நாகம்மாள்
கதையாசிரியர்: ஆர்.சண்முகசுந்தரம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 6, 2025
பார்வையிட்டோர்: 116
(1942ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4

எண்ணெய் நிறைய இருந்தும் ‘காற்று’ குறைந்து விட்டதால் ‘கேஸ்லைட்’ கொஞ்சம் கொஞ்சமாக உயிர் விட்டுக் கொண்டு வந்தது. பிரகாசமாக வெளிச்சம் அடித்துக் கொண்டிருந்த அந்த விளக்குக்கு என்ன நேர்ந்து விட்டதோ? இனி ‘லைட்டுக்காரனை’க் கூப்பிட்டுத்தானே அதை ‘ரிப்பேர்’ செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த மாதிரி விளக்குகளைக் கண்டிருக்கிறார்களே ஒழிய பாவம் அவர்களுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. யாராவது சிறு குழந்தைகள் விளக்கருகில் சென்றாலும், அவர்கள் அதட்டுகிற அதட்டலில் குழந்தைகள் நடுநடுங்கிப் போய்விடும். நாலு நாளைக்கு வாடகைக்கு வாங்கி வருவார்கள். கூடவே விளக்கைக் கொளுத்த, அணைக்க ஒரு ஆளையும் கையோடேயே கூட்டி வந்து விடுவார்கள். இந்த விசித்திர வேடிக்கைகளைப் பிரமாண்டமான கூட்டம் கண்டுகளிக்கிறதே! ஆனால் அந்த விளக்குக்காரன் எங்கே?
அவன் எந்த வீட்டுத் திண்ணையில் படுத்துத் தூங்குகிறானோ? ஊர்ப் பண்ணாடி தீவட்டிக்காரனைக் கூப்பிட்டவுடன், அரைத் தூக்கத்திலிருந்த ராமவண்ணான் ஒரு பந்தத்தைக் கொளுத்திக் கொண்டு ஓடி வந்தான். அவன் தலைமயிர் அந்த வெளிச்சத்தில் சிவப்பு வர்ணம் பூசியிருப்பது போல் தெரிந்தது. அடிக்கடி கையில் தொங்க விட்டிருக்கும் கலயத்திலிருந்து எண்ணெயைக் கரண்டியில் எடுத்துவிடும் போதெல்லாம் தன்மேலும் சிந்திக் கொண்டான். சற்று நேரத்திற்கு முன் அங்கு காணப்பட்ட உற்சாகம் கொஞ்சம் சோபை குன்றிவிட்டது. ஊர்ப் பண்ணாடி உத்திரவிடவும், நாலைந்து பேர்கள் லைட்டுக்காரனைக் கூட்டி வர நாலு திக்குகளிலும் ஓடினார்கள். அப்போதுதான் நிலவு வெளிக்கிளம்பி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. மங்கலாக இருண்டிருந்த வழிகளில் அவர்கள் வேகமாகச் செல்லும் போது தட்டுத் தடுமாறிக் கொண்டே ஓடினர். வீட்டுத் திண்ணையில் பகல் பூராவும் துணி துவைத்த சலிப்பில் வீராயி தூங்கிக் கொண்டிருந்தாள். பண்டிகை நாளானதால் ஏராளமான வேஷ்டியும் புடவையும் அலசி, அலசி எடுத்து அவள் இடுப்பு முறிந்திருந்தது. அந்த ஆயாசத்தோடு அவள் அயர்ந்து தூங்கும் போது ஒரு சிறுவன் ஓடி வந்து ‘தடதட’வென்று அவளைத் தட்டி எழுப்பினான். “சீக்கிரம் வா, விளக்குப் போச்சு” என்று அவசரமாக அந்தச் சிறுவன் சொல்லவும், அலறி அடித்துக் கொண்டு அவள் எழுந்தாள். அவள் முகத்தைக் கண்டதும், சிறுவன் பெரிய ஏமாற்றத்தோடு திரும்பி வேகமாக நடக்கையில் வாசலில் அடித்திருந்த முளை தடுக்கிவிடவும், கரணம் போட்டுக் கொண்டு வீதியில் விழுந்தான். இந்த விதமாக அந்த இரவு லைட்டுக்காரனைத் தேடப் போனவர்களுக்கு நேர்ந்த விபத்துகள் எவ்வளவோ!
கடைசியாக பாதித் தூக்கத்திலும், முழுத் தூக்கத்திலும் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த முக்கால்வாசிப் பேர்களை எழுப்பியான பிறகு லைட்டுக்கார நடராசனைக் கண்டுபிடித்து விட்டார்கள். நடராசனுக்கு முதலில் இவர்கள் சொல்வது ஒன்றுமே புரியவில்லை. ஆனால் கண்ணைத் துடைத்துக் கொண்டு, “உடைந்து விட்டதா?” என்றான். அவர்கள் சொல்வதிலிருந்து லைட்டுக்கு என்ன நேர்ந்து விட்டது என்று அவனால் ஊகிக்க முடியவில்லை. பின்னர் அவன் கோவிலுக்கு வந்து சேர்ந்த போது கூட்டம் முக்கால் வாசிக்கு மேல் கலைந்துவிட்டது. பந்தம் பிடிப்பவன் கீழே உட்கார்ந்திருக்கும் நடராசனை சுட்டுவிடுபவன் போல் பந்தத்தைச் சாய்த்துப் பிடித்துக் காண்டிருந்தான். அதிலிருந்து கிளம்பும் எண்ணெய்ப் புகையை அவனால் சகிக்க முடியவில்லை. சற்று நேரத்தில் ‘கேஸ்’ ஏற்றவும் பழையபடி வெளிச்சம் வீசியது.
அடுத்த நாள் புதன்கிழமை ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ‘கிண், கிண்’ என்று நெல் குத்தும் மனோகரச் சத்தம்; கோவிலுக்கும் வீட்டிற்கும், வீட்டிற்கும் கோவிலுக்கும் ஜனங்கள் ஓயாமல் நடந்து கொண்டிருந்தார்கள். அன்று ஒரு தோட்டத்திலும் ஏற்று இறைப்பதைக் காணோம். ஏன், தோட்டத்திற்கு யாருமே போவதைக் காணோம். ஏதாவது வாழைக்காய், வாழை இலை, மிளகாய், இளநீர் வேண்டுமானால், கொண்டுவரத் துள்ளிப்பாயும் இரண்டொரு சிறுவர்களே தோட்டத்துப் பாதையில் காணப்பட்டார்கள். மாரியம்மன் பண்டிகைக்காக முறுக்கு, மிட்டாய்கள், வெற்றிலை பாக்கு, சூடம், சாம்பிராணி கடைகள் பக்கத்தூரிலிருந்து செட்டியார்கள் கொண்டு வந்திருந்தார்கள். பொரிகடலைக் கடைகள் தான் அதிகம் வந்திருந்தது. ஒரு வளையல்காரன் “அம்மா வளையல் வளையல்” என்று கத்திக் கொண்டே ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தான். கோவில் முன்னால் கருங்கல் அடுப்புகள் அநேகம் தயாராயிருந்தன. அவைகளின் மீது அழகான புது மண் பாத்திரங்களில் சாதம் கொதித்துக் கொண்டிருந்தது.
அதோ, வெண்கலத் தொனியில் ஒரு பெண் பேசுவது கேட்கிறதே, அது யாரது? அந்தப் புடவைக்கட்டிலிருந்தும், பாய்ச்சல் நடையிலிருந்தும் நாகம்மாளாகத்தான் இருக்கவேண்டுமென்று ஊகித்துக் கொண்டிருப்பீர்கள். ஆமாம், நாகம்மாள் தான். சுளிக்கும் மின்னல் போல அங்குமிங்கும் திரிந்து கொண்டிருக்கிறாள். சற்றைக்கொருதரம் ராமாயியிடம் வந்து “கல்லைச் சரியாகத் தள்ளி வை. கரண்டியை அந்தப் பக்கம் வைக்காதே; குழந்தையைப் பார்த்துக் கொள், அடுப்பண்டைப் போகப் போகுது” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ராமாயிக்கு இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. கஷ்டப்பட்டுக் கஷாயம் குடிக்கும் குழந்தையைப் போலப் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள். சில சமயம், “எனக்கே இதெல்லாம் தெரியும்” என்பாள். உடனே நாகம்மாளுக்குப் பிரமாதமாகக் கோபம் வந்து விடும். “அப்படியா, இதோ நான் போய்விடுகிறேன்” என்று நாலு எட்டு வைத்துவிட்டுத் திரும்பி, “உனக்காக நான் போய்விட்டால், பின்னே என்ன இருக்குது?” என்று நின்று கொண்டு உருட்டி விழிப்பாள். அங்கு கடல் ஒலிபோல் முழங்கும் அத்தனை கதம்பம் குரல்களையும் ராமாயினால் சகித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க முடிந்தது. ஆனால் கெட்டியப்பன் அங்கு செய்யும் அட்டகாசங்களை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. காட்டு ராஜா போல கண்களை எதற்காக அவ்வளவு சிவப்பாக்கிக் கொண்டிருந்தானோ? பெருங்காற்றைப் போல கும்பலில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஒரு கடைக்காரனை அந்த இடத்தில் சாமான் விற்கக் கூடாதென்பான். ஒரு புறம் கட்டியிருக்கும் தோரணத்தைப் போய் அறுத்து விடுவான். எங்காவது ஒரு மூலையில் யாராவது ஒரு சக்கிலிப் பெண் கல் அடுப்புக் கூட்டி அப்போதுதான் நெருப்பு மூட்டுவாள்; இவன் பார்க்காதவன் போல காலால் உதைத்துக் கொண்டே செல்வான். இதையெல்லாம் பார்த்து ராமாயி, “பகவானே அவனுக்குக் கூலி கொடுப்பார்” என்று சும்மாயிருந்தாள். ஆனால், அவன் தன் பாத்திரங்களை கேட்காமல் எடுத்துக் கொள்வதும், திடீரென்று எங்கோ போய் பஞ்சாமிர்தம், பழங்கள் கொண்டு வருவதும், குழந்தையை எடுத்துக் கொண்டு கொஞ்சுவதும் அவளுக்குப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் மேலாக அவனது ஆட்டபாட்டங்களைக் கண்டு, நாகம்மாள் ஆனந்தப்பட்டுக் கொண்டு அவனிடம் பேசுவதையும் சிரிப்பதையும் காணக்காண ராமாயிக்கு கோபமும் வெட்கமும் பொங்கிக் கொண்டு வந்தது. ‘இந்த மாதிரி பொண்ணும் உலகத்தில் இருப்பாளா? என்ன மான ஈனமில்லாச் செய்கை’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள்.
அத்தியாயம் – 5
ராமாயி பொங்கல் பாத்திரத்தை வீட்டில் இறக்கி வைத்துவிட்டுத் தன் புருஷனைக் கூட்டிவரக் காட்டிற்குக் கிளம்பினாள். முத்தாயாளும் கூட வருவேனென்று அழுதாள். “நீ இங்கேயே இரு முத்து. நான் சீக்கிரமாக வந்திடறேன்” என்று கால்படி உழக்கை எடுத்து ஒரு குத்துப் பொரியை அதில் போட்டுவிட்டு அவள் புறப்பட்டாள். அவள் புருஷன் எருமைக்குப் புல் கொண்டு வருவதற்காகத்தான் இன்று காட்டிற்குப் போயிருந்தான். இன்று விசேஷ நாளானதால் வழக்கம் போல வரும் சக்கிலிப் பையனும் வரவில்லை. அதனால் சின்னப்பனே இன்று காட்டுப் பக்கம் போயிருந்தான். ஆனால், பொழுது போயும் தன் புருஷன் இன்னும் ஏன் வீடு வரவில்லை என்பது ராமாயிக்கு விளங்கவில்லை. அதற்காகத்தான் தானே போய்ச் சீக்கிரமாகக் கூட்டி வரச் சென்று கொண்டிருந்தாள். காடு சுமார் அரை மைலுக்கு மேலிருக்கும். குறுக்கு வழியாகச் சென்றால் மூன்று காடு தாண்டினால் போதும். அதனால் இட்டேறியில் செல்வதை விட்டுக் காட்டுப் பாதையில் ராமாயி நடந்தாள். வழி பூராவும் தட்டைக்காய்க் கொடிகள் ஒன்றோடொன்று பின்னிக் கிடந்தன. நடக்கும் போது கால்களைச் சுற்றிக் கொண்டு தடுமாறச் செய்தன. காட்டில் விதையாமல் முளைத்திருந்த வெங்கக் கற்கள் காலைக் காயப்படுத்தின.
அந்தி வேளை, சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். சூழ்ந்திருந்த ஊஞ்சல் மரங்களிலும், சங்கம் புதர்களிலும் பொன்னிற மின்னல் கம்பிகள் ஊசலாடிக் கொண்டிருந்தன. இடையிடையே ஓணான்களும், பூச்சி புழுக்களும் போவதால் ‘சர, சர’வென்ற சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ராமாயி வேகமாக நடந்தாள். எதிரே யாராவது வருகிறார்களா என்று தலையைத் தூக்கிப் பார்த்துக் கொண்டாள். அடுத்த ஊருக்குப் போய் நூல் போட்டுவிட்டுப் பஞ்சு வாங்கி வந்த மணியக்காரரின் தாயாரைக் கண்டதும் அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது. “இந்த வயதில் கூட பணம் சேர்ப்பதில் எவ்வளவு ஆசை பார்!” என்று சொல்லிக் கொண்டாள்.
பெரியவள் ராமாயியைக் கண்டதும், “அடி, ஆத்தா, இந்த நேரத்திலே மஞ்சளும் மணமுமான இந்தப் பக்கத்திலே தனியே வரலாமா?” என்று சொல்லிக் கன்னத்தில் கை வைத்தாள்.
ராமாயிக்கும் மனத்திற்குள் கொஞ்சம் பயம்தான். இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு, “என்னூட்டுக்காரரைக் கூட்டியாரப் போறேன்” என்றாள்.
கிழவி கன்னத்திலிருந்த கையை எடுக்காமல் கொஞ்சம் நெற்றியைச் சுழித்துக் கொண்டு, “அவனை நீ தான் கோல்பிடித்துக் கூட்டியார வேணுமா? எனக்கும் எழுபது வயசாச்சு. இந்த அதிசயத்தைக் கண்டதில்லையம்மா. என் கலியாணமான வருஷம்…” என்று பெரிய பேச்சாக ஆரம்பிக்கவும் ராமாயி தடுத்து “இல்லே நேரமாச்சு, பூசையெல்லாம் பண்ணியாச்சு; இன்னம் காணமேன்னு போறேன்” என்றாள்.
கிழவி வாயெடுப்பதற்குள் மீண்டும் ராமாயி, “நீங்களே போய் பஞ்சு வாங்கி வரணுமா? யாராவது போறவங்ககிட்டக் கொடுத்துட்டா வாங்கியார மாட்டார்களா?” என்றாள்.
“கொறப்பயங்கிட்டே கொடுத்து விட்டாக் கூட, செட்டி பஞ்சு கொடுத்திடுவான். ஆனால் என் நூற்புக்கு எல்லாரையும் போலவா துட்டு வாங்குவேன்? இன்னைக்கு மூணு அணா எச்சா வாங்கி வந்திருக்கிறேன்” என்று இடுப்பில் சொருகியிருந்த முடிச்சைத் தொட்டுக் காட்டினாள். கிழவியின் சாமர்த்தியத்தைக் கேட்டு சிரித்துக் கொண்டே, “நான் போய் வாரேன்” என்று ராமாயி நடந்தாள்.
தனது புருஷன் கிணற்றடியில் இருப்பானென்று பார்த்தாள். ஆனால் அங்கே காணோம். இரண்டொரு ஆட்டுக் குட்டிகள் தான் வேலி முட்களைத் தின்று கொண்டிருந்தன. வெகுதூரத்தில் இவளுடைய புடவையைக் கண்டதும் மாடு ‘அம்மா’ எனக் கத்தியது. ‘சரி குடிசைக்குள் தான் இருப்பார். ஆமாம், இந்நேரத்தில் குடிசையில் என்ன செய்கிறார்?’ என்று யோசித்துக் கொண்டே போனாள்.
சின்னப்பன் குடிசைக்குள்ளிருந்த கயிற்றுக் கட்டிலின் மேல் உட்கார்ந்திருந்தான். அந்தக் கிராமத்திலிருந்தும் அவன் தேகம் திடகாத்திரமானதல்ல. அதிலிருந்தே இளமையில் அவன் அதிக நோயினால் கஷ்டப்பட்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவனது முகத்தில் வாழ்வின் சஞ்சலச் சாயைகள் ஒன்றுமில்லை. கஷ்ட ஜீவனத்தின் கவலைகள் இல்லையாதலால் கண்களில் ஜீவகளை தளும்பிக் கொண்டிருந்தது.
சின்னப்பனுக்கு அவளைக் கண்டதும் பெரிய ஆச்சரியமாயிருந்தது.
“நீ இங்கே எதற்காக வந்தாய், நானே வரலாமெனுருந்தேனே” என்றான்.
அவள் பேசவில்லை. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய குரலைக் கேட்க அவளுக்கு என்னமோ போலிருந்தது.
“இங்கே ஏன் உக்காந்துகிட்டு இருக்கீங்க?” என்று சொன்னவள், அதற்குள் அங்கே கட்டிப் போட்டிருந்த புல்லைப் பார்த்துவிட்டு, “எடுத்துக்கிட்டு வராமே நல்லா ‘ரோசனை’ பண்ணீட்டிருந்தீங்க” என்றாள்.
சின்னப்பன், “வந்தாப் போகுது” என்றான். அவனுடைய கண்கள் கலங்கியிருந்தன. ரொம்ப மெதுவாகப் பேசுவதிலிருந்தே அதிக வருத்தமடைந்திருந்தான் என்பது தெரிந்தது. ராமாயி, “சரிதான், சொன்னா ஒரு பேச்சிலே எழுங்கோ” என்றாள். அவள் முகமும் துயர அலைகளால் வாடியது. இளங்காற்றில் நழுவிப் போன மார்புச் சேலையைக் கூட எடுத்துச் சொருகவில்லை. ஒரு காலைக் குடிசைக் கம்புமேல் வைத்து நின்று கொண்டிருந்தாள். சின்னப்பன் கட்டில் கயிற்றை ஒவ்வொன்றாகத் தடவியவாறே, “அதோ அடிபடுதே… அந்த தப்பட்டைச் சத்தம், அதைக் கேக்க எனக்கு எப்படி இருக்குது தெரியுமா?” என்றான். அவன் ‘அந்தச் சத்தம்’ என்றவுடன் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்த சப்தம் ரொம்பப் பலமாகக் கேட்பது போலிருந்தது அவளுக்கு. அரைகுறையாக அர்த்தமானாலும் முழுதும் தெரியவேண்டி, “என்ன?” என்றாள்.
“என்னவா? உங்கிட்ட முந்தி பலதரம் சொன்ன கதைதான். உம், என்னவோ நம்ம ஊர் பூரா தலைகால் தெரியாது குதிக்குது. ஏமாளியாயிருந்தவங்க கூட கொம்மாளம் போடறாங்க. இதே மாதிரிதான் பத்து வருஷத்துக்கு முன்னாலே நடந்த பொங்கலின் போது நானும், என் அண்ணனும்…” என்று நிறுத்தினான்.
“அந்தக் குப்பையைக் கிளறதுலே என்ன சொவம் இருக்குது. ஒடம்பிலே வாணம்பட்டு மேனாடுபோன மவராசன் புண்ணியவான்னு சொல்லுங்க” என்றாள் ராமாயி.
“அது நெசந்தான்; ‘கமுந்த பாலு கலயம் ஏறாது.’ ஆனால் அதை நெனைக்க நெனைக்க… அடடா! அன்னைக்கு ஆட்டம் கட்டினதிலிருந்து சாமத்து வரை எப்படிக் குதித்துக் கொண்டிருந்தோம். அன்னைக்கு ராத்திரி வாணத் தீயில் அண்ணன் ஒடம்பு வெந்து போகுமின்னு எவந்தான் நெனைச்சான்! உம், ஆத்தா இத்தனை நாளாக் கொண்டாடாததிலிருந்தது கூட எனக்கு ஒரு விதத்தில் நல்லதாக இருந்தது. ஆனா இப்போ அந்த நெனைப்பெல்லாம் புத்தீசல்போலப் ‘பொல பொல’ன்னு வருதே!” என்றான். ராமாயி கணவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். வெளியில் ஒரே இருட்டு! குடிசைக்குப் பக்கத்திலுள்ள பட்டியிலிருந்த ஒரு ஆடு ‘மே, மே’ எனக் கத்தியது. ராமாயி என்னவோ நினைத்துக் கொண்டு வந்து அது எப்படியோ முடிந்து விட்டது! தன் புருஷனை அதிக சந்தோஷமூட்ட வந்தவள், தானே அவனுடைய சோகத்திற்கு அதிக தூபம் போட்டவளானாள். ஆனால் இதையெல்லாம் சமாளித்துக் கொண்டு, “இப்படி உட்கார்ந்திருந்து என்ன லாபம்? போவலாமே” என்றாள்.
சின்னப்பனும் அவள் சொன்னதைத் தட்டாமல் எழுந்தான். அவன் கையிலிருந்த புல்கட்டை தான் வாங்கிக் கொண்டு, “இந்த வருஷம் உங்க அக்கா கூட ஏன் பொங்கலுக்கு வல்லை” என்றாள்.
“அவ கைக்குழந்தைக்கு மாந்தமாம்; ஒரு வாரமாப் படுத்துக் கிட்டிருக்குதாம். அதனாலே இங்கே நலக்கத்தோடு ஏன் எடுத்து வரமேணுமின்னு நின்னுட்டா. அவ புருஷங்கூட வரமுடியாத போச்சு” என்றான்.
அப்போது ராமாயிக்கு அன்று மாலை நாகம்மாள் நடந்து கொண்டது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் தன் கணவன் எங்கே கோபித்துக் கொள்வானோ என்று அஞ்சி ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அடக்கிக் கொண்டாள்.
“இருந்தாலும் ஒரு பொம்பளே, அத்தனை பேருக்கெதிரில் கெட்டியப்பனோடு அப்படி சிரிப்பும் விளையாட்டுமா இருப்பாளா?”
“அந்தப் பேச்சையே எடுக்காதே” என்று கசப்புடன் சின்னப்பன் கூறினான்.
அத்தியாயம் – 6
அடுத்த நாள் காலை அமைதி கலைக்கப்படுவதற்கு முன்பே சின்னப்பன் கலப்பையைத் தோளில் சாத்திக் கொண்டு தோடத்திற்குக் கிளம்பினான். அன்று எள்ளு விதைப்பு நாள். அதனால் தோட்டத்து ஆளிடம் முன்னமேயே எருதுகளைப் பிடித்துக் கொண்டு போகும்படி சொல்லியிருந்தான். போகும் போது நாகம்மாளைச் சீக்கிரமாக வரச் சொல்லியிருந்தான்.
ராமாயி வாசலில் பாத்திரங்களைப் பரப்பி விளக்கிக் கொண்டிருந்தாள். அன்று அவளுக்குச் சாதாரண நாளை விட வேலை சற்று அதிகமாகவே இருந்தது. “நீ இப்படி ஒய்யாரமாக உக்காந்து கொண்டிருக்கிறாய்; நான் போக வேண்டாமா” என்றாள் நாகம்மாள்.
“ஆச்சு, இதோ தண்ணியும் சுடவைத்துக் கொடுத்துடறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாகக் காரியத்தைக் கவனித்தாள்.
அப்பொழுது அவளைப் பேசச் சொல்லியிருந்தால், “சாலிட்டு வந்து குளித்துத் தொலையறதுதானே” என்ற வார்த்தைகள் வெளிவந்திருக்கும். ஆனால் அவள் வாயை திறக்கவில்லை. அப்படிச் சொன்னால் வீடே கிடுகிடுத்து விடுமே! இவள் சும்மாயிருந்தாலும் நாகம்மாள் “ராத்திரிப் பூராவும் தலைவலி, படாத பாடுபட்டேன். இப்போ இந்தக் கதகதப் போடேயே ஓடு என்கிறாயா? அப்படிப் போய் பாடுபட்டு கடைசியில் நானா தலையில் கட்டுக்கிடப் போறேன்?” என்று உக்கிரமாக மொழிந்தாள்.
ராமாயி பதில் பேசவில்லை. அவளிடம் பேசுவதால் வீண் வம்பை விலைக்கு வாங்கிக் கொள்வதாகுமென்று எண்ணி மௌனமானாள். நாகம்மாள் மறுபடியும் என்னவோ தூற்றிக் கொண்டே வீட்டிற்குள் போனாள். அடுப்பில் பால் ‘குபு, குபு’ வென பொங்கிக் கொண்டிருந்தது. கதவோரம் கூட்டின குப்பை ஒதுக்கி வைத்திருந்தது. அதைப் பார்த்து விட்டு, “இதை வழித்துக் கொட்டக்கூட நேரமில்லை! அப்படி வேலை பறக்கிறதோ?” என்று முணுமுணுத்தாள். அவள் சொல்வதைக் கேட்காதவள் போல அவசர அவசரமாகப் பாத்திரங்களைத் துலக்கி வைத்துக் கொண்டிருந்தாள் ராமாயி. இந்த ராணியம்மாளின் லீலைகள் என்று தான் அடங்குமோ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள்.
தனக்கும் என்ன காரணத்தாலோ அவளைத் தட்டிச் சொல்ல மனம் வருவதில்லை. இதை இப்படியே விட்டால் நாலுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தானே போகும்? ஆனால் அதற்காக என்ன செய்வது?
“முத்து, இங்கே வா. தலையில் எல்லாம் இத்தனை மண். யாராச்சு இந்த ஊட்டிலே உன்னைக் கவனிச்சு குளிப்பாட்டிவிட உண்டா?” என்று அங்கலாய்த்துக் கொண்டாள்.
இந்த வார்த்தைகளைக் கேட்க ராமாயிக்கு புண்ணில் கோலை விட்டு உபத்திரவிப்பது போலிருந்தது. இருந்தாலும் சகித்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் இருந்தாள்.
நாகம்மாள் ஸ்நான பானம் பண்ணுவதற்குள் வெயில் நன்றாக வந்துவிட்டது. ஆனாலும் அவள் புறப்பட்ட பாடில்லை. தெரு வரையிலும் போய்விட்டு மறுபடியும் வீட்டிற்குள் வருவாள். என்னவோ வைத்து மறந்துவிட்டவள் போல அங்குமிங்கும் தேடிவிட்டு, “எதுதான் வெச்ச இடத்தில் சீராக இருக்கிறது” என்பாள். “இந்த புகையிலையை அக்குச் சந்தில் கொண்டு போய் வெச்சதாரோ? எங்கே கொண்டு போக வெச்சதோ?” என்பாள். ‘எங்க அம்மா ஊட்டுக்குத்தான் கொண்டு போகலாமினு ஒளிச்சு வெச்சேன்’ என்று சொல்லிவிடலாமென ராமாயி நினைப்பாள்.
ஆனால் அவளிடம் விவாதம் செய்வதில் பயன் ஒன்றுமில்லையெனக் கண்டு, “முத்து மத்தியானம் ஆகிவிட்டது; மாட்டுக்கு கழுநீர் களிஞ்சு வெக்கலே, வா போவலாம்” என்று குழந்தையைக் கூப்பிட்டுக் கொண்டே ராமாயி நகர்ந்தாள்.
நாகம்மாள் குழந்தையைத் தரதரவென இழுத்துக் கொண்டு, “உனக்கு விடியரப்பவே மத்தியானம் ஆகிடும். மத்தியானம் ஆனா இருட்டி விட்டது என்பாய். பகலை இருட்டென்பவள் என்ன காரியத்துக்கு அஞ்சுவாய்? நேரமாச்சு போ என்று என்னிடம் சொல்றதுதானே! அதுக்கு இத்தனை திருகுதண்டம் ஏன்” என்று ஆத்திரமாகச் சொன்னாள்.
“நான் சண்டைக் கட்டுக்கு இளச்சவளக்கா” என்று சொல்லிக் கொண்டே ராமாயி கட்டுத்தரைப் பக்கம் கழிதட்டுகளை ஒதுக்கப் போய்விட்டாள். முத்தம்மாளுக்கு இந்த நாடகம் விளங்கவில்லை. எப்பொழுதும் சொந்தத் தாயை விட அதிக செல்லமாக ராமாயி வளர்த்து வருகிறாள்; ஆதலால், “சின்னம்மா நான் உங்ககூடவே வாரேன்” என்று அவள் பின்னால் ஓடினாள் முத்து.
“உன்னையும் நாளைக்கு அவளைப் போல் ஒரு ‘தட்டுவாணி’ யாக்கிப் போடுவாள். அங்கே போகாதே வா, அங்கே போகாதே” என்று தன் மகளுக்கு நற்புத்தி கூறி நாகம்மாள் குழந்தையின் கன்னத்தில் ஒரு இடி கொடுத்து விட்டு நடந்தாள்.
காலம் மகத்தான மாறுதல்களைச் செய்துவிடுகிறது. இந்த கர்வம், அதட்டல், ஆங்காரம் எல்லாம் ஒரு நாளைக்கு மண்ணில் தலை சாய்ந்து விடும். ஒளியின் வேகத்திற்கும் ஒரு எல்லையுண்டு. வீணாக ஏன் மனதை அலட்டிக் கொள்ள வேண்டும்? ஆனால் ராமாயி இந்தச் சித்தாந்தங்களை நினைத்ததாகவே தெரியவில்லை. அவள் கண்களில் தழும்பிய நீரைத் துடைத்துக் கொண்டே கூடையிலிருந்த சாணியைக் குப்பை மேட்டில் காட்டிவிட்டு, கட்டுத் தரையில் விழுந்து கிடந்த கழிதட்டுகளை பொறுக்கிக் கொண்டிருந்த முத்தாயியைக் கூப்பிட்டாள். சின்னம்மாவின் குரலைக் கேட்டதும் குழந்தை தன் கையிலிருந்த தட்டுகளை எறிந்து விட்டு ஓடி வந்து அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு “அம்மாளை எங்கே போகச் சொன்னாய்?” என்றது.
ராமாயி தன்னையும் அறியாமல் “சுடுகாட்டிற்கு” என்று கூறி விட்டாள். ஆனால் அடுத்த கணமே, ‘ஐயையோ ஏன் தான் இப்படிப்பட்ட வார்த்தை வருகிறதோ?’ என்று தன்னையே நொந்து கொண்டாள்.
அதே சமயம், “நீ போகச் சொன்னவுடன் போயிடுவாளா?” என்ற சத்தம் கேட்கவும் திடீரென திரும்பிப் பார்த்தாள்.
ஆழ்ந்து யோசிக்காமல் உணர்ச்சியின் வேகத்தில் ஒவ்வொரு சமயம் நிதானமின்றிச் சொல்லி விடுகிறோம். ‘காலம் கழிந்து விடும், வார்த்தை நிற்கும்’. அதனால் சில சமயங்கள் பெரிய அபாயங்கள் கூட நேர்ந்து விடுகிறது உண்டு. ஆனால் அப்படி ஒன்றும் இப்போது ராமாயிக்கு நேர்ந்து விடவில்லை. ஏனென்றால் இந்தக் கேள்விக்குச் சொந்தக்காரியான செல்லம்மாள் அப்படிப்பட்ட குணம் படைத்தவளல்ல.
“காத்தாலே எப்பவும் இதுதானா?” என்றாள் செல்லக்காள்.
“நீயும் பக்கத்திலிருந்து பாத்துக்கிட்டுத் தானே வருகிறாய்” என்றாள் வருத்தத்தோடு ராமாயி.
“அவ குணம் தெரிந்தே இருக்குதே; நீ ஏன் வாய் குடுக்கிறாய்?” என்று செல்லக்காள் கேட்கவும், “நானா வாய் குடுக்கிறேன்” என்று தலை மேல் கையை வைத்தாள் ராமாயி.
– தொடரும்…
– நாகம்மாள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1942, புதுமலர் நிலையம், கோயம்புத்தூர்.