கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2026
பார்வையிட்டோர்: 3,271 
 
 

(1947ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்  7-9 | அத்தியாயம்  10-12 | அத்தியாயம்  13-15

பத்தாவது அத்தியாயம்

சிவகாமிக்குத் ‘திருமணம்’ ஆகிவிட்டது. பகவான் செட்டியாருக்கு அவள் வாழ்க்கைப் பட்டுவிட்டாள். இனி அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து அவ ருக்கு வாழ்க்கைத் துணைவியாக இருக்க வேண்டியதே அவளுடைய கடமை.

அத் ‘திருமண’த்தில் சம்பந்தப்பட்ட யாவருக்கும் அது திருப்தியே அளித்தது. அதைப் பற்றிய பேச்சு முதலாவது வந்த போது, பாலகிருஷ்ணனுக்கும் அது திருப்திகரமாகவே தோன்றியது. ஆனால் பின்பு அவனுடைய மனோநிலை மாறுபடத் தொடங்கியது. அதைப் பற்றி நினைக்க நினைக்க, அவனுக்கு எப்படியோ இருந்தது.

இரண்டாங் கலியாணமாயிருந்த போதிலும், மறு வீடு, ஆடிக்கழைத்தல் முதலிய சடங்குகளை எல்லாம் லக்ஷ்மியம்மாள் விமரிசையாக நடத்தினாள். ஆடிக்கு வந்த சிவகாமி, தான் வளர்ந்த வீட்டில் சில நாட்களிருந்து விட்டுக் கணவனுடன் புக்ககத்திற்குச் சென்றுவிட்டாள்.

பாலகிருஷ்ணனுடைய வாழ்க்கைப் பாதையில் முதன் முதல் அவள் குறுக்கிட்ட காலத்திலிருந்து, அவன் அவளைப் பல நாட்கள் சேர்ந்தாற்போல் பார்க்காமலிருப்பது இதுதான் முதல் தடவை. அவள் அவனுடைய வாழ்க் கையில் எவ்வளவு பெரிய பங்கு எடுத்து வந்திருக்கிறாள், அவனுடைய சுக வாழ்க்கைக்கு அவள் எவ்வளவு தூரம் இன்றியமையா தவள் என்பதை இப்போதுதான் அவன் உணரவாரம்பித்தான். சிவகாமியின் கலியாணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன், அன்று மாடியில் நடந்த சம்பவமானது க்ஷணநேரத் தூண்டுதலின் பேரில் நடந்த தொன்றல்ல, அவனுடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த ஓர் உணர்ச்சியின் பிரதிபலிப்பே ஆகும் என்பதும் அவனுக்கு விளங்கியது. ஆகையினால் அவனுடைய மனத் தில் ஏக்கம் குடி கொள்ளலாயிற்று.

இவ்வாறு சிவகாமிக்காக ஏங்கினவன் பாலகிருஷ் ணன் மட்டுமல்ல. கணவன் வீட்டுக்குச் சிவகாமி சென்று ஏறக்குறைய ஒருமாத காலமாயிற்று. லக்ஷ்மியம்மாளுக் குத் தன் மகளைப் பிரிந்து எத்தனையோ மாதங்களானது போல் தோன்றியது. மகளது பிரிவைச் சகிக்கமாட்டாமல், லக்ஷ்மியம்மாள் ஒருநாள் திருநெல்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.

மருமகனின் உபசாரங் காரணமோ, அல்லது மகள் மீது கொண்ட பிரியம் காரணமோ, திருநெல்வேலிக்குச் சென்ற லக்ஷ்மியம்மாள் சீக்கிரம் திரும்பவில்லை. பாட்டி யின் வரவை ஒவ்வொரு நாளும் பாலகிருஷ்ணன் எதிர் பார்த்துக்கொண்டிருந்தான். முன்னம் ஒரு முறை இம் மாதிரி பாட்டியின் வரவை மிகுந்த ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்ததுண்டு. ஆனால் அதற்கும் இப் பொழுது அவன் எதிர்பார்த்ததற்கும் அதிக வித்தியாசமுண்டு.

“பாட்டி போய் வெகு நாளாச்சே. இன்னும் வரக் காணோமே” என்று பல முறை தாத்தாவினிடம் அவன் தெரிவித்தான்.

“சீக்கிரம் வரச்சொல்லி ஒரு கடிதம் எழுதட்டுமா, தாத்தா” என்றும் ஒரு நாள் கேட்டான்.

இவ்வாறு அவன் தன்னுடைய ஆத்திரத்தைக் காட்டியதற்குப் பாட்டியின்மீது கொண்ட அன்பு மட்டுங் காரணமல்ல என்பதைச் சுந்தரஞ்செட்டியார் உணர்ந்தார். ஆனால் இப்பொழுது என்ன செய்ய முடியும்? காரியம் மிஞ்சிப்போய் விட்டதல்லவா?

பாலகிருஷ்ணன் தாயில்லாப் பிள்ளையாக வளர்ந்தவ னாகையால், காலா காலத்தில் அவன் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்படவில்லை. ஆகையினால் அவன் புத்தி நுட்பம் வாய்ந்தவனாயிருந்த போதிலும், பதினெட்டாவது வயதில் பத்தாவது வகுப்பில்தான் படித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் அவன் பள்ளிக்கூடத்திலிருந்து வந்து வீட்டிற்குள் நுழைந்தபோது, பாட்டி வந்திருப்பதைக் கண்டான். பாட்டியைக் கண்டதும், “சிவகாமி சுகமாயிருக்கிறாளா, பாட்டி” என்று கேட்க வேண்டுமெனத்தான் அவனுக்குத் தோன்றியது. ஆனால் அம்மாதிரி கேட்க அவனுக்கு சங்கோசமாக இருந்தது. மேலும் அவள் தன் வீட்டிலிருந்த காலமெல்லாம், அவளைப் பல வகைகளிலுந் துன்புறுத்தி விட்டு, இப்பொழுது அவளுடைய க்ஷேமலாபங்களைப் பற்றி விசாரித்தால், அது விபரீதமாய்த் தோன்றும் எனவும் அவன் நினைத்திருக்கலாம். ஆகையினால் பொதுவாக, ‘”அங்கு எல்லோரும் சௌகரியமா யிருக்கிறார்களா, பாட்டி?” என்று பொதுப்படையாகக் கேட்டான்.

“எல்லாரும் சௌகரியந் தாண்டாப்பா” என்றாள் லக்ஷ்மியம்மாள்.

மேலும் அக்கேள்வியைக் கேட்பதில் அவனுக்கு இன்னொரு நோக்கமுமிருந்தது. வீட்டில் பாட்டியைக் கண்டவுடன், அவனுடைய கண்கள் அவசர, அவசரமாக நாலாபுறங்களிலும் துளாவ ஆரம்பித்தன. வெகுநாட்க. ளாகியும் இன்னும் பாட்டியைக் காணோமே என்று அவன் வருந்தியபோதெல்லாம், பாட்டியின் வருகைக்காக மட்டும் அவன் ஏங்கவில்லை. பாட்டியுடன் ஒருவேளை சிவகாமியும் வரலாம் என்ற தூர நம்பிக்கை அவனுக்கிருந்தது. அவளும் வந்திருக்கிறாளா என்பதைச் சீக்கிரம் அறிந்து கொள்வதற்காகவே அக் கேள்வியைக் கேட்டான். அவள் வரவில்லை என்பதைப் பாட்டியினுடைய பதில் அவனுக்குத் தெரிவித்தது.

சிவகாமியைப் பற்றிப் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று பாலகிருஷ்ணனுடைய உள்ளந் துடித்தது. ஆனால் எப்படிக் கேட்பான் ? கேட்க அவனுக்கு உரிமை உண்டா?

பெண்களின் வாய் பேசாமலிருக்காது! அன்றிரவு சாப்பாட்டிற்குப்பின் லக்ஷ்மியம்மாள் தன் கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்துக்கொண்டே தானும் போட்டுக்கொண்டு, சுந்தரஞ் செட்டியாரிடம் திருநெல்வேலிச் சங்கதிகளை ஒவ்வொன்றாய்ச் சொல்ல வாரம்பித்தாள். லக்ஷ்மியம்மாள் திருநெல்வேலிக்குப் போனதன் நோக்கம் தன் மகளைப் பார்க்கவேண்டும் என்பதற்காக மட்டுமில்லை. சிவகாமி தன் கணவனுடன் எப்படிக் குடித்தனம் செய்கிறாள், சந்தோஷமாயிருக்கிறாளா என்று பார்ப்பதும் அவளுடைய நோக்கமாயிருந்தது. ஆகையினால் தான் அங்கு ஒரு மாதத்திற்கு மேலேயே தங்கியிருந்துவிட்டாள்.

“ஏது லக்ஷ்மி, மகள் வீட்டில் ஒரே யடியாய் ‘டேரா’ அடித்துவிட்டாயே!” என்றார் சுந்தரஞ் செட்டியார்.

“அவள் குடித்தனஞ் செய்கிற லக்ஷண த்தைப் பார்க்க வேண்டுமல்லவா? அதற்காகத்தான் இருந்தேன்” என்றாள் லக்ஷ்மி.

“சந்தோஷமா யிருக்கிறாளல்லவா?”

”சந்தோஷத்திற்கென்ன குறை?”

“புருஷன் மனப்படி நடந்து கொள்ளுகிறாளா?”

“அவள் மட்டுமல்ல, அவரும் அவள் மனப்படியே நடந்து கொள்கிறார்.”

“அவர் அவள் மனப்படி நடப்பதில் என்ன அதிசய மிருக்கிறது? அவர்தான் உன் மகளுடைய அழகில் சொக்கிக் கிடக்கிறாரே!”

“இந்த வேடிக்கையைக் கேளுங்கள். ஒருநாள் காய்கறி என்னென்ன வாங்கி அனுப்பட்டும்?” என்று அவர் கேட்டார். “பாவக்காய் தவிர வேறு எது விற்றாலும் வாங்கி அனுப்புங்கள்” என்று அவள் சொல்லிவிட்டாள். எனக்கு அது அதிசயமாயிருந்தது. அவர் சென்ற பின், “ஏண்டீ சிவகாமி, உனக்குப் பாவக்காய் என்றால் பிரியமாச்சே, ஏன் அது வேண்டாம் என்றாய்?” எனக்கேட்டேன். “அது அவருக்குப் பிடிக்காதம்மா” என்றாள். இப்படி இவ்வளவு சீக்கிரத்தில் கணவருடைய விருப்பு, வெறுப்புக்களை அவள் அறிந்துகொண்டு நடந்தது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. ஆனால் அன்று வாங்கிக்கொண்டுவரப்பட்ட காய்கறிகளில் பாவற்காய்தான் அதிகமாயிருந்ததைக் கண்டதும் என்னுடைய ஆச்சரியம் அதிகரித்தது!” என்றாள் லக்ஷ்மியம்மாள்.

“மகளுக்குக் கிடைத்த மாப்பிள்ளையைப்பற்றி உனக்குத் திருப்திதானே லக்ஷ்மி!” என்று கேட்டார் சுந்தரஞ் செட்டியார்.

“திருப்திக் கென்ன கேட்கவா வேண்டும்? அதை. நினைத்துப் பார்த்தால் எனக்குச் சிரிப்பாய் வருகிறது!” என்று அவளுக்கு ஞாபகம் வந்த இன்னொரு சம்பவத்தை பற்றிக் கூறவாரம்பித்தாள். “ஒருநாளிரவு வெகு நேரம் வரைக்கும் சிவகாமி என்னுடன் பேசிக் கொண்டிருந்து. விட்டாள். அவளுடைய மாப்பிள்ளை வெளியில் வந்து, பார்த்துவிட்டுப் போனார். பிறகு, ‘சிவகாமி, தண்ணீர் கொண்டுவா’ என்று சொன்னார். உடனே அவசர, அவசரமாகச் சிவகாமி எழுந்து சென்றாள். “தண்ணீர் கொண்டு போடீ! தண்ணீர் கேட்டாரே” என்று நான் சொன்னேன். “அவருக்கு வேண்டியது தண்ணீரில்லை அம்மா!” என்று சொல்லி விட்டுப் போய்ப் படுக்கையறையைத் தாளிட்டுக் கொண்டாள்!”

இதைச் சொல்லிவிட்டு லக்ஷ்மியம்மாள் சிரிக்க வாரம்பித்தாள்.

இதை எல்லாங் கேட்டபோது, சுந்தரஞ் செட்டியாருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. “உங்கள் வமிசத்திற்கே இரண்டாந்தாரத்து மாப்பிள்ளை தான் தலையில் எழுதியதோ?” என்று குத்தலாகக் கேட்டார்.

“ஏன், இப்பேர்ப்பட்ட பெண்ணை உங்கள் பேரனுக்குக் கலியாணம் பண்ணி வைத்தோம் இல்லையே, என்று. இப்பொழுது அடித்துக் கொள்கிறதாக்கும்?” என்று லக்ஷ்மியம்மாள் கேட்டாள்.

“எனக்கு மட்டுந்தான் பேரன், உனக்கில்லையா? அவனுக்கு நல்லபெண்ணைப் பார்த்துக்கட்டும் உரிமை உனக்கும் இருக்கிறதல்லவா? சிவகாமி நல்ல பெண். நம்ம பாலகிருஷ்ணனுக்கேதான் கட்டவேண்டும் என்று நீ ஏன் சொல்லவில்லை?”

“அவன்தான் பூனையைக் கண்ட நாய் போல் சீறிக் கொண்டிருந்தானே. நான் எப்படிச் சொல்வேன்?”

பாலகிருஷ்ணன் பக்கத்திலேயேதான் படுத்துக் கொண்டு, இவைகளை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான்.

லக்ஷ்மியம்மாள் மேலுஞ் சொல்லலுற்றாள். “உங்கள் வம்சந்தான் உறவினரோடு ஒட்டாத வம்சம். எங்களுக்கு எப்போதும் சொந்தக்காரர் மீது பாந்தமுண்டு. இவன் அவளை எப்படி எல்லாம் படுத்தி வைத்தான்? வேறொருத்தியா யிருந்தால் இந்தப்பக்கங்கூடத் தலை வைத்துப்படுக்க மாட்டாள். இப்பொழுது நான் அங்கு போனதும் முதன் முதலில் ‘அண்ணன் சுகமாயிருக்கிறதா?’ என்று அவள் கேட்டதைப் பார்த்ததும் எனக்குக்கூட ஆச்சரியமாய்ப் போய் விட்டது. இவனைப் பற்றிப் பேசினால் அவளுக்கு எத்தனை ஆனந்தம் தெரியுமா?” என்று கேட்டாள் லக்ஷ்மி யம்மாள்.

”அவளைப் பற்றிப் பேசும்போது எனக்கு இப்பொமுது ஆனந்தம் ஏற்படுகிறதே, அது போலவா?” என்று பாலகிருஷ்ணன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.

லக்ஷ்மியம்மாள் மேலும் பேசினாள். ” அண்ணன் இப்பொழுது பத்தாவது வகுப்பிலா படித்துக் கொண்டிருக்கிறது? பத்தாவது பாஸ் பண்ணினவுடன் மேல்படிப்புக்கு அனுப்பத்தானே? ஏன், இங்கே அனுப்பினால் என்ன? எங்கள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு, காலேஜில் படித்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? என்கிறாள். அவளுக்கு எவ்வளவு வாஞ்சை இருக்கிறது? நான் இங்கே வந்தேனே, அவளைப்பற்றி இந்தப் பயல் ஒரு வார்த்தை கேட்டானா?” என்றாள் லக்ஷ்மியம்மாள்.

“அவனுக்கும் வாஞ்சை இல்லாமலில்லை. இருக்கத் தான் செய்கிறது. சரி, போய்ப்படுத்துக்கொள். வெகுநேரமாச்சு” என்று சுந்தரஞ் செட்டியார் ஏனோ, இக்கட்டம் வந்தவுடன் திடீரென்று பேச்சை முடித்து விட்டார்.

லக்ஷ்மியம்மாளின் கடைசி வார்த்தைகளைக் கேட்ட போது பாலகிருஷ்ணனின் உள்ளத்தில் உவகை பூத்தது. ‘சிவகாமி என்னைப்பற்றிக் கேட்டாளாமே! என்னைப்பற்றிப் பேசினால் அவளுக்கு ஆனந்தமாமே! அதன் தாத்பரியம் என்ன?’ என்று அவன் யோசிக்கலானான். யோசிக்க, யோசிக்க அவனுடைய மூளை குழம்பவே ஆரம்பித்தது.

பதினொன்றாவது அத்தியாயம்

சுந்தரஞ் செட்டியார் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

“கலியாணத்திற்கப்புறம் பெண்ணையும் மாப்பிள்ளை யையும், ஆடிக்கு அழைத்துவந்தது தவிர வேறு ஒன்றுமே நாம் செய்யவில்லையே. சிவகாமியை மட்டும் ஒரு வழி கூட்டிக் கொண்டுவந்து ஒரு மாதமாவது வைத்திருந்து அனுப்பவேண்டுமென்று எனக்கு ஆசையாயிருக்கிறது” என்றாள் லக்ஷ்மியம்மாள்.

“நன்றாயிருக்கிறது!” என்று சுந்தரஞ் செட்டியார் புன்முறுவலுடன் கூறினார்.

“நன்றாயில்லாமல் என்ன? என் மக்களிருந்தால், நான் எல்லாம் செய்வேனல்லவா? நான் சிவகாமியைக் கூட்டிக் கொண்டு வரத்தான் செய்வேன், அதோடில்லை. அவளுக்கு ஏதாவது செய்தும் அனுப்புவேன்” என்று லக்ஷ்மியம்மாள் கோபத்துடனும் பிடிவாதத்துடனும் சொன்னாள்.

“போதாது. மேலும் வேண்டும்!” என்று சுந்தரஞ் செட்டியார் பின்னும் புன்முறுவலுடன் கூறினார்.

”இதுவரைக்கும் செய்ததெல்லாம் போதாதுதான். மேலும் செய்யத்தான் வேண்டும். நான் செய்யத்தான் செய்வேன். என்னை யார் தடுக்கிறதென்று பார்க்கலாம்” என்றாள் லக்ஷ்மியம்மாள். சிவகாமிக்குச் செய்வதைத் தன்னுடைய கணவன் கூடத் தடுக்கவாரம்பித்துவிட்டார் என்று அவளுக்குக் கோபம் பொறுக்க முடியவில்லை.

சுந்தரஞ் செட்டியார் கடகடவென்று சிரித்தார். ”நீ செய்திருக்கும் மைசூர்ப்பாகு நன்றாயிருக்கிறது. தாம்பாளத்தில் வைத்த இரண்டு மைசூர்ப் பாகையும் தின்றுவிட்டேன். மேலும் வேண்டும் கொண்டு வா என்று சொன்னால், மைசூர்ப்பாகும் கொண்டுவராமல் நான் ஒன்றைச் சொன்னால், நீ ஒன்றை நினைத்துக் கொண்டு ஏன் இப்படிக் கூத்தாடுகின்றாய் லக்ஷ்மி?” என்று சொல்லிச் சுந்தரஞ் செட்டியார் மேலுஞ் சிரித் தார், அவருக்கு முன்னாலிருந்த வெள்ளித் தாம்பாளம் காலியாயிருந்தது. அவருக்கு வைக்கப்பட்ட இரண்டு மைசூர்ப்பாகுகளையும் அவர் தின்று முடித்துவிட்டார்!

லக்ஷ்மியம்மாள் சிரித்துக்கொண்டே இன்னொரு மைசூர்ப்பாகைக் கொண்டுவந்து தாம்பாளத்தில் வைத்து விட்டு, “என்னுடைய சமையல் திறமையை மெச்சினது போதும். நான் சொன்ன விஷயம் என்ன? அதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“நான் சொல்வதென்ன? அவசியம் கூட்டிக்கொண்டு வரவேண்டியதுதான். அவள் தன் கணவன் வீட்டிற்குச் சென்றும் அநேக மாதங்கள் ஆகின்றன அல்லவா?” என்றார்.

“நம்முடைய பெண்ணுக்கு நாம் ஆசையர்ர என்னமாவது செய்வோமென்று நினைத்தால், உங்கள் மாப்பிள்ளை அதற்கு இடங்கொடுக்காமல் வைத்துவிடுகிறாரே!”

”அவர் செய்தால், நீ செய்யக்கூடாதென்று இருக் கிறதா? நீயும் உன் இஷ்டப்படி செய்யேன்? அதனால் என்ன கெட்டுப்போகிறது?”

“அவளைக் கூட்டிக்கொண்டு வருவதில் எனக்கு இன்னொரு கவலையுமுண்டு. நம்ம பாலகிருஷ்ணன் பயல் எப்படி நடந்துகொள்கிறானோ? அதுவல்லவா எனக்குப் பயமாயிருக்கிறது.”

“என்ன பயம்?” என்று செட்டியார் கேட்டார்.

“முன்பு அவள் இங்கிருக்கும்போது ‘கர்புர்’ என்று முறைத்துக்கொண்டிருந்தானே, இப்பொழுதும் அப்படி இருந்தால் என்ன செய்வது? முந்தித்தான் அவள் தலை விதியே என்று இவன் கொடுமைகளை எல்லால் மெளனமா கப் பொறுத்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது அவள் பொறுத்துக் கொண்டிருப்பாளா? அவளும் ஏதாவது எதிர்த்துப்பேசினால் என்ன செய்வது? வீடு ரணகளமாய்ப் போய்விடுமல்லவா? பார்ப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?” என்று லக்ஷ்மியம்மாள் சொன்னாள்.

“எனக்கு இப்போது அந்தப் பயமில்லை ” என்றார் செட்டியார்.

அவர் சொல்வதைக் கவனியாமல், லக்ஷ்மியம்மாள் மேலும் சொல்லலுற்றாள். “என் சொத்தைத் தின்பதற்கு மறுபடியும் வந்துவிட்டாளே என்று வயிறு எரிவான் அல்லவா? உங்கள் வம்சத்தைப்போல் பொறாமை பிடித்த வர்களை எங்குமே பார்க்க முடியாது. நாங்கள் எல்லாம் உங்களைப்போல் இப்படியா மனுஷர் ஆகாதென்கிறோம்?” என்று கேட்டாள்,

“பொருள் இருந்தால்தானே பொறாமைப். படுவதற்கு? உங்களுக்கெல்லாம் என்ன இருக்கிறது? அது போய்விடுமே என்று நீங்கள் பொறாமைப்படப் போகிறீர்கள்?” என்று சுந்தரஞ் செட்டியார் சிரித்துக் கொண்டே கேட்டார்.

“எங்களிடம் அழகிருக்கிறது, குணமிருக்கிறது. அதெல்லாம் பொருளில்லையா? உங்களிடமிருக்கும் ரூபாயும் அணாவுந்தான் பொருளாக்கும்?” என்று லக்ஷ்மி யம்மாள் சிரித்துக்கொண்டே கேட்டாள். அந்தச்சமயம் வியர்த்து விறுவிறுத்து, மிகுந்த களைப்புடன் பாலகிருஷ்ணன் வீட்டிற்குள் நுழைந்தான்.

“என்னடா இத்தனை வியர்வையும், களைப்பும் ? எங்கடா இவ்வளவு நேரமாய்ப் போயிருந்தாய்?” என்று சொல்லிக்கொண்டே அவனுக்கு ஒரு தட்டில் மைசூர்ப் பாகு கொண்டுவந்து கொடுத்தாள்.

அன்று மாலை பாலகிருஷ்ணனுடைய பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த கால்பந்தாட்டக் கக்ஷிக்கும், பக்கத்திலிருந்த இன்னொரு ஊரிலுள்ள பள்ளிக்கூடத்திற்கும் கால்பந்தாட்டப் போட்டி நடந்தது. பாலகிருஷ்ணன் தான் அவனுடைய கக்ஷிக்குத் தலைவன். முன்னணி வரிசையின் மத்தியிலிருந்து விளையாடினான். எப்பொழுதும் நன்றாய் விளையாடுகிற அவனுக்கு ஏனோ அன்று ஒரு அடியேனும் சரியாய்ப் பிடிக்கவில்லை. அவன் ஒரு குறியை நோக்கிப் பந்தை அடித்தான் என்றால் அது இன்னொரு பக்கம் சென்றது. அல்லது எதிர்க் கக்ஷிக்காரன் ஒருவன் வந்து அதைத் தடுத்துவிடுவான். ஆகையினால் அன்று அவனுடைய கக்ஷி தோற்றுவிட்டது. அவன் செய்த தவறுகளினால் தான் அன்று தோல்வி ஏற்பட்டதென்று எல்லோரும் அவனைக் குறை கூறினார்கள். தோல்வியினால் ஏற்பட்டிருந்த ரோஷத்தினால், அடுத்தவாரமே மீண்டும் ஒரு போட்டி விளையாட்டிற்கு வரவேண்டும் என்று எதிர்க்கக்ஷியினருக்குப் பாலகிருஷ்ணன் ஒரு சலால் விட்டிருந்தான்.

விளையாட்டில் ஏற்பட்ட தோல்வியினால் அவன் அன்று வீட்டிற்கு வந்தபொழுது, அவனுடைய மனம் உற்சாகங் குன்றியிருந்தது. பாட்டி அவனுக்கு முன்னால் கொண்டுவந்து வைத்த மைசூர்ப்பாகுகள் சிறிது ஆறுதல் அளித்தனவோ என்னவோ, அவைகளை அவன் ஆவலுடன் தின்றுகொண்டிருந்தான்.

“ஏண்டாப்பா பாலு, சிவகாமியைக் கூட்டிக் கொண்டு வந்து இங்கு ஒரு மாதம் வைத்திருந்து அனுப்பலாம் என்றிருக்கிறேன். உன்னுடைய அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டாள் லக்ஷ்மியம்மாள்.

“என்னை என்ன கேட்பது? உனக்கு இஷ்டமானால் கூட்டிக்கொண்டு வரவேண்டியதுதானே?” என்றான் பாலகிருஷ்ணன்.

“உன்னுடைய மனதிலிருப்பதையும் சொல்லேன்.”

“உனக்கு இஷ்டமானால் கூட்டிக்கொண்டு வர வேண்டியது. இல்லையானால் வேண்டாம். என்னை ஏன் கேட்கிறாய்?” என்று பாலகிருஷ்ணன் கூறினான். இப்படி வேண்டா வெறுப்பாய்ப் பேசுவதுதான் நலம் என்று அவன் நினைத்தான்.

மைசூர்ப்பாகுகள் அவனுடைய உற்சாகக் குறைவைப் போக்கினவோ இல்லையோ. ஆனால் பாட்டி கேட்ட இந்த கேள்வி அவனை நிச்சயமாக உற்சாகப் படுத்தியது. அதில் அடங்கியிருந்த விஷயத்தைப்பற்றி அவனுடைய உள்ளம் ஆலோசிக்க வாரம்பித்தது. மீண்டும் சிவகாமி: யைச் சந்திக்க அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப் போகிறது. அவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அவள் எப்படி இருப்பாள் என்றெல்லாம் பாலகிருஷ்ணன் தன் மனதைக் குழப்பிக்கொண்டிருந்தான்.

அவன் அம்மாதிரி எண்ணிக்கொண்டிருக்கையில் லக்ஷ்மியம்மாளின் எண்ணங்கள் வேறு விதமாய்ச் சென்றன. பாலகிருஷ்ணன் அளித்த பதில் அவளுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அவள் பார்வைக்குத் தன் தங்கையின் மகளுக்குச் சீர் சிறப்புக்கள் செய்வதிலும் அவள்மீது அன்பு செலுத்துவதிலும் பிடிவாதமாயிருப் பதுபோல் காட்டிக்கொண்டாலும், உண்மையில் ஒரு சிறு தடைகூட அவளுடைய மனதைத் துன்புறுத்தியது. இயற்கையிலேயே அவளுடைய மனது மிகச் சுலபமாகப் புண்படும் இயல்புடையது. ஆகையினால் அவள் சிவ காமியைக் கூட்டிக்கொண்டு வருவது பாலகிருஷ்ண னுக்கு விருப்பமில்லை என்றும், அதை வெளிப்படையாகக் காட்ட மனமில்லாமல்தான் அதைப்பற்றி நேரடியான அபிப்பிராயம் சொல்லாமல் தட்டிக்கழிக்கிறான் என்றும் அவள் நினைத்தாள்.

“நான் ஏன் இன்னொருத்தி மகளை இங்கே கூட்டிக் கொண்டு வரவேண்டும்? ஆண்டவன் கிருபையில் இப் பொழுது அவள் ஒருவர் வீட்டுச் சோற்றுக்கு ஏமாந்து, கிடக்கவில்லை. அவளுக்கு அங்கே இருக்கும் செல்வமும் சிறப்பும் எனக்குக்கூட கிடைக்கவில்லை. எனக்கு அவளைப் பார்க்கவேண்டும் என்று ஆசையாயிருந்தால், நானே. அங்கே போய்விட்டுவருகிறேன். ஒருமாதத்துக்கு இரண்டு மாதம் அங்கு தங்கினால்போகிறது. என்னகெட்டுப்போகி றது? தாத்தாவும் பேரனும் கிளப்புச்சோற்றைத் தின்று, வாயாலும், வயிற்றலும் போய்க்கொண்டிருக்கட்டும். எனக்கென்ன?” என்று ஆத்திரத்துடன் ஒருநாள் லக்ஷ் மியம்மாள் சொன்னபோது, பாலகிருஷ்ணன் பிரமித்து விழித்தான்.

”அவருக்கும் அவளை நான் கூட்டிக்கொண்டு வரு வதில் மனப்பூர்வமான விருப்பமில்லை என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது. அப்படியிருந்தால் ஏன் இன்னும் பேசாமலிருக்கிறார்? நான் இதைப்பற்றி பிரஸ்தா பித்து இப்பொழுது ஒரு வாரமாகிறதே. ஒரு வார்த்தை யாவது சொன்னாரா? நான் ஏன் புறப்படவில்லை என்று கேட்டாரா?” என்று தனக்கிருந்த ஆத்திரத்தை எல்லாம் மேலுங் கொட்டினாள் லக்ஷ்மியம்மாள்.

இதற்கு மறுதினம் காலையில் சுந்தரஞ் செட்டியார் கடைக்குப் புறப்படும் சமயம் தற்செயலாய், “என்ன லக்ஷ்மி, சிவகாமியைக் கூட்டிக்கொண்டு வரப் போவதாக அன்று சொல்லிக் கொண்டிருந்தாய். அப்புறம் அந்தப் பேச்சையே எடுக்கக் காணோம் ! என்றைக்குப் புறப்படப் போகிறாய்?” என்று கேட்டார்.

“அவளை நான் கூட்டிக்கொண்டு வரப்போவதில்லை.”

“ஏன்?”

“அப்படித்தான்.”

“யாரேனும் என்னமாவது சொன்னார்களா?”

“ஒருவர் வாயெரிய, வயிறெரிய அவளை ஏன் இங்கு கொண்டுவந்து வைத்திருக்க வேண்டும்? அவள் அங்கே சுகமாயிருக்கட்டும்.”

“இதென்ன பேச்சுப் பேசுகிறாய், லக்ஷ்மி ? ஒருத்தருக்கும் வயிற்றெரிச்சல் ஏற்படாது. நீபோய்க் கூட்டிக் கொண்டுவா.”

“எனக்கேன் இந்த வீண் ஆசை? என் சொந்த மக்களே ஒன்றன்பின் ஒன்றாய்ப் போய்விட்டன! இன்னொ கருத்தி மகள் மீது நான் ஏன்பற்று வைக்கவேண்டும்?”

“இந்தப் போலி வேதாந்தம் எல்லாம் வேண்டாம். நான் கடைக்குப் போய்ப் பணம் அனுப்புகிறேன். நீ நாளைக்கே புறப்படு” என்று சொல்லிக்கொண்டே வாசற் யடியைவிட்டுக் கீழே இறங்கினார் சுந்தரஞ் செட்டியார்.

“வேண்டாம். அனுப்பாதீர்கள். நான் போகமாட் டேன்” என்று லக்ஷ்மியம்மாள் தீர்மானமாகக் கூறினாள்.

பனிரெண்டாவது அத்தியாயம்

சுந்தரஞ் செட்டியார் வீட்டிற்குச் சிவகாமி அழைத்து வரப்பட்டாள். லக்ஷ்மியம்மாள் தான் திருநெல்வேலிக்குச் சென்று கூட்டிக்கொண்டு வந்தாள். அவள் திருநெல்வே லிக்குப் போவதில்லை என்றும் சிவகாமியைக் கூட்டி வரப் போவதில்லை என்றும் பிடிவாதமாய்ச் சொல்லிக் கொண்டு தானிருந்தாள். ஆயினும் சுந்தரஞ்செட்டியார் அவளைப் பலவிதமாகச் சமாதானம் செய்து அனுப்பினார்.

சிவகாமியை அழைத்து வருவதில் திருநெல்வேலியி லும் சில சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டன. பகவான் செட்டியாருக்குச் சிறிது சௌகரியக்குறைவு ஏற்பட்டது. மேலும் அவர் தன்னுடைய மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கப் போகவேண்டும் என்றும், வீட்டில் ஆள் வேண்டுமென்றும் சொன்னார்.

ஆயினும் லக்ஷ்மியம்மாளின் வற்புறுத்தலும், அத்துடன் சிவகாமியின் விருப்பமும் சேர்ந்துகொள்ளவே, பகவான் செட்டியாரால் மேற்கொண்டு ஆக்ஷேபம் சொல்வதற்கு முடியாமற் போய்விட்டது. சிவகாமி தான் வளர்ந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

குதிரைவண்டி வாசலில் வந்து நின்றது. அப்பொழுது பாலகிருஷ்ணன் மாடியில் அவனுடைய அறையில் படித்துக்கொண்டிருந்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை. வண்டிவந்து நின்ற சத்தத்தைக் கேட்டதும், வாசலைப் பார்த்திருந்த ஜன்னலை நோக்கி அவன் ஓடினான். முதலில் லக்ஷ்மிப்பாட்டி வண்டியினின்றும் இறங்கினாள். அவ ளுக்குப்பின்னால் சிவகாமி வண்டியினின்றும் இறங் கினாள். வண்டிக்குள் வெள்ளிக்கூஜா இருந்தது. அதை இழுத்துக் கையிற் பிடித்துக்கொண்டு, நிமிஷநேரத்தில் அவள் வீட்டி ற்குள் போய்விட்டாள். அந்த நேரம் வேலைக்காரச் சிறுமி வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து. கொண்டிருந்தாள்.

“வீட்டில் ஒருவரும் இல்லையாடி?” என்று பாட்டி கேட்டது பாலகிருஷ்ணன் காதில் விழுந்தது.

“சின்னமுதலாளி மாடியில் இருக்கிறார்” என்றாள் வேலைக்காரி.

“பெரியமுதலாளி எங்கேடி?”

“கடைக்குப் போயிட்டாங்க.”

பாலகிருஷ்ணன் மீண்டும் தன் அறையில் வந்து உட் கார்ந்தான். சிவகாமி வந்திருக்கிறாள் என்று அவன் மனம் மீண்டும் மீண்டும் கூறியது. அது அவ்வளவு முக்கியமான சம்பவமா? அதைப்பற்றி ஏன் அவன் சிந்திக்க வேண்டும்?

வெள்ளிக்கூஜாவை எடுத்துக் கொண்டு க்ஷண நேரத்தில் அவள் வீட்டிற்குள் போய் விட்டாள். அவளை நன்றாய்ப் பார்ப்பதற்கு அவனால் முடியவில்லை. ஒரு மூலைப்பார்வை, அதிலும் ஓடும் பார்வை. ஆகையினால் சிவகாமியை அவனால் சரியாய்ப் பார்க்கக் கூடவில்லை. வேலைக்காரச் சிறுமி வீட்டில் இல்லாதிருந்தால், பால கிருஷ்ணனே சென்று கதவைத் திறந்துவிட நேர்ந்திருக் கும். அப்பொழுது சிவகாமியை அவன் நன்றாய்ப் பார்த் திருக்கக் கூடும். ஆனால் இப்பொழுது அவ்விதம் செய்ய முடியவில்லை.

அன்று ஞாயிற்றுக் கிழமையாயிருந்தது அவனுக்குத் திருப்தி அளித்தது.

அவன் இப்பொழுது கீழே இறங்கிச் செல்வதா, கூடாதா? உடனே இறங்கிப்போக வேண்டுமா? அவன் முன்போல் சிறுவனாக இருந்தால், “பாட்டி” என்று கூவிக்கொண்டு உடனே இறங்கிச் சென்றிருப்பான். ஆனால் இப்பொழுது என்ன செய்வது? சிவகாமியை எப்படி வரவேற்பது? இப்படி எல்லாம் அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் கையில் இருந்த புததகத்தில் ஏதோ ஒரு பக்கம் விரிக்கப்பட்டிருந்தது. அதன் பக்கங் கள் அப்பால் திருப்பப்படவில்லை. அப்படியே அது அவ னுடைய கையில் கிடந்தது.

மாடியில் இங்ஙனம் இருக்கையில், கீழே லக்ஷ்மிப் பாட்டியின் உள்ளத்தில் எண்ணங்கள் வேறுபாதையில் ஓடின. ‘நாங்கள் வந்து இவ்வளவு நேரமாகிறதே இந்தப் பாலகிருஷ்ணன் பயல் மாடியிலே தானே இருக்கிறான். இறங்கி வந்து ‘வா’ என்று ஒருவார்த்தை கேட்டானா? பொறாமை பிடித்த பயல்! என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். ‘நல்லவேளை. இந்தப் பயல்களின பொறாமைக் கெல்லாம் அப்பால் கடவுள் அவளைக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார்!’ என்று அவள் மனதில் திருப்தியும் அடைந்தாள்.

சிறிது நேரத்திற்குப்பின் பாலகிருஷ்ணன் கீழே இறங்கி வந்தான். பாட்டியும், சிவகாமியும் சமயலறைக் குள்ளிருந்தார்கள். பாலகிருஷ்ணன் உள்ளே நுழையாமல், வெளியிலிருந்தபடியே, “வாருங்கள்பாட்டி ‘ என்றான்.

”ஆம்” என்றாள் லக்ஷ்மியம்மாள்.

அடுத்தாற்போல், “வா சிவகாமி!” என்றான்.

அவள் அறைக்குள்ளிருந்தபடியே “ஆம்” என்றாள்.

அவளுடைய குரல் மட்டுந்தான் கேட்டது. உருவந் தெரியவில்லை. பாலகிருஷ்ணன் மீண்டும் மாடிக்குச் சென்று விட்டான்.

லக்ஷ்மியம்மாளுக்கு அது மிகவுந் திருப்தி அளித்தது. இத்தனை நாட்களுக்கப்புறம் வீட்டிற்கு வந்த பெண்ணை இவ்வளவு நேரங் கழித்தாவது மாடியிலிருந்து இறங்கி வந்து ”வா ” என்று கேட்டுவிட்டுப் போகிறானே. ‘வா’ என்று கேட்பானோ, கேட்கமாட்டானோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு வந்த பெண்ணுக்கு இந்த மரியாதையாவது காட்டினானே’ என்று அவள் சந்தோஷ மடைந்தாள்.

சிறிது நேரத்திற்குப் பின் சுந்தரஞ் செட்டியார் வீட்டிற்கு வந்தார். வீட்டில் சிவகாமி வந்திருப்பதைக் கண்டதும், “வாம்மா சிவகாமி! ” என்றார்.

“ஆம் ஐயா” என்றாள் சிவகாமி.

“சௌக்கியந்தானே, அம்மா?” என்று கேட்டார்.

“சௌக்கியந்தான் ஐயா” என்று சிவகாமி பதிலளித்தாள்.

”மாப்பிள்ளை சௌக்கியமாயிருக்கிறாரா?”

“இருக்கிறார்.”

“நீ சந்தோஷமாயிருக்கிறாயா அம்மா?”

சிவகாமி பதில் சொல்லவில்லை.

“உன் மாப்பிள்ளை உன்னைப் பிரியமாய் வைத்துக் கொள்கிறாரல்லவா?” என்று மீண்டும் சுந்தரஞ்செட்டியார் கேட்டார்.

“பிரியமாய்த்தான் வைத்துக் கொள்கிறார். இதெல்லாம் என்ன கேள்வி ?” என்று லக்ஷ்மியம்மாள் பதில் கூறினாள்.

“இதெல்லாம் கேட்காமல் பின் என்ன கேட்பது?” என்று சிரித்துக் கொண்டே சுந்தரஞ்செட்டியார் கூறினார்.

இதையெல்லாம் மாடியிலிருந்த பாலகிருஷ்ணன் கவனித்துக் கேட்டுக் கொண்டேயிருந்தான்.

சிவகாமி வீட்டிற்கு வந்து ஒரு நாளாகி விட்டது. ஆனால் அவளைச் சரியாகப் பார்க்கும் சந்தர்ப்பம் இன்னும் பாலகிருஷ்ணனுக்குக் கிடைக்கவில்லை.

அவனுடைய கண்ணில் படாமலே அவள் நடமாடிக் கொண்டிருந்தாள். “இதென்னடி, அவன் உனக்கு மாமனா, மச்சானா அல்லது கொழுந்தனா? அவனுக்கு ஏன் இப்படி ஓடி ஒளி கிறாய்?” என்று லக்ஷ்மியம்மாள் கேட்டாள். சிவகாமி அதற்குப் பதில் சொல்லவில்லை.

பாலகிருஷ்ணனும் அடிக்கடி கீழே இறங்கிச்சென்று அவளைப்பார்க்க ஆர்வமுள்ளவனாகக் காட்டிக் கொள்ள வில்லை. ஏதாவது அவசியமான ஜோலிகளின் நிமித்தம் அவன் அங்கு மிங்கும் சென்றபோதுகூட அவளைப்பார்க்க வேண்டுமென்று அவன் அதிகமாய் முயற்சிக்கவில்லை.

முயற்சித்தால் அது பிறரால் எங்ஙனம் கருதப்படுமோ எற்று நினைத்தான். ஆயினும் பால் உணர்ச்சி முற்றும் பெற்றிருந்த அவனிடத்தில் அவளுடைய வருகை ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது. அவனுடைய உடல் முழுதும் ஓர் உணர்ச்சி அலை பாய்ந்தோடிக் கொண்டிருந் தது. அவளுடைய ஆடையின் சலசலப்பை அவன் கேட்டான். அவளுடைய பேச்சின் குரலையும், அவளுடைய காற்சிலம்பின் சப்தத்தையும் அவன் செவிமடுத்தான். அவை எல்லாம் அவனுடைய உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சியை உண்டு பண்ணுவது போல் தோன்றின.

அன்றிரவு அவன் சாப்பிட்ட பின்பு சமயலறையிலிருந்து வெளியே வந்தான். ஹாலின் ஒரு ஓரத்தில் சிவகாமி நின்று கொண்டிருந்தாள். விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. பாலகிருஷ்ணன் அவளைப் பார்த்தான். அவள் இவன் வரும் திக்கை நோக்காமல், வேறு புறந் திரும் பிக் கொண்டிருந்தாள். அம்மங்கிய வெளிச்சத்தில் அவ ளுடைய உருவம் தெளிவாய்த் தெரியவில்லை. அவளுடைய உருவத்தின் ஒரு பொதுத் தோற்றம், அதிலும் புறத் தோற்றம் மட்டுமே அவனுக்குத் தெரிந்தது. அவன் அதிக நேரம் அங்கு நிற்கவில்லை. விரைவாய் மாடிக்கு ஏறிப் போய்விட்டான். மாடிப்படிகளில் ஏறிச் செல்லும்போது, அவனுக்குத் திடீரென்று ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. முன்னொரு முறை பாட்டி திருநெல்வேலிக்குச் சென்றிருந்த போது, சிவகாமி அவனைப்பற்றி அதிகமாய் விசாரித்தாளாம்.

அவனைப்பற்றிய விஷயங்களை அறிவதில் அதிக ஆர்வங் காட்டினாளாம். அந்த நினைவு ஏனோ அவனுக்கு இப்பொழுது இன்பம் அளித்தது.

மங்கிய வெளிச்சத்தில் தோன்றிய சிவகாமியின் உருவம், பாலகிருஷ்ணனின் மனதில் அவளை நன்றாய்ப் பார்க்க வேண்டுமென்ற ஆசையை எழுப்பியது. ஏன்? அவளை முன்னால் அவன் பார்த்ததில்லையா? அவனுக்கு மிக நன்றாய்த் தெரிந்த பெண்தானே அவள்! மேலும் அவனால் வெறுக்கப்பட்ட பெண்தானே அவள்! அவளைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் ஏன் இப்பொழுது அவனுக்கு உண்டாயிற்று?

அவனுடைய உள்ளத்தின் ஒரு ஓரத்தில் இன்னொரு எண்ணமுந் தோன்றியது. அவளைப் பார்க்க வேண்டுமென்று விரும்புவது சரியா? அது தவறில்லையா? அவளைப் பார்ப்பது பாவமில்லையா ? இவ்விதம் எல்லாம் சிந்தித்துக் கொண்டே மாடிப்படிகளில் ஏறிச் சென்று, தன் படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டான். ஆனால் இவ் வெண்ணங்களால் எல்லாம் அவனுடைய தரிசன தாகம் அடங்கவில்லை. அதிகரிக்கவே செய்தது.

– தொடரும்…

– திருமணம் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1947, அருணோதய நிலையம், வேலூர்.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *