பயணம்
பேருந்து சடுதியாக நிறுத்த, முன் வீசப்பட்ட வேகத்தில் எழுந்தான் பாலா. அந்த ஹாரன் சத்தம் இத்தனை வருடங்களாக கேட்டும், இன்னும் அவனுக்கு அது விசித்திரமாகவே இருந்தது. இவ்வளவு நீண்ட சத்தம் எதற்கு, அடிக்கடி எதற்கு, யாரை விரைவு படுத்துகிறான் அந்த ஓட்டுனன்? இந்த கேள்விகள் அவனுக்கு புதியவை அல்ல, அவற்றிக்கு பதில் அறியும் ஆர்வமும் இல்லை.

வாய் ஓரத்தில் வலிந்திருந்த எச்சிலை துடைத்தபடி, பேருந்தை சுற்றி பார்த்தான். ஏறிய நேரத்தில் இருந்த பலர் முகங்களை காணவில்லை. புதிய முகங்கள் சூழ்ந்திருந்தன. கையிலிருந்த பையை அமர்த்தி பார்த்தான், தொலைபேசியும் பணப்பையும் கையில் தட்டுப்பட்டது. ஜன்னலினூடே வெளியே பார்த்தான், பேருந்து வேகத்தில் கடை பெயர் பலகையை வாசிக்க சில விநாடிகள் ஆனது, “இகிரிகொல்லேவ” என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டான். தலையை சாய்த்து, கண்களை மூடிக்கொண்டான்.
வனஜாவின் நினைவுகள் அவன் மனதில் ஓடின.
இரண்டு வருண்டங்கள் பேச்சு வார்த்தை ஏதும் இல்லை. அவள் முகவரி மாறவில்லை, மாறி இருந்தாலும் வரதன் சித்தப்பா கிழமை ஒரு முறை தரும் வாட்ஸ்அப் செய்திகளில் சொல்லிவிடுவார்.
ஆர்மர் தெருவில் வேலை கிடைத்து ஏதோ வனஜாவின் மூலம், ஆனால் தனது கடின உழைப்பால் தனது முதலாளியின் வலது கையாகவே பாலா முன்னேறினான். சம்பளம் கூடியதையோ, பதவி உயர்வையோ பற்றி வனஜாவிடம் மறைத்தற்கு அந்த சமயம் சில காரணங்கள் இருந்தன.
தன் தகப்பன் வாங்கிய கடன் ஒன்று, வனஜாவின் கணவனுக்கும் முதலாளிக்கு நிகழ்ந்த வாக்குவாதமும், பணி நீக்கமும் என்பது இன்னொன்று. இந்த வேளையில் எப்படி இதை சொல்வது என்று விட்டது, வளர்ந்து இருவரின் இடையே மூன்று வருட விருட்சமாய் நிற்கிறது. இடையில் வாக்குவாதங்கள், வார்த்தைகள் பரிமாற்றம் என்று கைகலப்பு வரை ஒரு சமயம்.
மெதவாச்சியாவில் இறங்கும் சிலரின் சலசலப்பு அவனை கண்விழிக்க செய்தது.
தன் அருகில் இருந்த ஒரு பெரியவரும் ஒரு சிறுமியும் முன்னே கதவின் அருகே நிற்பதை கண்டான். காலை அகட்டி கொஞ்சம் வசதியாக உட்கார்ந்தான். கண்கள் மூடின.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, கோபத்துடன் தன் தாயிடம், “இதுக்கே வரச்சொன்னநீங்கள்? முதலாளி சொல்றதை செய்ய தான் சம்பளம் இங்க, நாங்கள் நினைச்சது தான் செய்யோனுமெண்டா சொந்த்க்கடைய போடசொல்லுங்கோ” என்று கொக்கரித்தான்.
“அவர் வாங்கி கொடுத்துதான் இந்த வேலையும், அதுக்குள்ள முளைச்ச இந்த விசுவாசமும்” என்று வாசலிலிருந்து கேட்டது வனஜாவின் குரல்.
கோபத்துடன் பாலா வெளியே வர, தடுக்க முயன்றாள் அவன் தாய்.
தள்ளி விட்டு விரைந்தான், வாசலில் வனஜாவின் கணவனும் நின்றான்.
“நீ ஒன்னும் இங்க கதைக்க தேவையில்லை, எதுவா இருந்தாலும் அவர் சொல்லட்டும், ஏன் கதைக்க கஷ்டமோ?” என சீறினான்.
“பாலா, வீட்ட வந்தவைட்ட இப்படியே கதைகுறது?” என்று அவன் தாய் பின்னால் வருவதற்குள், வனஜா கோவத்தில் பாலாவை அறைய கை ஓங்கினாள்.
ஓங்கிய கையை பிடித்தான் பாலா.
சட்டென்று அவன் கன்னத்தில் ஒரு அறை விழுந்து. வனஜாவின் கணவன்.
ஒரு கணத்தில், தீர்த்து சமரசம் பேச எடுத்த முயற்சி அனைத்தும், கரையான் அறித்த நிலையாய் தூளானது. இவர்கள் இருவரையும் பிரித்து, அழைத்து செல்லவே இரு வீட்டு பெண்களுக்கும் சக்தி இருந்தது.
பாலாவும் விடுமுறைக்கு வருவதை குறைத்து கொண்டான். தொலைபேசியில் கதைப்பதும் கொஞ்ச கொஞ்சமாக குறைந்தது.
வவுனியா தண்டிகுளத்தில் இறங்கினான் பாலா.
இருள் சூந்திருதது, கடைகள் மூடிருந்தன. பேருந்து நடத்துனர்க்கு நன்றி சொல்லிவிட்டு, இரயில் நிலையத்தை நோக்கி நடந்தான். ரயில் நிலையத்தை கடந்து, அய்யனார் கோவிலை கடந்து, திருநாவற்குளம் 5ம் தெருவில் புகுந்தான்.
டம்ரோ கதிரைகள் பல அவன் வீட்டு வாசலில் போடப்பட்டு இருந்தன, அதில் அமர்ந்திருந்த சிலர், இவன் வருகையை பார்த்து எழுந்தனர். ஒவ்வொருவரும் கைகளை தழுவினர். அவன் கண்கள் கலங்கி, கண்ணீர் மெல்ல மெல்ல சிந்த தொடன்கினான்.
“பாலா!” என்றொரு குரல், சத்தமாக கேட்டது, வனஜா உள்ளிருந்து ஓடி வந்து இவனை கட்டி அணைத்துக்கொண்டாள்.
“அம்மா, அம்மா!” என்று அவள் அழுதாள்.
“அக்கா” என்று இருக்க பிடித்தான் பாலா.