைந்து அதைத் துடைத்துக் கொள்ள, பட்டணத்தில் சில நாட்கள் தங்கிப் போகலாமென்று வந்த சேகரன் பேச்சுகள், அவன் பாலிய சிநேகிதன் கிட்டுவால்கூட, சில சமயம் புரிந்து கொள்ள முடியவில்லை. மற்றும், சமீப சில நாட்களாக, சேகரன் போக்கும் ஒருவிதமாக கிட்டுவிற்குத் தோன்றியது.

‘யாரைச் சொல்லுகிறாய்…? வாயிலிருந்து தப்பி ஓடும் பற்களை, வெளியில் விடாது தடுத்து விழுங்குகிற வளையா… பிச்சல மயிர் தலையிலிருந்து பறந்து போகாது இருக்க இரட்டைப் பின்னலாகத் தெரிவதையா?… எனச் சொல்லி நிறுத்தினான் கிட்டு. பேச்சில் கேலி படர பேசினானே ஒழிய, இக்கற்பனைகள் அவர்களை ஆழ்ந்து குறிக்கும் உவமைகளல்லாது ஏதோ மேலெழுந்த வாரியாக, பிறர் கேட்டுச் சிரிக்க வேண்டுமென்பதற்காகத் தான் இருந்தன. மேலும் மற்றுமொரு பெண்ணிடம் இவன் கற்பனைகள் ஓடவில்லையோ, அல்லது அந்த பட்டணச் சோதா மோஸ்தரில் கற்பனைகளைக் காண முடிய வில்லையோ, எதினாலோ அவன் பேச்சு நின்றது.

‘சரி கிட்டு, நீ குறிப்பிட்ட பெண்களைக் கண்டு கொண்டு விட்டேன். அவர்களைச் சொல்லவில்லை, நான் பார்க்கவுமில்லை. அவர்கள் நடுவில் இருக்கிறாளே அவளைப் பார்த்ததும் உனக்குத் தோன்றுவதைச் சொல்… பட்டண ரீதியில் முடியாவிட்டால்… தமிழ்ப் பண்டிதர் பேச்சிலும் கொஞ்ச முயன்று பார்… என்றான் சேகரன்.

“அது முடியாதப்பா… முடிகிறதா என்று பார்ப்பதற்கும் என்னால் முடியாது. நான் முறையாகத் தமிழ் படிக்க வில்லையே’ என்றான்.

‘இந்த வகையிலாவது நீ செய்தது ஒன்று சரி… இல்லா விட்டால், எழுத்தாலும் பேச்சாலும் நீ பாயைப் பிராண்டிக் கொண்டிருப்பாய்…. அதையாவது செய்யாது விட்டாயே!… நான் எதையோ சொல்லும்போது, நீ எதையோ பேசி என் எண்ணம் போகும் திசையை மாற்றிவிட்டாய். சரி, அது போகட்டும். அதோ அந்தப் பெண்ணைப் பார். உனக்கு என்ன தோன்றுகிறது. உன் உவமைகளும், பேச்சுக்களும் அவளிடம் எவ்வளவு பொருத்தம் காணுகிறது. பார்க்கலாம்’ என்றான் சேகரன். அப் பெண்ணை உச்சந்தலையிலிருந்து, கால்வரையில் தடவிய கிட்டுவின் பார்வையில் பட்டது ஒன்றுமில்லை. அவள் தோற்றம், அழகு, வசீகரம் எல்லாம் இவனை ஒரு பிரமிப்பில் ஆழ்த்தியது. அவள் சௌந்தரியம் எதில் அடங்கி, கேட்காது முணு முணுக்கிறது என்பது தெரியவில்லை. மொத்தத்தில் பார்வையினின்றும் உதற முடியாது நிற்கும், விடுவிக்க முடியாத ஒரு மௌன ஜீவப் புதிர் போன்று விளங்கினாள். பார்ப்பவர் மனது கொள்ளும் எந்தப் பாவனையையும் ஏற்று நிற்பவள் போன்று இருந்தாள். இவ்வளவு அழகி உலகிலிருக்க முடியுமோ என்று ஜடமாக பிரமித்துப் பார்த்து நின்றான் கிட்டு. அவன் தோளைப் பிடித்துக் குலுக்கி – அவனை உயிர்ப்பிக்க வேண்டிய நிமித்தம் போலும் – சேகரன் சொன்னான்… இவளைப் போல் பார்த்ததில்லை என அவளைப் பார்த்து பிரமித்து ஜடமாக நிற்கிறாயே கற்பனைகளுக்கு நீ இடமாக முடியுமோ எங்கேயோ, எப்போதோ கண்ட தொன்று, மனதடியில் மறைந்து கிடக்கிறது. அதைத் தேடும் ஆர்வம் கண் விளிம்பில் ஒட்டிக் காத்திருக்கிறது; இவளைப் பார்க்குங்கால் கண்களில், முகத்தில் பரவி, ‘இதுதான்’… எனக் களி கொள்ளுகிறது… எந்த அதிசயமும், பிரமிப்பின்றி ஆனந்தமெனப் படுவது இவ்வகையில்தான்… எனக்குப் புரியும்படி சொல்ல வரவில்லை. அவகாசமும் அவசரப்படுகிறது’… எனப் பேசிய சேகரன், சிறிது மௌனமானான். அவளை ஒருதரம் பார்த்துவிட்டு… ‘இவ்வகையில் அவளைப் பார்ப்பதில் தான், அவள் கற்பனை ஊற்றென உன் ஒவ்வொரு ஜீவ நாடியிலும் துடிப்பில் பரவுவாள்…’ எனச் சொல்லி நிறுத்தினான்.

‘சேகரா, உன் மூளை வன்மையும், உணர்ச்சி வேகமும் எனக்குத் தெரியும். கற்பனைகளில் நீ உணர்ச்சி வசமாவது, உன்னை எங்கு கொண்டு செலுத்துமோ தெரியவில்லை எனக்கு…’ என்று கிட்டு கொஞ்சம் வருத்தம் கலந்த குரலில் சொன்னான்.

“கிட்டு, நீ சொல்லுவது ஒரு வகையில் சரியெனப் படுகிறது… சமீப காலமாக, எனக்கு ஒன்றுமே புரிவ தில்லை… சுசீலாவைத்தான் உனக்கு நன்றாகத் தெரியுமே.

அவளை மனைவியாக அடைந்தது என் பாக்கியமென் றாலும் தவறியே இவ்வுலகில் பிறந்த அவள், என்னை அடைந்ததும், அவளுக்கும் ஒருவித பாக்கியம்தான். அவளை நான் இப்போது பார்க்கும்போது, என்னென்னவோ தோன்றுகிறது… மனைவியை கணவன் பார்ப்பதில் என்னென்னவோ எல்லையற்று தோன்றவிருக்கிறது. சிறிது காலமாக, என் பிரியம் அவளிடம் அளவு கடந்துவிடுகிறது… உடனே மனது ஒரு பயமடைகிறது… பயம் என்று சொல்லுவது சரியல்ல. மனத்தில் ஒரு விநோத பயங்கரம் காணுகிறது. அந்த பயங்கரத்தில், ஒரு வசீகரமும் காணமுடிகிறது போலும். கிட்டவும் இழுக்கிறது, எட்டவும் துரத்துகிறது.

இது, இப்போது என் மனைவி சுசீலா செய்கிற வேலை… குடும்பக் காரியங்களில் எனக்கு அடிக்கடி அலுப்பும் சலிப்பும் தோன்றுகிறது. இங்கு வந்து சிலநாள் தங்கிச் செல்லுவதில் மனது கொஞ்சம் லேசாகும் என எண்ணித்தான் இங்கு வந்தது… இங்கேயும் பெண்ணைப் பார்க்கும் போது அவளைக் காணும் தோற்றம் கொள்ளுகிறேன்…’ ஒரு வேகத்தில் பத்து தப்படி நடக்குமுன் இவ்வளவையும் பேசிவிட்டான். ஆனால் அதற்கடியிலும் ஒரு நிதானம் தெரிந்தது. சிரித்துக் கொண்டே கிட்டுவைப் பார்த்து, ‘ஏதோ உளறுகிறேன் – நீ ஒன்றும் நினைத்துக் கொள்ளாதே… அதோ நடுவில் உட்கார்ந்து இருக்கிறாளே, அவளைத் தான் சொன்னேன். சமீப காலமாக சுசீலாவைப் பார்த்தால் எனக்கு என்னவோ தோன்றுகிறது என்று சொன்னேனே. அதுதான் இவளைப் பார்க்கும்போது கொஞ்சம் தெளிவடைவதுபோல தெரிகிறது. என்ன என்பதுதான் புத்திக்குப் புலப்படவில்லை.

அதைத்தான் உன்னிடம் சொன்னேன். உனக்கும் நன்றாகப் புரிந்து இருக்கும்!… உன்னிடமில்லாமல் வேறு யாரிடமாவது சொன்னால் தவறாகவும், கேவலமாகவும் என்னை நினைப்பார்கள்… அதோ அவளைப் பார்… அவள் அழகு எவ்வளவு வசீகரமாக துணிவு கொண்டு தாக்குகிறது. அவள் கலியாணமாகாத கன்னிப்பெண். பெண்மை எனப்படுவது அவள்தான் போலும். எவ்வளவு பயங்கர சக்தி பெண்மை என்பது உனக்குத் தெரியுமா? பெண்ணென்றால் ஒருவனுக்கு மனைவியாகத்தான் வேண்டும். பிருமாண்ட வெளியில் உருக்கொள்ளும் பெண்மையை, சட்டத்திற் குட்பட்ட சிறு கற்பலகையில், மனைவியென சித்திரம் வரைந்து இன்பமடையப் பார்க்கிறான் கணவன். அவளிடம் பெண்மையைப் பார்ப்பதோ, பயம் கொள்ளுவதுதான்… என்ன கிட்டு, நீ எப்போதாவது உன் மனைவியைக் கண்டு பயம் கொள்ளுவது உண்டோ’ என்றான், சிரித்துக் கொண்டே சேகரன்.

இவர்கள் பேசிக்கொண்டே அப்பெண்கள் சமீபமாக வந்துவிட்டார்கள். தங்கள் பேச்சு, அவர்கள் காதில் விழுந்து இருக்குமோ என்ற சந்தேகம் கொண்டு, திடுக்கிட்டுப் பேச்சை நிறுத்தினர். இசைந்து தொடரொலியெனக் கேட்டு வந்த ஒரு சப்தம், இவர்கள் பேச்சை நிறுத்தியதும், திடீரென மறைந்ததான தோற்றம் கொண்டனர். பேசிக் கொண்டிருந்த அப்பெண்களும், இவர்களைச் சமீபத்தில் கண்டதும் இவர்களைப் போன்றே பேச்சை நிறுத்தினர் போலும் ஒருவர் ஒருவர் தத்தம் பேசியது மற்றவர் காதில் ஒருக்கால் விழுந்து இருக்குமோ, என்ற சந்தேகத்தின் சஞ்சலத்தில், ஒருவரை ஒருவர், ஓரக் கண்ணால், சிறிது புன் சிரிப்பில் மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர். இருவருக்கு, ஒரேவிதமான உணர்ச்சி பிடிப்பு ஒரே சமயத்தில் உண்டாவதின் நிமித்தமாக, அவர்களிடையே ஒரு சூக்ஷமமான பிடிப்பு, அவர்களையறியாமலே ஏற்பட்டு விடுகிறதுபோலும். மேலும் அப்பிடிப்பு, பின் சமய சந்தர்ப்ப விசேஷங்களைப் பொருத்து, இறுகவோ, நழுவவோ, மற்றும் என்னென்ன விதத்தில் பாதிக்கவோ காத்து நிற்கும் போலும்.

மறுநாள் பகல் ஒரு மணி சுமாருக்கு சேகரன் காப்பி சாப்பிட, ஒரு ஹோட்டலுக்குப் போய்க் கொண்டிருந்தான்.

அந்த ஹோட்டல் வாயிலில் அப்பெண்ணை யதேச்சை யாகச் சந்திக்க நேர்ந்தது. வியப்பில் ஒருவரை ஒருவர் சிறிது பார்த்து நின்றனர். இருவர் முகத்திலும் ஒரு சிரிப்பு படர்ந்தது.

‘அவர்கள்!?” என்று அப்பெண்ணைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, சேகர் கேட்டான். அதைத் தொடர்ந்து அவள் ‘அவர்!?’ என்று கேட்டுவிட்டு, மேலும் ‘இது மாலை வேளை அல்ல; கடற்கரையும் அல்ல; அவர்களுடன் பேசி பொழுது போக்க’ என்றாள்.

‘சரிதான்… கொஞ்சம் காப்பி சாப்பிட்டுவிட்டுப் போக லாமே…’ என்றான் சேகரன்.

“வேண்டாம் இப்போது… பிறகு பார்த்துக் கொள்ள லாம்…’ என்றாள் அப்பெண்.

‘சரி, சாயங்காலம் பார்த்துக் கொள்ளலாம்…?’ என்றான். தலையை அசைத்துவிட்டு, அப்பெண் ஒரு அவசரத்தில் போய்விட்டாள். அவள் சென்றவுடன், சிறிது நேரம் சேகரன் அவ்விடத்தைவிட்டு அகலாமல் நின்றிருந் தான். ஒரு இன்பக் கனவு கண்டதான ஒரு தோற்றம் கொண்டான்.

அன்று மாலை, சேகரன் மட்டும் தனியாக கடற்கரைப் பக்கம் போக நேர்ந்தது. சிறிது தூரத்திலிருந்து முதல் நாள் உட்கார்ந்து இருந்த இடத்தில் உட்கார்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை, கவனித்தான். அவர்களருகில் நெருங் கியதும், ‘வெகு நேரமாகக் காத்து…’ என்று ஆரம்பித்தவன், சிறிது தயங்கி ‘வந்து நேரமாகிறதோ…’ என, மாற்றிக் கேட்டான். அப்பெண்கள் சிறிது திடுக்கிட்டனர். அப்பெண் ‘வந்து கொஞ்சம் நேரமாகிறது’ என்றாள். அவர்களுக்குக் கொஞ்சம் தள்ளி இவன் உட்கார்ந்து கொண்டான். அப்பெண் மற்றவர்களைப் பார்த்து, ‘இவரை, மத்தியானம் டவுனில் சந்திக்க நேரிட்டது’ என்று குரலில் ஒரு பாவமும் தோன்றாவகையில் சொன்னாள். ஒரு கயிறு கொண்டு, இருவரையும் சேர்த்து பிணைத்தது போன்று அவ்விரு பெண்களும் இவ்விருவரையும் மாறி மாறிப் பார்த்தனர்.

பானு, சுசீலா, சுமதி இம்மூவரும் வசதியான, மூன்று கௌரவக் குடும்பப் பெண்கள். படிப்பு முடிந்தவுடன், மேற்கொண்டு செய்வ தென்னவென்பது, இவர்களுக்கும் இவர்கள் பெற்றோர்களுக்கும் புரியவில்லை போலும். மாலை நேரத்தில் பொழுது போக்குவதற்காக, கடற்கரை சென்று பேசி காலம் கழிப்பது வழக்கம். சேகரன் இவர்கள் கோஷ்டியில், மாலைப் பேச்சில் கலந்து கொண்டதில் இவர்களுக்குப் பொழுது போவது சிறிது லேசாகியது. சேகரன் பேச்சுகள், கேட்க சுவாரஸ்யமாக இருக்கும். அவன் நல்ல குணமும் இவர்களுக்குப் பிடித்ததாக இருந்தது. அம்மூவருக்கும் இவனிடம், அவர்களை அறியாதே ஒரு பிரியம் ஏற்படலாயிற்று. இக்குறுகிய கால பழக்கத்திலும், அவனை வெகு நாளாகத் தெரிந்த ஒரு நண்பனென அவர்கள் எண்ணலாயினர். இதுவரையிலும், யார் யார், எவர் எவர் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளாமலும், பெயர் என்னவென்று கேட்டுக் கொள்ளாமலும்தான் பழகி வந்தனர். சந்தித்தவுடன், முதலில் இவ்வகைப் பேச்சிற்கு இடமில்லாது போய் விட்டால், பிறகு கொஞ்சம் பழக்கமானவுடன் இவ் வகையில் கேட்டுக் கொள்ளுவது ஒரு அலௌகீகம் தான்.

ஒருநாள் சேகரன் சிறிது பதட்டத்தில் காணப்பட்டான். அப்பெண்களில் சுசீலாவைப் பார்த்து ஏதோ பேச வாயெடுத்தவன், ‘என்ன சுசீலா…..’ என்றவுடன் திடுக்கிட்டு பேச்சை, எட்டிய வெளியை நோக்கியபடி நிறுத்தினான். இப் பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களும் ஆச்சரியமடைந்தனர்.

கொஞ்சம் பரிகாசமாகச் சிரித்துக் கொண்டே பானு சேகரைப் பார்த்து, ‘உங்கள் பெயர் என்னவோ…’ என்றாள். இவளைப் பார்த்துத் திரும்பிய சேகர், ‘சேகர்… அப் பெண்ணின் பெயர்?’ என்றான். ‘நீங்கள் இப்போது தான் சுசீலா என்று சொல்லிவிட்டு, என்னைக் கேட்கிறீர்களே’ என்றாள். ‘இல்லை, எனக்கு இது வரையில் தெரியாது’ என்றான்.

சிறிது சென்று, ஒரு நிதானத்தில், ‘நீங்கள் ஊஞ்சல் ஆடுவது உண்டோ. ஊஞ்சல் விளையாட்டுத் தெரியுமோ? சிறுவயதில், அப்படியாக ஒருவரை ஒருவர் ஊஞ்சலில் வைத்து, நீங்கள் வீசி ஆட்டி விளையாடி இருக்கலாம். வேகத்தில், கிட்டவும் எட்டவும், ஆட்டுபவருக்கு ஊஞ்சலில் இருப்பவர்கள், வந்துபோய்க் கொண்டிருப்பார்கள். கிட்ட ஒருவராகவும், எட்ட ஒருவராகவும் ஊஞ்சலில் இருப்பவர் ஒருவரே தோற்றம் கொடுத்தால், அந்த ஊஞ்சல் விளையாட்டு இன்னும் எவ்வளவு விநோதமாகத் தோன்றும்? முன்பு நான் ஒரு உருவை வைத்து இருவராகக் கண்டு ஆட்டினேன் போலும்; இப்போதோவெனில் ஒரு பெயரை வைத்து இருவராக ஆட்டுகிறேன் போலும்’ என்று சொல்லி, அவன் வாய்விட்டுச் சிரித்தது வெகு வசீகரமாக இருந்தது… ‘என்னை மன்னித்து விடுங்கள். உங்களிடம் நான் இவ்விதம். இவ்வளவு சீக்கிர பழக்கத்தில், சுவாதீனமாகப் பேசுவதை… எனக்கு மிகவும் தெரிந்தவள், எனக்கு வெகு பிரியமான ஒருவள் பெயர் சுசீலா. இப்போது உங்கள் பெயரும் சுசீலா என்பதில் ஒரு யதேச்சை பெயர் ஒற்றுமை என்பதில் என்னென்னவோ என் மனது விநோத விதத்தில் எண்ணுகிறது. அதுதான்’

சேகரன் ஊரை விட்டு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகப் போகிறது. வந்த சில நாட்கள் வரையில் கிட்டுவுடன் தங்கி, ஊர் போவதாக அவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பியவன் ஒரு விடுதியில் தங்கிக் காலம் கழித்துக் கொண்டிருந்தான். பட்டணத்தைவிட்டுப் போக அவனுக்கு இன்னும் மனம் வரவில்லைபோலும். ஆனால், சமீபமாக, சில நாளாகவே அவனுக்கு ஊர் ஞாபகம் அடிக்கடி வந்து கொண்டிருந்தது. ‘அநேகமாக நாளைக்கு ஊருக்குப் போகலாம்’ என மாலையில் அப்பெண்களிடம் சொல்லுவதும், மறுநாள் மாலையில் அவர்களைக் கடற்கரையில் சந்தித்துப் பேசுவதாகவும் இருந்தான்.

அன்றைய தினம் ‘இன்று நிச்சயமாக ஊருக்குப் போயிருப்பான்’ என்று நினைத்துக் கொண்டிருப்பவர் களிடையே தன் தோற்றம் திகைப்பைக் கொடுக்கும் என்ற நினைவில் சேகரன் கொஞ்சம் முன் நேரத்திலேயே கடற்கரையை அடையும் ஆவலிலிருந்தான். அவசியம் ஊர் போக வேண்டிய தென்ற எண்ணம் ஒரு பக்கமும், அப்பெண்களிடையே பேசுவதில் காணும் இன்பத்தில் இங்கேயே இருக்க நினைப்பது ஒரு பக்கமும் இவனை ஆட்டுவித்து, என்ன செய்வது என்று தோணாது இருந்தான். ஒளிபடராத பிரக்ஞை வெளியில் சேகரன் தடுமாறிக் கொண்டிருந்தான். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் உள்ள எல்லைக்கோடு, பிளவு கொண்டு ஒரு சிறு வெளி விரிவு தெரிவது போலும் அந்நடு வெளியில் நின்று உலக விவகாரங்களைக் கவனித்தான். உலகம் உண்மையெனத் தோன்றுவதற்கு வஸ்துக்கள் வாஸ்தவமெனப் படுவதற்கு மாயைப் பூச்சு கொள்ளுமிடம் அதுதான் போலும். தூக்கத்தில் மறையவும், விழிப்பில் மறக்கவும்…….

அன்று பகல்பொழுதை ஏதோ அவஸ்தையில் கழித்து, மாலையில் கடற்கரையை அடைய, கொஞ்சம் முன்நேரத்திலேயே பஸ் ஸ்டாண்டில் சேகரன் நின்றிருந் தான். அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தில், முன்னேறத் தெரியாது இரண்டு பஸ்ஸுகளை விட்டான். தன்னைவிட்டு நகர்ந்து செல்லும் அவைகளைப் பார்க்கும் போது உலகமே தன்னைத் தனிமையில் விட்டு, நகர்ந்து போவதாக நினைத்தான். கடற்கரையில் அப்பெண்களை யாவது விட்டுச் செல்லாதா என்ற ஏக்கப் பார்வையில், மற்றொரு பஸ்ஸும் போய்விட்டது. இருபக்க மரங் களையோ, அப்பால் நின்று தெரியும் பங்களாக்களையோ, கவனியாதே போன்று, நகரவீதி அகண்டு, நீண்டு குறுகி, கிழக்கு மேற்காக எட்டிய வெளியை அடிவானம் வரையில் சென்று தொட வெகுதூரம் போய்க் கொண்டிருந்தது. வீதி ஓரத்தில் மரங்கள், அப்பாலும் இப்பாலும் பலபல விசித்திரத் தோற்றத்திலும் பலவித நிறத்திலும், மரங் களிடையே, பாதி தெரிந்தும் தெரியாமலும், வீடுகளும், பங்களாக்களும் பார்வையில் பட்டன.

தன்னைப் போன்றே திகைத்து வீதிமரங்களும், வீடுகளும் நகரமுடியாது நின்றிருப்பதை சேகரன் பார்த்தான். லேசாக மரங்கள் காற்றில் அசையும் போது, அதன் தலையிலிருந்து பூக்கள் பொல பொலவென்று உதிருவது வெகு விநோதமாகத் தெரிந்தது. எதிர் பங்களாவிலிருந்து நாய் குரைப்பு சத்தம் கேட்டது. எதிரொலியில் அப் பங்களாவே நாயெனக் குரைப்பது போன்றிருந்தது. எட்டிய தூரத்தில் ஒரு பட்ட சவுக்க மரம் நட்டுத் தெரிந்தது. அது தன் தலையில் ஒரு கொடியைக் கட்டிக் கொண்டு ‘பொலிடிகல்’ குஷியில் கூத்தாடுவது எவ்வளவு அபத்தமாகத் தெரிகிறது! மேற்கே சூரியன் மறைய விருக்கிறான். உலகமே ஒரு லேசான மஞ்சள் காவித் தோற்றத்தில் ஒரு வரட்டு விரக்தி கொள்ளுகிறது. வெளியடைய முடியாத ஒரு பளுக் கொடுக்கும் வேகம், சேகரன் மனதிற்கடியில் குமுறிக் கொண்டிருந்தது. அவன் முகத்தில் ஒரு கடுமை கண்டும், உதட்டின் விளிம்பில் ஒரு ஏளனப் புன்னகை அருவிக் கொண்டிருந்தது. கோவிலில் தற்கால பக்தர்களின் பக்தி பரவசத்தை, பரிகாசச் சிரிப்பில் மாடத்திலிருந்து பார்த்து நிற்கும் ஒரு ஜீவகளை சிலை என, பட்டணப் போக்குகளைப் பார்த்துக் கொண்டு, சேகரன் நின்றிருந்தான்.

பட்டணச் சந்தடிகள், பொறுமையிழந்த கூக்குரல்கள் போன்று வீதிவழியே, யார் கவனிப்பிலும் படாது, போய்க் கொண்டிருந்தன. மோட்டார்கள் பறந்து சென்று மறைந்தன. தங்களை விட்டுச் சென்ற உயிரைப்பிடிக்க, நடைப் பிணங்களென, அநேகர் கடந்து சென்றனர். மற்றும் சிலர் தங்களை விட்டு, உயிர் ஓடாது இருக்க, அதைப் பிடித்துக் கொண்டு ஓட்டத்திலும் நடையிலும் சென்றனர். உருவங்கள், தெரிந்தும், மறைந்தும் சப்தங்கள் கேட்டும் கேட்காமலும், எல்லா சந்தடிகளும் ஒரு அலங்கோலத்தில் ஒரு புலனாகாத நியதியில் அவதிப் பட்டுச் சிதறித் தெரிந்தன. இந்த உரு, இந்த சத்தம், இந்தப் பெயர், இந்தத் தோற்றம், என்ற இசைவுமுறை நழுவி, தனித்தனியாகக் காணும் புலனுணர்வுகளை, மனது ஒப்புக் கொள்ள முடியவில்லை.

எட்டிய வெளியிலிருந்து, சினிமா மெட்டு காதை சுவைக்கத் துளைத்துக் கொண்டிருந்தது. ஒரு டீக்கடைக் காரனுடைய வியாபாரம் விசுவரூபம் கொள்ளமுயலும், நவீன நாகரிக சத்தம் அது. பஸ்ஸுகளைத் தவறவிட்டுக் கொண்டு இவ்வகைப் பார்வையில் அங்கு நின்று கொண்டிருந்தான். உலகமே, ஒரு நஷ்டக் கணக்கில், இவ்வித ஆர்ப்பாட்டங்களில் தேய்ந்து கொண்டு போவதான எண்ணம் தான் அப்போது அவன் கொண்டது. சக்தியை – ஜனசக்தியை – முதலெனக் கொண்டு, ஆரம்பித்த இந்த உலக வியாபாரம், விளைவுகளில் மதிப்பைக் காணக் கூடாத திகைப்பில், நஷ்டத்தில், முதலையே வீண் விரயமாக்கிக் கொண்டு வருகிறது போலும்.

சீக்கிரம் செல்ல நினைத்த சேகரன், சிறிது நேரம் சென்றே கடற்கரையை அடைந்தான். அவர்கள் வழக்கம் போல், அந்த இடத்திலேயே உட்கார்ந்து பேசிக் கொண் டிருப்பதை, தூரத்திலிருந்தே கவனித்தான். அவன் அவர்களை அணுகியபோது ‘என்ன சேகர், இன்று ரொம்ப லேட் ஊரிலிருந்து நேரே இங்குதானே வருவது… என்று சிரித்துக் கொண்டே பானு சேகரை வரவேற்றாள். சுசீலா, நிதானத்துடன்… ‘இன்று ஊருக்குப் போகவில்லை!? என்றாள். அது கேட்பவருக்குக் கேள்வியாகவும் அதைக் கேட்பவருக்கு ஆச்சரிய விளியாகவும், தோன்றும்படி இருந்தது. ‘வாவென்று அழைத்து லெட்டர் வந்தாலல்லாது எப்படிப் போகிறது..’ என்றாள் பானு.

‘நான் இங்கிருப்பது வீட்டிற்குத் தெரியாது…’ என்றான் சேகரன்.

‘ஓகோ, சேகர் கோபித்துக் கொண்டு சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வந்து விட்டார்’ என்று சொல்லி, பானு கொஞ்சம் உரக்கச் சிரித்தாள்.

‘என்ன கசீலா-பானு சொல்வது பொய்தானே’ என்று அரை கெஞ்சலுடன் சுசீலாவைப் பார்த்து சேகரன் கேட்டான்.

‘எனக்கு எப்படித் தெரியும் சேகர்… நீங்கள் பேசுவது சரியாக இல்லை. நீங்களும் ஏதோபோல் இருக்கிறீர்கள்’ என்றாள் கொஞ்சம் வருத்தத்துடன் சுசீலா.

கொஞ்ச நாளாகவே சேகரன் பேசுவது சுசீலாவுக்கு ஏதோபோல் தோன்றியது. மற்றைய பெண்களுக்கு எப்படியோ, இவளுக்குத் தெரியாது. அவன் பேச்சுகள் சிலசமயம் இவளுக்குப் பிடிக்காது. ஒரு அசட்டுத்தனமான ஜாக்கிரதையில், இவர்களுடன் பேசுவது இவளுக்கு அருவருப்பளித்தது. சிற்சில சமயம் அவன் பேச்சுகள், நிதானமாயும் ஆழ்ந்த கருத்துடன் வசீகரமாயும் இருக்கும். இரண்டொரு நாளாக சுசீலாவுடன் பேசும்போது ஒரு ஜாக்கிரதையும், ஒரு தடுமாட்டமும், சேகர் பேச்சில் தெரிந்தது. அது எதனால் என யோசிக்கும்போது, அவனை ஒருவித உணர்ச்சியில் கொள்ள முடியவில்லை. அருவருப்பு, பயம், வெறுப்பு, பரிதாபம் முதலிய பலவிதமான உணர்ச்சிகளை, மாறி மாறி அவள் மனது கொண்டு யோசனைகளும் சலிக்க ஆரம்பித்தன. சிற்சில சமயம் அவள் மனது துக்கமும் அடையும்.

ஊரையும், மனைவி குழந்தையையும் விட்டு, இப்படி இவன் பட்டணத்தில் காலம் கழிப்பது இப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை. தங்கள் தகப்பன்மார், தங்களுக்காக கணவன்மார்களைத் தேடிக் கொண்டிருப்பது இவர் களுக்குத் தெரியும். கல்யாணம் ஆகவேண்டிய பெண். தனக்குத் தெரியாத ஒருவனை எண்ணி, அவனுக்காகக் காத்திருப்பது போன்றதா, ஒரு மனைவி தன் கணவன் வருகைக்கு ஏங்கி எதிர்பார்த்து இருப்பது? கன்னியும், மனைவியும் வேறெனப் படுவதில், அதுமாதிரி இல்லா விட்டாலும், இருவரும் பெண் என்பதில், அதுபோலவும் தோன்றுகிறது. இவன் ஊர் போகாது இருப்பது, இவன் மனைவி இவனுக்காகக் காத்திருப்பது, இதெல்லாம் இவர் களுக்குப் பிடிக்கவில்லை. ஒரு தவறான காரியத்தைதான், சேகரன் இங்கு இருப்பதில் செய்கிறான். அவனுடன் தாங்கள் பேசுவதும் தவறாகத் தான் தெரிகிறது… ஒருக்கால் அவன் ஊர் போகாது இருப்பதற்கு தான்தான் காரணமா, என்று சில சமயம் சுசீலா எண்ணுவாள். தன்னெதிரிலும், தன்னுடன் பேசுவதிலும், அவன் ஒருவகை இன்பம் கண்டு, அதனால்தான் ஊர் போகாது இருக்கிறான்போலும். சுசீலாவினால் தன் மனம் போகும் ரீதியைத் தடுக்கவோ, தன் மனதில் தோன்றி மறையும் எண்ணங்களை நன்கு புரிந்துகொள்ளவோ முடியவில்லை. தத்தி, தன்னைவிட்டுக் குதித்தோடி, உட்கார்ந்து கொள்ளுமிடத்தை தெரிந்து கொள்ளுமுன்பே, மற்றொரு இடத்திற்குத் தாவிப் போவது போன்றுதான் அவள் மனமும் எண்ணமும் இருந்தன. சேகரன் ஊர் போகாதது தன்னால், தன் தடுப்பால், என்று அவளால் நேர்முகமாக நினைக்க முடியவில்லை. தான், அவ்விதத்தில் குரூர சித்தம் படைத்தவளாகவோ, கேவலமான குணமுடையவளாகவோ, கருத முடிய வில்லை. ஒரு கணவனை அவன் மனைவியிடமிருந்து பிரிப்பது ஒரு குரூரச் செய்கையல்லவா? அதையும் ஒரு பெண் செய்வதென்றால்? அப்படியாயின் தான் யார். எப்படி? தான், தன் சுபாவம், குணம் என்பதெல்லாம் என்ன? தான் அல்லாததென ஒன்று தோன்ற, அதை மறுத்த மாறுதலை கொள்வதில்தானோ இவைகள் ஆகும்? மாறி மாறித்தானோ, நான் என்னுடைய என்பதெல்லாம் மறுப்பில் மறுதலையாக உண்மையெனத் தோன்றும்? அவ்வகையானால், இவைகளெல்லாம் ஸ்திரமெனக் கருத முடியுமா? உண்மையில் இவைகளெல்லாம் என்ன? சுசீலாவினால் ஒன்றையும் தெளிவுறக் கண்டு கொள்ள முடியவில்லை… உருவற்று… இடமற்று – தன் வழியே உலாவும் குணங்கள், நான், சுபாவம் எல்லாமே ஊடுருவத் துளைத்துச் செல்ல குறியென யதேச்சையில் குறுக் கிடுகிறது பெயர், உருக்கொள்ள? வெகு விநோதமான எண்ணங்களைக் கொண்டாள் சுசீலா. அவன் ஒரு விநோதப் பெண்தானே! அவள் மனது வெகுவாக விரிவடைந்தது போலும்!…

அவனைவிட்டு, இவர்கள் பிரிந்து செல்லும்போது, பானுவைப் பார்த்து சுசீலா கேட்டாள்: ‘பானு, அவன் இங்கிருப்பது சரியா, ஊருக்குப் போவது சரியா? என்ன தோன்றுகிறது உனக்கு…உனக்கு நன்றாக விளங்குவது போன்று, ஏதோ ஒன்றைச் சொல்லுவாய். வேறு வகையில் அவன் இருப்பது அவனுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்கிறான் என்று சொல்லுவாய். அதிலிருந்தும் கிளைப்பாதைகளென ‘தெரிவது, தெரியாதது’. நாம் நமக்குத் தெரிந்து தெரியாமல் பொறுப்படைவது… ‘பொறுப்பு’… ‘சரி’, ‘தவறு’ எல்லா வார்த்தைகளுமே என்னவெல்லாமோ அர்த்தம் கொடுக்கும். பேசுவதும் புரிவதும் மறுதலையில் சலிக்க என்னால் பேசமுடியும். ஆனால் உணரும்போது ஜீவியத்தை, உலகப்போக்கை, முரண்படும் உண்மைக் கூற்றெனக் கண்டு, அதைச் சொல்லும்போது, மாறுபட்ட அபத்தமாகத்தானே விளக்க முடிகிறது…’

சிறிது நிறுத்தி மேலும் பேசலானாள். ‘சேகரனை நான் ஆணாக மதித்துப் பழகவில்லை போலும்… ஆண்கள்… ஆண்மை என்பதெல்லாம் எனக்கு நன்றாகப் புரிகிறது. நழுவ, புழக்கடை வழியைத் திறந்து வைத்துக் கொண்டு, வாயிலில் நின்று சிறகடித்துக் கொக்கரிக்கும் சேவல்கள் ஆண்கள். ஆண்மையோவெனில் இறகு உரித்த கோழிகள். சேகரனைப் பெண்ணென மதித்துத் தான், நான் பழகிப் பேசுகிறேன் போலும்! ஒரு பெண், பெண்மையின் சக்தியையா ஒரு ஆணிடம் உணரமுடிகிறது? அதனால் தான், நான் அவனிடம் கொள்ளும் விருப்பம் வெறுப்பும் ?… அவனுக்கு என் பெயர் கொண்ட ஒரு மனைவி இருக்கிறாள். அவளையா, இவனிடம் நான் பார்ப்பது? அவள் பெண்மையை, இவன் ஸ்வீகரித்துக் கொண்டு விட்டானா?… என் பிரியமான பர்னு, நீ என்னைக் கேவலமாகக் கருதமாட்டாய் என்பது எனக்குத் தெரியும். எதையாவது கட்டிக்கொண்டு அழவேண்டுமென மனம் தவிக்கிறது இப்போது…’ என்று பானுவை இறுகத் தழுவிக் கொண்டாள்… தெரியாதே பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த சுமதி, பேசா மடந்தையென, ஏதோ யோசனையில் ஆழ்ந்தவள் போன்றிருந்தாள்.

சேகரன் பேச்சுக்கள் அன்று சரியாக இல்லை. சுசீலா வெகு நேர்த்தியாகவும், கல கலப்புடனும் அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவன் ஊருக்குப் போவதை, இவ்வகையில் பேச்சினால் தடுத்துக் கொண்டிருந்தாள் போலும்.ஆணென ஒருவன், எதிரில் சேஷ்டைகளிலும், பேச்சுக்களிலும் எவ்வளவு வெறுப்பை அளிக்கிறான் என்பதை சுசீலா எண்ணிக் கொண்டாள் போலும். ஒரு ஆணுடன் ஒரு பெண், மனைவி என எப்படிக் காலம் தள்ள முடியும்…… அதில் இன்பமோ ‘காதல்’ என்பதான ஒன்றையோ எப்படிக் காண முடியும்? வெறுப்பை அளிப்பவருடன் கூடப் பழகுவது எவ்வளவு தர்மசங்கடம்… விடாது தொடர்ந்து, நியாயமான முறையில் வாழ்க்கையை நடத்த, எத்தனை உபாயங்களை தர்மமென காண வேண்டியிருக்கிறது! தன் எதிரில், காணாது தொலைந் தாலாவது கணவன் வருகைக்கு ஏங்கிக் காத்திருப்பதில் ஒருவகை இன்பம் காண முடியும்போலும் பெண்களால்! சேகரன் மனைவி சுசீலாவின் வாழ்க்கையின் ஆதார மெனத்தான், தன்னை எண்ணிக் கொண்டாள். அவனை தடுப்பதைத்தான், தான் செய்கிறது – ஊரடையாது –

செய்வது என்று நினைத்தாள். அவ்வித எண்ணம் சூனிய வெளியில் நின்று கொண்டிருப்பது போன்று தோற்றம் கொண்ட தனக்கும் ஒரு இடமளிப்பதென உணர்ந்தாள். முன்பு தன் மனதிற்கு இசையாத குரூர குணமென்பதையும், தன் மனது ஒரு திருப்தியில் கண்டது, என்பதாகவும் அவளுக்குத் தோன்றியது.

இருட்டு கண்டு விட்டது. உட்கார்ந்து இருந்த அநேகர் எழுந்து போய்விட்டனர். மற்றும் சிலர் எழுந்து போவதற்கும் ஆயத்தமானார்கள். இவர்களும் எழுந்து நடந்து வீதியை அடைந்தனர். அந்த முச்சந்திவீதியைக் கடந்து, எதிர் வீதியில் கொஞ்சம் நடந்த பிறகு, மற்றொரு சந்து குறுக்கிடும்போது, சேகரன் இவர்களை விட்டுப் பிரிய வேண்டும்.இவர்கள், விதியை குறுக்காக கடக்கும்போது, இடது புறத்திலிருந்து ஒரு மோட்டார் சப்தம் கேட்டது. இவனை விட்டு, அவர்கள் பின் திரும்பி நடந்து, ஓரமாக நடை பாதையை அடைந்தனர். வீதி நடுவில் நின்ற சேகரன் முன்பின் போவது தெரியாது, ஒரு திகைப்பில் நடு வீதியில் நின்று விட்டான். வந்து கொண்டிருந்த மோட்டார், எவ்வித லாவகத் திருப்பலிலும், இவனைக் கடந்தபோது சிறிது இவனை உராய்ந்து சென்றது போலும். ஒருவருக்கும் தெரியவில்லை என்பதே போன்று மோட்டாரும், நிற்காது சென்றுவிட்டது. சேகரன் சிறிது தடுமாறி, சமாளிக்க முடியாமல் கீழே சாய்ந்தான். தொடர்ந்து விழும் அவனை, ‘சாவு’ யாவரையும்விட முன் சென்று பிடித்துக் கொண்டது… சேகரன் கீழே விழுந்தான்…

கண்ணெதிரில் கீழே விழும் சேகரனை, முன்னடைந்து குனிந்து தடவியபடியே பானு. ‘ஐயோ நம் சேகர்… பேச்சு மூச்சில்லையே…’ என்று கண்களில் நீர் ததும்பச் சொன்னாள். அருகில் வந்து நின்றிருந்த சுசீலா ‘நம்ப சேகர்! என முணுமுணுத்தபடி, பானுவைத் தூக்கி நிறுத்தி… ‘வா பானு போகலாம்… கூட்டம் கூடுமுன்..’ என்று சொல்லி நிதானமாக அவளை அழைத்துச் சென்றாள்.

அவன் இறந்து விட்டான் என்பது சுசீலா மனதிற்கு நிச்சய மாகவே பட்டது. ‘அநாதையாக நடுத் தெருவில் விட்டுச் செல்லுகின்றோமே…’ என்ற பானுவின் குரல், வெளிவர முடியாது. தன் மார்பில் அவள் முகத்தைப் புதைத்துச் சென்ற சுசீலாவின் மனதிற்குள் கூச்சல் கொண்டு அமுங்கியது போலும்! வெகு வருத்தத்தில், சுமதி, இவர்களைப் பின்தொடர்ந்து நடந்து போனாள்.

ஒரு கணத்தில், தான் நின்ற இடம் மறுபடியும் சூனியமானதென்ற ஒரு உணர்வுயடைந்தாள் சுசீலா. வெற்று வெளியில்,உருவற்ற பெயரென சுசீலா நடந்து கொண்டிருந்தாள். கணவனுக்கும் மனைவிக்கும். குறுக்காகத் தடுத்து நின்றதென்பதில், இடம் கொண்டு நின்ற கன்னி சுசீலாவை ‘மரணம்’ எட்டித் தள்ளிவிட்டது.

ஒரு மனைவிக்கு, சதா தன் கணவன் வருகைக்குக் காத்திருப்பதில் இன்பம் கொடுக்க, அவனைத் தடுத்து நின்றதில் இடம் கொண்ட சுசீலாவை எட்டித் தள்ளியே அந்த இடத்தை ‘மரணம்’ பறித்துக் கொண்டு விட்டது. எவ்வளவு அநியாய நியாயமெனப் படுகிறது சேகரன் மரணம். இனி எவ்விடம் தன்னிடமாகக் காண்பது என்ற மனத் தடுமாட்டத்தில் கசீலா நடந்து கொண்டு போனாள்.

சில நாட்களாக, இவர்கள் மாலையில் கடற்கரையில் கூடுவது இல்லை. தன் மாடி அறை ஜன்னலடியில் மாலையில் நின்று கொண்டு எட்டிய வெளியை, சுசீலா பார்ப்பது உண்டு. தன் சிந்தனைகளே, ஒரு பளுக் கொடுப்பதென நினைத்தவள் மனம், அப்போது துக்கத்தை யும் கொள்ளாது சந்தோஷத்தையும் கொள்ளாது இருந்தது. பெயர் கொண்ட ஒன்று, தன் உருவை,சுமையெனக் களைந்து, பெயரெனத்தான் எட்டிய வெளியில் லேசாக மிதப்பதைப் பார்த்து நிற்பவள் – போலும், சுசீலா என்ற பெயர், மறுபடி உருக்கொண்டால் யாராக முடியும்?

இருளில், உடலை விட்டகன்ற நிழல், ஒளி கண்டவுடன் சரியெனத்தானா, பிரிந்த தன்னுடல் எனக் கண்டு மறுபடியும் உடலுடன் ஒட்டிக் கொள்ளுகிறது…? சுசீலா, பெயரெனத் தன்னைக் களைந்து கண்டதில், சேகரன் மனைவி சுசீலா எனவா மனதில் உருக்கொண்டாள்…?

கிராமத்தில் காலை, மாலை வேலைகளை கவனிப் பின்றிக் கைவிட முடியாது. அதிகாலையில் இருட்டுடன் எழுந்து, வாயிற்புறம் சாணம் தெளித்து, பெருக்கி, கோலம் வரையவேண்டும். இரவின் இருளில் தூக்கம் காணாததி னாலா, போடும் கோலம் தவறுகிறது…… வெளிச்சம் காண இருக்கும் கிழக்கே, வெகு தூரத்தை உன்னிப்பாய்க் கவனிப்பதில், கண்டது ஒன்றுமில்லை. இரவில் பரவியதை ஒன்று கூட்டிச் சேர்த்துக் கொளுத்த குவித்த இருட்டு, ஒளி கொள்ளுமுன்தான் எவ்வளவு இருட்டு! கணவனைக் காண முடியவில்லை. பகல் நீண்டும் இரவு வருகிறது. குழந்தை, காலைச் சுற்றி வராது தொட்டிலில் தூங்கும்போதுதான், பகல் பொழுது வளருகிறது. அதைத் தடுக்க இரவு குறுக்கிடுகிறது. மாலையில் சூரியன் மறைகிறான். இரவு வந்தவுடன் விளக்கை ஏற்றி, வாயிற் புறையில் வைத்து விட்டு திண்ணைத் தூணடியில் நிழலென நிற்கிறாள். மேற்கே சூரியன் மறைந்த விடத்திற்கும் வெகு அப்பாலே, பார்க்கிறாள். கண்ணொளி கொண்டும், ஒன்றையும் பார்க்க முடியவில்லை. கீழிறங்கி, எதிரே தெரியும் கோயில் சுவாமியைத் தெரிசித்து விட்டு, விளக்கை எடுத்துக் கொண்டு உள்ளடைகிறாள் சுசீலா… இரவும் குறுகாது நீண்டு வளருகிறது. அல்லலுறும் மனது தூக்கம் கொண்டா லாவது இன்பக் கனவையாவது எதிர் பார்க்கலாம்…… வேதனைகளின் இன்பம் தான் வாழ்க்கை போலும்!

தானாக வேண்டி, எதிலும் தன்னைக் காண தேடுவது போல கன்னி சுசீலா, மேற்கு பார்த்த தன் மாடி அறை ஜன்னலடியிலிருந்து எட்டிய வெளியை வெறித்துப் பார்ப்பது உண்டு. சேகரன் மனைவி சுசீலாவை மனதில் கண்டதில், அவளாகத் தன்னையும் கண்டு கொண்டு விட்டாள் போலும்!

தன் கணவன் வருகைக்காக எதிர்பார்த்து ‘காதல்’ காண மனைவியாக, கன்னிப் பெண் சுசீலா தன் மாடி ஜன்னலடியில் நின்றிருந்தாள்.

அப்படியாயின், ஒருவகையில் ‘காதல்’ கண்ட பெண் கலியாணமாகாத கைம்பெண் என்ற அபத்தம்தானே!

– சரஸ்வதி 1960.

மௌனி மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர். எஸ். மணி ஐயர் என்கின்ற இயற் பெயருடைய மௌனி, ஜூலை 27, 1907-ல் தஞ்சாவூர் மாவட்டம்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *