தியாகம்




(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“மகன்.. கொஞ்சம் நில்லுங்க.”
சைக்கிலை விட்டு இறங்கி நின்ற சறூக் தன்னருகே வந்து நின்ற, நாற்பத்தைந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க சுலைகா வீவியை ஏறிட்டு நோக்கி,
”என்ன?’ என்றான்.
“நீங்க இப்ப பின்னேரங்கள்ள லீவாத்தானே இருக்கீங்க இல்லவா?’
“ஓம்….”

“என்ட தங்க மகளாருக்கு இந்தக் கணக்குப்பாடத் தைத் தவிர, மத்ததெல்லாம் போகுது மகன். நீங்க பின்னேரங்கள்ள நாலு ஐந்து மணிக்கு எங்கட ஊட்ட வந்து கணக்குகளைக் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தீங்கண்டா என்ட புள்ள இந்த முற எஸ்.எஸ்.சி. பாஸ் பண்ணிரும். வாறிங்களா மகன்! அல்லாஹ் உங்களுக்கு நன்மையைத் தருவான், ஏலாண்டு மட்டும் சொல்லிராதீங்க.”
‘பாவம் ஏழை! உதவி செய். ஓய்வோடுதானே இருக்கிறாய்’ என்றது சறூக்கின் மனம். அடுத்த கணம் அவன்
“சரி… நாளை முதல் நான் நாலு மணிக்கு வருகிறேன். அவ்வளவுதானே” என்றான்.
“ஓம் மகன்..”
”சரி வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அவன் சைக்கிலில் ஏறி விரைந்தான். அவன் போகும் திக்கையே பார்த்துக் கொண்டிருந்த சுலைகா வீவியின் ஒளி மங்கிய விழிகளில், எழில் வற்றிய கன்னங்களில் பூரிப்பு; உடலிலும் ஒரு புதுத் தெம்பு. திரும்பி வீட்டை நோக்கி நடந்தாள்.
அடுத்த நாள் அரும்பிய படிப்பித்தல் வளர்ந்து கொண்டே வந்தது.
ஆறு மாதங்களின் பின், ஒருநாள்…
நாலரை மணியிருக்கும், படிப்பிக்கும் அறையில் மேசையின் முன்னே, நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தான் சறூக். அவனுக்கு வலது பக்கத்தில், சற்றுத்தள்ளி இன்னும் ஒரு நாற்காலி. அதில்தான் சுலைகா வீவியின் மகள் பரீதா உட்கார்ந்து படிப்பாள். ஆனால், அப்போது அக்கதிரை காலியாக இருந்தது அவளோ, அடுத்த அறையில் ஆசிரியருக்கு தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு வயது பத்தொன்பது இருபது இருக்கலாம். ஏழையாக இருந்தாலும், வறுமையின் சுவடுகளைக் காண முடியவில்லை. அவள் ஓர் அழகி.
‘அவள் வரும்வரை இன்று செய்யவேண்டிய கணக்கு களைப் பார்ப்போம்’ என்று நினைத்த அவன், உடனே கணக்குப் புத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டினான். அதிலே இருந்து கடிதமொன்று நழுவி, டக் கென்று கீழே விழுந்தது. அதிலே தனது பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக்கண்டு அவசர அவசரமாகப் பிரித்து வாசித்தான்.
அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்கள் அழகும், பேச்சும், நடத்தையும் என்னை அப்படியே கவர்ந்து விட்டன. நீங்களில்லாமல் ஒரு நாளும் என்னால் மகிழ்ச்சியோடு இருக்கவே முடியாது. இடையிலே சில நாள் நீங்கள் வராமலிருந்தீர்களல்லவா? அப்போது நான் எவ்வளவு வேதனைப்பட்டேன் தெரியுமா?
நான் ஏழை! ஆனால், மானமுள்ளவள். எனது ஆசை உங்களை மணந்து கொள்ள வேண்டுமென்பது. இது உங்களோடு பழகியதன் பின்தான் ஏற்பட்டது. உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். என்னை ஒதுக்கி விடா தீர்கள்.
இப்படிக்கு
உங்களையே மணக்கத் துடிக்கும்
பரீதா
அதனை அவன் மீண்டும் படித்து முடித்த நேரத்தில் தான் தேநீர் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு தனக் சூரிய நாற்காலியில் ஒயிலாக அமர்ந்தாள். பக்கத்திலிருந்த அவன் வதனம் மலர்போல் வாடிக்கிடந்தது.
அவள் வதனமோ மாலை நேரத்து மேற்கு வான் போல் சிவப்பேறிக்கிடந்தது. அவளை நாணம் அரித்துத் தின்று கொண்டிருந்தது. அவளை நிமிர்ந்து பார்த்த அவன்,
“இந்தக் கடிதம் யாருக்கு” என்றான்.
”அதைச் சொல்லுகிறேன், முதல்ல தேநீரைக் குடியுங்கள்.'”
“சரி, தாங்க…” வாங்கித் தேநீரைப் பருகிவிட்டு கோப்பையைக் கீழே வைத்தான். பின் அவன்,
”அதைச் சொல்லுங்கள்” என்றான்.
அவளோ, “அதுவா…உங்களுக்குத்தான் ” என்று சொல்லிவிட்டுக் குனிந்து கொண்டாள்.
”என்னை மன்னிக்கணும் பரீதா. எனக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. எங்கட வீட்டுக்குப் பக்கத்திலிருக்காவே சல்மா, அவட மகளுக்குத்தான். கல் வீடும், நாலு ஏக்கர் காணியும் எங்கள் இருவருக்கும் எழுதப் படவிருக்கின்றன. அதுமட்டுமல்ல, எனக்குத் தனியாக ஐயாயிரம் ரூபாய் பணமும் தருகிறார்கள். இது எனது பெற்றோர் பார்த்து நிச்சயித்தது. இதை நான் ஒதுக்கி விட்டால், பெற்றோரும் என்னை ஒதுக்கிவிடுவார்கள். தயவுசெய்து என்னை மறந்துவிடு’ என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்,
வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்பதற்காக மட்டுந்தான் ஓதுக்கி விடுகிறான் சறூக் என்பதை அவளின் மனம் நம்ப மறுக்கிறது. முக்கியமாக எதற்காகத் தன்னைச் சறூக் வெறுக்கிறான் என்று எதை நினைத்தாளோ அதை அப்படியே வெளியே பிட்டுவைத்தாள் அவள்:
“நான் ஏழை என்பதனால்தானே என்னை ஒதுக்கி விடுகிறீர்கள். நான் உங்கள் மேல் என் உயிரையே வைத்திருந்தேனே, பணம், வீடு வளவு, காணியென்றால், எதையும் செய்யத்துணிவீர்கள்போல் தெரிகிறது.”
“நிறுத்து பரிதா… நிறுத்து…. எனக்குப் பணம்,காணி, வீடு வளவு பெரிதல்ல. அன்பு, அறிவு, அழகு, நல்ல நடத்தைதான் பெரிது.”
”அப்படியென்றால் என்னிடம் அன்பில்லையா? அறிவில்லையா? அழகில்லையா? நல்ல நடத்தையில்லையா?”
“இருக்கிறது பரீதா இருக்கிறது…”
“அப்படியென்றால் என்னை ஏன் வெறுக்கிறீர்கள்”
”என் தாய் தந்தை பேசிய கல்யாணமல்லவா? அதனை முடியாவிட்டால் ஏசுவார்கள்: கோபிப்பார்கள். இதனை நினைத்துத் தான என்னை மறந்து விடச் சொன்னேன்…’
“தாய் தந்தையரின் கோயம் எவ்வளவு நாளைக்கு இருக்கப் போகிறது. அவர்களைக் கொஞ்ச நாளையால் சரிக்கட்டி விடலாம்.”
“இப்ப என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய் பரீதா… என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்.”
“இனி அது உங்கள் விருப்பம்” என்று சொல்லி விட்டுத் திரும்பிய அவளின் கன்னத்து மேடுகளிலிருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டன
‘பாவம் ஏழை! உன்னில் மனதைப் பறிகொடுத்து விட்டாள். நீ இல்லாவிட்டால், அவள் வாழ்க்கை மண்ணாகி விடும். துரோகம் செய்துவிடாதே. அவளுக்காக, காணி, பணம், வீடு வளவு ஆகியவைகளைத் துறத்துவிடு! அவை களைப் பின் உன்னால் தேடிக் கொள்ள முடியும், அல்லாஹ் உனக்குத் தருவான். உனது சம்பளத்தைக் கொண்டு வாழ்க் கையைச் சிக்கனமாய் நடத்திக் கொண்டு வா. உனது பெற்றோரைப்பற்றிக் கவலைப்படாதே. அவர்கள் மிகவும் நல்லவர்கள். கொஞ்ச நாளைக்கு உன்னைக் கோபிக்கத் தான் செய்வார்கள். பின் எல்லாம் சரியாகிவிடும். அவளை ஏற்றுக்கொள்!’ என்றது சறூக்கின் உள் மனம்.
அவன் மெதுவாக அவள் பக்கத்தே சென்று, நடுங்குங் கரங்களால் அந்தக் கண்ணீரைத் துடைத்தான்.
“பரீதா அழாதே! நான் உன்னை மணந்து கொள்கிறேன். இனி அவளை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டேன். இது உறுதி” என்று அவளிடம் சொன்னான்.
அதைக் கேட்டஅவளின் முகத்தில் ஒரு தெம்பு. அன்றலர்ந்த சிவப்பு ரோஜாவாக ஒரு மலர்ச்சி. அதன் பின்புதான் அவள் நன்றாக மனம் விட்டுப் பேசினாள்; பழகினாள். இப்பொழுது அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட விழிப்பு!
அவர்களின் காதல், வெகு விரைவில் பரவிவிடும் வதந்திகளைப் போல மெல்லப் பொசிந்து ஊர் முழுக்கப் படர்ந்துவிட்டது.
இந்தச் சந்தர்ப்பத்திலேதான் ஒரு நாள். பிற்பகல் மூன்று மூன்றரை மணியிருக்கும். சறூக் தனது வீட்டில் அன்றைய பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்த போது,
“மகன் சறூக்… இஞ்ச வா கொஞ்சம்” என்ற தந்தையின் குரல் கேட்டு அவன் பதறிப்போய் அவரருகே சென்றான்.
“என்ன வாப்பா கூப்பிட்ட…” என்றான்.
“ஒன்று மில்ல…நீ அந்தப் பரீதாவோடத் தொடர் பாம். அவளைத்தான் கல்யாணமும் செய்து கொள்ளப் போகிறதாகக் கேள்விப்பட்டன். இது உண்மைதானா?”
அவன் மௌனமாக நின்றான்.
”என்ன பேசாம நிக்காய் சொல்லன்…”
”ஓம்…” என்று தலையை ஆட்டினான் அவன்.
“என்னடா சொன்னாய்” என்று சீறிய அவர், வேல் பட்ட வேங்கையெனப் பாய்ந்து அவன் கன்னத்தில் பளீர்! பளீர்!! என அறைந்தார். அடிபட்ட சறூக் சிலையாக நின்றான். அவனை ஏறிட்டு நோக்கினார் அவனது தந்தை.
“உனக்கு ஏற்கனவே கல்யாணம் பேசி திட்டமாக் கினோம். அதனால, உனக்கு பணம், காணி, வீடு வளவெல் லாம் வரவிருக்க இவையெல்லாம் ஒதுக்கிவிட்டு அந்த ஏழை சுலைகாட மகளைக் கல்யாணம் செய்யத் தீர்மானித் திருக்கிறாய் மடையா! உனக்குப் புத்தியில்லையா, கொஞ் சம் யோசித்துப் பாரு, அவள் ஏழை. அவளிடம் பணமோ, காணியோ, வீடு வளவோ எதுவுமேயில்லை. அவளைக் கல்யாணம் செய்தால் மிச்சம் கஷ்டப்படுவாய். உன்னைக் கேக்கிறன், இது நானும் உன்ட உம்மாவும் பேசின கல்யாணம், இதைமுடி, நிம்மதியாக வாழலாம்” என்று பொழிந்து தள்ளினார் அவர்.
அவ்வார்த்தை செவிடன் காதில் ஊதிய சங்கானது அவனுக்கு. அவன் வதனத்தில் எவ்வித சலனமும் தோன்றவேயில்லை. அப்போதும் அவன், அசையாது தான் நின்றான். ஆனால், அவன் வாயோ,
“முடியாது! பணம், காணி, வீடு வளவு ல்லா விட்டாலும் பறுவாயில்லை. நான் பரீதாவையே மணப்பேன். இது நிச்சயம்” என்ற வார்த்தைகளை உமிழ்ந்தது.
“எனக்கெதுக்க நில்லாதடா. இப்பவே இந்த வீட்ட விட்டுப் போயிரு. திரும்பிகள் வந்திராத” என்று எரிந்து விழுந்தார் தந்தை.
வீட்டை விட்டு வெளியே வந்த அவனோ, அழுது வடிந்து கொண்டே பரீதாவின் வீட்டை நோக்கி நடந்தான். அந்த வீடும் வளவும் வேறொருவரின் உடைமை. அதில் தற்காலிகமாகத்தான் சுலைகா வீவியும் மகளும் வாழ்ந்து வந்தார்கள். கடையப்பம் விற்று வாழ்ந்த வாழ்க்கையை முடித்து விட்டார்கள். இல்லை அவனுடைய தந்தை அவர்களின் வாழ்க்கையை முடித்து வைப்பதில் முந்திக்கொண் டார்.
“புள்ளயக் காட்டி பொடியங்களைப் புடிக்கிறவள்!” என்ற சுடு சொல்லைத் தாங்க முடியாத அந்த ஏழைத் தாயும், மகளும் அந்த ஊரைவிட்டே ஓடிவிட்டார்கள்.
அந்தக் குடும்பத்தைத் தேடி அலுத்துப்போய்விட்ட சறூக், இன்று காலத்தின் விளிம்பில், நடைபோடும் ஒரு கிழம். ஆம், பரீதாவின் சுவடுகளையே, தேடித் திரியும், ஒரு சாதாரண மனிதன் அவன்.
– சிந்தாமணி 1966 நவம்பர் 04.
– காணிக்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு : ஜனவரி 1997, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் வெளியீடு, இலங்கை.
![]() |
உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க... |