கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2025
பார்வையிட்டோர்: 963 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புலரியில்தான் அது நடந்தது. காற்று அமுங்கி அசையாது கிடந்தது. அதன் இருப்பே லேசான குளிரில் தெரிந்தது. முள்ளந் தண்டை நீவி, நேராக நீளத்துக்குக் குத்தும் குளிர். திடீரெனக் கருமை கொண்ட மேகம் – இராட்சசப் பன்னீர்க் குடமாய் திரட்சி கொள்ள, வானம் பட்டெனப் பிளந்து மழையாய்க் கொட்டியது. 

தூற்றல் இல்லாமலே தொடங்கிய மழை, தடித்த தாரையாய் இறங்கிய பொழுது, மண் மணத்தது. கொள்ளையாய்… நெஞ்சு முட்ட முட்ட. 

இவன் படுக்கையை விட்டு எழுந்து, ஜன்னல் திரையை விலக்கி, வெளியே பார்த்தான். 

கிழக்குச் சாய்வில் தெரிந்த அந்தப் பெண்கள் பாடசாலை, அதனை ஒட்டிய விளையாட்டு மைதானம். நேர் எதிரே இருக்கும் அம்மன் கோயில். அதன் அகன்ற பின் வீதி. சந்தைத் தெரு, அதிலிருந்து கிளைத்து மேற்கே ஓடும் புது வீதி. தூர வீதியின் வடக்காக, பள்ளத்தில் ஒதுங்கி, பத்துப் பதினைந்து குடிசைகள். எல்லாமே, மழையின் பின்னணியில் அவனுக்குச் சித்திரமாய்த் தெரிந்தன. 

பூமி தெப்பமாய் நனைந்து சிலிர்த்துப் போனதை இவன் அவதானித்தான். ஏதோ பராக்கில் இவன் திரும்பிய பொழுது, முற்றத்தில், செரிமரத்தில் ஒற்றையாய் ஒரு காகம் கழுத்தைப் புயங்களுக்கிடையில் குவித்த வாகில் – இறக்கைகளை தூக்கி வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். ‘ச்சூய்’ என்று அதனை விரட்டினான். அது அசையவில்லை. மீண்டும் விரட்ட வேண்டுமென அவனுக்கு ஏனோ தோன்றவில்லை. 

மனசோடு ஏதோ அழுத்தமாக கசந்து கரைந்து கொண்டிருந்தது. 

பாத்ரூம் பக்கம் போனவன் – திரும்பிவந்த பொழுது, வீதியில் நீர் சமுத்திரமாய் வழிந்து கொண்டிருந்தது. நீரின் சலசலப்பு இவனுக்குச் சங்கீதமாய் இருந்தது. 

‘என்ன மழை இது! அவன் அலுத்துக் கொள்ளவில்லை. கந்தோருக்குப் போகாமல் இன்று முழுவதுமே அதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. 

எதையுமே பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கும். தினம் தினம் பார்ப்பதையே திரும்பத் திரும்பப் பார்ப்பதில் அவனுக்குச் சலிப்பேயில்லாத ஒரு திருப்தி. 

மனசின் பாரமெல்லாம் இந்தச் சின்ன, சின்னப் பரவசங்களில் லேசாகி விடுகிறது. 

ஏழு மணிக்கெல்லாம் இந்தத் தெருவே உயிர்ப்புக்கொள்ள, வெள்ளைப் புறாக்களாய் சடசடத்துக் குதூகலித்து விரையும் அந்த பெண் பாடசாலைச் சிறுமிகள்; கண்களை அகல விரித்து, இவனைப் பார்வையால் கொஞ்சுவார்கள். தயக்கமேயில்லாத, கள்ளம் புகாத பருவத்துப் பார்வையும் கொஞ்சலும். 

‘உருத்திராட்சதாரியாய்… சிவப்பழமாக உயர்ந்து வளர்ந்த அந்த மனிதர்! அவர்தான் அம்மன் கோயில் ஐயரா? மேல் துண்டு அவரது பூணூலை மறைத்து விடுகிறது. குடுமியும் விபூதிப் பட்டையும் தடித்த சந்தனப் பூச்சும் பஞ்சகச்சமும்… அவர் பூசகர்தான்! 

அவனது பார்வை பட்டு மனசோடு ஆகிப்போன அந்தப் பெண்! தனது தாவணித் தொங்கலின் தொய்வில் இவனது உயிரையே இழுத்துத் தரையில் தேய்த்துக் கொண்டு போவாளே. அவனது மனோ… குழப்பமில்லாத சிருஷ்டியின் ஒரு குழப்பமல்லவா அவள்..! 

குளிர்ந்த காலைப் போதுகளில், ‘ஐஸ் பழம், ஐஸ் பழம்’ என்று ஓடி ஓடி அலைந்து எதுவுமே விற்காமல் ஏமாற்றமும் சோர்வுமே மிஞ்ச, பரிதவிக்கும் அந்த அரைக் கால்சட்டை அணிந்த சிறுவன், அவன் முகத்தில் கவிந்து படரும் துயரம், எல்லாம் இவனது மனசு கொள்ள: 

‘ஓ! இவர்கள் இன்று இந்த மழையில் நனைந்தபடி வருவார்களா? என நினைத்தான். 

அவனுக்கு அவர்களை ‘மனசார’ பார்க்க வேண்டும் போலிருந்தது. 

“தம்பி கோப்பி ஆறப்போகுது குடியன்” அக்கா கோப்பியை மேசையில் வைத்துவிட்டுப் போனாள். 

அக்காவே கோப்பியை அவனது அறைவரை வந்து தருவது இவனுக்குக் கூச்சமாயிருந்தது. அவனேபோய் எடுத்துக்கொள்ள நினைப்பான். அது முடிவதில்லை. அந்த ஜன்னலும்… அவளும்… அவளது நினைவுகளும்… அவனது புத்தகங்களுமே அவனை அந்த அறையில் கட்டிப்போட்டு விடுகின்றன. 

குளிரில் கோப்பி அவனுக்கு அமிர்தமாய் இருந்தது. ரசித்துப் பருகியபடி ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். 

மழை சற்று விட்டிருந்தது. லேசான தூறல். பெண் பாடசாலைப் பிள்ளைகள் நனைந்தபடி போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு குடையில் நான்கைந்தாய் நெருங்கியடித்து இழுபடுவதும் சில பிள்ளைகள் ரெயின் கோட்டில் அமுங்கி முகம் மட்டும் தெரியப் போவதும் இவனுக்கு வேடிக்கையாய் இருந்தது. 

‘இண்டைக்கு இந்த மழையிலையும் பள்ளிக்கூடம் இருக்குதா’ கூவி அழைத்து அவர்களைக் கேட்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. 

அவர்களைத் தொடர்ந்து, ஐயர் வந்து கொண்டிருந்தார். பஞ்சகச்சம் தொடைவரை உயர்ந்து இருந்தது. வெள்ளத்தில் நனைந்துவிட வேண்டாமே என்ற கவனம் அவருக்கு. 

சந்தைத் தெருவில், தூரத்தில் – மிகத் தூரத்தில் அவள் வந்து கொண்டிருந்தாள். அது அவளேதான் என்பதை – எவ்வளவு தூரத்தில் வைத்தும் இவனால் கண்டு கொள்ள முடிகிறது. 

அவள் அந்தப் பாதையில் வந்து போவதே அவனுக்காகத் தான் என்பது போலிருக்கும். அதற்கு மாறாக அதனை அவனால் நினைத்துப் பார்க்க முடிவதில்லை. 

நெருக்கத்தில் அவளது இதழ்களில் கனிந்து உடையும் மெலிந்த சிரிப்பு; கண்ணில் உயிர்ப்புடன் பரவி நிற்கும் பரிவு, இவனுக்கு அவளுடன் ‘ஏதென்’ கதைக்க வேண்டுமெனும் தவிப்பை ஏற்படுத்தும். 

தவிப்பு அவனுக்கு மட்டுமா?, அவளுக்கும் இருப்பதை அவனால் உணர முடிந்தது. 

பேசுவதற்கு ஒரு வார்த்தையேனும் ஏன் இவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் பேசவே மாட்டார்களா? பேச்சே இல்லாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் விந்தையா இது! 

மழைத் தூறலைப் பொருட்படுத்தாமல் அவன் சரசரவென்று வீட்டை விட்டு இறங்கி வீதிக்கே வந்து விடுகின்றான். 

“மனோ.. இந்த மழையிலுமா வேலைக்குப் போகவேணும்?” அவனுக்கு, அவளுடன் பேச முடிந்ததில் திருப்தி. அவள் பேசவில்லை. ஆனால் அவனுக்காக ஒரு கணம் நின்று பார்வையால் மட்டும் ஏதோ பேசிவிட்டுப் போனாள். 

சாரலடித்து நீர் படிந்த அவளது கூந்தலும் முகமும் இவனுக்கு தீப ஒளியில் துடிக்கும் கர்ப்பக்கிரக அம்பிகையின் பிரபையாய் ஒளிர்ந்தது. 

அவன் தன்னுணர்வடைந்த பொழுது, மழை கனத்துவிட்டதை உணர்ந்தான். 

தெப்பமாய் நனைந்த நிலையிலும் அவள் போவதையே இவன் பார்த்தபடி நின்றான். பாதையில் அப்பொழுது அவளும் அவனும்தான் இருந்தார்கள். 

மழை பெய்து கொண்டிருந்தது. 

“மழையிலை நனைஞ்சபடி இதென்னடா…?” அக்காவின் குரல்தான்! வீட்டு விறாந்தையில் இவனை வெறித்துப் பார்த்தபடி நின்றாள். இவனுக்கு வெட்கமாய்ப் போய்விட்டது. 

‘அவளுடன்… அவனது மனோவுடன் கதைத்ததை அக்கா பார்த்திருப்பாளோ?’ 

தயங்கியபடி, படிஏறி வந்தவனின் தலையை அக்காதான் துவட்டிவிட்டாள். 

‘அக்காவின் இந்தப் பரிவு… மனசே கனிந்து கரைந்து போகிற பரிவு…. எதையுமே… சொந்தமாய் தந்து நிற்கும் பரிவு… ஐயாவும் அம்மாவும் இல்லை என்பதையே மறந்து போக வைக்கும் பரிவு… இதற்க்கு….. இதற்கு விலையாக எதைத் தருவது?’ 

“உன் ரை மனசே மாஞ்சு போற மாதிரி அந்தப் பெட்டேற்றை அப்படி என்னடா இருக்கு?” 

அக்காவின் கேள்விக்கு இவனால் எதைப் பதிலாகத் தரமுடியும். அவன் மௌனியாகி நின்றான். 

அவனது மௌனத்தை அக்கா கலைக்க விரும்பவில்லை. அங்கிருந்து விலகி, அவள் அடுக்களைப் பக்கம் போனாள். அது, அவனுக்கு ஆறுதலாய் இருந்தது. 

இவன் மீண்டும் ஜன்னல் திரையை நீக்கி, வீதியைப் பார்த்தான். உயிர்ப் பொட்டாக, தூர அவள் அசைந்து போய்க் கொண்டிருந்தாள். இவனது மனசு மிகவும் லேசாகி, சுலபமாக அவளைத் தொடர்ந்து போய், மிரு சொந்தமுடன் ஒருதரம் தொட்டுப் பார்த்து வந்தது. 

எதையுமே மறந்து, அவளின் அந்தப் பெண்ணின் நினைவுகளில் மட்டுமே பரவசம் கொண்டவன்; ஏனோ, அப்பொழுது அவனது அக்காவையும் நினைவு கொண்டான். 

‘அக்காவுக்கு முப்பது வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. அவளுக்குத் திருமணமே ஆகாதோ’ 

அவனுக்குப் பயமாக இருந்தது. அவனது மனசும் உடலும் லேசாக நடுக்கம் கொண்டன. 

‘எத்தனை ஆசைகளை அக்காவின் இந்த மனசு சுமந்து திரிகிறதோ? திருவிளக்குப் பூசையா? துளசி ஆராதனையா… துர்க்கா தரிசனமா? புதுப்பட்டுத் தந்து, பொன்தாலி தந்து, எத்தனை தரம் அக்கா அம்மனுக்குச் சாந்தி செய்து, திருக்கல்யாணம் செய்து வைத்திருக்கின்றாள். இந்தப் பாடெல்லாம் படும் அவளுக்கு… அவளுக்கேன் இன்னும் கழுத்தில் ஒரு பொற்சரடுதானும் ஏறமாட்டேன் என்கிறது.’ 

‘ஒரு பெண்ணின் இயல்பான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் கூட இப்படித் தீய்ந்து போவதென்றால்! திடீரென மனசு வெறுமை கொண்டு பரிதவித்தது. 

“என்ன முகம் கழுவியாச்சா? வாவன் சாப்பிட?” அக்காதான் அடுப்படியில் இருந்தபடி அவனை அழைத்தாள். கிணற்றடி வரை சென்று முகம் கழுவி வந்தவனுக்கு, அக்கா சுடச்சுட தோசை சுட்டுத் தந்தாள். 

“பெட்டை இரத்தினத்தாற்றை மூண்டாவது… நல்ல வடிவு.. தமக்கை ரெண்டும் முடிக்காமல் இருக்குதுகள். இந்தப் பக்கத்திலைதான் ஏதோ நேஸரியிலை படிப்பிக்குதாம். கோயிலிலை அடிக்கடி காணுறனான். அதுசரி.. இந்தக் கள்ளமெல்லாம் எப்பையிருந்தடா? பெட்டைக்கும் உன்னிலை சரியான விருப்பம் போலை..” 

“விருப்பமா… என்னிலா?” 

“என்ன, என்னடா… என்ன நடந்து போச்சு இப்ப… கண் கலங்குது. சீ…ஆம்பிளை அழலாமே!” 

“அக்கா, உனக்கு… உனக்கு எதுவுமே ஆகாமல் எனக்கு… எனக்கென்ன அவசரம் இப்ப” 

“எனக்கா? இனியுமா… எதுவும் நடக்குமா? இந்த ஜென்மத்திலை எனக்கு எதுவுமே இல்லை. நான் அநுக்கிரகம் பெறாமலே தண்டிக்கப்பட்டவள். அது என்ரை தலைவிதி…” 

“விதியா… இது விதியா?” அவன் வரட்சியாகச் சிரித்தான். 

அக்கா தனது இழப்புகளை எல்லாம் விதியின் மேல் பாரம் போடுவதையும், அதற்கு ஏதோ பாடம் ஒப்பிப்பது போலச் செயற்கையாக விளக்கம் தருவதையும் அவனது மனசு ஏற்க மறுத்தது. 

மனித உறவுகள் மலினப் பட்டு, ஜீவிதமே அவலமுறுவதும் பரிதவிப்பதும் இவனுக்கு மிகுந்த துக்கத்தைத் தந்தது. 

அவன் அக்காவை ஆதரவாகப் பார்த்தான். அவளது கண்களில் படிந்திருந்த கடுந்துயரை அவனால் தாள முடியவில்லை. 

மௌனமாக அடுக்களையை விட்டு வெளியே வந்தவன், தனது அறையை அடைந்து, முடங்கிக் கொண்டான். 

அவனுக்கு அவள், அவனது மனோவின் நினைவுகளும்…. அக்காவின் நினைவுகளுமே மீண்டும் மீண்டும் தோற்றம் கொண்டன. மனசு சலிப்புற்று, சோர்வு கொள்ள, இவன் ஆழ்ந்த உறக்கம் கொண்டான். 

விழிப்புக் கண்ட பொழுது, மழை விடாமல் தூறிக் கொண்டிருப்பதைக் கவனம் கொண்டான். வானம் இருண்டு கிடந்தது. “மூடம் அகன்று வெளிப்பு – சிறிது வெளிச்சம் வருமா?’ என இவனது மனசு அடித்துக் கொண்டது. 

கட்டிலில் புரண்டு படுத்தவன் காலையில் மனசு கொண்ட பரவசம் விலகி, துக்கம் அவனுடனேயே தேங்கி விட்டதாகவே உணர்ந்தவனாகி, எழுந்து வெளியே பார்த்தான். 

பாடசாலை விட்டுப் பிள்ளைகள் போய்க் கொண்டிருந்தார்கள். குதூகலமாய்ச் செல்லும் சிறார்கள் கூட அவனது மனசை தொடாதது அவனுக்கு வியப்பாக இருந்தது. 

கிணற்றடிவரை சென்று முகம் கழுவி வந்தவனுக்கு, வெளியே சென்று வரவேண்டும் போலிருந்தது. மழை சற்று விட்டிருந்தது. கோயிலுக்குப் பின்புறமாக இருக்கும் வாசக சாலைவரை போனால் ஏதாவது பேப்பரைப் புரட்டலாம் என்ற எண்ணம் கொண்டவனாய், உடை மாற்றிக் கொண்டு, வெளியே நடந்தான். 

ஐஸ் பழம் விற்கும் அந்த அரைக் கால்சட்டை அணிந்த சிறுவன் – அப்பொழுதுதான் இவனைக் கடந்து போனான். 

அவனது சோகம் படர்ந்த கண்களைக் கண்டதும் இவனுக்கு அவனிடம் ஏதாவது தரவேண்டும் போலிருந்தது. ஒரு ஐஸ் பழம் வாங்கிக் கொண்டான். 

‘இந்தக் குத்தும் குளிரில் ஐஸ்பழம் எப்படி இருக்கும்! நாவும் பற்களும் கூச சிறுவனைப் பார்த்தான். சிறுவனின் கருமை போர்த்திய முகத்தில் படர்ந்த பரவசம் இவனையும் பற்றிக் கொண்டது. 

கோயில் மேற்கு வீதியில்தான் வாசகசாலை இருந்தது. மேற்கு வீதியின் முனையில் திரும்பியவன் ஒரு கணம் தன்னை மறந்து நின்றான். 

அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. தழையத் தழைய இளம் வாழைபோல வளர்ந்த அவள் – அவனுடைய மனோ, கையில் அர்ச்சனைப் பொருட்களை ஏந்திய வண்ணம், இவனுக்கு முன்பாக வந்து கொண்டிருந்தாள். 

‘இவளும்…..இவளும் அக்கா மாதிரி, துளசி பூசையென்றும், துர்க்கா தரிசனமென்றும் அம்மனையே தட்டாமாலை சுற்றுகிறாளோ?’ 

இவன் எப்பொழுதாவது அக்காவுக்குத் துணையாக சில சமயங்களில் தனித்தும் கோயிலுக்குப் போவதுண்டு. இன்று அக்காவுக்காக இல்லாமல் வளுக்காகக் கோயிலுக்குப் போகத்தீர்மானம் கொண்டான். 

உள்வீதியில், தென்மேல் மூலையில் விநாயகரை மெய் மறந்து வணங்கி நிற்கும் அவளை, இவன் மிக மிக நெருக்கமாக நின்று அவதானித்தான். முன் எப்பொழுதுமே இவ்வளவு நெருக்கத்தில் அவளைத் தொட்டுப் பேசுவது போல அவன் பார்த்ததில்லை. 

அவளது வட்ட முகம், கூர்த்த நாசி, வளைந்து படர்ந்த புருவங்கள், மேல் உதட்டோரபசியதடம், கழுத்தின் இடதுபுறக் கடுகுமச்சம், பிருஷ்டத்துடன் தழைந்து அசையும் கூந்தல், வதவத வளர்த்தி, அந்த உடம்பு, அதன் இறுக்கம், திண்மை எல்லாமே அவனுக்கு கவிதையாய் இருந்தது. 

வைத்த விழி மாற்றாத அவனது பார்வை தந்த சுகத்தில், இமைகள் படபடக்க விழிமலர்த்திய அவள், இவனையே ஒருமுறை பார்த்து நின்றாள். அவளது பார்வையின் பட்சத்தை இவனால் தாள முடியவில்லை. 

“ஏய்… ஏய்..” என்று ஏதோ சொல்லவந்தவனை விழிகளால் அதட்டி – “அம்மனைக் கும்பிடுங்கள்” என்றாள். 

கர்ப்பகிரகத்திற்கு முன்பாக வந்தவளைத் தொடர்ந்து வந்த இவன், “எந்த அம்மனை… இந்த அம்மனையா?” என்று அவளைப் பார்வையால் தொட்டளைந்தான். அவள் இடம் பெயர்ந்து முருகன் சந்நிதிக்கு முன்பாக வந்தபொழுது, இவனும் வந்தான். அவள் பிரகாரத்தை மும்முறை வலம்வந்த பொழுது, இவனும் வலம் வந்தான். 

அதைப் பார்த்ததும் அவளால் தாள முடியவில்லை. “இதென்ன… சேலைத்தலைப்பைப் பிடிச்சபடி” என்று மெலிதாக வினவியவள், விரைவாக அவனைக் கடந்து, சண்டேஸ்வரரை வணங்கி, நவக்கிரகங்களைச் சுற்றிவந்து, உற்சவமூர்த்தி எழுந்தருளியிருக்கும் வசந்த மண்டப வாசலை அடைந்து, அப்படியே சந்நிதியின் முன்பாக உட்கார்ந்து கொண்டாள். 

அவளுக்காக இவன் ஒதுங்கி, ஒருபுறமாகக் காத்து நின்றான். அவள் தன்னுணர்வடைந்து விழித்த பொழுது, அவன் வாகன சாலையை ஒட்டியிருந்த தனியிடத்தில் அவளுக்காகக் காத்திருந்தான். அவனைப் புரிந்து கொண்டு, அண்மித்த இவளை, அவன் கேட்டான்: 

“என்னை ஞாபகமிருக்கா?” 

“இல்லாமலா…. மனசோட கிடக்கிற முகமாச்சே! எனக்கு… எனக்கு உங்களைப் பூர்வத்திலேயே தெரியும். யுகம் யுகமாய் தொட்டுத் தொடரும் பந்தமிது.” 

“உனது சகோதரிகள் இருக்க…” 

“உங்களது சகோதரி” 

‘ஓம்…….சகோதரிகள்…. அவர்கள் திருமணங்கள்.’ 

“…..”

அவளது கண்கள் பனித்து விடுகின்றன. 

“என்ன இது…” 

“எனக்கு உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்”

“பார்வையே வாழ்க்கையாகி விடுமா? நீ கொஞ்சம் உணர்ச்சி வசப்படுகிறாய்” 

“இல்லை நீங்களும்தான். அதுசரி, என்னை இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்களேன்” 

“என்ன…?” 

அவள் முகத்தில் திடீரென செயற்கையான சோகம் படர்ந்த ஒரு பாவனை. உதட்டில் லேசாக வெடித்து நிற்கும் சிரிப்பை, சிரமப்பட்டு அடக்கியவளாய் சொன்னாள்: 

“இந்த ஜென்மத்தில் எனக்கு எதுவுமே இல்லை. பிரேமையின் முழு வசீகரத்தையும் இழந்து தாபப்படுதல் எனக்கு விதிச்ச விதியாய்..” “ஏய்… ஏய்..என்ன இது, அக்கா மாதிரி நீயும் தத்துப் பித்தென்று உளறுகிறாய்” 

அவள் சூழ்நிலையை மறந்தவளாய் கலகல எனச் சிரித்தபடி கேட்டாள்: 

“அக்கா மௌனி படிப்பாளா? விழுந்து விழுந்து படிப்பாள் போலியிருக்கு” 

“உனக்கு அக்காவை..” 

“நெருக்கமாய் தெரியும்…. அது சரி உங்க புக் ஷெல்ஃப்பிலை மௌனி ரைட்டிங்ஸ் இருக்கா…? அவ மௌனி எழுதின எல்லாத்தையும் அசட்டுத்தனமா வாழ்க்கையா நினைக்கிறாபோல… இந்த வாழ்வு, இதன் அவலம் எல்லாத்துக்குமே விதியை சுலபமா இழுத்துப் போட்டுத் தப்பிக் கொள்ளிறது எனக்கு பிடிக்கேல்லை” 

அவளைப் பார்த்து சற்றுப் பெருமிதத்துடன் இவன் சொன்னான்: 

“இந்தப் பெட்டைக்கு அழகு மட்டுமில்லை.. கொஞ்சம் வயசுக்கு மீறின பேச்சும் புத்தியும் கூட இருக்கு.” 

“பத்தொன்பது முடியப்போகுது.. இன்னும் ரீனேஜ் பொம்மையா நான் இருக்கேலுமா…” 

முறுவலித்து, நாணத்தில் குழம்பியவளின் கரங்களை அவன் தனது கைகளில் ஏந்தி, மெலிதாக ஸ்பரிசித்தான். 

‘இவளுக்காக…..இந்தக் காதலுக்காக.. இந்தச் சுகத்துக்காக எதையுமே விலையாகத் தரலாமே’ அவனுக்கு காலையிலிருந்த குதூகலம் மீண்டும் தொற்றிக் கொண்டது. 

அக்காவுக்கு எப்படியும் ஏதோ நடக்கும் என்ற நம்பிக்கை துளிர்க்க அவன் அவளைப் பார்த்து: 

‘மனோ ஏதென் பேசனம்மா’ என்றான். 

“எதை… என்னதை?” அவள் உதடுகள் துடித்தன. துடித்த உதடுகளில் இவனது கரங்கள் வாஞ்சையுடன் வருடின. 

‘இது… கோயில் ‘ 

‘தெரியும்’ – அவன் சிரித்தபடி. கூறினான். 

அவனது நெருக்கத்திலிருந்து சற்று விலகியவள், அடுத்த கணமே நிதானமடைந்தவளாய் அவனது கரங்களைப் பற்றி “ரகு வாருங்கள் அம்மனுக்கு அர்ச்சனை முடிஞ்சதும் நீங்க போகலாம்” 

அவள் துணிவாக அவனை அழைத்தது அவனுக்கு மிகவும் பிடித்தமாய் இருந்தது. 

அர்ச்சனை ஆனதும் பிரசாதத்தை இவனிடம் தந்து “அக்காவிடம் கொடுங்கள்” என்றாள். 

பிரசாதத்தை வாங்கியவன், அதில் ஒரு துளி குங்குமத்தை சுட்டு விரலில் எடுத்து, அவளது நெற்றியில் இட்டான். 

குங்குமம் உதிர்ந்து, அவளது மூக்கில் சிறிது சிந்தியது. அதனை அவன் மெலிதாக துடைத்த பொழுது அவள் உணர்ச்சி வசப்பட்டவளாய் அவனது கரங்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். 

இருவரும் கோபுர வாசல் வழியாக வெளியே வந்தபொழுது மழை முற்றாக விட்டிருந்தது. மேல் வானத்தில் சிறிது வெளிச்சம் பொட்டாகத் தெரிந்தது. 

– மல்லிகை, 1982.

– புதியவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2006, பொன்னி வெளியீடு, சென்னை.

க.சட்டநாதன் க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார். இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் 'வீரகேசரி' இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *