கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 14, 2025
பார்வையிட்டோர்: 137 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மிக மிகப் பழமையான காலங்களில் உலகில் மனிதர்கள் மிகக் குறைவு. எங்கும் ஒரே காடா யிருந்தது. காட்டில் குறளிகள் பல இருந்தன. 

காட்டின் நடுவில் ஒரு சிறு கிழவனும் சிறு கிழவியும் இருந்தனர். அவர்கள் வீடு ஒரு சிறு குடிசை. அது ஈர்க் கோல்களால் இயற்றப்பட்டிருந்தது.  

அச் சிறு குடிசையில் ‘சிறுஞமலி’ என்ற ஒரு நாய் இருந்தது.  வீட்டிற்கு யார் வந்தாலும் அது குரைக்கும்.  

வீட்டைச் சுற்றிப் புல் பச்சைப் பசேல் என்று செழித்து மெத்தென வளர்ந்திருந்தது. 

ஒரு நாள் குறளிகள், அடர்ந்த காட்டிலிருந்து வெளி வந்தன. அவை மெத்தென்ற புல்மேற் பெரு விரல் ஊன்றி ஓசைபடாமல் அடியெடுத்து வைத்து நடந்து கிழவன் வீட்டிற்கு வந்தன. வந்து, 

‘ஈர்க் கோல்களைப் பிய்த்தெறி 
அந்தச் சிறு கிழவனைப் பிடித்துத் தின்போம்
அந்தச் சிறு கிழவியைப் பிடித்துக்கொள்வோம்,’ 

என்று அவை கத்தின. 

கிழவனும் கிழவியும் உறங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், சிறுஞமலி மட்டும் விழித்துக்கொண்டிருந்தது. 

குறளிகள் வருவதை அது மோப்பத்தால் அறிந்தது. குறளிகள் பேச்சை அது தன் செவிகளை நிமிர்த்துக் கேட்டது. உடனே குரைக்கத் தொடங் கிற்று. 

சிறு நாய் குரைப்பதைக் கேட்டுக் குறளிகள் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டு உருண்டோடின. 

கிழவன் சிறுஞமலியின் குரல் கேட்டு விழித்தெழுந்தான். குறளிகள் வந்ததும், அவை சிறு ஞமலியின் குரைப்புக் கேட்டு ஓடியதும் அவனுக்குத் தெரியவில்லை. 

‘இந்தச் சிறுஞமலி குரைத்துக் குரைத்து உறக்கத்தைக் கெடுக்கின்றது. இதற்கு நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும். எல்லாம் பொழுது விடியட்டும். இதன் வாலை ஒட்ட அறுத்துவிடுகிறேன்,’ என்று சினந்து கூறினான் கிழவன். 

விடிந்ததும் சிறுஞமலியின் வால் அறுக்கப் பட்டது. 

மறுநாள் இரவும், குறளிகள், அந்த அடர்ந்த காட்டிலிருந்து வெளிவந்தன. அவை மெத்தென்ற புல்மேல் பெரு விரல் ஊன்றி ஓசை படாமல் அடி யெடுத்து வைத்து நடந்து கிழவன் வீட்டுக்கு வந்தன. 

‘ஈர்க் கோல்களைப் பிய்த்தெறி 
அந்தச் சிறு கிழவனைப் பிடித்துத் தின்போம்
அந்தச் சிறு கிழவியைப் பிடித்துக் கொள்வோம்’, 

என்று அவை கத்தின. 

கிழவனும் கிழவியும் முன்போல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஆனால், சிறுஞமலி மட்டும் விழித்துக்கொண்டிருந்தது. 

குறளிகள் வருவதை அது மோப்பத்தால் அறிந்தது. குறளிகள் பேச்சை அது செவிகளை நிமிர்த்துக் கேட்டது. கேட்டதும், அது குரைக்கத் தொடங்கிற்று. 

சிறு ஞமலி குரைப்பதைக் கேட்டுக் குறளிகள் ஒன்றை ஒன்று முட்டி மோதிக்கொண்டு உருண்டோடின. 

கிழவன் சிறுஞமலியின் குரல் கேட்டு மீண்டும் விழித்தெழுந்தான். குறளிகள் வந்ததும், சிறுஞமலி யின் குரைப்புக் கேட்டு அவை ஓடியதும் அவனுக்குத் தெரியவில்லை. 

“இந்தச் சிறுஞமலி இப்படியே குரைத்துக் குரைத்துத் துயிலைக் கெடுக்கின்றது. இதற்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். எல்லாம் விடியட்டும். தன் வாலை வெட்டியது போதாது. கால்களையும் துணித்துவிடுகிறேன்,” என்று சினங்கொண்டான் கிழவன். 

விடிந்ததும் சிறுஞமலியின் கால்களும் துணிக்கப் பட்டன. 

அடுத்தநாளிரவும், குறளிகள் அந்த அடர்ந்த காட்டிலிருந்து வெளிவந்தன. மெத்தென்ற புல் மேல் பெருவிரல் ஊன்றி ஓசைபடாமல் அடியெடுத்து வைத்து நடந்து கிழவன் வீட்டுக்கு வந்தன.வந்ததும், 

‘ஈர்க் கோல்களைப் பிய்த்தெறி 
அந்தச் சிறு கிழவனைப் பிடித்துத் தின்போம்
அந்தச் சிறு கிழவியைப் பிடித்துக் கொள்வோம்,’ 

என்று அவை கத்தின. 

கிழவனும் கிழவியும் பின்னும் பேருறக்கத்தில் ஆழ்ந்து கிடந்தனர். ஆனால், சிறுஞமலி மட்டும் விழித்துக்கொண்டிருந்தது. 

குறளிகள் வருவதை அது மோப்பத்தால் அறிந்தது. குறளிகள் பேச்சை அது செவிகளை நிமிர்த்துக் கேட்டது. உடனே அது உரக்கக் குரைக்கத் தொடங்கிற்று. சிறுஞமலி குரைப்பதைக் கேட்டுக் குறளிகள் ஒன்றை ஒன்று முட்டி மோதிக்கொண்டு உருண்டோடின. 

கிழவன் சிறுஞமலியின் உரத்த குரல் கேட்டு மீண்டும் விழித்தெழுந்தான். குறளிகள் வந்ததும் அவை சிறுஞமலியின் குரைப்புக் கேட்டு ஓடியதும் அவனுக்குத் தெரியவில்லை. 

“இந்தச் சிறுஞமலி மீண்டுமா குரைத்துக் குரைத்து உறக்கத்தைக் கெடுக்கின்றது ! இதற்கு இன்னும் நல்ல பாடம் கற்பிக்கவேண்டும்; விடியட்டும்; இதன் வாலையும், கால்களையும் வெட்டியது போதாது, தலையையும் வெட்டிவிடுகிறேன்,” என்று மிகச் சினந்து கொண்டான் கிழவன். 

விடிந்ததும் ஐயோ! சிறுஞமலியின் தலையும் வெட்டப்பட்டது. 

அதற்கு அடுத்தநாளிரவும் குறளிகள் அந்த அடர்ந்த காட்டிலிருந்து வெளிவந்தன. மெத்தென்ற புல்மேல் பெருவிரல் ஊன்றி ஓசை படாமல் அடி யெடுத்துவைத்து நடந்து கிழவன் வீட்டுக்கு வந்தன. வழக்கம் போல,
 
‘ஈர்க் கோல்களைப் பிய்த்தெறி 
அந்தச் சிறு கிழவனைப் பிடித்துத் தின்போம்
அந்தச் சிறு கிழவியைப் பிடித்துக் கொள்வோம்,’ 

என்று அவை கத்தின. 

கிழவனும் கிழவியும், அன்று சிறுஞமலியின் நிலையை நினைத்து, வருத்தத்தால் அவ்வளவாகத் துயில் கொள்ளவில்லை. 

சிறுஞமலி அன்று குரைக்கவில்லை. விழித்திருக்க அதற்குக் கண்களும், மோப்பம் பிடிக்க மூக்கும், ஓசை கேட்கக் காதும், குரைக்க வாயும் அன்று அதற்கு இல்லாமற் போயின. 

குறளிகள் திமுதிமென உள்ளே புகுந்தன. கிழவன் ஓசையைக் கேட்டான். 

உடனே தனது மெத்தையின் கீழே பதுங்கி ஒளித்துக்கொண்டான். 

குறளிகள் கிழவனைக் காணாமல் கிழவியை மட் டும் பிடித்துக்கொண்டு போயின. தங்கள் குகைக்குப் போனபின் அவளை ஒரு பையிலே போட்டு வைத்துக்கொண்டன. 

கிழவனுக்கு இப்போது உண்மை தெரிந்தது. ‘இந்தக் குறளிகள் ஒவ்வோர் இரவும் இப்படி வந்திருக்கவேண்டும். என் சிறுஞமலி அதனாலே தான் குரைத்திருக்கவேண்டும். சிறுஞமலியின் குரைப்புக்கேட்டு அவை ஓடியிருக்கவேண்டும். 

“என் சிறுஞமலியின் வாலை நான் அறுத்தது தவறு; 

“என் சிறுஞமலியின் கால்களை நான் துண்டித்தது தவறு; 

“என் சிறுஞமலியின் தலையை நான் வெட்டியது தவறு”, 

என்று அவன் வருத்தத்தோடு நினைத்தான். 

உடனே சிறுஞமலியின் தலையையும், கால்களை யும், வாலையும் கொண்டு வந்து அவன் அதனிடம் சேர்த்தான். 

சிறுஞமலி களிப்புடன் வாலைக் குழைத்தது; ஓடி வந்தது; தலையை ஆட்டி நன்றியுடன் வணக்கம் செய்தது. 

கிழவன் சிறுஞமலிக்குக் கிழவியின் வெறும் படுக்கையைக் காட்டினான். 

சிறுஞமலி அவன் குறிப்பறிந்து, குறளிகள் போன வழியை மோப்பத்தால் அறிந்து அவற்றின் குகைக்கு ஓடியது. 

அது பகல் நேரமானதால் குறளிகள் உறங்கிக் கொண்டிருந்தன. கிழவி பைக்குள் இருந்து அழுது கொண்டிருந்தாள். சிறுஞமலி துள்ளிக் குதித்துப் பற்களால் பையைத் தொளை செய்தது. கிழவி தொளை வழியாக வெளியே வந்து தன் இல்லம் சேர்ந்தாள். 

சிறுஞமலி குரைக்காமல் பையினுள் இருந்தது. விளக்கு வைத்ததும் குறளிகள் எழுந்தன. சில பல் விளக்கவும், சில குளிக்கவும் சென்றன. எல்லாம் வந்த பின் கிழவியைத் தின்னவேண்டும் என்று நினைத்தன. பையை எல்லாக் குறளிகளும் சேர்ந்து தூக்கிக்கொண்டு வந்து அறை நடுவில் வைத்துக் கிழவியை எடுக்கக் கைகளை விட்டன. 

சள்ளென்று சிறுஞமலி குரைத்துக்கொண்டு வெளிப்பட்டது. குறளிகளுக்குக் குலைநடுக்கமுண்டாயிற்று. அவை ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொண்டு உருண்டோடின. ஆனால் சிறுஞமலி அவற்றை ஒன்றையும் விடாமல் பிடித்துப் பிடித்துத் தின்றுவிட்டது. 

கிழவனுக்கும் கிழவிக்கும் அதுமுதல் குறளிகளைப்பற்றிக் கவலையே இல்லை. 

அருஞ் சொற்கள் 
அடர்ந்த 
கவலை 
குறைவு 
பழமை 
அறுத்து 
குடிசை 
செழித்து 
பிடித்து 
ஈர்க்கோல் 
குரைக்கும் 
திமு திமு 
பெருவிரல் 
உரத்த குரல் 
குலை நடுக்கம் 
துணித்து 
உறங்கி 
குளிக்க 
துயில் 
ஒளித்து 
குறளி 
நிமிர்த்து 
முட்டி
மோதி
மோப்பம் 
விடியட்டும் 
ஓசைபடாமல் 
குறிப்பறிந்து 
பல் விளக்க 
விழித்து 

– கழகக் கதைச் செல்வம், முதற் பதிப்பு: டிசம்பர் 1941, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *