நான் – அவள் – காதல்
 கதையாசிரியர்: ஆடூர் ஆர்.வெங்கடேசன்
 கதையாசிரியர்: ஆடூர் ஆர்.வெங்கடேசன் கதைத்தொகுப்பு: 
                                    காதல்
 கதைத்தொகுப்பு: 
                                    காதல்  கதைப்பதிவு: June 8, 2020
 கதைப்பதிவு: June 8, 2020 பார்வையிட்டோர்: 24,072
 பார்வையிட்டோர்: 24,072  
                                    நான் – (உண்மையில் நான்)
என்னுடைய கல்யாணம், நான் காதலித்த பெண்ணோடு இல்லாமல், பெற்றவர்கள் பார்த்து நிச்சயித்த பெண்ணோடு நடந்தது.
ஏன் அவள் என்ன ஆனாள்..?
அவள் நேசித்து என்னுடன் பழகி இருந்தால், ஒரு வேளை என் கல்யாணம் காதல் கல்யாணமாக இருந்திருக்கும்.
நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஒருதலை காதல் கூட பெற்றவர்களால் நிறைவேறி இருக்கிறது. என் காதல் அவளது குடும்பத்தினரால் அழிக்கப்பட்டு விட்டது.
நடுநிலைப் பள்ளியில் படித்து முடித்து மேல்நிலைப் பள்ளிக்கு மாறும் போது தான் எனக்குள் காதல் அரும்பியது. முதன் முதலில் நான் அவளைப் பார்த்து காதலியாக அடையாளம் கண்டேன். ஆம் அவளே என் கனவுக்கன்னி, அவளே என் காதலின் நாயகி.
ஆணோ, பெண்ணோ யாராவது ஒருவர் காதலை விதைக்க வேண்டும் அல்லவா.,? நான் தலைப்பட்டேன். காதல் பயிரை உருவாக்க எண்ணினேன்.
பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கும் போது காதலை வெளிப்படுத்தினால், அது ஊராருக்கும், உறவுக்கும் ஏற்காது என்பதற்காக பயந்து தூது விடாமல், பேசாமல், எழுதாமல் வளர்ந்தேன். காதலையும் வளர்த்துக் கொண்டேன்.
அவள் பக்கத்தில் இருக்கும் வரை, அவளைப் பார்த்துக் கொண்டு இருக்கும் வரை கவலை அறியாமல் இருந்தேன். அவள் கல்லூரிக்கு செல்ல, ஊரை விட்டு செல்லும் போது தான் பிரிவின் தாக்கம் லேசாக பரவ ஆரம்பித்தது. அதன் தவிப்பு நெஞ்சம் முழுவதும் ஆட்கொண்டது. அப்பொழுது தான் நான் அவளை, கல்லூரியை, வாழ்க்கையை தொலைத்து இருக்கிறேன்.
பள்ளியில் படிக்கின்ற வரையில் அவள் யாரையும் விரும்பியது இல்லை. என்னைத் தவிர வேறு யாரும் அவள் பின்னால் சுற்றியதில்ல. எனக்குள் நம்பிக்கை வளர இதுவும் ஒரு காரணமாக இருந்தது.
பதினாலு வயதில் ஏற்பட்ட ஒரு வழி காதலை அவளும் புரிந்துக் கொண்டு நேசிக்க வேண்டும் என்பதற்காக, எடுத்துக் கொண்ட பிரயத்தனம் ஒன்று தான். அது அஞ்சல் வழி கடிதங்கள் தாம். அந்த வசதியை ஏற்படுத்தித் தந்தமைக்கு ஒவ்வொரு கடிதத்தின் அடியிலும் ‘Our thanks to the postal service’ என்று குறிப்பிடுவதுண்டு.
என் காதலை அவள் புரிந்துக் கொள்ள வேண்டும், அவளுக்கு காதலை புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காகிதத்தில் கிறுக்க ஆரம்பித்தேன். காதலித்தால் கவிதை வருமே, கவிதையுடன் நான் நாவலும் எழுதினேன். அந்த அற்புதமான கற்பனை திறனுடன் பள்ளிப் பருவத்தின் போது அவளுடன் உண்டான சிறு சிறு நிகழ்வுகளை சேர்த்து வண்ணக் குழம்பாக்கி அதன் மூலம் காதல் கடிதங்கள் எழுதி அனைத்தையும் அஞ்சலில் தூது விட்டேன்.
கடிதங்கள் அனைத்தும் கல்வெட்டில் பதிந்த வரிகளாகும். அதன் ஒவ்வொரு வரியும், வரியில் கோர்த்த ஒவ்வொரு வார்த்தையும், வார்த்தையில் பொதிந்த ஒவ்வொரு எழுத்தும் காதலின் ஆழத்தை, அதன் அர்த்தத்தை புரிய வைக்கும். ஆனால் ஏனோ அவள் அதை புரிந்துக் கொள்ளவில்லை.
என் காதலை அவள் புரிந்துக் கொள்ள வேண்டும், பிறகு காதலனை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக புனைப் பெயரில் எழுதி அனுப்பிய கடிதங்கள் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராய் போனது. காதல் கனிய வில்லை, மாறாக எனக்கு கன்னம் பழுத்தது. நான்கு வருட காதல் கானல் நீராய் ஆனது.
காதலிப்பது அவ்வளவு பெரிய சமுதாய குற்றமா.,? தண்டனை இட்டவர்கள் காதலை கடந்து வந்தவர்கள் தாமே.,! ஏன் இந்த வெறித்தனம்.?
சில கடிதங்கள் பறந்தது. பல மாதங்கள் கழிந்தன. கடிதங்கள் எழுதியவன் யார் என்று விசாரித்து என்னைத் தெரிந்து கொண்டார்கள். ஒரு நாள் அவள் வீட்டார்கள், நான் செய்த அஞ்சல் குற்றங்களுக்கான தண்டனையை அடக்கு முறையில் அராஜகம் செய்து நிறைவேற்றிச் சென்றார்கள்.
பருவ வயது சபலம் நிறைந்தது மட்டுமல்ல, சாபக்கேடும் கொண்டது. விசாரித்தவர்கள், விவகாரம் ஏதும் செய்யாமல் சமாதானம் பேசி, விவாகம் செய்து வைத்திருந்தால், நான் காதலி கிடைத்த சந்தோஷத்தில், கர்வத்தில், மமதையில், ஆணவத்தில், ஆர்வத்தில் என் வாழ்க்கையை இன்னும் வானளாவிய உயரத்துக்கு மாற்றி இருப்பேன். மாறாமல் இருந்தமைக்கு என்னைச் சேர்ந்தவர்களும் காரணம்.
காதலிக்க வயசு இருந்தது. இரவுக்கும் கற்பனைக்கும் கனைக்ஷன் இருந்தது. இருப்பினும் கருத்து சொல்லி புரிய வைக்க அப்போது எனக்கு அனுபவமோ, ஆற்றலோ இல்லாமல் போய் விட்டது.
அவளின் வயது புரிய வைக்காத காதலை, அவள் மனசு உணராத காதலை, நான் எப்படி புரிய வைக்க முடியும். ,?.,! ஒன்று மட்டும் தெரிந்தது. எனது கடிதங்களால் அவள் மனம் நொந்து வேதனைப் பட்டிருக்கிறாள், கவலை கொண்டிருக்கிறாள், தவிப்பு அடைந்திருக்கிறாள்,தூக்கமிழந்து துன்புற்றிருக்கிறாள், அவமானப் பட்டிருக்கிறாள், அசிங்கப்பட்டிருக்கிறாள், இன்ப மயமான காதலை தவிர துன்பம் நிறைந்த அனைத்து துயரங்களையும் அனுபவித்திருக்கிறாள்.
இதைச் சொல்லிச் சொல்லி என்னை அடித்தப் போது, நான் பட்ட வலியை விட, அவளது உணர்வுகள் தாம் எனக்கு வேதனையை கொடுத்தது. நான் தப்பு பண்ணிய குற்ற உணர்வு காலம முழுவதற்கும் என்னை சோகத்தில் ஆழ்த்தியது.
எனக்கு கல்யாணம் ஆகி, நான் ஒரு வழியாக குடும்பத்தில் செட்டிலாகி விட்டேன். ஆழ் மனதில் அவள் இன்னமும் இருப்பதாலேயோ என்னவோ சில சமயங்களில் கனவில் வந்து மறக்க இருந்த விஷயங்களுக்கு உயிர் கொடுத்து தூங்க விடாமல் செய்து விடுகிறாள். இன்னமும் அந்த இன்ப அவஸ்த்தை இருக்கிறது. இருப்பினும் கனவுக்கு மறதியானால், அவள் இன்று வருவாள் என்று எதிர்ப்பார்த்து காணாமல் எரிச்சல் அடைந்தது உண்டு.
விடலையில் கொள்ளை கொண்டவள் பருவம் கடந்து, வாலிபம் முடிந்து, வயோதிகத்திலும் வாட்டி எடுக்கிறாள்.
காதல் பொல்லாது, புனிதமான இந்தக் காதலை அவள் அனுபவித்திருப்பாளா.,? இல்லை அவளை அனுபவிக்க விடாமல் நான் துறத்தி விரட்டிருக்கிறேனா.,? தெரியலை.
என் காதலை எழுதி அவளை கஷ்டப்படுத்தி இருக்கிறேன். வருத்தி இருக்கிறேன், என் காதலின் சொற்கள் அவளை வெறுப்படைய செய்திருக்கும், என்னை வெறுத்ததும் அல்லாமல் ஒட்டு மொத்த காதலையும் அவள் வெறுத்திருப்பாள். ஐயோஓஓ… நான் பாவியாகி விட்டேன், அவள் ஆசைப்படக்கூடிய. ஒரு காதலை நடக்க விடாமல் செய்து அவளது ஆசையை பாழ் பண்ணிய பாவி நான்.
அவள் இப்போது எங்கு இருக்கிறாள்.,? எப்படி இருக்கிறாள்.,? என்ன செய்து கொண்டு இருக்கிறாள்.,? விவரம் அறிய மனசு துடிக்குது. அவள் புகுந்த வீடு விலாசம் தெரியவில்லை.
குற்ற உணர்வுக்கு வயசு நாற்பத்தைந்து ஆகியும், தயக்கமும் தடுமாற்றமும் பண்படவில்லை. அவளால் என்னை இன்னார் என்று அடையாளம் கண்டுக் கொள்ள முடியவில்லை. அவளைப் பொறுத்த வரையில் அது அவளுக்கு பகல் கனவு, ஆனால் எனக்கு எப்போதும், இந்த வயதிலும் கனவு.
காதல் கடிதங்களை மறந்து இருப்பாளா.,? இல்லை மறைத்திருப்பாளா.,? தெரிய வில்லை. தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவள் நன்றாக இருக்கிறாள், கண் நிறைந்த கணவனுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள். மகன், மகள், பேரன், பேத்திகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். இது வெறும் நினைப்பு தான்.
எனக்குள் ஒரு ஏக்கம், ஒரு தவிப்பு., அவள் எப்படி இருக்கிறாள்.? ஒரு தடவை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
தெய்வீக காதல் என்றால் காதலின் தெய்வம் எது.,? குல தெய்வமா.,? இஷ்ட தெய்வமா.,? எதுவாயினும் கடவுளே எனக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடு. இனி காதலிக்கப் போவதில்லை, கரம் பிடித்து வாழப் போவதில்லை. இருந்தாலும் நான் அவளை பார்க்க வேண்டும். நான் இறப்பதற்குள் அல்லது அவள் இறப்பதற்குள் ஒரு முறையேனும் அவளை கடைசியாக பார்க்க வேண்டும். நான் அவளை பார்க்கின்ற போது நடந்த வாலிப கோளாறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மனதில் ஏற்பட்ட புண்ணுக்கு மன்னிப்பு மட்டுமே மருந்து.
அவள் – ( யூகத்தில் அவள்)
அவள் ஆகிய நான், கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு மிடில் கிளாஸ் பெண். வம்சா வழியில் முதலில் கல்லூரிக்கு சென்றவள். அதனால் கண்டிப்பும், கட்டுப்பாடும் என்னை சுற்றி அரண்ணாக இருந்தது. பள்ளியில் மட்டுமல்ல, கல்லூரியில் படிக்கும் போது கூட எனக்கு ஆண் நண்பர்கள் யாரும் கிடையாது. பெண் தோழிகள் மட்டுமே.
அவன், என் கூட படித்து இருக்கலாம், பேசி இருக்கலாம், என்னைப் பொறுத்த வரையில் அவன் மாணவர் கூட்டத்தில் யாரோ ஒருவன் அவ்வளவே. இருந்தாலும் பழகிய போது, அவன் காதலை சொல்லி இருந்தால் சாதகமோ அல்லது பாதகமோ எதையாவது சொல்லி புரிய வைத்திருக்கலாம்.
கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிற போது தான், அவனின் (காதல்) கடிதங்கள் வரப்பெற்றன. அவன் சொந்தப் பெயரில் கடிதம் எழுதி இருந்தால் பழகிய காலத்தை நினைவுக் கூர்ந்து அடையாளம் கண்டு இருக்கலாம். ஆள் அறியா பெயரில் கடிதம் வந்தால் மனசு வலிக்காதா.,? கடிதத்தில் சொல்லப்பட்ட சம்பவங்கள் எதுவும் என் மனதில் நிலைப்பெற்று இருந்ததில்லை. என் மனம் முழுவதும் எச்சரிக்கை, கண்காணிப்பு என்றிருந்ததால் காதலில் ஈடுபாடு வந்ததில்லை. வளர்த்த கட்டுப்பாடு காதலிடம் நெருங்க விடாமல் அடித்தது.
செல்ல மகளை அலைக்கழிக்கச் செய்த அவனை கண்டுப் பிடித்து உதைத்து இருக்கிறார்கள். கண்டிக்காத பிள்ளை கெடும் எனச் சொல்வதுண்டு. அவனை அவன் வீட்டில் கண்டிப்புடன் வளர்க்க வில்லை, சிந்திக்காமல் செயல்பட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவை அனுபவிக்கத்தான் வேண்டும்.
அவன் கதை எழுதி இருக்கிறான். கவிதை எழுதி இருக்கிறான். அவன் கற்பனையில் உதித்த கதை ஒன்றுக்கு என் பெயர் வைத்திருந்தான். அது என் வாழ்க்கையுடன் சம்மந்தப்பட்ட விஷயமாக இருக்கும் என்று என் வீட்டார்கள் தப்பாக நினைத்து அந்த கையேட்டினை அபகரித்துக் கொண்டனர்.
அடிப்பட்ட பாம்பு கடிக்காமல் விடாது என்று நான் பயந்து இருக்கிறேன். அப்படி அவன் அடிபட்டப் பிறகு அவனால் எனக்கு எந்த ஒரு தொந்திரவும் இல்லை. சந்தேகம் என்பது மனிதனை சாகடிக்கும் ஒட்டுண்ணி. வரப்போகும் கணவனின் நிம்மதி கெடும் என்ற காரணத்தால், காதல் கடிதங்கள் குறித்த சங்கதிகள் எதுவும் வெளிப்பட வில்லை.
வயது ஆக ஆக குடும்ப, உறவுகள் பெருக பெருக என்னால் எதையும் மனதால் நினைத்துப் பார்க்க முடிய வில்லை. இப்போது நானும் பேரன் பேத்திகள் என்று கிளைத்த வாழ்வில், திளைத்து நிற்கிறேன்.
இருப்பினும் அவனது உணர்வுகள் போற்றப் பட வேண்டிய ஒன்றாகும். அவனின் கற்பனை திறன் குன்றாமல் வளர்ந்து கொண்டு இருக்கிறது.
இப்போது எழுத்தாளர்களில் அவனும் ஒருவன். பிரசுரமான அவன் கதைகளில் ஒன்றிரண்டு என்னை சம்பந்தப்படுத்தி இருக்கிறது. படித்ததும் பிரமித்து நின்றேன்.
சமீபத்தில் அவன் எழுதிய ” நான் – அவள் – காதல்” கதையைப் படித்தேன். நெகிழ்ந்து போனேன். அவனுக்குள் காதல் நுழைந்து இவ்வளவு பாடாய் படுத்தும் என்று நான் எதிர்ப்பார்க்க வில்லை. அவன் இன்னும் இளகிய மனம் கொண்டவனாகவே இருக்கிறான்.
நான் காதல் வசப்படாமல் இருந்தமைக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. அறுபது வயதிலும் என்னிடம் மன்னிப்பு கேட்க துடிக்கும் அவனின் மனப்பாங்கு என்னை வியப்பில் ஆழ்த்தியது. இப்போது ஏனோ அவன் மீது எனக்கு அனுதாபம் ஏற்படுகிறது.
காதல் – ( என்றும் இளமையாக)
காதல் என்னும் நான், வையகம் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டு தான் இருப்பேன். விரசமில்லாத, வசீகரிக்கும் வார்த்தை ஜாலத்தால் ஒப்பனை செய்யப் பட்டிருக்கிறேன். ஐந்தறிவு, ஆறறிவு ஜீவன்களின் இதயத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறேன். என்னை வெளிப்படுத்தும் விவேகத்திலும், உள் வாங்கும் தன்மையிலும் நிலைத்து நிற்கும் ஒரு மாயை நான்.
நான் முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி, பத்திரமாக வைத்திருந்தால் பளிச்சிடுவேன். தவற விட்டால் சுக்கு நூறாகி விடுவேன். மற்றபடி துன்புறுத்தலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வாழ்க வையகம்.
( முற்றும்)
 
                     
                       
                      