சுலட்சணா காதலிக்கிறாள்
கதையாசிரியர்: நா.பார்த்தசாரதி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: March 1, 2026
பார்வையிட்டோர்: 947
(1986ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4
எல்லாரும் சுலட்சணாவை மதித்துப் புகழ்ந்தபோதுதான் கனகராஜ் அவள் தனக்கு மட்டுமே உரியவள் என்பது போல் உணரத் தலைப்பட்டான். அவள் மெல்ல மெல்ல, அவன் உணர்வுகளைப் பாதிக்கத் தொடங்கினாள். அவனிடமிருந்து அவள் விலகிச் செல்லச் செல்ல அவன் அவளருகே நெருங்கிச் செல்ல ஆசைப்பட்டான்.
அவளால் அவனைத் தவிர்க்கவும் முடியவில்லை. விரும்பவும் முடியவில்லை. மாற்றலாம் என்று முயல ஆரம்பித்தாள். அவன் மாறுவது கடினமென்று தோன்றியது. புதிதாகச் சிந்திப்பதற்குப் பயப்பட்டான் என்பதைவிடப் புதிதாகச் சிந்திப்பவர்களையே பார்க்கக்கூடப் பயப்பட்டான் கனகராஜ். புதுமையே அவனுக்குப் பெரிய அலர்ஜியாக இருந்தது.
அவள் மாக்ஸிம் கார்க்கியின் அன்னை, ஆண்டன் செகாவின் சிறுகதைகள் என்று தனக்குப் பிடித்த புத்தகங் களை அவனிடம் சொன்னால் அவன் ‘ஹெரால்ட் ராபின்ஸ்’ மட்டுமே தனக்குப் பிடிக்கும் என்றான்.
பல்கலைக்கழக விவாத மன்றத்தில் இந்தியாவின் வளர்ச் சிக்கு எதிர்காலத்தில் ஏற்றது கலப்புப் பொருளாதாரமே என்ற தலைப்பில் அவன் விவாதித்தான். பொதுவுடைமையே என்று அவள் விவாதித்த வேகத்தைக் கண்டு அவன் பயந்தே போனான்.
அவளுக்கு நல்ல விவாதத் திறமையும் ஆணித்தரமாக அடித்துப் பேசும் ஆற்றலும் இருந்தன. அவனிடம் துண்டு துண்டாகச் சில உதிரிக் கருத்துக்கள் மட்டும் இருந்தன. அவற்றை இணைத்துத் தொகுத்து வடிவம் தந்து கோவை யாகப் பேசத் தெரியாமல் விழித்தான் அவன். பரீட்சைகளில் மட்டும் பிரமாதமாக எழுதி முதல் மார்க் வாங்கினான் அவன். பொது வாழ்விலும் மற்ற மாணவர்களிடமும் முதல் மதிப்பும் மதிப்பெண்களும் அவளுக்குத்தான் அதிகம்.
ஒரு சிறிய பிரசங்கம் அல்லது அறிக்கை மூலம் அந்தப் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்று சேர்த்துத் தன் முன்னால் நிறுத்திவிடும் ஆற்றல் அவளுக்கு இருந்தது. அவனோ தானும் பிறருடன் அதிகம் பழகுவதில்லை. பிறரையும் தன்னோடு பழகவிடுவதில்லை. ஒரே விதிவிலக்கு – சுலட்சணா மட்டும்தான் அவனோடு பழகினாள். அந்தப் பழகுதலில் உள்ள முரண்பாட்டை மற்றவர்கள் வினோதமாகப் பார்த்து ரசித்தார்கள். அவனோ ஒரு தொழிலதிபரின் செல்லப் பிள்ளை. அவளோ ஒரு தொழிற்சங்கத் தலைவரின் அருமைப் பெண். இவர்கள் நெருங்கிப் பழகுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மேடை விவாதங்களில் அவன் அவளிடம் தோற்றான். மற்ற மாணவ மாணவிகள் முன் அவள் தலைவியாக எழுந்து நின்றாள். அவனோ அடையாளமே இல்லாத, சமர்த்தாகப் படிக்கிற யாரோ ஒரு பையனாக மட்டுமே இருந்தான். அவளிடம் தோற்கத் தோற்கத் தன்னை அவளுக்கு மிக அருகில் கொண்டு செல்லும் ஆர்வம் அவனுள் அதிகரித்தது. அவனை வெல்ல அவள் முயலவில்லை. அவளிடம் தோற்பதில் கூட அவன் மகிழ்வதற்குத் தொடங்கினான்.
அவளுடைய பிறந்தநாளை ஞாபகம் வைத்திருந்து அன்று மாலை பல்கலைக்கழகப் பூங்காவில் அவளைத் தனியே சந்தித்து ஒரு சிறிய வைரமோதிரத்தை அவளுக்கு அன்பளிப்பாக வழங்கினான் கனகராஜ்.
“தங்கம், வைரங்களை அணிவதில் எனக்கு விருப்ப மில்லை! ஆனால் எனக்கு விருப்பான ஒரு காரியத்துக்கு இதைப் பயன்படுத்தினால் உங்களுக்கு அதில் ஒன்றும் ஆட்சேபணைராதே?”
“ஆட்சேபணை இராது. உன் இஷ்டம்போலப் பயன் படுத்தலாம்”.
“உடைமை உங்களுடையது என்பதால் கேட்டு அநுமதி பெற்று விடுவது நல்லது என்றெண்ணித்தான் கேட்கிறேன்”
”உனக்கென்று நான் முழு மனத்தோடு கொடுத்துவிட்ட யின் அப்புறம் அதை நீ என்ன வேண்டுமானால் செய்து கொள்ளலாம். மறுபடி அதற்கு என் அநுமதி தேவையே இல்லை சுலட்சணா!”
அடுத்தவாரமே ஊனமுற்ற குழந்தைகளின் நல்வாழ்வுக் காகத் திரட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பொது நிதியில் சேர்ப்பதற்காக அந்த மோதிரத்தை ஒரு கூட்டத்தில் ஏலம் விட்டு மூவாயிரம் ரூபாய் திரட்டிக் கொடுத்து விட்டாள் சுலட்சணா
அவனுக்கு அது என்னவோ போலிருந்தது. சும்மா கேட்கிறாளே ஒழிய அந்த மோதிரத்தைத் தன் அன்பின் ஞாபகமாக அவளே கையில் அணிவாள் என்று எதிர்பார்த் தான் அவன். அவள் அப்படிச் செய்யாததில் அவனுக்குப் பெருத்த ஏமாற்றம்தான். அவளை அவனால் முழுவதுமாக இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளோ அவனை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள். அந்த மோதிரத்தை அவள் ஏலம் விட்ட அதிர்ச்சியிலிருந்து அவன் மீள அதிக நாளாயிற்று.
அவனுடைய பிறந்த நாள் வந்ததும், பல்கலைக்கழகப் பொடானிகல் கார்டன் முகப்பில் இருந்த மில்க் பார்லரில் ஒரு ‘ரோஸ்மில்க்’ வாங்கி அவனிடம் பருகக்கொடுத்தாள் அவள். அதற்கே அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
“நீ பத்துப் பைசாவுக்குக் கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்தால்கூட எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் சுலட்சணா!”
“ஏன்? என்னால் அதற்கு மேல் எதுவும் முடியாது என்றா சொல்கிறீர்கள்? செய்ய முடிவதற்கும் செய்ய விரும்புவதற்கும் நடுவே ஒரு வித்தியாசம் இருக்கும்.”
“புரிகிறது சுலட்சணா… நீ முடிந்ததைச் செய்கிற டைப் இல்லை. விரும்புகிறதைத்தான் செய்வாய் என்பது எனக்குத் தெரியும்.”
“என் தந்தை உங்கள் தந்தையைப்போல் தொழிலதிபரோ செல்வந்தரோ இல்லை. தொழிலாளிகளோடு தொழிலாளியாகக் குடிசையில் வசிப்பவர். முடிந்ததைச் செய்யும் வசதி எனக்கில்லை.”
காதலர்களைப்போல் அவர்கள் இருவரும் பல்கலைக்கழக எல்லையில் இடையிடையே சந்தித்துக் கொண்டாலும் இப்படிக் கருத்து மோதல்கள், கொள்கை உரசல்கள் அடிக்கடி அவர்கள் மத்தியில் ஏற்படுவதுண்டு. படிப்பது, மார்க் வாங்குவது, போஸ்ட் கிராஜுவேட்ஸ் லைப்ரரிக்குப் போய் இண்டேர்னல் அஸெஸ்மெண்ட் மார்க்குகளுக்காகப் புத்தகங்களை எடுத்துக் கரைத்துக் குடிப்பது இவை தவிர வெளியே புயல் வீசினாலும், பூகம்பமே ஏற்பட்டாலும்,இடி விழுந்தாலும்கூடக் கவனம் கலையக்கூடாது என்றிருந்தான் கனகராஜ். அவளோ வெளியே துரும்பு அசைந்தாலும், யாருக்கு எங்கே என்ன சிரமம் என்று விரைந்து ஓடிச் சென்று பார்க்கவும், உதவவும் தயாராயிருந்தாள். பொதுக் காரியங்கள், வேலைகள் கிடைத்தால் அவள் அதில் தன்னைக் கரைத்துக்கொண்டுவிட – தன்னை மறந்துவிடப் பழகியிருந்தாள்.
அவனே தன்னைத் தவிர மற்றெல்லாவற்றையும் பற்றி நினைத்துப் பார்க்கக்கூடப் பழகவில்லை. ஆனாலும் அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகினார்கள். இவர்கள் ஆருயிர்க் காதலர்களோ என்று பார்க்கிறவர்கள் மருண்டு வியக்கிற அளவுக்குப் பழகினார்கள். சந்தித்தார்கள். பேசிக் கொண்டார்கள்.
உதயா பல்கலைக்கழக அதிசயங்களில், விநோதங்களில் இது முதன்மையானதாயிருந்தது. அரும்பு மீசையும் டி ஷர்ட்டும், சுருள் முடியும், செலூலாய்ட் புன்முறுவலுமாக அவன் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தான். கொள்கைகளில், பழக்கவழக்கங்களில் அவள் அவனுக்கு நேர்மாறானவளாக இருந்தாள். அவனோடு மட்டுமில்லாமல் மற்றவர்களோடும் தோழமையோடு பழகினாள். இந்தத் தோழமையை அவன் எப்படிப் புரிந்து கொண்டானோ, புரிந்து கொள்ளவில்லையோ, அவள் சரியாகப் புரிந்து கொண்டிருந்தாள். உணர்ந்து கொண்டிருந்தாள். உணர்ந்து தெளிந்து கொண்டுமிருந்தாள்.
ஒரு விடுமுறையின் போது பல்கலைக்கழகத்தை ஒட்டிச் சென்ற ஜி.எஸ். டி. -அதாவது கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடிலிருந்து ஒரு கிலோமீட்டர் உள்ளே தள்ளி இருந்த ஓர் அரிஜன கிராமத்திற்குச் சாலை போட்டுக் கொடுக்கும் இலவச சேவையைத் திட்டமிட்டாள் சுலட்சணா.
சமூக சேவைத் திட்டத்தின் கீழ் யூனிவர்சிடி நிர்வா தத்தைச் சம்பந்தப்படுத்தாமலே அவளாகப் பொறுப்பேற்று தைமனிதாபிமான அடிப்படையில் ‘ஆர்கனைஸ்’ செய்தாள். நிறைய மாணவ – மாணவிகள் சேர முன்வந்திருந்தனர்.
யூனிவர்ஸிடி நிர்வாகமே இம்மாதிரி சோஷியல் செர்வீஸ் லீக்’ என்று சமூக சேவைப் பணிகளைச் செய்யச் சொல்லி அதற்கு மார்க்குகள் போடச்செய்வது வழக்கம். ஆனால் அந்தச் சமூக சேவைப் பணி வெறும் கண்துடைப் பாகவே இருக்கும். யூனிவர்ஸிடி காம்பஸிற்குள் புதர்களை வெட்டி ஒழுங்கு செய்வது- புல்வெளிகளைச் சமன் செய்வது போன்று பல்கலைக் ழகத் தோட்டக்காரர்கள் செய்ய வேண்டிய வேலையை மாணவர்களிடம் ஓசியிலேயே வாங்கிக் கொண்டு – மார்க் போட்டு முடித்துவிடுவார்கள்.
உண்மையில் ‘சோஷியல் செர்வீஸ் லீக்’ என்பது வெளி உலகின் பொதுப் பணிகள் எவற்றையாவது பிரதிபலன் கருதாமல் மாணவர்களைச் செய்ய வைப்பதே ஆகும். இதற்காக மாணவர்களின் கட்டணத்திலே கூட ஒரு குறிப் பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. அந்தத் தொகை மொத்தத்தில் வேறு எதற்கோ திருப்பி விடப்படுவதோடு பல்கலைக் கழக நிர்வாகம் செலவழித்துச் செய்ய வேண்டிய சாரியங்களை மாணவர்களை வைத்தே முடித்துவிடுகிற சாதுரியமும் (கையா) டல் வல்லான்பிள்ளை போன்றவர் களிடம் இருந்தது. இதைப் பற்றிய புகார்கள் கிடைத்ததன் பேரில் யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன் கூட உதயா பல்கலைக்கழகத்தை எச்சரித்திருந்தது.
ஆனால் பெரும் பண வசதியும் மத்திய மாநில ஆளும் கட்சிகளில் செல்வாக்கும் கொண்டிருந்த உதயா பல்கலைக் கழகப் புரோ-சான்ஸலர் இதற்கெல்லாம் ஒரு சிறிதும் அஞ்ச வில்லை.வழக்கம் போல் நிர்வாகம் மாணவர்களைக் கொண்டே காம்பஸுக்குள் புல்பிடுங்கவும், புதர் வெட்டவும், களை வெட் டவும் தூண்டி அதையே சோஷல் செர்வீஸாக ஆக்கி மார்க் போட்டு வந்தது. இதில் பச்சை மோசடிதான் நடந்து வந்தது.
உண்மையாகவே சோஷியல் செர்வீஸ் செய்ய விரும்பிய சுலட்சணா போன்றவர்கள் வேறு ஏற்பாடு செய்ய வேண்டிய தாயிற்று. அவள் யாராலும் கவனிக்கப்படாத- மெயின் ரோடிலிருந்து உள் விலகி இருந்த – ஓர் அரிஜன கிராமத்துக் குச் சாலை போட உழைக்க முன்வருமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தாள். அவளுடைய வேண்டுகோளுக்கு மாணவ மாணவிகளிடையே நல்ல ஆர்வத்தோடு கூடிய வரவேற்பு இருந்தது. போட்டி போட்டுக்கொண்டு அவளிடம் மாணவர்கள் முன் வந்து பேர் கொடுத்திருந்தார்கள்.
இத்தனைக்கும் பல்கலைக்கழக டீனும் ஆக்டிங் வி.சி.யு மான (கையா) டல் வல்லான் பிள்ளையிடமிருந்து சுலட்சணா அன் அஃபீஷியலாக ஆர்கனைஸ் செய்யும் இந்த சோஷியல் செர்வீஸ் ஏற்பாட்டை டிஸ்கரேஜ் செய்வது போல ஒரு சுற்றறிக்கை வேறு வந்து பல்கலைக்கழக நோட்டீஸ் போர்டு களிலும் ஒட்டப்பட்டு விட்டது.
“பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக நடத்தும் சோஷல் செர்வீஸ் பணிகள் முடிந்து இந்த ஆண்டிற்கான மதிப்பெண் களும் போடப்பட்டு விட்டன. பல்கலைக்கழகம் நடத்தாமல் தனிப்பட்ட மாணவர்களோ, வெளி அரசியல் சக்திகளோ தலையிட்டு நடத்தும் எந்தச் சமூகப்பணி முகாம்களிலும் மாணவர்களோ, மாணவிகளோ கலந்துகொள்ள வேண்டா மென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஏற்பாடுகளில் இந்தப் பல்கலைக்கழகம் எந்தப் பங்கும் பொறுப்பும் ஏற்காது என்பதை இதன்மூலம் அறிவித்துக் கொள்கிறோம்’ என்று ‘டல் பிள்ளை’ அனுப்பியிருந்த சர்க்குலர் சுலட்சணாவை எரிச்சலூட்டினாலும் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவளுடைய சமூகப்பணி முகாமில் பங்கேற்க இசைந்து பேர் கொடுத்திருந்தவர்களும் இந்தச் சுற்றறிக்கை பற்றிச் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை.
இந்த அறிக்கை வருமுன்பே சுலட்சணாவிடம் சாக்குப் போக்குச் சொல்லித் தப்பித்துக்கொள்ள நினைத்திருந்த கனகராஜ் இந்த அறிக்கையும் வந்துவிட்டபிறகு நிச்சய மாகத் தப்பித்து ஒதுங்கிக்கொண்டுவிடவே நினைத்தான். சுலட்சணா அவனை வற்தபுறுத்தவில்லை.
“வர்க்க அடிப்படையில் சிந்தித்தால்கூட நீங்கள் இந் முகாமில் உழைக்க முன்வர மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் சார்ந்திருக்கும் வர்க்க அளவு வேறு மாதிரியானது”
“வர்க்கம் என்று ஒன்றுமில்லை சுலட்சணா! ஏர்க்காடு மலையில் எங்களுக்கு ஒரு பங்களா இருக்கிறது. இந்தக் கோடைக்கு இதமாக வெயிலே தெரியாமல் ஜிலுஜிலு என்றிருக்கும். அங்கே போய்த் தங்கிப் படிக்கலாம் என்று நினைக்கிறேன். விரும்பினால் நீ கூட என்னோடு வரலாம். உன் வருகையால் ஏர்க்காடு எனக்கு இன்னும் குளிர்ச்சியாக இருக்கும்.”
“எனக்கு வேண்டிய குளிர்ச்சி இங்கேயே இருக்கிறது கனகராஜ்! விடுமுறைக்குள் இந்த ஒரு கிலோமீட்டர் தொலைவு சாலைபோடும் வேலையை நானும் மற்றமாணவர்களும் செய்து முடிக்க வேண்டும். குட் பை! நீங்கள் போகலாம்” – என்றாள் சுலட்சணா
அத்தியாயம் – 5
கனகராஜைப் போன்ற அழகிய ஸ்மார்ட்டான வேறு எந்த இளம் இளைஞன் ஒருவன் சுலட்சணா தவிர பெண்ணிடம் அந்த மாதிரி ஓர் அன்பு அழைப்பை விடுத்திருந்தாலும் இத்தனை கடுமையாக மறுத்திருக்க மாட்டாள். அவனுடைய முகமன் வார்த்தைகளை இங்கிதமாகத் தட்டிக் கழிக்காமல் கறாராக உடனே ‘குட் பை’ என்று அவனைக் கத்திரித்திருந்தாள் அவள்.
அலுங்காமல், குலுங்காமல், உணவு, உறக்கம்,படிப்பு, சுயநலம் என்கிற நான்கு கோடுகளாலான ஒரே சதுரத்திற் குள் அடைபட்டு அழுகும் கனகராஜ் போன்றவர்களை வெறுப்பதைவிட அதிகமான அனுதாபத்தோடு பார்த்தாள் சுலட்சணா.
கண்டித்துச் சுற்றறிக்கை விட்டதோடு ஓயாமல் டீன் அண்ட் ஆக்டிங் வி.சி. என்ற முறையில் உடனே தன்னை வந்து சந்திக்கும்படி ‘டல் பிள்ளை’ சுலட்சணாவுக்கு ஒரு மெமோ வேறு அனுப்பியிருந்தார். மெமோவைப் பார்த்து அவளுக்கு ஆத்திரம்தான் வந்தது.
பொருளாதாரத் துறை, தமிழ் இலக்கியத்துறை போன்ற சில டிபார்ட்மெண்டுகளுக்கு நல்ல பெயர் இருந்தாலும் வேறு சில வட்டாரங்களில் உதயா பல்கலைக்கழகத்திற்கு உதவாக் கரைப் பல்கலைக்கழகம், ஊழல் பல்கலைக்கழகம், டிக்னிஃபைடு எலிமெண்டரி ஸ்கூல், டிக்னிஃபைடு ஹைஸ்கூல், க்ளோரிஃபைடு காலேஜ் என்றெல்லாம் அகட மிக் சர்க்கிளில் இருண்ட பெயர்கள் உண்டு. வி.சி., டீன் ஆகியோரின் ஊழல்களே இதற்குப் பெரிதும் காரணம். அன்று சுலட்சணாவுக்கு மெமோ அனுப்பியபோதும் இப்படி ஒரு குறுகிய நோக்கத்தோடு தான் அந்த மெமோவை அவளுக்கு அனுப்பி மிரட்டியிருந்தார் ஆக்டிங் வி.சி.
பல்கலைக்கழகத்தில் சுலட்சணாவுக்கு யாரிடமும் எதற்காகவும் அநாவசியமான பயம் கிடையாது. அதுவும் டாக்டர் கையாடல் வல்லான்பிள்ளை எம்.ஏ., பிஎச்.டி.யிடம் மரியாதைகூடக் கிடையாது. தைரியமாக அவரது மெமோவை வாங்கிக்கொண்டு சந்திக்கச் சென்றாள். கன மான சோடாபுட்டிக் கண்ணாடி, பிதுங்கும் குண்டு விழிகள், எந்தக் கடுங் கோடையிலும் சூட்டு, கோட்டு, டை அணிந்து பார்க்க ஆந்தை போலிருப்பார் டல் பிள்ளை ஆந்தை மூக்குக் கண்ணாடி அணிந்து நாற்காலியில் அமர்ந்திருப்பது போல் சாயல் இருக்கும். குரலிலும் ஏறக் குறைய ஆந்தையின் சாயல்தான்.
“மிஸ் சுலட்சணா! வீ ஆர் ஹியர் டு ஆர்கனைஸ் சோஷியல் செர்வீஸ் லீக் ஆன் பிஹாஃப் ஆஃப் திஸ் யூனிவர்ஸிட்டி” என்று கடுமையாகச் சொல்லி நிறுத்தி விட்டு ஆந்தை விழிகளால் அவளை ஊடுருவினார்.
“இஃப் யூ ஸே லைக் திஸ் வெல் அண்ட் குட் சார். பட் அன்ஃபார்ச்சுனேட்லி ஸோ ஃபார் யூ டிண்ட் ஆர்கனைஸ் எனி சச் ப்ரொக்ராம் ஆன் பிகாஃப் ஆஃப் த யூனிவர்ஸிடி சாரி!”
“நீ யாரு அதை எல்லாம் சொல்ல? சோஷல் செர்வீஸ் புரோகிராம் நடந்து ஸ்டூடன்ஸுக்கு மார்க் எல்லாம்கூட முறையாகக் குடுத்திருக்கோம்…”
“டூயிங் கார்டன் வொர்க் இன் த காம்பஸ் இஸ் நாட் அட் ஆல் எ சோஷல் வொர்க் சார்!”
“ஆர் யூ டீச்சிங் மீ வாட் இஸ் சோஷல் வொர்க் அண்ட் வாட் இஸ் நாட் சோஷல் ஒர்க்?…”
“ஸாரி சார்…”
“நௌ யூ மே கோ…”
நிமிர்ந்த நடையோடு டீனின் அறையிலிருந்து வெளி யேறினாள் சுலட்சணா. திட்டமிட்டபடி விடுமுறையில் சுலட்சணாவும் அவளோடு ஒத்துழைத்த மாணவ மாணவி களும் கிராமத்துக்குச் சாலை போட்டு முடித்தார்கள். பொதுவாக இம்மாதிரி சோஷல் செர்வீஸ் நாட்களில் ஆகும் உணவு, சிற்றுண்டிச் செலவுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம்தான் ஏற்கவேண்டும். முன்பே கட்டணங்களில் இதற்கான தொகை மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டிருந்தும் காம்பஸுக் குள்ளேயே களைபிடுங்கச் சொல்லியும் புதர் வெட்டச் சொல்லியும் வேலையை முடித்து விடுவதால் வழக்கமான ஹாஸ்டல் சாப்பாடு சிற்றுண்டியிலேயே இதையும் சமாளித்து விட முடிந்தது. வேறு எக்ஸ்ட்ரா செலவு இல்லை.
சாலை போடச் சுலட்சணா செய்த ஏற்பாட்டில் பல்கலைக் கழகத்திலிருந்து பணம் எதுவும் கோரிப் பெறாமல் அவரவர் கள் செலவை அவரவர்களே பார்த்துக் கொண்டார்கள்.
அவர்களது பணி நடந்த பகுதி மக்களும் வலிய முன் வந்து அவர்களுக்கு உதவினார்கள். எல்லாரிடமிருந்தும் மாணவ மாணவிகளுக்கு நல்ல ஒத்துழைப்புக் கிடைத்தது. படிக்கிற பையன்களும், பெண்களும் வெயிலில் மண்வெட்டி யும் கூடைகளுமாகச் சாலை போடுவதை மக்கள் வியப்பாகப் பார்த்தார்கள்.
விடுமுறை நிமித்தம் ஊருக்குப் போகுமுன் கனகராஜ் சுலட்சணாவை வந்து பார்த்தான். சமூக சேவைத் திட்டத் திற்கு மாணவர்களை அழைக்கும் துண்டுப் பிரசுரங்கள் அச்சாகி வந்திருந்தன. சுலட்சணாவிடமிருந்து அதில் ஒரு துண்டுப்பிரசுரத்தைத் தானே கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்த கனகராஜ் அலட்சியமாகவும் ஏளனமாகவும் நகைத் தான். பின்பு சொன்னான்:
“இந்தக் கழுதை பொதி சுமக்கிற வெயிலில் நம்மாலே அலைய முடியாது. சுகமாக ஒரு மாசம் ஏர்க்காட்டிலே இருக்கிறதைப் பத்து வருஷமாப் பழகியாச்சு. இனிமே நான் என்னை மாத்திக்க முடியாது”.
“நீங்கள் மட்டுமில்லை மிஸ்டர் கனகராஜ்! இந்நாட்டு மக்களில் பலர் தாங்களாகவே தங்களைக் காலத்துக்கேற்ப மாற்றிக்கொள்ளத் தயாராயிருக்கமாட்டார்கள். காலம்தான் அவர்களை மாற்றவேண்டும். மாற்றும் என்று நினைக்கிறேன்
“நீ நினைக்கிறபடி எல்லாம் அவ்வளவு சீக்கிரமாக இந்த நாட்டில் எதுவும் நடந்துவிடாது சுலட்சணா!”
”மனிதனை என்றும் மாறாமலிருக்க நிர்ப்பந்தப்படுத்தும் மதம், சடங்குகள், சம்பிரதாயங்களிலிருந்து அவனை உடனே மாற்ற முயலும் விஞ்ஞானம் வித்தியாசமானது. விஞ்ஞானத் துக்கும் மதத்துக்கும் உள்ள குளிர்யுத்தத்தில் இளைஞராகிய நீங்கள் விஞ்ஞானத்தின் பக்கமில்லை என்பதுதான் மிகவும் துயரமான விஷயம்.”
“விஞ்ஞானத்தின் பக்கத்திலும் மதத்தின் பக்கத்திலும் நான் இருக்கிறேனா இல்லையோ, நிச்சயமாக உன் பக்கம் இருக்கிறேன். உன்னைப் போல ஓர் அழகிய பெண்ணின பக்கமாக நெருங்கி நிற்பதற்குப் பெருமைப்படுகிறேன். நீ நடத்துகிற சோஷியல் செர்வீஸ் ‘லீக்’ முகாமில் என்னால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் என் உதவி உனக்கு உண்டு சுலட்சணா! இந்தா இதை என்னுடைய ‘ஹம்பிள் டொனேஷனாக ஏற்றுக்கொள்”. என்று சட்டைப் பையி லிருந்து ஐந்து புத்தம் புது நூறு ரூபாய் நோட்டுக்களை எண்ணி எடுத்து அவளிடம் நீட்டினான் கனகராஜ். அவள் உதாசீனமாகச் சிரித்தாள்:
“தயவுசெய்து மன்னிக்கவும். எங்களுக்கு வேண்டியது உழைப்பு, வெறும் பணம் மட்டுமில்லை. சேவையைத் தர விரும்பாத – சேவைக்கு ப்ராக்ஸியாகத் தரப்படுகிற பணத்தை நாங்கள் வாங்குவதில்லை’- என்று நிர்த்தாட்சண்யமாக அதை மறுத்து அவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டாள் சுலட்சணா.
அவன் இதை எதிர்பார்க்கவில்லை. திடீரென்று முகத் திலறைந்தாற் போலிருந்தது. ‘சமூகப் பணி முகாம்’ நடத்து வதற்காக அவள் மாணவ மாணவிகளிடம் நிதி வசூலிப்பதை அவன் அறிந்திருந்தான். அவளுக்கு அதில் உதவியாயிருக் கட்டும் என்றுதான் அவன் ஐநூறு ரூபாயைத் தூக்கித் தயங் காமல் கொடுத்திருந்தான். அவளோ ஒரே விநாடியில் அவனது பெருந்தன்மையைத் தூள் தூளாக்கி விட்டாள்.
அவன் சற்று ஆத்திரமடைந்த குரலிலேயே,
“எல்லாரிடமும் பணம் வசூல் செய்கிறாயே, நான் கொடுப்பதை மட்டும் ஏன் வாங்க மறுக்கிறாய்?” -என்று அவளைக் கடுப்போடு கேட்டான்.
“நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைப்பதற்கு நான் வரமாட்டேன்! பணம் வேண்டுமானால் தருகிறேனென்று முன் வருகிற ஆட்களாகப் பார்த்து வசூல் செய்தால் – இதற்குச் சமூக சேவை என்று ஏன் பெயரிட்டு அழைக்க வேண்டும்? நன்கொடை வசூல் செய்து யாராவது ஒரு சாலைக் காண்ட்ராக்ட் என்ஜினியரிடம் கொடுத்து அவரையே ரோடு போடச் சொல்லி விட்டு விடலாமே? அதுவல்ல எங்கள் நோக்கம். எம்.ஏ.யும் எம்.ஃபில்லும், எம்.டெக். கும், எம்.டி.யும் படிக்கிற மாணவர்கள் வசமும் மண்வெட்டி பிடித்து உழைக்கிற மனமும் உடலும் உண்டு என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். இதில் பணமே மனிதனுக்கு ப்ராக்ஸியாக நின்று விட முடியாது, கூடாது என்பதுதான் என் கொள்கை”
“இது மிகவும் விநோதமான கொள்கைதான்.”
“விநோதமான மனிதர்களுக்கு எல்லா நல்ல கொள்கைகளும் கூட விநோதமாகவே தோன்றும்; இயல்பாகத் தோன்றாது”
“திறந்த வெளியில் சட்டையில்லாத உடம்புடன் மண் வெட்டி பிடித்து வேர்க்க விறுவிறுக்கச் சாலை போடுகிற திறமையோ பழக்கமோ எனக்கு இல்லை. ஆனாலும் உனக்கு எப்படியும் உதவ வேண்டும் என்பதற்காகவே என் பாக்கெட் மணியாக அப்பா எனக்குத் தருவதில் மிச்சம் பிடித்து உன்னிடம் கொடுத்தேன்.”
“எனக்கு வேண்டியது உங்கள் வேர்வையும் உழைப்புமே ஒழியப் பணம் இல்லை. வேர்வையையும் உழைப்பையும் ஏழைகளுக்காக விட்டுக்கொடுக்கிற மனம் உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று அறிய விரும்பி னேன். அந்த மனம் உங்களுக்கு இல்லை. பிச்சைக்கார னுடைய திருவோட்டில் கையில் வந்த காசுகளை அவசர அவசரமாக அள்ளிப் போடுகிற பணக்காரன் போல் நீங்களும் என்னிடம் பணத்தை எடுத்து நீட்டினீர்கள். எனக்கு அது பிடிக்கவில்லை, வேண்டாமென்றேன். என் நிலையில் நான் செய்ததுதான் சரி.”
அந்தச் சாலை போடும் திட்டம் மாணவ மாணவிகளின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக முடிந்தபிறகும் கனகராஜ் பணம் கொடுக்க முன்வந்த இந்தச் சம்பவத்தையும், பல்கலைக்கழக டீன் தன்னைக்கூப்பிட்டு மிரட்டிய அந்தச் சம்பவத்தையும் பலமுறை திரும்பத் திரும்ப இவ்வாறு நினைத்துப் பார்த்திருக்கிறாள் சுலட்சணா. எதிர்ப்புக்களும் பயமுறுத்தல்களும் அவளை வளரச் செய்தனவே ஒழிய ஒரு சிறிதும் தளரச் செய்யவில்லை. தயங்கச் செய்யவில்லை.
அந்தப் பல்கலைக்கழக வட்டாரத்தில் ஆண் அழகனைத் தேர்ந்தெடுக்க ஒரு போட்டி நடத்தினால் சுலபமாகக் கனகராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவான் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல அழகியைத் தேர்த்தெடுக்க விரும்பினால் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சுலட்சணா வெற்றிபெறுவாள் என்பது சர்வநிச்சயம். இப்படிப்பட்ட இருவருமே எகனாமிக்ஸ் துறையில் ஒரே வகுப்பில் சேர்ந்து படிப்பது அந்த டிபார்ட்மெண்ட்மேல் மற்றவர்களைப் பொறாமை கொள்ளச் செய்தது. ஒரே வகுப்பில் சேர்ந்து படித்ததோடு போகாமல் அவர்கள் ஒன்றாகப் பழகவும் செய்தார்கள். ஒன்றாகத் தென்பட்டார்கள். ஒன்றாகப் பொது இடங்களில் சிரித்துப் பேசி மகிழ்ந்தார்கள். சந்தித்தார்கள். பிறர் கண்களில் பட்டார்கள்.
இதனால் பரவலாக அந்தப் பல்கலைக்கழக எல்லையில் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று ஓர் அநுமானம் தானாகவே ஏற்பட்டுப்பேரவியிருந்தது. இந்தச் செய்தியைச் சம்பந்தப்பட்ட இருவருமே முன்வந்து ஆட்சேபிக்கவும் இல்லை. ஆமோதிக்கவும் இல்லை. கனகராஜ் இதை வரவேற் றான். நம்பினான். இதற்காக உள்ளூர அவன் மனம் குறு குறுத்தது. மகிழ்ந்தது. அவளோடு முன்னைவிட இன்னும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பழகினான். அவளை அவனால் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. நடுவில் ஏதோ நெருடியது. சிரிக்கச் சிரிக்க அவனோடு பேசினாள்.விவாதித்தாள். தனியாக உணவு விடுதிகளுக்கு அழைத்தால் மறுக்காமல் வந்தாள்.ஆனால் அவனிலிருந்து தீர்மானமாக நிச்சயமாக வேறுபட்டாள். சாப்பிடும் பண்டங்களிலிருந்து சர்ச்சை செய்யும் விஷயங்கள் வரை அவள் தனித்து நின்றாள்.
அவன் “இரண்டு மசால் தோசை”-என்று ஆர்டர் கொடுத்தால் உடனே குறுக்கிட்டு “எனக்கு வெறும் டீ மட்டும்தான்” – என்பாள். “தோசை வேண்டாம், போதும்” – என்று அவன் ஆட்சேபணையைப் பொருட்படுத்தாமல் வெயிட்டரிடமே நேரில் கண்டிப்பாகச் சொல்லிவிடுவாள்.
படத்துக்கு வர ஒப்புக்கொண்டு தியேட்டர் வாசல்வரை கூடப் போவாள். அங்கே போய்ப் பார்த்ததும், “மூளையை மழுங்க அடிக்கிற இந்த மாதிரிப் படத்துக்கெல்லாம் நான் வரமாட்டேன். ஆக்ரோஷ், அர்த்தசத்யா, தாகம், முகா முகம், தர்ட்டிசிக்ஸ் சௌரங்கி லேன் மாதிரி எதாவது படங்கள் வந்தால் சொல்லுங்கள். சேர்ந்து போவோம்” என்று திரும்பிக் கிளம்பிவிடுவாள். அவனும் வேறு வழியின்றி நிறையப்பணம் செலவழித்து ரிசர்வ் செய்திருந்த டிக்கெட்டு களைக் கிழித்தெறிந்துவிட்டு அவளைப் பின் தொடர்வான்.
“ஷீ இஸ் அன்ப்ரடிக்டபிள்” என்று அவன் உள்ளே கறுவிக் கொள்வான். அவளோ அவளைவிற்கு அதில் உணர்ச்சிப் பாதிப்பு இல்லாமல், “எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நீங்கள் ஏன் டிக்கெட்டைக் கிழித்துப் போட்டு விட்டுத்திரும்புகிறீர்கள்? உங்களுக்குப் பிடித்தால் நீங்கள் போய் உட்கார்ந்து படம் பார்த்துவிட்டு வரவேண்டியது தானே?” – என்று சர்வ சகஜமாக அவனைக் கேட்பாள்.
தன்னை அவள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா அல்லது அவளைத்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா என்று விளங்கிக்கொள்ள முடியாமல் அப்போதெல்லாம் திணறுவான் அவன். அவள் தன்மேல் இரக்கப்பட்டுப் பழகு றாளா, பிரியப்பட்டுப் பழகுகிறாளா என்ற சந்தேகம் அவனுள் அடிக்கடி மூண்டு மனத்தைத் திக்குமுக்காடச் செய்யும்.
ஒரு வாலிப வயதுப் பெண்ணிடமிருந்து இரக்கத்தையோ பரிவையோ அவன் எதிர்பார்க்கவில்லை. பிரியத்தையும் காதலையுமே எதிர்பார்த்துத் தவித்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை.
அத்தியாயம் – 6
ஒரு முறை சுலட்சணாவும் கனகராஜூம் யூனிவர்ஸிடி காம் பஸுக்கு அருகே உள்ள ஒரு கடைத் தெருவில் மாலை வேளை யில் தற்செயலாக நடந்து போய்க் கொண்டிருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. கவனத்தைக் கவரும் சம்பவம் அது.
பரபரப்பான பஜாரில் காய்கறி கூறுகட்டி வைத்து விற்றுக் கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அந்தப் பக்கத்துப் பேட்டை ரவுடி ஒருத்தன் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தான். மற்ற வர்கள் காது கொடுத்துக் கேட்கக் கூசும் அநாகரிகமான வார்த்தைகளால் அவளைத் திட்டிக் கொண்டிருந்தான். இவ்வளவுக்கும் அது மாலை நேரமாகையினால் பஜாரில் நல்ல கூட்டம். ஆனால் யாரும் அந்தப் பேட்டை ரவுடியை ஏனென்று தட்டிக் கேட்க முன்வரவில்லை. எதுவுமே நடக் காதது போல் எதையுமே கண்டுகொள்ளாமல் மக்கள் அந்த இடத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள், வந்து கொண்டிருந்தார்கள்.
‘நிராதரவான இளம் பெண் ஒருத்தியை நடுத்தெருவில் துகிலுரியாத குறையாக ஒருத்தன் இம்சை பண்ணி மானபங்கப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஏன் என்று கேட்பாரில்லையா?’ – என்று மனக் குமுறலோடு தயங்கி நின்றாள் சுலட்சணா. கனகராஜ் அவள் காதருகே முணுமுணுத்துத் துரிதப்படுத்தினான்:
“நேரம் சரியாயில்லை. இப்போ இங்கே நிற்க வேணாம் பெரிய கலாட்டா வரும் போல இருக்கு. கண்டுக்காமப் போயிடலாம், வா.”
இதைக் கேட்டுச் சுலட்சணாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கண் முன்னால் நடக்கிற ஓர் அக்கிரமத்தை – அநியாயத்தை – அநாகரிகத்தை ஏனென்று கேட்காமல் “நமக்கேன் வம்பு? கண்டுக்காமப் போயிடலாம்” – என்று உபாயம் சொல்கிற ஆண் பிள்ளையை ஏறிட்டுப் பார்க்கவே அருவருப்பாயிருந்தது அவளுக்கு.
கனகராஜின் முகத்தில் கலவரமும் பீதியும் தெரிந்தன. உடனே அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போன்றதொரு தப்பிப் பிழைக்கும் அவசரம் அவன் முகத்தில் தெரிந்தது. அந்தப் பெண்பிள்ளையை ரவுடி இம்சைப்படுத்திக் கொண்டிருந்த அதே பிளாட்பாரத்தில் லத்திக்கம்பு சகிதம் உலாத்திக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரன் அதைக் கண்டு கொள்ளாததுபோல் இருந்தான். சுலட்சணா அவனிடம் ஓடிப்போய்ப் புகார் செய்தாள்.
“உங்களுக்கு ஏம்மா இதெல்லாம்? அவங்க இந்த நிமிஷம் அடிச்சிப்பாங்க, அடுத்த நிமிஷமே சிரிச்சுப் பேசுவாங்க… நாம தலையிடறது சரியா இருக்காது” – என்று வேதாந்தம் பேசினான் கான்ஸ்டபிள்.
நடந்து கொண்டிருந்த சண்டையைப் பார்த்தால் அப்படிப்பட்டதாகத் தெரியவில்லை. அந்த ரவுடியின் இடுப்பில் இளநீர் சீவுகிற அரிவாள் போல் கூர்மை மின்னும் அரிவாள் வேறு இருந்தது. கனகராஜ் உதவிக்கு வருவான் என்று நம்பிப் பயனில்லை என்கிற முடிவுக்கு வந்த சுலட்சணா அந்த ரவுடியை நோக்கி, “அடிக்கிறதை நிறுத்துப்பா… என்ன தகராறு உங்களுக்குள்ளே .?”‘– என்ற கேள்வியுடன் விரைந்தபோது, “சுலட்சணா! வேண்டாம் போகாதே சொன்னாக் கேளு!” – என்று அவளைத் தடுத்து அலறினான் கனகராஜ். அவள் அவனைப் பொருட்படுத்தவில்லை. ‘சிவிக் கரேஜ்’ இல்லாத ஆண்பிள்ளையும் ஓர் ஆண்பிள்ளையோடு சேர்த்தியா என்று அவனைத் துச்சமாக நினைத்தாள் சுலட்சணா.
அவசர அவசரமாகப் பக்கத்துக் கடையிலிருந்த இளைஞன் ஒருவன் ஓடி வந்து சுலட்சணாவை வழிமறித்து, “இதுலே நீங்க ஏம்மா தலையிட்டு வம்பை விலைக்கு வாங்கறீங்க? இங்கே பிளாட்பாரத்துல கடை பரத்தறவங்க எல்லாம் அந்த ஆளுக்கு ‘மாமூல்’ குடுத்துடறது உண்டு. இந்தப் பொண்ணு புதுசு. இதுக்கு நடைமுறை தெரியாது. தெற்கே ராமநாத புரத்துப் பக்கத்திலேருந்து புதுசாப் பிழைக்க வந்திருக்கு. “பிரட்பாரத்திலே கடை போட நீ யாருப்பா அதிகாரி?”ன்னு அவனை அது எதிர்த்துக் கேட்டதாலேதான் தகராறு”. என்றான்.
சுலட்சணா பதிலுக்கு அவனை வினவினாள்:- ”அந்தப் பெண் கேட்டதிலே என்ன தப்பு? அவ பிளாட்பாரத்திலே கடை போட இவனுக்கு ஏன் பணம் அழணும்? இவன் யாரு? அதுக்குத் தானா வதியா என்ன?”
“அது மாமூல்! இல்லாட்டி அவன் கலாட்டாப் பண்ணுவான். தகராறு வரும்.”
“போலீஸ்ல கம்ப்ளயிண்ட் பண்ணலாமே?”
“போலீஸ் இதெல்லாம் ஒண்ணும் கண்டுக்காது. ஏன்னா இந்த வசூல்லே அவங்களுக்கும் பங்கு உண்டு”
அந்தப் பெண்ணின் கண்ணீரையும் அழுகையையும் காணாமலும் கதறலைக் கேளாமலும் அப்போது அந்த பஜாரில் வருவதும் போவதுமாயிருந்த அத்தனை மனிதர்களும் கபோதி களா, கை கால் இழந்த முடங்களா என்று அவர்கள் மேல் வெறுப்பும் கோபமும் அடைந்தாள் சுலட்சணா அவள் குறுக்கே பாய்ந்து அந்தச் சண்டையைத் தடுக்க முயன்ற போது அந்த மீசைக்கார முரடனின் கோபம் முழுவதும் சுலட்சணாவின் மீது திரும்பியது. “வாம்மா ஜான்ஸி ராணி! இவளுக்குப் பலிஞ்சுக்கிட்டு வர்ரியா நீ?”- என்று சுலட்சணா வின் பக்கம் திரும்பினான் அவன்.
பல்கலைக்கழக விவசாயப் பிரிவு மாணவர்கள் சிலர் அந்த வேளையில் தற்செயலாக அந்த பஜார்ப்பக்கம் நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் சுலட்சணாவை நன்கு அடையாளம் தெரியுமாகையால் அவளுக்கு உதவியாக வந்தார்கள். அந்த முரடனைத் தட்டிக் கேட்டார்கள். சுலட்சணாவின் பக்கம் அணிவகுத்து நின்றார்கள். ஆனால் கனகராஜ் பக்கத்திலேயே வரவில்லை. பயத்தோடு தூர விலகி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தானே ஒழியப் பக்கத்திலேயே நெருங்கவில்லை அவன். அரிவாளுக்கும், அரிவாள் மீசைக்காரனுக்கும், அத்தனை பயம் அவனுக்கு. விவசாய மாணவர்கள் நால்வரும் அப்படிப் பயப்படவில்லை.
முரடன் முதலில் தாக்கிக் கொண்டிருந்த பெண்ணையும், சுலட்சணாவையும் விட்டுவிட்டுப் பரிந்து கொண்டு வந்த விவசாயப்பிரிவு மாணவர்கள்மேல் அரிவாளோடு பாய்ந்தான். அதை அவர்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. பேச்சில் ஆரம்பித்தர்க்கத்தை உடனே அவன் அரிவாளால் எதிர்கொள்வான் என எதிர்பார்த்திராத அவர்களில் மூவர் மருண்டு சற்றே பின்வாங்கினர். அபாரமான துணிச்சலும் அரிவாளுக்குப் பயப்படாத ஆண்மையுமுள்ள ஒருவன் மட்டும் ஓங்குகிற அரிவாளோடு வந்த அந்த ரவுடியின் வலது கையை அப்படியே மறித்துத் தடுத்துப் பிடித்தான்.
அந்த மாணவனைச் சுலட்சணாவுக்கே நன்றாகத் தெரியும். அவளுடைய சமூக சேவை முகாம், ஹாஸ்டல் உண்ணா விரதம் எல்லாவற்றிலும் ஆர்வமாக முன் வந்து கலந்து கொண்டவன். வீராசாமி என்று பெயர்கூட நினைவு இருந்தது. ஊர்கூட முதுகுளத்தூர்ப் பக்கம் என்பதாகவும் நினைவிருந்தது. அப்போது அவன் காட்டிய வீரம் அவளை வியப்பிலாழ்த்தியது. “நடுத்தெருவிலே பொம்பளை யைக் கை ஓங்கி அடிக்கிற நீயும் ஒரு மனுசன்தானா?”- என்று வரிந்து கட்டிக்கொண்டு அந்த ரவுடியை மடக்கிப் பிடித்து விட்டான் வீராசாமி. ஒற்றைக்கு ஒற்றையாக அரிவாளும் கையுமாக இருந்த அந்த முரடனைச் சமாளித்தான் அவன்.
ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் வேறுமாதிரி நடந்து விட்டது. வீராசாமி தன்னை மடக்கிவிட்டான் என்ற ஆத்திரத்திலும் அவமானத்திலும் சீறிய ரவுடி திமிறிக்கொண்டு பாய்ந்தான். உடனே ஓர் அலறல். அதைத் தொடர்ந்து அடுத்த நொடியில் இரத்தம் சொட்டச்சொட்ட ஒரு இளம் வலதுகை நடுரோட்டில் துண்டிக்கப்பட்டு வந்து விழுந்தது.
என்ன நடந்தது என்று புரியவே சில நொடிகள் ஆயிற்று. ரவுடி ஓடி விட்டான். விவசாய மாணவர்கள் அவனைத் துரத்திக் கொண்டு பாய்ந்தனர். வீராசாமி மட்டும் வெட்டுண்ட கையில் குருதி ஒழுகத் துடிதுடித்தபடி விழுந்து கிடந்தான். நடைபாதைப் பெண்ணும் சுலட்சணாவும் அவனைத் தாங்கிக் கொண்டார்கள். சுற்றிலும் கூட்டம் கூடி விட்டது.
ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்யச் சொல்லலாம் என்று சுற்றி நின்ற கும்பலில் கனகராஜின் முகத்தைத் தேடினாள் சுலட்சணா. அவனைக் காணவில்லை. கும்பலில் மட்டுமில்லை. கும்பலுக்கு அப்பாலும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கனகராஜ் தென்படவே இல்லை. பயந்து ஓடிப் போயிருப்பானோ என்று அவளுக்குச் சந்தேகமாயிருந்தது.
அங்கே பக்கத்தில் இருந்த போலீஸ் நிலையத்தில் தகவல் சொல்லி அங்கிருந்தே ஆம்புலன்சுக்கும் ஃபோன் செய்வதாகக் கூறிவிட்டு யாரோ ஒருவர் விரைந்தார். கனகராஜ் மட்டும் ஆள் அகப்படவே இல்லை. எங்கே போனானோ? சுலட்சணா துணையின்றி நிராதரவாகத் தவித்தாள். ரவுடியைத் துரத்திக்கொண்டு ஓடின அந்த மூன்று மாணவர்களும் திரும்பி வந்து சேரக் கால்மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டது. வீராசாமியின் உடலிலிருந்து இரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகி விடுமோ என்றும் பயமாயிருந்தது சுலட்சணாவுக்கு. அவனைக் காப்பாற்றப் பதறினாள்.
போலீஸ் வந்தது. ஆம்புலன்ஸ் வந்தது. அவளிடமும் நடைபாதைப் பெண்மணியிடமும் ஸ்டேட்மெண்ட் வாங்கிக் கொண்டு முடித்து ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தது ஆம்புலன்ஸ். சுலட்சணாவும் ஆம்புலன்ஸில் வீராசாமியுடன் சென்றாள்.
அந்த இடத்திலிருந்து ஆம்புலன்ஸ் கிளம்புவதற்குள்ளேயே எப்படியோ தகவல் எட்டிப் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்து விட்டனர். அவர்களால் பஜாரில் ஏதேனும் கலகம் மூண்டு விடக் கூடாதே என்று போலீஸார் முன்னெச்சரிக்கை உணர்வு அடைந்தனர். கூட்டம் கூடாமல் கலைத்தனர்.
‘இந்த நாளில் சர்ஜரியில் விநோதங்கள் எல்லாம் நடக்கின்றன. வலது மணிக்கட்டை அப்படியே ஒட்ட வைத்து விடலாம். வலது கை விரல்கள் இல்லாவிட்டால் பாவம்… அவனது வாழ்க்கையே வீணாகிவிடும்’ என்று கூடியிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். ‘பிளாஸ்டிக் சர்ஜரியில் முடியாதது இல்லை’ – என்று மற்றொருவர் சொன்னார்.
இரண்டு மணி நேரம் வரை இந்த சஸ்பென்ஸ் நீடித் தது. அதன்பின் வெட்டுண்ட மணிக்கட்டுப் பகுதியையும் உடம்பில் எஞ்சிய கையின் நுனியையும் பரிசோதித்த டாக்டர்களும் நிபுணர்களும் – இரண்டையும் இணைப்பது இனி மேல் சாத்தியமில்லை என்று தெரிவித்துவிட்டனர். வீராசாமியின் வலது கை மூளியாகத் தான் இருக்கும் என்றறிந்ததும் சுலட்சணா கதறினாள். அழுதாள். முடிவில் வேறு வழி யின் மௌனமாகக் கண்ணீர் சிந்தினாள். மறுநாள் பல்கலைக்கழக மாணவர்கள் கருப்புச் சின்னமணிந்து பஜாரில் மௌன ஊர்வலம் சென்றார்கள். சுலட்சணா தலைமை வகித்தாள்.
‘நியாயம் கேட்ட மாணவனைக் காட்டுமிராண்டித்தனமாக வெட்டிய சமூகவிரோதியைத் தேடிக் கைது செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை கலெக்டருக்கும் மற்றவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களால் முன்வைக்கப் பட்டது. அந்தப் பேட்டை ரவுடி ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவருக்கு வேண்டியவன் என்றும் போலீஸார் அவனைக் கைது செய்ய மாட்டார்கள் என்றும் வதந்தி பரவவே மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.
பிரச்னை பெரிதாகி மாணவர்கள் போராட்டம் வலுத்து விடுமோ என்று பயந்து இரண்டு தினங்கள் வரை மெத்தனமாக இருந்த போலீஸார் மூன்றாவது நாள் அந்த ரவுடியைக் கைது செய்து லாக்கப்பில் வைத்தார்கள். குற்றப்பத்திரிகையும் தயார் செய்தார்கள்.
இரண்டு மூன்று நாள் இத்தனை ரகளை நடந்தபோதும் சுலட்சணாவின் பார்வையில் கனகராஜ் தட்டுப்படவே இல்லை. ‘பல்கலைக்கழகக் காம்பஸுக்கு வெளியே நடக்கும் தகராறுகளிலும் சர்ச்சைகளிலும் சண்டைகளிலும் வீணாகப் பல்கலைக் ழக மாணவர்கள் தலையிட்டுப் பல்கலைக்கழகத்திற்குள் டென்ஷனையும், விவகாரங்களையும், பதில் விளைவுகளையும் கொண்டு வராமல் இருக்க வேண்டும்’ என்பதாகத் துணை வேந்தர் ஒரு சுற்றறிக்கையை அவசர அவசரமாக அனுப்பினார். நல்ல வேளையாக அவர் அயல்நாடு எதுவும் போகாமல் அப்போது ஊரிலேயே இருந்தார். டீனும் துணைவேந்தரும் சுலட்சணாவைக் கூப்பிட்டு அனுப்பினார்கள். கண்டிப்பது போன்ற குரலில் அவளிடம் பேசினார் துணை வேந்தர்.
“இந்தக் காம்பஸிலே உன்னாலே எப்பவும் வம்புதான் அம்மா! பஜார்லே நடக்கிற தெருச் சண்டையை எல்லாம் யூனிவர்ஸிடி காம்பஸுக்குள்ளே கொண்டு வந்து விட்டு எங்கள் உயிரை ஏன் வாங்குகிறாய்? ஒழுங்காய் லட்சணமாய்ப் படிப்பைக் கவனியேன்”
“உங்க யூனிவர்ஸிடி மாணவன் ஒருத்தன் தெருவிலே நடந்த ஒரு அக்கிரமத்தைத் தட்டிக்கேட்ட உடனேயே ரவுடி அவன் கையை வெட்டியெறியறது எப்படி சார் தெருச் சண்டையாகும்? அதைப் பொறுத்துக்கொண்டு நாங்க எப்படிச் சும்மா இருக்க முடியும் சார்?”
“தகராறு யூனிவர்ஸிடி சம்பந்தமானதா இல்லையாங்கிறதுதான் இப்போ என்னுடைய கேள்வி?”
“பாதிக்கப்பட்டவர்கள் உங்களுடைய யூனிவர்ஸிடி மாணவர்கள் என்பதுதான் என் பதில்.”
“வேலை கெட்டுப்போயி நீங்க இழுத்துக்கிட்டு வர்ர தெருச் சண்டையைப் பத்தி எல்லாம் இங்கே தேடி வர்ர போலீஸ்காரங்களுக்கு நான் பதில் சொல்லிக்கிட்டிருக்க முடியாது”.
“கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமப் பேசாதீங்க சாரி! ஒரு ஸ்டூடண்ட் வலது கையை முறிச்சுக்கிட்டு ஆஸ்பத்திரியிலே கிடக்கிறாரு. பேட்டை ரவுடிங்க கிட்டச் சிக்கி அவஸ்தைப்பட்ட ஒரு பெண்ணையும், என்னையும் துணிந்து காப்பாற்ற முன்வந்ததுக்காக அந்த ஸ்டூடண்டுக்குக் கிடைச்ச பரிசு அது!”
“தலையிட வேண்டாததுலே எல்லாம் அநாவசியமாத் தலையிடறதாலே வர்ர வம்புதான் இதெல்லாம்”
“நீங்களோ, டீனோ ஒரு கர்டிஸிக்காகக்கூட இன்னும் ஆஸ்பிடலுக்கு விஸிட் பண்ணலே. அந்தக் கையிழந்த ஸ்டூடண்ட்டைப் பார்த்து ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லலே. மாணவர்கள் எல்லாம் நொந்து கொதிச்சுப் போயிருக்காங்க”
“இதென்ன எங்களுக்கு மிரட்டலா?”
“நீங்க எப்பிடி வேணும்னாலும் எடுத்துக்கலாம். பூனை கண்ணை மூடினாலே உலகம் இருண்டு போய்விடாது சார்!”
– தொடரும்…
– முள் வேலிகள் (நாவல்), முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1986, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
![]() |
'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க... |
