ஜே.ஜனனி D/O கே.ஜகதீசன்

“ரிசப்ஷனுக்கு மணப்பொண்ணும் மாப்பிள்ளையும் தயாராகி நாற்காலில உக்காந்திட்டாங்க நாம நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா, நீதான் முதல்ல கடவுள் வாழ்த்துப்பாடல் பாடணும்,ரெடியா, ஜனனி?”
‘மாலைத்தென்றல்’ மெல்லிசைக்குழுவின் இசைஅமைப்பாளர் ரங்கப்ரசாத் இப்படிக்கேட்கவும், ‘ஒரு நிமிஷம்!’ என மைக்கின் முன்பாக விரல்களை மூடியபடி சன்னமான குரலில் சொன்ன ஜனனி,மேடை ஓரமாய் நகர்ந்தாள்.
அங்கிருந்த தன் கைப்பையிலிருந்து தண்ணீர்நிரம்பிய கண்ணாடிபாட்டிலை எடுத்தாள். மூடியைத்திறந்து கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு திரும்பினாள்.”ம்ம், ரெடி ஸார்!”என்றாள்.
கீபோர்டில் விரல்களைப் பதித்துக் கொண்டிருந்த ஆகாஷ்,
“உன் பேரை ‘ஜனனி ‘என்பதற்குபதிலா ‘ஜலம்நீ’ அப்படீன்னு வச்சிருக்கலாம். எப்போ பார்த்தாலும் வாட்டர் பாட்டிலும் கையுமாவே இருக்கிறே! அதுவும் ப்ளாஸ்டிக் பாட்டில்னா சுடுநீர்ல வாசம் வந்திடும்னு கவனமா கண்ணாடி பாட்டிலை கனத்தாலும் கைப்பைல தூக்கிட்டு அலைகிறே!” என்றான்.
ஆகாஷ், ஜனனியைப்போல சென்னையில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் ‘மாலை தென்றல்’ என்னும் மெல்லிசைக்குழுவின் ஒரு பாடகன், இருபத்தி நாலுவயது இளைஞன்.ஜனனியை கூடப்பிறந்த தங்கையாய் பாவித்து உரிமையாய் கிண்டல் செய்வான்.
உரிமையாளரும் இசை அமைப்பாளருமான ரங்கப்ரசாத், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், சி லமெகா தொடர்களுக்கும் இசை அமைப்பவர். அவரது குழுவிலிருந்து பல இசைக்குயில்கள் திரைப்படத்திற்கு பறந்துவிட்டன. இன்னும் சில நாட்களில் ஜனனிக்கும் அந்த வாய்ப்பு வரப் போகிறதென்பதை ரங்கப்ரசாத் யூகித்து விட்டார். ஆனால் ஜனனிதான் ‘முதல்ல இந்த ப்ளஸ் டூ படிப்பு முடியட்டும் ஸார்’ என்பாள். 16வயது இன்னிசைக்குயில் ஜனனி.
ஜனனிக்கு நல்ல குரல்வளம். பாட்டுக்கற்றுக் கொள்ள வசதி இல்லாத சூழ்நிலையில் சின்ன வயதிலிருந்தே காதால் கேட்டே இசைஞானத்தை வளர்த்துக் கொண்டு தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்டவள்.
ஜனனிக்கு அப்பா ஜகதீசன் தான் எல்லாம்.
அப்பாவும் பெண்ணுமாக சென்னை புறநகர்ப்பகுதியொன்றில் சிறிய வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். ஜகதீசனுக்கு பகல்நேரக் காவல்பணி. வாட்ச்மேன் உத்தியோகம்.
“ஜனனி! வாஸ்தவத்துல இந்தக்காலத்துல உன்னை மாதிரிப்பெண்கள் ரொம்ப அபூர்வம்.நாகரீகமோகத்துல கண்டபடி அலங்காரம் செஞ்சிக்காம பாவாடை தாவணி பூ பொட்டுனு வலம் வரும் இளம் பெண் நீதான்மா. படிப்புபாட்டு குடும்பம்ன்னு அடக்கமா அழகா அதேசமயம் அனாவசிய அச்சமும் இல்லாமல் உன்னைமாதிரி இருக்கிற பெண்களைப்பாக்றதே நிறைவா இருக்கு.நிஜம்மா பாரதி சொன்ன புதுமைப்பெண் நீதான்!”என்று நெகிழ்ச்சியான குரலில் சொன்னார்
“என்னைப் புகழறதுல நீங்க வள்ளல்தான்! சரி ஸார்!நாம ஆரம்பிச்சிடலாம்.. ஆங்..அப்றோம் ஸார்…சரியா ஒன்பதுமணிக்கு நம்ம நிகழ்ச்சி முடிஞ்சிடும் இல்லையா?”
“முடிஞ்சாலும் முடியலென்னாலும் உன்னை டையத்துக்கு வீட்டுக்கு அனுப்பிடுவேன் ஜனனி”
கல்யாண மண்டபத்தில் அனைவரும் மாலைத்தென்றல் குழுவின் நிகழ்ச்சியைக் காணவும் கேட்கவும் தயாராகினர்.
மைக் அருகில் வந்து நின்ற ஜனனி,”ஜனனீ ஜனனீ ஜகம் நீ அகம் நீ” என்றுபாட ஆரம்பித்தாள்
ஜனனி பாடிக்கொண்டிருக்கட்டும், நாம் இப்போது அவள் அப்பா ஜகதீசனைத் தொடர்வோம்
“ஐயா! இதான் மீராம்பிகா அபாட்மென்ட்ஸ்! இங்கதான் உங்களுக்கு இன்னிக்கு நைட் ட்யூட்டி.”செக்யூரிடி ஆபீசர் அந்த மூன்றுமாடிகள்கொண்ட கட்டிடத்தினுள்ளே ஜகதீசனோடு நுழையும்போதே சொல்லிக் கொண்டு வந்தார்.
அறுபதை வயதை நெருங்கும் தன்னிடம் மரியாதையாகப் பேசிய அந்த இளைஞனைப் பார்த்து கண்பனித்தார் ஜகதீசன்.
பொதுவாக “வாட்ச்மேன்! ஏய் கூர்க்கா!” இப்படித்தான் யூனிஃபார்மிலிருக்கும் போது தன்னைப் பலர் அழைக்கக் கேட்டிருக்கிறார் ஜகதீசன்.
“இங்க நைட் வாட்ச்மேனா ஒருவாரமா குமரவேல்னு ஒருத்தர்தான் பாத்திட்டு இருந்தாரு. குமரவேலின் அம்மா சடனா இறந்துட்டாங்கன்னு ஊருக்குப் போயிட்டதினால் வேற யாரும் தற்சமயம் இல்லாததால உங்களை இன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும் நைட்வாட்ச்மேன் பணிக்கு நியமிச்சிருக்கேன். பொதுவா நீங்க அதிகம் நைட்ல வேலை செய்யறதில்லனு தெரியும் பட் இப்போ உங்களைவிட்டா யாரும் சரியா இல்லை,அதான். ஏற்கனவே இதெல்லாம் உங்களுக்கு சொல்லி இருந்தாலும் நீங்களும் சரின்னு ‘அக்சப்ட்’ பண்ணிக்கிட்டதுக்கு தாங்க்ஸ் ஐயா! வாங்க, அபார்ட்மெண்ட்ல நாலு பேர்கிட்ட உங்களை அறிமுகப்படுத்திட்டு நான் கிளம்பறேன்”
“ம்”என்று தலையாட்டியபடி ஜகதீசன் கால்கள் நடந்தாலும் மனசு அதட்டலாய்கேட்டது.
‘நீ இப்படி காசு அதிகம் கிடைக்கும்னு நைட் வாட்ச்மேன் வேலைக்கு வந்திருப்பது உன் மகள் ஜனனிக்குத் தெரிஞ்சா துடிச்சி போயிடுவாளே. அவகிட்ட பழைய நண்பன் கார் விபத்தாகி ஆஸ்பித்திரில கிடக்கிறதாகவும் அவன் குடும்பத்துக்கு உதவியாக ஒரு ராத்திரி அவனை சேர்த்திருக்கிற ஆஸ்பித்திரில தங்கிட்டு விடிந்ததும் வருவதாகவும் திட்டம் போட்டு மதியமே பொய் சொல்லி இருக்கே! இத்தனை நாளாய் நீ கடைப் பிடிச்சிட்டு இருந்த உன் சத்தியம் தர்மம் நேர்மை எல்லாம் இப்போ காத்துல பறந்திடிச்சா ஜகதீசா?’
செக்யூரிடி ஆபீசர் அந்த பன்னிரண்டு குடி இருப்புகள் இருந்த மீராம்பிகா ஃப்ளாட்டில் ஏழெட்டுவீடுகளின் கதவைத்தட்டி அவர்களிடம்ஜகதீசனை அறிமுகப்படுத்திவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.
ஜகதீசன் காம்பவுண்ட் கேட்டை அடைத்து விட்டு அங்கே கூடைவடிவிலிருந்தபிரம்பு நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.
கைகடிகாரத்தில் மணிபார்த்தார். ஒன்பதரைஆகியிருந்தது.
‘இந்நேரம் கச்சேரிமுடிஞ்சி ஜனனி கார்ல கிளம்பி இருப்பா… ரங்கப்ரசாத், நல்ல மனுஷர். ஜனனியை பெத்த மகளா கவனிச்சி அவ வளர்ச்சில அக்கறை காட்டுறார்.’
‘பாம்பாம்’
கார் ஹார்ன் அலறவும் ஓடிப்போய் கேட்டை அகலத்திறந்தார் ஜகதீசன். காரை நோக்கி விறைப்பாய் சல்யூட் அடித்தார்.
காரின் பின்கதவைத்திறந்து இறங்கிய ஒரு வயதான மனிதர்,”யாருப்பா புது வாட்ச்மேனா? நைட் வாட்ச்மேன் குமரவேல் லீவுலபோயாச்சா என்ன?”எனக்கேட்டார்.
“ஆமாங்க இன்னிக்கு மட்டும் என்னைப்போட்டுருக்காங்க.”
“அப்படியா? தூங்கிடாம வண்டிங்களையும் பாத்துக்கப்பா..வரவர இந்த ஏரியால ரொம்ப திருட்டுபயமா இருக்கு”
“சரிங்கய்யா பாத்துக்கறேன்”என்ற ஜகதீசன் முகத்திற்கு குரங்குக் குல்லாயைப் போட்டுக் கொண்டார்..குளிர்க்காற்று ஒத்துக் கொள்வதில்லை. ஆஸ்துமா தொல்லையும் உண்டு.
அபார்மெண்டின் கார்கள் பல வந்துகொண்டிருந்தன. பத்தரை மணிக்கு வந்த காரிலிருந்து இறங்கிய ஒரு நடுத்தர வயது பெண்மணி ஜகதீசனை பார்த்து,”என்கிட்ட போன்ல செக்யூரிடி ஆபீசர் சொன்ன புது வாட்ச்மேன் ஜகதீசன் நீங்கதானா?” எனக்கேட்டாள்.
ஜக்தீசன் பணிவாய் தலை அசைத்தார்.
அவள் தொடர்ந்து,
“நான் இந்த ஃப்ளாட்ஸ்ல செகண்ட் ஃப்ளோர்ல இருக்கேன். மூணு ஃப்ளோர்ல மொத்தம் பன்னிரண்டு வீடுகள்னாலும் மேல் மாடில இப்போ யாருமே இல்ல. காரணம் அங்கே ஒரு ஃப்ளாட்டை செல்வராஜ்னு ஒரு அரசியல் செல்வாக்கு உள்ள ஆளு சொந்தமாக்கிட்டு அக்கிரமம் பண்ணிட்டு இருக்கான். தட்டிக்கேட்க ஆள் இல்ல.போலீஸ் மந்திரிங்கன்னு. எல்லாரையும் கைல போட்டு வச்சிருக்கான் அவன் அட்டூழியம் தாங்க முடியாம மூணாவது ஃப்ளோருக்கு யாருமே குடிவர்ரதில்ல வந்தாலும் நிலச்சி நிக்கறதில்ல. எதுக்கு சொல்றேன்னா அந்த ராஸ்கல் நடு நிசில இங்க என்னிக்கு வேணாலும் வருவான் முழு போதைல இருப்பான். பல நேரம் அருகாமைல பொண்ணுங்க யாருடனாவதும் வந்திடுவான், நீங்க புதுசு அவன் கிட்ட பாத்து நடந்துகுங்க அதான் எச்சரிக்கலாம்னு சொன்னேன்”என்று அலுப்பும் வெறுப்புமாக சொல்லிவிட்டு காரை பார்க்கிங் ஸ்லாட்டில் நிறுத்திவிட்டு நகர்ந்தாள்.
“நன்றிம்மா..சரிங்கம்மா”
அவளுக்கு சல்யூட் அடித்துவிட்டு காம்பவுண்ட்கேட்டை மறுபடிசாத்திவிட்டு தன் இருப்பிடத்தில்வந்து அமர்ந்துகொண்டார் ஜகதீசன்.
ஜகதீசனுக்கு தூக்கம்வரும்போலிருந்தது. ஜனனி பாட்டு நிகழ்ச்சி முடித்து வந்துதூங்கி இருப்பாள். சிறு ஓட்டுவீடு என்றாலும் பாதுகாப்பானபகுதியில் இருப்பதால் மகளைத் தனியே விடுவதில் ஜகதீசனுக்குக் கவலை இல்லை.
செல்போன் ஒன்று தன்கையில் இருந்தால் இந்நேரம் மகளோடு பேசி இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்.. ஜனனி சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் செல்போன் என்ன. ப்ரிட்ஜ் க்ரைண்டர் கூட வாங்கிப்போடமுடியும்.
மணி பதினொன்று முப்பது.
அபார்ட்மெண்டின் எல்லாவீடுகளிலும் ஒவ்வொருவிளக்குகளாய் நிறுத்தப்பட்டன. செக்யூரிடி சொன்ன இடத்தில் கார்பார்க்கிங்பகுதியிலே ஒரு ஓரமாய் அங்கிருந்த சிமெண்ட் திண்ணையில் உட்கார்ந்து கொண்டார் ஜகதீசன்.
சட்டென மின்சாரம் பறிபோனது.
கும்மிருட்டில் அப்படியே உட்கார்ந்தவர் பிறகு தூக்கம்க ண்களை அழுத்தவும் சுவரோடு தலையை சாய்த்தார்.
அப்போது வாசலில் கார் ஹார்ன் நாராசமாய் கேட்டது.
ஜக்தீசன் தூக்கிவாரிப் போட்டவராய் இருட்டில் தட்டுத் தடுமாறி நடந்து பின் ஓடிப்போய் கதவைத் திறந்தார்
பாம்பாம்! பாம்பாம்! ஹார்ன் சத்தம் காதைப்பிளந்தது.
கார் ஜன்னல்கண்ணாடியைதிறந்துகொண்டு தலையை நீட்டிய உருவம்,”ஏய் அறிவிருக்கா உனக்கு? ஒருவாட்டி ஹார்ன் அடிச்சா ஓடி வரவேணாம்?”என்று அதட்டியது.
ஜகதீசன் ஓடிவந்து காம்பவுண்ட் கேட்டினை இருபுறமும் அகலத் திறந்து விட்டான்.
‘தட்’டென ஓசைப்படுத்தியபடி உள்ளே காரைக் கொண்டு வந்து ஒரு பக்கமாய் நிறுத்தியவன், ஜகதீசனிடம் “எப்போ கரெண்ட் போச்சி? நான்சென்ஸ்! இந்த ஃப்ளாட்ல ஒருத்தருக்கும் பொறுப்பில்ல பவர் இல்லேன்னா ஜெனரேட்டர் என்ன ஆச்சு அதுவும் ரிப்பேரா?:” என்று சீறினான்.
பிறகு பின் கதவைத்திறந்து, கைகளை கூப்பிய நிலையில், “நீ இறங்கு ஏஞ்சல்!” என்று கெ(கொ)ஞ்சினான்.
ஜகதீசனுக்கு காரினின்றும் யாரோ ஒரு பெண் இறங்குவது அரைகுறை இருட்டில் லேசாய் தெரிந்தது. ஆனால் முதலில் இறங்கி அதட்டிய ஆண் உருவம், அந்தப் பெண்மணி எச்சரித்த செல்வராஜ் தான் என்று புரிந்து போனது.
மீண்டும் மின்சாரம் மீளவும், லிஃப்ட் நோக்கி நடந்த அவர்களை கவனித்த ஜகதீசன் திடுக்கிட்டார். அவர்பார்வை செல்வராஜுடன் நடந்தஅந்தப்பெண்ணின் பின்புறமாய் தொங்கிய அந்தக் கைப்பையிலும் அதில் தலை நீட்டிக்கொண்டு தெரிந்த அந்த நீள் செவ்வக கண்ணாடிபாட்டிலின் மீதும் பதிந்து குத்திட்டது.
அரைக்கணத்தில் அவர்கள் லிஃப்டில் ஏறிவிட ஜகதீசனின் வாய் அரற்றியது.
“ஜ..ஜ ஜனனீ?”
ஐயோ ஜனனீ நீயா?
ஜனனி ஜனனி இவன்கூட வருவது நீயா?
இப்ப நான் என்ன செய்வேன்?
ஜகதீசன் செய்வதறியாது திகைப்பிலும் வேதனையிலும் ஒரு நிமிடம் அப்படியே நின்றார். பிறகு,
லிஃப்டில் ஏறி மூன்றாவது மாடியில் இறங்கி செல்வராஜின் ஃப்ளாட் வாசலுக்கு வந்து காலிங்பெல்லை அழுத்தினார்.திறந்த செல்வராஜ் விழிகள் சிவக்க சீறினான.
“ஏய் ஓல்ட் பிட்ச்! எதுக்கு பெல் அடிச்சே? டிஸ்டர்ப் பண்ணாமா ஒழுங்கா போயிடு இந்த ஃப்ளாட்லயே என்னை யாரும் கண்டுக்க மாட்டாங்க பழைய வாட்ச்மேனுங்கள்லாம் காசை வீசினா, பல்லை இளிச்சிட்டுப் போய்டுவானுங்க உனக்கு இப்ப எத்தினி வேணூம்?”
“அ..அ.. அந்தப் பொண்ணூ?”
“ஆமா இன்னிக்கு ராத்திரிக்கு என் கூட தங்கிப்போக வந்திருக்கா….பட்சி கிடைக்கவே பலமாசம் ஆகி இப்பத்தான் என் வலைல விழுந்திருக்குது இந்த நேரம் பாத்து நீ தொல்லை செய்யாதே போய்த் தொலை”பட்டென கதவை ஓங்கி சாத்தினான்.
ஐயோ ஐயோ!
முகத்திலடித்துக் கொண்டு கீழேவந்தார் ஜகதீசன்.
யாருகிட்ட சொல்றது? எங்கே போறது? போலீசில் சொல்லலாம்ன்னா அவன் எல்லாரையும் கையில் போட்டுட்டு இருக்கறதா அந்த பெண்மணி சொன்னாங்களே? அதை மீறி நான் ஏதும் செய்ய என்மகளை அவன் பழிவாங்கிட்டா..? ஐயோ தெய்வமே!
ஜனனீ உன்னை புத்திசாலிப்பொண்ணுனு நினச்சேனேம்மா நீயும் சராசரிப் பொண்ணா இப்போ சீரழிஞ்சி வரப்போறியாம்மா? ஜனனீ..ஜனனீ.. ஜனனீ…
பிதற்றியபடியே நெஞ்சைப்பிடித்துக்கொண்டு அப்படியே கீழே சாய்ந்துவிட்டார் ஜகதீசன்.
எவ்வளவு நேரம் ஆயிற்றோ..அப்படியேக்கிடந்தவரின் உடம்பை யாரோ உலுக்கித் தட்டுவது போலிருக்கவும் மெல்லக் கண்விழித்தார்.
எதிரே ஜனனீ நின்றுகொண்டிருந்தாள்.
“அப்பா! அப்பா! எப்படிப்பா இருக்கீங்க? நீங்க எப்படி இங்க வந்தீங்க..ஆஸ்பித்திரிக்குப் போகலயா, அப்பா..அதிர்ச்சில உங்களுக்கு ஒண்ணும் ஆகலியே?”
கலங்கியகுரலில் மென்மையாய் கேட்டவளை வேதனையுடன் பார்த்த ஜகதீசன், “ஜனனீ! ஜனனீ நீயா..? நீ அந்த அயோக்கியனோட. போறதைக் கண்ணால பார்த்தேன்” என்று தலையிலடித்துக்கொண்டார்.
அதற்கு மேல் பேச முடியாதவராய் அப்படியே அதிர்ந்து போயிருந்தார்.
“சொல்றேன்பா….ஆறுமாசமா இந்த செல்வராஜ் என்னை பள்ளிக்கூடம் போறபோதும் ம்யூசிக் ப்ரொக்ராம் நடக்கிற இடங்களுக்கும் பின் தொடர்ந்து வந்திட்டு இருந்தான்…. அரசியல் செல்வாக்கு நிறைய இருக்கற ஒரு பிரபலத்தின் மகன் இவன்னு தெரிஞ்சுது. பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்தவன்னும் தெரிஞ்சிட்டேன்.இவனை நான் காதலிக்கலைன்னா இவன் கூட நான் ஒரு ராத்திரியாவது கூட இருக்கலேன்னா ஹைதராபாதல சில வருஷம் முன்னாடி ஒரு காலேஜ் பொண்ணு மேல, ஒரு பையன் தன்னிடம் அவள் ஐலவ் யூ சொல்லாததினால ஆசிட்கொட்டி பழி தீர்த்துக்கிட்ட மாதிரி, என்னையும் முகத்தில் அமிலத்தை கண் கொட்டி அழிச்சிடுவானாம். இதை அன்னிக்கு ஒரு நாள் பஸ்ஸ்டாண்டுல நிக்கறப்போ என் காதுபடவே தெலுங்குல அவன் ஃப்ரண்டுக்கு போன்ல சொல்லிட்டு இருந்தான். அப்பவே நான் ஒரு முடிவெடுத்துட்டேன்.
இன்னிக்கு ப்ரோக்ராம் முடிச்சி ரங்கப்ரசாத்சார் ஏற்பாடு செய்து அனுப்பிய கார்ல வீடுவந்து வாசல்பூட்டை திறக்கிற பொழுதுல சட்டுனு எதிர்ல வந்திட்டான்.அவன் திட்டம் புரிஞ்சிது.
“சரி வரேன். ஒரு நிமிஷம் ட்ரஸ் மாத்திட்டுவரேன்”ன்னு நான் சொல்லிட்டு உள்ளே போயிட்டு திரும்ப வந்து அவனோட கார்ல ஏறினேன்.
இங்கே காம்பவுண்ட் கேட்டை நீங்க திறக்கிறதைபோதே இருட்டுல காருக்குள் உக்காந்திருந்த எனக்கு காரோட ஹெட்லைட், அது நீங்கதான்னு வெளிச்சம் போட்டுக்காட்டினது.
நண்பனைப் பார்க்க ஆஸ்பித்திரிக்கு போறதா சொன்ன அப்பாவுக்கு இங்கே என்ன வேலைன்னு மனசு குழம்பினேன்.
கொஞ்சம் அதிர்ச்சியாயும் திகைப்பாயும் இருந்தாலும் அடக்கிட்டு, பவர் கட் காரணமாய் நீங்க என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லைன்னு நினச்சேன். ஆனா மேல போனதும், நடுவில ஃப்ளாட் கதவை தட்டியது நீங்கதான்னு உள்ள இருந்த என்னால உணர முடிஞ்சிது.அப்ப நான் உங்க கிட்ட பேசற நிலைமையில் இல்ல.
அவன் எதிரில் என் பதட்டத்தை வெளில காண்பிக்காமல் அவனை சாகசமாய் ஏமாத்த நினச்சேன். நல்ல குடிபோதையை அவனே ஏத்திக்கிட்டான். அப்பத்தான் அவன், “உன் பாட்டைக் கேக்கணும் முதல்ல.. என் மெய்மறக்க உன் தேன்குரல்ல பாடு..எவ்வளவு நேரமானாலும் பாடு..இந்த வீட்டில் நான் அடிக்கடி ஃப்ரண்ட்ஸ் கூட வந்து குடி பாட்டு டான்சுன்னு கொட்டமடிப்பேன். அதை சிலர் இங்க கண்டிச்சாங்க. அதுக்காக ஒரு ரூமையே சத்தம் வெளில போகமுடியாத ரெக்கார்டிங் ஸ்டூடியோ ரூபா செட் அப் செய்துட்டேன். வா அங்க போகலாம் நீ பாட நான் ஆட சொர்க்கம் போகலாம்” அப்டீன்னான்.
“அப்படியா, கண்டிப்பா மெய் மறக்கபாடுவேன்..ஆனா ஒரு கண்டிஷன். அந்த நேரம் நீயும் ஆடாமல் கையையும் மெய்யையும் கட்டிட்டு கண்மூடி கானத்தைக் கேக்ணும்” என்றேன். இருவரும் அந்த ரூமுக்குப் போனோம் நடமாடிக் டோர் டமால்னு மூடினாலும் பயம் வடிவத்தைக் கவ்வியது.
அவன் இருந்த நிலைமை நான் சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டவச்சது. என்னோட கர்சீப்பையும் அவன் வீட்டிலிருந்த கை துடைக்கிற. துணியையும் எடுத்தேன். எடுத்து அவன் கைகால்களை நல்லா இறுக்கக் கட்டிட்டு பாட ஆரம்பிச்சேன்.
‘ஆஹா ஓஹோ’னு குடிபோதைல உளறினான்.
சட்டுனு பாட்டை நிறுத்தினேன்.
“ஏஞ்சலே! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?உன் தேனினுமினிய குரலைக் கேட்கவே உன்னை இந்த இடத்துக்கு அழைச்சிட்டுவந்தேன்…
ஆமா ஏஞ்சல், என்ன சத்தம்போட்டாலும் வெளில யாருக்கும் கேட்காது.. அதனால நீ பாடு நல்லா பாடு”ன்னான் உற்சாகமா.
“ஒரு நிமிஷம்… எனக்கு அடிக்கடி தொண்டை வறண்டு போயிடும். தண்ணீ – அதுவும் நான் எப்போதும் குடிக்கிற சீரகத்தண்ணீ- குடிச்சாதான் குரல் சீரா இருக்கும் குடிச்சிட்டுவந்து பாட்டை தொடர்ந்திடறேன்”ன்னு சொல்லியபடியே என் கைப்பையிலிருந்த பாட்டிலை எடுத்தேன்.
அவன் போதைல கண்ணை மூடிட்டு ஏதேதோ உளறிட்டு இருக்க, அப்போ நான் கையிலிருந்த பாட்டிலை மூடியத் திறந்து சட்டுனு அவன் மேல வேகமா சாய்ச்சேன்.
“ஐயொ ஐயோ”ன்னு அலறினான்.
கட்டப்பட்ட கைகால்களை வேகமா உதைச்சிட்டு கூச்சல் போட்டான்.அவன் உத்திரவாதம் தந்தபடி மூடிய கதவுக்குப்பின்னாடி அந்த ரூமில்அவன் போட்ட அலறல் யாருக்கும் கேட்காது.
தலை முகம் நெஞ்சு கால்னு எல்லா இடங்களும் அமிலம் பட்டு பொசுங்கி,கருக ஆரம்பிச்சி கீழ சுருண்டு விழுந்தான்..நான் கதவை வேகமாய்த் திறந்து மறுபடி அழுத்தி சாத்திட்டு இங்க உங்களப் பாக்க ஓடி வந்தேன்.”
ஜனனி நிதானமாய் சொல்லிமுடித்தபோது ஜகதீசன் கண்கள் பனிக்க,”ஜ ஜனனீ?”என்றார் நெகிழ்ந்த குரலில்.
“ஆமாம்ப்பா அவன் மனுஷனா இருந்தா திருத்தி இருக்கலாம் ஆனா செல்வராஜ், அசுரனா இருந்தான். அதான் அப்படி செஞ்சிட்டேன். அவனுக்கு அரசியல் செல்வாக்கும் அதிகம்.
என்னிக்கு வேணாலும் இவன்கிட்ட மாட்டிப்பேன்னு எனக்குத் தெரியும். இன்னும் எத்தனை நாளைக்குப் பெண்கள் கோழையாக இருப்பது? முள்ளை முள்ளால் எடுக்கணும்.
வீட்ல முன்னயே நான் வாங்கிவச்சிருந்த அமிலத்தை கவனமா என் கண்ணாடி(தண்ணீ) பாட்டில்ல ஊத்திட்டுத்தான் அவன்கூட வர்ரப்போ எடுத்திட்டு வந்திருந்தேன்…திட்டம் சரிவர நடக்குமான்னு நடக்கிறவரை மனசுக்குள்ள பயம் இருந்தது …ஆனா இவனால் இன்னும் எத்தனை பெண்கள் சீரழியநேருமோ என்கிற அக்கறையும் வந்தது.அதான் அவனை குரூரமாக்கிட்டேன்.நான் செய்தது தப்பாப்பா? சொல்லுங்க?”
“இ.. இல்லம்மா நாந்தான் ஒருநிமிஷம் உன்னை தப்பா நினச்சிட்டேன்”
ஜகதீசனின் மனது ஓலமிட்டது.
“அப்பா.. ஏழையா இருந்தாலும் நாமெல்லாம் தர்மம் சத்தியம் நேர்மைன்னு வாழறோம். கண்முன்னாடி ஒரு அயோக்கியனை, அதர்ம செயல்கள் செய்கிறவனை நான் எப்படிப்பா மன்னிக்கிறது? இதுக்கு தீர்ப்பு என்ன தண்டனையா இருந்தாலும் ஏத்துக்கத் தயார்தான் அப்பா”
மகளை நிமிர்ந்து பார்க்க முடியாமல் ஜெகதீசனின் கண்கள் நீரில் மிதந்தன.