பாழும் மனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 22, 2025
பார்வையிட்டோர்: 638 
 
 

டெலிபோன் மணி கிர்ரிங்க் கிர்ரிங்க் என் அடித்துக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இப்படித்தான். காலை ஒன்பது மணி ஆனால் இந்த டெலிபோன் மணி அடிக்கத்தானே செய்கிறது. நானும் இந்த ஊருக்கு வந்து ஒரு ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கும். இன்னும் இந்த டெலிபோன் அழைப்பு விடாமல் தொடர்கிறதே.

‘யார் நீங்க்’

‘ச்சீனு இருந்தா பேசச்சொல்லுங்….க’

‘இங்க சீனுன்னு யாரும் இல்லை.உங்களுக்கு சீனு என்ன வேணும்’

‘அந்த மயிதிலியானு பேச்சொல்லுங்கோ’

‘இது ராங்க் நம்பர். நீங்க போன கட் பண்ணுங்க’

வயதான ஒரு பெண்மணியின் குரல் என் டெலிபோனிலிருந்து இற்றுக் கொள்கிறது. ஒவ்வொரு ஞாயிறு அன்று என் மனைவி இல்லை என் மகன் இல்லை நான் என்று பதில் பேசுகிறோம். பேச்சு எப்பவும் இவ்வளவு தான். எத்தனை முறை ராங்க் நம்பர் ராங்க் நம்பர் என்று அடித்துச் சொன்னாலும் அந்தப்பெண் நாம் சொல்வதை எங்கே கேட்டாள்.

எந்த எண்ணிலிருந்து இந்த அழைப்பு வருகிறது என்பதை அறிய முடியவில்லை. நானும் என்னவளும் யோசித்தோம். அதன்படியே நான் அருகிலிருக்கும் தொலைபேசி நிலையம் சென்றேன்.

‘உங்க கிட்ட டிஸ்பிளே வர்ர டெலிபோன் இல்லயா’ டெலிபோன் நிலையத்து வாசலில் நீல நிற யூனிஃபாரத்தில் இருந்தவர் என்னிடம் கேள்வி வைத்தார்..

‘இல்லை சார்’

‘ஒண்ணு பண்ணுங்க அந்த லேடி பேசும்போது நீங்க போன் ரிசிவர தூக்கி தூரமா வச்சிட்டு உடனே இங்க வாங்க அந்த நெம்பரை அப்பத்தான் கண்டு பிடிக்க முடியும். என்ன நான் சொல்றதைச்செய்வீங்களா’

‘அப்படியே செய்யறேன் சார்’

சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.மனைவியிடம் இது விஷயம் சொன்னேன்.

‘போன் ரிசிவர எடுத்து தூரமா வச்சிட்டு அப்படியே டெலிபோன் ஆபிசுக்கு எல்லாம் ஓட முடியுமா என்ன? நீங்க டெக்னிகலா விஷயம் தெரிஞ்ச சரியான செக்ஷன்லதான் பேசுனிங்களா இல்ல ஒரு காலத்துல உங்க தங்கச்சிக்கு மாப்பிள்ள பார்த்த கணக்கா அதான் யாரோ தெருவுல நின்னுகிட்டு இருந்த ஒரு மூணாவது மனுசன் கிட்ட விசாரிச்ச அந்த கதையா’

எனக்குப்பதில் சொல்ல வரவில்லை. ஒன்றும் பேசாமல் நின்று இருந்தேன்.

‘நான் அந்த டெலிபோன் நெம்பரை என்னன்னு கண்டுபிடிச்சு உங்ககிட்ட சொல்றேன்.அப்புறம் நீங்க என்ன செய்யுறீங்கன்னு பாக்கலாம்’

‘எப்படி’

‘பாருங்களேன்’

அவள் அவளுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து டெலிபோன் எண்களை டிஸ்பிளே செய்யும் ஒரு இன்ஸ்ட்றுமென்ட்டை இரவலாக வாங்கி வந்தாள். அதுவரைக்கும் என் வீட்டு டெலிபோன் அவர்கள் வீட்டில் பதிலியாக இருந்தது. வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமையும் வந்தது ஒன்பது மணிக்குச் சரியாக டெலிபோன் மணியும் அலறி அடித்தது. நான்தான் ரிசிவரை எடுத்தேன்.

‘கொஞ்சம் சீனுவ பேசச்சொல்லுங்க’

‘இங்க யாரும் அந்த பேரில இல்ல’

‘மயிதிலி இருப்பாளே’

‘இது ராங் நெம்பர். இனி இந்த நெம்பரைக் கூப்பிடாதிங்க’ எத்தனை தரமோ இப்படி சொல்லி ஆயிற்று.

டெலிபோனில் டிஸ்பிலே ஆன நெம்பரைச் சரியாக் குறித்துக் கொண்டேன்.

‘இப்ப டெலிபோன் ஆபிசுக்குப் போங்க இந்த நெம்பரு வேல செய்யுற விலாசம் வாங்கியாங்க மொதல்ல’ அவள் கட்டளை தந்தாள். நான் பழைய பரமசிவமாய் அந்த டெலிபோன் ஆபிசுக்குப்போனேன். நான் எடுத்து கொண்டு போய் காட்டிய அந்த எண்ணுக்கு ‘மேற்கு தாம்பரம் சண்முகம் தெருவில் ஒரு ‘வறுகடலை வியாபாரி’ விலாசம் தந்தார்கள். இனி அங்கு சென்று விசாரிக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன்.

‘சார் நீங்க் இந்த ஏரியாவுக்கு எப்ப குடி வந்தீங்க’

டெலிபோன் ஆபிசுக்காரர்கள்தான் கேள்வி கேட்டார்கள்.

‘அய்ந்து வருடம் இருக்கும்’

‘அப்ப இந்த அஞ்சி வருஷமா இப்படி ஒரு கால் வருதா’

‘ஆமாம் சார். இப்பத்தான் இது என்ன விஷயம்னு கண்டுபிடிக்க யோசனை வந்திச்சு’

‘சார் அஞ்சி வருஷத்துக்கு முன்னால சீனுவாசன்னு ஒருத்தருக்கு இதே டெலிபோன் நெபம்ரு வேல செஞ்சிது..அவரு போஸ்ட் ஆபிசுல வேலையும் செஞ்சாரு குடியும் இருந்தாரு. அப்புறம் அவருக்கு திருநெல்வேலி வேல மாற்றலாயிடுச்சின்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும் நானும் அவரும் மலயாள மாமி மெஸ்சுல அப்பப்ப ஒண்ணா லன்ச் சாப்பிடுவோம்.’ கணினித்திரையயை உற்றுப்பார்த்துக்கொண்டே ஒருவர் எனக்குப்பதில் சொன்னார்.

நான் கட கட என் வீடு திரும்பினேன். நடந்த விபரத்தைக் காத்துக்கொண்டிருந்த அவளிடம் சொன்னேன்.

‘வருகிற ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு நேரா தாம்பரம் போயி அந்த பட்டாணிக் கடைக்குப்பக்கத்தில நில்லுங்க. யாரு வர்ரா எப்படி பேசுறான்னு பாருங்க’

மீண்டும் அவள் எனக்கு யோசனை சொன்னாள். எப்படியும் வயதான ஒரு பெண் வந்து போனில் பேசப்போகிறாள்.நாமும் போய் பார்த்துவிட்டு ப்பிறகு இன்னது செய்வது என்று முடிவுக்கு வரலாம். எண்ணினேன்.

மறு நாள் ஞாயிற்றுக்கிழமை. காலையிலேயே கிளம்பினேன். எட்டரை மணிசுமாருக்கு என்னுடைய டூவீலரை எடுத்துக்கொண்டு தாம்பரம் சண்முகம் தெரு முழுதும் தேடினேன். எனக்குத் தெரிந்த அரசாங்க நூலகத்துக்கு அருகே ஒரு செருப்புக்கடைக்குப் பக்கமாய் அந்த பட்டாணிக்கடை இருந்தது. கடை வாசலில் போய் நின்று கொண்டேன்.

‘பாண்டு பட்டாணிக்கடை’ அழகிய கொட்டை எழுத்துக்கள் வா வா என்று தெருவில் போவோர் வருவோரை அழைத்துக் கொண்டிருந்தது. பட்டாணிக்கடையில் ஒரு ஓரமாக அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. தலையில் முண்டாசும் முண்டா பனியனும் போட்டிருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் பட்டானி வறுத்துக் கொண்டிருந்தார். மஞ்சள் கரைத்த சிறு சட்டி வாயைப்பிளந்துகொண்டு அருகிருந்தது. வெள்ளை மணலும் கருகிய மணலும் சிறு சிறு முட்டுக்களாய் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தன. அவர் அடிக்கொருதரம் வெற்றிலை போடுபவர் போலிருக்கிறது. வாயைக்கு தப்பிக் கொண்டிருந்தார். அடுப்பிலிருந்து எழும் புகை வெளிப்போக ஒரு உயரக்குழாய் அவருக்கு முன்பாக விரைத்துக்கொண்டு நின்றது.

மணி சரியாக ஒன்பதை நெருங்கிகொண்டிருந்தது.எனக்கு மனம் படக் படக் என்று அடித்துக் கொண்டிருந்தது. நான் தவறு ஏதும் செய்யவில்லை இருந்தாலும் தான் என்ன.

தூரத்தில் ஒரு பெண்மணி நடந்து வந்தாள்.தலை வெள்ளை வெளேர் என நரை தட்டியிருந்தது. இரண்டு கைகளிலும் ஒவ்வொரு துணிப் பை, அவை நிறைத்துக் கொண்டிருந்தன அவள். கடை அருகே வந்து விட்டாள். முகம் வாடிக்கருத்து இருந்தது. வயது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடையில் இருக்கலாம்.தலை வாரி பல காலங்கள் ஆகியிருக்குமோ. என்னவோ அப்படித்தானே இருந்தது. காதி மூக்கில் எந்த அணிகலனுமில்லை. கழுத்தில் ஒரு மஞ்சள் நிற மணி மாலை மட்டும் அழகாகக் கிடந்தது.

தன் ஜாக்கெட்க்குள்: கை விட்டு குட்டை நோட்புக்கை கையில் எடுத்தாள்.

‘சாரு’

கல்லாவில் இருந்த பட்டாணிக்கடை நாடார் டெலிபோனை ரிசிவ்ரோடு எடுத்து அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார். குட்டைப் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டே அந்தப் பெண் டெலிபோன் எண்ணை தட்டினாள். ரிசிவரைக் காதில் வைத்துக் கொண்டாள்.

‘ச்சீனுவ பேசச்சொல்லுங்கோ’

‘அப்ப மயிதிலி’ அந்தப்பெண் டெலிபோனில் பேசுவது(?) எனக்குக் கேட்கிறது. ஒரு நிமிடம் கூட இல்லை. அந்தப்பெண் டெலிபோனை ரிசிவரோடு அந்த பட்டாணிக்கடை நாடாரிடம் ஒப்படைத்தாள். தயாராக வைத்திருந்த நாணயம் இரண்டை அவரிடம் நீட்டினாள். கீழே கிடத்தி வைத்திருந்த இரண்டு பைகளையும் திரும்பவும் எடுத்துக்கொண்டாள். ஆகாயத்தைப் பார்த்து ஒரு முறை லேசாகச் சிரித்துக் கொண்டாள்.

தாம்பரம் ரயில் நிலையம் பக்கமாகத்தான் நடையைக் கட்டினாள்.

நான் பட்டாணிக்கடை நாடாரிடம் நேராக சென்று என் மனைவிக்குப்பிடித்த உப்புக்கடலை நூறு கிராம் வாங்கினேன்.

‘இப்ப கூட இந்த இந்த மாதிரி டெலிபோன் பேசறதுக்கு எல்லாம் ஆளு இருக்காங்க போல’

‘சாரு.இந்த பொம்பள எத்தினி வருஷமாவோ இந்த நம்பருக்கு கால் போடும். ஞாயிற்றுக்கிழமையே தவறினாலும் இந்த அம்மா வர்ரது மட்டும் நிக்காது. நானு ரூவா ரெண்டு வாங்கிகறேன் பேச வுடுறேன். இந்த அம்மா தன் தம்பியதான் டெலிபோனில் கூப்பிடுது. நல்ல குடும்பத்து பொம்பளயாவே கூடம் இருக்கும். அந்த அம்மா தேடுற தம்பி அவுரு உயிரோடத்தான் இருக்காரோ அப்படி இருந்தா எந்த ஊருல இருக்காரோ. இந்த பொம்பளைக்கி மூள கொஞ்சம் கோளாறுன்னு தெரியுது.தாம்பரம் ரயில்வே பிளாட்பாரத்துல உக்காந்து கைய நீட்டும்.பிச்சை கிச்சை யாராவது போடுறாங்க:ளே உலகம் இன்னும் ஒண்ணும் அழிஞ்சிடலயே’

சண்முகம் தெருவில் நடந்து போன அந்த பெண்ணின் உருவம் மறைந்து போனது. உப்புக்கடலை பொட்டலத்தைக்கையில் வாங்கினேன்.கை லேசாச்சுட்டது.

‘இப்பக்கி அடுப்பிலேந்து எடுத்த சரக்குல்ல’ பட்டாணிக் கடைக்காரர் சொல்லிக் கொண்டார்.

டூவீலரை எடுத்துக்கொண்டு நான் என் வீடு திரும்பினேன். மனம் என்னவெல்லாமோ செய்தது. சுகர் வியாதியும் வந்து மூளையும் சற்று கோளாறாகி வயது நாற்பது கூட தொடாமல் பாதியிலே போய்விட்ட என் தங்கையின் நினைவு வந்து உறுத்திற்று.

வீட்டுக்கு வந்து நடந்த விபரம் முழுவதுமாய் என் மனைவியிடம் சொன்னேன்..

‘அந்த டெலிபோன் நெம்பர் வேண்டவே வேண்டாம் அத உடனே மாற்றிட்டு வேற நல்ல நெம்பரு ஏதாவது வாங்கிடுங்க’ அவள் எனக்குக் கட்டளை தந்தாள். எனக்குத் தானின்னும் மனம் ஒப்பவே இல்லை.

எஸ்ஸார்சி எஸ்ஸார்சி (பிறப்பு: மார்ச் 4 1954) என்கிற எஸ். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இளநிலைக் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *