தம்பி உடையாள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 191 
 
 

கூட்டமில்லா பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தாள் சந்தியா, சீறி அடிக்கும் காற்றை ரசித்தபடி இருக்கையில் சாய்ந்தபடி இருந்தாள்.

இன்று காலை, அலுவலகத்தில் மீனா பேசியது, மனதில் ஒலித்தது. 

எவ்வளவு நாள் இப்படியே இருக்கப்போற சந்தியா? உன் தம்பியும் நல்ல வேலையில் சேர்ந்துட்டான், தங்கை மேகாவும் டிகிரி முடிச்சிட்டா, அப்புறம் என்ன?

நீ சொல்ல வரது எனக்கு புரியுது மீனா! அப்பா இறந்ததால அந்த வேலை எனக்கு கிடைச்சது. அப்பாவோட கடமையைத்தான் செய்தேன். இனி எனக்கு கல்யாணம் அப்படின்னா அதை தம்பி பார்த்துப்பான்.

உனக்கு இந்த உலகம் புரியல சந்தியா, ஆறு வருஷத்துக்கு முந்தி மோகன் உன்னை எவ்வளவு காம்ப்ரமைஸ் பண்ணார் கல்யாணம் பண்ணிக்கலாம்னு. உனக்கும் விருப்பம் தான் ஆனா நீ  உன் குடும்பத்துக்காக பிடி கொடுக்கல. கடைசி யில மோகன் வேற பிராஞ்சுக்கு மாற்றல் வாங்கிப் போனதுதான் மிச்சம்.

ஏண்டி இப்ப என்ன ஆகிப்போச்சின்னு பழைய தெல்லாம் ஞாபகப்படுத்தி பேசிக்கிட்டிருக்க.

என்ன ஆகிப்போச்சா? உனக்கு வயசாகிட்டுப் போச்சுன்னு சொல்றேன், அதைச் சொன்னா தம்பி பாத்துப்பான்ற, ஆனா நீ வேணா பாரு ஒருநாள் இல்ல ஒருநாள் இந்த பொண்ணை எனக்கு  பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணி வை அப்படின்னு வந்து நிக்க போறான் உன் தம்பி. அப்பதான் உனக்கு இந்த உலகமும், உறவும் புரியும்.

தான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கிக்கொண்டாள் சந்தியா. வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள். மனதில் மீனாவின் பேச்சுகளே மீண்டும்,  மீண்டும் வந்து மோதின.

சே, சே என் தம்பி தினகர் அப்படி ப்பட்டவன் இல்லை. என் வாழ்க்கை பற்றிய கவலையில், அக்கறையில்  மீனா படபடக்கிறாள்.

வீட்டை நெருங்கிவிட்டிருந்தாள். வீட்டின் அருகில் கார்  நின்றுகொண்டிருந்தது. யார் வந்திருப்பார்கள், யோசித்தவாறே உள்ளே நுழைந்தவளின் கைகளைப்பற்றி கதவு கேட்டின் பின்பு நகர்த்தினான் தினகர்.

அக்கா, ஒரு நிமிசம் க்கா, உன்கிட்ட கேக்காம ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டேன், என்னை மன்னிச்சுடுக்கா, என்றதும் மிகவும்  படபடத்துப்போனாள் சந்தியா.

தினகர் என்ன சொல்லவருகிறான்? மீனா சொன்னது போலாகிவிடுமா, அவளுக்குள் வியர்த்தது, “டேய், நீ ஏண்டா அவளை வழிமறிக்கற, சந்தியா உள்ள போய் பாரு” என்றாள் அம்மா.

அப்பா இறந்தபிறகு அம்மாவின் முகத்தில் அளவுக்கதிகமான மகிழ்ச்சியை இப்போதுதான் பார்க்கிறாள், எல்லாமே விசித்திரமாக இருந்தது.

வீட்டினுள் நுழைந்தாள். அங்கே ஹால் சோபாவில் அமர்ந்தபடி மோகன், அதே வசீகரத்துடன், அவளைப்பார்த்து முறுவலுடன், “என்ன, இப்பவாவது கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றதும், ஆனந்தமும், அதிர்ச்சியும் ஒருசேரப் பெருகியதால் ஏற்பட்ட கண்ணீர் கன்னங்களில் வழிய இருகரம் கூப்பி நின்றாள்.

இங்கு கண்ணீரும் சம்மதம். தம்பி உடையாள் வாழ்க்கைக்கு அஞ்சாள். புதுமொழி ஒன்று மனதில் உதயமாக, பெருமிதத்துடன் தம்பியை நோக்கினாள் சந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *